Wednesday, September 2, 2020

 

தாயுமானவர் சரிதை

 

ஆனந்த போதினியில் கடவுள் வணக்கம் எனும் தலைப்பின் கீழ் வரையப் பட்டிருக்கும் பாடல்களெல்லாம் தாயுமானவரால் அருளப்பட்டனவே. ஆதலின் தாயுமானவருடைய சரிதையை யாம் சிறிதளவு வரைய வேண்டுவது நமது கடமையாயிற்று.  

                               

வேதாரணியம் எனப்படும் திருமறைக்காட்டில் 16 - வது நூற்றாண்டில் கேடிலியப்பப்பிள்ளை எனும் சைவவேளாளர் ஒருவரிருந்தார். அவர், ஈவு, இரக்கம், பூததயை, அருள் அடக்கம் முதலிய சகல குணங்களிலும் சிறந்து விளங்கா நின்றனர். கேடிலியப்ப பிள்ளை அந்நகரத்தின் கண் சிறப்பெய்திய சிவாலயத்தின் மேல் விசாரணைக் கர்த்தராக நியமிக்கப் பெற்றார். பிள்ளையவாள் விசாரணைக் கர்த்தரானதே, சிவாலய விஷயங்கள் காலக்கிரமப்படி ஒழுங்காய் நிறைவேறிவந்தன. கேடிலியப்பப் பிள்ளை தமது ஏக்குமாரனைத், தமது தமையனுக்குச் சுவீகாரம் செய்து கொடுத்தார். பிறகு அவர் தமக்குச் சந்ததி உண்டாக்கக் கடவுளைத் தினே தினே பிரார்த்திப்பார். கேடிலியப்பபிள்ளையின் நற்குணங்களை அக்காலத்தில் திருச்சியை அரசாண்டு வந்த விசயரகுநாத சொக்கலிங்கநாயகர் கேள்விப்பட்டு, அவரைத் தமதரண்மனைக்கு வருவித்து, தமது அரண்மனையில் பெரிய சம்பிரதி (Chief Accountant) எனும் உத்தியோகத்தைக் கொடுத்தார்.

 

பிள்ளையவர்கள் பிறகு தமது குடும்பத்தைத் திருச்சிராபள்ளிக்கே அழைத்து வந்தனர். தற்காலத்தில் பலர் தெய்வ பக்தியில் உழன்று கிடப்பவர் போல் நடிக்கின்றனர்; தனம் சிறிதளவு கிடைத்தால், தெய்வபக்தி ஓடி விடுகின்றது. பிறகு பணத்தின் மேல் தான் பக்தி. ஆனால் பிள்ளையவர்கள்ளோவெனில் திரிசிரமலை நாதரான தாயுமானவரைத் தினம் பக்தியோடு தரிசித்து வந்தார். தாயுமானவர் அருளினால் சில வருடங்களில், அவருக்குத் திருக்குமரனொருவன் பிறந்தான். தாயுமானவர் அருந்தவப் பேற்றினால் ஜனித்த குழந்தையாதலின், அக்குழந்தைக்கு தாயுமானவன் " எனும் பெயர் வைக்கப்பட்டது. இவரே நமது தாயுமானசுவாமிகள்.

 

கேடிலியப்பப் பிள்ளையின் திருமகனாம் தாயுமானவர் உரிய வயதில் நல்லாசிரியரிடம் தென்மொழி, வடமொழி இரண்டையும், சிறந்த நூற்களையும், இலக்கண இலக்கியங்களோடு கற்று, சாத்திர ஆராய்ச்சியிலும் சிறந்தவரெனப் புகழப்பட்டார். ஞான நூல்களையும் நன்றாய் ஆராய் ந்தறிந்து, எல்லோராலும் சாலவும் மெச்சப்பட்டார். அவ்வணமிருக்கையில், தாயுமான வருடைய பிதா கேடிலியப்பபிள்ளையவர்கள் சிவலோகப்பிராப்தி யடைந்தார். பிதாவிற்குச் செய்ய வேண்டிய 'ஈமக்கடன்களையெல்லாம் தாயுமானவர் செவ்வனே செய்து முடித்தார். விசயாகுநாதசொக்கலிங்க நாயகர் தாயுமானவரை ஒருநாள் இராஜமாளிகைக்கு வரும்படி வேண்ட, அவர் சென்று அரசனுடன் சாதுரியமாகப் பேசினார். அரசன் அவரது கூரிய புத்தியைக் கண்டு மனமகிழ்வெய்தி, பெரிய சம்பிரதி எனும் உத்தியோகத்தைத் தாயுமானவருக்கே கொடுத்தனர். தாயுமானவர், தந்தை வாங்கிய புகழை விட அதிகமாகப் புகழ்பெற்றார்.

