Friday, September 4, 2020

 

பரிணாமம்

எஸ். தீத்தாரப்பன்

 

மனிதன் தற்போது இருக்கும் நிலையை எப்படி அடைந்தான் என்ற கேள்வியை, மேல்நாட்டில் பலர் பலவிதமாய்ப் பல வருஷங்களாக விவாதித்து வருகிறார்கள். ஒருவர் சொல்கிற காரணங்களும் காரியங்களும் அவருக்குத்தான் உண்மைபோல் புலப்படுகின்றன. அடுத்தவர் அவற்றைச் சுத்த முட்டாள் தனம் சொல்லிவிட்டுத் தம்முடைய ஆராய்ச்சியை விளக்குகிறார். இவர் ஆராய்ச்சியும் இவருக்குத்தான் தெளிவாகத் தெரிகிறது. இப்படி நடக்கின்ற ஆராய்ச்சிகளில் அதிக விவாதத்தைக் கிளப்பும் கேள்வி இதுதான். மனிதன் உயர்ந்த நிலையிலிருந்து பாவஞ் செய்து இந்நிலையை (தற்கால நிலையை) அடைக்திருக்கிறான் என்பது. இந்த விவாதத்தை ஆராயப் போகுமுன் அண்டங்களை ஆட்டி வைக்கும் ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அத்தகைய ஆண்டவன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்வி இப்பொழுது வேண்டாம்
உலக நாகரீகம் வளர வளர, காணாதவற்றைக் காணக் காண அக்கேள்வி பலத்துக்கொண்டு வருகிறது. அதை விட்டு விடுவோம்

 

நாம் உயர்ந்த நிலையிலிருந்தோம். கீழான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே கொள்கை. நமக்கு ஆண்டவனைப்பற்றி நாம் உயர்ந்த நிலையி லிருந்திருக்கும்போது நன்கு தெரிந்திருக்கும். நாமும் அவனும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருப்போம். அப்போது நாம் எப்படிப் பாவும் செய்து கீழர்ன நிலையை அடைவோம் அல்லது அடைய முயல்வோம்? மேலும், அவன் நம்மைக் கீழான நிலைக்குக் கொண்டுவர விரும்புவானா? நாமும் முயலமாட்டோம்; அவனும் விரும்பமாட்டான்.

 

வாழ்க்கையின் மாயை யானது வெகு காலமாக மனிதனுக்கு ஒரு மர்மமா யிருந்தது. அதைத் தீர்க்கப் பலர் மிகப் பெரும் பிரயத்தனம் செய்து பல வழிகளைக் கண்டுபிடித்தனர். அவ் வழிகளே மதங்களாகவும் அவர்களே அம் மதங்களின் கர்த்தாக்களாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவ் வழியாகவே மதங்கள் உண்டாயின. மனிதன் பிறப்பதற்கு முன் எவ்வாறிருந்தான்? இறப்பிற்குப் பின் எவ்வாறிருப்பான்? என்று திட்டமாக ஒருவரும் கூற முடியாது. அநேக மதக் கர்த்தாக்கள் பல படியாகச் சொல்கிறார்கள். ஆனால் அவற்றை நம்ப ஒரு ஆதாரமுமில்லை. ஆகவே மனிதன் உயர்ந்த பதவியிலிருந்து இந்நிலையை அடையவில்லை என்பது தெளிவாகிறது.

