Wednesday, September 2, 2020

 

தனித்தமிழும் ஆங்கிலமும்

 

உமாதேவியாரை யிடது பாகத்திற் கொண்டு மழவிடைமீ திவர்ந்து வரும் இறைவன் முதன் முதலில் வடமொழியைப் பாணினி முனிவருக் கும், தென்மொழியைக் குறுமுனிக்கும் உலோகோபகாரமாக உபதேசித் தருளினார். அன்று தொட்டின்று வரையில் தமிழ்மொழியினால் நம் நாட்டில் மலிந்த சாற்றற்கரிய பெருஞ் செயல்களை நாம் பண்டைய நூற்களின் மூலமாய் இன்று உணர்ந்து வருகின்றோம். ஆகவே அமிழ்தினுமினிய தமிழ் மொழியின் செம்மையையும், அருமையையும், அற்புதத் தன்மையையும் நூலாராய்ச்சியின் மிக்க நிபுணர்கள் வரைந்து வருகின்றார்கள். அதனால் தமிழின் பெருமையை மீண்டும் இவண் வரைவதைவிட்டு மேலே செல்வாம்.

 

தென்மொழியும், வடமொழியும் ஒரே காலத்தில் சர்வஜீவதயாபரனாகிய இறைவனால் வெளியிடப்பட்டதனால் நம்முன்னோர்கள் இரண்டு மொழிகளையும் கற்று வந்தனர். பின்பு, பல அரசர்களின் மாறுதல்களினால் ஒவ்வொன்றின் விருத்தியுங் குறைவுபடத் தலைப்பட்டது. அதன் பயனாய்த் தற்போது வடமொழி உலகவழக்கற்று, எழுத்தளவில் மாத்திரம் இருந்து வருகின்றது. ஆனால் தமிழ், வடமொழியைப் போல் உலக வழக்கில் அழிந்து போகாமல் இருந்து வருகின்றது.

 

வடமொழியையும் தென்மொழியையும் நம் முன்னோர்களிற் பலர், கலந்து கற்று வந்தனர். அதனால் அன்னோரியற்றியருளிய நூல்களிலும் தமிழுடன் வடமொழி வார்த்தைகளையுங் கலந்து போந்தனர். அவ்வண்ணம், தமிழையும் வடமொழியையுங் கலந்துண்டாக்கிய நடைக்கு ''மணிப் பிரவாள நடை' யென்னும் பெயர் கொடுக்கப்பட்டது. இம்மணிப்பிர வாள நடையினால் தமிழ் வார்த்தைகள் பல மறைந்துவர ஏதுவாயிற்று.

இம்முறையால் தனித்தமிழ் சிதைவுற்றது. இன்று தமிழ் கற்க விழையுந் தமிழர்கட்கே, தனித் தமிழ் வார்த்தைகள். இன்னவென்று கண்டறியக்கூடவில்லை. நாம் தமிழ் வார்த்தைகளாகக் கருதியவைகளிற் சில வடமொழி வார்த்தைகளாகவே யிருக்கின்றன.
 

சாதாரணமாக, நாம் வழங்கிவரும் வார்த்தைகளாகிய ''கோபம்'', ''சாட்சி'' முதலியவைகளெல்லாம் வடமொழி வார்த்தைகளே! அவை கட்கு நேரான தமிழ் வார்த்தைகள், ''சினம், கரி' யென்பனவாகும். நாம் உலகவழக்கில் சினம், கரி முதலியவைகளை யடிக்கடி வழங்காமல் கோபம், சாட்சி முதலியவைகளையே வழங்கி வருகின்றோம்.
 

இன்னும் இவை போன்று பல வார்த்தைகள் தமிழில் மறைந்து வட மொழியில் வழங்கப்பட்டு வருகின்றன இதைக் கொண்டு நோக்குமிடத்துத் தனித்தமிழ் முன்னரே சிறிது மறைந்துவிட்ட தென்னலாம்: யாதொரு கலப்புமற்ற தனித்தமிழ், வடமொழியால் தன்னுடைய வார்த்தைகளை யெல்லாம் ஒருபுறம் இழந்து வந்தது. அது, போதாக்குறைக்கு, இன்னும் தமிழின் வார்த்தைகளை மங்க வைக்க ஆங்கிலமும் அதனுடன் சேர்ந்து வருகின்றது. தமிழ் ஒருபுறம் வடமொழியினாலும் மற்றொரு புறம் ஆங்கிலத்தினாலும் கொள்ளப்பட்டால் "தனித்தமிழ்' என்ற சொல் தான் எங்கே அந்தோ! தமிழே தமிழணங்கே! உன்கதி! என்னாம்!

