Wednesday, September 2, 2020

 

தாதாபாய் நெளரோஜி

 

இந்திய ஜன சமூகத்தில் 'தேசசேவை' - 'தேசபக்தி' யின் உணர்ச்சி தோன்றுவதற்குக் காரணராய் நின்றவர் தாதாபாய் நௌரோஜியேயாம்.


 
பிறப்பும் பால்யமும்.

 

தாதாபாய் நௌரோஜி 1825 - ம் ஆண்டு செப்டம்பர் 4 - ந் தேதி பம்பாய் நகரத்தில் வதிந்த ஓர் பார்சியின் குமாரராய்த் தோன்றினார். 'தந்தையொடு கல்வி போம்' என்பதற்கிணங்க கல்வியூட்டுந் தன்மையையுடைய தந்தையை இவர் தம் நான்காம் பிராயத்தி லிழந்து விட்டார். கணவனையிழந்து கைம்பெண்ணாகிய இவருடைய தாய், தம் சகோதரர்களின் ஆதரவிலிருந்து வந்தார். தாதாபாய் நௌரோஜியும் தம் தாய்மாமனின் உதவியால் கல்வி பயின்று வந்தார். சிறுபள்ளிக் கூடங்களில் படித்துத் தேர்ந்து பின்பு, பம்பாய் நகரிலுள்ள எலிபின்ஸ்டன் உயர் தரக்கலாசாலையிற் சேர்ந்து வாசித்தார். விளையும் பயிர் முளையிலே தெரியு மென்பது போல, தாதாபாய் பரீக்ஷைகளில் முதன்மையாகத் தேர்ந்து பல பரிசுகளும், நன்கொடைகளும் பெற்று உபாத்தியாயர்களாற் பெரிதும் அபிமானிக்கப்பட்டு வந்தார். 1845 - ம் வருஷம் படிப்பு முடிவடைந்து நௌரோஜி பட்டமும் பெற்றார்.

 

பொதுக்கல்வி முடிவடைந்த பின்னர், பம்பாய்நகர முதன்மை நியாயாதிபதியும், கல்வி இலாகா அக்ராசனருமான சர் எர்ஸ்கின் பெர்ரி என்பவர் தாதாபாயின் அறிவு ஆற்றல்களைக் கண்டு வியந்து நௌரோஜியை பாரிஸ்டர் பரீக்ஷைக்கு வாசிப்பதற்காகச் சீமைக்கு அனுப்ப எண்ணினார். அதற்கான செலவில் பாதியைத் தாதாபாயின் மாமன் கொடுத்து தவச் சம்மதிக்க, ஸர் எர்ஸ்கின்பெர்ரி தாம் பாதிச் செலவை ஏற்றுக் கொள்ள ஒப்பினார். ஆனால், இதற்குச் சில வருஷங்களுக்கு முன்னர் கல்விபெறும் நோக்கத்துடன் சீமைக்குச் சென்று ஞான ஸ்நானம் பெற்றுக் கிரிஸ்தவராகித் திரும்பி வந்தனர் பல இந்திய மாணவர். தாதாபாயின் தாய் மாமன் இம்மாணவர்களின் மாறுதலைக் கண்டுபயந்து “தாதாபாயும் கிரிஸ்தவவேடத்துடன் இந்தியாவுக்குத் திரும்பி வந்தாலென்ன செய்வ'தென்ற பயங் கொண்டு நௌரோஜியைச் சீமைக்குச் செல்ல அனுமதிக்க வில்லை. இக்காரணத்தால் நௌரோஜியின் சீமைப் பிரயாணம் தடையுற்றது. சீமைக்குச் செல்லும் எண்ணம் ஈடேராததால் தாதாபாய் உத்தியோகம் சம்பாதிக்க முயன்றார். உடனே இவருக்கு பம்பாய் எலிபின்ஸ்டன் கலாசாலையிலோர்

 

உபாத்தியாயர்

 

பதவி கிடைத்தது. அக்கலாசாலையில் தாதாபாய் அதிக ஊக்கங்கொண்டு, மாணவர்களுக்குக் கல்வி போதிப்பதில் அதிக சாமார்த்தியராக விருந்தது கண்டு, கலாசாலைத் தலைவர்கள் இவருக்கு 1854 - ம் ஆண்டில் 'கணிதசாஸ்திரம்'', “பிரகிருதி சாஸ்திரம்' முதலியன போதிக்கும் உயர்தர ஆசிரியர் பதவியை அளித்தனர். இந்தியர்களுக்கு எலிபின்ஸ்டன் கலாசாலையில் போதகாசிரியர் பதவியைக் கொடுப்பது வழக்கமில்லாதிருந்த போதிலும் விசேஷமாக இவரை அவ்வேலையிலமர்த்தியதினின்றும் இவருடைய திறமை விளங்கும்.

