Wednesday, September 2, 2020

 

தாய் மொழியின் உரிமை

 

நந்தாய் மொழியெது? எந்தத்தாய் மொழிக்கும் உரித்தான உரிமைகளெவை? அவ்வுரிமைகளை நந்தாய் மொழி பெற்றுள்ளதா? இவை போன்ற வினாக்களுக்கு விடையிறுத்தலே இச்சிறு கட்டுரையின் உட்பொருள். நம் தாய்மொழி யெதுவென்று எனது நாட்டினரும் எனது மொழியாளருமாகிய தமிழரையே கேட்கின்றேன். தமிழரென்று என்னால் எண்ணப்படுவாருள் சிலர்,'எம் தாய்மொழி யெதுவென்று அறிகிலேம். என்கின்றனர்; சிலர் 'எமது தாய்மொழி தமிழ்' எனச் சொல்ல நாணுகின்றனர்; சிலர் தமது தாய்மொழி ஆங்கிலமெனப் பிறர் எண்ணுமாறு நடிப்பதில் விருப்புக்காட்டு கின்றனர். பலர் தமது, தாய்மொழி தமிழே யென்று ஆங்கிலத்தில் எனக்கு விடையளித்து உண்மையில் அவர் தாய்மொழி ஆங்கிலந்தானோ வென்று யாவரும் ஐயுறுமாறு நடிக்கின்றனர். என்னே! இவ்வலங்கோலக் காட்சி! எங்கும் பரதேசிக்கோலம்! இந்தியமக்கள் அந்நிய நாட்டினரே போல் தோன்றுகின்றனர். உடையில் அந்நியர்; நடையில் அந்நியர்; மொழியிலும் அந்நியர்; எவ்வழியிலும் அந்நியர். ஆதலின், இவரை ஆள்வதும் அந்நியர்.

 

தமிழ் நாட்டாரே! நீங்கள் தமிழர் என்பதை உணருங்கள். நீங்கள் இங்கிலாந்தில் பிறக்கவில்லை யென்பது உண்மை. நமது தாயும் தந்தையும் தமிழர்களே. பெற்றதாயின் பெயரையும், பெற்றதந்தையின் பெயரையும் சொல்வதற்கு வெட்கமா? தமிழ்மகன் பிறமகன் போல் நடிப்பதன்றோ வெட்கம்! இழிவு! தமிழ்மகன் அந்நியனைப்போல் நடிப்பதைக் காணவும் நாணுங்கள். இனிய தமிழில் ஒன்றும் கற்காது தமிழைக் குறைகூறித் திரிபவர்களைப்பற்றி நாம் என்ன கூறலாம். மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இலக்கண இலக்கியங்கள் நிரம்பப் பெற்றிருந்த வளம் பொருந்திய மொழியன்றோ நமது தமிழ் மொழி! இயற்கை வாழ்வு நடாத்தி இயற்கையின் பந்துய்த்த இயற்கைப்புலவர் இயற்றிய பாக்கள் அடங்கிய நமது பண்டைத்தமிழ் இலக்கியங்களின் பெருமையுணராதார் தமிழைக் குறைகூறுவதைக் காண என் மனஞ்சகிக்க வில்லை. தமிழ்த்தாய் தனது உரிமையனைத்தும் இழந்து தவிக்கின்றாள். அவள் தனது உரிமையைப் பெறுமுன்னர், நாம் நமது உரிமையைப் பெறுவ தெங்ஙனம்?

 