தமிழ் வார்த்தைகளில் ஆங்கிலக் கலப்பு: - அமிழ்தினு மினிய தமிழ் மொழியோ பாரதநாட்டது. ஆங்கிலம் மேனாட்டது. தமிழ், தன் நாட்டில் தொன்று தொட்டு வழங்கப்படுவது. ஆங்கிலம், ஆங்கிலேயருடைய வருகை இந்தியாவிற் கேற்பட்ட பிறகு இவண் வழங்கப்படுவது. ஆகவே உள்நாட்டு மொழியாகிய தீந்தமிழ் மொழிக்கும், வெளிநாட்டு மொழியாகிய ஆங்கிலமொழிக்கும் யாதொரு பற்றுமின்று.

 

ஏற்கனவே, நமது முன்னோர்கள் உள்நாட்டு மொழிகளைக் கற்று வருங்கால், இந்தியாவில் நூதனமாகப் போந்த ஆங்கில மொழியையுங் கற்கும்படி தம்மக்களை யம்மொழியின் மாட்டவர்கள் கொண்ட புதுமோகத்தால் ஏவிவந்தனர். தம்மக்கட்கு இன்றியமையாததாகிய - சிற்றுயிர்க் குறு துணையாகிய - தெய்வத்தன்மை பொருந்திய - தேனினு மினிய தீந்தமிழ் மொழியைக் கற்க விடாமல் தடுத்தும் வந்தனர். இங்ஙனந் தாய் தந்தையர்கள் நிகழ்த்தி வந்ததனால் ஆங்கிலங் கற்கப் புகுந்த நண்பர்கட்குத் தமிழ் மொழியைக் கற்கவோ, அன்றி யம்மொழியின்மாட் டன்புறவோ இடமின்றிப் போய் விட்டது. அதன்பயனாக இன்று நிலவும் பாரதக்குழாந் தமிழில் அதிகமும் முன்னேறாமல் வருகின்றது.

 

ஆங்கில மொழியைக் கற்கப் புகுந்தவர்கள், அம்மொழியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கம் பெற்று வர வர, அவ்வார்த்தைகளைத் தங் கூட்டாளிகளுடன் சம்பாஷிக்கும் போது இடையிடையே தமிழ்மொழியைக் கலந்து பேசுவதும், தத்தம் வீடுகளிலுந் தாய் தந்தையர்கள் களிக்கத் தாங்கள் நூதனமாகக் கற்றுக்கொண்ட வார்த்தைகளைக் கலந்து கலந்து தம் இனிய தமிழ் மொழியைக் கெடுத்து, அவர்கட் கெடுத்துக்காட்டச் சம்பாஷிப்பதும் அவர்கட்கு ஓர்மகிழ்ச்சியே! இதை இற்றைமாணவரிடத்துக் காணலாம்.

 

இங்ஙனமாகப் புதுமையாய்வந்த ஓர் மொழியில் பழக்கம் பெற்ற ஒரு சிலர், பெருகிவர, அவர்கள் சம்பாஷணைகளுந் தமிழ் வார்த்தைகளைத் தள்ளியும், தள்ளியவற்றிற்குப் பதிலாக ஆங்கில வார்த்தைகளைக் கலந்தும் நிலவி வந்தன. அப்பழக்கத்தினாற் போந்த முழுப்பயனும் இன்று வெளிச்சமாய் விட்டது. தனித்தமிழ் பேச ஒருவர்க்குந் தெரியாதென்று சொல்லும் படியும் வந்துவிட்டது.

