Wednesday, September 2, 2020

 

தனக்கு மிஞ்சித் தருமம்

 

தெய்வத் திருநாடென்னு மிப்பாரத நாட்டின்கண் பண்டைக் காலத்தில் வதிந்திருந்த நமது முன்னோர்கள் விலைமதிப்பற்ற எண்ணரிய பழமொழிகளைத் தமது நுகர்ச்சிமுகத்தாற்கண்டு, விண்டு போயினர். அவைகளுட் சில தமக்குரிய நிலையினின்றும் மாறுதலுற்று, ஓரெழுத்தேறினுங் குறையினும் வேறுபொருள் தந்து, நடைமுதலில் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் மேற்குறித்த பழமொழியும் ஒன்றாகும்.

 

இப்பழமொழியானது "தனக்கு (ம்) மிஞ்சித் தருமம்'' என்றிருக்க வேண்டியது: உலகவழக்கில் (ம) கரவொற்று உச்சரிப்பினின்றும் நீங்கிடவே, அது "தனக்கு மிஞ்சித் தருமம்" என்று வழங்கப்பட்டு வருகின்றது. பழைய நூல்களுக்கும் புதிய நூல்களுக்கும் பாடபேதம் அளவிறந்திருப்பதை நோக்குங்கால் பழமொழிகள், ஒன்று, மற்றொன்றின் கருத்தாகமாறி வழங்கப்படுவது ஓர் வியப்பன்று!

 

"தனக்கு மிஞ்சித்தருமம்"என்பதற்கு, "ஒருவன் தனக்கும், தன்னைச் சேர்ந்தவர் கட்கும் வேண்டிய அளவு எதையுஞ் சித்தப்படுத்திக் கொண்டு, அதற்குமேல் ஏதாகிலும் எஞ்சியிருப்பின், அஃதைப் பிறருக்கீய வேண்டுவதே தருமமென்றிதற்குப் பொருடொனியா நிற்கும். இங்ஙனம் பொருடரும் பழமொழியை மாந்தர்கட்குத் தருமஞ் செய்யப் போதிக்கவந்த பெரியார் கூறியிருப்பாரா? செவ்விய நூல்களை யாராய்ச்சி செய்த பெரியோர்கள் கூறியுள்ள பழமொழிகளியாவும் அந்நூற்களின் கருத்துக்கும் ஒத்துள்ளன. ஆகவே ''தனக்குமிஞ்சித் தருமம்" என்று பெரியார் கூறியிருப்பின் அது மேலோர்களின் நூற் கருத்துக்கு மாறுபடுமன்றோ!

 

இவ்வுலகத்தில் ஆசையென்பது எவரையும் விட்டபாடில்லை. உலகமெல்லா மொருகுடைக்கீழடங்க, அரசாளும் வேந்தர் வேந்தனும், கடலிலுங் கொஞ்சம் வளைத்து, பண்படுத்தி, அங்கேயும் தனது குடிகளைவதியச் செய்து அரசாள மாட்டோமா? என் றெண்ணுவான். குபேரனுக்கு நிகராகத் திரண்ட நிதிக்குவியல்களைக் கொண்டுள்ள தனவந்தர்களும் செம்பு, வெள்ளிகளைப் பொன்னாக்கும் வித்தையைக் கற்றுக்கொள்ள நினைத்தேங்குவார்கள். இங்ஙனமாக, ஆசையானது தனக்கு அடிமையானவர்களை அவர்களின் கடைசிக்காலம் வரையிலும் படாதபாடு படுத்திவிடுகின்றது.

 

ஆகவே, ஒருவன் இப்பூமியில்வதியும் வரையில், அவனை ஆசைவிடாதீர்க்க அதன் வயப்பட்டுழன்று, "போதுமென்ற திருப்தி கொஞ்சமுமில்லாமல் அலைகடற்றுரும்பாய் வாடும் போது, அவனுக்குப் "போதும்'' என்ற காலம் என்று போதரும்? அவனுக்கும், அவனுடைய கிளைகட்கும் வேண்டிய பொருள்களைத் தேடிச் சேமித்து வைப்பதெப்போது? அவர்கட்குப் பொருள் திருப்தியாகி மிஞ்சிவருவ தெக்காலம்? அஃதொருநாளும் நிறைவேறாத செய்கையென்றே செப்பலாம்.

 

கடலில் அலை ஓய்ந்ததுந் தலைழுமுகுவோமென்று காத்திருக்கு மொருவன், எங்ஙனம் அலை ஓயாதொழிய, அவனும் தலை முழுகாதொழிவனோ, அங்ஙனமே, ஒருவன், தனக்கு வேண்டிய மட்டும் "போதும்" என்ற நிறைவு நேராதொழிய, தருமஞ் செய்வதற்கும் அதுபோல் நேராதொழியும்.

 

புல்லின் நுனியிற்றங்கி யொளிவீசும் பனித்துளி கதிரவன் வரவைக் கண்டதும் இருந்த இடந்தெரியாமல் மறைந்து விடுவது போலவே ஒவ்வொருவருடைய யாக்கையும் நிலையற்றது. ஆதலின் இவ்வுயிர் இருக்கும் போதே ஒவ்வொருவருந் தம்மாற் செய்யக்கூடிய தருமங்களை யிப்பொழுதே செய்ய வேண்டு மென்ற கருத்துத் தோன்ற,


 "புன்னுனிமே னீர்போ னிலையாமை யென்றெண்ணி
 யின்னினியே செய்க அறவினை " –

என்றும்,


 ''மற்றறிவாம் நல்வினை, யாமிளைய மென்னாது
 கைத் துண்டாம் போழ்தே கரவாதறஞ் செய்ம்மின்''


 என்றும் நாலடியாரும்,


 "அன்றறிவா மென்னா தறஞ்செய்க; மற்றது
 பொன்றுங்காற் பொன்றாத் துணை''

 

என்று வள்ளுவர் நூலுங் கூறியிருப்பதாலும், ஒவ்வொருவரும் இதே நேரத்தில் தருமஞ்செய்தல் வேண்டு மென்பது பெறப்பட்டது. ஆகலின் " தனக்குமிஞ்சித் தருமம் " என்று பழமொழி நிலவுமானால் அஃது அறிவான்ற மேலோர்களின் நூற்கருத்துக்கு ஒத்துவராதொழியும், எனவே, அப்பழமொழி, "தனக்கும் மிஞ்சித் தருமம்'' என்றே அமைந்திருத்தல் வேண்டும். " தனக்கும் மிஞ்சித்தருமம்'' என்பதைப் பற்றி மறுமுறையும் கவனிப்பாம்.

 

சென்ற ஆவணி வெளியீட்டில் ''தனக்கு மிஞ்சித்தருமம்'' என்பது ''தனக்கும் மிஞ்சித்தருமம்'' என்று தான் இருக்கவேண்டு மென்பதைப் பற்றிச் சிறிது கூறினாம். இப்போது "தனக்கும் மிஞ்சித்தருமம்'' என்பு தைப்பற்றியுஞ் சிறிது புகல்வாம்.

 

மேற்கூறியுள்ள பழமொழிக்கு "தன் உயிரே பிரிவுற வேண்டிய சமயம் நேரினும் பிறர்க்குதவி செய்யவேண்டும் பொழுது அதையும் பொருட்படுத் தாமற் செய்ய வேண்டுவதே தருமமாகு'' மென்று பொருள் போதரும்.

