Wednesday, September 2, 2020

தலைகீழ் வியாபாரம்

 

இந்தத் தலையங்கத்தைப் பார்த்தவுடன், ''தலையங்கமே 'தலைகீழ்' என்றிருப்பதால் இது வாசிக்கத்தகுந்ததல்ல” வென்று நேயர்கள் என்னை உதாசினம் செய்யாமல் பொதுநன்மைக்காகவாவது இதனை வாசித்து நன்மையுண்டாக்குமாறு கடவுளைப் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்

 

சகோதர சகோதரிகளே! நீங்கள் அனேகமாய் எல்லீரும் கடைத் தெருவுகளுக்குப் போயிருப்பீர்கள். அங்கே துணி முதலிய சரக்குகளைச் சிலர் ஏலம் போடுவதைக் கவனித்திருப்பீர்கள். அதுபோலவே ஆடு மாடுகளையும் மொத்தமாக எலம் போடுவதையும் பார்த்திருப்பீர்கள். இன்னொரு ஏலம் சிலவிடங்களில் நடக்கிறது; அதையும் கவனித்திருப்பீர்கள்; எனினும் மறந்திருப்பீர்கள். ஆதலின் இப்போது நம் ஆனந்தபோதினி வாயிலாக அதனை வெளியிடுகிறேன்:

 

இப்புண்ணிய பூமியாகிய பரதநாட்டின் கண், தென்பாரிசத்தில், இந்த ஏலம் பிரம்மகுலத்தவரால் பிரபலமாக நடைபெற்று வருகிறது; நிரம்பவும் நேர்த்தியானது! கேட்கத் தகுந்தது | தை முதல் ஆனி முடிய மேடைகள் தனித்தனி தயார் செய்யப்பட்டு அவற்றின் மேல் ஏலச்சரக்குகள் நிறுத்தப்படும். சொத்துக்களுக்குடையவர்கள் ஏலம் நடத்துவார்கள். சொத்துக்களின் மதிப்பு சமயம் போல் இடம், பொருள், ஏவல்களை யனுசரித்துத் தீர்மானிக்கப்படும். ஷை சொத்துக்களை ஏலத்தில் எடுக்கக்கூடியவர்கள், தங்கள் யோக்கியதையை எண்ணாமலும், எதிர்கால உணர்ச்சியில்லாமலும், ஆயிரக்கணக்காகத் தொகையை ஏற்றிப் பணம் கொடுத்து வாங்குகிறார்கள். ஏல நிபந்தனைகளின் படி சொத்துக்களை ஏலத்தில் எடுத்தவர் ஏலத்தொகை மட்டம் கொடுத்தால் போதாது; கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட இந்த உலகம் விருத்தியடைதற் கேதுவானதும், சாஸ்திர சம்மதமானதும், அருமையிலும் அருமை வாய்ந்ததுமான ஒரு பொருளையும் கொடுக்கவேண்டுமாம். இன்னும் எலம் எடுத்தவர், சரக்கு விஷயமான எல்லாச் செலவுகளுக்கும் உட்படவேண்டுமாம். இதென்ன ஆச்சரியமா யிருக்கிறது! ஒரு அருமையான பொருளையும் கொடுத்து எல்லாச் செலவுகளும் செய்வதுமல்லாமல் ஆயிரக்கணக்கான ரூபாயும் ரொக்கமாய்க் கொடுக்கிற வியாபாரமாகிய இதைத்தான் தலைகீழ் வியாபாரம் என்று சொன்னோம். யோசித்துப்பார்த்தால் இந்த வியாபாரத்தில் பலன் ஒன்று விசேஷமாயிருக்கிறது. என்ன பலன் என்றால், இந்தமாதிரி ஏலத்துக்கு இரண்டு முறை போய் உடன்பட்டால் இலக்ஷமியின் தமக்கையை வீட்டில் பிரத்தியக்ஷமாய்த் தெரிசிக்கலாகும்.

