Tuesday, September 1, 2020

 

சேக்கிழாரும் இயற்கைக் காட்சியும்

 

லக ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு இறைவன் களிகூர்ந்து “உலகெலாம்” என அடியெடுத்து தவ, அதனைக் கொண்டு பெரிய புராணம் என்னும் ஒப்பில் பெருங் காவியத்தை இயற்றியருளிய தெய்வப்புலமை சான்றவர் நம்பெருமான் சேக்கிழார். இப்பெருமான் தொண்டர்தம் பெருமையைக் கூறுமிடத்து, அவரவர் தம் நாட்டின் சிறப்பையும் நகாத்தின் நலத்தையும், ஊர்களின் ஒப்பற்ற பெருமையையும் எடுத்து விதந் தோதியிருக்கின்றார்.

அன்னாருக்குக் காட்சி யளித்த இயற்கையன்னை, எல்லாக் காட்சிகளிலும் தெய்வ மணம் வீசும்படியாகவே செய்திருக்கிறார். இஃது அவரது செஞ்சொற் கவிகளால் நன்கு அறியப்படுகின்றது. இதனைச் சிறிது ஆராய்வாம்.

 

ஓர் உண்மைக் கவிஞனது உள்ளத்தில் இயற்கை யன்னை ஒப்பிலா மகிழ்ச்சியை யுண்டு பண்ணுகிறாள். அது போலவே நம்பெருமான் சேக்கிழாருக்கும் அத்தகைய இன்ப ஊற்றுப் பெருகுகின்றது. அக்காட்சிகளைப் புலவர்கள், பலவிதமாகச் சித்திரித் திருக்கின்றனர். ஆயின் என்ன? நம் புலவர் மாட்டுக் காணப்படும் பெருமை யென்ன? என்னையோ வெனின் அவர் பாக்களிலெல்லாம் தெய்வ மணம் வீசுவதுதான் தனிப் பெருமை.

 

இந்தப் பெருமையை ஆசிரியர் எவ்வாறு பகலவனிடத்துப் பொருத்துகிறார் என்பது ஈண்டு நோக்கற்பாலது.

 

''திருக்காளத்தி மலை - காளத்தியப்பர் இருக்கிறார். பக்கத்தில் கண்ணப்பர், ஊனமுது வைத்துக்கொண்டு, “இது சாலச்சிறந்தது, இனிமையானது, இன்னும் உண்ணும், இன்னும் உண்ணும்'' எனக் கழிபெருங்காதல்கூர உபசரிக்கின்றனர். கதிரவன் காண்கின்றனன். “ஆ! என்னே இவரது அன்பின் திறம்'' என வியக்கின்றான். இவரை வணங்குவதுதான் நமது பாக்கியம் என நினைக்கின்றான். நல்லவேளையாக, நமக்கு எண்ணிறந்த கைகள் இருக்கின்றன என மகிழ்கின்றனன். கரங்களைக் கூப்பி மலையை வணங்குகின்றனன்" இதுவே கவியின் சித்திரம். (ஆனால் சூரியன் அஸ்தமிக்கிறான் என்பதுதான் இங்கு உள்ளது.) இதை,


''அன்னவிம் மொழிகள் சொல்லி யமுதுசெய் வித்தவேடர்

மன்னனார் திருக்காளத்தி மலையினார்க் கினியநல்லூ

னின்னமும் வேண்டுமென்னு மெழுபெருங் காதல் கண்டு

பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையிற்றாழ்ந்தான்."

என்ற செய்யுளில் வெகு அழகாகக் குறிப்பிடுகின்றார்.

இம்மாதிரியான சித்திரங்கள் இன்னும் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆயினும் இரண்டிடங்களைக் குறித்து விட்டு இதைப்பற்றி நிறுத்திக் கொள்வோம்.

 

வேதநெறி தழைத்தோங்க, சைவம் வளர, நந்தியம் பெருமான் குருபரம்பரை விளங்க, உலகுய்ய வந்த சம்பந்தர் மாறன் பாடியை அடைகின்றனர். தந்தையின் தோண்மிசையன்றி, தாளால் நடந்து வந்ததைப் பொறாத எம்பெருமான், அவருக்கு முத்துச்சிவிகை கொடுக்க எண்ணி யிருக்கின்றனன். மாலைக்காலம். சூரியன் மேல்கடலில் ஆழ்கின்றனன். இதனைக் கவி சமத்காரமாக எப்படி அமைக்கிறார் பாருங்கள்.

 

'சம்பந்தப் பெருமானுடன் வந்த அடியார்கள் தனது வெம்மையைப் பொறாது வருந்துவார்களே. அப்படியாயின் அடியார் படுந்துன்பந் துடைக்க வல்ல ஞான சம்பந்த வல்ளல் நம்மைக் கோபிப்பரே என்று அஞ்சி தனது ஆயிரம் கைகளையும் வாங்கி ஒளித்துக் கொண்டு மேல் கடலில் மறைந்தனன் எனக் கவி கூறுகிறார். அஃது கீழ்வரும் செய்யுளில் அமைந்து கிடப்பதைப் பாருங்கள்:


''உய்யவாத சம்பந்த ருடன் வந்தார்க்

கெய்து வெம்மை யிளைப்பஞ்சி னான் போலக்

கைக ளாயிரம் வாங்கிக் கரந்து போய்

வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன்.''

 

இனி, இப் பெருமானே சூரிய உதயத்தை வெகு அழகாகக் குறிக்கிறார். முதல் மாலை மேல் கடலில் ஆழ்ந்த வெய்யவன் மறுநாட் காலை கிழக்கில் தனது பரந்த கிரணங்களைப் பரப்பிக் கொண்டு தோன்றுகின்றான். ஞானசம்பந்தப் பெருமானுக்கு முத்துச் சிவிகை வந்துளது. புகலிப் புனிதரைச் சிவிகையின் மேல் ஏற்றிக் காண வாசைப் பட்டவன் போலக் கருங்கடலில் தோன்றினான் பகலவன் என்று கூறும் கவியின் திறம் தான் என்னே! தன் மகன் முடி சூடப் போகிறான். அதை நாம் பார்க்க வேண்டு மென்று ஆசையுடன் கதிரவன் தோன்றினான் என்று கம்பர் சுக்ரீவ பட்டாபிஷேகத்தைக் குறிக்கின்சார். இங்கு இவர் உலகின் தன்மையைத் தான் சேர்த்துக் கூறினார். ஆனால் நம் சேக்கிழாரோ, புகலிப் புனிதரை, உலகு உய்விக்க வந்த வள்ளலைச் சிவிகை மேல் ஏற்ற வந்தனன் எனக் கூறு முகத்தான் தெய்வ மணத்தைப் பொருந்த வைக்கின்றனர். அக்கவி: -


''போத ஞானப் புகலிப் புனிதரைச்

சீத முத்தின் சிவிகைமே லேற்றிடக்

காதல் செய்பவன் போலக் கருங்கடன்

மீதுதே ரின்வந் தெய்தினன் வெய்யவன்”                        என்பது.

 

இனி, காளத்தி மலையில் இரவே எப்பொழும் கிடையாது என்று கூறுமிடத்துக் காரணங்கள் காட்டுகின்றார். அப்பொழுது அம் மலையின் கண் உள்ள மரங்கள் தீப்பற்றிக் கொண்டு எரிவதாலுண்டாகும் ஒளியும், மந்திகள் குகைகளில் வைத்திருக்கும் செய்ய மணிகளின் ஒளியும் கூடியிருப்பதோடு, எக்காலும் இறைவனை மறவாத தவயோகிகளின், ஜிதேந்திரியர்களின் காந்தியும் கூட, அம் மலையில் இரவில்லாமல் செய்தது என்று குறிப்பிட்டார். இங்கு தெய்வ மணம் வீசும் யோகிகளின் காந்தியையும் சேர்த்தார்.

இவ்வாறு சேக்கிழார் எப்பாடலிலும் தெய்வ மணம் வீசும்படி பாடும் இயல்புடையவ ரென்பது நன்கு போ தரும். இதிலிருந்து நம் பெருமான் சேக்கிழாரின் மனப்பான்மையும் அறியப்படுகின்ற தன்றோ!

 

ஆனந்த போதினி – 1936 ௵ - நவம்பர் ௴

 


 

No comments:

Post a Comment