Wednesday, September 2, 2020

 

தாகூரின் இலக்கியத் திறமை

 

நம் பாரதநாடு நல்லிசைப் புலவர்கள் பல்லோர் தோன்றுதற்கு இருப்பிடமென்னும் பண்டைப் புகழ் குன்றாவண்ணம் - அத்தகைய கவிஞர்களோ, புலவர்களோ, இந்நாளில் தோன்றவில்லை யென்னும் சொல்லை அடியோடு அடித்தோட்ட சமீபகாலத்திலே தோன்றி ஆங்கிலத்திலும் வங்கநாட்டு மொழியிலும் காவியங்கள் இயற்றும் பணியாற்றி வருகின்றவர் கவிச் சக்கரவர்த்தி ரவீந்திரநாத் தாகூர் என்பதை இவ்வுலகம் நன்கறியும்.

ஆழி சூழ் ஊழியின்கண் ஓங்குபுகழ் பெற்றுக் கதிரவனை யொப்ப ஒளிபரப்பி விளங்குகின்ற புலவர் பெருமான் தாகூரின் இலக்கிய ஆற்றலைத் தமியேனின் சிற்றறிவுக்கு எட்டியமட்டும் எடுத்துக் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். வங்கநாட்டுப் புலவர்களில் பேர்பெற்றவர் பங்கிம் சந்திரனும், ரவீந்திரநாதருமேயாமென்பது மறுக்கற்பால தன்று. இவ்விருவரின் அரிய நூல்களை படிக்கப் படிக்கத் தெவிட்டா யின்பமேற்படுமென்பது திண்ணம். இவர்களின் நூல்கள் பல்வேறு பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டு இலங்குவதிலிருந்தே அவைகளின் மேன்மை விளங்குகின்றதன்றோ.

 

இலக்கியத்தின் பரந்த பொருளை விரித்துக் கூற எவராலும் இயலாது. இரும்பைக் காந்தம் இழுக்கும் தன்மை போல் படிப்பவர் மனதை மயக்கும் தன்மை கவிஞரின் இலக்கிய நூல்களுக்குண்டெனப் பொதுவாகப் பொறிப்பதே பொருத்தமுடைத்து என்பதே எமது கருத்து. இலக்கியத் திறமையை விகோதபிரதமாகவோ, அல்லது விஞ்ஞான ரீதியாகவோ மட்டும் குறிப்பிடுவது தகுதியன்று என்பதை மறுக்கவோ, மறைக்கவோ இயலாதென்பது உறுதி. இவ்விரண்டு கொள்கைகளும் ஒன்றிக் காணப்படுவதினால் ஒன்றுக்கு பட்டும் பிரதம ஸ்தானம் நல்குவது பிசகாகும். இல்லறமென்னும் நல்லறத்தை இதமுடன் நடாத்த ஓர்வித நயம் வேண்டுவதை யொப்ப இலக்கிய நூல்களுக்கும் பிரத்தியேக சக்தியொன்று அமைந்து காணப்படவேண்டுவது இன்றியமையாததாகும். இலக்கிய நூல்களினால் எழும் ஆனந்தத்தைப் புலவர் அரிஸ்டாட்டல் (Aristotle) திருத்தப்பட்ட ஆனந்தம் (Refined Pleasure) எனக் குறிப்பிடுகின்றார். “பிரமம் வரஸ! ரஸோ! வைஸ!" என்ற சுருதியின் ரகசியமும் இது தான். ஏனைய புலவர்களுக் கெட்டாத இவ்வித அமானுஷக ஆற்றலைக் படைத்த அருட் கவியே நமது ரவீந்திரநாத தாகூர்.

 

