Friday, September 4, 2020

 

பரவையின் விரகதாபம்

(வெ. கணேசன்.)

      மாலை நேரம், ஒவ்வொரு வரும் தங்கள் தங்கள் தொழில்களிகளினின்றும் தத்த மில்லங்களுக்கு ஏகும் நேரம். புள்ளினங்கள் யாவும் தங்கள் இனங் குழவிக ளிடத்திலுள்ள அன்பு வலிந் தெழத் தம் கூடுகளை யடைந்து மகிழ் வெய்தும் நேரம். கதிரவன் நம் வேலை முடிந்தது இனி ஒய்வெடுத்துக் கொள்ளலாம் என்பது போன்று மறையும் நேரம். மலர்கள், மறலி மாண்டான் என நகுவன போன்று அலரும் நேரம். காமுகர்கள் யாவரும் அலறி விழுந்தான், அலவன் எழுவான்; நம் காதலிகளுடன் இன்னுறை யாடி இன்புறலா மென்று மகிழ் வெய்தும் நேரம். இக் நீணிலத்தின் நிலையாமையை நன்குணர்ந்த நீர்மையாளர்கள் நானென வொன்று போற் காட்டி உயிரீரும் விண்மணி மறைந்தான்; நம் வாழ் நாளில் ஒன்று வீணே பயனின்றிக் கழிந்ததே என்று ஏக்கமுறும் நேரம். வெளி நாடு சென்றிருக்கும் தங்கள் காதலர்களைக் குறித்துக் கன்னியர்கள் கவலை கொள்ளும் நேரம்.

      அச் சமயம் திருவாரூர்ப் பெரு நகரில் எழுந்தருளி யிருக்கும் புற்றிடங் கொண்டாராகிய பெருமானினது ஆலயத்தில் மணி யோசை விண்ணைத் துளைக்கின்றது. கோட்டம் பலவித விளக்குகளால் நன்கு அலங்கரிக்கப் பட்டிருக்கின்றது. ஜனத்திரள் கண் கொள்ளாக் காட்சியாகப் பொலிகின்றது. சாம்பிராணி, கற்பூரம், அகில், சந்தனம், முதலியவை கொளுத்தும் நறு மணம் ஊதிற்கு ஓர் புத்துணர்ச்சியை யளிக்கின்றது. அக் கூட்டத்தினரில் சிலர் தேவாரம் பாடுவாரும், சிலர் திருவாசகம் செப்புவாரும், சிலர் அஞ்செழுத் தோதுவாருமாக பத்திரசத்தில் ஈடுபட்டு இகத்தை மறந்து, பரத்திலேயே நினைவு பூண்டு நிற்கின்றனர். அவ்வமயம் புற்றிடங் கொண்ட பரமனார்க்கு தீப ஆராதனை நடக்கும் சமயம். எல்லோரும் கோயிலின் முன் சிரமேற் குவித்த கையராய், ஹரா, ஹரா, சிவ, சிவ என்னும் பிறவிப் பிணி நீக்கும் உயர் மந்திரங்களைத் தங்களது மனமார வோதி இன்ப வாரிதியில் விழுந்து திளைத்து நிற்கின்றனர்.

      அக் கூட்டத்தினருள், பன்னீ ராட்டைப் பிராயத்தினளாய இள மங்கை யொருத்தி, திருவாரூரரை மனமார வணங்கி, ஏதோ விண்ணப்பித்துக் கொள்வது போன்று தோன்றுகிறது. அவளை நோக்கின் அரவிந்த மலருள் நீங்கி யடியினைப் படியத் தோய திரு இங்கு வந்ததே போன்றிருக்கின்றாள். அவளைச் சூழ ஆய வெள்ளங்கள் நிறைந்த நிற்கின்றன. அவளது தந்தம் போன்ற வுடம்பில் நீலப் பட்டாடை யொன்று அழகுக் கழகு செய்தது போற் பொலிகின்றது. உச்சி முதல் உள்ளங் கால் வரை விலை யுயர்ந்த நவமணி யாபரணங்கள் அணிந்து கொண்டிருக்கின்றாள். அவளது மதி போன்ற நுதலில் மறுப்போன்று சாந்து திகழ்கின்றது. அவ்விள மங்கை கண்களிரண்டையும் நன்கு அடைத்து கூப்பிய கையளாய் கடவுளை வேண்டல் பார்ப்பதற்கு மிகவும் உருக்கமா யிருக்கின்றது. அவள் வேண்டுவது யாதென்பது யாவரறிவர்? அவள் பொன்னையோ பொருளையோ வேண்டவில்லை யெந்து திண்ணம். அவளது முகம் கவலை யென்னும் நோயால் பீடிக்கப்பட்டது போன்று காணப் படுகின்றது. ஐயோ! பாவம்! இவ்விளம் வயதில் அவளை வருத்தும் கவலைதான் யாதோ யாரறிவார்? அவள், கண்களை யடைத்திருப்பினும் சிறிது நேரத்திற் கொரு முறை கண்களைத் திறந்து தன்னெதிரில் நன்கு ஆடையாபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு அடியார்கள் புடை சூழ நிற்கும் அரனன்ப னொருவனைக் கனிந்த பார்வையுடன் நோக்குகின்றாள். பெரு மூச்சு விடுகின்றாள். பின், பழமை போல் கண்களை யடைத்துத் தவம் புரிகின்றாள். தீப ஆராதனை முடிந்து யாவரும் பிரசாதம் முதலியவை பெற்று வீடு திரும்பத் தொடங்கினர். நமது நங்கையும் மற்றவர்களுடன் தன்னில்ல மடைந்தனள்.

      இரவு நேரம். ஆகாயம் மாசு மறுவின்றி வெகு ரமணீயமாக விளங்குகின்றது. அப்பொழுது,

                                “கலந்தவர்க் கினியதோர் கள்ளுமாய்ப் பிரிந்

            துலர்ந்தவர்க் குயிர்சுடு விடமுமா யுடன்

            புலர்ந்தவர்க் குதவிசெய் புதிய தூதுமாய்

            மலர்ந்தது நெடுநிலா மதனன் வேண்டவே,”

 

என்று கம்பர் கூறியுள்ளது போல் தண்சுடர் விண்ணிற் றோன்றியது.

      வானளாவி உயர்ந்து நிற்கும் பெரியதோர் மாளிகை; அதன் உப்பரிகையில் பசும் பொன்னாற் செய்யப்பட்ட தங்கக் கட்டில் ஒன்று இடப்பட்டிருக்கின்றது. அதில் அன்ன இறகாலும், நன்கு ஆய்ந்தெடுத்த இலவம் பஞ்சினாலும், விலை யுயர்ந்த பட்டினாலு மாக்கப்பட்ட மெத்தை. அதின் மேல் காம்பு முறித்து இதழ்கள் மாத்திரம், வெகு அக்கரையுடன் பொறுக்கப்பட்டு, பன்னீரும் மற்று வாசனைத் திரவியங்களு மிடப்பட்ட இள மலரமளி, அதின் மீது மூன்றாம் பிறைச் சந்திரனைப் போன்ற நுதலையும், முழு மதியை வெட்கச் செய்யும் ஒளி மிக்க முகத்தையும், கரு முகில் போன்ற அளக பாரத்தையும், குவளை போன்ற கண்களையும், எட்பூ போன்ற நாசியையும், பவளம் போன்ற விதழையும், முத்தன்ன பற்களையும், விழைவு விடுத்த விழுமியோரும் விழைவு கொள்ளும் பன்னீராட்டைப் பிராயத்தினளாய இளமங்கை யொருத்தி, மனதிலே கவலை கொண்டவளவாய் அம் மல ரமளியில் அப்புறமு மிப்புறமும் புரண்டு கொண்டிருக்கினறனள். ஒருவருடனும் பேசுகின்றாளில்லை. அடிக்கடிப் பெரு மூச்சு விடுகின்றாள். கண்களில் நீர் அருவி போன்று ஓடி கண்ணாடியன்ன கன்னங்களை நனைக்கின்றன. இவளது ஆற்றாமைக் காற்றாத அருகிருந்த தோழி பின் வருமாறு கூறத் தொடங்கினாள்.

      “அம்மா! என் கண்ணே! கண்ணுட் கருமணியே! “பரவை”! உன் மனதை வாட்டும் துயரம் யாது? எதற்காக இப்படிப் புரளுகின்றாய்? மணியோ பத்தடித்து விட்டதே. நண்பகல் 12 மணிக்குச் சிறிது ஊண் கொண்ட மகளல்லவா நீ! இப்படிப் பட்டினி கிடந்தால் தேகத்திற்குப் பிடிக்குமா? இனியும் பன்னிரண்டு ஆண்டுகள் நிறம்பப் பெறாத மணிப்பாவையாகிய நீ நுறாண்டு சென்ற கிழவிகள் போலும் அடையாத துயரம் அடைந்தது போன்று வருத்த முறுகின்றனையே! அதன் காரணம் யாது? நீ இவ்விதம் துயரடைந்து நான் பார்த்ததில்லையே! உனக்கென்ன வேண்டுமென்று கூறு, உடன் என்னுயிரை யதற்கு விலையாக ஈந்தேனும் கொணர்ந்து தருகின்றேன். அச்சமில்லாது சொல், மேலும், நீ இன்று மாலை கோயிலுக்குப் போமளவும் மிகவும் சந்தோஷமாக எல்லோருடனும் இனிது உரையாடி யிருந்தனையே. இப்பொழுது ஏன் இவ்விதம் வருத்த முறுகின்றாய். நீ வருத்த முறுவதைப் பார்க்க எங்கள் மனம் சகிக்குமா? கோயிலினின்று வெளி வந்தது முதல், உன் மனம் ஏதோ மாறி யிருக்கின்றது போற்றோன்றுகின்றது. உனக்கு கண்ணேறு கழிக்கட்டுமா; அல்லது வெறியாட் டயர்விக்கட்டுமா? நீ இன்று, புதிதாகச் செய்து வந்துள்ள, வைரக் கழுத்தணியையும், நீலப் பட்டாடையையும் அணிந்து கொண்டு சென்றதைப் பார்த்து யாராவது கண் பட்டிருப்பார்கள். அழகில் பேர் பெற்ற ஊர்வசி, திலோத்தமை, மேனகை முதலிய அரம்பை மாதர்களும், உன்னிடத்தில் பிச்சை யெடுக்க வேண்டும். அவ்வளவுக் கழகா யிருந்தாய். இன்று வியாழக் கிழமை, கண்ணேறு கழிக்க நல்ல நாளேயாகும்,” என்று கூறித் தன்னருகிலிருந்த வேறொரு தோழி யிடத்தில் அதற்கு வேண்டிய பொருள்கள் யாவும் கொணரச் சட்டஞ் செய்து, பின்னும் பரவையைப் பார்த்து, “பரவை! கண்ணே! உன்னை வாட்டும் துயரம் யாது? என்னிடத்தில் கூறு, நான் ஒருவரிடமும் கூற மாட்டேன். அதற்கு என்னால் பரிகார மியலுமேல் தடையின்றிச் செய்வேன். என்னிடத்தில் அச்சமின்றிக் கூறு” என்று வற்புறுத்தினாள்.

      அதைக் கேட்ட பரவை, “தோழி! என்னருமைத் தோழி! எனக்குக் கண்ணேறு படவுமில்லை; அன்றி வேறு தெய்வங்களின் உபத்திரவமுமில்லை. என் மனதில் வேறொரு விஷய மிகுந்து துன்புறுத்துகின்றது. அதை யெப்படி நான் வெளி விட்டுக் கூறுவேன். கூறின் என்னை எல்லோரும் ஏளனம் செய்ய மாட்டாரோ. எனினும், இவர்கள் ஏளனத்தா லொன்றும் என் மனம் மாறுபடாது. நீ எனது உயிருக்குயிரான தோழி யாகையினால் உன்னிடத்தில் கூறுகின்றேன். என் அருகில் வா,” என்று பக்கத்தமர்த்திக் கொண்டு அவளது (தோழியின்) கையைப் பிடித்துக் கொண்டு, “தோழி! இன்று நாம் புற்றிடன் கொண்டாரை தரிசிக்கப் போனபொழுது கோயிலின் முன்பாக அடியார்கள் புடை சூழ கட்டினங் காளைப் பருவத்தின்னாய அரங்கன் போன்ற வழகுடைய அடியா ரொருவர் வந்தனரே. அவரை நீ பார்த்தாயன்றோ? அம் மகானைப் பார்த்த மாத்திரத்தில் என் மனம் அவர் பாற் சென்று பற்றி விட்டது. பின் என்ன முயன்றும் அதைத் திரும்ப வெடுக்க முயலவில்லை. இப்பொழுது என் உயிர் என் வசமில்லை. அவர் வசமே யிருக்கின்றது. என் உயிரை யுண்டது அவரது,

                                “இந்திர நீலமொத் திருண்ட குஞ்சியும்,

            சந்திர வதனமுந் தாழ்ந்த கைகளும்

            சுந்தர மணிவரைத் தோளுமே யல”

பின் எதென்று கேட்பாயேல் என்னருமைத் தோழி!

            “முந்தி யென்னுயிரை யுண்டதம் முறுவலே”

      என்னைப் பார்த்து அப் பெருந்தகையாளர் ஒர் புன்முறுவல் பூத்தார். ஆ! அஃது இரும்பை யிழுக்கும் காந்தமன்ன என் னுயிரை யப்படியே கொள்ளை கொண்டு விட்டது. ஆகையால் நீ எனக்குக் கண்ணேறு கழிக்கவோ வேறு மற்று மொன்று செய்யவோ வேண்டுவதில்லை. நான் கேட்கும் கேள்விக்குத் தக்க பதிலளிப்பையேல் அஃதே நீ யெனக்குச் செய்த பேருதவியாகும்.” என்று கூறினாள்.

      அதைக் கேட்ட தோழி, “அம்மா! இவ்வளவு தானா? இது தானா பெரிய காரியம்? நீ என்ன கேட்க வேண்டுமோ கேள். நான் பதில் சொல்லுகிறேன்,” என்றாள். அப்பொழுது பரவை, “அவ் வடியார் யாரென்பதை நீ எனக்கு அறிந்து கூற வேண்டும்” என்று சொல்ல, அத் தோழி பரவையைப் பார்த்து, “என், அருமைப் பரவை! உன் மனம் சென்று பதிந்திருப்பது யாவரும் மனதாலும் நினைத்தற்கரிதாகிய உயர்ந்த விடத்தன்றோ! உன் பாக்கியமே பாக்கியம். அவரைக் கண்டு, அவர் உன்னிடத்தில் காதல் முறுவல் செய்த பின்னும், நீ இவ்வளவு அடக்கத்துடன் னிருப்பது உனது உயர் குணத்தின் தன்மையையே காட்டுகின்றதே யன்றி வேறொன்றுமன்று. அவர் யாரென்றறிவதற்கு, யாரிடத்திலாவது சென்று வினவவோ, அன்றி வேறு வகைகளில் விசாரணை நடத்தவோ வேண்டியதன்று. அவர் உலகறிந்த பெருமானாயிற்றே! அவர் யாரெனில் கூறுகின்றேன் கவனமாய்க் கேள்” என்று கூறலுற்றாள்.

      “முன்னர் ஒரு கால் மாலும் அயனும் அடியும், முடியும் தேடியும் அகப்படா நின்ற சிவபிரானின் பெருமையை நீ நன்கறிவாயன்றோ. அத்தகைய சாக்ஷாத் சிவபிரானே “உன் காதலனாகிய” அடியார்க்கு அன்றொரு நாள் “தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்” என்ற அருளிச் செய்தார். கைலையங்கிரியில் யாண்டும், மங்கல வாத்தியம் முழங்கவும், வேதவோசை விண்ணைத் துளைக்கவும், முப்பத்து முக்கோடி தேவர்களும் தொழுது நிற்கவும், தும்புரு நாரதர் கீதம் பாடவும், பாகத்துப் பாவையுடன் சர்வமங்கள பூஷிதனாய் வீற்றிருக்கும் மும்மூர்த்திகளுக்கும் அப்பாற் கடந்த சாக்ஷாத் சிவபிரானே தானாகவே வந்து தோழனாக வேண்டும் என்றால், உனது காதலனின் பெருமைதானென்ன! அஃதை ஈராயிரம் நாப்படைத்த ஆதிசேடனாற் போலும் எடுத்துக் கூற வியலாதன்றோ! சுருங்கக் கூறின் சிவபிரானே உன்னைக் கண்டு காதலக்கின்றார் என்று கூறினும் பொருந்தும். அவரை (நீ கண்ட வடியாரை) நம்பியாரூர ரென்றும், ஆலால சுந்தரரென்றும், நாவலூர ரென்றும், வன்றொண்ட ரென்றும் அழைப்பார்கள். அத்தகைய பெருமை யாளரம்மா உன் மனதை கவர்ந்த மன்னன்,” என்று கூறி முடித்தாள்.

      அதைக் கேட்ட பரவைக்கு வன்றொண்டர் பாலுள்ள காதல் அளவின்றிப் பொங்கி யெழுந்தது. அவர் கடவுளின் தோழர் என்றதைக் கேட்ட மாத்திரத்தில் அவர் மீதுள்ள வாசை யிரட்டித்து, பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலிய நாற்குணங்களும் இருந்த விடம் தெரியாது மறைய தன் காதலன் மீதுள்ள காதல் மிகுதியாலும், அவர், தான் மனமார வணங்கும் சிவபிரானின் தோழன் என்றதின் அதிசய மிகுதியாலும், அறி விழந்து மயக்கமுற்று அம் மென்மல ரமளியின் மேற் சாய்ந்தாள்.

ஆன்ந்த போதினி – 1937 ௵ - ஜுன் ௴

 

No comments:

Post a Comment