Friday, September 4, 2020

 பிரஞ்சுக்காரர் வெறுத்த ராஜகுமாரன்

 

கி. பி. 1811 - ம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 - ந்தேதி பிரஞ்சுக்காரருக்கு ஓர் சுபதினமாயிருந்தது. அன்று ஒரு நல்ல நேரத்தில், மகாதீரனும், ஒப்புயர்வற்ற பராக்கிரமசாலியும், கர்ம வீரனும், தனது வெற்றிப் பிரதாபத்தால் ஐரோப்பாவிலிருந்த வல்லரசுகளெல்லாம் கிடுகிடென நடுங்கச் செய்தவனுமாகிய "நெப்போலியச் சக்கரவர்த்கி'யினது இரண்டாம் பட்ட மஹிஷியான, ஆஸ் ட்ரியச் சகரவர்த்தியின் புதல்வி'' மேரி லூயிஸ்'' ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்த சந்தோஷ சமாச்சாரம் பீரங்கித் தொனிகளினிடையே ஒலித்தது. உலகப் பிரசித்தனாகிய நெப்போலியனது புத்திரனாக, அதிரூபவானாகிய ஓர் ராஜகுமாரன் பிறந்தான் எனும் சங்கதியறிந்த பிரஞ்சு ராஜ்ஜிய வாசிகள் ஆனந்த சாகரத்தில் ஆழ்ந்தனர்.

 

பிரான்ஸிஸ் ஜோஸப் சார்லஸ் போனபார்ட்டி எனும் பெயருடன் விளங்கிய அந்த ராஜகுமாரன் தாய் தந்தையராது அளவன்ற அன்பிற்குப் பாத்திரனாயிருந்து, குழந்தையாயிருக்கும் போதே “ரோம் சக்ரவர்த்தி'' (The King of Rome) என்ற பட்டப் பெயருடன் நாளொருமேனியும் பொழுபொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான். பிற்காலத்தில் ஒர் பெரிய சக்ரவர்த்தியாகததாக புதல்வனைச் சகல ராஜோபசாரங்களுடன் மிகவும் உத்தமமான முறையில் வளர்ட் பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் நெப்போலியன் செய்தான். இரண்டரை வயதானவுடன், உச்சரிப்புச் சக்தி சரியாக வருமுன்பே அரசிளங்குமரனது வித்தியாப்பியாசம் ஆரம்பமாயிற்று.

 

1814 - ம் ஆண்டில் சார்லஸ் போனபார்ட்டிக்கு மூன்று வயதாயிருக்கும் போது நெப்போலியன் ஓர் பெரும் சேனையோடு ரஷ்யாவின் மீது படையெடுத்துச் சென்று'' மாஸ்கோ'' (Mascow) பட்டணத்தில் நடந்த கடும் போரில் தோல்வியுற்றான். பின்பு, ஐரோப்பாவிலுள்ள வல்லரசுகளெல்லாம் ஒன்றுகூடி யோசித்து, முடிவில் நெப்போலியனை எதிர்த்தன. மீண்டும் நெப்போலியனுக்குத் தோல்வி நேர்ந்தது. அந்தச்சமயத்தில் "மேரி
லூயிஸ்' தனது புதல்வனுடன் ஆஸ்ட்ரியாவுக்கு ஓடிவிட்டாள். அதன் பிறகு அருமந்த புத்திரனைக் கண்ணால் காண்பதற்கும் நெப்போலியனுக்குப் பாக்கியம் கிட்டவில்லை. சத்துருக்கள் நெப்போலியனை மத்திய தரைக் கடலிலுள்ள "எல்பா''
(Elba) எனும் தீவில் சிறை வைத்தனர். மேரி லூயிஸ் சக்ரவர்த்தினி ஸ்தானத்தை யிழந்து ஆஸ்ட்ரியாவிலே வசித்து வந்தாள். சார்லஸ் போனபார்ட்டிக்குச் சக்ரவர்த்தி எனும் பட்டமும் மறைந்தது.

