Friday, September 4, 2020

பத்துப் பாட்டும் கரிகாலனும்

அமிழ்தினுமினிய தமிழ் மொழி வழங்கும் நன்னாட்டினான தென்னாட்டினர்க்குத் தழிழன்னையால் அளிக்கப்பட்ட மங்கலில் செல்வம் சங்க நூற்கலாம். இவை யாவும் இடைக்கால இருளின் வாய்ப்பட்டுச் சின்னான் ஒளியிழந் திருந்தன. தமிழ்செய் மாதவப் பயனால் பிற்காலத்துத் தோன்றிய பெரியா ரொருவர் காலக்கூற்றின் நாவை யறுத்து மாசுமூழ்கிக் படிந்து அருநூற்களாய விழுமணிகளைக் கழுவினார். இவருடைய கூரிய அறிவினாலுஞ் சீரிய உழைப்பினாலும் சங்க நூல் யாவுங் கதிரொளி பெற்றுத் தமிழணங்கை யணிபெறச் செய்தன. இந் நூற்களிலொன்று பத்துப் பாட்டாம்.

 

பத்துப் பாட்டெனுந் தொகை நூலில் கரிகாற் பெருவளத்தானைப் பற்றிக் கூறும் பாட்டுக்கள் இரண்டுள். அவை பொருநராற்றுப்படையும், பட்டினப்பாலையும் ஆம். முன்னது புறத்தின் பாலாயது; பின்னது அகத்தைத் தழுவியது. இவ் விரண்டிலுங் கரிகாலனுடைய பெருமைகளைப் பரக்கக் காணலாம்.

 

முற்காலத்துப் புலவர் பெருமக்கள் தங்களுடைய நூற்களில் பாட் இடைத்தலைவனின் கீர்த்தியையும், நாட்டுடைப் பல்வகை வளங்களையும், மக்களின் வாழ்க்கையையும், காலத்தியல்பினையும் படிப்போ ருளத்தில் பதிந்திடுமாறு சித்திரித்துக் காட்டு மியல்பினர். எனவே பண்டையரசர்கனின் வரலாற்றினையும் அரசியல், நாட்டியல் முதலியவற்றையும் அறிவதற்கேற்ற சாதனங்களா யிருப்பவை தமிழ்ப்பழ நூற்களே. மூதறிவினராகிய முடத்தாமக் கண்ணியார் தாம் பாடிய ஆற்றுப்படையில் கரிகாலனின் மாண்பினையும், வள்ளன்மையினையும், நாட்டின் சிறப்பினையும் நலம் பெறக் கூறுவார். நாட்டின் வளப்பத்தினை நயம்பெறக் கூறுதலிலும், மக்களியல் பினைமுறையொடு மொழிதலிலும், கரிகாலனின் வீரத்தைத் திறமுற உரைப்பதிலும் வல்லவர் உருத்திரங் கண்ணனார். இனி நாம் இவ்விருவர் பாடிய நூற்களினின்றுங் கரிகாலனைப் பற்றி யறியக்கூடிய விடயங்களைப் பாகுபாடு செய்து ஆராய்வோம்.


1. கரிகாலனின் தந்தை

 

தொன்மையிற் சிறந்து, சீருஞ் சிறப்பு மொருங்குட னமைந்து, தமிழ் நாட்டின் கண் மேம்பட் டிலங்கியது சோழர் குலம். இக் குலத்தில் இளஞ்சேட் சென்னியெனும் அரசன் ஒருவன் உதித்தான். இவன் போரில் வல்லவன்; வடிவி எழகன்; தேர்பல வுடையான். எனவே இவன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியென அழைக்கப்பட்டான்.

 

 

2. பிறப்பு

 

இச் சோழனுக்கு அழுந்தூர்வேள் மகளிடத்து மகனாய்த் தோன்றியவன் கரிகாலன். கரிகாலனின் பிறப்பு வரலாறு கவனிக்கத்தக்கது. இவன் தாயின் வயிற்றிலேயே நல்ல முகூர்த்தம் வரும் வரையில் தங்கி யிருந்து நல்லோரையில் பிறந்ததனாலேயே அரசு பெற்றுப் பீடுடையோனாகினான் இதனை யுட்கொண்டே முடத்தாமக் கண்ணியார் இவனைத் தாய் வயிற்றிருந்து தாய மெய்தினோன் எனக் குறிப்பிடுகின்றார். தமிழ் நூற்களில் கோச்செங்கட் சோழனுடைய பிறப்பைப்பற்றி யாராயு மிடத்தும் இது போன்ற வரலாறே காணப்படுகிறது. எனவே இதனால் கரிகாலனுடைய பிறப்பு வரலாறு வலிபெற்று விளங்குகின்றது. இத்தகைய பிறப்பாளர் கருவிலே திருவுடையாரெனக் கூறப்படுவார்.


இளமைப் பருவம்

 

இளமையிலேயே தந்தையை இழந்து தன்னுடைய பெரு முயற்சியாலே உன்னத பதவிபெற்ற வீரர் ஓர் சிலர். அவர்களிற் சிறந்தோன் கரிகாலன். தந்தை யிறந்ததும் தாயத்தாருக்குள் அரசுரிமையைப்பற்றிக் கிளர்ச்சி யேற்பட்டதைக் கண்டு, இச் சிறுவன் உயிருக்கஞ்சி உறையூ ரிகந் கரூரில் கரந்துறைவானாயினன். அக்காலத்து முறைமைப்படி அரசிற்கேற்றோ னொருவனைத் தேர்வான் கழுமலத்திருந்த களிற்றினைக் கட்ட விழ்த்து விட்டிட, அஃது கரூருக்குச் சென்று கரிகாலனை யெருத்தத் தேற்றிக் கொணர்ந்து சேர்த்தது. எனினும் பகைவர் இவனைச் சிறையிலிட்டனர்.

 

கரிகாலனின் புகழுக்கு வித்தாய் நின்றது அவனுடைய சிறைவாசமே. உடலைச் சிறைசெய்ய பகைவரால் கூடுமேயன்றி உயிரையும், வீரமாண்பினையுஞ் சிறை செய்வார் யார்? சுடினுஞ் செம்பொன் தன்னொளி குன்றுமா? கூட்டில் வளருங் கொடுவரிக் குருளையெனச் சிறையில் வளர்ந்தான் கரிகாலன். சிறைவாசம் இவனுடைய பெருமைக் குணத்தை வயிர முறச்செய்தது. மறனிழுக்கா மானமுடைய கரிகாலனும் கருவியொடு காலங்கருதி யிருந்து சீர்த்த விடத்துப் பகைவரின் திண்காப் பெறிந்து, அவர்களைப் பொருது; வென்று தன்னுடைய மாமன் இரும்பிடர்த் தலையனின் உதவியால் தாயம் பெற்றான்.


கரிகாலனின் போர்கள்

 

தாயம் பெற்ற கரிகாலனின் பகைவர் பலர். இவனுக்கு அவர்களை வெல்லுவது அவசியமாயிற்று. கரிகாலன் ஆண்மையிற் சிறந்தவன். பிறந்த போழ்தே இரு 'காக் கடியும் பேரொளியுடனே இளஞ்சூரியன் தோன்றலைப் போல, இவனுந் தவழ்கின்ற பருவத்திலேயே இகல் வெல்லு மாற்றலைப் பெற்றிருந்தான். பிறகு சூரியன் விசும்பிற் படர்தல்போலப் பகைவர் மீது போர்க்கெழுந்தான்.

 

முடத்தாமக் கண்ணியார் கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் நடந்த போரில் வெற்றி பெற்றதைக் கூறுகிறார். யாளியினணங்கு முலையுண்ணலைத் தவிர்த்துத் தலைவேட்டத்திலேயே களிறடுதலை யேய்ப்பக் கரிகாலன் இரு பெரு வேந்தரையும் ஒரு களத்தவியச் செய்தான். அவ்வாறு தோல்வியுற்றவர் பனம் பூச் சூடிய சேரனும், சிம்பமாலை பூண்ட பாண்டியனுமாவர். “கரிவேந்தனொடு வெண்ணிப் பறந்தலை - பொருது புண்ணாணிய சேரலாதன்" எனவரும் அகநானூற் றடியால் இச்சேரன் பெயர் சேரமான் பெருஞ்சோலாதனெனத் தெரிய வருகிறது.

 

வெண்ணிப் பறந்தலையிலேயே கரிகாலனைப் பதினொருவேளிரு மெதிர்க்க, அவன் அவர்களைச் செறுமுகத்தில் அழைத்தான். இது “காய்சின மொய்ம்பிற் பெரும் பெயர்க்கரிகால், ஆர்கலி ஈறவின் வெண்ணிவாயில், பதினொருவேளிரொடு வேந்தர் சாய'' என்பதாலும் 'இருங்கோவேள் மருங்குசாயி' என்பதாலும் பெறப்படுகின்றது. பிற சான்றுகளிலிருந்து கரிகாலன் வாகைப் பறந்தலையிலும் போர் செய்தானென் ரறிகின்றோம்.


போர்த்திறன்

 

குடிகளுக்கு உட்பகை, புறப்பகை முதலியவற்றால் ஊறு நேரா வண்ணம் காப்பது மன்னன் கடமை. அரசன் வாளா இருப்பின் பகைவர்கள் அவனை யடுத்தடுத்துத் தாக்கி இன்னல் பல இழைப்பர். எனவே அறிவுடையாசனுக்குத் தன் அங்கங்களி லொன்றாய படையைப் பெருக்கி, அறப்போராற்றிப் பகையைத் தொலைத்துக் குடி புறங் காத்தலே மாண்பாம். இன்னணங் கரிகால னியற்றிய போர்கள் பல.

 

கரிகாலனின் போர்த்திறன் சாலவும் வியக்கத்தக்கதே. அவன் பராக்கிரமசாலி. அவனுடைய போர்கன் படிப்போர்க்கு அச்சத்தை விளைவிக்கின்றன. மருதநிலத்தோராய மாற்றாரைப் பொருமிடத்துக் கரிகாலன் அந்நிலக்குடிகளை யோட்டி, அக்காலத்து வழக்கப்படி நீர்நிலைகளை யுடைத்துப் பொய்கையும், வாவியும் நீரறச் செய்தான். நீர்வளங்குன்றவே நிலவளங் குறைந்தது. அங்கு கொழுங்காற் புதவமும், செருந்தியு முளைத்தன. அஃது மான்க ளியங்கும் வனமாய் மாறியது. விளைநிலம் இவ்வாறு விரைவில் அழிந்தது. பகைவர் நாட்டிலுள்ள அம்பலங்களோ பிடிபுணர் வேழம் உறைவிட மாயின. நறுமலர் மணத்தொடு, யாழொடு முழவஞ்செய் யின்னிசை நிரம்பி விளங்கிய பகைவர் பதியிலுள்ள மன்றங்கள் ‘பாழடைந்து ஓரி முழங்கவும், கூகையொடு ஆண்டலை கூவவும், கூளியொடு பேய்மகள் துவன் றவுந் தக்க இடங்களாய் மாறின. திருவுறை நீள் தெருவும், வானளாவிய சன்மாட வீடுகளும் பகலிலேயே கூகைகளின் கூவலோசையால் எதிரொலி செய்தன. இவ்வாறு பகைவர் நிலம் பாழ்பட்டது.

 

கண்டோர் யாவரும் “இவன் மலையகழ்க்குவன்; கடல் தூர்க்குவன்; வான் வீழ்க்குவன்; வளிமாற்றுவன்" எனக் கரிகாலனின் வீரத்தைப் புகழ்ந்துரை செய்தனர். ஒளியர், அருவாளர், வடவர், குடவர் ஆகிய இவர்களின் றிறல் அடங்கிற்று. இவன் வடநாட்டிலும் போர் புரிந்து தன் முத்திரையாகிய புலிவடிவை மேருவில் பொறித்தான். அங்கு முத்துப் பந்தரினையுந் திறையாகப் பெற்றான். இவ்வாறு கரிகாலன் ''எய்யாத் தெவ்வர் எவல் கேட்பவுஞ் செய்யார்த் தேயந் தெருமரல் கவிப்பவும்" ஆட்சி செய்தான். வெற்றித் திருவும் இவன் பால் வதிந்தாள்.

