Wednesday, September 2, 2020

 

திரிமூர்த்திகள்

 

"திரி மூர்த்திகள்'' என்பதன் உண்மை விவரம் நம்மவர்களில் அனேகர்க்கே தெரியாது. இத்தகையோர் இந்த மூவரும் வெவ் வேறு கடவுளர் என்று கருதி விஷ்ணுவே பெரியவர் என்றும், சிவ னே பெரியவர் என்றும் வாதம் செய்து கொண்டும், சண்டையிட் டுக்கொண்டும், இன்னும் நீதிஸ்தலம் வரையில் கூடச் சென்று கொண்டு மிருக்கிறார்கள். இது கல்வியில்லாக் குறையால் மட்டும் நேரும் தீங்கல்ல; கல்வியைப் பூரணமாகக் கற்றோனுக்கும், கல்வியே கல்லாதவனுக்கும் அகங்காரம் உண்டாகாது. ஏனெனில், முன்கூறப்பட்ட வன் கல்விகரையிலதென்றும், தன்னிலும் அதிசம்
கற்றோர் அனேக ருளரென்று முணர்ந்து அடக்க முடையவனாகின்றா னாதலால் அகங்காரம், பெருமை முதலியன அவனிட முண்டாகக் காரணமில்லை. கல்லானுக்கோ அகங்காரம், பெருமை முதலியன இன்னவையென்றே தெரியா. நுனிப்புல் மேய்வதுபோல் கொஞ்சம் இலக்கிய இலக்கணங்களையும், மேல்போக்காய் இரண்டொரு சாத்திரங்களையும் பார்த்து விட்டு நான் கற்றவன் என்று புகழ்பெற விரும்புவோரும் இத்தகை சண்டையில் பிரவேசிக்கிறார்கள். அந்தோ! இவர்கள் நேரில் போய் துரியபரம் பொருள், சடை, மான், மழுடமரகம், உமை, நந்தியாவுமுடைய சொரூப மென்றும், சங்கு சக்ர கோதண்ட இலட்சுமி சமேத சொரூபமென்றும் தடவிப்பார்த்துவிட்டு வந்தவர்கள் போலதான் பிடித்த முயலுக்குக் கால்மூன்றே' என்று பிடிவாதமாகச் சண்டையிட்டு இரு கட்சியாரும் சேர்ந்து சிவ விஷ்ணுக்களிருவரையும் தூஷித்து அத்தூஷணையால் கிடைக்கத்தக்க அபாரமான பாபமூட்டையைப் பெறுகிறார்கள். இது தக்க ஆசானிடம் மதக்கல்வி கல்லாத குறையே யன்றி வேறில்லை.

 

நமது சமயத்தவர் சங்கதியேயிவ்வாறாயின், நம்மதத்தின் மேல் துவேஷபுத்தி யுடையோரும் சடசாத்திரப் பயிற்சி மட்டு முடையோருமான அன்னிய மதஸ்தருக்கு நமது மதத்தைப்பற்றி யென்ன தெரியும். இத்தகையோர் நமது மதத்தின் உண்மையையுணராது "இந்துக்கள் பல தெய்வங்கள் உண்டென்று நம்புகிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களுக்கெல்லாம் மனைவி புத்திரர் உண்டு. இப்படிப்பட்டவைகள் எங்கேனும் தெய்வங்களாவார்களோ?'' என்று பறையறைகின்றனர். நம்மவரில் பாமரராயுள்ளோர் மத ஆராய்ச்சி யில்லாக் காரணத்தால் அவர்கள் வாய்ச் சொல்லைக் கேட்டநேரம் திகைத்து மயங்கி விடுகிறார்கள். ஒரு விஷயத்தில் மய ங்கி யேமாந்தவனை, பிறகு இன்னும் சில விஷயங்களால் பூரணமாக மயக்கிவிடுவது சுலபந்தானே.

 

இக்காரணங்களுக்காகவே நாம் இதைப்பற்றி எழுதநேர்ந்தது.

 

கடவுளின் இலக்ஷணத்தைப் பற்றியும், அவர் யாவும் படைத்துக் காத்தழிக்கும் சாமார்த்தியத்தைப் பற்றியும், ஆன்ம லட்சணத்தைப் பற்றியும், ஆன்மாவிற்கும் பரமான்மாவிற்கு முள்ள சம்பந்தத்தைப் பற்றியும், ஆன்மா தேகத்தோடு பொருந்தியிருப்பதில் சம்பந்தப்பட்ட தத்துவ உற்பத்தி ஒடுக்கத்தைப் பற்றியும் நமது மதத்தில் விரிவாய்க் கூறப்பட்டுள்ளது போல் வேறெந்த மதத்திலேனும் கூறப்பட்டிருப்பதாய்ப் புலப்படவில்லை. கடவுள் ஒருவரே என்று மட்டும் மற்றமதங்களிலும் கூறி யிருந்தாலும், ஏகம், 'என்பதைப்பற்றி நமது மதத்தில் நிரூபித்திருப்பதுபோல் வேறு எதிலும் நிரூபிக்கவில்லை யென்றே தெரிகிறது.'ஏகமே வாத்வி தீயம் பிரம்மம் " " ஸுஜாதி விஜாதி ஸ்வகதபேத ரகிதம் பிரம்மம்' என்ற வாக்கியங்களிலடங்கியுள்ள விசேஷ பொருள்கள் நமது வேதத்திற்கே உரியனவாகும். அவ்வளவு திட்டமாகக் கடவுள் ஒருவரே என்று கூறியிருக்க, நாம் பலதெய்வங்கள் உண்டென்று நம்புவதாகக் கூறுவோருரையை உண்மையறியார் கூற்று என்னாது வேறென்னென்போம்.

 

ஆயின் பிரம்ம, விஷ்னு, உருத்திரர் எனத் திரி மூர்த்திகள் என்று கூறுகிறீரே என்றாலோ, அதனானே கடவுளர் மூவர் என்று கூறியதாகக் கருதுவது பெருந்தவறேயாகும். அப்படி மூன்று பெயர்கள் கூறியிருப்பினும் கடவுள் ஒருவரென்றே தெள்ளிதின் விளங்கும்.

 

எவ்வாறெனின்: - உலகில் ஒரே மனிதன் இரண்டு மூன்று தொழில்களைச் செய்கிறான். திருட்டாந்தமாக ஜான்ஸன் என்ற ஒருவரே ஒரு ஜில்லாவின் கலக்டராகவும், ஜில்லா மாஜிஸ்டிரேட்டாகவும், டிஸ்டிரிக்ட் போர்ட் பிரவிடென்டாகவும் மூன்று தொழில்களைச் செய்கிறார். நிலவரியைச் சேகரம் செய்வதால் "கலக்டர்" என்ற பெயரும், ஜில்லாவிலுள்ள மாஜிட்ரேட் (குற்ற விசாரணை செய்கிறவர்களுக்கெல்லாம் தலைமை வகித்திருப்பதால் 'டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்ட்ரேட்' என்றும், ஜன சமூகத்தின் வசதிக்காக பாதைகள் போடுவது, சில்லரைக் கட்டிடங்கள் கட்டுவது முதலிய தொழில்களை நடத்தும் ஜில்லா சபைக்கு அக்ராசனாதிபதியாக விருப்பதால் 'டிஸ்ட்ரிக்ட் போர்ட் பிரஸிடென்ட்' என்றும் அவருக்கே மூன்று பெயர்களிடப்பட் டிருக்கின்றன.

 

அம்மூன்று தொழில்களில் எந்ததெந்தத் தொழில் முறைமையில் யாராருக்கு அவரால் காரியம் ஆகவேண்டிய திருக்கிறதோ அவரவர்கள் அந்தந்த விலாசத்தால் அவருக்கு மனுச் செய்து கொள்ளுகிறார்கள். ஒருவன் எத்தகையதொழில் உடையவராக அவரைக் குறிப்பிட்டு மனுச் செய்து கொள்ளுகிறானோ, அத்தொழிலைப் பற்றிய விஷயத்தை மட்டுமே யவர் நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் மூன்று பெயரால் மூன்றுவித வேலைகளைச் செய்தாலும் உண்மையில் ஜான்ஸன் ஒரு ஆளே யன்றி வெவ்வேறு மூன்று ஆட்களல்ல. விவகாரத்தில் மட்டும் மூன்று பேராகவே விவகரிக்கப்படுகிறார். மூன்றுக்கும் தனித்தனி வெவ்வேறு சிப்பந்திகளுமிருக்கிறார்கள். கடைசியில் அவர் ஒருவரே.

