Wednesday, September 2, 2020

 

திரிகரண சுத்தி

 

 உண்பதும், உறங்குவதும், இன்ப நுகர்ச்சியும் எல்லா உயிர்கட்கும் பொது. ஆனால் விலங்கு வாழ்க்கை வேறு, மக்கள் வாழ்க்கை வேறு. விலங்கினங்கட்கு நன்மை, தீமை, ஒழுக்கம், இரக்கம், மானம், ஈனம் முதலியவை கிடையா. மக்கட்கு இவை உண்டு: விலங்குகட்கு உண்பதும், உறங்குவதும் இன்பநுகர்ச்சியுந்தான் லட்சியம். மக்கட்கு இவையே தனி லட்சியம் அல்ல. இவையே - உலக போகமே லட்சியமானால் விலங்கு கட்கும் மக்கட்கும் ஒரு சிறிதும் வேற்றுமை இல்லை. மனிதன் தனக்கு இயற்கையாக அமைந்துள்ள பகுத்தறிவின் சிறப்பால் மாட்சி மிக்கவாழ்க்கையை நடத்தும் நிலைமையில் இருக்கிறான். அன்பு, அருள், ஒழுக்கம், பிறர் நலம் பேணல் முதலிய குணங்களே மனிதத் தன்மையின் உயிர்நாடி.

 

உலகம் இன்பமும் துன்பமும் கலந்தது. ஒரு மனிதன் ஆயுள் முழுதும் இன்பமோ அல்லது ஆயுள் முழுதும் துன்பமோ அநுபவிப்பதில்லை இன்பத்தின் முடிவில் துன்பம், துன்பத்தின் முடிவில் இன்பம் - - இது தான் வையத்து இயற்கை. ஆனால் நமது முன்னோர்கள் உலக போகத்தை இன்பமாகக் கருதவில்லை. உலகம் துன்ப மயமானது, இதனின்றும் விடுதலை பெற்று நிலையான வீட்டின்பத்தை அடைய வேண்டும் என்ற தத்துவத்தையே பிரதானமாக வைத்து வற்புறுத்தி யிருக்கின்றனர். சமய சாஸ்திரங்கள் எல்லாம் இதே கொள்கையைத் தான் முறையிடுகின்றன. மனித வாழ்வின் உண்மை நோக்கம் வீட்டின்பம் பெற முயலுதல் என்ற எண்ணம் நமது நாட்டு மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்திருப்பது போல் வேறு நாட்டு மக்களிடம் காண முடியாது. ஆன்மார்த்த விஷயத்தில் நமது நாடே உலகத்தில் முதன்மை பெற்று விளங்குகிறது. பிற நாடுகள் எல்லாம் உலகியல் விவகாரங்களில் முதன்மை பெற்று விளங்குகின்றன.

 

நமது நாட்டு நாகரிகம் மிகப் பழமை வாய்ந்தது. பன்னெடுநூற்றாண்டுகளாக அறிவிலும் அநுபவத்திலும் சிறந்த நமது முன்னோர் உலகப் போக்கின் உண்மையை உணர்ந்து இம்மையின் இழிவும் மறுமையின் சிறப்புந் தோன்றத் தீர்க்க விசாரணை செய்து சாஸ்திரங்கள் வகுத்திருக்கின்றனர். மனிதனிடத்துள்ள மிருகத்தன்மையைக் கொன்று, அவனிடத்தில் தெய்வத் தன்மையை நிலைநாட்டுவதே நமது தத்துவ சாஸ்திரங்களின் நோக்கமாகும். பிரமச்சரியம் முதலிய ஆச்சிரமப் பகுப்பும், சரியை, கிரியை, யோகம், ஞானம் முதலிய அநுஷ்டான முறைகளும் மனிதனிடம் தெய்வத் தன்மையைப் படிப்படியாக நிலைநாட்ட எழுந்தனவே. விலங்குகட்கு விதிவிலக்கு இல்லை. மனிதன் விதிவிலக்குகட்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டியவன். அங்ஙனமின்றி மனம் போன போக்கெல்லாம் போகத் தலைப்பட்டால் மனித சமூக உயர்வு தலை கீழ்ப்பாடமாகிச் சிதைவுறும். மனிதனிடம் - மனித சமூகத்தினிடம் தெய்வத் தன்மை வளர்ச்சி பெற்று விளங்க வேண்டுமானால் யதேச்சையாக - மனம் போனபடி நடவாமல் மனதை அடக்கி ஆளும் உணர்ச்சி வளர்ச்சி பெற வேண்டும். மனதை அடக்குதல் சாமானியமான காரியம் அல்ல. " சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது'' என்ற பெரியாரின் திருவாக்கு அனுபவ அமுதவாக்கன்றோ? ஒருவனுக்குச் சிந்தையை அடக்குந் திறம் உண்மையில் சித்தித்து விடுமானால் அவனுக்கு நிகராக இவ்வுலகில் யாரையும் கூற முடியாது. அல்லும் பகலும் உயிர்களைப் பிடுங்கித் தின்னும் தொல்லைகள் - கவலைகள் அப் பெருந்தகையை ஒன்றுஞ்செய்யா.

 

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளும் தத்தம் தொழில்களைச் செய்வதற்கு மனமே காரணமாயிருக்கின்றது. மனம் கர்த்தாவாக நின்று பிரேரேபிக்க மெய் ஸ்பரிசத்தையும், வாய் சுவையையும், கண் பார்வையையும், மூக்கு நாற்றத்தையும், செவி சப்தத்தையும் கிரகிக்கின்றன. மனம் பொறிகளோடு சம்பந்தப்படாவிடில் அவற்றிற்கு இயக்கமே இல்லாமல் போய்விடும். உலகத்தில் ஒவ்வொரு உயிரும் இன்பத்தையே விரும்புகின்றது. இன்பமாவது ஐம்புலன் நுகர்ச்சி. மெய்க்கு இன்பம் இனிய ஸ்பரிசம், வாய்க்கு இன்பம் இனிய உணவு முதலியன. கண்ணுக்கு இன்பம் இனிய காட்சிகள். மூக்குக்கு இன்பம் நறுமணம், செவிக்கு இன்பம் இனிய ஓசை. இவற்றைத் தேடி அநுபவிப்பதே இவ்வுலகில் இன்ப வாழ்க்கையின் லட்சணமாகக் கருதப்படுகிறது. இவற்றைத் தேடி அனுபவிக்கச் செய்யப்படும் முயற்சிகளில் தான் உலகியல் விவகாரங்கள் எல்லாம் அடங்கி யிருக்கின்றன.

 

மனம் இன்ப நுகர்ச்சியில் ஆசை வைக்கிறது. இந்த ஆசைக்கு ஓர் அளவு இல்லை - எல்லை இல்லை. பேராசை எல்லாருக்கும் சகஜகுணமாய் அமைந்து விட்டது. இந்தப் பேராசைப் பேய் வாழ்க்கையில் அமைதியை - சாந்தத்தைக் குலைத்து விடுகிறது. பொய், கொலை, களவு, போர், லோபம், கடின சித்தம் முதலியன இப்பேராசையின் பிள்ளைகள் என்றே சொல்லலாம். இந்தத் தீய குணங்கள் நிறைந்துள்ள மக்கள் வாழ்க்கை மாக்கள் வாழ்க்கையே என்பது பிரத்தியட்சம். இதனாலேயே நம் நாட்டுப் பேரறிஞர் - உலகியல் ரகசியம் உணர்ந்த பெரியார் உபதேசங்களின் மூலமாகவும், சாஸ்திரங்களின் மூலமாகவும் மன வொடுக்கம் - புலனடக்கம் - துறவின் சிறப்பைப் பற்றியே விசேஷமாக வற்புறுத்திச் சென்றனர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழுதல், பலனைக் கருதாமல் காரியஞ் செய்தல் முதலிய உயர்குணங்களே மானிட தர்மத்தின் முக்கிய நோக்கமாக வைத்தனர்.

 

சுயநலமும், பேராசையும் இல்லாத ஒருவனுக்குப் பிறர் நலம்பேணும் தன்மை தானாக அமைந்து விடுகிறது. அவனுக்கு உலகில் எதிரிகளும் துன்பங்களும் அநேகமாக இல்லை என்றே கூறலாம். உள்ளம் தூய்மையுடையதா யிருப்பதால் அவனிடம் சொல்லொன்று செயலொன்று எக்காலத்திலும் இல்லை. எனவே எல்லோரும் அவனைப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்வர். உள்ளத்தில், பேச்சில், செயலில் தூய்மையுடையாரே திருவருட் பாத்திரர் ஆவார்என்ற உண்மைதான் நம்முடைய சாஸ்திரங்களின் முடிவான சித்தாந்தமாகும். இங்ஙனம் மனம், வாக்கு, காயம் என்ற மூன்று காணங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுவதே திரிகரணசுத்தி என்று உலகம் புகழ்ந்து பாராட்டுகிறது.

 

நேயர்களே! தற்கால உலகப் போக்கைச் சற்றே உற்று நோக்குங்கள். ஆன்மார்த்த உணர்ச்சியைப் பெரும்பாலும் அலட்சியம் செய்து விட்டு நிலையற்ற - பலவிதமான துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் காரணமான - மிருக உணர்ச்சியைக் குறியாகக் கொண்டு நிற்பதே இக்கால இயற்கையாக இருக்கிறது. அன்பும், அருளும், தூய்மையும் நிறைந்து தெய்வத்தன்மை தாண்டவமாடிய இடத்தில் சுயநலமும், சூழ்ச்சியும் பலாத்காரமுமே சூழ்ந்து விளையாடுகின்றன. பரஸ்பர நம்பிக்கையும் சகோதர உணர்ச்சியும் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போகின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் மக்கள் சமூகத்தில் திரிகரண சுத்தியும், இதை மக்கள் உள்ளங்களில் ஆழமாகப்பதிய வைக்கும் போதனைகளும் இல்லாமையே யாகும். ஆன்மபோதனைக்குப் பேர் போன நமது நாட்டிலுங்கூட இத்தகைய நிலைமை ஏற்பட்டு விட்டது வருந்தத்தக்க விஷய மன்றோ?

 

மக்கள் உள்ளங்களில் நிறைந்துள்ள தீமைகளை – அழுக்குகளை மாற்றித் தூய்மை செய்து தெய்வத்தன்மையை நிலை நாட்டுவது மதம். உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. அவற்றுள் இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம், பெளத்தமதம் முதலியவைகளே தற்காலம் உலகத்தில் பெரும்பான்மை மக்களால் அநுஷ்டிக்கப்படுகின்றன. இந்து மதத்தின் ஒரு பிரிவாகிய -இந்தியாவில் பிறந்த பெளத்த மதமானது, அது பிறந்த இடத்தில் பெருமை குன்றி சைனா, ஜப்பான், சிலோன், பர்மா முதலிய தேசங்களில் தான் அநுஷ்டானத்தில் இருந்து வருகிறது. இப்போது இந்துமதம் என்றால் சைவம், வைணவம், அத்வைதம் ஆகிய மூன்று மதங்களையே குறிப்பதாகப் பெரும்பாலோர் கருதிக் கொண்டிருக்கின்றனர். இது விவகாரத்துக் குரிய விஷயம். இதைப்பற்றி இப்போது இங்கே ஆராய்வதாக நாம் உத்தேசிக்கவில்லை.

 

சைவம், வைணவம், அத்வைதம் ஆகிய மூன்று மதங்கள் தான் தற்போது இந்துக்களிடையே பெரும்பாலும் நடை முறையில் இருந்து வருகின்றன. இந்த மூன்று மதங்களும் ஆசார அநுஷ்டானங்களில் ஒன்றற்கொன்று மாறுபட்டிருந்தாலும், அநேக அமிசங்களில் அடிப்படையில் பொதுவான தரும் லட்சியங்களையே கொண்டிருக்கின்றன என்பதில் யாருக்கும் ஐயமில்லை. இந்த மூன்று மதங்களுக்கும் பிறப்பிடம் - வேதங்கள் ஒன்றே. மக்கள் உள்ளங்களில் திரிகரண சுத்தியை உண்டாக்குவதில் இந்த மூன்றுமதங்களும் ஒருமுகமான நோக்கங்கொண் டிருப்பதை யாரேமறுப்பார்?

