Tuesday, September 1, 2020

 

செவிச் செல்வம்

 

 இப்பூவுலகின் கண் எல்லாம் வல்ல இறைவனால், தமது வாணாளில் இன்பங்களை நுகர்ந்தின் புறுதற்காக மக்கட்கு நல்கப் பெறும் செல்வங்கள் பற்பல வகையாம். ஆயினும் அவர்களது அறிவுக்குறைவினால், அவற்றை வாய்க்கப் பெறார்களெனின், அப்பிழை அவர்களைச் சார்ந்ததேயன்றி இறைவன்பாலதன்று. அவற்றுள், முற்காலத்தும் இக்காலத்தும் எக்காலத்தும் பெருமை பெற்றோங்குவன சிறப்பான பொருட்செல்வம் கல்விச் செல்வம் எனுமிரண்டேயாம். ஏனையவனைத்தும் அவற்றுளங்கும் இவை இரண்டினுள்ளும் கல்விச் செல்வமே சிறப்புடைத்து. ஏனெனில்   அச்செல்வம் பொருட்செல்வம் போல் எவ்வாற்றானும் எக்காலத்தும் ஒரு சிறிது மழியாதாகலின். நிற்க,

 

இக் கல்விச் செல்வம் இருவகையாற் பெறலாம். ஒன்று கற்றுணர்ந்த வல்லுநர்பாற் சென்று, அவர்கட்கு ஊழியம் புரிந்து, அவர்கள் நீண்ட காலமாகச் சேமித்து வைத்திருக்கும் அரும்பெரும் பொருள்களாய உறுதிப் பொருள்களென்னு முண்மைகளைப் பன்முறை கேட்டுச் சிந்தித்துணர்தல்; மற்றொன்று தானே பிறிதெவருடைய உதவியுமின்றி தனதறிவைக் கொண்டே பன்முறை பயின்று ஆராய்ந்து தெளிந்துணர்தல். முன்னையதே இவை யிரண்டினுள்ளும் சாலச் சிறப்புடையது. எங்ஙனமெனில், தானே கற்றுத் தெளிதலில் பிழைகள் நேரிடக்கூடும். அன்றியும் பழக்கத்திற் கொணர்தலு மருமை. கேட்டலிலோவெனில் அறிஞர்கள் பால் வழி வழியாகக் கேட்டுணர்ந்த பெரியார்களிடத்திற் கற்பதில் பிழைகளிருத்த லரிது. ஆசிரியரிடத்தும் தம்மை யொத்த சீடர்களிடத்தும் அவ்வப்போது தமக்குண்டாகும் ஐயங்களையும் நீக்கிக்கொள்ளலாம். அன்றியும் குருகுல வாசம் செய்யும் போது, குருவினது உபதேச மொழிகளை அனுபவத்தில் பெற்றுக்கொள்ளப் பழகுதலு மியல்பு. இக்கருத்து கீழ்வரும் நன்னூற் சூத்திரங்களாற் புலனாகும்: -

 

"ஆசானுரைத்த தமைவாக்கொளினும் - காற் கூறல்லது பற்றலனாகும்;

அவ்வினையாள தொடுபயில்வகை யொருகாற் - செவ்விதினுரைப்ப வ்விருகாலும்

மையறு புலமை மாண்புடைத் தாகும்."

 

இது பற்றியே தமிழ்ப்பெரு மூதாட்டியாம் ஒளவையார் "கேள்வி முயல் " எனவும், ஆன்றோர்கள் " கற்றலிற் கேட்டலே நன்று'' எனவும் அறிவுறுத்திப் போந்தனர்.

 

இயற்கை மண்டபங்களாய கொழுமையுற்ற மரங்களினடியி லமர்ந்து உயிர்க்குறுதி பயப்பனவாய உயர்பொருள்களை, ஐயமற ஆசிரியரால் ஊட்டப்பெற்று நற்கல்வி பயில்வதை விடுத்து, கற்களாற் கட்டப்பட்ட பிர மாண்டமான கட்டிடங்களில் உயரிய ஆசனங்களி லமர்ந்து, பிற நாட்டு சரித்திரங்களையும், பொருளாதார நிலைமைகளையும் விரித்துப் போதிக்கும் புத்தகங்களைக் கட்டியழுது, சந்தேகங்கள் மலிந்து குழம்பிய மனத்தினராய் - கேள்வி யுணர்விலராய் - வாழ்வதை விரும்பும் இளைஞர்கள் மலியுங் காலமும், இப்பாரத மணித்திருநாட்டிற்கு வந்துள்ளதை இறைவன் திரு விளையாடலெனாது வேறென்னென் றியம்புவது? அந்தோ ! தமிழ்த் தாய்க்கு இன்னும் நாற்காலம் பிறக்கவில்லை போலும்! இவ்விடத்தி லிதைப் பற்றி இன்னும் விரித்துரைப்பது அனாவசியமாதலின், மேற்செல்வோம்.

 

ஒருவன் அறிவு நூல்கள் பலவற்றையும் ஓதா துணரும் பேற்றை இயல்பாகவே பெற்றுளானாயினும் தக்க ஆசான் பால் அந்நூல்களைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிதல் வேண்டும். அத்தகையாரே பொது மக்களாற் போற்றற்குரியராவர். இதுபற்றியே யன்றோ சர்வேஸ்வரனின் ஸாக்ஷாத் அம்சமாய ஸ்ரீராமன் வசிஷ்ட விசுவாமித்ரர்களிடத்தும், ஸ்ரீ கிருஷ்ணன் சாந்தீபமுனியிடத்தும் கலைகளைக் கற்றனர்? அன்றியும் ஒருவன் கல்லாத வனாயிருப்பினும் அறிவாளிகளிடத்தில் உண்மைப் பொருள்களைக் கேட்டுணர்ந்திருப்பின், அவைகள் அவனுக்குத் தளர்ச்சி வந்தவிடத்து பேருதவி புரிவனவாகும். சிவபெருமானாரது திருக்கண்களி லிரத்தம் வடியக்கண்டு, அஃது நிற்குமாறு காணாது பலவாறு துயருற்றுத் தியங்கிய கண்ணப்பனாருக்கு, "ஊனுக்கு ஊண் அப்புதல் வேண்டும்'' எனுங்கேள்வி யறிவு தக்க சமயத்தில் பேருதவி செய்ததன்றோ? இது பற்றியே "கற்றில் னாயினுங் கேட்க வஃதொருவற் - கொற்கத்தி னூற்றாந் துணை " எனத் தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் கூறியருளினர். அன்றியும், பலகலைகளும் வல்ல காண்டீவதாரியான பற்குணன் போர்க்களத்தை நண்ணியதும் தனது செயலால் விளையப்போகும் துயரங்கட் காற்றானாகி, செய்லற்றுச் சோர்ந்து வீழ்ந்தவிடத்து, ஆபத்சகாயனாய ஆதிமூலனது திவ் யோபதேசங்களைச் செவியுற்ற பின்னரன்றோ, தனது ஜாதி தர்மத்தையும் கடமையையும் வீரத்தையு முணரப்பெற்று போர்க்கெழுந்து பொருத்திப் புகழ் பூண்டனன்.

 

எண்குணமுடைய இறைவனை அடைதற்பொருட்டு மக்கட்கு எளிதிலுதவி புரிவதெது? கேள்வியறிவே யன்றோ? இக்கருத்தை நனிவிளக்குதற் பொருட்டே, சைவானுபூதி கைவரப் பெற்ற தவப்பெருஞ் செல்வ ராந் தாயுமானவர்,

 

''பெற்றவர் பெற்ற பெருந்தவக்குன்றே! பெருகிய கருணை வாரிதியே!

நற்றவத்துணையே! ஆனந்தக்கடலே! *  ஞாதுரு ஞான ஞேயங்கள்

அற்றவர்க்கறாத நட்புடைக் கலப்பே! அனேகமாய் நின்னடிக்கன்பு

கற்றதுங்கேள்வி கேட்டதும் நின்னைக்கண்டிடும் பொருட்டன்றோ காணே "

எனவும்,

'கேட்டன் முதனான்காலே கேடிலா நாற்பதமும்
      வாட்டமற வெனக்கு வாய்க்குநா ளெந்நாளோ"

 

* ஞாதுரு - காண்பான்; ஞானம் - காட்சி; ஞேயம் - காணப்படு பொருள்.

கேட்டன் முதனான்கு = கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை. கூடல்.

நாற்பதங்கள் - சாலோகம்; சாமீபம்; சாரூபம்; சாயுஜ்யம்.


எனவும், அருளிச் செய்வாராயினர். இத்தகைய செவியின்பம் நிறையப் பெற்ற காலக்ஷேபங்கள் நவீன நாகரிகம் பெருகிவரு மிக்காலத்தும், பற்பல விடங்களிற் பெரும்பாலாரால், மிக்க சிரத்தையுடன் விரும்பிக் கேட்கப் பெறுவது மிக மகிழ்வைத் தரத்தக்க தொன்றாம். அன்றியும் கேள்வி யறிவினை யுடையவர்கள், இப்பூவுலக்கத்தவரானாலும் தேவர்களொடு மொப்பாவரென்பதை,

 "செவியுணவிற் கேள்வி யறிவுடையா ரவியுணவி

னான்றாரோ டொப்பர் நிலத்து''


 என நாயனார் பொய்யாமொழியிற் புகன்றுளாரன்றோ?

 

மற்றும், கேள்வி யறிவாற் றுளைக்கப் பெறாத செவிகள், ஓசை மாத்திரத்தை உணருந் தன்மையவாயினும், உண்மையிலவை செவிடேயாம். இஃது " கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற் - றோட்கப் படாத செவி " எனும் திருவள்ளுவரது திருவாக்கால் தெளிக. அன்றியும் ஒரு வன் சிறிதாயினும் உறுதிப்பொருள்களைச் செவியேற்றக் கடவன். அவை அவனுக்கு, நிறைந்த பெருமையை நல்கும். ஆகலின் கூர்ந்தாராயு மிடத்து செவிச் செல்வத்தினும் சிறந்ததொரு செல்வம் பிறிதெஃது மிலை யென்பது வெள்ளிடை மலைபோற் செவ்விதிற் புலனாம். இது கீழ் வரும் பொய்யிற் புலவது திருவாக்குகளாற் றெரிகிறது.


 ''எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு
 மான்ற பெருமை தரும்''


 'செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்ல மச்செல்வஞ்
 செல்வத்து ளெல்லாந் தலை''

 

இறுதியாக, அன்பர்காள்! இதுகாறுங் கூறியவாற்றால், "கற்றலிற் கேட்டலினிது'' எனுமுண்மை நனி பெறப்படுகின்றது. ஆகலின், கற்றுணர்ந்தடங்கிய கல்வியாளர்களிடத்து, உயிர்க்குறுதி பயப்பனவாய உண்மைப் பொருள்களைக் கேட்டுணர்ந்து, அதன் வழி நடத்தலின் பயனாக ஆதிமுதல்வனாய ஆண்டவனது திருவருள் பெற்றுத் திளைத்திருப்போமாக.

 

ஆ. வ. பதுமநாடபிள்ளை,

“திருமகணிலயம்," ஆரியூர்.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - மார்ச்சு ௴

 

 

No comments:

Post a Comment