 

கலாசாலை மாணவர்களின் ஒத்துழைப்பைக் கொண்டு தாதாபாய் 'இலக்கிய சங்க' மொன்றை அக்கலாசாலையி லேற்படுத்தினார்; அச்சங்கத்தின் கொள்கைகளையும், அதன் சார்பாக நடைபெறும் சொற்பொழிவுகளையும் வெளியிட ஓர் பத்திரிகையும் தோன்றச் செய்து அதற்கு விஷயதானங்கள் செய்துவந்தார். இயற்கையாக நௌரோஜிக்குப் 'பெண்கல்வி' யில் அதிகஊக்க முண்டு; பெண்களுக்குக் கல்வியவஸ்பமென்ற கருத்துக்கள் பொதிந்தபல வியாசங்களை இவர் சஞ்சிகைகளுக்கு எழுதி வந்தார்; இவருடைய முயற்சியின் காரணமாகப் பம்பாய் நகரில் பல பெண்பாடசாலைகள் நிறுவப்பெற்றன. நௌரோஜியே அவகாசம் கிடைத்த போது அப்பெண்பாடசாலைகளுக்குச் சென்று கல்வி போதிப்பது முண்டு; தாதாபாயே பம்பாய் மாகாணத்தில் முதல் முதலாக பெண்கல்வி யுணர்ச்சியை யுண்டு பண்ணினரெனினும் மிகையாகாது. கலாசாலையைப் பொறுத்த விஷயங்களில் மட்டுமல்லாது பொதுஸ்தாபனங்களிலும், தேசகைங்கர்யத்திலும் நௌரோஜி அதிகம் ஈடுபட்டு ''பம்பாய் சங்கம்'' (Bombay Association), விதவா விவாஹசபை, பார்ஸி தேகாப்பியாச அகம் - அனைய பல ஸ்தாபனங்களின் உறுப்பினராகவு மிருந்துவந்தார். பின்பு, தேசமுன்னேற்றத்திற்கு அவசியமான பல சாதனங்களில்


 
பத்திரிகா கைங்கர்யம்


ஒன்றென ஓர்ந்து 'ராஸ்ட் காப்டார்' என்ற வாரப்பத்திரிகையை 1851 – ம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிட்டார். இப்பத்திரிகை குஜராத்தி பாஷையிலே எழுதப்பட்டு வந்தது. இதில் பெண்கல்வி, பாஷாபிமானம், விதவாவிவாஹம், இந்து மதாசாரம் என்ற பல்வேறு தலையங்கங்களைக் கொண்ட வியாசங்கள் பல இவரால் வெளிவந்தன. இதுவே பம்பாய் மாகாணத்தில் தாய் பாஷையாகிய குஜராத்தி மொழியில் வெளி வந்த முதல் பத்திரிகையாகும். இவ்விதமாக ஆசிரியரென்னும் அருந்தொழிலில் இவருக்கு எட்டுவருஷகாலம் இமைப்பொழுதாகச் சென்றது. பின்பு, 1855 - ம் வருஷத்தில் நௌரோஜிக்குச்


 
சீமை பிரயாணம்


நேர்ந்ததினிமித்தம் அவர் உபாத்தியாயப் பதவியை விட்டு, மேல்நாட்டிற்குப் பிரயாணமானார். 'காமா கம்பெனி' யின் சொந்தக்காரர்களான பார்சி கூட்டு வியாபாரிகள், லண்டன் மாநகரில் ஓர் கிளை வியாபார ஸ்தலத்தை ஸ்தாபித்து, நௌரோஜிக்கு அதனை மேற்பார்வை பார்க்கும் (மானேஜர்) பதவியையளித்து அவரைச் சீமைக்குப் பிரயாணப்படுத்தினர். ஆசிரியராகவும் நண்பராகவும் மாணவர்களை ஊக்கி வந்த தாதாபாயின் மாணவச்சமூகம், அவர் பிரிவுக் காற்றாது, "தாதா - கல்வியைத்தா! தா! என்று இனி எப்போது கேட்போம் என ஏங்கி, நௌரோஜியென்னும் தீபக்குறைவால் இருளை அடைந்தது.