 

ஆங்கிலம் பயிலப்படும் இடங்களாகிய இந்திய நகர்களில் இந்த வேடிக்கை அதிகம். கிராமங்களில் அதிகமாய்க் கிடையாது. ஆயினும் கலப்புண்டு. நகரங்களில் ஆங்கிலங் கற்போர் கணக்கிலர். கிராமத்தில் அது மிகக் குறைவன்றோ! இந்தியாவில் எங்கும் பேசுவோர் மேனாட்டார் தவிர, மற்றெல்லோரும் இந்தியரே. அவர்கள் தம் தாய்மொழியைத் தனிப் படப் பேசுகிறார்களென்று துணிந்து சொல்வதற்கு நாவெழவில்லை. தமிழர்களாகிய நாமெல்லோரும் வார்த்தையாடும் போது தமிழில் தான் வார்த்தையாடுகின்றோம். ஆனால் அதனிடையில் நாம் கொண்டு கொட்டும் ஆங்கில வார்த்தை கட்கோ ஓர் எல்லையில்லை. ஒரு வாக்கியமாவது ஆங்கிலங்கலவாமல் பேசினோமாவென்பதுமையமே. இங்ஙனங் கலந்து பேசப்படுந் தமிழைத் தமிழென்பதா! ஆங்கிலமென்பதா! தமிழாங்கிலமென்பதா? ஆங்கிலத் தமிழென்பதா? இம்முறையில் எதையுஞ் சேராமல் தற்கால சம்பாஷணைகள் மிகக் கேடடைந்து நகைப்புக்கிடமாக வழங்கி வருகின்றன. ஆங்கிலம் தமிழில் கலந்து மொழியப்படுங் காரணத்தால் தமிழ் வார்த்தைகளெல்லாம் மறைந்து வருகின்றன. தமிழ் மொழியுங் கொலை செய்யப்பட்டு வருகின்ற தென்னலாம். ஆங்கில மொழியைக் கற்று உத்தியோகங்களிலமர்ந்து விளங்கும் எமது சகோதரர்களும், ஆங்கிலங்கற்று வரும் மாணவர்களும், ஆங்கிலங்கற்றதற்குத் தகுந்த மதிப்புத்தர வேண்டு மென்ற எண்ணத்தினாலோ, அல்லது தமிழ்மொழியில் ஆங்கிலங்கலந்தாற் றான் தமிழ்மொழிக்குப் புகழுண்டு என்ற நினைவினாலோ, அன்றி ஆங்கில மொழியைத் தமிழிற்கலந்தால் ஆங்கிலத்திற்கே மதிப்புண்டென்ற கருத்தாலோ, அன்றி மற்றெக்காரணத்தை முன்னிட்டோ தமிழ்நாட்டிற் பிறந்து தமிழர்கட்கு மக்களாகித் தாய்மொழியாகிய தமிழ்மொழியை விருத்தி செய்யவேண்டிய எமது சகோதரர்கள் அத்தமிழ்மொழியை ஆங்கிலத்தினால் மிகக் கேடடையச் செய்து வருகின்றார்கள்.

 

ஆங்கிலங் கற்றதற்காகத் தனிமதிப்பு, அதைக் கற்றவர்கட்கு வேண்டியதானாலும், அவர்களைப் போன்றே ஆங்கிலம் பயின்றவர்களிடத்தில் சுத்தமாக ஆங்கிலத்திலேயே உரையாடல் வேண்டும். அங்ஙனந் தனியாக ஆங்கிலத்திலுந் தமிழ்கலவாமல் பேசினால் அதற்கும் மதிப்பு உண்டெனலாம். ஆங்கிலத்திற் றனிப்பட மொழிவதால் ஆங்கில பாஷாபிவிருத்தியும் அவர்கட்கு உண்டாகலாம். அவர்கள் சம்பாஷணைகளுந் தனி ஆங்கிலமாகவே விளங்கும். அங்ஙனமின்றி அரைகுறையாக ஆங்கிலங் கற்றவர் போல் முழுதும் ஆங்கிலத்திற் பேசாமல் அரைப்பங்கு ஆங்கிலமும், அரைப் பங்கு தமிழுமாகக்கலந்து தம் சம்பாஷணைகளை யிருவழியிலுங் கெடுத்து வருகின்றனர். இம்முறையை நன்றாக ஆழ்ந்து பார்த்தால் தமிழராகிய நமக்கு வெட்கமாக இருக்குமன்றோ!

