Wednesday, September 2, 2020

 

தாய்பாஷை

 

நமது தாய்நாடாகிய இந்தியா தேசம் நாகரீக முன்னேற்றத்தில் வெகு பழைமையானது என்னும் விஷயம் நமதானந்தனைப் படித்துக் களிக்கும் எல்லாருக்கும் தெரிந்தவிஷயம். இந்திய சரித்திரக்காரர்களின் அபிப்பிராயத்தின்படி நம்மவரில் அநேகர் ஆவலுடன் அதன் தீங்குகளை அறியாது பின்பற்றும் ஐரோப்பிய தேசங்கள் நாகரீகமற்று, அத்தேசத்து ஜனங்கள் மரங்களில் சஞ்சரித்து வந்தகாலத்தில் இந்தியா தேசமானது நிரம்ப நாகரீகமுள்ள தாக இருந்ததெனத் தெளிவாய் விளங்கும். உதாரணமாக, கி. மு. 3 - வது நூற்றாண்டில் இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய தேசத்தார்கள் இன்ன ஸ்திதியில் இருந்தனர், இன்ன மாதிரி நடைநொடி பாவனைகள் உடையவர்களாக இருந்தனர், இன்னவழக்கங்களைக் கைப்பற்றியிருந்தனர் என்று தீர்மானிப்பது கஷ்டம். அப்படித் தெரிந்து கொள்ள முயன்றாலும் அவர்கள் காடுகளிலும், புதர்களிலும், குகைகளிலும் வசித்துக்கொண்டு மிருகங்களைக் கொன்று கேவலம் பச்சையாய்த் தின்று ஜீவித்துவந்தார்கள் என்று சொல்லுவதைவிட வேறொன்றும் சொல்ல முடியாது. ஆனால் இந்தியாவிலோ அதேகாலத்தில் சந்திரகுப்த மௌரியர் என்ன, பிம்பிசாரர் என்ன, அசோகர் என்ன, இவ்விதமான சக்ரவர்த்திகள் ஜனங்களை நீதியுடனும், பக்ஷபாதமின்றி ஒழுங்காயும் ஆண்டு வந்தார்கள். அவர்கள் அரசாட்சியானது முன் காலத்தில் நாகரீகத்தில் முதிர்ந்தவர்கள் என்று எல்லாராலும் கொண்டாடப்பட்ட கிரேக்க தேசத்து தூதனான மெகஸ் தனீஸ் என்பவன் வாயைப் பிளந்து கொண்டு ஆனந்தப்படும் படியானதாக இருந்தது என்று மேனாட்டுச் சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் கூட ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.

 

