Friday, September 4, 2020

 

பரிமேலழகர்

(ம.ரா. போ. குருசுவாமி)

மொழிகளை வளம்படுத்துவாருமள் நூலாசிரியர்களும் உரையாசிரியர்களுமென இரு பாலினர் தலைமையானவர்கள். உயர்ந்த நூலாசிரியர் தோன்றுதல் அருமை; அதனினும் அருகை உயரிய உரையாசிரியர்கள் தோன்றுதல் தமிழ்மொழியின் தலைமை சான்ற நூலாசிரியர்களுள் முதன்மை பெறுவார் பொய்யா மொழியாராய திருவள்ளுவனார். அவர் தம் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பதின்மர். பதின்மர் உரையுள் இன்று நாம் சிறப்பாகக் காணுவன மணக்குடவர், பரிமேலழகர் என்றிவர்கள் கண்ட உரைகளே. மணக்குடவர் உரை காலத்தால் பரிமேலழகர்க்கு முந்தியது. மணக்குடவர் எழுதிய உரை மிகச் சுருங்கிய அளவிற்று; விரிந்த விளக்கங்களும், வேண்டும் இலக்கணக் குறிப்புகளும்
இல்லாதது. ஏனைய எண்மர் உரைகளையும், மணக்குடவர் உரையையும் மறையச் செய்து மேலோங்கி ஒளிர்ந்து விளங்குவது பரிமேலழகர் வரைந்த உரை ஒன்றேயாம். மற்றும், பரிமேலழகர் எட்டுத்தொகையுள் ஒன்றய பரிபாடலுக்கும் உரை செய்துள்ளார். இவருடைய உரைச் சிறப்புக் காணக் காண நயம் விரிந்து அருமை பரந்து தோன்றுவதாம்.

தமிழ்மொழியின் தறுகண் ஓங்குவதற்கேற்ற வீறுபெறு பரிமேலழகர் வரலாறு, தமிழர்க்குரிய ‘தனிச்சிறப்பு'க் கேற்பவே ஒன்றும் தெரிந்திலது. முந்நூறு ஆண்டுகட்கு முன்னர் கச்சிப்பதியில் ஒரு திருவாலயப் பூசாரியாக இருந்துவந்த ஒரு வைணவ அந்தணர் என்பது மட்டுமே பரிமேலழகரைப்பற்றி அறிஞர் கூறும் வரலாறு.

ஒரு நூலுக்கு உரை எழுதப் புகுந்த ஒருவருக்கு வேண்டுவனவாய பல ஆற்றல்களும் வியத்தகு முறையில் பரிமேலழகரிடம் அமைந்துள்ளன. வேறு நூல்களுக்கு உரை எழுதுவோரினும் திருக்குறளுக்கு உரை எழுதுவோருக்கு அருமையான ஆற்றல்களும், விரிந்த அறிவும், பரந்த நோக்கமும் இல்லையெனில், நீடு வாழும் நல்ல உரையினைக் காண்டல் இயலாது. மேற்கூறிய யாவும் பொருந்தப் பெற்றமையினால் தலைசிறந்த உரை யொன்றனைப் பரிமேலழகர் அருளினார். குறட்பாக்களாக அமைவதனால் பொருட் செறிவும், தொகை நிலைத் தொடர்களும் மிகுதியாகத் திருக்குறளில் காணப்படுகின்றன. அத்தகைய நிலையில் பரிமேலழகர் குறளைப் பயின்று பயின்று அதன் முழுத்தோற்றத்தையும் தம் மனத்தே நன்கு பதிய வைத்துப் பின்
பிறர் மனங்களினும் 'செலச் சொல்'லும் ஆற்றலமைந்த உரை ஒன்றனைக் கொடுத்தருளினார். 'நவில்தொறும் நூல்நயம்' என்பதற்கேற்பக் குறளையே பலகால் பயின்றமையால் தான் உயர்ந்த நயங்களை எடுத்துக் காட்டல் இயன்றது. பொருளற்ற அடைகள் வருதற்குத் திருக்குறளில் இடமில்லாமற் போகவே, வந்த அடைகட்கு ஏதாவது தக்க விளக்க உரை வேண்டும். இத்தகைய விதப்புக் கிளவிகட்கு உரை
எழுதுங்கால் பரிமேலழகர் காண்டற்கரிய பேரறிவாளராகத் திகழ்வார். 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்னும் திருக்குறளுக்கு விரிவுரை எழுதுங்கால் ஆசிரியர் 'வாய்' என்று கூறியதற்குரிய காரணங் கூறுவார். 'வாய் என்பது அவர் அப்பொருளின் கண் பயிலாமை உணர நின்றது' எனக் கூறுவர். குறளில் மூன்று அல்லது நான்கு இடங்களில் 'வாய்' என்ற விதப்புக் கிளவிக்கு இடத்திற்கேற்ற பயங்களைப் பரிமேலழகர் எடுத்துக் காட்டுவார். திருக்குறளில் வருகின்ற சொற்களில் ஒன்றேனும் ஆசிரியர் பரிமேலழகர் கருத்தினின்றும் தப்பமுடியாது. ஒவ்வொரு சொல்லுக்குரிய உரையும், வேண்டுமிடங்களில் விளக்கமும், இலக்கணக் குறிப்பும் எழுதுவார். இவர் வரைந்த திருக்குறள் உரையில் ஆங்காங்கே புறநானூறு, நற்றிணை, சீவகசிந்தாமணி என்றிவற்றின் மொழிகளைப் பொன்னேபோற் போற்றிப் பயன்படுத்துவார். இவர் உரையால் 'ஏரகம்' என்ற மறைந்த ஏலின் பெயரை உணர்கின்றோம். வழக்குகளை அடிக்கடி எடுத்துக் காட்டுதலில் மிக விருப்பமுடையவர்
போல் உரையாசிரியர் காணப்படுகின்றார். இலக்கணக் குறிப்பு வரையும் வகையில் இவருடைய உரையில் தனிப்பட்ட ஒரு குறிப்பினைக் காணுகின்றோம்; ஆகு பெயர்கள் வருகின்ற இடங்களில் அவற்றை இன்ன ஆகு பெயர்கள் என்று விளக்கிக் கூறும் வழக்கம் இவர்பால் இல்லை. படிப்போர் மனக்குறிப்பிற் கேற்றவாறு கொள்ளலாம் என்பது இவர் எண்ணமாக இருந்திருக்கவேண்டும். இவ்வகையான சிறப்புகள் இவ்வுரையி னகத்தே எண்ணில. படிக்குக்தொறும் படிக்குந்தொறும் பேரின்பம் பயப்பது என்று கூறுவதற்குரிய உரையொன் றுண்டென்னில் அஃது இப் பரிமேலழகர் உரை ஒன்றேதான். உமாபதி சிவாச்சாரியார்,

‘வள்ளுவர் சீர் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே

தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை – ஒள்ளியசீர்

தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்

தண்டமிழின் மேலாம் தாம்'

 

எனத் தலைசிறந்த தமிழ் நூல்கள் ஆறு எனக் குறிப்பிட்டார். அவற்றுள் ஒன்று திருக்குறள்; மற்றொன்று திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை. எனின், பரிமேலழகர் உரைச் சிறப்பு நன்கு வெளிப்படுமன்றோ?

'நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும்' என்பது போன்ற குறள் கட்கு சீரிய உரை வெளிப்பட்டது பரிமேலழகரால்தான். பரிமேலழகர் தம் உரையகத்தே பற்பல தமிழிலக்கியத் தொடர்களையும் கருத்துக்களையுமன்றி, வட நூற் கருத்துக்களை ஆங்காங்கே பெய்திருக்கின் றமையை நோக்குவார்க்கு அவருடைய தென், வடமொழிகளின் பேரறிவாற்றல் நன்கு தோன்றும். வடமொழி மதுமிருதி, அர்த்த சாத்திரம், தருக்க நூல்கள், வியாகரண நூல்கள் முதலிய எண்ணிறந்த நூல்களில் தேர்ந்த அறிவுடையவர் ஆசிரியர் பரிமேலழகர்.

மேற்காட்டிய சிறப்புகள் பலவற்றினும் சிறப்புடைய தன்மை ஒன்று பரிமேலழகர்பால் உண்டு. பொது நூல் செய்த வள்ளுவர் கருத்துக் கேற்பவே பொது நோக்கங் கொண்டவராய்ப் பரிமேலழகரும் உரை எழுதி ஓர், இக்காலத்தில் சைவர், வைணவர், சமணர், கிறிஸ்தவர் முதலாயினார் திருக்குறனைத் தத்தமக்குரிய நூலாக்க வெற்றாகச் சொற்போர் புரிகின்றனர், அக்காலத்தில் பரிமேலழகர் இத்தகைய சமயவெறியை விரும்பியிருப் வாரானால் பிறர் மறுத்துரைக்க இயலாதவாறு திருக்குறளை வைணவ நூலாக ஆக்கியிருப்பார். ஆனால், அவர் உண்மை உணர்ந்த உரவோராகலின், சமயநெறி நோக்கால் திருக்குறளை நோக்குதல் அறனன்று என
உணர்ந்து பொது நோக்குக்குரிய உரை ஒன்றனை வகுத்தார்.

மனிதனொருவன் எவ்வளவுதான் அறிவாலும், நோக்காலும் உயர்ந்தவனாக இருந்தாலும் வாழும் இடம் காலங்கட்கேற்ப அவன் ஒழுகியே தீர வேண்டும். இப்பொது விதியால் பரிமேலழகரும் பிணிக்கப்பட்டமை அவர் காலத்துப் போக்குக்கேற்ற எண்ணங்கள் குறள் உரையில் காணப்படுகின்றன. அவருடைய காலத்தில் 'பெண்கள் அறிவுக்கு உரியரல்லர்’ அவர்கள் உரிமைக்கு உரியரல்லர்' என்ற எண்ணங்கள் ஓங்கி இருந்தன. 'நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும் பெண்ணறிவேன்பது பெரும்பே தைமைத்தே' என்பது அவர்கள் பெருமையுடன் போற்றிக்கொண்ட கொள்கை. இத்தகைய கொள்கை பரவியிருந்த காலத்தவ ராகையின் பரிமேலழகர் ‘மக்கட்பேறு' என்பதைப் 'புதல்வரைப் பெறுதல்.' என ஆக்கினார். பெண்கள் மக்களல்லர் என்பது அக் காலத்தவர் போற்றி வைத்த மூட எண்ணம்! 'பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்டதாய்' என வள்ளுவர் கருதியதாக நமக்குப் பரிமேலழகர் அறிவிப்பதும் இக் கொள்கை பற்றியதேயாகும்.

அக்காலத்திய மக்கள் தமிழுக்கெனத் தனிச் சிறப்பு உண்டெனக் கொண்டிலர். ஆரியக் கருத்துக்களாலும், நூல்களாலும், முறைகளாறுமே தமிழ்மொழி ஓங்குவது என்று அப் பெருந்தகையினர்' எண்ணி யிருந்த காலக் கொடுமையிற்பட்ட பரிமேலழகரும் இந்த எண்ணத்தைத் திண்ணி தாகக் கொண்டிருந்தார். எனவே தான், பல இடங்களில் 'இது வடநூல் வழக்கு' என எடுத்துக் கூறுகின்றார். திருவள்ளுவர் வடநூல் வழக்குகளைப் பின் பற்றி யிருந்தாரெனக் கருதினாலும், பரிமேலழகர் கூறுகின்ற அளவுக்குப் பின்பற்றி யிருத்தல் இயலாது. மேற்கோளாக,

“குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

யற்றந் தரூஉம் பகை”

 

என்ற குறளுக் கெழுதிய விளக்கத்தினைக் காணலாம். ''இவை பற்றியல்லது பகைவர் அற்றம் தாராமையின் இவையே பகையாவன என்னும் வடநூலார் மதம் பற்றிக் குற்றமே அற்றம் தரூஉம் பகை" என்று வள்ளுவர் கருதியதாகப் பரிமேலழகர் கூறுகின்றார். குற்றங்களே இறுதி பயக்கக் கூடியவை; அக் குற்றங்கள் வாயிலாக அல்லது பகைவர்கள் இறுதி பயக்கமாட்டார்கள்' என்ற உண்மை வடநூலார்க்கே உண்டு போலும்!

குற்றம் என்பது மனிதன் கூடப் பிறந்தது. அஃது இல்லாத இடமில்லை. அளவு தான் மிக்கும் குறைந்தும் காணப்படும். இந்த உண்மையை நினைவார்க்குப் பரிமேலழகர் செய்த நன்மை தான் தெரியும். மதி களங்க முடையதாயினும் நாம் களங்கத்தை மறந்து திங்களைக் கண்டுதானே மகிழ்கின்றோம்? அது போலவே பரிமேலழகரின் உயர்பண்புகளின் பெருக்கத்தால் சின்னஞ் சிறியனவாய குற்றங்களே காணப்படவில்லை.

பரிமேலழகர் சிறந்த உரையாசிரியர். அவர் போன்ற உரையாசிரியர்கள் பிறத்தல் அது. வாழ்நாள் முழுதும் படிக்கப் படிக்கப் புதுப்புது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்த உரையினை நம் தமிழ்த் திருக்குறளுக்கு --ராய்த் தமிழுக்கு நல்கிய அவருடைய நற்பண்பினை வாழ்த்துவோம், வணங்குவோம்.

ஆனந்த போதினி – 1942 ௵ - மார்ச்சு ௴

 

No comments:

Post a Comment