 

சிற்றறிவால் மாயையிற்சிக்கி இவ்வுலக சம்பந்தமான தொழில் செய்யும் ஒரு சாதாரண மனிதனுக்கே மூன்று தொழில்களும், மூன்று பெயர்களுமிருந்தால், எண்ணிறந்த அண்டங்களையும் அவற்றிலுள்ள நால்வகையோனி ஏழுவகைத் தோற்ற பேதமான எண்ணிக்கைக்கடங்கா ஜீவராசிகள் முதலிய யாவற்றையும் படைத்து, அதனதன் வினைக்கீடான போகங்களை யூட்டி இரட்சித்துத் துடைக்கும் அப்பரம்பொருளுக்கு எத்தனை தொழில்களிருக்கு மென்பதைக் கிஞ்சிக்ஞனாகிய மானிடன் உணரவல்லனோ?

 

ஆயினும் அவருடைய தொழில்களனைத்தையும் சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகம் என்ற ஐந்து தொழில்களாகப் பிரித்து அவற்றிற்குப் பஞ்ச கிருத்தியங்களென்று நாமம் சூட்டப்பட்டிருக்கிறது. இப்பஞ்ச கிருத்தியங்களைச் செய்வோர், பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்ற பஞ்ச கர்த்தாக்கள் என்று கூறப்பட்டிருப்பினும், உண்மையில் யாவும் செய்பவர் அத்துரிய பரம்பொருள் ஒருவரே யென்றுணரும் பொருட்டே அப்பரம்பொருளை நடராஜரென்று உருவகப்படுத்தியும், அவர் சந்நிதான மாத்திரத்தில் பஞ்சகிருத்தியங்களும் நிகழ்கின்றன என்பதைக் குறிக்க அவர் பஞ்சகிருத்தியத் தாண்டவம் புரிகிறா ரென்றும் கூறப்பட்டிருக்கிறது.

 

இவ்வைந்து தொழில்களில் திரோபவம் அனுக்கிரகம் என்ற இரண்டையும் மற்ற மூன்றிலடக்கி முத்தொழில்கள் என்றும் மூன்று கர்த்தாக்களென்றுமே சிருஷ்டிக்கிரமத்தில் கூறப்பட்டிருக்கிறது. மாயாரகிதனாகிய ஈஸ்வரன் சுத்தமாயையி லுள்ள சத்துவம், இரஜசு, தமசு என்ற மூன்று குணங்களைக்கொண்டே சகலதொழில்களையுயும் நடத்துவதால், அம் மூன்று குணங்களால் சிருட்டி, திதி, சங்காரம் என்ற மூன்று தொழில்களும், பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் அல்லது சிவன் என்ற மூன்று நாமங்களும் ஏற்பட்டன. ஆனால் மேலே கூறிய திருட்டாந்தத்தில் ஜான்ஸன் ஒருவனேபோல் இங்கும் மூன்று தொழில் மூன்று நாமங்கள் இருப்பினும் பரம் பொருள் ஒருவரே யாகும்.

 

ஆனால் ஜான்ஸன் விஷயத்தில் மூன்று தொழில்களும் மூன்று பெயர்களும் மட்டும் கூறப்படுகின்றன. தாட்டாந்தத்தில் மூவர்க்கு மூன்று நிறங்களும், மூன்று உருவங்களும், அவரவர்கட்கு மனைவி புத்திரராதியரும் உண்டென்றும், ஏககாலத்தில் மூவரும் விவகாரங்களைச் செய்வதாகவும் புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றனவே யெனலாம்.

 

உண்மையில் முக்குணங்களுக்குத் தக்க குறிகளையே நிறங்களாகம், அவர்கள் தொழில் செய்யும் வல்லமைகளாகிய, சத்திகளையே மனைவியர், ஆயுதங்கள் முதலியவைகளாகவும் உருவகப்படுத்திக் கூறியிருப்பதேயன்றி, நமக்கிருப்பது போல் மனைவி மக்களுண்டென்று பொருளல்ல. சிவன் மனைவியாகிய பார்வதி அவர் தேகத்திலேயே இடது பக்க அரைப்பாகமாகப் பிரியாமலிருக்கிறாளென்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறுகூட இருவர் ஒருருவாயிருந்து அந்த இருவரும் சந்ததியையுண்டாக்கலாகுமோ - விஷ்ணு இலக்குமியை மார்பிலும், பிரம்மா வாணியை நாவிலும் வைத்துக்கொண்டிருக்கிறார்களென்றும், பரமசிவன் கண்ணினின்று முண்டான ஆறு அக்னிப் பொறிகளினின்று சுப்பிரமணியர் உற்பத்தியாயின ரென்றும் கூறப்பட்டிருக்கிறதெனின், இவற்றின் பொருள்கள் தத்துவார்த்தமாகக் கொள்ளத் தக்கனவென்று சொல்ப அறிவாளியும் எளிதில் உணரலாமன்றோ! இதையறியாது திரிமூர்த்திகள் நம்போல் மனைவி மக்களையுடையவர்களென்றும் அதனால் இந்துக்கள் வணங்குவது தெய்வமல்ல வென்றும் கருதுவோரை அறிவிலிகளென்றே மதிக்க வேண்டும்.

 

மேல்கண்டவற்றின் தத்துவார்த்த விவரங்களனைத்தும் நமது நூல்களிலிருக்கின்றன. ஈண்டு அவற்றைப்பற்றி விரிக்கப்புகின் சஞ்சிகையில் இடம் போதாதென வஞ்சி விடுத்தாம். ஆயினும் நாமரூபமற்ற கடவுளுக்கு இவ்வாறெல்லாம் நாமரூபக் கிரியைகள் கற்பித்து உருவகப்படுத்தி விவகரிப்பானேன் என்று கேள்வியுண்டாகலாம். இத்தகைய ஏற்பாடுகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற சோபானக் கிராமங்களும் இருப்பதால் தான் ஹிந்து மதம் எத்தகைய அதிகாரிகளுக்கும் மோக்ஷமார்க்கத்தைக் காட்டும் பெருமை வாய்ந்ததாகவும், உலகில் இப்போதுள்ளவையும் இனியுண்டாகக் கூடியவையுமான எல்லாம் தங்களுக்கும் அஸ்திவாரமாகியும், தாயகமாகவும் இருக்கும் மகிமை வாய்ந்ததாகவும் விளங்குகிறது.

 

இவ்வாறு உருவகப்படுத்தி யிருப்பதால் தான் சரியை, கிரியைகளாகிய மார்க்கங்களை யனுஷ்டிப்பதற்கு அனுகூலமாகவிருக்கிறது. அம்மார்க்கங்களோ மோக்ஷமென்னும் மேல் மாடிக்கு ஏறிச்செல்லும் மார்க்கமாகிய ஏணியின் படிகள் போன்றுள்ளன.

 

''விரும்புஞ் சரியை முதன் மெய்ஞ்ஞான மொருநான்கு

மரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே''

 

என்று நமது தாயுமானவர் அருளிய வாற்றால் இவை மோக்ஷம்பெறுதற்கு இன்றியமையாதன வென்பது நன்கு விளங்கும்.

 

ஒரு பொருளை யொருவன் பெறவேண்டுமாயின் முதலாவது அதன்மேல் அன்பு உண்டாக வேண்டும். அன்பும் ஆவலும் உண்டானாலன்றி அப்பொருள் கிட்டாது. இப்போது மோக்ஷமென்பது கடவுளை யடைவதேயன்றி வேறில்லை. கடவுள் மேல் வைக்கும் அன்பிற்கே பக்தியென்று பெயர். பக்தியொன்றினால் மட்டுமே மோக்ஷமடையலாமோ வெனின் அடையலாம். அவ்வாறடைந்த மகான்கள் பலருளர். அதற்கு முதற்றரமான திருட்டாந்தம் கண்ணப்பரேயாகும். பக்தியெனின் சாமானிய பக்தி போதாது. அனன்னிய பக்தி வேண்டும். அது யாவர்க்கும் கிடைத்தற் கெளிதல்ல; அதனானே முதலாவது பக்தியைக் கைக்கொண்டு, பிறகு அவ்வழி மனவொடுக்கமடைந்து தன்னை யறியவேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. இது நிற்க,

 

இப்போது மனம் ஒன்றின் மேல் பிரியம் வைக்கவேண்டுமா யின், சாதாரணமாக எத்தகைய பொருளின் மேல் அது இச்சைவை க்கும் சுபாவமுடையதாக விருக்கிறதென்று கவனிப்போம். நாம ரூபமான பொருளின் மேல் தான் அதற்கு இச்சைசெல்வது வழக்கம். ஒரு உருவமும் இல்லாத விடத்தில் மனம் எல்லோருக்குமே பற்றது. மனிதரில் மந்ததரம் மந்தம் என்ற இருதரத்தோரே பெரும்பாலோர் தீவிரமுடையோரே அரிது. அதிலும் தீவிரதரமுடையோர் மிக்க அரிது. அவ்வாறிருக்க அரூபியான ஆண்டவன் மேல் யாவர்க்கும் பக்தி யெவ்வா றுண்டாகும்? ஆதலின் நாமரூப கற்பனையுடைய திரிமூர்த்தி சொரூபங்களில் ஒன்றின் மேல் பக்திவைக்க வேண்டு மென்றே அவ்வாறு ஏற்படுத்தப்பட்டது. ஆன்றோர் உபதேசித்திருப்பதும் அதுவே.

 

"உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந் தவிந் நிலைமை
      யுணர்ந்துணர்ந் துணரினு மிறைநிலை யுணர்வரி துயிர்கா
      ளுணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னென்னு மிவரை
      யுணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே.''

 

எனவும்,

 

'ஒன்றெனப் பலவென வறிவரும் வடிவினு ணின்ற
      நன்றெழி னாரண னான்முக னரனென்னு மிவரை
     ஒன்ற நும் மனத்துவைத் துன்னினும் மிரு பசை யறுத்து
     நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே''

 

என்றும், அருளப்பட்டிருப்பது காண்க. ஆகையால் மூவரில் ஒருபேதமூமில்லை யென்றுணர்ந்து தனக்குப் பிரியமான தொன்றை யுபாசிக்க வேண்டும். மற்றொன்றைத் தூஷிப்பவன் தன் உபாசனையின் பலனையிழந்து தூஷித்தபாபத்தையே பெறுவான். ஏனெனின் மூன்றும் ஒன்றேயா தலின். திருட்டாந்தத்தில் கலக்டரைத் தூஷித்தவன் டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்டிரேட்டுக்கு மட்டும் நண்பனாவனோ - இல்லை. ஜான்ஸனுக்கும் அவன் விரோதியே.

 

அஞ்ஞானத்தில் மூழ்கித் தன்னைச் சீவனாகவும், நாமரூப உலகமும் அதிலுள்ள போகபாக்கியங்களும் உண்மையெனவும் எண்ணி அவற்றில் ஆவல் கொண்டு அனுபவித்து உழன்று கொண்டிருப்பவன் கடவுளை உருவமாகப் பாவித்தால் தான் அதனிடம் பக்திகொள்வான். எங்கணும் நிறைந்து எல்லாம் தன் உருவமாகத் தானே யாவுமாக யாவற்றிலும் உள்ளும் புறம்பும் நிறைந்து நிற்கும் அருட்கடலாகிய பரம்பொருளை, இத்தகைய ஜீவன் பக்திக்காக ஒரு உருவமாகப் பாவிப்பதால் பாபம் என்று கருவது அவனுடைய உண்மைக் குணத்தை யறியாத்தன்மையே. ஆண்டவன் சர்வ வல்லமை யுடையவராதலின் மனிதர் அவரை எவ்வாறு பாவித்து உபாசிக்கிறாரோ அவ்வாறே அவர்களுக்குத் தரிசனமளிக்கிறா ரென்பதுவும் அனுபவம்.

 

கடவுளோ எதிலும் விருப்பு வெறுப்பற்றவர். அவரிடம் நமது பக்தியை யெப்படி வெளியிடுவது? நாமரூபமுடைய மனிதனிடம் நம் அன்பைக் காட்டப் பலவழிகளால் அவனை யுபசரிக்கிறோம். அதுபோல் கடவுளை யொரு உருவமாகப் பாவித்தாலன்றி நம் பக்தியை வெளியிட முடியாது. கடவுளுக்கு நம்மா லாகவேண்டிய தொன்றுமில்லை யாதலின் அவர் நம் அன்பை மட்டுமே ஏற்றுக் கொள்கிறாரன்றிச் செய்கையையல்ல. கடவுளுக்கு எச்சில் மாமிசம் நிவேதித்த கண்ணப்ப நாயனார், கற்களால் அவரையர்ச்சித்த சாக்கி யர் ஆகிய இவர்கள் செய்தைகளே இதற்குப் போதுமான அத்தாட் சியாகும்; விரிக்கிற் பெருகும்.

 

நாமரூபப் பிரபஞ்சத்திலுள்ள பொருள்கள் மேல் இச்சைவை த்து அனுபவித்துக் கொண்டிருந்தும், இரண்டொரு சாத்திரங்களை மேல்போக்காகப் பார்த்துவிட்டு "உலகம் பொய்; யாவும் பொய்; நாமே பிரமம். யாவும் பிரம்மமே" என்று கூறிவிட்டு அதனால் கோயி லுக்குப் போவதும் அனாவசியம் என்றும் கூறுவது சுத்த மூடத் தனம். அதுவே அவனை மோட்சத்திற்கு எத்தனிக்காது தடுத்து விடும். நாம் பாசத்தில் உழலுமட்டும் பாசம் மெய்யே, யாவும் மெய் யேதான். தரையில் நிற்கவே தள்ளாடும்போது, வானத்தில் பறப் பதைப்பற்றிப் பேசிக்கொண்டால் பயனென்ன? யாவும் பொய் என்று கண்டவனுக் கடையாளம் அவற்றில் பற்றில்லாது நீங்கிவிட வேண்டும். அவனுக்கு யாவும் பொய்தான். ஏனெனில், அவன் தன்னையறிந்து யாவும் பொய் யென்றனுபவமாகக் காண்கிறான். அதில் சிக்கியிருக்கு மட்டும், அந்த அஞ்ஞான தசையில் அவற்றை மெய்யாகவே நம்பும் மட்டும் மெய்யே. அதைவிட்டு யாவும் பொய்யென்று வாயால் மட்டும் கூறுகிறவன் அவற்றை யொழிக்கவே முடியாது. அதனாற்றான் தாயுமானவர்'' ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை யுண்டுபண்ணு ஞானமாகும்...'' என்றனர்.

 

இவற்றை யின்னும் விரித்துக்கூற ஈண்டு இடமில்லை. இவ்வளவிலேயே இது அளவு மீறிவிட்ட தென்றஞ்சுகிறோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் இவற்றைப்பற்றி விரிவாகக் கூறுவாம். இதுவரையில் திரிமூர்த்திகளில் பேதம் பாராட்டலாகா தென்றும், அவற்றில் ஒன்றையும் தூஷிக்கலாகா தென்றும் உணர்வதோடு, நாம் மூன்று தெய்வங்களை வணங்குவதாகவும், அத்தெய்வங்கட்கு மனைவி மக்கள் இருப்பதாகவும் கூறுவோரது வீண்புரளிக்கு மயங்காமல், அவசியமாயின் மேற்கண்ட உண்மையாகிய கதாயுதத்தால் அவர்கள் வீண்கூற்றாகிய மண்ணாங்கட்டிகளை நியாயமாகிய காற்றில் பறக்கவிடவேண்டு மென்று நமது நண்பர்களை வேண்டிக் கொள்கிறோம். மூவுருவும் ஒருருவாய் எங்கு நிறைந்த அவ்வருட்பெருஞ் சோதியே யருள் புரியப் பிரார்த்திக்கிறோம்.


ஓம் தத் சத்

 

ஆனந்த போதினி – 1920 ௵ - டிசம்பர் ௴

 

   

 

No comments:

Post a Comment