 

நௌரோஜி சீமைக்குச் சென்றதும் பொது விஷயங்களி லீடுபடும் அவரது தன்மையும் அவரைப் பற்றிக்கொண்டே கப்பலேறியது. அவர் இங்கிலாந்திலும் இந்திய தேசசேவை புரிய, இந்தியரின் குறைகளையும் அவர்கள் அரசாங்கத்தாரிடமிருந்து எதிர்பார்க்கும் சீர்திருத்தங்களையும் வெளியிடும் நோக்கத்துடன் லண்டனில் ஓர் இந்தியசங்கத்தை நிறுவினார். பின்பு, சங்கத்தின் நோக்கங்கள் விசாலமாக, புதிது புதிதான சீர்திருத்தங்களும் முறைகளும் ஞாபகத்திற்குவர, 1867 - ம் ஆண்டினிறுதியில் கிழக்கு இந்திய சங்கம் (East Indian Association) ஒன்றை ஸ்தாபித்தார். இச்சங்கத்தின் நோக்கங்களைத் தழுவி ஆசியா விவேசனப் பத்திரிகை (Asiatic Review) என்ற பத்திரிகையும் வெளிவந்தது. இப்பத்திரிகையில் தாதா வரைந்த வியாசங்கள் அனந்தம். இங்கிலாந்தி லக்காலத்திருந்த பல இலக்கிய, தர்க்க, ஆராய்ச்சிக் கழகங்கள் நௌரோஜியின் வியாசங்களையும் ஊக்கத்தையும் கண்டு அவர் உதவியை நாடின. தாதாபாயின் சீமைப்பிரயாண முக்கிய நோக்கம், தாம் ஐரோப்பியர்களுடைய பொது ஸ்தாபனங்களில் அங்கம் பெற்று, அவர்களுடன் நெருங்கிப் பழகி வாழ்ந்து, இந்தியர்களுடைய திறமையையும் அவர்களுடைய குறைகளையும் எடுத்தோத வேண்டுமென்பதே. நௌரோஜியின் தாய்மொழி குஜராத்தியானதாலும், தாய்மொழியி லபிமானம் வைத்துக் கற்றுத் தேர்ந்தவராதலாலும், சீமையிலுள்ள லண்டன் சர்வகலாசாலை (London University College) யில் அவருக்கு குஜராத்தி பாஷையைப் போதிக்கும் ஆசிரியர் பதவியை அளித்தனர். இவருடைய புகழ் அதிகரிக்கப் பின்பு கல்வியாலோசனை சபை (Senate) க்கும் இவர் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பம்பாய் எலியின்ஸ்டன் கலாசாலையில் விசேஷ கௌரவம் பெற்ற நௌரோஜியே சீமையிலும் முதலிந்திய ஆசிரியராக விளங்கினார். ஐரோப்பியர்களும் நௌரோஜியிடம் அதிக அன்பு செலுத்தி வந்தனர். 1862 - ம் ஆண்டில் சில மனஸ்தாபங்கள் வந்துற நௌரோஜி காமா கம்பெனியினின்றும் விலகிக்கொண்டு தனிமையாக ஓர் வியாபாரத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார். உலகில், எத்துணை செல்வந்தராயினும், எவ்வளவு கற்றவராயினும், ஆற்றலவரிடம் அடைக்கலம் புகுந்திருப்பினும், 'காலம்' என்பவன் கஷ்டத்தையோ, நலத்தையோ அன்னவருக்கு வழங்கும் போது அவர் அதனை நிராகரிக்க முடியாது. அதுபோல, 1866 - ம் வருடத்தில் துரதிர்ஷ்டமானது நௌரோஜியையும் விடாது பற்றவே, அவருடைய கம்பெனி நஷ்டத்திற்கிலக்காயிற்று. நௌரோஜி தமக்கேற்பட்ட நஷ்டததை எண்ணி, எண்ணி ஏக்கமுறாது சாமார்த்தியமாகவும் துரிதமாகவும் யாவற்றையும் ஒழுங்கு செய்து கொண்டு 1869 - ஆண்டில் தம்

 

