Wednesday, September 2, 2020

 

தன் வினை தன்னைச் சுடும்

 

தவராஜ கோளரியாகிய பட்டினத்தடிகள் பைத்தியங் கொண்டவரென, அடிகள் தமக்கை அவமானம் பொறாது, 'இவனிவ்வாறிருப்ப தினும் இறப்பதே நலம்' எனக் கருதி, விடங்கலந்த அப்பமொன்றைச் சுட்டு அவரிட மருந்தவளித்தலும், அம்மகான் அதனை "தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்,'' என்று அவ்வில்லிறப்பிற் செருக, அது எவ்வாறணைப்பினு மணையாது அவ்வீட்டை எரித்தழித்தது.
'தன்வினை தன்னைச் சுடும், என்பது சாத்தியமானால் இவ்வப்பம் இவ்வீட்டைச்சுடும், என்பது அவர் கருத்து. அது சாத்திய மொழியாகலின் அங்ஙனமே நிகழ்ந்தது.

 

வினை யெனுஞ் சொல் நல்வினை தீவினை யிரண்டிற்கும் பொது வாயினும், ஈண்டுச்சுடும் என்ற விதப்பால் தீவினையைக் குறிக்கின்றது. தீவினையென்பது தீமையைத் தரத்தக்க தொழிலென்றும், தீப்போன்ற கொடியசெய்கை யென்றேனும் பொருள்படும். எங்ஙனஞ் சொல்லினும் தீமைபயக்கும் கொடிய தொழில் என்பதே தேர்ந்த பொருளாவது. வினைகளின் பயனே பிறவிக்குக் காரணம். வினை யொழிந்தால் பிறவியொழிந்தது.  "வினைப்போகமே யொரு தேகங்கண்டாய், வினை தானொழிந்தால் தினைப் போதளவும் நில்லா துகண்டாய்" நல்வினையால் புண்ணியமும் தீவினையால் பாபமுமுண்டாம். மனிதர் புண்ணியத்தின் பயனாய் இன்பமும், தீவினையின் பயனால் துன்பமும் துய்ப்பர். " வினை விதைப்பவன்வினையறுப்பான், தினை விதைப்பவன் தினையறுப்பான்.''

 

மனம், வாக்கு, காயம் எனுமுக்கரணங்களில் ஆதியே ஆதிகாரணம். மனத்தின் நினைவே வினையா நிகழும். சில சமயங்களில் மனம் நன்மை நினைக்கத் தீமையாக முடிவதுமுண்டு. அது தீவினையாகாது. அதைச் செய்தவன் பாபம் பெறான். செய்ய வேண்டும் என மனத்தின் தொழிலாகிய நினைவு தோன்ற அதன்படி புரியும் வினையே பாபத்தைப் பயக்கும் தீவினையாகும். மனர் தீயதாயின் தொழில் தீயது. நல்ல எண்ணங்கள் அதினின்றுந் தோன்றுவதில்லை. தீயஎண்ணங்களும், தீயவார்த்தைகளும், தீயசெய்கைகளும், தீயமனத்தினின்றே யுதிக்கின்றன.'' விதையொன்று விதைக்கச் சுரையொன்று காய்க்காது' என்பது போல், மனத்தியல்பு போன்றே செய்வினையு முண்டாகும். இதனால் அனைத்திற்கும் காரணம் மனமே யென்றுணரலாகும். இது பற்றியே "அனைத்துலகு மடக்கியாள முயல்வதினும், மனத்தை யடக்க முயல்வதே சிறப்புடைத்து" என்றனர் ஆன்றோர். “கொள்ளித்தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க் குரங்காய்த் துள்ளுங் கள்ள மனம்' போன போக்கெல்லாம் போகலாகாது. தானே எஜமானனென்றுணராது ஊழியனுக்கடங்கி யிருப்பாரொப்ப வதனுக் கடங்கியொழுகுவோர், " கோபம் வராதபடி அய்பியசித்தாலும் அட்டமா சித்திகளை யடைந்தாலும் யாதொரு பயனுமடையார்,'' எனக் கூறிய மகானின் மாற்றம் மருந்தினு மாண்புடையதன்றோ?


  ''சினமிறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்,
  மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே "
               (தாயுமானார்)

 

அஃது அசாத்தியமும் சுலப சாத்தியமுமன்று. கஷ்ட சாத்தியம். மனம் சுயேச்சையாய்த் திரியும் பட்டி மாட்டிற் கொப்பாகியதாகலின் அதை நாளாவட்டத்திற்றிருப்பப் பழக்க வேண்டும். ''காடுங் கரையு மனக்குரங்கு கால் விட்டோட வதன் பிறகேயோடுந் தொழிலாற் பயனுளதோ'' * [* இதன் விவரங்களை" ஆனந்தபோதினி' முதற்றொகுதியிலுள்ள மன மென்னும் வியாசத்தாலுணர்க.]

 

அடக்கப்படாத தீயமனத்தாலாம் வினைகளே தீவினைகள். அனுபவிக்கப்பட்டனவும், இப்போது அனுபவிக்கப்படுகின்றனவும், இனி அனுபவிக்க வேண்டியனவுமாகிய துன்பங்கட்கெல்லாம் முற்பவத்திலாக்கிய வினைகளே காரணமாகும். இம்மையிலியற்றுவன யாவும் மறுமையின் மூட்டைகள். இம்மையில் நாம் துய்ப்பனவற்றால் கடந்த பிறவியின் காரியங்களையும், மறுஜன்மாவில் அடைய வேண்டிய பலனை இம்மைச் செயல்களாலு முணரலாமென்பது ஆன்றோர் கொள்கை.


            "இறந்த பிறப்பிற்றான் செய்த வினையைப்
            பிறந்த பிறப்பா லறிக. - பிறந்திருந்து
            செய்யும் வினையா லறிக வினிப்பிறந்
            தெய்தும் வினையின் பயன்.''   
                        (நீதிச் செய்யுள்)

 

நான்கு அஸ்வங்கள் பூட்டிய அழகிய இரதத்திலேறிச் செல்லும் இரண்டு சீமான்களினிடையில் ஒரு நாய் பட்டு மெத்தை மேல் படுத்துக் கொண்டு அவர்கள் அன்போடூட்டும் இனிய பாற்கட்டியை யருந்துகிறது. அதே காலத்தில் வயிறு முதுகில் ஒட்டிக்கொண்டு பசியால் வருந்தி வீதியி லெறியப்பட்டிருக்கும் எச்சில் இலையிலுள்ள இரண்டொரு அன்னத்தை நக்கும் ஒரு நாயைச் சில சிறுவர்கள் கற்களால் புடைத்து அதன் கால் காயமடையும்படிச் செய்கின்றனர். இந்த இரண்டு நாய்களும் ஒரு தாயின் வயிற்றிற் பிறந்தனவே. அப்படி யிருந்தும் ஒன்று உயர்ந்த சுகத்திலும், மற்றொன்று பரிதாபமான இம்சையிலுமிருப்பானேன். ஒருவன் ஒட்டன் வயிற்றிற் பிறந்து மண்வெட்டுகிறான்; அவன் சகோதரன் குத்தகைக்கு வேலை யெடுத்து ஆட்களைக் கொண்டு வேலைகளை முடித்துச் செல்வமும், கௌரவமு முடையவனாக விருக்கிறான். இந்த வித்தியாசங்கட்கோர் காரணமிருத்தல் வேண்டுமன்றோ? ஆம் இருக்கிறது. காரணமின்றிக் காரியம் நிகழாது. அவை முன்புரிந்த வினைகளே. சாயநுக்ரக சக்திவாய்ந்த மாண்டவியர் கழுவேற்றப்பட்டுக் கடுந்துன்பமடைந்து ஆணி மாண்டவியர் எனப் பெயர் பெற்றதும், தும்பியினுடலில் முள்ளைச் செருகி வருத்திய தீவினையாலேயே யல்லவா? அநுமானிட்ட ஆக்கினையோ இலங்காநகரை யெரித்தது. பிறர் மனை நயந்த தசக்ரீவன் வினையே சுட்டது. அடாது செய்தவர் படாது படுவ தடைவேயன்றோ? மடியில் நெருப்பைக்கட்டிக் கொண்டவன் வெந்தொழிவது நிச்சயம். நன்மையோ, தீமையோ உழுந்துருள் போதின் முற்பகுதியில் செய்தால் பிற்பகுதியில் அனுபவித்தே தீரவேண்டும். ஒழிக்கு முபாயமுண்டோ. வினைப்பயனை வெல்வதற்கு வேதமுதலாம் எனைத்தாய துலகத்துமில்லை. சுயோதனன் வீமனால் ஊருமுறிந்து வீழ்ந்து குற்றுயிராக்கிடக்கையில்,

 

“ஆற்றி னீர் விளை யாடிய நாண் முதல்

காற்றின் மைந்தனொ டெத்தனை கன்றினேன்

சாற்றி'' னென்வினை தானெனையே சுடக்''

கூற்றின் வாய்புகுந் தேற்கென்ன கூற்றையா.                    (வில்லிபாரதம்)

என வருந்தினான். யாது பயன்? அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா? அவன் வினையே அவனைச் சுட்டது.

 

எரியினும் நஞ்சினும் தீமையை அஞ்சவேண்டும். அச்சம் என்பது இதற்கென்றே யேற்பட்டது. வேறொரு காலத்தும், வேறோரிடத்தும், வேறோருடம்பினும் போய்ச் சுடுதல் தீவினையேயன்றி, தீயன்று. 'பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாபமுமே.''

 
       தீயவை தீய பயத்தலாற் றீயவை
       தீயினு மஞ்சப் படும்.'. ............................. (குறள்)

 

கோபமோ, பொறுமையோ, பேராசையோ பிடர் பிடித்துந்தப் பிறர்க்கு ஆற்றும் கிருத்தியங்களியாவும் மற்றவர்க்காகவல்ல. தன் பொருட்டே, தான் கெடவே. கேடு நினைப்பான் கெடுவான். பிறனைத் தள்ளிப் புதைக்க வெட்டிய குழியில் தானே விழுவது நிச்சயம். அச்சமயம் தப்பினாலும் மற்றொரு சமயம் தப்பாது. ஆகலின், பாவத்திற்குப் பயந்து நல்வினை புரிவ தத்தியாவசியமாமாறு விளங்கும். பாபகாரியங்களின்னவை யென்பதுவும், புண்ணிய காரியங்களின்னவை யென்பதுவும் யாவர்க்குத் தெரியுமாயினும் சில முக்கியமாயுள்ளவற்றை யீண்டு விரிப்பாம்:


      பரிவு மிடுக்கணும் பாங்குற நீங்குமின்
     தெய்வந் தெளிமின், தெளிந்தோர்ப் பேணுமின்
     பொய்யுரை யஞ்சுமின், புறஞ் சொல் போற்றுமின்
     ஊனூண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்
      

தானஞ் செய்மின், தவம்பல தாங்குமின்
     செய்ந்நன்றி கொல்லன்மின், தீநட் பிகழ்மின்
     பொய்க்கரி போகன்மின், பொருள் மொழி நீங்கன்மின்
     அறவோ ரவைக்களம் அகலா தணுகு மின்
     

      பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
     பிறர்மனை யஞ்சுமின், பிழையுயி ரோம்புமின்
     அறம்மனை காமின், அல்லவை கடிமின்
     கள்ளுங் களவும், காமமும் பொய்யும்


       வெள்ளைக் கோட்டியும் விரகினி லொழிமின்

இளமையும் செல்வமும் யாக்கையு நிலையா
     உளநாள் வரையா தொல்லுவ தொழியாது
     செல்லுந் தேத்துக் குறு துணை தேடுமின்
      மல்லன்மா ஞாலத்து வாழ்வீர்!   ............
                        (சிலப்பதிகாரம்)


           நன்மைக் கடைப்பிடி. தீவினை யகற்று.

 