 

குணம்

 

இத்துணைச் சிறப்பு வாய்ந்த திண்டிறல் வேந்தன் மாற்றார்க்குக் கூற்றாயும் இரவலர்க் கினியனாசவு மிருந்தான். இவனுடைய கொடை வளத்தைப் பற்றிப் பொருநராற்றுப்படையில் நன்கு கூறப்பட்டுள்ளது. கரிகாலன் காட்சிக் கெளியனாயுங், கடுஞ் சொல்லனன்றி இனிய சொல்லினனாகவு மிருந்தான். இவனுடைய வாயிலை "நசையுநர்த் தடையா நன் பெருவாயில்'' என்பர் முடத்தாமக்கண்ணியார். பரிசில் பெறவரும் பொருநனின் கையது கேளா அளவிலேயே ஓய்யென,


“கேளிர் போலக்கோள் கொளல்வேண்டி,
வேளாண் வாயில் வேட்பக் கூறி
கண்ணிற்காண நண்ணுவழி யிருத்தி."


என்புங் குளிர் கொள் அன்பால் நோக்கி, தேசு மிக்க தூசுநசுநல்கி, மகிழ்ப்பதத்தோடு அவிழ்ப்பத மளித்து உபசரிக்கு மியல்பினன் கரிகாலன். பொருகன் மனமகிழ் சிறப்பப் பன்னாட் கழித்துப் பின்றைத் தன் பதிக்குப் பெயர்ந்து செல்லுகையில் தூங்கு நடைக்குழவியொடு பிடிபுணர் வேழம் பெட்டவை கொள் கென வரையின்றி யீயும் வள்ளன்மை யுடையோன். பின்னர் இரவலனைப் புரவலன் வழியனுப்புவதைப் படிக்கில் நாம் வியப்பும், மகிழ்ச்சியும் அடைகின்றோம். தந்தத்தினால் செய்த கொடுஞ்சி நெடுந்தேரில் தாறுகளைந்து இரவலனை யேறென்று ஏத்தியவனொடு நெடுகாள் நட்புடையோன் போல் காலின் ஏழடி பின்சென்று அரசன் வழிவிடுந் தன்மை வியக்கத் தக்கதே. இவனுடைய கொடைத் திறனைப்பற்றி யன்றோ பொருசராற்றுப்படை பாடப்பட்டது. பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனார் பதினாயிரம் பொன் பெற்றதையும் நாம் அறிகின்றோம்.


இவன் குடும்பம்

 

இதைப்பற்றி யிரண்டு வரிகளே பட்டினப்பாலையில் காணப்படுகின்றன. மகளிரால் முயங்கப்பெற்றதும், குழவியாலேறி விளையாடப்பட்டது மான சந்தன மணிந்த அகன்ற மார்பினன் கரிகாலன் என்பர். பிற சான்றுகளிலிருந்து இவன் நாங்கூர் வேளின் மகளை வேட்டானெனத் தெரிய வருகிறது. கரிகாலனுக்கு நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான் என ஆண்மக்கள் மூவரும், ஆதிமந்தியார் என்னும் நல்லிசைப்புலமை வாய்ந்த மகளுமிருந்தார்கள்.


வேறு பெயர்கள்

 

இச் சோழனின் இயற்பெயர் அறிந்திலம். இவன் ஒருகால் இளைமை பிற் சிறையிலிடப்பட்ட பொழுது இவனைக் கொல்லும் பொருட்டுச் சிறைக்களத்தைப் பகைவர் தீக் கொளுவினர். அப்போது சிறுவன் தப்பி வெளியேற முயலுகையில் கால் நெருப்புற்றுக் கரிந்துபோன காரணத்தால் கரிகால னென்ற பெயரைப் பெற்றான். இது "முச்சக்கரமு மனப்பதற்கு " என்ற வெண்பாவால் பெறப்படுகிறது. இவனைக் கருவிலே திருவுடையானென அழைப்பதன் காரணத்தையும் முன்னரே கூறி யுள்ளோம். இவன் தன்னுடைய நாட்டை வளம்படுத்திச் செல்வம் பெருக்கினமையின் திருமாவனவனென்ற பெயரையும் பெற்றான்.


நாட்டின் சிறப்பும் தலைநகரும்

 

ஒரு நாட்டினது பொருள் வளத்திற்கு நீர்வளமும், நிலவளமும் இன்றியமையாத கருவிகளையும் கங்கையிற் புனிதமாய காவிரிபாயும் அகன் கிடக்கையையுமுடையது சோழநாடு. வற்கடம் ஏற்பட்டு வான்பொய்ப்பினுந்தான் பொய்க்காது பொன்னி புரக்கும் நாட்டின் பெருவளம் இத் தன்மையதென கூறற்பாற் றன்று. இந்த நாட்டின் வளப்பத்தினை முடத்தாமக்கண்ணியார் திறம்படத் திணை மயக்கத்தோடு எடுத்துக் கூறுவார். சோழவளநாடு சோறுடைத்தென்பதனையே இவர் வலிபெற எடுத்துரைப்பார். இத்தகைய நாட்டிற் தலைநகரா யிருந்தது காவிரிப்பூம்பட்டினம். இது கடற்கரையின் மருங்கிருந்தது.


வாணிகச் சிறப்பும் செல்வப் பெருக்கும்

 

காவிரிப்பூம்பட்டினம் கடற்கரையி லிருந்ததால் வியாபாரத்திற்குச் சாதகமா யிருந்தது. மக்கள் அயல்நாட்டாரோடு தீர்மார்க்கமாக வியாபாரஞ் செய்யத் தலைப்பட்டனர். வாணிகத்தொழில் சிறந்தோங்கிற்று. அயல் நாட்டு நிமிர் பரிப்புரவியும், ஈழத் துண்பும், கடாரத்து நுகர் பொருளும் இங்கு வந்து குவிந்தன. கடன் மேற் செல்வார்க்கு உதவியாய்க் கலங்கரை விளக்க மொன்றைக் கரிகாலன் நிறுவினான். நிலமார்க்கமாகவும் பிறதேசங்களோடு வியாபாரம் நடந்தது. ''வடமலை மணியும், குடமலை ஆரமும், தென்கடல் முத்தும், குணகடல் துகிருங், கங்கை வாரியும், காவிரிப்பயனும்"
வளந்தலை மயங்க வந்திங் கீண்டின. வணிகரும் வாய்மையிற் பிறழாது தந்தொழிலை நடத்தினர்.

 

அரசன் இவ்வாறு வந்த பொருள்களுக்கும், ஏற்றுமதிச் சரக்குகளுக்குஞ் சுங்கம் வசூலிக்கச் சுங்கச் சாவடிகளை யேற்படுத்தினான். தொல்லிசை பெற்ற சுங்கங் கொள்வோரும் தந்தொழிலில் சிறிதேனும் பிறழார். ஏற்றுமதி, இறக்குமதிச் சரக்குகளுக்குக் காரியக்காரர் அரசனது புலி முத்திரையைப் பொறித்தனுப்புவர்.

 

இதுவேயு மன்றிப் பண்டமாற்று முறையும் அக்காலத்துண்டு. வெள்ளையுப்புக்கு நெல்லைக்கொண்டு படகு வருமியல்பு பட்டினப்பாலையால் தெரிய வருகிறது. இவ்வாறு வணிகமக்கள் வளர்பொரு ளீட்டினர்.


கரிகாலன் காலத்துச் செய்திகள்

 

மதிற் கதவில் அரசனது பொறியைப் பொறித்தல், அறநிலை இய அகனட்டி லமைத்தல், சடைமுனி வாங்கிவேட்டல், போரிற் சிறந்த வீரருக்குக் கல் நடுதல், பரதவர் மனைவியொடு சுறவின்கோடு நட்டுத் தெய்வ வழிபாடு செய்தல், மகளிர் தழையுடுத்தல், செவ்வேள் வெறியாடல் முதலிய இவன் காலத்து வழக்கங்களை நாம் பத்துப்பாட்டா லறிகின்றோம். நாம் இப்பொழுது பலகைகளை (Boards) உபயோகிப்பது கரிகாலன் காலத்தில் பலவகை பதாகைகளை யுயர்த்தினர். பணியத்து மஞ்சிகைக்குக் கொடி கட்டி கதவில்
 பிருக்கும். நல்லாசிரியர் உறழ்குறித்துக் கொடி கட்டுவர். நாவாய் மிசையிலும், கள்ளுக்கடைகளிலும் கொடி பறக்கும்.

 

மக்கள் மது வருந்துவதும், புலாலுண்பது முண்டு. அவர்கள் பலவிதஅணிகலன்களையும், ஆடைகளையும் அணிந்திருந்தனர். ஏடில் தாமரை, ஏலின் வலவா நுணங்கரிமாலை, வாலொளிமுத்தம், பூங்குழை, தொடி, மேகலை முதலிய பொன்னாலாய நன்கலம் பலவும் வழங்கப்பட்டன. கத்திரிகையின் உபயோகமும் அறிந்திருந்தனர். மக்க ளணிந்த ஆடைகளைப்பற்றி முடத்தாமக்கண்ணியார் கூறுகையில் தமிழராகிய நம் மனம் விம்மிதம் அடைகிறது. மக்கள் பட்டாடை யணிவர். ஆடையில் பூக்கனிந் திருக்கும்; அர'வரியென்ன மென்மையாயும், நோக்கு நுழை கல்லா நுண்மையாயும், கொட்டைக்கரையினை யுடையதாயுமுள்ள ஆடைககளை யரசன் பரிசில் நல்கினான். இயந்திரத்தி னுதவி சிறிதுமின்றிக் கையால் நெய்யப்பட்ட ஆடையின் நயம் வியக்கற் பாலதே!

 

அரசன் மதவிடயங்களில் ஒரே மனப்பான்மையன். இவனது தலைாகரில் தவப்பள்ளிகளும், வேள்விச்சாலைகளும், காளி கோவில்களும் மல்கி யிருந்தன.

 

இம் மன்னனுடைய காலத்தில் தமிழ் அடைந்திருந்த சிறப்பினுக்கு எடுத்துக்காட்டா யமைந்துள் எவை இவ்விரு பாடல்களுமே. இயற்றமிழே யன்றி இசைத்தமிழும், நாடகத் தமிழும் வளர்ச்சியுற்றன. பொருநன் மன்னனைத் தடாரி வாரித்துத் துயிலெழு புவான். யாழ், துடி, பாண் முதலிய வாச்சியங்களு மிருந்தன. மன்னன் செவியில் இன்னிசை கீதம் மட்டொழுகுவதுபோ லினிமை பயந்தது. “ஆறலை கள்வர் படைவிட அருளின் - மாறுவலைப் பெயர்க்கும் மருவின் பாலையை, “வாரியும் வடித்தும், உந்தியம்,
உறழ்ந்தும்” பொருநர் வாசித்திட அதனிசை யெங்கும் பரவியின்ப மூட்டி கரிகாலன் சிந்தை களிப்புற்றது.

இவ்வாறு களிறுபடு செங்களம் மருளுறக் கலக்கி, வெளிறுபடு நல்யாழின்னிசை நுகர்ந்து, ஆனா ஈகையில் மேம்படச் சிறந்து, தமிழ்ச்சுவையறிந்து புலவரைப்போற் புலவ பாடும் புகழுடையோனாய்க் கரிகாலன் அரசு புரிந்த கரிகாலன் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும், ஐந்தாம் நூற்றாண்டு எனவும் கூறுவர்.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - ஜுலை ௴

 

No comments:

Post a Comment