தொன்று தொட்டே பாரத மக்களின் ஜீவிய லக்ஷயம் ஆத்மீகமாகும். அழிவிலா அழகுவாய்ந்த அவனியில் தோன்றிய நாம் அழகு மயமாகிய அன்பையே அருந் துணையாகக் கொண்டுளோம். இந்த மகத்தத்துவத்தை இக்காலத்தில் மனமுவந்து அருளிய பெருமை தாகூரினுடைய உரிமையேயாகும். "மாயா பிரபஞ்சம்" என்று இயம்பி அவனிவிட்டகன்று அடவியில் காலம் கடத்த வேண்டுமென்ற குறுகிய கொள்கையை பின்பற்றுவது பிசகென்பது கவியரசரது நூல்களில் ஒலியும் எதிரொலியுமாய்ப் பரந்து காணப்படுகின்றன. *"இல்வாழ்வு இன்பமுடைத்து" என்பது கவிஞரின் கருத்தாகும். இதை விளக்கி அருளியிருப்பதாவது "உலகம் இன்பம் நிறைந்ததோ, துன்பம் நிரம்பியதோ யென்பதை கவனிக்க வேண்டாம். ஆனால் என் கண்களை அவனியில் தோன்றும் ஆனந்தக் காட்சியிலேயே ஈடுபடுத்துவேன்." இளம்பிராயத்தில் தமக்கு அந்தர் தர்சனம் (Inner vision) கிட்டியதாகவும் ஒப்புக்கொள்கின்றார். இக் கருத்தைத் தமது பாடல்களிலெல்லாம் விளக்க முயன்றதாகவும் குறிப்பிடுகின்றார் (I have tried to explain it in all my poems).
ஜயதேவன், சைதன்னியன், கபீர் முதலியவர்களின் நூல்களே கவியரசரின் வழிகாட்டியாக ஆதியில் அமைந்திருந்தன. கபீரின் பாடல்களை கம்பீரமாக கவிஞர் மொழிபெயர்த்துளார். புலமையில் புலவருக்கொப்பாக சுபீஸத்தை
(Sufism) குறிப்பிடுவது நலமாகும். இதின் அடிச் சுவடுகளை பின்பற்றியே புலவர் ஆதியில் சென்றுளாரென கூறுவதில் பிசகொன்றுமில்லை.

பாடல்கள் - சிறுகதை-நாவல்-பிரபந்தம் என நால்வகையாகக் கவிஞரின் இலக்கிய வேலையை வகுப்பதே நலமாகும். ஆதியில் குறிப்பிட்டதில் தலைமைப் பதவியைத் தாங்குவது கீதாஞ்சலி யென்பதை மறுக்க எவராலும் இயலா தென்பது முக்காலும் உறுதி. சித்திரா (Chitra), போஸ்டாபீசு (Post Office) இவைகளை இரண்டாமினத்தில் சேர்ப்பது நலமாகும். இவைகளை யெல்லாம் குறித்துத் தனித்தனியாகக் கூறுவதானால் பத்திரிகையில் இடம் போதாதென்று எண்ணிச் சுருக்கமாகக் கூறுவோம்.

 

அகில உலக அபிமானத்திற்கு ஆதி காரணமாகிய நோபல் வெகுமதி பெற ஏதுவா யிலங்கியது கீதாஞ்சலி யென்பதை யாவருமறிவர். அந்தராத்மாவை அசைத்திழுத்து ஆன்மார்த்தத்தை அபிவிருத்தி செய்து மேனாட்டாரையும் அதிசயிக்கச்செய்து, ஆனந்தவாரிதியில் அமிழ்த்திய ஆற்றல் 'கீதாஞ் சலி'க் குண்டென்பது அனுபவ சித்தாந்தம். அதைப் பல தடவை படித்தாலும் பல்வேறு விதமான இன்பம் பயக்குமென்பது எமது சொந்த அனுபவமாகும். (The flower of English Prose) என்று கீதாஞ்சலியின் மொழிபெயர்ப் பைக் குறித்து ஆங்கிலேய பெரியாரொருவர் அருளியுளார். Our temple of worship where outward nature and human soul meet in Union என்பது மேனாட்டு மேதாவியொருவர் கீதாஞ்சலியைப்பற்றி வியந்து கூறிய மொழிகளாகும். மானசீக ஆராதனை கீதாஞ்சலியில் பிரதிபிம்பித்து காணப்படுகின் ரறன. ஆத்ம சக்தியின் அபார ஆற்றலை அப்படியே அருளியிருக்கின்றார்.

 

கவிஞரின் கதைகள் தெவிட்டா யின்ப மூட்டுவதாகும். கதை யெழுதுவதில் கவியரசரின் ஆற்றலை அடித்தோட்ட எவராலும் இயலாதென்று துணிந்து கூறலாம். கதையின் போக்கு, பல்வேறு பாவனைகளை எடுத்துக்காட்டும் எளிய முறை நவரசங்களின் நடனம் ஆசயங்களின் அமைப்பு - இவை தாகரின் சிறுகதைகளின் தனி லக்ஷணங்களாகுமெனக் குறிப்பிட்டால் தவறாகாது. அன்பின் பெருக்கைப் பருக ஆசை கொண்டோர் அவரது சிறுகதைகளை படிக்கவேண்டும். அன்பெனும் அலைகள் ததும்பும் அழியின்கண் குதித்து நீந்த அவாவுற்றோர் அவரது கதைகளை நோக்க வேண்டும்.