பொது வகையாற் றீவினைக ளெனக் கருதப்படுபவை: - பொய்யுரையாடல், புறங்கூறல், கொலை புரிதல், செய்ரான்றி கோறல், தீயா ரோடிணங்கல், பிறர்மனை நயத்தல், கள்ளல், கள்ளுண்ணல், கவராடல் முதலாயினவாம். இத்தியாதி தீவினைகளா லுண்டாம் தீமைகளைப் பற்றியே நுவலும் எல்லா நூல்களும். பிறர்மனை நயப்போன் ராமாயண பாராயணத்தால் பெறும் பயன் யாது? 'படிப்பது திருவாய்மொழி, இடிப்பது பெருமாள் கோயிலா? காசிக்குப் போனாலும் தன் கன்மம் தன்னோடே. வழியோர் வயிறெரிந்து வருந்தும்படி அவர் தஞ் செல்வமெல்லாம் அபகரித்து அன்ன தானஞ்செய்வோன் அருநிரயத் தாழா தொழிவன்கொல்? ஒரு பொய்யுரைத்த காரணத்தால் கொடு நாகத்தைக் காண்டலாகிய துன்பத்தை யுதிஷ்டிரரும் துய்த்தே தீர்த்தன ரென்னின், நாளொன்றுக் கெண்ணிலாப் பொய் புகல்வோர் கதி யாதாம். நல்வினையாற் றீவினை நசிக்குமோ? இன்ப மிம்மியாத் துன்பந் தூணாத் தோன்று மன்றே துய்க்குங்கால்? பட்டினத்தடிகள்,


      “ஒன்றென் றிருதெய்வ முண்டென் றிருஉயர் செல்வ மெல்லாம்

அன்றென் றிருபசித் தோர் முகம் பார்நல் லறமு நட்பும்

நன்றென் றிருநடு நீங்காம லேநமக் கிட்ட படி
      என்றென் றிருமன மே உனக் கேயுப தேச மிதே.''


எனத் தன் மனத்தினுக் குபதேசம் செய்துள்ளதை யுய்த்து ஆராயின் தக்கவை யின்ன தசாதன வின்னெனத் தெள்ளிதிற் புலனாம். உட்சுவருட்புளுக்கப் புறஞ்சுவர்க்குக் கோலஞ் செய்யுமாப் போல், அகத்தூய்மை யின்றி யாக்கையைக் கழுவல், தலையை முண்டித்துச் சந்யாசமடைதல், காவடி தூக்கிக் கங்கா யாத்திரை போதல், மலைமேலேறி மாவிளக்குப் போடுதலாதிய கிரியைகள் மட்டும் என்ன பயனுடை த்தாம்?


  'மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
  பழித்த தொழித்து விடின்.''


      "அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்

போ ஒய்ப் பெறுவ தெவன்!''


எனப்பலவாறு நந்தாத் தமிழ் மறை நவில்வதை நாடி, பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர்த்து நடத்தலே யெவர்க்குங் கடப்பாடாகும். இன்றேல் மானுடம் மாண்புடைத் தாகா.

 

மக்களே மாக்களின் மாண்புடையாரென மானிடராவா ரனைவரு மறைவ ராயினும், அவ்வாறாவதன் காரணம் இற்றென வறிவோர் மிகச் சிலராவர். மற்றொன்று விரித்தல்' என்னுங் குற்றமாமென்று கற்றறிந் தோர்கள் கழறுவராயினும் ஈண்டைக் கின்றியமையா வியல்பினை நோக்கி அதனையுஞ் சிறிது ஆராய்வாம்.

 

விலங்கு புள்ளாதிகட் கில்லாத ஆன்மாவை யுடைத்தாயிருத்தலின் மனிதன் சிறந்தவனென்பர் சில சாரார். பகுத்தறி வுடைமையிற் பண்புடைத்தாமெனப் பகராநிற்பர் மற்றொரு சாரார். இவற்றுள் முதலாவது மறுக்கப்படும்; (ஏனெனில், மனிதனுக்கிருப்பது போன்ற ஆன்மாவே விலங்கு புள்ளாதிகளுக்கு முண்டு, ஆனால் அறிவு விளக்கத்தில் அவை மனிதனிலும் குறைந்தவை. இதைவிட்டு அவற்றிற்கு ஆன்மா இல்லையெனக் கருதுவது ஆன்மலக்ஷண மறியார் கூற்றென்க. ப -ர்) மற்றொன்று முற்றிலும் மறுக்கப்படாததாயினும், அவைகளும் தத்தமக்கேற்ற குணங்களையும், சாதாரணப் பகுத்தறிவையும் இயற்கையாகவே கடவுளருளால் பெற்றுள்ளன வென்பது உணரத்தக்கது. உழுவை யுயிர்க் கொலைக்கஞ்சி யூனுண்ணலை யொழிக்கின் உயிர்வாழாது. வேழம் மநமெனக் கருதியோ சாகத்தைப் பக்ஷிக்கின்றது? இவை யாவும் அவற்றின் பிரகிருதியாகும். கங்குலிற் கூகை கனத் துலாவலும், சேவல் வைகறையிற் றுயிலுணர்ந் தெழுதலும், காகமுற்றாருடன் கலந்துறவாடலும் இயற்கை. மனிதனொருவனே செயற்கைக் கென்று விடப்பட் டிருக்கிறான். சீதோஷ்ண மாறுதலால் நிர்வகிக்க வியலாது விலங்கினம் மரிக்க, மனிதன் மாத்திரம் சகல சௌகரியங்களும் செய்து கொண்டு உயிர்வாழ வல்லனாகிறான். சீதளமிகுந்த தேயத்தின்கணுள்ள ஓர் விருக்ஷத்தையேனும் ஒரு பறவையையேனும் உஷ்ணதேசத்திலுய்ப்போமாயின் அவை இறந்தொழியும். இன்னும் பசு பக்ஷியா திகட்கு இவைகளால் நன்மையுண்டாகும், இவைகளால் தீமையுண்டாகும், இவருறவர், இவர் பகைஞர் என்ன இத்யாதி பகுத்தறிவு இயற்கையாகவே உண்டு. ஆனால் மனித னெதனால் உயர்ந்தவ னாகிறானெனின். பகுத்தறிவென்னும் பொருளதாய், மனத்திற்குப் புறம்பே நின்று அதன் தொழில்களுக்கெல்லாம் சாக்ஷிமாத்திரமா யிருப்பதாய், அக்காரணத்தால் சாட்சியென்னும் பெயர்த்தாய், மனம் ஓர் தீமையைச் செய்ய நினைக்கும்போது “சே, என்ன அறியாமை இது பாவமல்லவா?'' என்றறிவுறுத்துவதாயுள்ள மனச்சாட்சி யென்று கூறப்படும் ஒரு பொருளைப் பெற்றிருப்பதானேயாம். இஃதியாவரிடத்தும் பொருந்தியுளது. ஆயினும் அநேகர் அத்தகைய பொருளொன் றிருப்பதாகவே உணராது மனம் செல்லுமிடமெல்லாந் திரிந்து, தாம் வேறு மனம் வேறு என்பதையு மறியாது அஞ்ஞான அந்தகாரத்தில் அழுந்திக் கிடக்கின்றதாலேயே அநேக அக்கிரமங்களைச் செய்ய நேரிடுகிறது. அச்சாக்ஷியின் சேர்க்கையால் மனம் தூய்மை யடையும். ஆகை யால் எக்காரியத்தையும் செய்யத் துணியுமுன் அம்மனச் சாட்சியுடன் ஆராய்ந்து செய்யின், தீவினையினின்றும் பிழைக்கலாம். இதையே பொது மறையும்


''எண்னித் துணிக கருமம் துணித் தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு''

 

என நிகழ்த்துகின்றது. அதன்படி நடப்போர் உலக நிந்தைக்காவது, சிறைவாச முதலிய எவ்வகைத் துன்பத்திற்காவது அஞ்சார். மேலும் அது கட வுட்டன்மை வாய்ந்ததாகலின்யாவர் மாட்டும் ஒரு படித்தாகவே யிருப்பது. மனச் சாட்சியின் படி ஒருவரால் செய்யப்பட்ட ஒரு செய்கை அவ்வாறே ஆலோசிக்கும் அனை வரும் ஒப்பத்தகுந்ததாகும். ஆகலின் தீய புரிவோரும் 'எம் மனச்சாட்சி இவ்வாறு கூறிற்று; " என்பது ஒப்பத்தகாதென்க.

 

இவ்வாற்றால் மனச் சாட்சியை யுடைத்தாயிருத்தலே மக்களினுயர்ச்சிக்குக் காரணம் என்பது பெறப்படுகிறது. இதனால் மனிதராவா ரனைவரும் இம்மை மறுமை, புண்ணிய பாபமுண்டென்பதை யறிந்து தீயதை விலக்கி நன்மை கடைப்பிடித் தொழுக வேண்டியவராவர். இதுவே மானிடப்பிரகிருதி. இல்லையானால் தம்மொழுக்கத்திற் றவறாத விலங்கினும், தம்மொழுக்கத்திற் றவறிய மானுடர் தாழ்ந்தவராகக் கருதப் படுவதுண்மை. தகாத காரியஞ் செய்தானைப் பார்த்தோன், 'நீ மாடா மனிதனா?'' என்கிறான். மனச்சாட்சியோடு ஆலோசித்து ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியவன், அவ்வாறு செய்யமுடியாத மாட்டைப்போல ஆலோசியாம லியற்றினமையின் அதன் பிரகிருதியை யடைந்தா னென்பது இதனால் விசதமாகின்றது.


            "தக்க வின்ன தகாதன வின்னவென்
            றொக்க வுன்னல ராயி னுயர்ந்துள மக்களும்
            விலங்கே மனுவின் னெறி புக்கவே லவ்வி
           லங்கும் புத்தேளிரே''
                             (கம்பராமாயணம்)


 (இ-ள்) செய்வன தவிர்வன அறியாத மனிதர்கள் விலங்குகளுக் கொப்பாவார்; விலங்குகளேயாயினும் அவற்றை யறிந்தொழுகு மாயின் தேவரை யொக்கும் என்பதாம். நிற்க,

 

வினை தன்னைக் கொண்டவன் நிற்கும்போதும், நடக்கும்போதும், படுக்கும்போதும் நிழலைப்போல நின்று வருத்தும். மறுமையின் மட்டுமன்று: இம்மை யினுமெய்து மென்பது நூல்களின் றுணிபு.


     "இப்பவ மதனி லீட்டு மிருவினைப் பயன ளித்தல்
     எப்பவத் தென்று மைய மிதயமே யெண்ண னன்றோ
     ஒப்புற விதை தெளித்தா லுடன் பல னளித்தல் போல
     இப்பவ மீட்டு பாவ மிம்மையே யளிக்கு மன்றே."
                (ஆத்மபோதம்)


 ('தான் சாக மருந்துண்பா ரிலர்'' என்னும் மூதுரை தான் கெடுவதாகிய சாக்காட்டின் பொருட்டு வினையாகிய மருந்துண்பா ருண்மையின், பழுதுபடுவதாகின்றது. செய்யும்போ தின்பமாய்த் துன்பம் பயக்கும் தீவினை புரியின், தன்வினையே தன்னைச்சுடும்.'துன்பந் துய்க்குங்கால் துயருறுவதால் யாது பயன்? 'செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால், எய்த வருமோ விருநிதியம் 'ஆகலின், தானே தனக்குப் பகைவனும் நட்டானும் என்றபடி, தனக்குத்தானே யானை தன் தலையில் தானே மண்ணைவாரிப் போட்டுக்கொள்வது போல, துன்ப சாகரத்தி லழுந்தாது நல்வினையாகிய பலகைகளால் பிணைக்கப்பட்ட, இறைவனது திருவடிகளாகிய தெப்பமேறித், தியானமென்னுந் துடுப்பைக்கொண்டு செலுத்தி, இன்பமென்னும் கரையை யெய்த முயலுவோ மாக. ஆண்டவ னருள் புரிவான்.

 

"தன்வினை தன்னைச்சுடும்,'' என்னும் மூதுரைக்கு, தீவினையைப் போலவே நல்வினையும் துன்பத்திற் கேதுவென்றும், " இருள்சே ரிரு வினையும் சேரா'' வென்றும்,'' இக்கரை யந்திரத் துட்பட்ட தென்ன, விருவினையுள் புக்கரைமா நொடியும் தரியாதுழல் புன்பிறப்பு " என்றும் கூறி யாங்கு, நல்வினையுள்ள வரைக்குந் தேவ போகந்துய்த்து, அது நீங்கிய வளவில் துன்பந்துய்க்கப் பிறவியடைதல் வேண்டுமாகையால், பிணிக்கும் விஷயத்தில் இருப்புத்தளையும் பொற்றளையும் ஒரே தன்மையுடையன வென்றும், வேறொரு பொருளு முரைக்கப்படும். அதிகாரி பேதநோக்கி யீண்டு விரிக்கப்பட வில்லை. உலகம் பிழைபொறுக்க.

"புண்ணியமாம் பாவம்போம் போன நாட் செய்தவவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.''

  பூ. ஸ்ரீனிவாசன்,

தமிழ்ப் பண்டிதர், இராணிப்பேட்டை

 

ஆனந்த போதினி – 1920, 1921 ௵

நவம்பர், பிப்ரவரி ௴

 

 

No comments:

Post a Comment