இது இப்படி இருக்கையில் மேனாட்டார்களே ஒவ்வொரு சாஸ்திரத்திலும் பாண்டித்திய முள்ளவர்க ளென்றும், நம்மவர்களில் அநேகர் எவ்வளவு கற்றிருந்த போதிலும் அவர்களிடத்தி லிருந்து (சர்ட்டிபிகேட்கள்) யோக்கியதா பத்திரங்கள் பெற்றால் தான் நிரம்பப் படித்தவர்களென்றும் மரியாதைக்கும், கௌரவத்திற்கும் பாத்திரர்கள் என்றும் அநேகர் நினைத்துக் கொண்டிருப்பது நமது தேசத்தின் துரதிஷ்டமென்றே நினைக்க வேண்டி யிருக்கிறது. ஆனால் நமது தேசத்தில் ஆதியில் இல்லாத வான சாஸ்திரமில்லை; நமது தேசத்தில் இல்லாத கணித சாஸ்திரமில்லை; நமது தேசத்தில் வழங்காத பிரகிருதி சாஸ்திரம், வைத்தியசாஸ்திரங்கள் இல்லை; நமது தேசத்தில் சட்டம் வழங்காததில்லை. பார்க்கப்போனால் ஒவ்வொரு சாஸ்திரமும் நமது நாட்டிலிருந்தே மேனாட்டுக்குப் பரவியிருக்கிறதாகத் தெரிகிறது. மேனாட்டார்களில் சிலரும், அவர்களையே தேவதைகளென்று நினைத்திருக்கும் சில இந்தியர்களும் எழுதியிருக்கும் இந்திய சரித்திரத்தை வாசித்தால் மேல் சொன்ன விஷயங்கள் ஒன்றும்
விளங்காது. உண்மையில் இந்தியா வெகுகாலத்திற்கு முன்பே நாகரீகமுற்றது
அந்த விதமான நாகரீகத்தைத் தெளிவாயும், சுத்தமாயும் தெரியும் பொருட்டுத் தகுந்த சிரமம் எடுத்துக்கொண்டு சரித்திரங்கள், சாஸ்திரங்கள், கிரந்தங்கள் முதலியவைகளை ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கும் சரித்திரங்களை வாசிக்க வேண்டும். ஏனெனில், மேனாட்டாரால் எழுதப்பட்டிருக்கும் சிறிய இந்திய சரித்திரங்களை நாம் வாசித்தால் நமது மனது புண்படும். அவர்கள் சொல்லுவதென்னவெனில், ஆங்கிலேயர் வருமுன்னம் நமது தேசமானது நாகரீகமற்றுச் சீர்குலைந்து கிடந்ததாகவும் அவர்கள் வந்து அரசாள நேர்ந்தபின்னர் தான் நாகரீகமென்பதே நம் ஜனங்களுக்கு ஏற்பட்டதென்றும் தேசமானது பிரம்மலோகம் அல்லது சுவர்க்கலோகம் போல் மாறிவிட்டதென்றும் சொல்லுகிறார்கள். இவ்விதமான சிறு புஸ்தகங்களையே நமது பாடசாலைகளில் கீழ் வகுப்புகளில் பாடமாக வைத்து நமது பிள்ளைகளை வாசிக்கச் செய்கிறார்கள். இவ்விதமான சரித்திரங்களையே ஒரு சிறுவன் சுமார் பத்தாவது வகுப்புவரையில் படிக்கவேண்டியிருக்கிறது. அதைப்படித்துவிட்டு நம் சிறுவர்கள் "மேனாட்டுப் பாஷைகளிலேயே ஆனந்த மிருக்கின்றது; மேனாட்டார்களே தேவதைகள்; அவர்கள் நாகரீகமே சிறந்தது; அவர்களே சகலகலா வல்லவர்கள்; நம்முன்னோர்களுக்கு ஒன்றும் தெரியாது'' என்று தப்பெண்ணம் கொண்டு, நம் தேசத்தின் பாஷைகளாகிய சமஸ்கிருதம், தமிழ் முதலியவைகளை அலக்ஷியம் செய்கிறார்கள்

 

மேலும் தாய்ப்பாஷைகளைப் படிக்க வேண்டிய ஒரு அவசியமும் அவர்களுக்கு ஏற்படாமல் இஷ்டப்பட்ட பாடங்கள் (Optional)) எடுத்துக் கொள்ளும்படி சிறு பிள்ளைகளை விட்டிருக்கின்றார்கள். ஆதலின் அவர்கள் கணக்குப் பாடம், பிரகிருதி சாஸ்திர (Science) பாடங்கள் முதலியவற்றை எடுத்துக்கொண்டு தாய்ப்பாஷைகளை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். எப்படியாவது பள்ளிக்கூட இறுதிபரீக்ஷை S. S. L. C. யில் தேறிவிட்டுக் கலாசாலைக்குப் போகிறார்கள். அங்கே புராதன பாஷை ஒன்று அவசியம் படிக்க வேண்டிய நிமித்தத்தினால் அவர்கள் தமிழ் அல்லது சமஸ்கிருதத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்து மிகுந்த அருவருப்புடனும் பயத்துடனும் வாசித்து வருகிறார்கள். அவை முன் அலக்ஷியம் செய்த பாடங்க ளாகையினால், அவர்களுக்குச் சிரமம் மெத்தவும் ஏற்படுகின்றது. இரண்டு வருஷங்கள் படித்துவிட்டுப் பரீக்ஷை எழுதுகிறார்கள். பரீக்ஷை எழுதி மூன்று மாதங்கள் கழித்து ரிசல்ட் (Result) வரும் போது பார்த்தால் இரண்டாவது பாகம் மட்டும் தேறியிருக்கிறதென்று ஏற்படும் காலத்தில் சிலர் தங்கள் மார்க்குகளை எழுதி வரவழைக்கின்றனர். அதில் பார்த்தால் பாவம் இங்கிலீஷில் மார்க்கு வந்திருக்கிறது. சிறுவயதிலிருந்து படித்து வந்த தமிழில் தான் 2 மார்க்குகள் குறைந்திருக்கின்றன. அதனால் முதல் பாகம் தேறவில்லை என்று அறிகிறார்கள். இதைத் தவிர அநேகர் எங்கே இங்கிலீஷில் மார்க்கு வரவில்லையென்று சொன்னால் பிறர் கேவலமாய் நினைப்பார்களோ வென்று நினைத்து'நான் இங்கிலீஷில் மார்க்கு வாங்கிவிட்டேன். அந்தத் தமிழ் வியாசப் பரீக்ஷையில் (Tamil composition) தான் குறைந்து போயிற்று'' என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அந்தோ! தம் தாய்ப்பாஷையில் தேறவில்லை என்பது அவர் மனதில் வெட்கத்தை உண்டாக்குவதில்லை. இதிலிருந்து தமிழின் ஸ்திதி'' உள்ளங்கை நெல்லிக்கனிபோல்'' விளங்குகின்றது. நம் சிறுவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அருவருப்புக்கும் இதுவே காரணம். சிலர் அருவருப்போடு நிற்பதில்லை. அன்னிய பாஷைகள் வழங்கும் தேசங்களிலிருந்து படிப்பு முகாந்தரமாகத் தமிழ் நாடுகளில் வந்து வசிக்கும் சிலர், கட்டாயத்தின் நிமித்தம் தமிழ் பேசக் கற்றுக்கொள்ளுகிறார்கள். இன்னும் சிலர் உண்மையில் தமிழில் அபிமானம் வைத்து எழுதப்படிக்கவும் கற்றுக்கொள்ளுகிறார்கள். இப்பேர்ப்பட்டவர்களைக் கெடுக்க நம் சிறுவர்கள் முயலுகிறார்கள். உதாரணமாக, நான் கலாசாலையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் (1917 - 18) கிருஷ்ணன் நம்பியார் என்னும் மலையாளி ஒருவர் தமிழ் கற்றுக்கொள்ள ஆவல் கொண்டு அவருக்கிருந்த ஆவலினால் ஒரே நாளில் பதம் சேர்த்து வாசிக்கவும், பதங்களின் அர்த்தங்களை அவாவுடன் கேட்கவும் ஆரம்பித்தார். மறுநாள் காலையில் அவருடைய வகுப்பு நண்பர் இரகுநாதாச்சாரி என்னும் நமது பக்கத்துத் தமிழர் அவரிடம் வந்து "Well, my friend, do not learn this wretched Tamil; it will corrupt you'' (என் நண்பரே! நீர் இந்த இழிவான தமிழைப் படிக்காதீர்; அது உம்மைக் கெடுத்துவிடும்) என்று சொன்னதை மனவருத்தத்துடன் கேட்டு அவருக்குத் தெரிந்த தவ்வளவுதானென்று நான் சும்மா இருக்க நேர்ந்தது. தமிழ் என்ற பதத்திற்கே இனிமையென்ற பொருளிருக்க, மற்றவர்களைக் கெடுக்கும்படியான குணம் என்ன இருக் கின்றதோ ஈசுவரனுக்குத்தான் வெளிச்சம். பார்க்கப்போனால் திருவிளையாடற் புராணத்தில்,


       "கடுக் கவின் பெறு கண்டனும் தென்றிசை நோக்கி
       அடுக்க வந்துவந்து ஆடுவான் ஆடலின் இளைப்பு
       விடுக்க வாரமென் கால் திரு முகத்திடை வீசி
       மடுக்க வும் தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ.''


என்று சொன்ன பிரகாரம் ஈசுவரனுக்கே ஆனந்தத்தைக் கொடுத்த தமிழல்லவா நமது பாஷை. மேலும் அதே திருவிளையாடற் புராணத்தில்,


       "தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
       யுண்ட பாலனை யழைத்ததும் எலும்பு பெண் ணுருவாகக்
       கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
       தண்ட மிழ்ச்சொலோ மறு புலச் சொற்களோ சாற்றீர்.''


என்று கேட்டிருப்பதற்குத் தமிழ் என்றல்லவோ விடையளிக்க வேண்டும். அப்படிப்பட்ட தமிழ்ப் பாஷையை, தமிழ்த் தேசத்திலே பிறந்து, தமிழ்த் தேசத்திலேயே வளர்ந்து, தமிழ்ப் பாஷையே பேசிவரும் நம் தமிழ்ப் பின்ளைகளே ஏளனம் செய்தால் நம் தாய்ப்பாஷை எப்படித்தான் முன்னுக்கு வருவது? முன் சொன்ன என் நண்பர் போன்றவர்களுக்கு,


     பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
     எல்லையருள் பரம்பொருள் முன் னிருந்தபடி இருப்பது போல்
     கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமுந்துளுவும்
     உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பல வாயிடினும்
     ஆரியம் போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
     சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே.