 

இதைப் படிப்பவர்களாகிய நீங்கள் நான் சொல்வது அர்த்தமாக வில்லை என்று என்னை நிந்திப்பீர்களாகையால் உங்கள் நிந்தனைக்குப் பயந்து வெளிப்படையாகவே அதைச் சொல்லிவிடுகிறேன். அதுயாதெனில் பிராம்மணாளுக்கு முக்கியமான விவாஹமாதங்களாகிற உத்தராயண கல்யாண மேடையில் பிராமணர்கள் தங்கள் மக்களாகிய வரர்களென்னும் சரக்குகளை நிறுத்தி, பெண்வீட்டுக்காரர்கள் போட்டியின் பேரில் கண்ணை மூடிக் கொண்டு ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஏற்றி, ஏலத்தொகை என்கிற வரதக்ஷிணையைக் கட்டி வாங்குவது தான். இதுதான் நாம் கூறிய ஏலம். ஒருவரிடத்தில் ரூபா 1000 வரதக்ஷணைக்கு இசைந்த ஒருவர் ரூபா 2000 வேறு இடத்தில் வருவதானால், முன்னதைவிட்டு அதற்கு உடன்படுவதால் இது ஏலம் என்று கூறலாயிற்று. இப்படி மாப்பிள்ளைக்கு வரதக்ஷிணை கொடுப்பதுடன் விவாஹத்தில் சாப்பாடு, மேளம், புரோகிதம், தக்ஷணை, தேங்காய், பழம், சாமக்கிரியைகள் முதலான செலவுகளும் பெண்வீட்டுக்காரர்தான் செய்யவேண்டும். 2, 3, பெண்களைப் பெற்றவன் இந்த ஏலத்தைக் கவனித்து இதில் இறங்கினால் இலக்குமியின் தமக்கையாகிய மூதேவியை அணுகித் தரித்திரத்தைப் பலனாக அடைகிறான். "நான்கு பெண்களைப் பெற்றவன் நாதாங்கி முளையை விற்றவன்'' என்ற பழமொழியும் இதுபற்றியே வழங்குகின்றது. இந்தக்கஷ்டம் காரணமாக ஒரு கெர்ப்பஸ்திரீ பிரசவித்ததும், குழந்தை ஆணா பெண்ணா என்று வெளியி லிருப்பவர்கள் கேட்கும்போது, பிறந்தது பெண்ணாயிருந்தால் உள்ளிருப்போர் "பெண் தான்'' என்று நாவால் அலக்ஷியமாய்ச் சொல்லிக் காட்டுவதுண்டு. பிரம்மசர்யம், கிருஹஸ்தாஸ்ரமம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்கிற நான்கு ஆஸ்ரமங்களுள் கிருஹஸ்தாஸ்ரமம் பலவிதங்களால் மற்றவைகளை விட மேலானதென்று மஹான்கள் கூறியிருக்கிறார்கள். இத்தகைய கிருஹஸ் தாஸ்ரமம் வம்சவிருத்திக் கேதுவானது. இதனை அடைந்தோர், வம்ச விருத்திக்குத் தக்க கன்னியைப் பருவத்தில் அடைய வேண்டும். ஆதலால் ஒரு கன்னியைப் பயந்த ஓர் உத்தம புருஷர், பெண் கொள்வோர்க்குச் சிரேஷ்டமான இந்த ஆஸ்ரமத்தையும், சந்தானத்தையும், சுகபோகத்லதயும், கொடுக்கக்கூடியவரா யிருக்கிறார். அன்னவரிடத்தில் பெண்கொள் வோர் பொருளாசைப்பட்டு அன்னவர் மனது புண்படும்படி செய்வது பேதைமையிலும் பேதைமையே. அந்தோ! பரிதாபம்! சிலர் தங்கள் பின்னை பி. ஏ. பரிஷையில் தேறி, பி. எல். பரீக்ஷைக்கு வாசித்துக்கொண்டிருந்தாலும், அப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பொருத்தங்கள் முற்றும் சேராமலிருந்தாலுங் கூட பெண் வீட்டார் ரூபா 5000 கொடுப்பதானால் அத்தொகைக்கு அப்பிள்ளையை விற்றுவிடுகிறார்களே! தங்கள் புத்திரர்களின் க்ஷேமத்தையல்லலா பெற்றோர்கள் கோரவேண்டும். சில ஜோசியர்கள் பெண் வீட்டாரிடம் 400, 500 ரூபாய் தரகுவாங்கிக் கொண்டு எப்படியாவது மாப்பிள்ளை வீட்டாருக் குபதேசஞ் செய்து மாப்பிள்ளையைப் பெண்ணுக்குச் சேர்த்து விடுகிறார்கள். செவ்வாய் தோஷம் குரூரமாயிருந்தாலும் நாலாம் பாதம் என்றும், அதற்கு விலக்குகள் இருப்பதாகவும் கவிகளைச் சொல்லிப் பொருள்களைத் தாறுமாறாகப் பிதற்றி, சவ்டால் அடித்துப் பொருத்திவிடுகிறார்கள். இவ்விருதிறத்தாரின் விவேகம் மெச்சத்தகுந்தது. இவாகளுக்கும் தரகாளிகளாகிய ஜோசியருக்கும் ஈஸ்வரன் என்ன பலன்களை அளிப்பாரோ?

