Wednesday, September 2, 2020

 

தலை விதி

(க. சிதம்பரம் பிள்ளை.)

தலைவிதி என்பது தலையெழுத்து, அதாவது ஒவ்வொருவரும் அன்னையின் வயிற்றில் கருக் கொள்ளும் அக்காலத்திலேயே அதன் பிற்கால வாழ்வு இன்ன விதந்தான் இருக்க வேண்டும் என்பதை அதன் தலையில் சிருட்டி கருத்தாவினால் எழுதப்பட்டு விடுகிறதென்றும், சுடுகாட்டிற் கிடக்கும் தலை யோட்டைப் பார்த்தால் அதிற் சில வரைகள்
காணப்படுகின்றனவே, அவை ஒவ்வொன்றும் அவ் வுடம்பு உயிருடன் இருக்கும் போது அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பப் பகுதிகளை குறித்து வைத்திருக்கும் குறிப்புகளாகும் என்றும் சொல்லப்படுகின்றன.

உலகத்திற் பார்க்கப் போனால் மனிதர் எல்லாம் ஒரேபடித்தாக இல்லை. வசதியற்ற சிறிய குடிசை ஒன்றில் வறுமைப் பிணியால் வாடி, ஒரு கவள அன்னத்துக்கும் வழி காணாமல், தானும் மனைவியும் பல குழந்தைகளுமாக தவியாய்த் தவிக்கிறான் ஒரு பரம ஏழை. உந்நதமாய் உயர்ந்த அழகிய மாளிகையில், அறுசுவை பதார்த்தங்களா லான உணவு வகைகளை உண்டு, பசி என்பதே இன்னதென்று தெரியாமல் ஏகபோகமாய் வாழ்கிறான் ஒரு தனவந்தன்.

என்ன தான் தொழில் முயற்சிகளைச் செய்து பார்த்தாலும் ஒருவனிடத்துப் பணம் சேரவே மாட்டே னென்றெது; அதைப்பற்றி இலட்சியமே செய்யாத ஒருவனிடத்து அது மேன்மேலும் வந்து குவிகிறது.

தந்தத்தால் செய்யப்பெற்ற சிவிகையின் மீது ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டு சவாரி போகிறான் ஒருவன், அவனைப் போன்ற மனிதர் பலர் அவனைச் சுமந்துகொண்டு போகிறார்கள். இப்படி இன்னும் அனேக அனேக வகையான வேறுபாடுகள் உலகத்தில் காணப்படுகின்றன. கடவுள் படைப்பில் உட்பட்ட மக்கள் பற்பல வகையில் உழலக் காரண மென்ன?

கடவுள் அருள் வடிவானவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிபவர், பாரபட்ச மில்லாதவர். அத்தகைய கடவுள் மனிதனைப் படைத்தல் செய்தார் என்றால், ஒருவனை ஏழையாகவும் இன்னொருவனைப் பணக்காரனாகவுமா சிருஷ்டித் திருப்பார்? ஒருகாலு மில்லை.

பின் ஏன் உலகத்தில் மக்கள் பலதரப்பட்ட நிலைகளில் இருக்கிறார்கள்? எத்தனை எத்தனையோ வகையான இன்ப துன்பங்களை எப்படி யெப்படி யெல்லாமோ அனுபவித்து வருகிறார்களே, இவற்றின் காரண மென்ன?

காரணம் வேறொன்று மில்லை; எல்லாம் தலைவிதி தான். தலைவிதியை மாற்ற அந்தப் பரமனுக்குக்கூட அதிகார மில்லையாம். அதனால் தான் "அன்றெழுதும் பரமன் அழித்தெழுதப் போவதில்லை" என்ற பழமொழியும் ஏற்பட லாயிற்றாம்.

ஆம்; அந்தத் தலைவிதி யாரால், எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது? வேறு ஒருவராலு மல்ல; அவரவராலேயே, முன் சன்மங்களில் ஏற்படுத்திக் கொண்டதுதான்.

மனிதனுக்குப் பணம் அவசியம் வேண்டியதே என்பதை மறுப்பார் எவருமில்லை. ஆனால், பணம் எப்படி வந்தது - வருகிறது. வரும் என்பதைப்பற்றி மட்டும் மிகப் பெரும்பாலோர் சிந்திப்பதில்லை.