தாய் நாட்டிற்குப் பிரயாணம்


ஆனார். பம்பாய்வாசிகள், காட்டிற்குச் சென்ற ஸ்ரீரகுராமன் திரும்ப அயோத்தியை யடைந்த பொழுது குடிகள் எவ்விதம் அவரை வரவேற்றார்களோ, அந்தவகையில் தாதாவைக் குழந்தை முதல் விருத்தர் வரையில் கடற்கரைக்குச் சென்று குதூகலத்தோடு வரவேற்றனர். பிரிந்தவர் கூடுங்கால் அங்கு ஆனந்தமும், பாஷ்பமும், தழுவலும், மகிழ்ச்சியும், இன்ப வசனங்களும், பொங்கி எழுவது இயற்கையன்றோ! அன்று நௌரோஜிக்கு ஓர் வரவேற்புப் பத்திரமும், முப்பது ஆயிரம் ரூபாய் கொண்ட பணப்பையொன்றும் அளிக்கப்பட்டன். சில ஆண்டுகள் செல்லத் தாதாபாய் அரசாங்கத்தாரிடத்தில் இந்தியரின் வரவு செலவைப் பற்றி சாட்சி கூறி, ஏழைமக்களின் குறைகளை யெடுத் துரைக்க

 

மேனாட்டுக்குப் பிரயாணம்

 

ஆனார். அக்காரிய விசாரணை கமிட்டிக்கு 'பாசட் கமிட்டி' என்று பெயர். சீமையில் தாதாபாய் இந்தியர்கள் ஏழைகளென்றும், ஒவ்வொரு இந்தியரின் சராசரி வருமானம் மாதம் இருபது ரூபாய்க்கு மேற்படாதென்றும் தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். பாசட் கமிட்டியின் வாயிலாக, அரசாங்க ஆங்கிலேய அதிகாரிகளின் அளவுக்கு மிஞ்சின சம்பளம், இந்தியாவில் உயர்ந்த அரசாங்கப் பதவிகள் இந்தியர்களுக்கு அளிக்கப்படாதது முதலான விஷயங்களைத் தெளிவாகக் கணக்குகளுடன் மேல் நாட்டாருக்கு எடுத்துக் கூறிய முத லிந்தியர் நௌரோஜியேயாவர். இவ்விஷயங்களைப் பலரும் அறிய 1873 - ம் ஆண்டில், 'இந்தியரின் வறுமை' என்ற புத்தகத்தையும் இவர் வெளியிட்டார். இவர் சீமையிலிருந்து திரும்பி வந்த பின்னர் பரோடா சமஸ்தான மன்னர் மூல்கார் ராவ் கேய்க்வார், ஆளுந் திறமை குன்ற, சில்லறை தேவதைகள் குடிகளை வருத்த, குடிகள் தவிக்க, சமஸ்தானம் சீர்கேடடைந்திருந்ததால் ராஜீய விஷயங்களி லனுபவம் வாய்ந்த நமது நௌரோஜிக்கு 1874ல்

 

திவான் பதவி

 