 

இந்த மூன்று மதங்களின் தத்துவங்களும் அநாதி என்று சொல்லப்பட்டாலும் இடைக்காலத்தில் அவதரித்து இந்தத் தத்துவங்களின் உண்மைகளை வெளிப்படுத்திய பெரியோர்களின் பெயரால் இம்மதங்கள் வழங்கப்படுகின்றன. சைவத்துக்கு ஸ்ரீ நீலகண்டரும், வைணவத்துக்கு ஸ்ரீராமாநுஜரும், அத்வைதத்துக்கு ஸ்ரீ சங்கரரும் ஆசாரிய புருஷராவர். முற்காலத்தில் இம் மூவருடைய கொள்கைகளையும் உபதேசங்களையும் நாட்டில் பிரசாரஞ் செய்து மக்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி, அவர்கட்கு ஆன்ம ஞானம் உண்டாக்குவதற்காக ஆங்காங்கு மடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த மடங்கட்கு அரசர்களாலும், பிரபுக்களாலும், பொது மக்களாலும் ஏராளமான நிலங்களும் பொருள்களும் மானியமாகவும் காணிக்கை யாகவும் கொடுக்கப்பட்டன. இந்த மடங்களின் செல்வாக்கினாலேயே பெளத்தமதத்தின் வேகம் அடங்கி விட்டது என்று சரித்திரங் கூறுகின்றது.

 

முற்காலத்தில் நமது சைவ, வைணவ, அத்வைத மடாதிபதிகள் கல்வி, அறிவு, அருள், ஒழுக்கங்களில் தலைசிறந்தவராகி, அவ்வப் போது ஒவ்வொரு நகரந்தோறும், கிராமந்தோறும் சென்று சமய தத்துவங்களையும், ஆன்ம ஞானத்தின் சிறப்பையும் உபதேசித்து, மக்கள் திரிகரண சுத்தியில் பற்றுள்ளங் கொண்டு விளங்குமாறு செய்து வந்தனர். நமது நாட்டில் சமய ஞானம் சிறந்திருப்பதற்குக் காரணம் இத்தகைய பிரசாரமேயாகும். இப்பொழுதும் இந்தமடங்களுக்கு லட்சக் கணக்கான வருவாய் வந்து கொண்டுதான் இருக்கின்றது. வந்தும் பயன் என்ன?

 

நமது முன்னோர்கள் எந்த நோக்கத்தோடு இந்த மடங்களுக்கு இவ்வளவு ஏராளமான பொருள் வருவாய் உண்டாகும்படி ஏற்படுத்தினார்களோ, அந்த நோக்கம், இப்போது அணுவளவும் காரியத்தில் இல்லாமல் இருக்கின்ற விஷயத்தை வருத்தத்தோடு குறிப்பிட வேண்டியிருக்கின்றது. பொதுவாக இக்காலத்திய பெரும்பான்மை மடாதிபதிகளிடம் திரிகரணசுத்தி இருப்பதாகக் கருதக்கூடவில்லை. எந்த மடத்தை நோக்கினாலும் வார்சு உரிமைப் போராட்டம், அது காரணமான கொலைகள், வருஷ முழுவதும் கோர்ட்டு விவகாரங்கள், தங்கள் தங்கள் சுற்றத்தாருக்கு ஏராளமான பொருள் கொள்ளை கொடுக்கின்றார்கள் பாடாதிபதிகள் என்ற புகார், கவர்னர் முதலிய சர்க்கார் உத்தியோகஸ்தருக்கு விருந்துகள், வக்கீல்களுக்குக் கொள்ளை, வியபிசாரம், ஆடம்பரம் முதலிய வரம்பு மீறிய செயல்களும், லௌகிக விவகாரங்களுமே மலிந்து கிடக்கக் காணலாம். மத போதனைப் பிரசாரத்துக்காக ஏற்பட்டவை மடங்கள் என்ற எண்ணமே அடியோடு மாறி மடாதிபதிகளின் போக போக்கியத்துக் கென்றே ஏற்பட்டவை மடங்கள் என்ற எண்ணமே எல்லாரும் மனதில் கொள்ளும் படியான நிலைமையில் நம் நாட்டு மடங்கள் நிலவுகின்றன. மதப் பிரசாரத்துக்கு என்று ஏற்பட்ட மடங்களின் கதியே இப்படியானால் சாதாரண மக்கள் உள்ளங்களில் திரிகரண சுத்தியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்று சிந்திக்குமாறு வாசகர்களை வேண்டுகின்றோம்.

 

நம்முடைய மத தத்துவங்களின் உண்மைகளைச் சிரத்தையோடு வற்புறுத்துவோர் இன்மையால் மக்கள் வாழ்க்கை சீர்குலைந்து பலவித இடுக்கண்களுக்கு உட்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. பொருளற்ற மூடப் பழக்க வழக்கங்கள் மலிந்து அவையேதான் மதம் என்று சாதாரண ஜனங்கள் நினைத்துக் கொண்டு அல்லற்படுகின்றனர். இதனால் சாதி சமய வேற்றுமைப் பூசல்களும் நாட்டில் ஏராளமாக மலிந்து விட்டன. அந்நிய நாட்டினர் தங்கள்தங்கள் நாடுகளிலிருந்து பெரும் பொருளைத் திரட்டிக் கொண்டுவந்து ஒன்று மறியாத பாமரமக்களை ஏமாற்றித் தங்கள் மதங்களில் ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கானவர்களைச் சேர்த்து வருவதும் நம்மடாதிபதிகளின் கண்களைத் திறந்தபாடில்லை. சமூகச் சீர்திருத்தம், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் என்ற பெயரால் ஒரு சிலர் பிறமதத்தைத் தழுவும்படி பாமர மக்களிடையே தீவிர பிரசாரம் புரிந்து வருகின்றனர். அதன் பலனாகச் சமீப காலத்தில் நமது தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்கான மக்கள் முஸ்லிம் மதத்தில் சேர்ந்து விட்டதாகவும் பத்திரிகைகளின் மூலம் தெரிந்திருக்கின்றோம். இவற்றை யெல்லாம் கவனித்துத் தக்கது செய்தல் இந்த மடாதிபதிகளின் கடமை அல்லவா என்று வாசகர்களை ஆலோசித்துப் பார்க்குமாறு வேண்டுகின்றோம். தங்கள் போக போக்கியங்களிலேயே கண்ணாக இருக்கும் இவர்கட்கு இதைப்பற்றிய கவலை எங்கிருந்து தோன்றும்?

 

ஆண்டுதோறும் இந்த மடங்களுக்கு வரும் பல லட்சக் கணக்கான வருவாய்களுக்கு வேலை தான் என்ன? எத்தனை மதப் பயிற்சிக் கழகங்கள், எத்தனை தமிழ்க் கலாசாலைகள் நிறுவக்கூடாது? உண்மையான மதக்கல்வியும் தமிழ்க் கல்வியும் இன்மையாலன்றோ நம் தமிழ்மக்கள் இன்று பிறர் எள்ளி நகையாடத்தக்கஈன ஸ்திதியில் வாழ்ந்து வருகின்றனர்? இந்தக் கேவல நிலைமை என்று ஒழியுமோ தெரியவில்லை.

நேயர்களே! மடாதிபதிகளின் சொத்து, பொது மக்கள் சொத்து. ஆதலால் ஒவ்வொருவரும் இவ்விஷயத்தில் சிந்தை செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். பொது மக்கள் இவ்வுண்மையை உணர்ந்து கிளர்ச்சி செய்தால் வெகு எளிதில் மடாதிபதிகளைச் சீர்திருத்தி விடலாம். மக்கள் உள்ளங்களில் திரிகரண சுத்தியை உண்டாக்கும் படியான மதக் கல்வியையும் தமிழ் மொழியையும் - நல்ல பயன்தரத்தக்க முறையில் பரவச் செய்யலாம். ஒவ்வொருவரும் திரிகாண சுத்தியுடன் உழைக்க முற்பட்டால் திருவருள் நம் பக்கம் நின்று துணை செய்யும் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. விழிமின் எழுமின்!

 

ஆனந்த போதினி – 1929 ௵ - டிசம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment