Friday, September 4, 2020

 

பல்கலைப் பேரகராதி

(மு. த. வேலாயுதம்.)

 

பிரான்சு தேசத்தில் 18-ம் நூற்றாண்டில் 15-வது லூய் அரசன் அரசாட்சி செய்து வந்தான். இவன் அரசாட்சி பணக்காரர்களுக்குச் சாதகமாயிருந்ததே யொழிய, பொது மக்களுக்குரிய அரசாட்சியாய் விளங்கவில்லை. அரசன் இன்பத்தில் மூழ்கி அளவுக்கு மிஞ்சி கடன்பட்டு வாழ்ந்து வந்தான். இதனால் வருமானத்தைப் பார்க்கினும் செலவு அதிகப் பட்டதால் அவன் தன் அரசாட்சியில் அல்லலுற்றனர் மக்கள். இதனுக்குத்தான் வள்ளுவனார்.


‘ஆகாறுஅள விட்டிதாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை'


என்று கூறிவைத்தனரோ என்று நினைக்கவேண்டியதாய் விட்டது.

 

வெர்சாய் மலர்வன மாளிகையில், ஒரு நாள் 15-வது லூய் அரசன் தன் நண்பர்களுடன் ஒய்யாரமாகப் பேசிக் கொண்டிருந்தான். முதலில் வேட்டையாடுவதைப் பற்றிப் பேச்சு நிகழ்ந்து, இறுதியில் படிப்படியாக வெடி மருந்தைப்பற்றிப் பேச்சு சென்று விட்டது. இப்பேச்சில் எல்லோருங் கலந்து கொண்ட்னர். இவர்களுள் ஒருவர் ' வெடியுப்பு, கெந்தகம், கரி இவைகளைச் சமமாகக் கொண்டு நல்ல வெடி மருந்து செய்யலாம்' என்றார். அப்போது பிரான்சு தேசத்தில் பீரங்கிப் படையைச் சீர்படுத்தி வைத்த சேனாபதி வல்லியேர் என்பார் நல்ல மருந்து செய்வதற்குக் கெந்த ஒரு பாகமும், கரியொரு பாகமும், நன்றாய்ப் பண்படுத்திய வெடியுப்பு ஐந்து பாகமும் சேர்க்க வேண்டும்' என்றுரைத்தார்.
நிவானுவர் என்னுஞ் செல்வர், ' நாம் தினமும் காடை முதலிய பறவைகளை வெர்சாய் மலர் வனத்திற் கொன்று குவிக்கின்றோம்; இன்னும் சில சமயம் மனிதர்களையும் அதனால் உயிர் போக்குகின்றோம்; அல்லது அம்மருந்தைக் கொண்டே பகைவர் நம்மை யுங் கொல்கின்றனர். ஆனால், இவ்வாறு உதவும் வெடி மருந்து எவ்வாறு செயப்படுகிற தென்பதைத் தெரிந்துகொண்டோமில்லை ' என்றார். இதைக் கேட்ட போம்பதுர் சீமாட்டி, 'ஆமாம், இவ்வுலகத்திலுள்ள எல்லாப் பொருள்களைப் பற்றியுமே ஒன்றுந் தெரிந்து கொள்ள முடியவில்லை. நான் என் உதட்டில் பூசிக்கொண்டிருக்கும் சிவப்பு எதனால் செய்யப்பட்டது என்று தெரிய வில்லை. இன்னும் நான் போட்டுக் கொண்டிருக்கும் பட்டு கை. மேற்சோடு எப்படிச் செய்யப்பட்டதென்று என்னை யாராவது கேட்டால் எனக்குப் பதிலளிக்கப் பெருந் திண்டாட்டமாகி விடுகிறது' என்றாள்.

 

பின், வல்லியேர் என்னும் சேனாபதி அரசனைப் பார்த்து, அரசே! தாங்கள், பல்கலைப் பேரகராதியைப் பறி முதல் செய்தது மிகவும் வருந்தத்தக்கதாகும். அவ்வகராதியை யெழுதி முடிக்க எங்களொவ்வொருவருக்கும் 100 பொன் நாணயம் ஆயிற்று. இப்போது நடைபெற்ற வாதங்களுக்கெல்லாம், அந்தப் பேரகராதியில் விடையுண்டு. அதில் நாம் காணலாம் என்று கூறினார்.

இதைக் கேட்ட லூய் அரசன், அங்ஙனம் எல்லா வாதங்களுக்கும் பதிலிறுக்கக் கூடியதா அந்நூல் என்பதைச் சோதித்துப் பார்த்தற்குச் சிற்று பண்டிக்குப் பின் நூலைக் கொணருமாறு கட்டளையிட்டான். மூன்று பணியாளர் மிகவும் சிரமத்துடன் ஒவ்வொருவரும் எவ்வேழு புத்தகங்களைக் கொண்டு வந்தனர்.

 

அப்போது வெடி மருந்து என்ற வார்த்தையைப் பேரகராதியிற் பார்த்தனர். சேனாபதி வல்லியேர் தாம் அனுபவத்திற்கண்டதைக் கூறியவாறே விளக்கப்பட்டிருந்தது. உடனே போம்பதூர் சீமாட்டி ஸ்பெயின் நாட்டில், மத்ரீத் (Madrid) தில் உள்ள பெண்கள் தங்கள் கன்னங்களுக்குத் தடவி வந்த பழைய சிவப் பிற்கும் பாரீஸ் பெண்கள் தடவி வந்த சிவப்பிற்குமுள்ள மாற்றத்தை உணர்ந்தனள். இன்னும் கிரேக்கப் பெண்களும் உரோமப் பெண்களும் ஓர்வித கிளிஞ்சிலினின்று கசியும் சாயத்தைத் தடவி வந்தனர் என்றும் ஆதலால், பிரான்சு தேச மக்கள் தடவி வந்த சிவப்பு முன்னோர்கள் உபயோகப்படுத்தப் பட்டதென்றும், ஸ்பெயின் தேசத்தில் தடவிக் கொள்வதில் மஞ்சள் கலப்புடைய தென்றும், பிரான்சு தேசத்தில் தடவிக் கொள்வது பீதாம்பர வண்ணப் பூச்சியிலிருந்து வரும் சிவப்பென்றுங் கண்டாள்.

 

இன்னும், மேல் சோடு எவ்விதம் செய்யப்படுகிறதென்றும், அதை எவ்விதமான இயந்திரத்தி னுதவியால் ஆக்கப்படுகிறதென்றும் விளக்கமாய்க் கூறக் கண்டாள். அவள் மிகவும் பேராச்சரியமுற்று, "அரசே! இது எத்தகைய உயர்ந்த நூல்! என்னா சோங்க இந்நூலொன்றே போதும்' எனத் துணிவுடன் கூறினாள்.

 

இந்தப் புத்தகத்தினுயர்வைக் கண்ட ஒவ்வொருவரும் போற்றினர். அத்துடனில்லாது தாங்கள் தேடும் பதத்திற்கு அப்பொழுதே முடிவு கண்டு கொள்கின்றார்க ளாதலால் அப்புத்தகத்தைப் போட்டியிட்டு வாசித்துத் தெரிந்து கொள்ள விரும்பினர். வழக்குரைப்போர் தங்களுக்கேற்ற முடிவுக ளிருத்தலைக் கண்டனர். அரசன் தன் முடியரசின் உரிமைகளியாவையுங் கண்டான். அப்போது அரசன் வியப்புடையவனாய், 'ஏன் இந்நூலைப் பழித்துக் கூறினர்?' என்றான். அதற்கு நிவர்னுவா என்னுஞ் செல்வர் இது எல்லாப் புத்தகத்தினும் உயர்ந்து விளங்குவதால் தான் அவ்வாறு இழித்துக் கூறினர். தகுதியற்ற நூலையும், எதிலும் ஒவ்வாத நூலையும் உலகத்தி
தக்க எல்லோரும் லிகழார்கள். பெண்கள், புதியவளொருத்தி வந்தால், அவளைப்பற்றி யிழித்துக் கூறுவது. ஏனென்றால், வந்தவளின் அழகு இவர்களைப் பார்க்கிலும் மிக்கிருப்பதால் தான் '' என்று பகர்ந்தனர்.

 

இவ்வாறே இன்னும் பல மொழிகளை அப்பேரகராதியிற்
கண்டனர். ஓர் பிரபு, புத்தகத்தின் ஏட்டை ஒருவாறு புரட்டிப் பார்த்தபின் மகிழ்வுடன் மன்னனைப் பார்த்துக் கூறியதாவது, அரசே! உங்கள் அரசாட்சியில் பற்பல கலைகளையுந் தெரிந்து கொள்வதற்கும், தேசத்தில் செழிப்பு நிலவுதற்கும் மனிதர்கள் திறமுடையவர்களாய்க் காணப்படுகின்றனர். இவ்விதம் காணப்படுதலை நோக்க நீங்கள் பெரும்பேறு பெற்றவராவீர்கள். இந்நூலில் ஒர் குண்டூசி செய்யும் விதத்தைக் கூறுவது முதல், இரும்பை உருக்கி வெடி குண்டுகள் செய்யும் வரையிற் கூறப்
பட்டிருக்கிறது. மிகச் சிறிய பொருளிலிருந்து மிகப் பெரிய பொருள் வரையில் கூறப்பட்டிருக்கிறது. உங்களாட்சியில், இவ்வுலகத்திற்குப் பெருந் தொண்டாற்றிய புலவர்கள் இத்தகைய அரும் பெரும் நூலைத் தோற்றுவித்தற்கு இறைவனுக்கு நன்றி கூறுங்கள். பிற நாட்டினரும் இதை வாங்குதல் வேண்டும் அல்லது அவர்கள் இதைப் பின்பற்றி ஓர் நூல் எழுதி வெளியிடல் வேண்டும். தாங்கள் விழைவுற்றால் என்னுடைய எல்லாப் பொருள்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்; ஆனால், இப்பேரகராதி
யை மாத்திரம் என்னிடம் தந்து விடுங்கள்' என இவ்வாறு கூறினார்.

 

இதைக் கேட்ட அரசன், 'இத்தகைய உயர்ந்த நூலில் பிழைகள் மலிந்துள்ளனவென்று கூறுகின்றார்களே' என்றான். அதற்கு அப்பிரபு, ' அரசே தங்கள் உணவில், இரண்டு பதார்த்தங்கள் கெட்டு விட்டன வைத்துக் கொள்வோம். இதற்காக உணவை நாம் சாப்பிடவில்லையா? கெட்ட இரண்டு பதார்த்தத்திற்காக எல்லா உணவையும் தெருவில் எறிந்து விட உங்கள் மனது சம்மதிக்குமோ?' என்றான். அரசன் நீதி யுணர்ந்தான். எல்லோரும் அப்பேரகராதியை உபயோகிக்கத் தொடங்கினர். இறுதியில் என்ன ஏற்பட்டது? இந் நூலைப் பிற நாட்டினரும் நான்கு முறை அச்சியியற்றி வந்தனர். இதனால் ஏறக்குறைய 18 லட்சம் எக்குய் லாபங் கிடைத்ததாம். இதுவே பிராஞ்சு மொழியில் ஏற்பட்ட பல்கலைப் பேரகராதி பரவியதன் காரணமாகும்.


குறிப்பு: - வொல்தேர்
(voltaire) என்னும் புலவருக்கு XV-வது லூய் அரசனின் பணியாளனொருவனால் கூறப்பட்டதென்று அவர் எழுதியது.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - ஜனவரி ௴

 



No comments:

Post a Comment