Friday, September 4, 2020

 

பிரணவம்

 

சகோதர சகோதரிகாள்!

 

பூர்வத்தில் நாம் செய்த புண்ணியத்தால் நமது அஞ்ஞானத்தை யோட்டி மெய்ஞ்ஞானத்தைப் போதிக்கத் திகழ்ந்துலவி வரும் ஆனந்தபோதினியின் கண் மேற்கண்ட தலைப்பை யொட்டி சில விஷயங்களை எழுதத் துனிந்த நான் சுவை மொழி புணர்த்திச் சொல்லும் சொன்னயப்பான்மையனல்லன். என்னிற்பிழைகளோ பெருமலை போலத்தோன்றும். எனினும் நீவிரனைவரும் கல்வி கேள்விகளால் நிறைந்த குடமாயிருக்கிற படியாலும், 'நல்லார் பிறர் குற்றம் நாடார்' என்பதை மறக்கவில்லை என்ற எண்ணம் தூண்டுதலினாலும் நான் இதை வரையத் துணிந்தேன்.

 

ஐயன்மீர்!

 

பிரணவம் என்னும் சொல் துதித்தல் என்ற ''நா' என்னும் தாதுவிலிருந்து தோத்திரம் என்ற பொருளில் "நவ'' என்ற சொல்லுண்டாக அதனோடு 'ப்ர'' என்னும் உபசர்க்கத்தைச் சேர்க்க மவ்வீறுங் கொண்டு அமைந்துள்ளது பிரணவம். பிரணவமானது மூலமொழி எனவும், தனி மொழி எனவும், ஓங்காரம் எனவும், குடிலை எனவும் படும்.

 

ஓம் என்கிற எழுத்தினால் விளங்குகின்ற தெதுவோ அதுவே சிவம். சகலரும் இதைத்தான் உபாசிக்கின்றனர்.

 

ஓம் என்கிற பிரணவாக்ஷரம் பார்வைக்கு வலம்புரிச் சங்கு வடிவினதாகவும் செவிப்புலனிற்கு ஒரே எழுத்தாகவும் தோன்றினும், அதில் அகாரம், உகாரம், மகாரம் என்னும் மூன்றெழுத்துக்களடங்கி யிருக்கின்றன. ஆகவே, இப்பிரணவம் சமஷ்டிப் பிரணவம் வியஷ்டிப் பிரணவம் என இரு வகைப்படும். ஓம் என்பது சமஷ்டிப் பிரணவம். அகார உகார மகார மென நிற்பது வியஷ்டிப் பிரணவம். சமஷ்டி தொகுத்துச் சொல்வது; தோட்டம் என்பது போல. வியஷ்டி பகுத்துச் சொல்வது; வாழை, கமுகு, தென்னை என்பன போல.

 

இங்ஙனம் பிரணவம் மூன்றெழுத்தாக விரிந்தும், அம்மூன்றையும் தொகுத்து ஓம் என உச்சரிக்கப்படும் பொழுது நாதமாயும், அது ஓம் என எழுதப்படும் பொழுது விந்துவாயும் இருப்பதால் முதல் மூன்றெழுத்தும் அந்த நாதவிந்துக்களாகிய ஒலி வடிவும் வரி வடிவுங் கூடி ஐந்தெழுத்தாயிற்று. இப்பிரணவத்தின் வரி வடிவு,

 

"பிரதமம் தாரகாகாரம் த்வீதியம் தண்டமுச்சியதே

த்ருதீயங் குண்டலாகாரம் சதுர்த்தங் அர்த்த சந்த்ரகம்

பஞ்சமம் பிந்துசையுக்தம் பிரணவம் பஞ்சலக்ஷணம்''.

 

எனக்காமிகாகமத்தில் சொல்லப்பட்டது.

அதாவது முதல் நக்ஷத்திர வடிவமும், இரண்டாவது தண்ட வடிவமும், மூன்றாவது வட்ட வடிவும், நான்காவது அர்த்தச் சந்திர வடிவும், ஐந்தாவது பிந்துவோடுங் கூடின வடிவுமாகிய ஐந்திலக்கணங்களுடையது பிரணவம் என்று பெறப்பட்டது.

 

அபரப் பிரணவம் வாசகமான சப்தரூபமாகிப் பிரம், விஷ்ணு, ருத்திர, மஹேசுவர, சதாசிவ அதிதேவதைகளான, சுக்கில, கிருஷ்ண, ரத்த, ஜோதி, ஸ்படிகம் என்னும் பஞ்சவர்னக் கிரமமுள்ள அகார, உகார மகார பிந்து நாதம் என்னும் பஞ்சாக்ஷராத் மகத்துவத்தின் தாரக தண்டக குண்டலாகார அர்த்த சந்திராகார சோதியாகார மென்னும் ரூபத்தினால் ஓங்காரம் என்றும் சிவாத்மகம் என்றும் பற்பல பரியாய நாமங்களுள்ளதாயிருக்கும். நான்கு அமிசங்களும் நான்கு வேதங்களாம். முதலமிசம் அகாரம். இரண்டாம் அமிசம் உகாரம். மூன்றாம் அமிசம் மகாரம். நான்காம் அமிசம் அர்த்த மாத்திரையாகிய மிகச் சூக்குமமான நாதரூபம். இவற்றுள் முதல் மூன்று அமிசங்களும் முறையே பிரமன், விஷ்ணு, உருத்திரனைக் குறிக்கும் நான்காம் அமிசம் இவை மூன்றிற்கும் காரணமான சிவபரஞ்சுடரைக் குறிக்கின்றது.

