Wednesday, September 2, 2020

 

தாசிகளின் முற்கால தற்கால நிலைமை

 

 தேவதாசி யென்றும், தேவர் அடியாள் என்றும் பெயர் பெற்றவர்கள் உருத்திர கணிகையர்களாவார்கள். இவர்கள் ஆதிகாலத்தில், உலகமெல்லாம் அநாதி நித்தியம், கர்த்தா ஒருவரில்லை, சிவன் முதலிய எல்லோரும் அநித்தியர், வேதம் அநாதி நித்தியம் என்று கூறப்பட்ட மீமாஞ்சை சமயத்தைக் கைக்கொண்ட சில ரிஷிகளைச் சுத்தராக்கியருளத் திருவுளங்கொண்டு வந்த சிவபெருமானின் திருவருட் பார்வையினாலே அவ்விரிஷிபத்னிகளின் கருப்பத்திற் பிறந்தவர்களே உருத்திர கணிகையர்கள்.
 

இவர்களுக்குத் திருக்கோவிலில் கீதம் பாடலும், நிருத்தம், புஷ்பாஞ்சலி, நீராஞ்சனம், திருப்பொற்சுண்ணம் முதலிய திருத்தொண்டுகள் செய்தலும், பன்றி குற்றல் - என்னும் உற்சவகாலத்தில் அத்திருவிழாக்காலத்துக் குரிய திருவேடங்களைத் தரித்து நடத்தலும் விதிக்கப்பட்டன. இவர்கள் தாங்கள் சர்வலோகாதி பரமசிவனுடைய அடிமைகள் என்று இடைவிடாது நினைந்து மனம், வாக்கு, காயம் மூன்றையும் சிவத் தொண்டுகளுக்கு உரிமையாக்கித் தங்களைக் காண்போர்'' இவர்கள் எம்பெருமானாகிய சிவனுக்கு அடிமை பூண்டவர்கள்'' என்று தெளிந்து பக்திபண்ணுதற்கு ஏதுவாயிருக்கும்படி சிவபெருமானே தங்கள் தலைவரெனக் குறிக்கும் திருப்பொட்டணிந்து மரணாந்தம் விவாகமின்றி யிருத்தலுமுண்டு. விவாகமின்றி, சிவனடியார்களுக்கு ஓரோர்காலத்தில் கர்மா நுசாரமாய் நிகழும் விஷய விச்சையைத் தணித்தற்பொருட்டு அவர்களுக்குபயோகமாய் வாழ்ந்து, சிற்றின்பசாகரத்தில் மூழ்காது ஈஸ்வரனுக்குரிய திருத்தொண்டுகளை வழுவாது நடத்தி வருதலுமுண்டு.

 

இவ்வாறு நாம் ஆதிகாலத்தில் ஏற்பட்டதை நூல்களினின்றும் அறிகிறோம். இவர்கள் சிவனுக்கு அடிமை பூண்டவர்களானதினாலேயே ஒவ்வொருவரும் தேவ அடியாள் என்னும் காரணப் பெயரை யடைந்தார்கள். அந்தோ! இத்தகைய அருமைத் தேவ அடியாள் என்னும் பெயருக்கு விரோதமாகத் தற்காலத்திலுள்ள உருத்திர கணிகையர்கள் பாவ அடியாராய் விளங்கும் பரிதாபம் தான் என்ன? இவர்கள் பொருளையே சதமென் றெண்ணி அதைத் தேடுவதிலேயே தம் வாணாளை வீணாளாக்கி அடாத செய்கைகளைச் செய்து பொருள் தேடுகிறார்களேயன்றி, பாவம் புண்ணியம் என்பதைச் சிறிதும் கவனிக்கிறார்களில்லை. அந்தோ! இது எத்தகைய அறிவீனம். "காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே'' என்பதையிவர்கள் சிறிது சிந்திப்பார்களாயின் நரகமே கதியென ஏற்படும்படியான பாவ அடியாராய் விளங்குவார்களோ? இல்லை யில்லை. ஒருகாலும் அவ்விழி தொழிலுக் குடன்படார்களென்பது திண்ணம். முன்காலத்தில் உருத்திர கணிகையர் குலத்திலுதித்த பரவை நாச்சியார் முதலிய உத்தமிகள் பிறிதொன்றையும் பற்றாது சிவத்தியானம், சிவத்தோத்திரம், சிவத்தொண்டு முதலியவற்றை வழுவாதியற்றிய புண்ணிய விசேடத்தாலன்றோ இன்றும் புகழ்ந்து போற்றத்தக்க உத்தம நிலைமையை யடைந்தனர். ஆகா! இத்தகைய உத்தமிகளின் கோத்திரத்திலுதித்தும் "குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு போல" தற்காலத்துக் கணிகையர்கள் செய்யும் அட்டூழியங்களை நினைக்கினும் நெஞ்சம் திடுக்கிடுகிறது.

 

 மெய்வீசு நாற்றமெல்லா மிக்க மஞ்ச ளான் மறைத்துப்
 பொய்வீசும் வாயார் புலையொழிவதெந் நாளோ.