 

ஆங்கிலங்கற்று, ஆனந்தத்தை நுகர்ந்து வரும் நண்பர்கட்குத் தமிழில் முழுதும் பேசினால் வெட்கம் போலும்! அதனாற்றான் அவர்கள் தமிழிற் பேசப் பின்னிடைகிறார்கள். அவர்களிற் சிலர், தமிழும் ஓர் பாஷையா? என்று இகழ்ந்துரைக்கவுந் தலைப்படுகின்றனர். தமிழையே ஓர் பாலையாகக் கருத மனமற்றபோது தமிழில் பேசுவதற்கு மாத்திரம் யாங்ஙனம் அவர்கட்கு மனம் எழும், தமிழை ஓர் பாஷையாக அவர்கள் கருதாதது அவர்களுக்கு நீதியாகத் தோற்றும்! ஏன்? தமிழில் - தமிழ் நூற்களின் ஆராய்ச்சியின்மையால் அவர்கட்கு அதன் தெய்வீகத்தன்மையு மருஞ் செய்கைகளும் புலப்பட ஏதுவில்லை. இதுவும் நந் தாய்நாடு செய்த குறை போலும்!

 

தமிழில் பேசுவது ஆங்கிலங் கற்றவர்கட்குக் குறைவாகும் போது தமிழ்நாட்டில் - தமிழர்கட்குப் பிறந்ததுங் குறைவாகாதோ? தமிழை யிழி வாகப்பேசும் - கருதும் அன்பர்கள் இதைக் கவனிக்க வேண்டுவதும் அவசியமே.

 

தமிழ் எழுத்தில் ஆங்கிலக் கலப்பு: - சாதாரனமாக நடைபெறும் சம்பாஷணைகளில் ஆங்கிலம் யாதொரு தடையுமின்றிக் கலக்கப்படுவது போன்றே தமிழ் எழுத்துக்களில் (தமிழ் நூல்களில்) ஆங்கில வெழுத்துக்கள் (வார்த்தைகள்) கலந்தெழுதப்படுகின்றன. சம்பாஷணைகளிற் கலக்கப்படும் ஆங்கிலமாவது அந்தந்த நேரத்துடன் கழிந்துவிடும். என்றும் நிலவக்கூடிய தமிழ் நூல்களில் தமிழ்ப் பத்திரிகைகளிற் கலர்தெழுதுவது அந்நூற்கள் நிலவும் வரையில் அவைகளுங்கலந்து விளங்கி வரும். தமிழ் வார்த்தைகளில் ஆங்கிலங் கலப்பதைப்பற்றி முன்னர் வரைந்துள்ளதையே இதற்குங் கொள்ளலாம். தமிழ்நாட்டில் வழங்கப் பெறாத நூதனப்பொருட்களின் பெயர்களையோ, அல்லது பிறநாட்டார்களுடைய நுட்பமான செய்கைகளைக் குறிக்கும் புதிய ஆங்கில வார்த்தைகளையோ மிகவும் அவசியமெனத் தோன்றியவிடத்துச் சில மேதாவிகள் தமிழுடன் கலந்து வருகின்றனர். அதற்கு வேறு வழி யின்மையால் அஃது ஒப்புக்கொள்ளக் கூடியதே. ஆனால் அத்தகைய அரிய வார்த்தைகட்கு அடுத்துத் தமிழுரையும் பொறிக்கப்படுதல் மிகவும் அவசியம்.

 

தமிழ் மொழியில் நூல்களையியற்றும் ஆசிரியர்களிற் சிலர் தம் நூல்களுக்கு மேல்பக்கம், முகவுரை, சிறப்புப்பாயிரம் முதலானவைகளைப் பிற நாட்டு மொழியாகிய ஆங்கில மொழியினாலேயே ஏற்படுத்துகின்றனர். இம்முறையானது தீந் தமிழ் நூல்களுக்குப் பெருங் குறையையுண்டு பண்ணுவதாகும். தமிழ் மொழியில் நூலியற்றும் புலமை செறிந்த ஆசிரியர் கள் தம் தாய் மொழியாகிய தமிழ்மொழியின் வளர்ச்சியைக் கருதி யுழைப் போர்களேயாவர். அவர்கள் தமிழ்மொழியில் நூலியற்றித் தமக்குத் தம் சொந்தமொழியின் மாட்டுள்ள அன்பைத் தமிழருக் கெடுத்துக் காட்டுகின்றனர். அன்றியும் தமிழர்களது முன்னேற்றத்தையும் மொழி வளர்ச்சியையுங் கருதி நூல்களை வெளியாக்குகின்றனர். ஆகலின் இப்பெற்றியர் இயற்றும் நூல்களை வாசிக்க வேண்டியவர்களுந் தமிழர்களேயாவர்.

 

இஃதிங்ஙனமாக, தந் தாய்மொழியில் நூலியற்றித் தமிழர்களாகிய அன்பர்களுக்குப் பயன்படுத்துவான் போந்த நூலாசிரியர்களிற் சிலர், தங்கள் நூலுக்குப் பாயிரம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டுமென்று கருதி, அம் மொழியிலேயே தீட்டுகின்றனர். அன்றியும் அந்நூற்களுக்கு வேண்டிய சிறப்புரைகளையும் அவ் வாங்கில மொழியிலேயே பெற்றுப் பதிப்பிக்கின்றனர். இம்முறையும், தமிழ் நூற்களின் நலத்தைக் குறைப்பதாகும்.

 

எம்மொழியிலும் ஒரு நூல் வெளியிடப்படும் போது அதற்குச் சிறப்புறுத்த நூன்முகம், சிறப்புப்பாயிரம் இன்றியமையாதன. எந்நூலுக்குப் பாயிரமில்லையோ, அஃது எண்ணிறந்த பக்கங்களான் நிறைந்து தோற்றினும் ஓர் நூலாக மாட்டாது. ஒரு மாளிகைக்கு அதன்கட் டீட்டியுள்ள சித்திரங்களால் ஏற்படும் வனப்பைப் போலவும், மிகச் சிறந்த நகரத்திற்கு எழில் கொடுத்து விளங்குங் கோபுரத்தைப் போலவும், நாட்டியம் பயில்கின்ற நாரியின் நலத்தை மிகுவித்துக்காட்டும் அணிகலன்களைப்போலவும் ஒவ்வொரு நூலுக்கும் அதன் முகத்தில் ஓர் பதிகம் அமைந்திருப்பின் அந்தந்த நூலையும், அதன் பயனையும் அழகுபடுத்திக் காட்டாநிற்கும்.

 

அப்பெற்றிய சிறப்புள்ள புனைந்துரையைத் தமிழில் வெளிவந்த ஓர் நூலுக்கு ஆங்கிலத்தில் வரைவது நீதியா? அதற்கு வேண்டிய சிறப்புப் பாயிரங்களையும் பிறமொழியிலேயே கொள்ளப்படுவதும் முறையா? நூல் இயற்றும் நாடு - தமிழ் நாடு; நூல் இயற்றப்படும் மொழியும் - தமிழ்மொழி; நூலுக்கு ஆசிரியரும் - தமிழர்; நூலை வாசிப்பவர்களுந் தமிழர்களே! இவைகளையும் நோக்கும் போது யாவுந் தமிழ்மயமாக விளங்க, நூலுக்கு மேல் பக்கமும், முகவுரையும், சிறப்புப்பாயிரமும் ஆங்கிலமொழியில் பதிப்பித்தல் அழகாமோ! இத்தகை நூலைப் பார்க்குமிடத்து மேற்பக்கத்தில் ஆங்கிலமும், உள்ளே திறந்ததும் இரண்டு மூன்று ஏடுகளில் ஆங்கிலமும், மற்ற ஏடுகளிலெல்லாந் தெய்வத்தன்மை வாய்ந்த தீந்தமிழ் மொழியுமாக விளங்கும்.

 

தமிழ் நூலை வாசிக்கப்புகும் அன்பர்களிற் சிலருக்கு அன்னிய பாஷாபி விருத்தி யுண்டாயிருக்கலாம்; பலருக்கு அஃதில்லாமலு மிருக்கும். ஆகவே ஆங்கிலந் தெரியாதார் தமிழ் நுலை வாசிக்கப்புகுங்கால் அந்நூலின் தன்மை, அதன் ஆசிரியரின் உள்ளக் கிடக்கை, அதை வாசிப்போர் பெறும்பயன் முதலியவைகளை யறிந்து கொள்வதற்கு அன்னியமொழியினா லாகிய முகவுரை, சிறப்புரைகளெல்லாந் தடையாக நிலவுகின்றன. பிற மொழியிற் பதிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் யாவுமிருந்தும் அன்னிய பாஷைப் பழக்கமற்றவர்களுக்கு அவை இல்லாதவைபோன்று தோற்றுகின்றன.

 

ஆனால், ஒருசாரார், தமிழ் நூலுக்கு ஆங்கிலமுகவுரை முதலியவைகளிருப்பின் ஆங்கிலங்கற்ற நண்பர்கட்கு உதவுமன்றோ? எனலாம். ஆம்; உதவும். தமிழில் இருந்தால் தமிழ் நூலை வாசிக்கப்புகும் சத்திவாய்ந்த ஆங்கிலங்கற்ற நேயர்கட்கு உதவாமற் போகுமா? ஆங்கிலங்கற்ற ஒரு சாரார்க்கு உதவி, அஃதறியாத பலருக்கும் உதவாமற்போவதைப் பார்க்கிலும் இருதிறத்தார்க்கும் உதவும் வண்ணந் தமிழிலேயே அவைகள் அமைந்திருப்பின் எத்துணை நன்மையுண்டாகும். இதுதவிர, சில நூலாசிரியர்கள், தங்கள் நூலுக்குச் சிறப்புரை தருமாறு, ஆங்கிலங் கற்று மிகுந்த மேதாவிகளாகிய பட்டதாரிகளிடஞ்சென்று கேட்கின்றனர். அப்பெரியார்களும் தமிழ் நூலுக்கு மதிப்புரை, தமிழிற்றருவதைத் தவிர்த்து ஆங்கிலத்திலேயே தருகின்றனர். இதனாலுந் தமிழ் நூலுக்கு வேண்டிய அமைப்பு மாறுகின்றது.

 

இன்னுஞ் சிலர், தங்கள் பெயர்களை நூல்களிலும், பத்திரிகைகளிலும் தமிழும் ஆங்கிலமுமாகக் கலந்தே வரைகின்றனர். சிலருக்கு இஃதோர் மதிப்புடைய செய்கையாகத்தோற்றும்! ஆங்கிலத்திலேயே நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குக் கையெழுத்து, விலாசம் முதலியவைகளை ஆங்கிலத்திலேயே வரைய வேண்டியது அத்யாவசியமே. அம்முறையைத் தமிழிற் கொண்டு வந்து சேர்ப்பது அழகாகுமா? அவசியமில்லாத இடங்களாகிய தமிழ் நூல்களிலும் பத்திரிகைகளிலும் ஆங்கிலப்பிரயோகம் நீங்கி வருதல் தமிழின் அழகு அதிகப்படுவதற்கு ஓர் வழியாகும்.

 

ஆகவே, இக்கட்டுரையைக் கண்ணுறும் அன்பர்கள் பல வேறு அபிப்பிராய பேதங்களைக் கொண்டிருப்பவர்களாகலின் இதன்கண் சிலருக்கு வெறுப்புந் தோற்றா நிற்கும். ஆயினும்,

“தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை
யுண்ட பாலனை யழைத்தது மெலும்பு பெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்டமிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.''

 

என்ற பெரியாரின் திருவாக்கான் தெய்வத் தமிழ்மொழியின் இயற்கையான தெய்வீகசக்தியையுணர்ந்து, அதற்கு நேர்ந்த இடுக்கண்கள் நீங்க இனியேனும், அத்தகைய பிற நாட்டுத் தொடர்பு இல்லாமலிருக்கும் வண்ணஞ் செய்து கூடியவரையில் தமிழைக் கெடுக்காமல் எச்சரிக்கையாக வளர்த்து வரவேண்டியது தமிழரனைவர்க்கும் இன்றியமையாததாகும்.

 

தமிழுக்காகவே பதினோராண்டாக உழைத்து வரும் ஆனந்தபோதினியும், தன்னைப் பிறமொழியில் அலங்கரிப்பவர்கள் தமிழ் மொழியாலேயே அலங்கரிக்கும் வண்ணம் அவர்க்கு நினைப்பூட்டுவதும் நலமெனத் தோற்று கிறது. ஆனந்தபோதினியினுடைய சர்வநலங்களையுங் கோரியுழைத்து வரும் எமது அன்பார்ந்த பத்திரிகாசிரியரவர்களும் அதன்பால் பதிப்பதற் காகவருங் கையெழுத்துக்கள் முதலியவைகளைத் தமிழிலேயே எழுதிவரும்படி விஷயதானிகளுக்கு ஞாபகமூட்டுமாறும், ஆங்கிலத்தினால் வரக் கூடிய கையெழுத்துக்களைத் தமிழிலேயே பதிப்பிக்குமாறும் மிகுந்த வணக்கத்துடன் கேட்டுக் கொள்கின்றேன்.

 

மு மாணிக்க நாயகர், தமிழாசிரியர்,

 திருப்புவனை, புதுவை.

 

ஆனந்த போதினி – 1925,1926 ௵ -

டிசம்பர், ஜனவரி, ஏப்ரல் ௴

 

 

 

 

No comments:

Post a Comment