Wednesday, September 2, 2020

 

தாய் நாட்டின் ஒற்றுமை.

 

ஒற்றுமை யென்றால் ஒருவருக்கொருவர் மனம் ஒருமித்து நடத்தலாகும். ஒருவன் செய்யமுடியாத காரியத்தைப் பலர் சேர்ந்து ஒற்றுமையோடு செய்வதால் எளிதில் முடிக்கலாம். ஒற்றுமை யால் உலகில் மனிதர் பல அரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள். ஒற்றுமையால் எல்லா நன்மைகளையும் அடையலாம்; ஒற்றுமையின் மையால் பலவித இக்கட்டுகள் நேரிடும்; எக்காரியமும் கைகூடாது. ஒரு குடும்பத்தைத் திருட்டாந்தமாக எடுத்துக்கொள்வோம். அக் குடும்பத்திலுள்ள சகலரும் மனம் ஒருமித்துத் தங்களில் மூத்தவனாக விருப்பவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்துவந்தால் அக்குடும்பம் க்ஷேமமாக விருப்பதோடு அன்னியரும் அதைக் கௌரவமாக நடத்துகிறார்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் யாவர்க்கும் மதிப்புண்டு. அப்படிக்கின்றி அக்குடும்பத்தில் ஒற்றுமையில்லாவிடினோ, சீக்கிரத்தில் அக்குடும்பம் க்ஷணதசை யடைந்து கௌரவத்தை யிழந்துவிடும். பிறகு அதைச் சேர்ந்த எவரையும் அன்னியர் மதிக்கமாட்டார்கள். ஒற்றுமையே வல்லமை யென்ப தும், ஒற்றுமைக் குறைவே பலகீனம் என்பதும் யாவரும் அறிந்த விஷயமே.

 

ஒரு குடும்பத்தைப் போலவே ஒருஜாதியாரும், ஒரு நாட்டாருங்கூட, ஒற்றுமை யுடையவர்களாக விருந்தாலே, வல்லமை, கௌரவம், மதிப்பு, செல்வாக்கு, க்ஷேமம் முதலியவைகளை யுடையவர்களாக இருக்கலாகும். திருட்டாந்தமாக உலகிலுள்ள பல தேசங்களையும் கவனியுங்கள். ஒற்றுமையின் தன்மை யின்னதென வுணர்ந்து ஒழுகும் நாட்டார்களெல்லாம் முன்னேற்ற மடைந்து, செல்வவந்தர்களாகப் பிறரால் மதிக்கப்பட்டு விளங்கக் காணலாம். உலகிலுள்ள நாகரீக நாடுகள் எல்லாவற்றிலும் பூர்வீக முதல் எல்லா விஷயங் களிலும் சிறப்புற்றிருந்த நம் தாய்நாடாகிய இப்பாரதபூமியே, ஓர் நாட்டாரின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத சாதனமாகிய ஒற்றுமையில் மிகக் குறைவுப்பட்டிருக்கிறது என்பது யாவருமறிந்த விஷயமே.

 

இதற்குக்காரணம் ஒருவாறாகக் கூறப்படவில்லை. சிலர் “நமது நாட்டில் பலஜாதி, பலமதம், பலஆசாரம் ஆகிய இப்பேதங்களிருக்கிறவரையில் நமக்குள் ஒற்றுமையுண்டாகாது” என்று கூறுகிறார்கள். சிலர் தாய்நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றிய உணர்ச்சியேயின்றி,'' எப்படியாயினும் சரி, நாம் பணம் சம்பாதித்து நமது குடும்பம் வரையில் க்ஷேமமாக இருந்தால் போதும், யார் எப்படிப் போனாலென்ன?'' என்று மனுஷத்தன்மை யில்லாமல் நடந்து கொள்வோர், சந்தர்ப்பம் வந்தபோது ''நம்மவர்கள் நெல்லிக்காய் மூட்டைகளாயிற்றே; இவர்களுக்கு ஒற்றுமையேது? " என்று கூறிக்கொண்டே செல்கிறார்கள். இவர்கள் பூரண சுயநலப்புலிகள். இத்தகையோர் ஒருவன்'' என் தலைச்சுமையைக் கொஞ்ச மிறக்கையா?'' என்று வேண்டினால் 'நமக்கேன் அந்தத்தொல்லை' என்று பேசாமற் போய் விடுவார்கள். இவர்கள் கொடிய தேசத் துரோகிகள்; இத்தகையோர் நம் நாடு செய்த பாபமே உருவாகக் கொண்டவர்கள்.

 

முதலாவது, ஜாதிமத பேதத்தால் ஒற்றுமைக் குறைவு நேரிட்டிருக்கிறதா என்பதைப்பற்றிக் கவனிப்போம்: இப்பேதங்கள் மற்ற நாடுகளிலுமில்லாமலில்லை. நமது நாட்டில் பேச்சில் பேதமிருப்பதோடு நடக்கையிலுமிருக்கிறது. மற்ற நாடுகளில் பேச்சில் மட்டும் பேதமில்லையென்று கூறப்படுகிறதேயன்றி, நடக்கையில் இருக்கவேயிருக்கிறது. நம் நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மதங்களிருந்தால், மற்ற நாடுகளில் ஒரே மதத்தில் பல பிரிவுகளிருக்கின்றன. அவற்றால் சச்சரவுகளும் நேரிட்டிருக்கின்றன. அவ்வாறிருந்தாலும் அவர்கள் ஒற்றுமையோடு நடந்து கொள்ளவில்லையா? நமது நாட்டில் ஜாதிமத வேற்றுமை நேற்று இன்று உண்டான தல்லவே. இப்போது அவற்றை யொழித்தால் தான் ஒற்றுமையுண்டாகுமெனில் அவை யெப்போதொழிவது? ஆகையால் நாம் ஒற்றுமை யடைய மாட்டோம்; நாம் நாளுக்கு நாள் கீழ் நோக்கிச் செல்லவேண்டுவதே; யாவராலும் அவமதிக்கப்படவேண்டியதே என்று நாமே தீர்மானம் செய்துகொள்ளவேண்டியது தானோ? அய்யோ கடவுளே! இத்தகைய பேதை மதி கூட நமக்குண்டாகுமோ?

 

'ஜாதிமத பேத மிருக்கிறவரையில் ஒற்றுமை வராது' என்று கருதுவது முழுதும் தவறு என்பதற்கு நமது நாட்டிலேகூட தக்க அத்தாக்ஷியிருக்கிறது. அவற்றில் ஒன்றிரண்டைக் கூறுகிறோம். நம் நாட்டிலுள்ள இந்திய சைனியத்தில் ஒரு பட்டாளத்தில் ஒரு கம்பெனி பஞ்சாப் ஜூட் ஜாதியாரும், ஒரு கம்பெனி அசல் க்ஷத்திரியரும், ஒரு கம்பெனி சென்னை மாகாண மகம்மதியரும், ஒரு கம்பெனி கொங்கண நாட்டுத் தெலுங்கருமாக இருக்கிறார்கள். இப்படி வெவ்வேறு ஜாதி, வெவ்வேறு மதமாக. விருக்கும் இவர்கள் தங்கள் தொழில்களை யொற்றுமையோடு செய்யவில்லையா? யாவரும் ஒரு மனதாகச் சகோதரர்கள் போல் ஒன்று சேர்ந்து எதிரிகளோடு போர்புரிந்து ஜெயமடைய வில்லையா? தங்கள் காரியசித்திக்காகப் பிராணனையும் விடத்துணியவில்லையா? ஜாதிமத வித்தியாசம் அவர்கள் ஒற்றுமைக்கு இடையூறாக விருக்கவில்லையே. இப்போது நடந்த ஐரோப்பிய மகா யுத்தத்தில் ஒரே கட்சியில் பல ஜாதியாரும், பல மதத்தினரும், பல நிறத்தினரும், பல ஆசாரமுடையவர்களும் ஒன்று சேர்ந்து யுத்தம் புரியவில்லையா? இவற்றால் ஒற்றுமை மன உறுதியிலிருக்கிறதேயன்றி வேறில்லையென நன்கு விளங்கவில்லையோ! அன்னிய நாடுகளிலும் பல பேதங்களும் கட்சிகளும் இருந்தாலும், தாய். நாட்டின் க்ஷேமத்தைப்பற்றிய ஒரு சம்பவம் நேரிடும் போது ஒவ்வொருவரும் நம் தாய் நாடு என்ற பக்தி ஒன்றையே கருத்திற்கொண்டு, தங்களுக்குள் இருக்கும் இதர பேதங்கள், கட்சிகள், சச்சரவுகள் யாவற்றையும் ஒரு பக்கம் விலக்கிவிட்டு, தாய் நாட்டிற்காக உழைக்கிறார்கள். எந்த நாட்டிலும் அரசன் ஒருவனே; உயர்ந்த அந்தஸ்திலிருப்பவர் சிலரே; மற்ற பேரெல்லாம் அவர்களுக்கு அடங்கி நடப்பவர்களே. "இப்படி நடந்து கொண்டால் தான் நம் தாய்நாடு க்ஷேமமடையும்; எல்லாருமே தான் தான் அரசனாகவும், மந்திரியாகவும், சேனாதிபதியாகவும் இருக்க வேண்டுமென்று கருதினால், அது நடக்கிற காரியமல்ல; நாம் எந்த அந்தஸ்தி லிருந்தாலென்ன? நம்மாலியன்றவே வேண்டும்'' என்ற ஒரே நோக்கங்கொண்டு அவர்கள் நடந்துகொள்கிறார்கள்.

 

நமது நாட்டிலோ ஒரு சபைகூடத் தொடங்கின், நால்வர் ஒருவரை அக்கிராசனாதிபதியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், வேறு சிலர் இன்னொருவரை நியமிக்க வேண்டுமென்கிறார்கள். உடனே கட்சி இரண்டாவது தான் இவர்கள் ஒற்றுமையடைய ஆரம்பித்ததற்கு முதல் அறிகுறி. சமீபகாலத்தில் இச்சென்னையில், ஒருதரத்தார் ஒன்றுகூடி ஒரு விஷயத்தைப்பற்றி ஆலோசிக்கச் சபைகூடினார்கள். அச்சமயம் மேற்சொன்னபடி இருகட்சிகளுண்டாகி ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு ஆளை அக்கிராசனாதிபதியாக நியமிக்க வேண்டு மென்றார்கள். அச்சமயம் அங்கிருந்த அவயவிகளில்அறிவாளியாகிய ஒருவர் எழுந்து,

 

''சகோதரர்களே! இப்போது நாம் எந்த விஷயத்தைப்பற்றி ஆலோசனை செய்ய வந்தோமோ அந்த விஷயம் நிறைவேற வேண்டு மென்பதே நமது நோக்கமன்றி, அக்கிராசனாதிபதி பதவியைப் பெறுவதல்ல; அப்பதவிக்கல்ல நாம் இங்கு வந்தது. விவகாரம் நடை பெற ஒருவர் அப்பதவியில் இருக்கவே வேண்டும். மற்றபேர் அவரவர்களால் இயன்ற உதவியைச் செய்யவேண்டும். எல்லாரும் ஒரு காரியத்திற்கே வேலை செய்கிறோம். என் வரையில் எனக்கொரு பில்லை கொடுத்து சபைக்கு டபேதாராக இருக்கச் சொன்னால் சந்தோஷமாக வாயிற்படியில் நின்று, வருகிறவர்களை வரவேற்று உட்காரவைத்து, சங்கத்தின் வேலையாக அங்கங்கு கடிதம் கொண்டு போக வேண்டிய வேலையைச் செய்கிறேன்'' என்றார். உடனே கட்சி யொழிந்து காரியம் நடந்தது.

 

ஒவ்வொருவரும் காரியம் நிறைவேறவேண்டும் என்ற ஒரு நோக்கத்தைக் கொண்டு சுயநலமாவது, கௌரவமாவது கருதாமல் அக்காரிய சம்பந்தமான தொழில் மட்டில் நமக்குள் இருக்கும் எவ்வித பேதத்தையும், சச்சரவையும் மறந்து, தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கு நாம் உழைக்க வேண்டும் என்று வைராக்கியம் கொண்டால் ஒற்றுமை யேன் உண்டாகாதோ தெரியவில்லை.

 

நம் எதிரிகளை நாம் சுலபமாகச் செயிக்க வேண்டுமாயின் அவர்களுக்குள் கட்சிபேதத்தையும், சச்சரவு பொறாமையையும் உண்டாக்க முயல்கிறோம். இது பஞ்ச தந்திரங்களில் ஒன்று. நாம் முன்னேற்ற மடையலாகாதெனக் கருதுவோரும் நமக்கு அப்படிச் செய்யவே கருதுவார்கள்; இது இயற்கை. அந்தோ! நாமோ அதற்கிடங் கொடாமல் ஒற்றுமையாக விருந்து வேலை செய்வதற்கு மாறாக இல்லாத கட்சியையும் புதிதாக உண்டாக்கிக் கொண்டு எதிரிகளுக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்கிறோம்.

 

நமது செய்கைகள் பிறர் நகைப்பதற்கு இடமாக விருக்கின்றன. ஒன்று பாருங்கள்! இதுகாறும் சம்பந்தப்படாதிருந்த பக்கத்து வீட்டுக்காரனோடு உறவு செய்து கொண்ட ஒருவன், தன் வீட்டில் தன் சகோதரனோடு, பிறந்தது முதல் ஒற்றுமையாக விருந்து விட்டு, இப்போது துவேஷம், செய்து கொண்டால் அப்படிப்பட்டவனை அறிவாளிகள் என்னென்று மதிப்பார்கள் என்பதை நண்பர்களே சற்று சிந்தியுங்கள். நெடு நாட்களாக நம் நாட்டில் இந்துக்களுக்கும் மஹம்மதியருக்கும் ஒற்றுமை கிடையாது. இது நம் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கு இருந்த இடையூறுகளில் ஒன்று. நாம் முன்னேற்றமடையலாகாது என்ற நோக்கமுடையோர்க்கு இது அனுகூலமாக விருந்த தென்பது நாம் கூறாமலே அறியக்கிடக்கிறது. இம்மஹம்மதியர் மதம், ஜாதி, ஆசாரம் யாவற்றிலும் நமக்கு மாறானவர்கள். அப்படியிருந்தும் ஏதோ நம் தாய் நாட்டிற்கு நற்காலம் பிறக்க வேண்டிக்கடவுள் தயவால் இந்த இரண்டு ஜாதியாரும் இப்போது மிக்க ஒற்றுமை யடைந்து விட்டார்கள்; இது சந்தோஷத்தை யளிப்பதும், புகழ்ச்சியை யுண்டாக்குவதுமான விஷயமாக விருக்கிறது.

 

அந்தோ! ஜாதி மதம் முதலிய யாவற்றிலும் முற்றும் மாறானவர்களோடு ஒற்றுமை யுண்டாக்கிக்கொண்ட நாம், நமக்குள்ளேயே என்று மில்லாத பிரிவினையை யுண்டாக்கிக் கொண்டோம். இதனால் மஹம்மதிய சகோதரரோடு ஒற்றுமையுண்டாக்கிக் கொண்டதைக் குற்றமென்று நாம் கூறுவதாக நினைக்கலாகாது. இந்த ஒற்றுமை யேற்பட்டது இருதரத்தார்க்கும் மிக்க சந்தோஷமும் அனுகூலமுமானதே. ஆனால், இத்தகைய புகழத்தக்க காரியத்தைச் செய்த நாம், இது காறும் பிரிவினை யேனும் துவேஷமேனும் இல்லாதிருந்த நமக்குள்ளேயே பிராம்மணர், பிராம்மணரல்லாதார் என்ற இரண்டு கட்சிகளாகப் பிரிவினை யுண்டாக்கிக் கொண்டது அழகா? அல்லது நம் தாய் நாட்டின முன்னேற்றத்திற்கு அனுகூலமானதா? என்பதற்கே அதைக்கூறினோம். இந்த நவீன சிருஷ்டியாகிய பிரிவினையால் இதுகாறுமே எவ்வளவு தீங்குண்டா யிருக்கிறதென்பது அறிவாளிகள் அனுபவமாக வறிந்ததே. மனிதன் தவறு செய்வது இயற்கையே. ஆனால், அதனால் இடையூறு நேர்கிற தென்றுணர்ந்த பின்னேனும் அத்தவறான நடக்கையை யொழி த்து விடுவதே அறிவாளியின் செய்கையாகும்.

 

பிராம்மண ரல்லாதார் முன்னேற்றமடைய முயலவேண்டியது அவசியமே. ஆனால், அதற்காக இருவர்க்குள்ளும் துவேஷத்தையுண்டாக்கிக் கொள்வது இருவர்க்கும், அதாவது நம் தாய் நாட்டிற்கே பெருந் தீங்கை யுண்டாக்குவதாகும் என்பது உண்மை. பிராம்மண ரல்லாதாரின் முன்னேற்றத்திற்கு முயற்சி செய்ய முதலில் ஆரம்பித்தவர்கள் யாராயினும் ஆகுக. அவர்கள் தங்கள் முயற்சியோடு இருதரத்தார்க்கும் துவேஷமும், வெறுப்பும் உண்டாகும்படி இடங் கொடுத்தது அறிவாளிகளின் செய்கையல்ல வென்றே கூறுவோம். ஹிந்து என்ற புருடனுடைய பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு கரங்களும் வல்லமையுடையனவாக விருந்தால்தான் அம்மனிதன் வல்லமை யுடையவனாகித் தன் காரியத்தில் ஜெயமடைவான். ஒருகரம் மட்டும் வலிமையுடையதாய் மற்ற மூன்றும் மெலிவடைந்திருந்தால் பயனில்லை. அந்த மூன்றுக்கும் வலிமை யுண்டாக்க வேண்டியதே; ஆனால் அந்த மூன்று கரங்களும், வலிமையுடைய ஒரு கரத்தோடு துவேஷங் கொள்வது ஆளுக்கே மோசமல்லவோ.

 

இப்போது பிராம்மணர்கள் பிரத்தியேகமாகச் சபை கூட வேண்டு மென்று சிலர் பிரேரேபனை செய்வதாகவும், வேறு சிலர் அப்படிச் செய்வது கெடுதி யென்று ஆக்ஷேபனை செய்வதாகவும், அப்படிச் செய்வதிலும், பிராம்மணர், பிராம்மணரல்லாதார் ஆகிய இருதரத்தாரிலும் பிரமுகர்களாகிய சிலர் ஒரு சபை கூடி நமக்குள்ள பேதங்களை யொழித்து ஒருமித்து நடப்பது தான் நமது தாய முன்னேற்றத்திற்கு அனுகூலமாகு மென்றும் திருப்பதியிலுள்ள பிரம்மஸ்ரீ டி கே. துரைசாமி அய்யங்கார் என்பவர் பிராம்மணர்களும், பிராம்மணரல்லாதாரும் என்ற தலையங்கத்தின் கீழ், 1921 ஜனவரி 29 வெளியான ஹிந்து பத்திரிகையில் தக்க காரணங்களோடு வெளியிட்டிருக்கிறார்.

 

நம் தாய்நாடு க்ஷேமமடையவேண்டு மென்ற எண்ணமுடைய எவரும் அதைக்கவனித்து அம்முயற்சி நடை பெறுவதற்கு வேண்டிய சாதனங்களைச் செய்யாமலிரார்கள். பிரிவினையால் தீமையன்றி நன்மை யொருபோது முண்டாகாதென்பது யாவருமறிந்த விஷயம். சுய நலத்தையும், கௌரவத்தையும், அதிகாரத்தையும் இச்சியாது, நமக்குள்ள சில்லரை வித்தியாசங்கள், சச்சரவுகள், பொறாமை முதலிய யாவற்றையும் வைராக்கியம் என்ற மண்ணில் மறைத்து விட்டு, தாய் நாட்டின் முன்னேற்றம் என்ற ஒன்றில் மட்டும் நாட்டம் வைத்து ஒவ்வொருவரும் அதற்காகத் தம்மாலான ஊழியத்தைச் செய்தால் எத்தனை ஜாதி மத பேதங்களிருந்தாலும் ஒற்றுமையும், அதனாலாய பயனும் தாமே சித்திக்கும் என்பது திண்ணம்.

 

ஆத்மஞானம் இப்பாரத பூமியில் என்றும் பிரகாசிக்கும் வண்ணம் அருள்புரிந்து வரும் சச்சிதானந்தப் பரம்பொருளாகிய பரமன் இத்தகைய சமையத்தில் நம் நாட்டாருக்கு அனுகூலமான ஆலோசனையைத் தந்து ஆதரித்தருள் புரியுமாறு அனைவரும் பிரார்த்திப்போமாக.

 

ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி 1921 ௵ - மார்ச்சு ௴.

 

   

 

No comments:

Post a Comment