என்று தாயுமானவர் இழித்துரைத்ததற்கு இவர்கள் செயல் முதலியன வன்றோ ஏது? ஒரு நாயகனால் திருமாங்கல்யம் கட்டப்பட்ட ஒரு நாயகி, அவனிடத்தில் எவ்வகைத் தொடர்புடையாளாகின்றாளோ? அவ்வகைத் தொடர்பை, உருத்திர கணிகையர்கள் ஈசுவரனிடத்தில் கொண்டவர்களாகின்றனர். ஆகவே, இவள் சிவ கைங்கரியத்திற் குரியாளென்பதையே அத்திருப்பொட்டு விளக்கி நிற்கின்றது. அது இல்லாமல் பிறிதொரு விஷயத்தில் பெருநிதி சம்பாதிக்கலாமென்பதைக் குறித்து நிற்கவில்லை...
 

இவ்விஷயத்தை உருத்திர கணிகையர்களான எம் சகோதரிகள் கவனித்து அதன்படி நடப்பதே சிறப்பாகும்.

 

இது நிற்க. கோவில்களில் சிறிது கூட பாத்தியமில்லாதோரும் வேறு தாழ்ந்த வருணத்தாரும் தங்கள் பெண்களை விவாகம் செய்து கொடுக்க விதியின்றி வெகு எளிதில் பொட்டுக் கட்டி விடுகிறார்கள். அந்தோ! இது பரிதாபத்திலும் மிக்க பரிதாபமேயாம். போகட்டும், அப்படியாவது அப் பெண்களை சிவத்தொண்டர்களாக்கி நற்கதியடையும்படியான நன்மார்க்கங்களைக் காண்பிக்கிறார்களோ? அதுவுமில்லை. வேறு என்ன செய்கிறார்கள்? பாழும் பணத்திற்காகத் தமது குமாரத்திகளின் அருமைக் கற்பைப் பரபுருஷர்களுக்கு விற்று மானமழிந்து பலரும் இகழ்ச்சி புரியுமாறு கேவலத் தொழிலைச் செய்விக்கிறார்கள். இவர்களின் அறிவீனத்தை எவ்வாறு நாம் எடுத்துரைக்க வல்லோம்.

 

இத்தகைய அநீதியான காரியங்களினாலேயே நம் தேயமெங்கும் பாவ அடியாள்கள் நிறைந்து விளங்குகிறார்கள்.

 

உருத்திர கணிகையர்களான சகோதரிகளே! உங்களுக்கு ஆதிகாலத்தில் ஏற்பட்டதையும், நன்மார்க்க விஷயங்களையும் நாம் எடுத்துரைப்பதற்கு நம்மிடம் போதுமான அறிவில்லை. அறிவிற் சிறந்தவரான கமலாம்பிகையார் புத்திரிக. அஞ்சுகம் அம்மையாரால் இயற்றப்பட்ட "உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு'' என்னும் நூலை வாசித்தால் உண்மை விளங்கும். ஆதிகாலத்தில் ஏற்பட்டபடி யொழுக வேண்டுமென்பதே எமது முக்கிய நோக்கமாகும். வீணில் பொருளின் மேல் இச்சையுற்றுப் பெண்களுக்கே முக்கிய ஆபரணமாகிய கற்பையிழக்கத் துணிவதை நோக்கின் அவர்களிடம் அறியாமை நிறைந்திருக்கிறதென்பதைக் கூறவும் வேண்டுமோ! சகோதரிகளே! அவ்வறியாமையினின்றும் விலகுவதற்குக் கூடிய வரையில் பிரயாசையெடுங்கள். ஆதிகாலத்துக் கணிகையர்களின் நன்மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். எப்பொழுது நீங்கள் திருப்பொட்டு அணியப் பெற்றீர்களோ அப்பொழுதே சிவபிரானுக்கு அடிமையென்பதை ஞாபகத்தில் வைத்து எம்பெருமானுக்குத் தொண்டு செய்யுங்கள். சிவபக்தி, சிவனடியார் பக்தி, சிவசின்ன பக்தி, மகேஸ்வர பூசை, தானம், தருமம் முதலியவற்றை விதிப்படி செய்து சிவானந்தப் பேறுபெற்றுத் திருவருட் செல்வியராய் விளங்குங்கள். மேலும் மேலும் நாம் கூறப்புகுவது விரிவிற் கிடமேயாதலால் அதற்கு நமது போதினி இடந்தராதென்பதைக் குறித்து அஞ்சி இத்துடன் நிறுத்துகிறோம். முடிவாக எல்லாம் வல்ல இறைவன் உருத்திர கணிகையர்களான சகோதரிகளுக்கு நற்புத்தியையும் நன்மார்க்கத்தையும் அளிக்குமாறு எம்மனதார இறைஞ்சி வேண்டுகிறேன்.

 

தி. சி. குழந்தை வேலன்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஜுன் ௴

 

                

No comments:

Post a Comment