அளித்தனர். தாதா ஒரே வருஷகாலம் அப்பதவியை வகித்தாராயினும், குறிப்பிட்ட அச்சிறுகாலத்திற்குள்ளாகவே அவர் அக்குட்டிப் பிசாசுகளை அடக்கி, குடிகளுக்கு நீதி வழங்கி, அரசாங்க நடவடிக்கைகளையும், கணக்குகளையும் சீர்படுத்தினார். 1875 - முதல் 1877 - வரையில் நௌரோஜி பம்பாய் நகர பரிபாலன் சபையின் அங்கத்தினராகவிருந்து பல சீர்திருத்தங்களைச் செய்தார். 1885 - ல் அரசாங்கத்தார் தாதாபாயை பம்பாய் சட்டசபையின் அங்கத்தினராக நிய மனஞ் செய்தார்கள். அதிலும் தாதா விசேஷசேவை புரிந்தாரென்பது நாம் கூறாமலே புலனாகும். இவ்வாண்டிற்றான் முதல் முதலாக அகில இந்திய காங்கிரஸ் மஹாசபை கூடிற்று. நௌரோஜி காங்கிரஸ் நடைபெறுவதற்கு அதிக சிரம மெடுத்துக் கொண்டார். 1886 - ம் வருடம் நௌரோஜி சீமைக்குச் சென்று பாராளுமன்றத்தின் (Parliment) அங்கத்தினர் ஸ்தானம் பெற உதார (Liberal) கட்சியின் சார்பாக கார்பர்ன் என்னும் பிரிவின் அபேக்ஷகராக நின்றார். அக்காலத்தில் அங்கு உதாரக்கக்ஷயார் சிறுபான்மையராயிருந்த காரணத்தால் தேர்தலில் நௌரோஜி தோல்வியுற்றார்: அதே ஆண்டின் முடிவில் சீமையை விட்டுப் பிரயாணமாகி இந்தியாவை யடையவே டிசம்பர் மாதத்தில் கல்கத்தாவில் கூடிய இரண்டாவது காங்கிரஸ் அக்கிராசனர் பதவி இவருக் களிக்கப் பெற்றது. அச்சபையில் தாதாபாய் நௌரோஜி தாம் தம் அனுபவத்திலுணர்ந்த இந்தியர்களின் துயரங்களையும், இந்திய நாடு முன்னேற்ற மடைவதற்கான வழிகளையும், தாம் சீமையில் இந்தியர்களின் நிலையை எடுத்தோதிய விதத்தையும் தெளிவாகக் கூறி, காங்கிரஸ் மஹாசபை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் முக்கியமான பல இடங்களிலும் கூடித் தனது குறைகளைத் தீர்மானங்களாக்கி அனுப்ப வேண்டுமென்றும் ஓதிப் பல திட்டங்களைச் செய்தார். இதற்கு விக்டோரியா மஹாராணியார் அவர்களும் ஆதரவளித்தனர்.

 

இந்திய அரசாங்க உத்தியோகஸ்தர்களின் குறைகளை விசாரிப்பதற்காக 1887 - ம் ஆண்டில் ஓர் சபை அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டது. அதில் நௌரோஜி தமது அபிப்பிராயத்தைக் கூறி அவ்வுத்தியோகஸ்தர்களின் சம்பளம் உயர்த்தப்படவேண்டு மென்று வற்புறுத்தினார். ஒருமுறை சீமையில், தேர்தலில் நின்று அபஜெயமடைந்ததைக் குறித்து அவர் விசனப்படவில்லை. முயற்சியுடையவர் இகழ்ச்சியடையாராதலின் மறுமுறையும் அவர் சீமைக்குச் சென்று பாராளும் மன்றத்தின் அங்கத்தினர் பதவிக்கு அபேக்ஷகராக நின்றார். 1892 - ல் முயற்சி திருவினையாக்க 'ஸென்ட்ரல் பின்ஸ்பரி' என்ற பாகத்தின் பிரதிநிதியாக பெரியார் இவரைத் தேர்ந்தெடுத்து
'பார்லிமெண்ட்' சபைக் கனுப்பினர். அந்த ஸ்தாபனத்தில் இவரது ஊக்கத்தால் இந்தியர் விஷயங்களை அவ்வப்போது கவனிக்க இந்தியப்பாராளுமன்றப் பிரிவுசபை
(Indian Parliamentary Committee) என்ற பெயருடன் ஓர் கிளைச்சபை நிரூபணஞ் செய்யப்பட்டது. அக்கமிட்டியின் வாயிலாக இந்திய நாட்டின் நலத்தை இயன்ற அளவு தாதா பெருக்கி வந்தார். இந்தியர் சிவில் சர்விஸ் (Indian Civil Service) க்கு இந்தியர்களையுஞ் சேர்த்து ஏககாலத்தில் பரீக்ஷை செய்யப்பட வேண்டுமென்ற தீர்மானம் ராஜாங்கத்தாரால் புறக்கணிக்கப்பட்டும், பெரும்பாலான வாக்குகளால் - இவரது முயற்சியால் பாராளுமன்றத்தில் சீராக ஏற்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டங்களைக் கவனிக்கும் நோக்கத்துடன் பாராளுமன்றத்தின் விசேஷ விசாரணைப் பிரிவுச் சபையொன்று ஏற்பட்டது. அதன் சார்பிலும் நௌரோஜி நன்குழைத்துத் தாய்நாட்டிற்குத் தொண்டு புரிந்து வந்தார். 1893 -ம் வருடத்தில் அவர் பாரதபூமிக்குத் திரும்பி வந்தார். அப்போது லாகூரில் கூடிய அகில இந்திய தேசிய

 

