Wednesday, September 2, 2020

 தியாகராஜ கீர்த்தனமும் பாடகர்களும்

 

தென்னிந்தியாவில் தியாகராஜருடைய திருநாமம் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். சங்கீத உலகம் அவரைப் பூரணமாக அறிந்திருக்கிறது. தென்னிந்தியாவில் சங்கீதத்திற்குச் சிறந்த ஜீவியமும், தெளிந்த ஞானமும், தீர்க்கமான உணர்ச்சியும் கொடுத்தவர் தியாகராஜர் ஒருவரே. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் சங்கீத வித்துவான்களுடைய பத்ததியைப் பெருக்கியும் புதுக்கி உன்னத ஸ்தானத்தை ஸ்தாபித்து, எல்லாராலேயும் நன்கு மதிக்கப் பெற்றுப் பேருங்கீர்த்தியும் வாங்கியவரும் தியாகராஜரே; பதங்களும் வேறுசில அம்சங்களும் கடுமைப்பட்டும், பொருள் விளக்க மில்லாமலு மிருந்த சங்கீதக் கலையை மிகத் தெளிவாக்கி ராக்கலைக்கு பிரதானமும் உயர்வு முண்டாக்கியாவரும் இவரே யாகுமென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தென்னிந்திய சங்கீதம் நிலைநிற்கிற காலம் வரை இவருடைய பாவனத் திருநாமமும் இருந்தே தீரும்.

 

தியாகராஜர் தன் கீர்த்தனங்கள் முழுதும் தெலுங்கு பாஷையிலேயே எழுதியுள்ளார். அற்ப சொற்பந்தான் சமஸ்கிருதத்திலும் தமிழிலுமிருக்கிறது. என்றாலும், தெலுங்கிலே தான் அதற்கு முதன்மை கொடுத்துள்ளார். ஆயினும் தியாகராஜ கீர்த்தனங்களை இப்போதுள்ளவர்கள் அநுசரிப்பது அவற்றின்கான மாதுரியத்தை மட்டுமேயாகும். கானரச சுரத்தில் மதிமறந்த சங்கீதக்கலையாளர், அவருடைய கீர்த்தனங்களிலேயுள்ள வாக்குகளுடையவும் பதங்களுடையவும் அர்த்தம் அல்லது பொருள்களை உணரவோ, அந்தர் லீலையான ஆசயங்களை அறியவோ சிரமம் எடுத்துக் கொள்வதில்லை. சங்கீதமென்றால் தியாகராஜ கீர்த்தனங்களென்றும், தியாகராஜ கீர்த்தனம் கானஞ் செய்யப்படாத சங்கீதகச்சேரி கச்சேரியல்ல வென்றும் அநேகர்கள் எண்ணியுள்ளார்கள். அதனால் கானவித்துவத்தை உபயோகப்படுத்தும் மிக எளியவனும் மகாவித்துவானும் ஒன்று போல் தியாகராஜ கீர்த்தனங்களையே படித்து அப்பியாசப் படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் அவர்கள் பெரும்பாலும் அக்கீர்த்தனங்களின் கானரசங்களில் முழுகி அதில் மாத்திரம் மதிப்பு வைத்துக்கொண்டிருப்பதால் வாக்குகளையும் பதங்களையும் எப்படி உச்சரித்தாலும் விரோதமில்லை யென்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. “ராமநீஸமான மெவரு'' என்ற பதமும் வாக்கும் ‘ரமணீஸமான' என்று சாதாரணமாய் வழக்கிற்கு வந்து விட்டன. “ஸுஜன ஜீவன - சுகுணபூஷண" என்ற வாக்குகள் ஸுஜன ஜீவனம் என்று ஆய்விட்டன. பகவந்நாம பகவந்நாம உச்சாரணங்களும் அக்ஷரங்களும் பிழையாக உச்சரித்தாலும் நல்ல பலத்தையே கொடுக்குமென்று மகாபாரதம் கூறுகின்றது. தியாகராஜ கீர்த்தனங்களும் பரமனுடைய நாமத்தை தோத்திரம் செய்வதேயாகும். அது பக்திரசத்தை யூட்டுவது; கன்மனப்போக்கர்களையும் சாந்தப்படுத்தும் சக்தி யுள்ளது. பாடுகிறவர்களும் பாடங்கேட்பவர்களும் இவ்வாறு கூறுகின்றனரே யன்றிச் சுத்தமாக வாக்குகளையும் உச்சரிக்க வேண்டுமென்று எண்ணுபவர்கள் அதிகமாயில்லை. அது சாரமில்லை என்பது சங்கீதக்காரர்களுடைய மதம் போலும்! வர்ணமெட்டுச் சரியாயிருக்க வேண்டும். அதை ஒப்பித்துச் சில அக்ஷரங்களை அதன் போக்குப் போல நீட்டியும், குறுக்கியும் இடைக்கிடையே சுரங்கள் கலக்கியும், முகம் வக்கிரித்தும், விவஸ்ததொனிகளை எழுப்பியும் தாளக்கணக்கிற்குத் தவறாமல் ஒப்புவித்தால் போதுமென்பது பழக்கமாய்ப் போய் விட்டது. கீர்த்தனங்களை இவ்வாறு அதன் அர்த்த புஷ்டியைக் கவனியாமல் பாடுகிறவர்களும் கேட்பவர்களும் அசிரத்தையாயிருந்து அதற்கு ஒரு மலினத்தை உண்டு பண்ணி விட்டார்கள்.

