Tuesday, September 1, 2020

 

செல்வர்களுக்கு

விக்டர் ஹ்யூகோ

பிரெஞ்சுப் பாஷையில் தன்னிகரற்ற நவீனங்களையும், கதைகளையும் சிருஷ்டித்த பேரறிஞன் 'விக்டர் ஸ்யூகோ. அவன் எழு நிய, லே மிஸரபிள்' என்ற நவீனம் உலகப் பிரசித்தி பெற்றது. ஏழைகளுக்கு இரங்கி உணர்ச்சி பீறிடும் வறுமைச் சித்திரங்களைத் தீட்டும் இந்த அருங்கலைஞன் எழுதிய கட்டுரையின் சில பகுதிகளை, அழகாக மொழிபெயர்த்துத் தந்திருக்கிஞர் திரு. 'மதியழகன்.'

 

தனிகர்களே! உலகத்துப் பாக்கியவான்களே! நீங்கள் கொண்டாடும் மாரிக்காலத்து விழாவிலே, நீங்கள் க்ளிக்கும் நடனசாலையிலே உங்களைப் பொலிவு படுத்துகின்றன, அங்கு அமைந்திருக்கும் விளக்குகள். எம்மருங்கும், உங்கள் பாதங்களைச் சுற்றிலும், பளிங்குக் கற்களும் கண்ணாடிகளும் பிரகாசிக்கின்றன; ஒளிவிடுகின்றன. இவ்வண்ணம் சிறப்புற்றொளிரும் அவ்விடத்தில் விருந்தினர்களுடன் கேளிக்கையும் நடனமும் புரிகின்றீர்கள்; அருமையான பாடல்களையும் பாடுகின்றீர்கள்.

 

ஆனால் ஒருவனை பற்றி நீங்கள் அந்தச் சமயத்தில் நினைப்பதுண்டோ? சிந்திப்பதுண்டோ? அதற்குரியான் யார்? அவனே ஒரு ஏழை; பரம ஏழை; பசிப்பிணியின் வாய்ப்பட்ட ஏழை. அவன் என்ன செய்கிறான்? சிழல் நிறைந்த சந்துகளில் நின்று கொண்டு, பொன் மயமாய் விளங்குகின்ற உங்கள் பங்களாவின் சன்னற்கண்ணாடியின் வழியாக, ஒளிர்கின்ற விளக்கின் பிரகாசத்தைத் தன் ஒளியிழந்த கண்ணால் காண்கிறான். தரித்திரத்திலாழ்ந்த அவன் நிற்கின்ற இடமோ குளிர்ந்ததும் பனிக்கட்டி நிரம்பியதுமான இடம் என்பதையும் நீங்கள் யோசித்தீர்களா?

 

அவன் ஒரு வேலையில்லாத் தந்தை. அவனை வறுமை யென்னும் பேயரசன் முற்றுகையிட்டிருக்கிறான். அவன் உதடுகளிலிருந்து ஈனக் குரலோசை யெழும்புகிறது! ஒருவனுக்கு எவ்வளவு திரவியம்! அவனுடைய பெருவிருந்தில் எத்தனை நண்பர்கள்! இச்செல்வனது மனமும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருக்கிறது. இவன் குழந்தைகளும் இவனோடு களிப்புடன் வாழ்கின்றனர்; இவர்களது விளையாட்டிற்குப் பல ரொட்டித்துண்டுகள்!

 

ஏ செல்வனே! இவ் வேழை, தன் மனதிலே உங்கள் விழாவினை எதோடு ஒப்பிடுகின்றான்! என்றும் ஒரு சிறு பிரகாசமுமில்லாத தனது வீட்டை ஒப்பிட்டுப் பார்க்கின்றான். பசியினால் வாடும் தன் மக்களை ஒப்பிட்டுப் பார்க்கின்றான். கிழிந்த உடையுடுத்தியிருக்கும் தனது மனைவியை ஒப்பிட்டுப் பார்க்கின்றான். பரப்பப்பட்டிருக்கும் சிறிது வைக்கோலில்' படுத்து, மாரிக்காலத்துக் குளிரினால் இறக்குந் தருவாயிலிருக்கும் தனது கிழத்தந்தையை ஒப்பிட்டுப் பார்க்கின்றான்.

 

இறைவன் இவ்வுயர்வுகளை மக்களின் செல்வத்தில் வைத்திருக்கின்றாராதலால், கஷ்டம் என்னும் மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஒரு சாரார் குனிந்து செல்கின்றனர், உயரிய சாப்பாட்டிற்கு ஒரு சிலரே விருந்தினர். உலகில் எல்லோரும் ஒரே நிலையில் அமர்ந்திருக்கவில்லை. இந்நில உலகத்தே நமக்குக் கெட்டதாகவும் அநியாயமானதாகவும் தோன்றுகின்ற ஓர் சட்டம், சிலருக்கு “அனுபவியுங்கள் ' என்றும் உரைக்கின்றது.

 

இக்கருத்து ஒளியற்றது வெறுப்பைத் தரக்கூடியது. கொடுமையானது. நிர்ப்பாக்கியர்களின் இருதயத்தில் மெல்ல மாறுபடக் கூடியது. சந்தோஷ சாகரத்தில் உழல்கின்ற செல்வச் சீலர்களே! பணக்காரர்களே! நிறைந்த உங்கள் செல்வத்தை அவன் பார்க்கிறான். ஆனால் தனது கரங்களால் உங்கள் பொக்கிஷத்தை அபகரிப்பவன் அவனல்ல. பின் எது? அதுவே தருமம்.

 

பணக்காரர்களே! ஏழைகளுக்குக் கொடுங்கள்! தருமம் இறைவழிபாட்டின் உடன் பிறந்த சகோதரி. அந்தோ! உங்கள் வாயிற்படியருகே குளிரினால் வாடிய் ஒரு கிழவன் முழந்தாளிட்டு விழும் நிலைமை வருமே யானால், இளஞ்சிறுவர்கள் குளிரினால் சிவந்த கரங்களால், உங்கள் பாதங்களருகே சிந்திக் கிடக்கும் மிச்சம் மீதிகளைப் பொறுக்கும் நிலைமை வருமேயானால், இறைவன் உங்கள் மேல் தன் அருட்பார்வையைச் செலுத்தமாட்டான்.

 

குடும்பங்களைச் செல்வ நிலையில் வைத்துக் காப்பாற்றும் இறைவன், உங்கள் பிள்ளைகட்குப் பலத்தையும், உங்கள் பெண்கட்குத் தன தருளையும் அளிப்பதற்காகவாவது தருமம் செய்யுங்கள்! உங்கள் கொடி முந்திரிச்செடி நன்றாய்ச் செழித்து வளர்ந்து பழம் கொடுப்பதற்காகவும், உங்கள் களஞ்சியம் தானியங்களால் நிரப்பப் படுவதற்காகவும், நீங்கள் சௌக்கியமாக வாழ்வதற்காகவும், இரவில் இறைவன் நம் கனவில் காட்சி யளிப்பதற்காகவுமாவது தருமம் செய்யுங்கள்!

 

தருமம் செய்யுங்கள்! உலகம் நம்மை அநாதையாகக் விடும் நாளும் வரும். அன்றறிவாம் என்னாது அறஞ் செய்க; மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணையாகும்.
நம்மிடத்தில் இரக்கம் கொண்டுளான், என்று உலகோர் பேசவாவது தருமம் செய்யுங்கள்! சுழல் காற்றினால் வருந்துகின்ற பரம ஏழை, உங்கள் விழாவின் போது துயருறுகின்ற ஏழை, உங்கள் மாளிகை வாயிற்படியில் நின்றுகொண்டு பொறாமைக் கண்ணால் நோக்
காமலிருப்பதற்காகவாவது தருமம் செய்யுங்கள்!

 

தருமம் செய்யுங்கள்! உங்களை மனிதனாக்கிய இறைவனால் நேசிக்கப் படுவதற்கும், ஒரு கொடியவனும் பயந்து வணங்கி உங்கள் நாமத்தைச் சொல்லுவதற்கும், உங்கள் வீட்டில் அமைதி நிலவுவதற்கும், சகோதரத்வம் தாண்டவமாடுவதற்கும் தருமம் செய்யுங்கள்; உங்கள் வாழ்நாளின் இறுதிச்சமயத்தில் உங்கள் பாபங்களை நீக்க விண்ணிலே ஒரு வலிமையான ஏழையின் வணக்கம் நிலைத்திருப்பதற்காகவாவது தருமம் செய்யுங்கள்!

 

ஆனந்த போதினி – 1944 ௵ - டிசம்பர் ௴

 

 

No comments:

Post a Comment