Wednesday, September 2, 2020

 

தற்கால மகத்துவம்

 

 பெரும்பான்மையும் வாசாலமான இடாம்பீக நடையே தற்கால மகத்துவமாக விளங்கி வருகிறது. பலர்க்குச் சுயானுகூலத்துள்ள கண்ணுங் கருத்தும் பரானுகூலத்தில் இல்லை. உதய ஸ்நானம், ஜெபம், காயத்திரி அவுபாசனம், ஓமம், கருமம், தவம், வேதாத்தியயனம், சுசி, ஆசாரநியமம், தேவதாபக்தி முதலிய உரிமைப்பாடுகளை வேதியரிற் பலர் துராசாரமெனக் கருதிக் கைநழுவ விட்டுப் பொருளாசை கொண்டு, தம்மை வணங்கத்தக்கவரைத் தாம் வணங்கி யாசித்துத் தமது அருமையான காலத்தை வீணாக்குகின்றனர். அன்னோர் முகத்தில் தோன்ற வேண்டிய பிரமதேஜசு மழுக்கமடைந்து வருகின்றது; பலிதமாக வேண்டிய அவர்கள் வாக்கும் பயனில் வாக்காய் முடிகின்றது. நவீன நாகரிகமென்னும் அனாசாரத்திற் றலையிட்ட அவர்கள், நல்லொழுக்கமாகிற பழமையை அநுசரித்துவரும் தங்களினத்தவரையுந் தூற்ற முற்படுகின்றனர்.

 

க்ஷத்திரியரிற் சிலர் நித்தியஸ்நானம், ஜெபம், நீதி, தருமம், தானம், தெய்வவழிபாடு முதலியவற்றிற் கவனஞ் செலுத்துவதை அறவே மறந்து, திரவியாபேட்சையிற் பெரிதுஞ் சிக்குண்டு, தன்னுயிர் போல மன்னுயிரைக் காக்கவேண்டுமென்கிற சிந்தையின்றி, எமன் உயிரைக் கவர்வதொத்து நிர்த்தாக்ஷண்யமாய்ப் பிறரை வருத்துகின்றனர்; பரஸ்திரீகமனமும் பரிந்து புரிகின்றனர். பெரியோர்களுக்கு வந்தனோபசாரஞ் செய்யப் பிரிய முறுகிறதில்லை. யாகாதி சத்கிருத்தியங்களை நினைப்பதில்லை. கொடுங்கோலாட்சியிற் குதுகலிக்கின்றனர். இதனால் மாத மும்முறை பெய்ய வேண்டிய மழைவளம், முப்போகத்துக்குரிய பயிர்வளம், குடிவளம் முதலிய வளங்கள் குறைவுற்று, குடிகளுக்குத் துர்ப்பயம், துர்வியாதி, தூர் மரணம், கொலை களவுகள் காமம் அதிகரிக்கின்றன. மஹான்கள் தவம், யாகம் செய்வதற் கனுகூலமின்றி, மிருகவு பத்திரவம் மிகுத்துச் சிரமப்படுகின்றனர். மற்ற வருணத்தவரிற் பலரும் தத்தமது கடமைகளிற் பிறழ்ந்திருக்கின்றனர்.


      உலகில் பொய், பொல்லாங்கு, பகை, கெடு நினைப்பு, அசத்தியம், பிறர்பொருளிச்சித்தல் முதலிய அதன்மங்கள் பெருகுகின்றன. கிழங்கு முதலிய சகல வஸ்துக்களும் சுவையற்றுப் போகின்றன. ஜலம் வெப்பமாய் உப்புத்தன்மை யடைந்து விடுகின்றது. கறவைகளுக்குப் பால்வளம் வறட்சியாகின்றது. சகலருக்கும் மனோ வியாகூலம் மேற்படுகின்றது. மேற்குலத்தோர் இழிவான தொழில் புரிந்து ஜீவிக்க வேண்டியவர்களாகின்றனர். தெய்வநிந்தை ஏற்படுவ துடன் விரதம், நோன்பு, பிதுர்கன்மம் என்பவை யாவும் பொய் என்ற வதந்தி பரவுகின்றது; இவற்றை அனுஷ்டிக்கும் புண்ணிய சீலருக்கு ஏளனமே பரிசாகின்றது.

 

''உண்பதும் உறங்குவதுமே உத்கிருஷ்டம்; தான தருமம், பரோ பகாரம், தயை, சாந்தம், பொறுமை, ஜீவகாருண்யம் முதலியவற்றால் வரும் பயன் யாதுமில்லை. இவையாவும் வெளிவேஷக்காரரின் வீண்செயல்கள். அறியாமையால் மடாலயங் கட்டுவது சோம்பற் றன்மை வாய்த்தவர்களுக்கே வாசஸ்தலமாகின்றது; கோவில், குளம், தீர்த்தம், திருநாள் இவற்றைக் கொண்டாடுவோர் அயோக்கியரே. தாய், தந்தை, அண்ணன், தம்பி, சுற்றம், ஆசான் என்பவர் கள் நம்மைப் போன்றவர்களன்றோ? அவர்களுக்கு நாம் மரியாதை செய்யவேண்டும் என்பது ஞாயந்தானா? பரஸ்திரீ மக்களுக்கே சகல வுரிமைகளுமுண்டு. அக்கினிசாக்ஷியாய் வேதியர், பந்துக்கள், சால், கரகம், அரசாணி முன்னிலையில் மணம்
பூண்ட குலஸ்திரீகளுக்கு யாதொரு பாத்தியமுங் கிடையாது'' என்று குதர்க்கமிடுவோர் பெருகி வருங்காலமாயிருக்கிறது தற்காலம்.

 

பலர் தரும் சொரூபிகள் போல் நடித்துப் பிறருக்கு இடுக்கண் தேடுவர்; தெய்வ சொத்துக்களை அபகரிப்பதற்குப் பின் வாங்கமாட் டார்கள்; தமது பொருளைப் புதைத்துவைப்பார்கள்.

 

புருஷரைப் பெண்டுகள் மதியார்கள்; பிள்ளைகள் பெற்றோரை ஆதரிக்கமாட்டார்கள். சீடன் குருவைக் கண்ணியப்படுத்தான். ஒழுக்கத்தில் தாழ்ந்தவர் மேலாவர்; உயர்ந்தவர் தாழ்வுறுவார்கள். இவ்வாறு நடப்பது கலியுக தருமம் என்பர் அறிவாளர். "இந்தயுக முடிவிற் பிறக்கும் புருடர் பதினாறு வயதையும், ஸ்திரீகள் பனிரண்டு வயதையும் தங்கள் வாழ்நாளுக் கெல்லையாகப் பெறுவ துடன், பெண்கள் ஏழுவயதிலேயே மகப்பேறடைவார்கள்; உருவத்திலும் குறுகுவார்கள்'' என்று புராணங்கள் கூறுகின்றன. அல்லாமலும் “சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல் " என்கிறபடி வாசாஞானம் பிரபலிக்கும். வாசா கயிங்கரியப்படி செயலிற் காட்டுவது அருமையாகும் என்றும் புராணங்கள் அறுதியிடுகின்றன. அவற்றின்படியே இத்தீக்கருமங்கள் நடைபெற்று நம்பகம், ஒற்றுமை (ஐக்கிய பாவனை) முதலிய நற்குணங்கள் சிறப்படையாதிருக்கின்றன. சிலர், போலித்தனமாக ஒற்றுமை முதலியவற்றைக் காட்டுகின்றனர். அவற்றாற் பயனென்னை? தமிழாசர்காலத்தில், சோழமண்டலத்தில், கண்டியூரில், சீநக்க முதலியா ரென்பவ ரொருவ ரிருந்தார். அவர் சோழபூபதியிடம் மந்திரித்தொழில் பார்த்துவந்தார்; பொய்யா மொழிப்புலவரோடு மனப்பூர்த்தியான சிநேகம் பூண்டு அப்புலவர் பெருமானை மிக்க அன்புடன் ஆதரித்து வந்தார். முதலியாருக்கும் புலவருக்குமுள்ள ஒற்றுமையை வியந்து கொண்டாடாதவர் அக்காலத் தொருவருமிலர். ஒருசமயம் புலவர் வெளியூர் போக நேர்ந்தபோது முதலியார் அவருக்குக் கட்டமுது கட்டிக் கொடுத்தனுப்பினார். அப்போது புலவர்,


 "அளிகொ ளுந்தொடை யாணர சைக்குமன்
 ஒளிகொள் சீநக்க னீன்றுவந் திட்டசீர்ப்
 புளியஞ் சோறுண்ட புந்தியிற் செந்தமிழ்
 தெளியும் போதெலாந் தித்தியா நிற்குமே "

 

என்றொரு பாடல் பாடினார்.

 

ஒருநாளிரவு முதலியாரும் புலவரும், முதலியார் வீட்டில், அவருடைய மஞ்சத்திலிருந்து வேடிக்கையாக வார்த்தையாடிக் கொண்டிருந்தபோது புலவர் தூங்கிவிட்டார். முதலியார் அவரை அம்மஞ்சத்தின் மீதேயுறங்கவிட்டு, அவசரமானதோர் அரசன் வேலையாய்த் தாம் வெளியே போய்வர நேர்ந்தது. முதலியார் மனைவி வீட்டுப் பணிகளையெல்லாம் விமரிசைப்படுத்திவிட்டு, சயன அறைக்குட் புகுந்து, அங்குத் தமது கணவரே கட்டிலிற்படுத் துறங்குகிறாரென்று நினைத்து, புலவர் பக்கத்திற் படுத்துக்கொண்டனர். முதலியார் அரசனது காரியத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்தார். மஞ்சத்தில் புலவரும் தமது மனைவியும் படுத்திருப்பதைக்கண்டு அதற்காக மனவருத்தம் கொள்ளாமல், புலவரைக் கொஞ்சம் ஒதுங்க இடங் கேட்டு மத்தியிற் படுத்துக்கொண்டார்.

 

பொழுது புலர்ந்ததும் மூவரும் படுக்கையை விட்டு ஒருவர்பின் ஒருவராக எழுந்து வந்தனர். இதைக் கண்டவர்களால் இச்செய்தி ஊர்முழுதும் பரவியது. இது அரசன் வரையிலும் எட்டவே அரசன் புலவரை யழைத்து விசாரித்தனன். புலவர் அரசனை நோக்கி,


 "தேரையார் செவ்விளநீர் உண்ணாப் பழிசுமப்பர்
 நாரியார் தாமறிவர் நாமவரை நத்தாமை
 கோரைவாய்ப் பொன்சொரியுங் கொல்லிமலை நன்னாடா
 ஊரைவாய் மூட வுலைமூடி தானிலையே "

 

என்றார்.

இதனையறிந்த அரசனும் முதலியாரும் புலவருடன் முன்போலவே ஐக்கியபாவங்கொண்டு சிநேகித்திருந்தனர். பின் சிலநாள் கழித்துப் புலவர் வெளியூருக்குப் போயிருந்த போது முதலியார் மரணம் அடைந்தார். இச்செய்தியைப் புலவரறிந்து உடனே திரும்பிவந்தார். அப்போது முதலியாரின் பிரேதத்தைச் சுடுகாட்டில் சிதையில் வேகவைத்திருந்தனர். வந்த புலவர் அவ்விடஞ் சென்று, சிதையில் வேகும் முதலியாரது உடம்பை நோக்கி,


 ''அன்று நீ செல்லக் கிடவென்றா யாயிழையோ
 டின்று நீ வானுலக மேறினாய் - மன்றல்கமழ்
 மானொக்கும் வேல்விழியார் மாரனே கண்டியூர்
 சீனக்கா செல்லக் கிட "


என்றார். உடனே அச்சிதையிலிருந்த உடம்பு ஒதுங்கியது. புலவர் அதன்பக்கத்தே படுத்துச் சுவர்க்கமடைந்தார்.

 

ஒற்றுமை அல்லது ஐக்கியபாவம் இப்படியன்றோ இருக்க வேண்டும். வாசாகயிங்கரியமான ஒற்றுமை வாய்க்குக் கெடுதியே யன்றிப் பயன்றருவதாகாது. ஆதலின், ஒவ்வொருவரும் மேற்கூறிய தீக்குணங்களை அகற்றி உலகிற் கவசியமானவற்றைச் சொல்லளவில் மட்டும் நிறுத்தாமல் செயலிலுங்காட்டி நமது நாட்டை முன்னுக்குக் கொண்டுவர முயல வேண்டும். இறைவன் அருள் புரிவானாக.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - மார்ச்சு ௴

 

 

No comments:

Post a Comment