காங்கிரஸில் அக்கிராசனம்


வகிக்கும்படி அவரைத் தேசபக்தர்கள் வேண்ட அதனை அவர் மகிழ்ந்து ஏற்றார். தேசபக்திக்கே தாயகமான அவருக்கு மக்கள் மலர் மாலையிட்டும், புகமுரை கூறியும் தமதன்பைச் செலுத்தினர். பொது ஜனங்கள் தமதளவு கடந்த அபிமானத்தால் அவர் ஊர்வலம் வந்த இரத்தத்தைத்தாமே இழுத்துச் சென்றனர். அரசருக்கும் இத்துணைச் சிறப்பு நடந்திராதென்று கூறுவதும் இத்தகைய தேசபக்தர் விஷயத்தில் மிகையாகாது. அக்காங்கிரஸில் " இந்தியர்களின் கல்விக் குறைவாலேயே தேசம் அடிமைப்பட்ட தென்றும், பரதநாட்டின் ஏழ்மையைக் கருதி இலவசக் கல்வி யளிக்கத்தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்றும் அவர் செய்த விரிவுரையால் கல்வி விஷயத்திலும், ராஜீய பிரசினைகளிலும் ஜனங்களுக்கோர் புதிய ஊக்கமேற்பட்டது. 1895 - ம் வருடத்தில் இங்கிலாந்தில் மீண்டும் நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற்றது. நௌரோஜியவர்கள் ஆதரித்த உதாரக்கக்ஷிக்கு அங்கு அச்சமயம் அதிக செல்வாக்கில்லாததால் அவர் மன்ற அங்கத்தினராக ஏதுவில்லாமற் போயிற்று. ஆயினும், அவர் எவ்விதமாவது தேசகைங்கர்யம் புரிய வேண்டுமென்ற கொள்கையுடையவராதலாலும், போலிக் கௌரவங்களைப் போற்றுமியல் பற்றவராதலாலும், மனந்தளராது தொண்டு புரிந்து வந்தார். அதற்கடுத்து வந்த தேர்தலிலும் குறுகிய நோக்கமுடைய கக்ஷியாரின் பலத்தால் அவர் பாராளுமன்றத்தில் பதவி பெற இயலவில்லை. 1906 - ம் ஆண்டில் பாரத்தாய் அவரது தேசத்தொண்டைப் புகழ்ந்து அழைக்க, தாதா சீமையைவிட்டு நீங்கிப் பம்பாய் நகரை யடைந்தனர். பம்பாயில் அவருக்கு விசேட வரவேற்பு - உபசரணைகள் நடந்தன. அவ்வாண்டு கல்கத்தாவில் கூடிய அகில பாரத காங்கிரஸ் மஹாசபைக்கு அவர்

 

மூன்றாம் முறை அக்கிராசனம்


வகித்தார். அவர் இங்கிலாந்திலிருந்து இந்திய விஷயங்களை அரசாங்கத்தார் எத்துணைச் சிரத்தையுடன் கவனிக்கின்றன ரென்பதை அனுபவத்தாலுணர்ந்தவராதலால் அத்தேச மகாசபையில் " இங்கிலாந்தும் இந்தியாவும் " என்பது பொருளாக ஓர் சொற்பொழிவு நிகழ்த்தி இந்தியர்களுக்குச் சுய ஆட்சியின் அவசியத்தை யெடுத்துக் காட்டினார். " சுயராஜ்ய வாழ்வே சுகவாழ்வு " ஆமென்ற உண்மையை முதல் முதலாக மக்களிடத்தில் பரப்பியவர் அவரே. 1907 - ல் மறுமுறையும் ஸ்ரீமான் நௌரோஜி சீமைக்குச் சென்றார். அவர் மேனாட்டிலிருந்தே இந்தியாவுக்குத் தொண்டு புரிய விரும்பினாராயினும், வயோதிகத்தால் அசக்தியும், நோயும் வந்துற, வைத்தியரின் நல்லுரைக் கிணங்கி, தாய்நாட்டை யடைந்தார். பின்னர், பம்பாய் நகரத்திலேயே தேசசேவையை முன்னிட்டுச் சில மாதங்கள் வசித்தார். மூப்பு முதிர, அவர்

 

ஏகாந்த வாழ்வு

 