 

1814 ம் ஆண்டிலே நெப்போலியன் எல்பா தீவிலிருந்து எங்கணமோ வெளியேறிப் பிரான்ஸுக்கு வந்து இழந்த தனது ஸ்தானத்தை மீண்டும் கைப்பற்றினான். சார்லஸ் போனபார்ட்டி தனக்குப் பின் பிரான்சுக்குச் சக்ரவர்த்தியாவானென நெப்போலியன் நினைந்தான். ஆனால்


 “ஒன்றை நினைக்கி ன து ஒழிந்திட் டொன்றாகும்
 அன்றியது வரினும் வந்தெய்தும் - ஒன்றை
 நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
 எனையாளும் ஈசன் செயல்''


என்றவாறு, அவனொன்று நினைக்கத் தெய்வ மொன்று நினைத்தது. ஈசன் திருவுளத்தை எவரே அறிவார்? சொற்ப காலத்திற்குள் மீண்டும் நேர்ந்த" வாட்டர்லூ'' யுத்தத்தில் நெப்போலியன் தோல்வியுற்று " ஸென்ட் ஹெலீனா " தீவிற்கு நாடு கடத்தப்பட்டான்.
 

பிறகு, மேரி லூயிஸ் ஓர் பிரபுவை மணஞ் செய்து கொண்டு புத்திரனையும் வெறுத்துத் தனியே விட்டு விட்டு ஆஸ்ட்ரியா ராஜ்ஜியத்தினின்றும் நீங்கினாள். அன்னையின் பிரிவிற்குப்பின், ராஜகுமாரனது பிரஞ்சு பரிவாரங்களும் அவனது செவிலி (வளர்ப்பு) த் தாயும் அவனை வெறுத்தார்கள். தாய்தந்தையரைப் பிரிந்தமையாலும், ஆள்வதற்கு ராஜ்யமோ, அன்றித் தன்னை நேசிப்பதற்குப் பிரஜைகளோ இல்லாது போனமையாலும் நெப்போலியனது குமாரன் ஆஸ்ட்ரியச் சக்ரவர்த்தியின் பிரஜைகளுள் ஒருவன் எனும் நிலையில் வளர்ந்து வந்தான். தனது தந்தையின் வீரப் பிரதாபங்களைக் குறித்துக் கேட்பதிலும், விசாரிப்பதிலும் உள்ள சந்தோஷத்தைக் காட்டினும் அதிக சந்தோஷம் ராஜகுமாரன் சார்லஸ் போனபார்ட்டிக்கு வேறெதிலுமில்லை. சமர்த்தனெனினும் ஆதரவற்றவனும், நிர்ப்பாக்கியனுமாகிய ராஜகுமாரன் தனது பிதாவைப் போன்றே தானும் ஓர் சக்ரவர்த்தியாக வேண்டுமென்னும் அவாவால் தூண்டப் பெற்று ஆஸ்ட்ரிய சைன்யத்தில் ஓர் சாதாரண சிப்பாயாகச் சேர்ந்தான். ராணுவ உடை தரித்த தினமே, அவனது வாழ்நாளில் மிகவும் புனிதமான தினமென எண்ணிக் களிப்புற்றான். சைன்யத்திலிருந்த இதரராணுவ வீரர்களெல்லோரும், நெப்போலியச் சக்ரவர்த்தியின் குமாரன் வெகுவிரைவில் ஆஸ்ட்ரிய சேனா நாயகனாகிச் சத்துருக்களைச் சம்ஹாரம் செய்யும் ஓர் காலம் வரும் என வெகு ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இறைவன் திருவுளம் வேறு விதமாயிருந்தது. 1832 - ம் ஆண்டில் தீடீரென்றுண்டான ஓர் நோயின் காரணமாகத் தனது இருபத்தொன்றாம்பிராயத்தில் சார்லஸ் போனபார்ட்டி உயிர் துறந்தான். அந்த வாலிப ராணுவ வீரனது அகால மரணத்தைக் குறித்து துக்கிப்பதற்கு ஆஸ்ட்ரிய ராஜ்யத்தில் மிகச்சில ஜனங்கள் மட்டுமே இருந்தனர். தங்களது அரசனும், பிரஞ்சு சைன்யத்தை ஜெயபேரிகையோடு ஐரோப்பா முழுதும் நடத்தியவனுமான நெப்போலியச் சக்ரவர்த்தியின் செல்வக் குமாரன் மரணமடைந்ததைப் பற்றி அனுதாபம் காட்டுதற்கு பிரான்ஸ் ராஜ்யத்தில் சில ஜனங்கள் மட்டுமே இருந்தனர் எனும் சங்கதி மிகவும் பரிதபிக்கத் தக்கதன்றோ?

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுன் ௴

 

No comments:

Post a Comment