எந்தத்தாய் மொழிக்கும் உள்ள உரிமைகள் எவை? தாய்மொழி யெதுவும் அம்மொழியாளரால் பேசப்படுதல் வேண்டும். நாம் பேசாத மொழியைத் தாய்மொழி யென்பதற்கு நியாயம் இல்லை. வழக்காறற்ற மொழியால் பெரும் பயன் விளையாது. எந்நாட்டினரும் தமது தாய் மொழி வாயிலாகவே தம் கருத்துக்களைத் தெரிவித்தல் வேண்டும். இந்த உரிமையை நமது தாய் இழந்து வருகிறாள். தன்மக்கள் அந்நிய பாஷை பேசுவதில் அவாவுடையராகி வருகின்றதை அதிசயமாகக் காண்கின்றாள்; பிறமொழி பயிலாதாரேனும் தன்னை ஆதரிப்பரென்றெண்ணி அவர்களை நோக்குகின்றாள்; அவர்களும், அந்நிய மொழிகளை ஆபாச உச்சரிப்புடன் தமிழில் புகுத்திப் பேசி. அதனையே சிறப்பென்று கருதுவதையும் பார்க்கிறாள்.'' சட்டசபைகள், நகரசபைகள், கலாசாலைகள் இவைகளிலேதான் நம்மைத் தோன்றவிடாது வெருட்டுகின்றனரே; பொதுக்கூட்டங்களுக்கேனும் செல்வோம் " என்று அங்குப் போகிறாள். அங்கும் அவள் தோற்றம் வெறுக்கப்படுகிறது. தமிழரே கூடியுள்ள சபைகளிலே அந்நியபாஷையால் பேச்சு நிகழ்கின்றது. இந்த இயற்கைக்கு மாறுப்பட்ட செயலை இந்தியர் நீங்கலான ஏனைய நாட்டினர் இழிவெனக் கருதுகின்றனர். இந்நாட்டிலேதான் (சிறப்பாகத் தமிழ்நாட்டிலேதான்) இந்த இழிவான செயல் கௌரவச் செயலாகக் கருதப்படுகிறது. தமிழன்னைக்கு வீடுகளிலும் இடமில்லை. வீதிகளிலும் இடம் இல்லை. பரிதாபம்! பரிதாபம்!!

 

இதனால் ஆங்கிலங் கற்பதையோ, ஆங்கிலேயருடன் அம்மொழியில் உரையாடுவதையோ, இழிவெனக் கூறுகின்றேனில்லை. ஆங்கிலம் தற்கால நிலைக்குரியமொழி; அதனைக் கற்பது தவறன்று. ஆனால், நம்மவர்களுக்குள் தாய் மொழியே பேசப்படும் மொழியாதல் வேண்டும். ஆங்கிலேயர் பிறமொழிகள் பலவற்றில் பயிற்சி பெற்றாலும் தமது மொழியிலேயே பேசுகின்றனர். நமது நாட்டிலோ ஆங்கிலம் சற்றும் தெரியாவிடினும், யாரிடத்திலாவது கேட்டு அப்பாஷையில் கையெழுத்திடக் கற்றுக்கொள்கின்றனர். ஒரு ஆங்கிலேயன் தமிழில் எவ்வளவு புலமை பெறினும், தமிழில் கையொப்பமிடுவானோ? அவன் ஒருநாளும் தனது சுயமரியாதையை இழந்து அவமரியாதை யடைய மாட்டான். தமிழனுக்கோ ஆங்கிலத்தில் கையொப்பமிட ஆவல் மிகுதி. ஐயோ! நமது பாஷை கையெழுத்துப் போடுதற்கும் தகுதியற்றதாகவோ போயிற்று.

 

இவைகளெல்லாம் தமிழ்மொழியின் மாண்பறியாதார் செயல்களேயெனக் கூறுவதற்கில்லை. தொல்காப்பியங்கற்ற பண்டிதர்களுங்கூடத் தமிழை அவமதிக்கின்றனர் என்றே கூறுவேன். புலவரும் தமிழில் கையொப்ப மிடுவதை அநாகரீகமெனக் கருதுகின்றனர்; தமிழில் பேசுவதை இழிவென்றெண்ணுகின்றனர். தாங்கள் எழுதும் தமிழ் நூல்களின் முன்பக்கங்களை ஆங்கில எழுத்துக்களால் நிரப்புகின்றனர். தமிழ் நூல்கள் ஆங்கில அட்டைகளுடனும், ஆங்கில முகவுரைகளுடனும் வெளிவருகின்றன. புலவர் செயல்களை நோக்கும் போது தமிழுக்கு உய்வுகாலம் சமீபத்திலில்லையென் றெண்ண
வேண்டியிருக்கிறது. தமிழில் கடிதம் எழுதுவது அநாகரீகம் என்று கருதப்படுகின்றது.   

 

தமிழன்பர்களே! தமிழருக்குச் சுயமரியாதை கற்பிக்க எழுங்கள். தமி ழன்னை தனது உரிமையையே கேட்கின்றாள். நமது தாய் மொழிக்கு உரித்தான உரிமைகளை நல்குவது தமிழ் மக்களாயுள்ள நமக்கு இன்றியமையாத கடனாகும்.

 

ஆ. அருள் தங்கையா.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஆகஸ்ட்டு ௴

 

 

 

No comments:

Post a Comment