 

டார்வின் என்பவருடைய சித்தாந்தத்தின்படி மந்தியிலிருந்து மனிதன் உண்டாயிருக்கிறான். ஆனால், மந்தி எதனிடமிருந்து உண்டாயிற்று? அது எதிலிருந்து வந்தது? இப்படியாகக் கேட்டுக்கொண்டே போனால், கடைசியில் சூன்யத்தில் வந்து நிற்கிறோம். ஆகையால் சூன்யத்திலிருந்து முதன் முதலில் ஏதோ ஒன்று உண்டாயிற்று. எப்படி ஐயா, அது உண்டாகும் என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம்! காலச் சக்கரம் சுழலும்போது எது தான் உண்டாகாது என்று கேட்கிறேன். ஓர் உதாரணம் கூறுகிறேன். ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து இரண்டாக நறுக்குங்கள் பின்னர் இரு துண்டுகளையும் ஒட்டிக் கொஞ்சநாள் வைத்திருங்கள். ஏழெட்டு நாட்களுக்குப் பின்னர் எடுத்தால் அவற்றில் புழுக்கள் நாட்டிய மாடுவதைப் பார்க்கலாம். அங்கு புழுக்கள் எப்படி வந்தன என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். இப்படியாகவே ஒரு காலத்தில் வெறுமையிலிருந்து வெப்பு உண்டாகி அதன் காரணமாய் உயிருள்ள ஜந்து உண்டாயிற்று; காலச்சக்கரம் சுழலச் சுழல அந்த ஜந்து பிராணியாகி மிருகமாயிற்று.

 

இனி, மிருகமாகிய மந்தியை எடுத்துக்கொள்வோம். மந்தியிலிருந்து எப்படி மனிதன் வந்தான் என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன். ஆனால் ஒன்று- நீங்கள் என்னை நம்பவேண்டும். க்ஷேத்திர கணிதத்தில் ஒரு கொள்கையை நிரூபிக்க “ரிடஷியோ அட் அப்சர்டம்” என்பதைக் கையாளுவார்கள். உதாரணமாக ஒன்று சொல்கிறேன். தற்காலத்தில் ஆண்கள் பெண்களுக்கு அடிமைகள் என்று நிரூபிக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்வோம். இப்பொழுது ஆண்கள் அடிமைகளாயிருந்தால் எவ்வாறிருப்பார்கள்? பெண்கள் கையில் இரும்புப் பெட்டித் திறவுகோலிருக்கும். பெண்கள் தாம் உலாவச் செல்வார்கள். (அல்லது அடுத்த தெருவில் வசிக்கும் சிநேகிதையிடம் பேசப் போவார்கள். ) அச்சமயத்தில் ஆண்கள் வீட்டைக் காத்துக் கொண்டிருக்க வேண்டும். இப்படியாக இருப்பார்கள். தற்காலத்தில் பெண்கள் இவற்றிற்கு ஒரு அணுகூடப் பிசகாது இவ்விதமாக ஆட்சி புரிகிறார்கள். ஆகையால் ஆண்கள் தங்கள் உரிமைகளை இழந்து பெண்களுக்கு அடிமையா யிருக்கிறார்கள். இவ்விதமாய் நிரூபிப்பது தான் “ரிட்ஷியோ அட் அப்சர்டம்” ஆகும்.

 

இப்பொழுது நாம் மனிதர்களிடம் மந்தியின் குணங்களைக் காண்கிறோம். மந்தியின் அவதார விசேஷங்களைக் கண்டுவிட்டால் தாங்க முடியாது சிரிக்கிறோம். மேனி அழகிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும் கோபுரங்கள் ஏறுவதிலும், வேகமுறப் பாய்வதிலும், (தலைப்பாகையில்) வால் வைத்துக் கொள்வதிலும், கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலும் அநேகர் மந்திக்கு நிகராயிருக்கின்றனர். ஆகையால் மனிதன் மந்தியிலிருந்து தான் வந்திருக்கிறா னென்ற முடிவுக்கு வருகிறோம். நம் நிலை வருங்காலத்தில் எவ்வாறு மாறுமோ நாமறியோம். அந்நிலையைச் சிலர் தங்கள் கற்பனைக் கண்ணால் பார்த்து விவரிக்கிறார்கள். அதைக் கேட்கும் போது நாம் நம்மைப் பார்த்தே சிரிக்கிறோம்.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - அக்டோபர் ௴

 

 

 

No comments:

Post a Comment