 

சிவரூபமானது பிரம், விஷ்ணு, ருத்ராதீத துரியாகாரமாயும், சர்வவித பொருட் பிரபஞ்சங்கட்கும் காரணமாயும் நிற்றல் போல், சிவமந்திரமான பிரணவமும் நான்காக நின்று சர்வ சொற் பிரபஞ்சங்களுக்குங் காரணமாய் சிவத்துடனே அபேதத்தை யடைகின்றது. அடையவே, வாச்சியமான சிவத்துக்கும் வாசகமான பிரணவத்துக்கும் பேதமேயில்லை. ஆதலால் சிவமே பிரணவம், பிரணவமே சிவம் என்பது சர்வவேத வேதாந்த சம்மதம். இவ்வுண்மையைப் பிரகாசிப்பிக்கத்தான் தாயுமான சுவாமிகள்,

 

"தெய்வ மறை முடிவான பிரணவ சொரூபியே'' என்றார். திராவி டோபநிடதமாகிய திருவாசகம்" உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா'' என உபதேசிக்கின்றது. இனி உலகத்திலுள்ள சகல பாஷைகளின் உயிரெழுத்துக்களை யெல்லாம் தக்கபடி பரிசோதித்துப் பார்ப்போமாகில்

 

"அகரமுத லெழுத் தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு''

 

என்னும் திருக்குறள் மொழியே சாத்தியமாம் என்பது நன்கு விளங்கும்.

 

பிரபஞ்சத்தில் மக்கள் பிறந்தவுடனே இயற்கையாக உச்சரிப்பது அ - உ - உங் – என்பவைகளே. குழந்தைகள் பசித்தபோது அழும் சத்தமும் அங்கா! உங்கா! என்னும் ஓங்காரசத்தமே. அக்குழந்தைகளுக்கு வருத்தம் உண்டாகும் போது அம் - உம் - ஓம் - என்றே உச்சரிக்கின்றன. சந்தோஷமுண்டாகும் போது ஏற்பவடுவன ஓம் என்றதின் திரிபான உச்சரிப்புக்களே. ஆகவே மக்கள் பிறந்தது முதல் இறக்கும் வரையில் உச்சரிக்கும் வார்த்தைகள் ஓங்காரமே. இந்த ஓங்காரசத்தம் பிரபஞ்சவெளிப் பொருள்களிலும் காணப்படுவது பிரத்தியக்ஷம். எங்ஙனமெனின் வெண்கலம் இரும்பு முதலானவைகள் ஒன்றோடொன்று தாக்கும் போது உண்டாகும் சத்தத்தைக் கவனித்தால் அது ஓங்காரத்தின் சத்தமேயாகும். பெருங்கடலினின் றெழும் பேரலைகளின் சத்தத்தைக்கவனிப்போமாயின் அதுவும் ஓங்கார சத்தமேயாகும். சண்டமாருதத்தைக் கவனித்துக்கேட்போமாயின் அங்கும் ஓங்காரசத்தமேயாகும். விறகுக் கட்டுகள் தீயிற் கலந்தெரியும் போதும், தண்ணீர் தீயிற் கொதிக்கும் போதும் உண்டாகும் சத்தத்தைக் கவனிப்போமாயின் அங்கெழுவதும் ஓங்கார சத்தமேயாகும். வண்டுகள் முதலிய நானாவித பூச்சிகளின் சத்தங்களைக் கவனிப்போமாகில் அவைகளும் ஓங்கார சத்தத்தின் திரிபேயாகும். அனைவர்க்கும் ஆனந்தத்தை விளைவிக்கும் சங்கீதத்தின் உற்பத்தியைப் பற்றிப் பரிசோதிப்போமாகில் அதுவும் ஓங்காரத்தினின்றே உற்பத்தியாயினமை நன்கு விளங்கும். ஆகவேயாவும் ஓங்காரத்தையே ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.

 

இத்துணைப் பிரணவம் அகாரமாய் வாய் திறத்தலினாலாகி, உகாரமாய் இதழ் குவிதலினாலே நின்று, மகாரமாய் வாய்மூடுவதனால் ஒடுங்கி நின்றமையால் எல்லாவுலகங்களும் எல்லாச் சுருதிகளும் அப்பிரணவத்திலே தோன்றி நின்ற ஒடுங்குமென்பது துணியப்பட்டது. பிழையுளவேல் ஆன்றோர் பொறுக்க.

 

V'. R. வேணுகோபால் பிள்ளை,

செங்காலணிமேடு,

வாயலூர்.

 

குறிப்பு: - அ, உ, ம, அர்த்தமாத்திரை, அ என்ற மாத்திரை ஆகிய ஐந்து மடங்கிய பிரணவமே பஞ்சாக்ஷரமுமாகும். இப்பிரணவமே மற்றெல்லா மந்திரங்களுக்கும் உயிர் போன்றது. பிரணவமே பஞ்சாக்ஷர மாதலின் பஞ்சாக்ஷரத்தை மட்டும் பிரணவமின்றியே சபிக்கலா மென்றும், மற்றைய எல்லா மந்திரங்களையும் பிரணவத்தோடு சேர்த்துச் சபித்தாலே பயனுண்டென்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த அண்ட ரண்ட சராசரங்கள் யாவுமே பிரணவத்தினின் றுற்பத்தியாயின என்பது விளங்க மேலே கூறப்பட்ட பிரணவத்தின் ஐந்து பிரிவுகளிலு மிருந்து பஞ்ச பூதங்களும் அவற்றினின்று தநுகரண புவன போகங்களியாவும் உற்பத்தியாயின் வெனக் கூறப்பட்டிருக்கிறது. விவரம் தக்க நூல்களில் பார்த்து அல்லது ஆன்றோர்கள் பால் கேட்டுணர்க.

பத்திரிகாசிரியர்

 

ஆனந்த போதினி – 1920 ௵ - ஆகஸ்ட் ௴

 

 

 

   

 

No comments:

Post a Comment