 

கிருதிகள் அதாவது கீர்த்தனங்களைப்பாடி ஒப்புவிக்கப் படிப்பது மட்டும் போதாது. அதிலுள்ள சாரபாவங்களை நல்லவண்ணம் உய்த்துணர்ந்து அவற்றிலும் ஈடுபட்டுக் கானஞ் செய்வதிலும் சிரத்தை யிருக்கவேண்டும். இது மிகமிக அவசியமாகும். சங்கீதம் என்ற பதங்கொண்டு விவசிதமாயிருக்கிற பாவராக தாளங்கள் ஒத்துவர வேணுமென்றால் - அக்கிருதி கர்த்தாவினுடைய உத்தேசங்கள் நிறைவேற வேணுமென்றால், நிச்சயமாய் அக்கீர்த்தனங்களைக்கையாளும் ஒவ்வொருவரும் கானராக கவனம் வைப்பது போல வாக்குகள் பதங்களிலும் கவனம் வைக்கவேண்டும்.

 

தியாகராஜ கீர்த்தனங்கள், நரஸ்துதி யாகவோ, பொருள் தேடுவதற்கோ எழுதப்பட்டவையல்ல. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வால்மீகி இராமயாணம் படிக்க நேர்ந்தது. அது முதல் ஸ்ரீராமபிரானிடத்து ஒரு நிச்சய பக்திப் பிரேமை ஏற்பட்டது. அந்தப் பக்தி ஏற்பட்டதும், பாடசாலையில் படிப்பதை விடுத்துச் சங்கீதத்தை அப்பியாசஞ் செய்யத் தொடங்கினார். தம்முடைய இஷ்ட தெய்வமான ஸ்ரீராமபிரானைக்குறித்து ஸ்துதி செய்யும் அவசியம் வந்தது. சாஸ்திர வாதத்தில் மனதைச் செலுத்தாமல், பகவத்தியான நிரந்தனராக அற்புதமான கீர்த்தனங்களை உண்டாக்கித் தாமே பாடிக்கொண்டு காலக்ஷேபம் செய்து கொண்டிருருந்தார். சமயங்களில் அவருடைய பாடல்களில் அதாவது கீர்த்தனங்களில் ஸ்ரீகிருஷ்ண பகவானைப்பற்றிய கதைகளை வர்ணிக்கத் தொடங்கி முடிவில் ஸ்ரீராமபிரானது நாமத்தைக்கையாண்டு பாடியிருப்பதும் காணலாம்.

 

தியாகராஜருடைய கிருதிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தை அனுசரித்து ரசிக்கத்தக்கவையாகும். சூரிய உதயம் முதல் மறுதினம் சூரிய உதயம்வரை ஒரு பகலும் இரவும் அநுசரிக்கப்பட வேண்டிய அநுஷ்டானங்களுக்கெல்லாம் கீர்த்தனங்களுண்டு. ஸ்ரீராம விக்ரகத்தை ஸ்தானம். செய்விக்கவும், வஸ்திராதி ஆபரணங்கள் அலங்காரம் செய்யவும், ஆகாராதிகள் நைவேதனம் செய்யவும், பள்ளியறையில் உறங்கச் செய்யவும், திருப்பள்ளி எழுச்சி உணர்த்தவும் இன்னும் இவை போன்றவைகளுக்கு சந்தர்ப்பாநுசாரங்களான கீர்த்தனங்கள் பல செய்யப்பட்டிருக்கின்றன. மாணவர்களை அப்பியாசப்படுத்த வேண்டிய காலத்திலும் மற்றும் உண்டாக்கி முடிந்த பிரத்தியேக சம்பவங்களிலும் சில கிருதிகள் ரசிக்கப்படுவதற்குத் தக்க காரணங்களு முண்டு. இங்ஙனம் தியாகராஜர் பல அபிப்பிராயங்களை யுடையவர்களையும் பல சந்தர்ப்ப சம்பவங்களையும் உள்ளடக்கி உண்டு பண்ணின கீர்த்தனங்கள் ஆயிரக்கணக்காக உள்ளன. இவற்றில் இப்போது புஸ்தகத்தில் 650 (அறுநூற்றைம்பது) கீர்த்தனங்களே வெளி வந்துள்ளன.