 

அக்காலத்தில், மௌன குருதேசிகர் எனும் சிவயோகி ஒருவர், சிவஸ்தல யாத்திரை செய்து கொண்டு வருகையில், திரிசிர மலையில் எழுந்தளியிருக்கும் சிவபெருமானையும் தரிசிக்க எண்ணங்கொண்டு சாரமா முனிமடத்திற்றங்கினார். தாயுமானவர், மௌனகுரு தேசிகரின் கல்வித்திறனைக் கண்டு உவகைபூத்து அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரிடம் சீடராகவிருந்து உபதேசம் பெற்று, கடவுளின் இயல்பை நன்கு அறிந்து ஆனந்தங்கொண்டார்.

 

பிறகு தாயுமானவர் முழுதுமொருங் குணர்ந்தோன் தன்மையை திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்' எனும் மூன்று பதிகங்களிற்பாடினார். இரண்டாவதாக சிவபெருமானே முதற்கடவுளெனவும், சிவ சக்தியைக் குறித்தும் பரிபூரணானந்தம்' எனும் பத்துப் பதிகங்கள் பாடினார். மூன்றாவதாக சின்மயானந்தகுரு' எனும் பதிகங்களில் தமது குருவின் பிரதா பத்தை பத்துப்பதிகங்களிற் பாடினார். அவை "ஆழாழி கரையின்றி நிற்க விலையோ" என்றத் தொடக்கத்தன.

 

தாயுமானவருடைய சிறிய தாயாரின் புதல்வராய அருளையப் பிள்ளை என்பவர், தாயுமானவரின் பாடல்களைப் பரவச் செய்து, அவரையே ஞான குருவாகக் கொண்டனர்.

 

தாயுமானவர் தாம் எழுதும் ஏடுகளில், திருச்சிற்றம்பலம், சிவமயம் எனும் சொற்களை எழுதி வருவார். அரசர் இதனைக் கண்டு அதிக மனமகிழ் வெய்தினார். சில காலங் கழிந்ததும், அரசன் இறந்து போயினார். அரசர் மனைவி தாயுமானவரிடம் "தாயுமானவரே! அரசரோ இறந்து போயினார்: தாங்கள் இராஜ்ஜியத்தைப் பார்த்துக்கொண்டிருக்கப் பிரார்த்திக்கின்றேன்'' என வேண்ட, அவள் உள்ளத்தில் தகாத சிந்தனை கொண்டதையுணர்ந்த தாயுமானவர் அதை மறுத்தற் கஞ்சி, அன்றிரவே, அருளையப் பிள்ளையுடன் ஸ்தல யாத்திரை செய்யக்கருதித் தெற்கு நோக்கிச்சென்றார். நல்லூர் எனும் கிராமத்தை இருவரும் அடைந்தார்கள்.

 

ஆனால் அங்கு தாயுமானவர் சிவ பூஜைப் பெட்டியை எடுத்துவர மறந்து போனமையின் அருளையப் பிள்ளையை அதை எடுத்து வரும்படி அனுப்பிப் பட்டினியாகயிருந்தார். அவ்வூரின் கண் வசித்திருந்த பல சிவ நேயர்கள் தாயுமானவரின் பக்தியையும், முகப்பொலிவையும் கண்டு, மனங்கசிந்து ஆகாரம் உட்கொள்ளும்படியாய் வேண்டினார்கள். ஆனால் தாயுமானவர் அவர்களுடைய வேண்டுகோளை மறுக்க இயலாமல் கொஞ்சம் பாலை யருந்தினார். பாலையருந்து முன் தாம் சிவபூஜை செய்யாததைக்குறித்து பின் வருமாறு பாடினார்: -