 

இம்மகிதலத்தில் உயிரோடு வாழும் ஒவ்வொருவரும் தம் உயிர் பிரிந்த பிறகு, சாந்தியடைவதற்குத் தருமஞ் செய்வதே இயல்பாக நிகழ, தம் உயிர்க்கே ஆபத்தைத் தேடிக்கொண்டு பிறர்க்கு யாங்ஙனம் தருமமியற்ற முடியும்? என்று பலர்க்கும் ஐயமுண்டாகலாம். ஒவ்வொருவருடைய உயிரும் இன்ன தன்மையுடையது, அஃது இம்முறையான் நமக்குச் சொந்தமுடையது, இவ்வுயிரின் கனாகனம் இன்ன அளவிலுள்ள தென்று இதுவரையிலும் இல்லறவாசிகளாக வாழ்ந்து வரும் எம்போன்றார்க்கு விளங்கிற்றின்று. ஆகவே ஒவ்வொருவருடைய உயிர்க்கும், உடம்புக்கும் யாதொரு பந்தமும் இல்லை. ஒரு கூட்டிற்குள் இருக்கும் பறவை அக்கூட்டைத் தனிப்படுத்தி, அதைவிட்டுப் பறந்து விடுமாபோல் உடலை விட்டு உயிர் பிரிந்துலிடுவது இயற்கையேயாம்.  ஆன்மசொரூபமாக விளங்கும் ஒவ்வொருவருக்கும் தத்தம்தேகம் என்றிருப்பினும் அழிவடையக் கூடியதே என்ற நீதியானது அறிவுச்சுடர் கொளுத்த வேண்டியதே.

 

அன்புருவாய்த் திகழும் அன்பர்கட்கோவெனிற் றத்தம் தேகத்தினிடமாக யாதொரு பற்றையுங் கொள்ள இடமின்றி வாழ்ந்துவர அவர்கள் மேன்மை பொருந்திய அறிவு நிச்சயப்படுத்தி விட்டது. அன்னோர்கள் எஞ்ஞான்றும் தம்முடைய பயன்கருதி யாதொரு நிகழ்ச்சியையும் புரிவதில்லை. பிறவுயிர் கட்கு நன்மை செய்வதையே அவர்கள் தமக்கு அணிகலனாகப் பூண்டுள்ளவர்கள். அதனால் பிறருடைய நன்மையின் பொருட்டுத் தம் எலும்பையும் கொடுக்கக்கூடியவர்கள். உலகவிருளை யடியோடு நீக்கி, உலகத்தார்க்கு இன்பத்தை யுண்டாக்கும் நிலாவுந் தன்னிடம் பொருந்தி யிடைவிடாதிருக்குங் களங்கத்தை நீக்கிக் கொள்ள முயற்சிப்பதில்லை. அங்ஙனமே, அறிஞர்கள் தங்குறைகளைத் தீர்த்துக் கொள்ளாமல், பிறருக்குண்டாகும் வெம்மையான நோய்களை நீக்கத் தம் உடல், பொருள், ஆவி இம்மூன்றையு முதவுவர்.


 "தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
 வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - - திங்கள்
 கறையிருளை நீக்கக் கருதா துலகி
 னிறையிருளை நீக்குமே நின்று''

 

என்பர் மேலோர். ஆகவே அறிவாளிகள் பிறருடைய நன்மைக்காகப் பாடுபடும் பொழுது தம்மைப்பற்றிக் கவனிக்கமாட்டார்க ளென்பது இங்குப் பெறப்பட்டது. இது நிற்க, "தனக்கும் மிஞ்சித்தருமம்'' என்பதைப்பற்றி நாம் ஆராயுமிடத்து அதற்கு வேண்டிய பொருள்களைத்தர, பெரியோர்களுடைய நூல்களைக்கொண்டு ஆதாரம் காட்ட வேண்டுவது இன்றி யமையாததே யாயினும், சாதாரணமாக நம் துகர்ச்சியினிடையே நடைபெறும் பலவித சந்தர்ப்பங் களைக்கொண்டு காட்டுவதும் நன்றேயாம்.

 

ஒரு ஆற்றில் ஒருவன் அடித்துக்கொண்டு போகப் பட்டால் அவனைக் கண்டமற்றொருவன் அடித்துக் கொண்டு போகப்படுபவன் மேல் இளகியமனங் கொண்டு அவனைக் காப்பாற்ற, தானும் ஓர்சமயம் அதில் குதித்து அவனைக் கொண்டுவர முயற்சி செய்யும்பொழுது, ஆற்றில் விழுந்தவனைக் காப்பாற்றிக் கொண்டு வந்தாலும் வருவான்; அன்றித் தானும் அவனுடன் அடித்துக் கொண்டு போகப்பட்டாலும் படலாம். இதைப்போலவே தீபற்றிக் கொண்டு எரியும் ஒரு வீட்டில் அகப்பட்டுள்ளவரைக் காப்பாற்ற முன்வந்து அவ்வீட்டினுள் புகுந்து அங்கிருந்தவர்களையுங் காப்பாற்றாமல் தாங்களும் அவர்களுடன் அதனுள் அகப்பட்டுத் தீக்கிரையாயினோர் பலர். இதுவுந்தவிர, ஒவ்வொருவருடைய தாய்நாட்டிற்குச் சில சமயங்களில் ஆபத்து நேரும்பொழுது எவ்வளவோ பெயர்கள் தம் உயிரைத் திரணமாகமதித்துத் தேசத்திற்காகப் பாடுபட்டுச் சண்டை செய்து தம் உயிரையிழந்து வீரசுவர்க்கம் புகுந்தனர். இன்னும் இவைபோன்ற பல செயல்களை நாம் புகலலாமாயினும் இவ்வளவோடு நிறுத்துவோம். இவைகளைச் செய்யும் அன்பர்கள் தம் உயிருக்குப் பயப்படாமல் அது போனாலும் போகட்டுமென்று துணிந்து பரோபகாரார்த்தமாகத் தேக தர்மஞ் செய்திருக்கின்றனர். "தனக்கும் மிஞ்சித் தருமம்'' என்பதற்குப் பெரியோர்கள் சரித்திரங்கள் வேண்டுமாயினும் இவண் இரண்டொன்றைக் குறிக்கலாம்.

 

(1) குமணன்: - தமிழில் செய்யுளியற்றும் புலவோர், தம் மேற் பாடல் செய்துகொண்டு வந்தால் அவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுத்த வள்ளல்களில் குமணச் சக்கரவர்த்தியும் ஒருவர். அவர் வள்ளன்மையைக் கண்ட அவர் தம்பி, அவரைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான். இதையறிந்த குமணவள்ளல் புறவு புகுந்து மறைந்திருந்தார். அக்கால் அவர்மீது ஒரு புலவர் பாடல் புனைந் து கொண்டுவந்து அவரை விசாரித்து, அவர் காட்டில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அவண் நெருங்கி, அப்பாடலை அவர் திருமுன் வைத்தார். அவரும் அதை வாசித்தின்புற்று, "ஐயா புலவரே! நீர் யான் ஆண்டிருந்த போது வந்திருப்பின் எவ்வளவோ பொன்பெறலாம்; ஆயினும் பழுதில்லை; என் தலையை வெட்டிக்கொண்டு செல்பவர்கட்கு ஐயாயிரம் பொன் பரிசளிப்பதாக என் தம்பி நவின்றுள்ளான். அங்ஙனமே நீர் என்றலையை வெட்டிக்கொண்டுபோய் அவனிடம் கொடுத்து அத்தொகையைப் பெற்று உமது மிடியைத் தீர்த்துக் கொள்ளும் என்னும் கருத்தமையப் பாடல் ஒன்று கூறினர். அதாவது:


 "அந்தநாள் வந்திலை யருங்கவிப் புலவோய்
 இந்தநாள் வந்து நீ நொந்தெனை யடைந்தாய்
 தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்து
 விலைதனைக் கொண்டுன் வெறுமைநோய் களையே''    
            என்பதாம்.


இதில், குமணச் சக்கரவர்த்தி புலவருடைய வறுமை நோயைக் களைவதற்குத் "தலைதனைக் கொடுபோய்'' என்று கூறியவிடத்தை நோக்குங்கால் "தனக்கும் மிஞ்சித் தருமம்” என்பது தானே பெறப்படும்.

 

(2) கன்னன்: - பாரதப்போர் நடந்தபொழுது பதினேழாம் நாள் சண்டையில், கேட்டோர்க் கில்லை யென்னுஞ் சொல்லை யுரையாத கன்னன், விஜயனுடைய அம்புகளால் உடல் முழுதுந் தைப்புண்டு, குருதிபாயக்கிடந்தபோது கார் எழிலிபோன்ற கருநிறவண்ணன் அர்ச்சுனனை, செருச் செய்யற்க, வென்று நிறுத்தி, தான் உண்மையான அந்தணவடிவுடன் கன்னனையணுகி,


 " தாண்டிய தரங்கக் கருங்கட லுடுத்த தரணியிற் றளர்ந்தவர் தமக்கு
 வேண்டிய தருதி நீயெனக் கேட்டேன் மேருவி னிடைத்தவம் பூண்டே
 னீண்டியவறுமைப் பெருந்துய ருழந்தேனியைந்ததொன்றிக்கணத்தளிப்பாய்

தூண்டியகவனத் துரகதத் தடந்தேர்ச் சுடர்தரத் தோன்றிய தோன்றால்''

 

என்று புகழ்ந்துரையா நிற்க, அதைக்கேட்டுக் கன்னன் " உமக்கென்ன வேண்டுமெனலும், கண்ணன் “நீ புரிந்துள்ள புண்ணிய மனைத்து முதவுக'' என்றியம்பினன். அதைச் செவியேற்றக் கன்னன் உளமகிழந்து,


'ஆவியோநிலையிற் கலங்கியதியாகீகை யகத்ததோ புறத்ததோ வறியேன்
 பாவியேன் வேண்டும் பொருளெலா நல்கும் பக்குவந் தன்னில்வந்திலையா லோவிலாதியான்செய் புண்ணியமனைத்து முதவினேன் கொள்க நீயுனக்குப்
 பூவில்வாழயனு நிகரிலனென்றாற் புண்ணிய மிதனிலும் பெரிதோ''

 

என்று கூறித் தன் உடலிற்றைத்திருந்த அம்புகளிலொன்றைப் பிடுங்கி, அவ் விடத்தினின்றும் வெளிப்பட்டகுருதி மூலமாகத் தாரைவார்த்துக் கண்ண பிரானாகிய அம்மறையவர்க்குத் தான் இயற்றியுள்ள புண்ணிய மனைத்தையு முதவினான்.

 

இதிலும் "ஆவியோ நிலையிற் கலங்கியது'' என்று கூறியுள்ள இடத்தை நோக்கும்போதும் "தனக்கும் மிஞ்சித் தருமம்" என்பது தானே போதரும். இன்னும் இவைபோன்றே சிபிச்சக்கரவர்த்தி முதலியவர்கள் சரித்திரங்களும் இதற்கு உதாரணமாக வெடுத்துக் கூறலாமாயினும் விரிவஞ்சி அவற்றை விடுத்தனம்.

 

ஆகலின் "தனக்கு மிஞ்சித் தருமம்'' என்பது மேலோருடைய நூற் கருத்துக்களுக்கும் சரித்திரங்களுக்கும் பொருந்தாததென்பதும், "தனக்கும் மிஞ்சித்தருமம் " என்பதே பெரியோர்களால் வழங்கப்பட்ட பழமொழியாகு மென்பதும் எமது சிற்றாராய்ச்சியிற் கிடைத்தனவாகும். அறிவிற்சிறந்த அன்பர்கள், " தனக்கும் மிஞ்சித் தருமம் " என்பது பொருந்தாதென்று கூறி, அதற்கு மேலோர்களுடைய நூற்கருத்துக்களையும், சரித்திரங்களையு மெடுத்துக்காட்டி யிதற்கு மறுப்பெழுதினும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளலாகும். ஆனால் அம்மறுப்பு அறிஞர்கள் நூற்கருத்துக்கொப்ப, ஒத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும்.


 மு. மாணிக்க நாயகர். தமிழாசிரியர்,

திருப்புவனை, புதுவை.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - நவம்பர் ௴

 

 

 

 

No comments:

Post a Comment