என்ற மனோன்மணியத் தமிழ் வணக்கக் கவியின் அர்த்தத்தைத் தெளிவுற மனதில் பதியும்படி செய்து, தமிழ் தெய்வத் தன்மை பொருந்திய தென்பதை விளங்க வைக்க வேண்டும்.

 

மேனாட்டு நாகரீகத்தின் கோலத்தினால் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளுவதும், மேனாட்டாரைப்போல் உடுப்பதும், சுருட்டுப் பிடிப்பதும், தெய்வத்தன்மை பொருந்திய தாய்த் தமிழைக் குறைத்துப் பேசுவதும் தவிர வேறொன்றும் ஏற்படவில்லை. அவர்கள் தங்கள் மட்டில் அலக்ஷியம் செய்து கொண் டிருந்தாலும் பாதகமில்லை. ஆவலுடன் கற்றுக்கொள்ள எத்தனிக்கும் அன்னிய பாஷைக்காரர்களைத் தடுக்காமலிருந்தால் போதுமென்று வேண்டும் ஸ்திதிக்கு இக்காலம் வந்துவிட்டதை நினைக்க மனதிற்கு நிரம்பகஷ்டமாக இருக்கிறது. நமது தேசம் முழுவதும் தொழுது வணங்கும் மகாத்மா காந்தியடிகள் தாம் ஒரு பெரிய பார் -அட் -லா (Bar - at - law) வாயிருந்தபோதிலும் தம் தாய்ப் பாஷையாகிய ஹிந்தியை விருத்தி செய்வதற்கும், பரவச் செய்வதற்கும் எடுத்துக்கொள்ளும் முயற்சி தேசாபிமானிகளனைவர்க்கும் தெரிந்த விஷயம். மேனாட்டாரைச் சாயல் பிடிக்கும் நம் நண்பர்கள் அவர்களுடைய சற்குணங்களைக் கவனிப்பதில்லை என்று நமதானந்தன்' பலமுறையும் வற்புறுத்தி யிருக்கின்றது. அவர்கள் எங்கே போனாலும் தங்களுடைய தேசத்தாரோடு தான் பழகுகிறார்கள். தங்கள் பாஷையைத்தான் பேசுகிறார்கள். தங்கள் பாஷையையே விருத்தி செய்து பரவச்செய்கிறார்கள். உதாரணம், நமது தேசத்தில் இங்கிலீஷ் பாஷை வேரூன்றி யிருப்பது ஒன்றே போதும். அவர்களைப் போல் நடந்து கொள்வதினால் தங்களுக்கு ஒரு கௌரவம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் கனவான்களைப்பற்றி மேனாட்டார் வெகு குறைவான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களென்பது அறிவாளிகளுக்கு வெளிப்படையாய்த் தோன்றும்.

 

ஆகையினால் கேவலம் வயிற்றுப் பிழைப்புக்காகவும், ராஜபாஷையா யிருப்பதனாலும் இங்கிலீஷ்ப் பாஷையைக் கற்றுக்கொள்ள வேண்டியதவசியமே. அப்படி அதை வேண்டிய அளவு படித்துக்கொண்டு உண்மையில் எப்போதும் இன்பத்தைத் தருவது நம் தாய்ப்பாஷையாகிய தமிழ் அதையே விருத்திக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். ஆகையினால் முன் சொன்ன என் நண்பர் போன்றவர்களைத் திருத்தி உண்மையில் தமிழ் சிறந்த பாஷை யென்று வற்புறுத்தி, அதை நிலைக்க வைத்துச் செழித்தோங்குமாறு செய்யும் "ஆனந்த போதினியும்'' அதன் ஆசிரியரும் நீடூழிகாலம் வாழ வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

 

T. S. ராஜகோபாலன்,

B. A., கிளாஸ், திருக்காட்டுப்பள்ளி.   

 

ஆனந்த போதினி – 1921 ௵ - ஜனவரி ௴

 

 

No comments:

Post a Comment