 
பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே
    பாவித் திறைஞ்ச வாங்கே

பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப்
          பனிமல ரெடுக்க மனமு
      நண்ணே னலாமலிரு கைதான் குவிக்கவெனில்

    நாணுமென் உளநிற் றி நீ
      நான்கும்பிடும்போ தரைக்கும்பி டாதலால்
          நான் பூசை செய்யன் முறையோ
      விண்ணே விதையாம் பூதமே பாதமே
          வேதமே வேதாந்தமே
      மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்

    வித்தேயவ் வித்தின் முளையே
      கண்ணே கருத்தேயென் எண்ணே எழுத்தே
          கதிக்கான மோன வடிவே
       கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு
           கருணா கரக்கடவுளே.

 

அரசி, தாயுமானவரைக் காணாமையால் மனம் நொந்து அவர் இருக்குமிடத்தை அறிந்து வரும்படி சில வீரர்களை அனுப்பினள். அனுப்பியவர்களுள், மந்திர வித்தை தெரிந்த ஒருவன் நல்லூரை யடைந்து, நிஷ்டையிலிருந்த தாயுமானவர் மாட்டு வசிய மந்திரம் பிரயோகித்தான். பிரயோகிக்கவே, தாயுமானவர் பின்புறம் திரும்பிப் பார்த்துச் சந்தோஷங் கொண்டாராம். அம்மந்திரவாதி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கிச் சென்றான் பிறகு தாயுமானவர், அருளையப் பிள்ளையுடன் இராமேச்சுரம் சென்றார்.

 

இராமேச்சுரம் சென்றதே, இருவரும் கடலில் நீராடிய பின்னர் தாயுமானவர் ஸ்ரீராமநாதரை வணங்கி, மலைவளர் காதலி யெனும் உமாதேவியாரைக் குறித்து: -

 

பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்

பக்கமுண் டெக்கா லமும்''


என்று தொடங்கும் பாடல்களைப் பாடினார்.

 

உமா தேவியாரைக் குறித்து இன்னும் ஒன்பது பாடல்கள் பாடினார். சின்னாட் கழித்து இருவரும் வேதாரண்ய மடைந்தனர். சுற்றத்தார்களின் வற்புறுத்தலுக்காகத் தாயுமானவர் சிறந்த குலத்திலுதித்த ஒரு பெண்ணை மணந்து இல்லறம் நடத்தி வருகையில் அநேக பாடல்கள் பாடினார்.

 

தாயுமானவர் அன்னை பரலோகப் பிராப்தி யடைந்ததும் தாயுமானவரின் மனைவி ஓர் ஆண்மகவை ஈன்றனள். கனகசபாபதிப் பிள்ளை' எனும் பெயர் அப்புதல் வருகிடப்பட்டது. பிறகு கனகசபாபதிப் பிள்ளையின் அன்னையாகிய தாயுமானவரின் பத்தினியும் சிவபதவி யடைந்தனர்.

       "ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற
       பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளும்

 சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
       யாருஞ் சதமல்ல நின்றாள் சதம் கச்சியே கம்பனே!''
    

எனும் பட்டினத்தடிகளின் பாடலின் படி பூலோக வாழ்க்கை அநித்தியமானதென்று நன்றாயறிந்து, தமது திருக்குமரனையும், செல்வத்தையும் தமது தமையனிடத்தில் ஒப்புவித்துத் துறவு பூண்டு, அருளையப் பிள்ளையுடன் தேசசஞ்சாரம் செய்து வருவாராயினார்.

 

திரிச்சிராப்பள்ளியில் சாரமாமுனி மடத்திலே தங்கி யிருந்தவரும், தாயுமானவரின் குருவுமான மௌனகுரு தேசிகர் பரிபூரண தசையடையவே, அச்சமயத்தில் அருளையப் பிள்ளையுடன் அங்கு வந்த தாயுமானவர் அம்மடத்திற்கு வந்து, தேசிகரின் பிரிவை யாற்றாது துக்கித்து, பிறகு அம்மடத்திற்கே தலைவராயினார். பிறகு, தேசசஞ்சாரம் செய்து வருகையில், இராமநாத புரத்திலுள்ள சிறு கானத்தின் ஒரு பெரிய புளிய மரத்தடியில் தவநிலையிற்றங்கியிருந்தார்.

 

இராமநாதபுரத்தின் கண் கீழ் திசையிலுள்ள இலட்சுமிபுரத்தில், ஒரு பிராமண ஸ்திரீயின் வீட்டில், தாயுமானவர் தமக்குப் பசிப்பிணி வந்தபோது, பிக்ஷை வாங்கிச் செல்வார். தாயுமானவர் பலதினங்கள் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து நிஷ்டையில் இருந்தாராதலின், அவர் உயிருடன் இருக்கின்றார் என்பதாகப் பார்ப்பவர்கள் கருதவில்லை. இதைச் சிலர் அரசனுக்குக் கூற, அவன் தாயுமானவரின் உண்மையை அறியாது நெருப்பிட்டுக்கொளுத்திடுதிர் எனக் கூற, சிதையின் மேல் தாயுமானவரை உயிருடன் வைத்தனர். தீச்சுட நிஷ்டை கலைந்த தாயுமானவர் நடந்ததை அறிந்து அரசனை மன்னித்துப் பரிபூரணதசை யடைந்தார். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!


C. S. இராம ஐயர், நாவல்ஹவுஸ்,

பார்க்டவுன், கோயம்புத்தூர்.

 

குறிப்பு: - தாயுமான சுவாமிகள் பிறந்தகாலம் இதுகாறும் எதிலேனும் குறிப்பிடப்பட்டிருப்பதாய்த் தோன்றவில்லை. அவர் அருளிய நூல்களின் முன்னுரையில் சற்றேறக்குறைய 100 வருடங்களுக்கு முன் என்று கொஞ்ச காலத்திற்கு முன் வரையில் வரையப்பட்டு வந்து, இப்போது சற்றேறக்குறைய 300 வருடங்களுக்கு முன் என்று வரையப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் விதேக முத்திபெற்ற காலம் மட்டும் மிகப் புராதனமான (தாயு மானவர் பாடல்கள்) ஒரு புத்தகத்திலிருக்கக் கண்டோம். அவர் அடைந்த காலம் கரபாத்திர சுவாமிகளும் இன்னும் மூன்று நான்கு ஜீவன் முத்தர்களும் இருந்து சரமகவிகள் இயற்றியிருக்கின்றனர். அக்கவிகள் பழைய தாயுமானவர் நூலில் இருந்தன. அந்த ஏடுகளை யெடுத்துப் பிரத்தியேகமாக வைத்திருந்தோம். இச்சமயம் அவைகாணப்படவில்லை. ஆயினும் அப்பாடல்களில் முதற்பாடல் கரபாத்திர சுவாமிகளால் அருளப்பட்டது. அதில் குறித்திருந்த காலம் கலியுகாதி 47 - 103 சுபகிருது ரூதை உ வெண்மதிவாரம் பூரணத்திதியே தாயுமாம் சிவம் நற்சிவந்தினிற் கலந்தாம் தினமே என்றிருந்தது. (அதாவது - தாயுமானவர் அடைந்த வருடம் 1601 - அப்போது அக்பர் சக்ரவர்த்தி இந்தியாவிலும் எலிஜபெத்மகாராணியார் இங்கிலாந்திலும் அரசாக்ஷி செய்து கொண் டிருந்தார்கள்.) அவர் இராமநாதபுரத்தின் வடபால் பரிபூரண தசையடைந்ததாய் மேற்கண்ட கவியில் கூறப்பட்டிருக்கிறது.

 

அவர் அடைந்தபோது அவர் சீடராகிய அருளையர் என்பவர் தம்குருவை அருன் வாக்கிய அகவல் என்ற பாவால் துதித்திருக்கிறார். அதை அறிவை யூன்றி வாசித்தால் தாயுமானவருடைய அரிய உபதேச மொழிகளில் பலவற்றை யுணரலாகும். அதைப் பன்முறை வாசிக்க வாசிக்க ஆழ்ந்த கருத்துக்கள் விளங்குமென்பது அனுபவம்.

 

பத்திரிகாசிரியர்.

 

நண்பர்காள்! கடந்த புரட்டாசி மாதச் சஞ்சிகையில் 90 - வது பக்கத்தில் வெளியிட்டுள்ள தாயுமானவர் சரிதையின் முடிவில் நாம் வரைந்துள்ள குறிப்பில், நாம் கண்ட தாயுமானவர் பாடல் பழைய பிரதியெறில் அவர் பரிபூரணதசை யடைந்த சமயம் கரபாத்திர சுவாமிகளும், வேறு சில மகான்களும் இருந்து சரமகவிகள் பாடியதாகவும், அவற்றில் கரபாத்திரசுவாமிகள் அருளிய பாடலின்படி தாயுமானவர் அடைந்த காலம் இன்னதென்று தெரிகிறதென்றும் எழுதியிருந்தோம். இப்போது நாம் எழுதியதில் கவனத்தவறால் கொஞ்சம் பிசகு இருப்பதாகத் தெரி கிறது

     .
     இப்போது நமது சந்தாநேயர்களில் ஒருவரான தூத்துக்குடி ம- ள - ஸ்ரீ கொ. ந. சங்கரப்ப நாயுடு என்பவர், நாம் குறித்த பழைய பிரதி தாயுமானவர் பாடல் ஒன்றை மிக்க தயவோடு நமது பார்வைக்கனுப்பியுள்ளார். அதற்காக அவருக்கு மிக்க வந்தன மளிக்கிறோம். அதிலுள்ளபடி தாயுமானவர் அடைந்த காலத்தில் இருந்த மகான்கள் யாவரென் பதையும் அவர்கள் அருளிய பாடல்களையும் ஈண்டு வரைகிறோம். இதன்படி நாம் முன் கூறியதைத் திருத்திக் கொள்ளக் கோருகிறோம்.

 

தாயுமானவர் அடைந்த சமயம் அங்கிருந்த மகான்கள் 1. கோடிக்கரை ஞானியார் 2,அருளைய சுவாமிகள் 3,வாலையானந்த சுவாமிகள் 4,கரபாத்திர சுவாமிகள் 5,சைதன்னியானந்த சுவாமிகள் 5 ஆக ஐந்து பேர்கள் ஆகும். இவர்க ளனைவரும் சுவாமிகளின் சீடர்கள்.

அவர்களருளிய பாடல்கள்.

1. கோடிக்கரை ஞானியார்.


“துகளறு சாலி வருடமாயிரத்தைஞ் நூற்றொடெண் பத்தொன்று தொடரு
மிகுசுப கிருதாம் வருடந்தை மாதம் வெண்மதி வாரநாள் விசாக
மகிமைசேர் பூரணத் திதியினிலருத்த மண்டல சமயத்திற் கங்கை
திகழ்கரை யதனிற் றாயுமானவனார் சிவத்தினிற் கலந்ததாந் தினமே.
       ('தாயுமாஞ் சிவநற் சிவத்தினிற் கலந்ததாந் தினமே" என்றும் பாடமுளது.)


 2. அருளைய சுவாமிகள்


உலகினுக் கணியா மிராமநா தபுரத் துயர்கரை வாவியின் குணபால்
மலர்நிறை வனத்திற் சிவத்துறு நிட்டை மருவிமெய்யொருவிவே தாந்தத்
திலகிய பொருளாய் வானமாய் நிறையு மெந்தையே யென துபந் தமும் போய்
நிலையுற நினது திருவரு ளளிப்பாய் நின்மலா னந்தமே போற்றி


ஆமை போலு மைந்தடக்கி யனலோ ரைந்தி னடுவிருந்து
நாம ரூப மற்றதுவாய் நாடற் கரிதாய் ஞானசிவ
யோம மௌன வுன் மனைக்கு மேலாய் நிறைந்த வோருணர்வே
தாமே தாமாய் நின்றதாயு மான சிவத்தின் சரண்போற்றி

 

3. வாலையானந்த சுவாமிகள்


      தேனுறு வாவி குணதிசை யதனிற் செறிந்திடு நந்தன வனத்திற்

றீனமில் லாத சிவத்வொடு சிவமாய்ச் சேர்ந்திடச் சிறந்திறந் திலக்கம்
      பானுவிற் றிகழ வெண்கருப் பூர மலையெரி படர்ந்திடு மொளியாய்
      வீனென நிறையுந் தாயுமாஞ் சிவமே வாழிநின் மலர்ப்பதம் வாழி.


4. கரபாத்திர சுவாமிகள்


      சூழுமுச் சுழுத்தி பாழென வுணர்த்தித் துரியமீ துற்றசூ னியமாம்
      பாழையுங் கடந்த வறிவு நீ யென்றே பகர்ந்தருள் புரிந்தினிப் பிறவா
      வாழ்வையு மளித்த சற்குரு மணியே மறைசையி லுதித்தெழு மருந்தே

தாழ்வுளே னெனையிங் கிருத்தியெங் கொளித்தாய் தந்தையுந் தாயுமானவனே.


5. சைதன்னியானந்த சுவாமிகள்


     கங்கை முதற் புண்ணிய தீர்த் தங்கட் கெல்லாம்

காசினியிற் றேவதா வாவி யென்னும்
     மங்களலட் சுமி தீர்த்தக் கரையின் கீழ்பால்
     வளம் பெறுநந் தனவனப்பூங் காவிலென்றுந்
      தங்குசதா நிட்டைபர ராக வுள்ளந்
     தனினினைந்து வில்வமர நீழ லின்கண்

டிங்களெனப் பூரணமாந் தாயு மான
     சிவமேநின் பொற்கழலென் சிரமேற் கொள்வேன்.

மேற் கண்ட கவிகளால் தாயுமான சுவாமிகள் சாலிவாகன சகாப்தம் 1581, கலியுகாதி 4760, கி. பி. 1659 ஆகியசுபக்கிருது தை பௌர்ணமி திதி, விசாக நட்சத்திரம் இவை கூடிய சோமவாரம் அர்த்தமண்டல சமையத்தில் பரிபூரண தசையடைந்தன ரெனவும், அவர் அடைந்த விடம் இராமநாதபுரத்தினருகிலுள்ள இலட்சுமி தீர்த்தம் என்ற தடாகத்தின் கிழக்கிலுள்ள நறுமணம் வீசும் மலர் விருக்ஷங்கள் நிறைந்த வனத்தில் வில்வ மரத்தின் கீழ் என்றும் ஐயமற அறியலாகும்.

   

பத்திரிகாசிரியர்

குறிப்பு: -

 

நமது சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருந்த தாயுமான சுவாமிகளின் சரிதையில் அவர் பரிபூரண மடைந்தது தை மாதம் பௌர்ணமி விசாக நக்ஷத்திரம் கூடிய தினத்தன்று என்று கூறியுள்ளோம். இரண்டொருவர், தை மாதம் பௌர்ணமி திதியோடு விசாக நக்ஷத்திரம் ஒரு போதும் கூடி வராதென வரைந்துள்ளார்கள். மேலே கூறியுள்ளது நாமே உத்தேசித்துக் கொண்டதல்ல. சுவாமிகள் பரிபூரண தசை யடைந்த காலத்திலிருந்த மகான்களில் ஒருவரான கோடிக்கரை ஞானியார் பாடியருளிய சரமகவியில் அவ்வாறு கூறப்பட்டு ளது (கார்த்திகை "ஆனந்தபோதினி'' 167 - ம் பக்கம் பார்க்க). இச்சந்தேகம் நிவர்த்தியாகத் தாயுமான சுவாமிகள் அடைந்த காலம் வேறு தினமாகவுள தேல், அதை யறிந்தோர் தக்க ஆதாரத்தோடு தெரிவிப்பார்களாயின் அவர்களுக்கு மிக்க நன்றி பாராட்டுவோம்.


                                 பத்திரிகாசிரியர்

 

ஆனந்த போதினி – 1920 ௵

செப்டம்பர், நவம்பர் ௴

 

No comments:

Post a Comment