 

நாவல் எழுதுவதில் கவிஞருக்கு வன்மை போதாதென்பது அறிஞர் பலரின் அபிப்பிராயமாகும். ஓவிய வல்லோனும், காவிய வல்லோனும் ஒன்றில் ஒருமைப் படுகின்றனர். அஃதாவது ஓவியன் தான் காணும் இயற்கைப் பொருளூருவின் திறங்களைப் பலவகை நிறங்கொண்டு துகிலிகையால் அழகுபெறக் கிழியில் தீட்டிக் காட்டுகின்றான். காவியம் செய்யும் கவிஞனும் அவ்வியற்கைப் பொருளுருவின் திறங்களைத் தன் கற்பனா சக்தி, சொல், இசை, முதலியவை களால் தம் பாட்டுகளில் கனிந்து தோன்ற எடுத்துக் காட்டுகின்றான். தாகூர் அங்ஙனம் பேரெழிலில் ஈடுபட்டின் புற்றா ரென்பது அவர் பாக்களில் பெரி தும் தெரியக் கிடக்கின்றது.

 

ஆங்கிலத்தில் (Mysticism) என்று கூறும் ஆத்மீக மனப்பான்மையும் அக்கொள்கையை வெளிக்காட்டும் (Symbolism) என்று இயம்பும் நவீன அமைப்பும் கவியரசரின் இலக்கிய நூல்களின் ஜீவநாடி என்பதை அழுத்தம் திருத்தமாக ஈண்டு குறிப்பிடுகிறேன். தாய்நாட்டின் விடுதலைக்காக தம்மாலியன்ற மட்டும் உழைத்துவரும் உத்தம தேசபக்தர்களில் புலவர் பெருமானுமொருவரென்பது கண்கூடு. இந்தியாவின் இருதயம் துடிப்பது கவிஞரின் இலக்கிய ணாகானத்திலிருந்து எழும் ஓசையில் மிளிர்கின்றன. Where the mind is without fear என்று ஆரம்பிக்கும் ரவீந்தரரின் பிரார்த்தனை, பாரத மக்கள் அனை வரையும் மயிர்சிலிர்க்கச் செய்யுமென்பது திண்ணம். "நாட்டின் கௌரவத்தை நிலைநாட்டுமின்" என்பது அவர் நிறுவிய சாந்தி நிகேதனத்தின் அடிப்படையான கொள்கையாகும். இக் கொள்கையின் சீரிய கருத்தையே அவரது அரிய நூல்களில் ஒலியும் எதிரொலியுமாகக் காண்கின்றன. மஹாகவி ரவீந்திரநாதரின் சாந்தி நிகேதனம் இந்தியாவிலுள்ள யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. பலதிறப்பட்ட ஜாதிகளின் நாகரீகம், இலக்கியம், கலைகள் முதலியவைகளைப் பார்ப்பதற்கும், படிப்பதற்கும், பாண்டித்தியம் அடைவதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் அரிய சந்தர்ப்பம் அளிக்கும் சாதனம் விசுவ பாரதியாகும். இவ்விடத்தில் பல்வேறு நாடுகளில் - மாகாணங்களிலிருந்து வந்த பண்டிதர்கள் எப்பொழுதும் புத்தறிவுபெற்ற வண்ணமாகவே யிருக்கின்றனர். இத்தகைய அரும் பெரும் ஸ்தாபனத்தை இந்தியா நாடடையும் பாக்கியத்திற்கு மூல காரணம், ரவீந்திரரைப் பாரத தேவி ஈன்றதேயாம். ஆகவே கவிச் சக்கரவர்த்தியாகிய தாகூரின் அரிய நூல்களைப் படித்து ஆத்மசக்தியை பெருக்கி அடிமைத் தளையை அறுப்போமாக.

 

வந்தே மாதரம்.

 

ஆனந்த போதினி – 1933 ௵ - ஏப்ரல் ௴

 

 

 

 

 

No comments:

Post a Comment