விரும்பி, பம்பாய்க்குச் சமீபத்திலுள்ள லெர்சோவா வென்னுஞ் சிற்றூரில் வசித்து வந்தார். அப்பொழுதும் அவர் பத்திரிகைகளின் வாயிலாகத் தமது தொண்டை (கடமையை) ச் செய்யாதிருக்கவில்லை. அளவுக்கு மிஞ்சி யுண்ணாமையும், மத அனுஷ்டானமும், குறித்த அளவில் நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் வழக்கமும், லாகிரி வஸ்துக்களைப் புறக்கணிக்கும் தன்மையும் அவரது ஆயுட்காலத்தைப் பெருக்கின. அத்துணை வயோதிகத்திலும் அவரது குன்றாத தேசசேவையை ஜனங்கள் புகழ்ந்து போற்றினர். அவருடைய சோர்வற்ற ஊழியம் மக்களிடத்தில் ஒப்பற்ற உற்சாகத்தையும்
ஊக்கத்தையும் விருத்தி செய்தது. காங்கிரஸ்' என்ற சொல்லை யுச்சரிக்குங்கால் ஸ்ரீமான் தாதாபாய் நௌரோஜியின் திருநாமத்தை நாம் சிந்தியாதிருக்க வியலாது. அவருடைய தேசபக்தியின் பெருமையைக் கூறித்தானாக வேண்டும். இனி, அவரது

 

ஜீவியத்தின் மாலைக் காலம்

 

எவ்விதம் கழிந்ததெனக் கூறுவாம். 1915 - ல் அவர் தமது புத்தகசாலையைப் பம்பாய் மாகாணச சர்வகலாசாலைச் சங்கத்தாருக் கீந்துதவினார். அதில் அரசாங்க விஷயமான பல அரிய நூல்கள் அடங்கியிருந்தன. 1916 - ல் பம்பாய் சர்வகலாசாலையார் அவருக்கு L. L. D. பட்ட மளித்தனர். வயது அதிகமாகவே, தள்ளாமையால் தமது உடல் நலங் குன்ற, நௌரோஜி வைத்தியார்த்தமாக பம்பாய்க்கு வந்து சிகிச்சை செய்து கொண்டார். தளர்ந்த உடலில் அவருக்கு மருந்து பிடிக்கவில்லை. 1917 - ம் ஆண்டு ஜூன் மாதம் 30 - ந் தேதி தாத்தாவாகிய தாதா அவரது 91 - ம் பிராயம் 9 - வது திங்கள் 26 - ம் நாளில் விண்ணவர்களின் விருந்தினராயினர்.



குணானுபவங்கள்


தாதா சிறந்த மதப்பற்றுடையவர். அவருடைய ஒழுக்கங்கள் அவருடைய தாய்மதமான சூரியனை ஆராதிக்கும் ஜொராஷ்டிரமதத்தின் கொள்கைகளையனுசரித்தனவாகவே யிருந்தன. அவர் ஜீவிய காலத்திற்குள் மகா கனந்தங்கிய நான்காவது ஜியார்ஜ் மன்னர், விக்டோரியா மஹாராணியார், ஏழாம் எட்வர்ட், ஐந்தாம் ஜார்ஜ்மன்னர் ஆகிய நால்வர் அரசாட்சியும், பத்தொன்பது ராஜப்பிரதிநிதிகளின் பரிபாலனமும் நடைபெற்றன. அவருடைய தேசசேவையின் காலம் 1845 - முதல் 1917 - வரை எழுபத்திரண்டு வருடங்களாகும். ஸ்ரீமான் நௌரோஜிக்கு ஒரு புத்திரரும் இரண்டு புத்திரிகளுமுண்டு. அக்குடும்பத்தார் இன்னும் காஷ்மீரத்தில் வசித்து வருகின்றார்களாம்.

 

அவருடைய சிறந்த தேசா, பாஷா, மதாபிமானங்களை மெச்சிய ஜொராஷ்டிர மத குருவானவர் ஸ்ரீமான் நௌரோஜியை மஹான்கள் கூட்டத்தி லொருவராகச் செய்தனர். அவர் அன்று இந்தியருள்ளத்தில் விதைத்த தேசபக்தியே இன்று மரமாகிப் பரவி நிற்கின்றது.

 

S. V. வாதராஜய்யங்கார்,

சரஸ்வதி நிலையம், உறையூர்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ -

ஏப்ரல், மே, ஜுன் ௴

 

 

No comments:

Post a Comment