 

தியாகராஜர் தம்முடைய கிருதிகள் முழுவதையும் எல்லாச் சீடர்களையும் படிப்பித்திருப்பதாய் அறிவதற்கில்லை. அதி புத்தி விவேகர்களும் சமர்த்தர்களுமான சீடர்களை மட்டும் சம்பாதிக்க வேண்டுமென்ற அவா தியாகராஜர்க்கில்லை. உலகிலுள்ள சகல மக்களும் புத்தி சாமர்த்தியர்களல்லரென்றும், அவ் அறிவில்லாத ஜனங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வது இதர சாமானியர்களுடைய கடமையென்றும், ஆதலால் அவ்வேழை எளியவர்களை நல்லவண்ணம் படிப்பிக்க வேண்டியது தான் லோகோபகாரமானபெரிய தருமமென்றும் தியாகராஜருக்கு நிச்சயமான ஓர் தெளிவு உண்டாயிருந்தது. உண்மையில் அதிபுத்திமான்களைச் சீடராக்கி கிருதிகளை படிப்பிக்க ஏற்பாடு செய்திருந்தால் அக்கிருதிகளுக்கு இப்போதுள்ள அபிவிருத்தி ஏற்பட்டிராது என்பது மட்டுமல்ல சில யோக்கியர்களிடம் சிக்கிக் கொண்டு நித்திய உபயோகத்திற்கு வராமல் சில காலத்திற்குன் இருந்த இடம் தெரியாமற் போவதற்கிடமாகவும் வந்திருக்கும்.

 

தியாகராஜரின் கீர்த்தனங்களின் ரசபாவங்களையும் தெய்விக சக்திகளையும் கண்டு அறிந்துணர்ந்த தஞ்சாவூர் சரபோஜி மகாராஜரானவர் தம்மைப்பற்றிச் சில ஸ்துதிரூபமான கீர்த்தனங்களைச் செய்யுமாறு கட்டளையிட்டிருந்தனர். ஆனால் தியாகராஜர் இதில் இஷ்டமில்லா திருந்ததால் உடன்படாதிருந் இறுதியில் பாடும்படி நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஒரு கிருதிபாடித் தூதனிடம் அனுப்பித்தார்.


“நிதிசாலா சுகமா- ராமுனிஸன்னுதி சாலா சுகமா''


 (அல்லவா மனதே! நிதியோ சுகத்தைக் கொடுப்பது? அல்லது ராமநாம தோத்திரமோ சுகத்தைக் கொடுப்பது? நீ சத்தியமாய்ச் சொல்லு) என்ற பொருளடங்கிய பாட்டைப் படித்துணர்ந்த தஞ்சாவூர் ராஜாவானவர் லஜ்ஜையடைந்தனர்.

 

ஒரு சமயம் தம்முடைய மாணவர்கள் (சீடர்கள்) பக்கத்துக் கிராமத்தில் நடந்த ஒரு பாட்டுக் கச்சேரிக்குப் போயிருந்தனர். அங்கு கேட்ட சிங்காரரசமான ஒரு கீதத்தைப் படனம் செய்து கொண்டு வந்த ஒரு சீடன் தியாகராஜன் காதில் படுமாறு பாடினன். சிருங்காரமான கீதங்களைப் பாடுவதும் கேட்பதும் தியாகராஜருக்கு மிகவும் வெறுப்பாயிருக்கும். ஆதலால் தம்முடை ய சாதனைகளுக்கு விருத்தமாய்ப் பிரவிர்த்தித்துள்ள சீடர்களை விட்டு விலகிக் கொண்டு விடும்படி வறுப்புறுத்தினர். இதனால் சீடர்கள் திகைக்கலாயினர். சீடர்களில் சிலரை விலகிக்கொள்ளும்படி கூறி மிகப் பிடிவாதஞ் செய்த தியாகராஜரை, அவருடைய மனைவியார் வேண்டியவாறு சமாதானஞ் செய்து, வெளியேறிய சீடர்களைத் திரும்பவும் வரவழைத்துச் சேர்த்துக் கொண்டதோடு அவர்களிடம் சாந்தமாயிருக்கும் படியும் தம் கணவருக்குத் தகுந்த மொழிகளாலுணர்த்தினர். தம்முடைய குரோத நிலையை உணர்ந்து பிடிவாத வைராக்கிய புத்திக் வருந்தினர். தாமே விசனித்துக் கொண்டனர். பொறுமை மனிதனுக்கு அவசியம் வேண்டற்பாலது என்பதைத் தம் மனைவிபா லுணர்ந்ததற்கேற்ப ஒரு கீர்த்தனையும் செய்தனர்.

 

"சாந்தமூலேக சௌக்கிய மூலேது - ஸாரஸதள நயன"

(தாமாக்கண்ணனே! சாந்தம் (பொறுமை) யில்லாவிட்டால் மனிதனுக்குச்
சௌக்கியமில்லை) என்பதாகும்.

 

தியாகராஜ கிருதிகள் சங்கீதக் கலையிற் சிறந்து விளங்குவது போல, சாகித்தியத்திலும் சிறந்தனவென்பது சிலருடைய அபிப்பிராயம். சரியல்ல; சாகித்தியத்திற்கு எதாவது சொல்லத்தக்க ஸ்தான மிருப்பதாய்க் காணவில்லை யென்று பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். கீர்த்தனங்கள் பெரும்பாலும் சாதாரண சம்பாஷணைக்கு உபயோகிக்கிற நாடோடி பாஷையில்தான் காணப்படுகின்றன. இடைக்கிடையே பல்லவியிலாவது, அனுபல்லவியிலாவது கடினமான சம்ஸ்கிருத பதங்களும் காணலாம். சுசுக்க ரீதியிலுள்ள கானவாக்கியங்கள் ராசதாளத்திற் கநுசரித்துப் பாடப்பட்டவை யாகும். அநுப்பிராச முதலான சப்த அலங்காரங்களும், அர்த்த புஷ்டி உண்டாக்கப்படுகிற அலங்காரங்களும் குறைவாக உள்ளன. பெரும்பாலும் கீர்த்தனங்கள் தெலுங்கிலேதான் என்பது சொல்லப்பட்ட - தெரியப்பட்ட விஷயம். சில கீர்த்தனங்கள் சம்ஸ்கிருதத்திலுமுண்டு. எல்லாக் கீர்த்தனங்களும் பக்திரசம் வழிந்தொழுகி ரசிக்கும்படி இருப்பதோடு எல்லாக் கீர்த்தனங்களிலும் தம்முடைய பேரும் முத்திரை யடியாக வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மற்றக் கீர்த்தனங்களை விட தியாகராஜ கீர்த்தனங்களுக்கு யோக்கியதை அதிகப்படுவதற்குக் காரணம் அவற்றின் கானாசப் பிரதானந்தான் என்பதில் சந்தேகமில்லை. ஒரு ராகத்தினுடைய அதிசூக்ஷம ஸ்தானங்கள் சம்பூர்ணமான சொரூபத்தைப் பிரகாசிக்கிற பல்லவியும், அதை அநுசரித்த பாகங்களும், தியாகராஜருடைய கிருதியிலமைந்ததைப் போல் வேறு எதிலும் அமையவில்லை. எவ்வளவோ விஸ்தீரணப் படுத்தத்தக்க விதத்தில் ராகத்தைச் சுருங்கிய நிலையில் பிரயோகப்படுத்தி யிருப்பதால், கானசதுரன்மார்களுக்குத் தாளசுரபாகம் தவறாமல் இஷ்டம்போல் தீர்க்கப்படுத்திக் கொண்டு போவதற்கும் ராகத்தினுடைய சர்வ அங்கங்களிலும் சவிஸ்தாரமாய் பிரகாசிப்பதற்கும் சாத்தியமுள்ளதாக அமைந்துள்ளது. சாதாரண பாடிவராத ராகங்களில் -அபூர்வராகங்களிலும் சில கிருதிகளுள்ளவாறு காயகன்மார்களை உட்படுத்துவதுண்டு. தியாகராஜருடைய கீர்த்தனங்கள் பெரும்பாலும் பூர்வ மேளங்களிற்றான். சுருக்கமாகச் சில மட்டும் உத்தர மேளங்களிலும் உண்டு. ஆனால் அவற்றிற்குப் பூர்வ மேளங்களிலுள்ள வற்றிற் குள்ளது போல் பிரயோக சாதுரியமும் சௌகரியமும் குறைவேயாகும். சுபம்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment