Friday, September 4, 2020

 பண்டைய வீர நாரீமணிகள்

 

'சர்வம் சக்தி மயம் ஜகத்”- என்பது நமது முன்னோர் கண்ட உண்மை மொழி. சக்தி யின்றிச் சிவம் அருள் புரிதல் அரிது; திருமகளின்றி நாராயணனால் அருள் பொழிய இயலாது; கலைமகளின்றி நான் முகனால் வேதம் ஓத இயலாது. ஆதலின், சிவன் ஆதலின், சிவன் தனது உடலில் ஒரு பாதியையும், மாயவன் தனது திருமார்பையும், நான்முகன் தனது நாவையும் தத்தமது ஆரூயிர்த் தேவியர்க்கு உறைவிடமாகச் செய்து உ உவப்பாராயினர். பொருட் செல்வத்தை விரும்புவோர் மலர்மகளைப் போற்றுகின்றனர்; கல்விச் செல்வத்தை விழைவோர் கலைமகளை ஏத்துகின்றனர்; சித்தியை வேண்டுவோர் சக்தியை வழிபடுகின்றனர்; வீரத்திற் சிறந்தோர் போர்த் தலைவியாம் காளியை இறைஞ்சுகின்றனர். ஆதலின், வேண்டுவார் வேண்டுவனவற்றை அளித்தருளும் விமலைகள் பெண் தெய்வங்களே! நமது முன்னோர் இப்பரந்த உலகை பூமிதேவி' யாகவே போற்றினர்! மக்கள் தோற்றத்திற்கே மங்கைய ரன்றோ காரணர்! இந் நிலஉலகில் நிகழ்ந்த பல பெரும்போர்களும் பெண்கள் பொருட்டு விளைந்தவையே! பலதிறப்பட்ட வீரர்களை ஈன்றளித்து, உலகின் இடுக்கண்களை அவ்வப்போது நீக்குவோரும் பெண்களே!

 

பண்டைக் காலத்திலே, ஏனைய அனைவரும் நாணித் தலை குனியுமாறு நமது பாரத தேவி, பூசுவன பூசிப் புனைவன் புனைந்து தேசுபெறச் சீரிய கலை அணிந்து செங்கோல் தாங்கி, வீரமும் அருளும் பொங்கித் ததும்பிப் பொலியும் புன்னகை முகத்தினளாய் - தனி முடி புனைந்து அரியணை அமர்ந்து அரசு செலுத்திய நாட்களிலே-நமது பரத கண்டத்துப் பெண்மணிகள் பலரும் ஞானத்திற்கு ஊற்றுக்களாய் - வீரத்திற்குப் பிறப்பிடங்களாய் - அருளுக்குச் சுரப்பிடங்களாய் - அன்புக்குக் கொழு கொம்புகளாய் – கற்புக்குப் புகலிடங்களாய் வாழ்ந்து வந்தனர். வேத காலத்திலே பற்பல வீரத் தாய்மார்கள், மாயையை வெற்றி கொண்டு ஞானமும் வைராக்கியமும் வளர்ந்தோங்கும் தபஸ்வினிகளாய், ஆன்ம ஞானக் கல்வி பயின்று உண்மை நிலை தெளிந்து ஒழுகி உய்வு பெற்றனர். இதனை வலியுறுத்தப் போதிய சான்றுகள் வடமொழி மறைகளில் பற்பல உள.

 

எத்துணை இன்னல்கள் ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ந்து விளைந்து துன்புறுத்தினும் - தாம் கொண்ட கொள்கையை - கண்ட உண்மையை - சிறிதளவும் நழுவ விடாது "இடும்பைக்கு இடும்பை படுப்பர்; இடும்பைக்கு -இடும்பை படாஅதவர்"- எனும் பொய்யா மொழியார் பொன் மொழிக்கு இணங்க உறுதியோடு பொறுத்து நின்று காப்பாற்றிக்கொண்ட காரிகைகளின் மாண்பு என்றென்றும் மறக்கற் பாலதன்று. கானகம் அடுத்துக் காந்தனை விடுத்து, ஆருயிர் மைந்தனைப் பறி கொடுத்து, பழிமொழிகள் பலவும் செவி மடுத்து, முடிவில் தனது கணவனாலேயே வெட்டப்பட நேர்ந்தபோதும் சத்திய நெறியினின்றும் சந்திரமதி தேவி சற்றேனும் பிறழ்ந்தனரோ? வல்லரக்கனால் வஞ்சிக்கப்பட்டு, தலைவனாம் தாசரதி யிடத்தினின்றும் பிரிக்கப்பட்டு, அரக்கியர் பலரால் அச்சுறுத்தப்பட்டு, அருந்துயர் உழன்றபோதும் அன்னை ஜானகியார் இராவணனது பசப்பு மொழிகளில் மயங்கினரோ? அவ்வல்லல்களினின்றும் அகன்று இராமனிடம் எய்துவதற்குத் தமது தோள்களில் இவர்ந்து வருமாறு அனுமான் வேண்டியதற்கேனும் உடன்பட்டனரோ? - "ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்ததோர் - தாரந்தானலனேனும், தயா' எனும் - ஈரந்தான் அகத்து இல்லை என்றாலும், தன் வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய்!'' - என்றன்றோ தனது
ஆர்வலனது கடனாம் வீரத்தை அறிவுறுத்தியருளினர்! என்னே அன்னையின்
வீர உணர்ச்சி இருந்தவாறு!

 

மற்றும், மாயம் வல்ல அரக்கர்களோடு தத்தமது வீரக்கணவன்மார் போராடிச் சலித்துச் சிறிதே தளர்வுற்ற காலத்து, அஞ்சாது போராடி வெற்றி விளைவித்த வீரத்தேவிகளும் சிலர் உளர். இமையவர் தலைவனாம் இந்திரனையும் அச்சுறுத்தி அல்லற்படுத்திய சம்பராசுரனோடு தசரதச் சக்கரவர்த்தி கொடுஞ்சமர் புரிந்து சற்றே தளர்வுற்ற காலத்தில், அம்மன்னனொடு சென்றிருந்த அவரது தேவியாம் கைகேசி மன உறுதி தளராது வீராவேசங்கொண்டு வேந்தனுக்குப் பேருதவி புரிந்து அரக்கனது செருக்கை அடக்கியொழித்து மடிவித்தனளன்றோ! அவ்விந்திரனை மற்றொரு முறை அச்சுறுத்தி
நல்லோரை அல்லற்படுத்தித் திரிந்த நரகாசுரனோடு பூபாரந் தீர்க்கப் புகுந்தபுயல்வண்ணனாம் கண்ணபிரான் கடும்போர் புரிந்து சிறிது அயர்வுற்ற வளவில், அவருடன் சென்றிருந்த சத்யபாமா தேவியார் சிலை எடுத்துக் கணை தொடுத்து வீறுகொண்டு போராடி அவ்வரக்கனின் உயிரை நீக்கி உலகின் துயரைப் போக்கினளன்றோ! இவ்வண்ணம் போர்த் தொழிலில் திறமைபெற்றிருந்த வீர நாரீமணிகளுள் சிலர், தேர்த்தொழிலிலும் வல்லவராக இருந்தனரென்பதற்கு, கண்ணபிரான் தங்கையாம் சுபத்திரை தன்னைக் கடிமணம் புரிந்து தேரேற்றிச் செல்லும் விஜயனோடு எதிர்த்துவந்த யாதவ சேனைகள் போராடித் தோல்வியுறுமாறு தாங்கள் இவர்ந்து செல்லும் இரத்தத்தை மிகத்திறம்படச் செலுத்திச் சென்றனள் என்பது சிறந்ததொரு சான்றாகும்.

 

'தங்களுடைய இன்னுயிரைக் கொடுத்தேனும் தமது கணவர்களுக்கு நன்மையைச் செய்வதே, மங்கைகட்கு இவ்வுலகில் அதிக உயர்வுடையதும் பெருமை தரத்தக்கதுமான செயலாகும்' - என்று மகாபாரதம் கூறுகின்றது. சகிக்கவொண்ணாத துயரம் நேர்ந்தவிடத்து ஒப்பாரி வைத்துப் புலம்ப ஒருப்படாது - மயங்கிக் கலங்கித் தயங்காது - அச்சத்தை உதறித் தள்ளி வீரஉணர்ச்சியோடு வீறு கொண்டெழுந்து அறத்தின் உண்மையை விளக்கிக்காட்டி அநீதியின் ஆட்டத்தை அடக்குவது, எவ்வாற்றானும் நற்குணப் பெண்டிர் மாண் புக்கு மாறுபட்ட தாகாது. பாண்டவர் ஐவர் அகங்கட்கும் ஒரு தனிக் கண்மணியாய் விளங்கிய பாஞ்சாலி, துரியோதனனது அக்கிரமச்செயல்களை அடக்க அஞ்சி பதுமைகளே போல் வீற்றிருந்த மன்னர் முன்னிலையிலே, மாதவன் பால் சுமையைப் போட்டு மானத்தைக் காத்துக்கொண்டு கூறிய சூளுரைகளை நோக்குங்கள்: -


"அரசவையி லெனை ஏற்றி அஞ்சாமல் துகில் தீண்டி அளகம் தீண்டி
விரைசெயளி யினம்படிதார் வேந்தரெதிர் தகாதனவே விளம்புவோரைப்
பொருசமரில் முடி துணித்துப் புலால் நாறும் வெங்குருதி பொழியவெற்றி
முரசறையும் பொழுதல்லால் விரித்த குழல் இனி எடுத்து முடியேன்


என்றாள்.

 

பத்தினிக் கடவுள் என்று போற்றப்படும் கண்ணகி அம்மையார், தமது ஆருயிர்க் கணவனாம் கோவலன் பொற்கொல்லனது சூழ்ச்சியால் வெட்டுண்டு இறர் தான் என்று கேள்வியுற்றதும் அஞ்சி வாளாகிடந்தனரோ? அழுது கலங்கி நின்றனரோ? பின், என் செய்தார்? வீர உணர்வோடு வீறுகொண்டெழுந்து வேந்தனிடம் போந்து, தமது கணவனின் கரவின்மையையும் மன்னன் இழைத்த பெரும் பிழையையும் செவ்விதில் விளக்கிக் காட்டினரன்றோ! அத்தகைய வீர நாரீமணிகளின் - கற்புக்கரசிகளின் - வழித்தோன்றிய தற்கால பாரதப் பெண்மணிகாள்! தற்கால ஜன சமூகத்தின் தாறுமாறான செயல்களைத் தெளிவுபெற விளக்கிக் காட்டி நாட்டைச் சீர்திருத்தும் நற்பணியில் பங்கெடுத்துக் கொள்வது உங்களது கடமையாயிருக்க, இன்னும் முன்னேற்ற வேட்கையே யின்றி விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வது தானா உங்களை உய்விக்கக்கூடியது? நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்ற நற்பணிகளில் ஆடவரை மட்டும் புகுத்திவிட்டு, வீரநாரீமணிகளின் வழித்தோன்றிய நீவிர் வீணே காலத்தைக் கழிப்பது அழகாமோ? சகோதரிகளே! இவ்விவேகானந்தரது அருள்மொழிகளை நோக்குங்கள்: -

 

"ஏ! இந்தியாவே! உனது பெண் தன்மையின் நோக்கம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறந்து விடாதே! உனது மணம், செல்வம், வாழ்க்கை முதலியன இந்திரிய சுகபோகத்திற்காக அல்ல என்பதை மறந்து விடாதே! நீ அன்னையினுடைய பீடத்தில் இடப்படுவதற்கு ஒரு பலியாகப் பிறந்திருக்கிறாய் என்பதை மறந்து விடாதே!''

 

பின்னும், சங்ககாலத்திலே அரும்பெரும் வீரச் செயல்கள் செய்த வீரத்தாய்மார் பலர் இருந்தன ரென்பது, புறநானூற்றுப் பாக்களால் புலனாகக் அவர்களுள், 'தன் மகன் பேரில் புறமுதுகிட்டு ஓடினன்' என்று கேள்வியுற்றந் ரைமயிர்க் கிழத்தாய் ஒருத்தி, அஃது உண்மையாயின், அவனுக்குப் பாலூட்டிய என் கொங்கைகளை அறுத்தெறிவேன்' - என்று சூளுரை கூறி வாள் பற்றிய கையுடன் போர்க்களம் சென்று தேடுங்கால், அவன்
வெட்டுண்டு மடிந்து கிடத்தலைக் கண்டு அவனைப் பெற்றெடுத்த நாளினும் பெரு
மகிழ்வுற்றாள் என்பதும்;

 


முதல் நாள், தனது கணவனையும் மறுநாள் தன் தந்தையையும் போரில் பறிகொடுத்த வீரத்தாய் ஒருத்தி, மறுநாளும் 'செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி- வேல் கைக்கொடுத்து வெளிது விரித்து டீ இப்பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி - ஒரு மகனல்லது இல்லோள் - (அவனைச்) செருமுகம் நோக்கிச் செல்கென விடுத்த' தும் ஈண்டு குறிப்பிடற்
பாலன.

 


கடந்த இரண்டொரு நூற்றாண்டுகட்கு முன்பு கூட, வடநாட்டில் பகைவனாம் அலாவு
தீன் கையிற் சிக்கிச் சிறைப்பட்ட சித்தூர் வேந்தனும் தனது காந்தனுமான பீமசிங்கை பகைவர்களிடத்தினின்றும் தந்திரமாக விடுவித்த பத்மினி என்ன! சித்தூர்க் கோட்டையைக் கைப்பற்ற முனைந்து அருஞ் சமர் புரிந்த அக்பரோடு, ஆணுணுடை அணிந்து அமர்க்கெழுந்து எதிரிகளையும் வதைத்து படைத்திறம் பெரிதும் படைத்த அச் சேனையோடு ஆருயிர் பிரியும் வரை வீர வெறிகொண்டு போராடிய கிருஷ்ணகுமாரி என்ன! பதின் மூன்று
பருவமே வாய்ந்த தன் மகன் வீரசிம்மனோடு பகைவனாம் அஸப்கானது
சேனைகளை எதிர்த்துப் போராடி, அம்பனைய கண்ணிலே அம்பொன்று தைக்கப் பெற்று அருந்துயர் உழந்தும் அகந்தளராது பகைவரது படைவலியின் மிகையால் மானபங்கம் விளையும் போல் தோன்றிய வேளையில் வீர சுவர்க்கம் ம் புகுந்த இராணி துர்க்காவதி என்ன! தமிழ்நாட்டிலே தனது குடிமக்களை தருமநெறி தவறாது மிகத் திறம்பட ஆண்டுவந்த மதுரைக்கு அரசியாம் மங்கம்மாள் என்ன! இன்னோரன்ன மங்கையர் திலகங்களின் அ ஞ சா என்னென்று எடுத்துரைப்பது? எங்ஙனம் வருணித்து எழுதுவது?

 

அத்தகைய வீரத் தாய்மார் வழித்தோன்றிய பாரதநாட்டுப் பெண் தெய்வங்களே! கேவலம் ஆடையாபரணங்களால் அலங்கரித்துக்கொண்டு திரிவதற்கும் ஆடவரது ஆர்வத்தைத் தீர்ப்பதற்குமே உங்களை ஆண்டவன் படைக்கவில்லை என்பதை உணருங்கள்! மேல்நாட்டு வீரர்கள் பலரும் இந்நாட்டு வீரர்கள் பலரும் அவரவர்களது அன்னைமாரால் தொட்டிற் பருவந்தொட்டே இனிய பாலோடு வீர உணர்ச்சியையும் சேர்த்து ஊட்டி வளர்க்கப்பட்டவர்கள் ஆவர். உங்களது உள்ளம் வீர உணர்ச்சி எனும் கடலில் திளைக்குமாயின், உங்களைத் சார்ந்த மக்களும் ஆடவரும் கோழைமை நீங்கி ஆண்டகையாளர்களாய் அஞ்சா நெஞ்சுடையர்களாய் நாட்டுநலத்திற் கேற்ற நற்பணிகளில் தலைப்பட்டு மாண்பு பெறுவது உறுதியாகும்.

 

சகோதரிகாள்! இதுகாறும் பண்டைய பாரத நாரீமணிகளின் அரும் பெரும் வீரச் செயல்களை விவரித்துரைத்தது, அவர்களைப்போல நீங்களும் ஆயுதம் தாங்கி போர்புரிந்து ஆருயிர் துறக்கவேண்டும் என்பது குறித்தன்று; நமது தற்கால நிலையிலே - அடிமை வாழ்க்கையிலே - ஆயுத பலத்தால் பயன்பெறல் அரிதே! ஆதலின், நீங்கள் மேற்கொள்ள வேண்டுவது பிறர்க்குக் கேடு மறந்தும் சூழாத - பகைவர்களிடத்திலும் அன்பே பாராட்டும் சீரிய அஹிம்ஸா நன்னெறியே ஆம். உங்களது முன்னோரின் பெருவீரத்தை நன்கு உணர்ந்து, அத்தகைய தியாக புத்தியை - அஞ்சா உறுதியை - தளரா ஊக்கத்தைப் பெற்று, நமது செந்தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்ற சீரிய செம்பணிகளில் தலைப்பட்டு உற்சாகத்துடன் உழைக்க முன் வாருங்கள்! நமது பாரத மணித் திருநாட்டு அன்னை தனது உரிமை இழந்து ஒழிந்து விரிந்த குழலும் குலைந்த மனமும் கந்தைக்கலையும் நீர் வழியும் விழிகளும் உடையளாய் பெருந் துயர்க்கடலின் கரைகாணாது வருந்திக் கிடக்க, அவளது துயரை அகற்றக்கருதி சத்தியாக்கிரகத்தில் தலைப்பட்டு ஆயிரக்கணக்
கான தேசபக்தர்கள் அருஞ் சிறைப்பட்டுள்ள இந்நாட்களிலே நீங்கள் நவீன நாகரிக மயக்கம் மிகுந்தோராய் பகட்டுடைகள லும் ந நல்லணிகளில் களிலும் கருத்தைச் செலுத்தி தாய்நாட்டின் முன்னேற்றத்தில் கவலையின்றிக் காலம் கழிப்பதும் முறைதானோ? வீரத் தாய்மாரின் வழித்தோன்றிய உங்கட்கு, இதுவும் அழகேயோ? இனியேனும் உங்களது பேருறக்கத்தை விட்டொழித்து விழித் தெழுந்து, கிராமங்கள் தோறும் தற்சமயம் இருந்து வரும் 'ஊர் வம்பளப்புச் சங்கங்களை 'மாதர் முன்னேற்பச் சங்கங்க'ளாக மாற்றியமைத்து, இராட்டையில் நூல் நூற்றல், குடும்பத்தைத் திறம்பட நடத்துவதற்கேற்ற நல்லறிவை வளர்க்கக்கூடிய சீரிய நூல்களை ஆராய்ந்து உணர்தல்', கல்வியறிவில்லாதவர்கட்குப் போதனை செய்தல், பிறரது தயவை எதிர்பார்த்து ஏங்கி நில்லாது தங்கள் பிழைப்புக்குத் தாங்களே வழிதேடிக் கொள்ளுமாறு பெண்களுக்கு ஏற்ற - கைத்தொழில்களைத் திறம்பட வளர்த்தல் - முதலிய பல திறப்பட்ட தொண்டுகளை செய்துவரக் கடவீர்களாக.

"பெருந் தடங்கட் பிறைநு தலார்க் கெலாம் --பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தது”- என்று கம்பர் கூறியதற் கிணங் 5, செல்வத்தோடு சிறந்த கல்வியும் சேரப்பெற்றிருத்தலே சீரிய மாதர்கட்கு அழகாதலின், தற்காலத் தமிழகத்துப் பெண்தெய்வங்கள் அனைவரும், இயற்கை நெறிக்கும் இறைவனது நோக்கத்திற்கும் முற்றும் முரண்பட்டுப் பெண்மையின் பெருமை உணராது ஆடவரோடு போட்டி போடும் ஆர்வத்தை மூட்டும் அபல் காட்டு நாகரிகக் கல்விப்பயிற்சிப் பித்தை விட்டொழித்து, நமது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கேற்ற தெய்விக-சுதந்தர தேசீயக் கல்விப் பயிற்சியிலேயே தளரா உற்சாகத்துடன் ஈடுபட்டு இன்புற முன் வருவார்களாக. பெண்ணுலகு நல்வழியில் திருந்தி நடப்பின், ஆணுலகு தானே திருத்திச் சிறப்பெய்துவது உறுதி. பாரததேவி அருள் புரிக.


வந்தேமாதரம்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - செப்டம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment