Friday, September 4, 2020

 

பரதன் பெற்ற புகழ்

(எஸ். கிருஷ்ணன்.)

வேதியர், அருந்தவர், விருத்தர், வேந்தர் ஆதியர் நிறைந்திருக்கும் அரச சபையில் பரதன் வருகின்றான். “அண்ணனே காடு புகுந்தார். தந்தையோ வீடு புகுந்தார். நான் நாடு புகுந்து அரசாள்வதா?" என எண்ணி, அண்ணனை அழைத்து அரச பதவி வகிக்கத் தூண்ட எண்ணங் கொண்டு வருகின்றான் பரதன். அவன் முகக் குறிப்பி னின்றே அகத்தின் தன்மையை ணர்ந்த வசிட்டர் பக்குவமாகக் கூறி பரதனை முடி சூடும்படி செய்யக் கருதி "அப்பா! வயிரவாள் தரித்த அரசனிலாத பூமி சூரியனில்லா பகலையும், சந்திரனிலா இரவையும், உயிரில்லா உடலையும் ஒக்கும் என்பார்கள். தேவர்கள், அசுரர்கள் உலகங்களிற் கூட அரசர்கள் இருத்தல் கண்கூடு. நமது நாட்டிலோ தற்பொழுது அரசனிலா திருப்பது அழகல்ல. ஆதலின்,

''உந்தையோ இறந்தனன் உம்முன் நீத்தனன்

வந்தது மன்னை தன் வரத்தின் மைந்தநீ

அந்தமில் பேரரசு அளித்தி"

 

உன் தகப்பனோ இராமன் பிரிந்த ஏதுவால் விண்ணுல கடைந்தான். உன் முன்னவனோ தந்தை சொல்லை சிரமேற் கொண்டு காடு புகுந்தான். இவை யெலாம் உன் தாயாகிய கைகேபியால் வந்தது எனினும், தந்தையும் இராமனும் பிரிந்த விடத்து பட்டம் உனக்கே யுரியதல்லவா? ஆகவே, நீ இராஜ்ய பாரத்தை வகிப்பாயாக. நீ அரச பதவியேற்றல் வேண்டுமென்று நான் மாத்திரம் விரும்புவதாக எண்ணி விடாதே. தஞ்சம் என்று உலகம்
உன்னைக் கெஞ்சுகிறது. மறுக்காதே அதனை'' எனக் கூறுகிறார்.

அண்ணனை அழைத்து வந்து அரியாசனத்தில் அமர்த்தி அவனுக்குத் தொண்டு புரிய எண்ணங் கொண்ட பரதனா வசிட்டரின் கருத்துக்கு இணங்குபவன்?

வசிட்டன் கூறிய சொற்கள் பரதன் செலியிற் பட்டவுடன் 'நஞ்சுண்' என ஒருவனிடம் கூறிய மாத்திரத்தில் அவன் உடம்பும் மனதும் எவ்வாறு நடுங்குமோ அதுபோன்று பரதனின் உடம்பும் மனதும் நடுங்கின. இவ்வித கடூரமான வார்த்தை சேட்கவும் காலம் வந்ததே என்பதாக நினைத்த பரதன் கண்கள் நீரை ஆறாகப் பொழிந்தன. தம் குருவும் இதரர்களும் 'நீயே அரசு புரிதல் வேண்டும்' என வேண்டிக் கொள்கிறார்களே! அவர்கள்
வார்த்தையை எவ்வாறு தடுப்பது? அவர்கள் கருத்தின்படி நடந்தாலோ "பரதன் அரச பதவியை ஆசித்து தந்தையைக் கொன்று முந்தியவனைக் காட்டிற் கோட்டினாள்' எனும் அவச்சொல் வருமே! யாது செய்வது எண்ணி பரதன் மயங்குகிறான். பதில் சொல்ல நினைக்கிறான். நா தடுமாறுகிறது. பின்னர் துணிந்து,

"வேத்தவை யிருந்தநீர் விமல னுந்தியில்

பூத்தவன் முதலிய புவியிட் டோன்றினார்

மூத்தவ ரிருக்கவே முறைமை யானிலம்

காத்தவ குளரெனிற் காட்டிக் காண்டீதால்"

மகா விஷ்ணுவின் உந்திக் கமலத்திலிருந்து தோன்றிய பிரமனை முதலாக வுடைய இவ்வுலகில் எங்காவது மூத்தவனிருக்க அவனை விடுத்து இளையவன் ஒருவன் அரசு புரிந்து வருவதைக் கண்டிருப்பீர்களா? கண்டிருப்பீர்களானால் எனக்கு விளக்கிச் சொல்லுங்கள் என பரதன் சபையினரைக் கேட்கின்றான். சபையோர் மவுனஞ் சாதிக்கின்றனர்.

ஆகவே, நீங்கள் என்ன தான் கூறினாலுஞ் சரி. ஸ்ரீ ராமபிரானை அழைத்து வந்து
நானே அவர்க்கு முடி கட்டுவேன். அதற்கு அண்ணல் இணங்காது போனால் யான் உயிர் வாழேன். அன்றேல் அன்னவரிடம் சென்று அவருக்குத் தொண்டு புரிதலாகிய தவஞ் செய்வேன். மீட்டும் நீட்டும் என்னை நீங்கள் வற்புறுத்தல் அழகல்ல. வற்புறுத்தினால்
என் உயிரை இப்பொழுதே இங்கேயே விட்டு விடுவேன் என தீர்மானமாகப் பரதன் உரைக்கின்றான்.

பரதனின் சகோதர பக்தியை எவரால் தான் மாற்ற முடியும்? அரச பதவியை விட அண்ணனே உயர்ந்தவர் என நினைக்கும் பரதனின் தூய மனதிற்கு ஈடாக எதைத்தான் உரைக்க முடியும்? ஆகவே, அவன் மனதின் படி விட்டு விடுதலே சாலச் சிறந்தது என உணர்ந்த சபையினர், பரதா! நீ,

"வான்றொடர் திருவினை மறுத்தி மன்னிளந்

தோன்றல்கள் யாருளா? நின்னிற் றோன்றினார்"

 

எவருக்கும் கிடைத்தற்கரிய இவ் வயோத்தி அரசுரிமையை துச்சமென நினைத்து மறுத்து விட்டாய். உன்னைப் போன்ற தியாகிகள் இவ் வுலகில் எவர் முன்னர் இருந்தார்கள்? இப்பொழுது இருக்கின்றார்கள்? இனிமேல் இருக்கப் போகின்றார்கள்?

"ஆழியை யுகுட்டியும் அறங்கள் போற்றியும்

வேள்வியை யியற்றியும் வளர்க்க வேண்டுமோ

ஏழினோ டேழெனு முலகு மெஞ்சினும்

வாழிய நின்புகழ்"

 

ஆக்கினா சக்கரத்தை செலுத்தியும் தான தருமங்கள் செய்தும் வேள்விகள் இயற்றியும் புகழடைய உலகோர் முயலுகிறார்கள்? எனினும் அவர்கள் புகழ் அவர்கள் மடிந்தபோதே மாய்ந்து விடுகிறது. நீயோ ஏழேழு பதினான்கு உலகும் அழிந்த போதினும் அழியாத புகழை உலகில் நாட்டி விட்டாய். உலகினர் சோதர அன்பிற்கு “பரதனையும் ராமனையும் பார்" என எடுத்துக் காட்டும் நிலையில் உன் புகழ் நிலைத்து விட்டது. உனக்கு புத்தி யுரைக்கவும் சத்தியில்லை எங்களுக்கு. உலகம் உள்ளளவும் உன் புகழ் வாழட்டும் என
வாழ்த்தினார்கள்.

ஆனந்த போதினி – 1937 ௵ - ஏப்ரல் ௴

 

                                                     

No comments:

Post a Comment