 

அற்பமான தொழிலைச் செய்கிற சிறுவனும் ரூபா 300 க்குக் குறையாமல் வரதக்ஷிணை கேட்கிறான், இவனே இப்படியிருந்தால் பெரிய தொழிலில் அமர்ந்திருப்பவனும், அமர லாயக்குளளவனும் எவ்வளவு கேட்பான் என்பது நான் சொல்ல வேண்டுவதில்லை. பெண்களை அதிகமாகப் பெற்றவர்கள் இதனாலேயே பாபர் ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு ஒரு குடும்பத்தைத் தரித்திரத்துக்குள்ளாக்கியாவது அக்குடும்பத்தாரிடம் பணம் பறிக்கும் கருத்துள்ளவர்கள் பகல் கொள்ளைக்காரர்களேயாவர்; இந்த அசம்பா விதமான செய்கைகளுக்கு உட்படாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு பெரியமலையில் 5, 6 வைரக்கற்கள் இருப்பது போல இருக்கிறார்கள். ஆயிரக்கணக்காக வரதக்ஷிணை வாங்குகிறவர்களுக்கு அந்தப் பணத்தை வைத்து வசிக்கச் சொந்த வீடு கிடையாது; அதைப் போட்டுப் பந்தோபஸ்து செய்யப் பெட்டியும் கிடையாது; இந்நிலையில் அவர்கள் பெண்வீட்டாரிடம் ''பெண்ணுக்கு ஆர்மோனியம் வாசிக்கத் தெரியுமா?" ''பெண் இங்கிலீஷ் வாசித்திருக்கிறாளா?" என்கிற கேள்விகளும் கேட்கிறார்கள். இவற்றால் பெண்ணைப் பெற்றவர்கள் " மாப்பிள்ளைக்கு மிருதங்கம் அடிக்கத் தெரியுமா?'' என்றும், " பெண் இங்கிலீஷ் படித்து மாப்பிள் ளைக்குப்பதிலாகக் கச்சேரிக்குப் போய்த் துரையுடன் பேசிவரவேண்டுமா?'' என்றும் பல பிரதி உத்தரங்களைக் கேட்க இடமுண்டு. எனினும் அவர்கள் அவ்வாறு கேட்டால் பெண்களின் கலியாணம் நின்று போய் விடுமே என்ற பயத்தால் வேறுவிதமாகப் பதில் சொல்லத் தொடங்குவார்கள். அப்படிச் சொல்வதிலும் ''அவையெல்லாம் தெரியாது; அவள் குடும்பத்துக்கு அடங்கினபெண்; சாதாரணமாய் அவளுக்குக் குடும்பத்துக்கு வேண்டிய பத்திமார்க்கமான சீதாகலியாணம், ருக்மணி கலியாணம் நலங்கு, ஊஞ்சல், பத்தியம், ஓடம் முதலான பாட்டுகள் பாடத்தெரியும், தவிர இராமாயணம், பாகவதம், பாரதம் முதலிய புஸ்தகங்களை அவள் கடகட வென்று வாசிப்பாள்'' என்பார்கள். இவற்றைக் கேட்டு மாப்பிள்ளையாகத்தக்கவர் ''நான் சென்ஸ் ஆன்சர் டுமை கொஸ்ச்சன்' என்று மீசையை உருவிக் கொண்டு மேஜையின் மீது ஒரு அடி அடிப்பார். அப்போது கேட்போர்க்குக் கர்ப்பம் கலங்கிவிட்டது போலிருக்கும். என்னே கலிகால கலியாண வியாபாரம்! என்னே இவர்கள் குடும்பத்தின் கோலம்!! இந்தச் சம்பவங்களுக்கு மூலம் ''பெண் ருதுவாகிறதற்கு முன்னரே அவளுக்கு விவாஹம் ஆகவேண்டும்'' என்னும் கொள்கையை வைத்திருப்பதே. இந்தச் சட்டம் பிறந்த போது வரதக்ஷிணை வாங்கக்கூடாதென்கிற சட்டமும் கூடப் பிறக்க வில்லையே என்று விசனிக்கவேண்டி யிருக்கிறது.

 

அடடா! இன்னொரு ஆச்சர்யம் பார்த்தீர்களா! கலியாண காலத்தில் கூடியவர்க்கு முதல் பூஜைப்பொருள்கள் ஆங்கில முறைப்படி அமைந்த காபியும், அதற்குப் பொருத்தமான இட்டிலி, தோசை, நெய், உப்புமாவுமே. இந்தப் பூஜை காலை 6 - மணிக்குச் சரியாக ஆகவேண்டும். ஸ்நானம், சந்தியா வந்தனம் என்று அவர்கள் கோஷ்டியில் யாராவது தெரியாமல் சொல்லிவிட்டால் அவர்களின் கன்னத்தில் பலகாரம் சுடச்சுட விழுந்துவிடும். இந்தக் காலை பூஜை டயம் பிசகினால் அவர்களுக்கு ஸ்பிரிட் ஏறிவிடும். பிள்ளை வீட்டுக்காரர்களின் கண்கள் கோவைப்பழத்தைப் பழிக்கக்கூடியனவாய்ச் சிவந்து விடும். அவர்களுக்குச் சாப்பாடு ஆகும் வரை தாகசாந்திக்குச் சோடாவும், ஐசுமே. போஜனத்துக்குப் பின் டிபன் டீயும், கோக்கோவுமாகும். இராப் போஜனத்துக்குப் பிறகு பால் சப்ளை. இவ்வளவும் பெண் வீட்டார் பயத்துடன் டயம் தப்பாமல் கொடுத்து வந்தாலும் அப் பெண்வீட்டார்க்குக் கெட்டபேர் வந்துவிடும். தங்கள் சொந்த வீடுகளில் பழய சாதமுண்டும், சில சமயம் அதுவுங்கூட இல்லாமலும் இருந்து அரைகுறைப் போஜனம் இரண்டு வேளையு முண்ணும் வழக்கமுடையவர்களும், காபி, டீ, கோகோ இவைகளைத் தங்கள் ஜன்மத்தில் கண்ணாலும் பார்க்காதவர்களுங்கூட காபி பலகாரம் வரக் கொஞ்சம் தாமதமான போது பெண்வீட்டார் மீது கோபங்கொண்டு " ஒல்ட் டெவில்ஸ், என்னையா காபிக்கு இவ்வளவு லேட்? பிச்சைக்காரன் வீட்டில் கலியாணம் செய்தால் இப்படித்தான்'' என்று அதிகாரத் தொனியோடு சமயல்காரனிடம் வெகு முறுக்காகப் பேசுவார்கள். இவர்கள் ஆங்கிலம் வாசித்திராவிட்டாலும் ஆங்கிலம்தான் அதிகார தோரணைக்கு அடுத்தது என்று எண்ணித் தங்களுக்கு பரிச்சியமான இரண்டொரு ஆங்கில வார்த்தையை மிசிரம் செய்து பேசுவார்கள். ''நாம் இப்போது இகழ்ந்து கூறும் பிச்சைக்காரனிடத்தில் ஆயிரக்கணக்காய்ப் பணம் பறித்தோமே; இது சரிதானா" என்றாவது, தங்கள் ஸ்திதி என்ன என்றாவது யோசிக்காமல் தங்களிடத்தில் பிரபுத்வம் இருப்பதாகவும், பெண் கொடுத்தவனை நாயினுங்கடையனான ஒருவனைப்போலவும், தாங்கள் இந்திரபதவியிலிருப்பவர் போலவும் நினைக்கத் தலைப்பட்டு விடுவார்கள். இப்படிப் பெண்வீட்டார் அதிகச் செலவு செய்து பூர்வீக சொத்து பூராவும் விரயமாக விவாஹ சடங்கை நடத்தினாலும் பிள்ளை வீட்டுக்காரர்கள் ஏதாவது ஒரு குற்றத்தை விவாஹ காலத்திலாவது, பின்னிட்டாவது பெண் வீட்டுக்காரர் மீது ஏற்படுத்திக் கொண்டு அவர்களிடம் ருது சாந்திக்கு ரூபாய் 500, 1000 கொடுத்தால் தான் அது ஆகும் என்று கட்டாயப்படுத்தி வாங்கி ருது சாந்தியையும் செய்கிறார்கள். இன்னும் அவர்கள் கலியாணச் சடங்கில், உள்நாட்டு கதர் முதலிய ஜவுளிகளைப் பெண் வீட்டார் சரச விலையில் வாங்க இசைவதில்லை. உயர்ந்தவைகளையே விரும்புகிறார்கள். அதனால் ஜவுளியே ரூபாய் 1000, 1500, இழுத்து விடுகிறது. சலீசாக கதர் ஆடைகளை உபயோகித்தால் அநாகரீகம் என்கிற பேய் பிடித்துவிடும் என்று நினைக்கிறார்கள். முன்காலத்தில் மாப்பிள்ளைக்கு நாட்டு நெசவு 12 + 6 சோமன், நாகவல்லி துப்பட்டா, கலியாண ஜோடு, இவை போன்றவைகள் தாம் ஏற்பட்டிருந்தன. இக்காலத்திலோ 100 - ம் நெம்பருக்குக் கீழ்ப்பட்டதல்லாத சோமன், பட்டு லேஞ்சு, பனியன், ஷர்ட், வெஸ்ட்கோட், கோட், டை, காலர், பூட்ஸ், ஸ்டாக்கிங்ஸ், உயர்ந்த பட்டுக் குடை, வெல்வெட் குல்லா, உயர்ந்த பட்டு ஹாண்ட்கர்சீப், செண்ட் பாட்டில், சோப்பு தினுசுகள் ஆகியவற்றை மாப்பிள்ளைமார் அணிய விரும்புகிறார்கள். இவைகளை அணிந்து கொண்டும், பத்தினிகளை வீட்டு வேலை செய்யவிடாமல் ஆர்மோனியம் வாசிக்கச்செய்தும், அவருடன் மோட்டார் சவாரி செய்து ஜோடியாய் பீச்சுக்குப்போய் ஆங்கிலத்தில் சம்பாஷணை செய்து கொண்டு திரிந்து, வீட்டு வேலைக்காரர், சமையல்காரர் முதலிய ஏவலாளிகளை வைத்துக் கொண்டு கிருஹகிருத்யம் நடத்தி, தற்கால நாகரீக சமுத்திரத்தில் மூழ்கி, வரவுக்கு மீறின செலவு செய்து கடன்காரராகி, கடைசியில் நிரம்பவும் சங்கடத்துக்குள்ளாகி வருந்துகிறார்கள். இப்பழக்கங்களால் இருதிறத்தார் குடும்பங்களும் கேட்டையடைகின்றன. அனேக பிராம்மணர் குடும்பங்கள் இக் கோலத்தை அடைந்திருக்கின்றன.

 

பெண்ஜாதி ஆர்மோனியம், பிட்டில் வாசிப்பதையும் உல்லாசமாயிருப்பதையுமே தற்கால நாகரீகத்தை விரும்புவோர் கவனிக்கிறார்களே தவிர,

 

''நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ

டின்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோ
      டொப்புர வாற்ற அறிதல் அறிவுடைமை
      நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்
      சொல்லிய ஆசார வித்து"


என்கிற ஆன்றோர் வாக்கியத்தை ஒரு சிறிதும் உணர்ந்தார்களில்லை. இந்த அரும்பெரும் வாக்கியத்தை மேற்கூறிய ஜென்டில்மேன்களுக்கு ஒரு புண்யவான் உபதேசிக்க முயன்றால் அவர்கள் ''போமய்யா போம். என்னையா நீர் பட்டிக்காட்டு 305 - ம் பசலி ஆசாமிபோலிருக்கிறீரே; உமக்கு என்ன தெரியும்; நாமெல்லாம் மாடர்ன் வியூவை அனுசரிக்க வேண்டுமையா; நீர் சும்மாதாளிக்கிறீரே; உம்முடைய பழங்கதை போல் எத்தனையோ நான் பார்த்திருக்கிறேன். நீர் அவ்வளவோடு நிறுத்தும்; எல்லாம் யூஸ்லெஸ்; மனசுதான் எல்லாவற்றிற்கும் காரணம் " என்று சொல்லி அவருடைய வாயை அடக்கிவிடுவார்கள்.'' சிந்தையை யடக்கியே சும்மாவிருக்கின்ற திறமரிது'' என்கிற தாயுமானவர் வாக்கியத்தை அலக்ஷியம் செய்துவிட்டு வாசாமாத்திரத்தில்
''மனசு காரணம் " என்று சொல்லி முடிப்பார்கள். பகவத் பக்தியினாலும், ஆசாரத்தினாலும் தான் மனசு சரியாக வேண்டும் என்பதைச் சிந்திக்கமாட்டார்கள்.

 

நான் தூஷணையாக இதை எழுதியிருக்கிறேன் என்று நண்பர்களாகிய நீங்கள் நினைக்கக்கூடாது. மனிதர் ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் விசுவாசித்து அவர்க்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற நோக்கம் கொண்டு இதனை வரைந்தேனே தவிர வேறில்லை. ஒற்றுமைதான் சந்தோஷம், க்ஷேமம், ஜெயம், கீர்த்தி, இலக்ஷ்மி கடாக்ஷம் முதலான சகல வைபவங்களையும் தரவல்லது. ஆதலின், ஒருவரையொருவர் சங்கடத்துக்குள்ளாக்கி முடிவில் எல்லோரும் கெடுதற்குரிய விகற்பபுத்தியை நீக்கி ஒற்றுமையைக் கைக்கொள்வோமாக; நம் பாரதமாதா தன் பூர்ண சக்தியுடன் வெளிப்படுவாளாக! நம்மவர்களுக்கு இருக்கும் குறைகளை நீக்கி சர்வ மங்களங்களையும் அனுக்கிரஹிப்பாளாக.


         T. V நாராயண சுவாமி அய்யர்,

2279 நெ. சந்தாதாரர்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜுன் ௴


No comments:

Post a Comment