Friday, September 4, 2020

 

பத்திரிகையும் பிரசங்கமும் ஏன்?

 

நண்பர்களே! ஒரு கருவியைக் கொண்டு ஒரு வேலையைச் செய்து முடிப்பதெனின், அக்கருவியை யுபயோகப்படுத்தும் முறையாக உபயோகப் படுத்தினால் தான் காரிய சித்தி யுண்டாகும். தச்சனிடம் பல ஆயுதங்கள் இருக்கின்றன. அவைகளை யெல்லாம் அவன் பார்த்துப் பார்த்து சந்தோஷமடைந்து பெட்டியில் பத்திரமாக வைத்துக்கொண்டால் என்ன பயனடைவான்? அல்லது அவைகளைக் கையாளத் தொடங்கி வாச்சியால் செய்ய வேண்டியதை உளியாலும், உளியால் செய்யவேண்டியதை இரம்பத்தாலும், இவ்வாறு ஒரு கருவியை யுபயோகிக்க வேண்டிய சமயத்தில் வேறொரு கருவியை யுபயோகித்து வேலை செய்தால், அவன் தொழில் நிறைவேறுவது யாங்ஙனம்? சமயத்திற்குத் தகுதியான கருவியையறிந்து உபயோகித்தால் தான் கருதிய காரியம் சித்தியாகும்.

 

இவ்வாறே பத்திரிகைகளை வாசிப்பதாலும் பிரசங்கங்கள் கேட்பதாலுமே நாட்டிற்குப் பயனுண்டாகி விடாது. மற்ற நாடுகளனைத்தும் இவையிரண்டாலுமே உன்னத நிலையடைந்து சீரும் சிறப்பும் செல்வமும் பொருந்திப் பொலிகின்றன. நம் புண்ணிய பூமியில் இவை வேண்டிய அளவிற்கு எவ்வளவோ குறைவாக விருப்பதே பெருங்குறை. அது ஒரு பக்கமிருக்க, உள்ள வரையிலாவது இவை பயனளிக்கத்தக்க வழியில் உபயோகமாகின் றனவா வெனக் கவனிப்போம்.

 

நம் நாட்டாரில் பத்திரிகை வாசிப்போரில் பெரும்பாலார் காலப்போக்குக்காகவும் வேடிக்கை வினோத விஷயங்களை யறிவதற்காகவுமே அதை வாசிப்பதெனறு கருதுகிறார்கள். பத்திரிகைக்கும் பிரசங்கத்திற்கும் மிக்க வித்தியாசமில்லை. பிரசங்கத்தில் ஒரு மனிதன் ஒரு விஷயத்தைப் பற்றித் தன் முன் கூடியிருக்கும் சபையோர்க்கு மட்டும் போதிக்கிறான். அதையவன் கூறும்போது மட்டும் கவனத்தோடு கேட்டுக்கொள்ளலாமேயன்றி, மறந்து போய் மறுபடி கேட்கலாமென்றால் முடியாது.

 

பத்திரிகையோ, ஒரு மனிதனோ பல மனிதரோ பல விஷயங்களைப் பற்றிப் பல்லாயிரம் பேருக்குப் போதிப்பதாகும். அவற்றை யெவ்வளவு தூரத்திலிருப்போரும் ஒரு முறைக்குப் பன்முறைவாசித்து நன்றாக அறிந்து கொள்ளலாம். இவ்வாற்றால் பத்திரிகையே மிக்க பயனளிப்பதென்னலாம்.

 

ஆனால் நண்பர்களே! மேல் நாட்டார் முதலியவர்கள் பத்திரிகை வாசிப்பதற்கும் நம்மவர் வாசிப்பதற்கும் மிக்க வித்தியாசமிருக்கிறது. நம்மவரில் கொஞ்சமேனும் வாசித்தவர்களே பத்திரிகையை வாசிக்கிறார்கள். ஒரு முறை வாசித்ததே அதை யொரு புறம் எறிந்து விடுகிறார்கள். அதோடு கூடவே அதிலிருந்து தங்கள் மனதில் பதிந்த விஷயங்களையும் எறிந்து விடுகிறார்கள். வாசிக்கும் சமயத்தில் மட்டும் "ஆ! இவர் கூறுவது தான் சரி. அந்த நாட்டார் மனம் ஒருமித்து ஒற்றுமையாக நடக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் காரியம் கைகூடிற்று. நம்மவர்கள் தான் காக்கைக் கூட்டங்கள் - நெலிக்காய் மூட்டைகள் ஆயிற்றே. கிளைச் சங்கங்கள் ஏற்படுத்தி அங்கங்கே யிருக்கும் கல்வி யில்லாச் சனங்களுக் கெல்லாம் இதைப் படித்துக் காட்டுவதாம். வேலை யென்ன பின்னே? இப்படி யெழுதுகிறவன் இவனே அங்கங்கே போய்ச் சங்கங்கள் ஏற்படுத்தி யாவர்க்கும் போதிப்பது தானே....'' என்று இல்வாறு பேசுவார்கள்.

 

அந்தோ! நம்மவர் இந்த நிலைமையில் இருக்கிறவரையில் எவ்வாறு கடைத்தேறுவார்கள்? மேல் நாட்டார்களோ இப்படியில்லை. ''பத்திரிகைகள் நமது தாய் நாட்டின் க்ஷேமத்திற்காகவே நடத்தப்படுகின்றன. அவற்றில் கூறப்பட்ட விஷயங்களெல்லாம் நாம் செல்வமும் சிறப்பும் பெற்று முன்னேற்ற மடைவதற்கு அவசியமான மார்க்கங்கள். ஆகையால் அவற்றில் கூறப்படும் மார்க்கங்களை யனுசரித்து நாம் நடக்க வேண்டும். அப்போது தான் நமது சந்ததியாரேனும் க்ஷேம முறுவார்கள்'' என்பதை மேல் நாட்டார்கள் நன்கறிவார்கள்.

 

பத்திரிகையில் ஒரு புது விஷயம் கூறப்பட்டிருந்து அதன்படி யாவரும் செய்யவேண்டியது அவசியமென்று கண்டால், அவர்கள் அதைப் படித்து விட்டுப் பேசாமலிருக்கவே மாட்டார்கள். உடனே அதற்காக முயற்சியெடுத்துக் கொண்டு தங்கள் ஊரில் அதற்காகவென்று ஒரு சங்கத்தைத் தாபித்து அவ்விஷயம் நடைபெறும்படிச் செய்வார்கள். இவ்வாறு சில விடங்களில் நேர்ந்திருப்பது பத்திரிகைகளின் வாயிலாக வெளி வந்ததைப் பார்த்து மற்ற விடங்களிலும் என மன அவ்வாறே செய்வார்கள். அத் தேசத்தார் சுய நலத்தை விடப் பொது நலத்தையே முக்கியமாகக் கருதியுழைப்பார்கள். இத்தகைய காரியங்களைச் செய்யும்போது நமக்கு எதிர்க்கட்சியார் செய்வதை நாம் செய்யலாகா தென்றிருக்கமாட்டார்கள். அல்லது எதிர்க்கட்சி யார் செய்யும் இக்காரியம் பயன்படாமற் செய்ய வேண்டுமென்று கருதவே மாட்டார்கள்; தாய் நாட்டின் க்ஷேமத்திற்கு ஒரு காரியத் தைச் செய்வதென்றால், அப்போது மட்டுமாயினும் எல்லாக்கட்சிபே தங்களையும் விரோதங்களையும் மறந்து யாவரும் ஒரு மித்து வேலை செய்வார்கள்.

 

இவ்விஷயத்தில் நம்மவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என் பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்தோ! அது மிக்க மனத்துயரை யுண்டாக்குகிறது. நம்மவர்கள் பத்திரிகைகளில் அறிவாளிகள் செய்ய வேண்டுமென்று கூறுவதைக் கவனிப்பதேயில்லை. ஒரு விஷயம் கெட்டதென்று நிரூபித்து அதைச் செய்வது நமது நாட்டின் க்ஷேமத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்று கூறியிருந்தால் அதை வாசித்து விட்டுப் பலர் முன்னிலையிலும் ஆம் ஆம் என்று கூறிவிட்டு, மறு நாழிகை அதே விஷயத்தைச் செய்கிறார்கள்.

 

பெரிய நகரங்களில் மட்டும், வாசித்தவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பத்திரிகைகளை வாங்கி வாசிப்பதால் மட்டுமே நமது நாடு க்ஷேமமடைந்து விடாது.

 

1. முதலாவது பத்திரிகைகளில் கோரிக்கொள்ளப்பட்ட விஷயங்களில் நம் தாய் நாட்டிற்கு க்ஷேமம் என்று தோன்றுகிறவைகளைக் கட்டாயம் செய்யவேண்டும் மற்ற பேர்களுக்கும் அவற்றைப்பற்றி விளக்கிக்காட்டி அவர்களையும் செய்யும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்.

 

2. கல்வி யில்லாதவர்களுக்குப் பத்திரிகைகளினா லுண்டாகும் நன்மைகளைக்கூறி, பத்திரிகைகளை வாசிக்க அவர்களுக்குப் பிரிய முண்டாகும்படிச் செய்ய வேண்டும்.

அத்தொழிலே தாய் நாட்டிற்காக நாம் செய்யும் பொதுநலக் கைங்கரிய மாகுமன்றி ஒருவரோ, சிலரோ, பத்திரிகை வாங்கி நம் வரையில் வாசிப்பது ஒருபோதும் சமூகஊழியமாகாது.

 

3. மேல் நாட்டில் நடப்பது போல் நம் நாட்டிலும் ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு மூன்று பத்திரிகைகளேனும் வரவழைத்து வாசிக்க அனுகூலமாக விருக்கும்படி ஒரு வாசகசாலை ஏற்படுத்த வேண்டும். இப்போது ஏற்பாடாகிவரும் கிராமப்பஞ்சாயத்துகளால் சுலபமாக இதைச் செய்யலாம். ஆனால் முதலில் ஆங்காங்குள்ள அறிவாளிகளிற் சிலர் சிரத்தை யெடுத்துக்கொண்ட தத்தமக்கு அருகிலுள்ள கிராமவாசிகளுக்கு அதன் அவசியத்தையெடுத்துக்காட்டி அப்படிச் செய்யும்படி அவர்களைத் தூண்டவேண்டும்.

ஒருவனுக்குக் கல்வி கற்பிப்பதெனின் அவனுக்குக் கடைசி வரையில் நாம் கல்வியை யூட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல. அவனே கல்வியில் தேர்ச்சி பெறும் படியான மார்க்கத்தையவனுக்குக் காட்டி விட வேண்டியதே அவசியமானது.

அது போலவே பாமர ஜனங்கள் பத்திரிகைகளின் வாயிலாக அவசியமான விஷயங்களை யுணர்ந்து, அறிவு வளர்ச்சி பெற்று மேலோங்கி வரும் மார்க்கத்தை யவர்களுக்குப் போதித்து, அதில் அடியெடுத்து வைக்கும்படி செய்து விட்டால், பிறகு அம்முயற்சிதானே விர்த்தியடையும். ஒரு செடியை வளர்க்க நாம் பூமியைப் பண்படுத்தி விதையை நட்டு நீர் வார்த்து முளை கிளம்பும் வரை கவனித்தால் பிறகு அச்செடி தானே வளர்ந்து பூத்துக் காய்த்துப் பலனளிக்கும்.

 

4. பிரசங்கம்: - அழகிய கட்டிடத்திற்குள் வாசித்த பண்டிதர்களையும், செல்வ வந்தர்களையும், பிரபுக்களையும் வரவழைத்து அவர்கள் முன் ஒரு விஷயத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்வதால் மட்டும் தேசத்திற்கு நன்மை யுண்டாய் விடாது. ஏழைகளுக்கும், நாகரீகக்குறைவுள்ளவர்களுக்கும், கல்வி யில்லாதவர்களுக்கும், சொல்ப கல்வியுடையோர்க்கும், தாழ்ந்த அந்தஸ்திலுள்ளோர்களுக்குமே, அவர்கள் சீர்திருத்தமும், கல்வியறிவும், நாகரீகமும் அடைவதற்கு அவசியமான விஷயங்களைப்பற்றிப்போதனை செய்ய வேண்டும். அவர்கள் மேலோங்கி வரும் மார்க்கத்தையறிந்து கொண்டு அதில் பிரவேசிக்கும்படி செய்யவேண்டும்.

 

அப்போதுதான் பத்திரிகைகளாலும் பிரசங்கங்களாலும் உண்டாகக் கூடிய பயனை நாம் அடைவோம்.

 

நண்பர்களே! மேல் நாட்டாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களில் மேற்கண்டவை முக்கியமானவைகளாகும். இத்தகைய அனுகூலமான விஷயங்களை விட்டு நமக்குப் பயனற்ற வைகளும், கெடுதியையுண்டாக்கத் தக்கவைகளுமாகிய விஷயங்களில் மேல் நாட்டாரைப் பின் பற்றுவது நன்மையை யொருபோதும் பயவாது. மேல் நாட்டார் தாங்கள் யாரிடம் சகவாசம் செய்கிறார்களோ அவர்கள் எச்சாதியாராயினும் சரி, எம்மதத்தினராயினும் சரி, அவர்கள் சரித்திரங்களையும் மதாசார ஒழுக்கங்களையும் ஆராய்ச்சி செய்து அவற்றில் தங்களுக்கு அனுகூலமானவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள், அந்த விஷயத்தில் நாமும் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.  

 

எல்லாம்வல்ல கருணாநிதியாகிய சச்சிதானந்தப் பரம்பொருள் நமக்கு அருள் புரிய வேண்டுமாய்ப் பிரார்த்திப்போமாக.


                                   ஓம் தத்ஸத்.

 

No comments:

Post a Comment