நம்மைவிட செல்வத்தில் எவ்வளவோ குறைந்தவர்களும், வள்ளிசாய் பணமே இல்லாதவர்களுமாக எத்தனைபேர் நமது கண்முன் நிற்கின்றனர். அப்படியிருக்க, நாம் மட்டும் பணக்காரர்களா யிருக்கக் காரணமென்ன? நம் மீது தயவுவர்து கடவுள் நமக்குச் செல்வத்தைக் கொடுத்துவிட்டாரா? அல்ல. போன சன்மத்தில் நல்ல புண்ணியங்களை நாம் செய்தோம். அப்புண்ணியங்களின் அளவுக்குத் தக்கபடி பணமுள்ள குடும்பத்தில் கடவுள்
நம்மைப் பிறப்பிக்கச் செய்தார் என்பது மட்டுந்தான்.

இது போலவே இனி நாம் அடுத்த பிறவியிலும் பணக்காரர்களா யிருக்க எண்ணினால், அதற்கு வேண்டிய நற்செயல்களை இப்பொழுதே செய்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணம் பண வசதியுள்ள ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் தோன்ற வேண்டுவது அவசிய மல்லவா?

இனி, நம்மைவிடப் பலதரப்பட்ட பணக்காரர்கள் பலவகையான இன்பங்களை அனுபவித்து மகிழ நாம் மட்டும் ஏழைகளாய் உழன்று கொண்டிருக்கக் காரண மென்ன? இப்படி ஆவதற்கு ஏதுவான தீச் செயல்களைப் போன சன்மத்தில் செய்ததினா லல்லவா இப்பொழுது இப்படி உழல்கிறோம்? ஆதலால் இனிமேலும், அடுத்த சன்மத்திலும் நல்ல நிலையை அடைவதற்கு வேண்டிய நற் செயல்களை நம்மால் ஆகும் வரையிலும் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் ஏழைகளா யுள்ள ஒவ்வொருவருக்கும் தோன்ற
வேண்டாமா?

இத்தகைய எண்ணம் பணக்காரர்களுக்கும் அல்லாதவர்களுக்கும் தோன்றி விடுமேயானால், உலகத்தில் கொலை, கொடுர் துன்பம், ஏழைகளுக்கு ஆசை வார்த்தைகள் சொல்லி கடைசியில் ஏய்க்கும் நம்பிக்கைத் துரோகம் முதலிய தீச் செயல்கள் இருந்த இடம் தெரியாமற் பறந்து போக மாட்டாவா? *

* இவைகளைப் பற்றி “மனிதனும் கடமைகளும்” என்னும் நூலில் விரிவாய்க் காண்க. கிடைக்குமிடம்: “ஆனந்தபோதினி” ஆபீஸ், தபால் பெட்டி செ. 167, சென்னை.

எனவே, மனிதன் அனுபவிக்கக் கூடிய இன்பமும் துன்பமும் அவன் முன் செய்த நல்வினை தீவினைகளைப் பொறுத்தே யாகும். ஊழ்வினை, பழவினை, தலைவிதி என்பதெல்லாம் இவ்வித நல்வினை தீவினைகளின் தொகுதிக்கு இட்ட பெயர்களாகும். தலைவிதி என்பதற்கு மனிதனால் முன் சன்மங்களின் எற்படுத்திக்கொண்ட வினைத்திட்டம் என்பது பொருளாம்.

மனிதன் உடம் பெடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த ஊழ் வினை அவ் வுடம்பை விடாமற் பற்றிக் கொள்கிறது. அதன்படி அவ்வுடம்பு உயிருடன் இருக்கும் வரையும் அவ்வித வினைகளின் பயன்களை அனுப்வித்தே யாகவேண்டும். அவ்வினைப்பயன் ஏற்பட்ட அளவி லிருந்து கடுகள வேனும் குறையவாவது, கூடவாவது, முறை தவறி முன்பின்னாக வரவாவது, துன்பம் அனுபவிக்குங் காலத்து அதை நீக்குவதற்கு ஏதேனும் வகையில் ஒத்தாசை புரியவாவது செய்யமாட்டா. வரவேண்டிய காலத்தில் அவை வந்தே தீரும். செய்தி இப்படி யிருக்கும் போது, தீவினை காரணமாக துன்பம் நேரிடுங் காலத்து, இப்படி வந்து விட்டதே' என்று மன வருத்தங் கொள்வதிற் பயனொன்று மில்லை.

''சிறுகா, பெருகா, முறைபிறழ்ந்து வாரா,

உறுகாலத்து ஊற்றாகா, ஆமிடத்தே ஆகும்

சிறுகாலைப் பட்ட பொறியும்; அதனால்

இறுகாலத்து என்னை பரிவு?"

 

[சிறுகாலை=உடம்பை உயிர் அடையும் காலத்தில், பட்ட=அனுபவிப்பதற்காக ஏற்பட்ட,
பொறியும்=எழுதப்பட்ட-அதாவது திட்டப்படுத்தப்பட்ட ஊழ்வினையும், இறுகாலத்து=துன்பம் வருங்காலத்து, பரிவு என்னை=மனம் வருந்துவது எதற்கு]

மேற் சொன்ன நல்வினை தீவினைகளை மூன்று வகையாகப் பிரிப்பர்.
அவை ஈட்டியன, அனுபவிப்பன, அனுபவிக்க வேண்டியன. இவற்றை முறையே சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்றும் சொல்லப்படும்.

சஞ்சிதம் என்பது பல சன்மங்களில் அனுபவித்தது போக எஞ்சி நிற்கும் வினைத்தொகை.

பிராரப்தமாவது: மேற் சொன்ன தொகையிலிருந்து இந்த சன்மத்தில் அனுபவித்துக் கொண்டிருப்பவை.

ஆகாமியம்: - அடுத்த சன்மங்களில் அனுபவிப்பதற்காக இருப்பவை.

ஆம்; மனிதன் இறந்து இறந்து அனேக பிறவிகள் எடுக்கும் போது, ஒரு சன்மத்தில் செய்தவிளை, அடுத்த சென்மத்தில் அவனையே தவறாமத் சென்றடையும் என்பது எப்படி?

பசுவின் கன்று மிகச் சிறியதா யிருந்தபோதிலும், பெரிய பசுக்கூட்டத்தின் நடுவில் விடப்பட்டால், அது தனது தாய்ப் பசுவைத் தவறாமல் தேடிக் கண்டுபிடித்து விடும்.
அதுபோல், உலகத்தில் எத்தனையோ சீவ கோடிகள் இருந்தபோதிலும், பழவினையானது தனக்கு உரியவனையே சென்றடையும்.

''பல் ஆவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலை; - தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தே, தற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு''

 

[ஆவுள் =பசுக்களின் நடுவில், குழக்கன்று =மிகச் சிறிய கன்று]

எப்படியாயினும் ஒருவன் முன் செய்த வினைப் பயன்களை அனுப்வித்தே யாகவேண்டும். கஜல், அவன் அறிவாளியாக இருந்து தரும குணம், பரோபகார சிந்தனை, தெய்வ பக்தி முதலிய நற்கருமங்களைச் செய்து வருவானேயானால், தீவினைப் பயன்களை அனுபவிப்பதில் ஓரளவு சாந்தி பெறுவான்.

அதெப்படி? நற் செயல்களையே செய்து வரக்கூடிய அத்தகைய அறிவாளிகள் இளம் பருவத்திலேயே திடீர் திடீரென்று இறந்துவிடுவதும், மேன்மேலும் தீச் செயல்களையே செய்துவரக் கூடியவர்கள் நெடுங்காலம் உயிர் வாழ்ந்திருப்பதும் சாதாரண வழக்கத்தில் காண்கின்றனவே!

அப்படியல்ல; தீச் செயல்களைச் செய்யக்கூடியவர்கள் மேன்மேலும் கெட்ட கருமங்களைச் செய்து, பின்னும் அதிகமான பாவ மூட்டைகளைக் கட்டிக் கொள்வதற்காக நெடுங்காலம் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். நற்செயல்களைச் செய்து வரக் கூடியவர்கள் தங்களுடைய நன்னடக்கையின் ஏதுவாக தாங்கள் அனுபவிக்குர் துன்பங்களிலிருந்து ஓரளவு சாந்தி யடைந்து, அதைவிடப் பின்னும் நல்ல பிறவியை எடுப்பதற்காக, அப் பிறவியி லிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்று தான்.

சாரத்தை எடுத்துக்கொண்டு சக்கையை விட்டு விடுவது போல, இயமனும் அறிவாகிய சாரம் நிறைந்த கல்விமான்களை எடுத்துக்கொண்டு, சக்கையாகிய அறிவில்லாதவர்களை விட்டுவிடுகிறான் என்று ஆன்றோர்கள் கூறுவது மேற் சொன்ன உட்பொருளை மனதில் வைத்துக்கொண்டு தான்.

"பல் ஆன்ற கேள்விப் பயன்உணர்வார் வீயவும்,

கல்லாதார் வாழ்வ தறிதிரேல் – கல்லாதார்

சேதன மென்னும் அச் சேறகத்து இன்மையால்

கோதென்று கொள்ளாதாம் கூற்று”

 

[ஆன்ற=சிறந்த, வீயவும்=இறந்து போகவும்; சேதனம் என்னும் அச்சேறு=அறிவு என்கிற அந்தச்சாரம், கோது=சக்கை]


ஆனந்த போதினி – 1942 ௵ - டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment