Wednesday, September 2, 2020

 

தெலுங்கு என்பது எது?

 

 ‘தெலுங்கு' அல்லது ‘தெனுகு' என்பது நமது பாரத நாட்டில் வழங்கிவரும் பலவிதமான தாய்ப்பாஷைகளில் ஒன்றாகும். இந்த பாஷையை வடமொழியில் ஆந்திரம்' என்பார்கள். தெலுகு, தெனுகு, தெலுங்கு என்னும் பதங்கள் எல்லாம் 'தெலிங்க' (ட்ரிலிங்க - Trilinga) என்னும் மொழியின் சிதைவுகளேயாம். ட்ரிலிங்கமாவது (திரிலிங்கம்) மூன்று லிங்கங்களடங்கிய நாடாகும், (வடமொழியில், திரி'(த்ரயம்) என்றால்
'மூன்று'; 'லிங்கம்' என்பது சிவனுக்கடையாளம்.) ஒரு காலத்தில் பரமசிவன் காலேசுவரம், ஸ்ரீசைலம், பீமேசுவரம் என்ற முன்று பர்வதங்களினுச்சியில் லிங்காகாரமூர்த்தியாய் இறங்கி விளங்கினாரென்கிற ஐதீகமும் ஒன்றுண்டு. ஆகவே அம்மூன்று லிங்கங்களும் ஆந்திர தேசத்தின் எல்லைகளைக் குறித்தனவென்றும், திரிலிங்க - தெலிங்க - தெலுங்கு (தெலுகு - Telugu) தேசமென்று பெயராயிற்றென்றுங் கூறுவர்.

 

நிற்க, 'தாய்பாஷை' என்பதியாது? அது. ஒன்றா, பலவா? நம் பாரத மக்களில் பெரும்பாலோர் இச் சொற்றொடரை தெளிவாய் அறிந்தார்களில்லை. சிலர் தாய்பாஷை' என்றால் தமது வீட்டு பாஷை (மதர் டங் Mother tongue) என்கிறார்கள். சிலர்'தாய்பாஷை' திராவிடமென வழங்கும் தமிழ் பாஷைதான் என்கிறார்கள். வீட்டு பாஷை எது? நாட்டு பாஷை எது? 'தமிழ் நாடு' முற்றிலும் தமிழ் பாஷை ஒன்றே வழங்கி வருகின்றதா? சென்ற 1921த்தில் விண்மீன்போல் தோன்றி மறைந்த கவிரத்னமாகிய ஸ்ரீமான் வி. சுப்ரமணிய பாரதியார் அவர்கள் 'எங்கள் தாய்' என்னும் தலையங்கத்தின் 3 - வது பாட்டில்

 

"முப்பது கோடி முகமுடை யாளுயிர்
 மொய்ம்புற வொன்றுடை யாள் - இவள்
 செப்பு மொழிபதி னெட்டுடை யாளெனிற்
 சிந்தனை யொன்றுடை யாள்''

 

என்றபடி பாரதத் தாயின் பாஷை ஒன்றல்ல. பதினெட்டு என்று கூறியுள்ளார். அவை திராவிடம், ஆந்திரம், கன்னடம், மராடம், கூர்ச்சரம், வங்காளி, ஹிந்தி, மலையாளம், துளுவம், காண்ட் முதலியனவே. இவை ஒவ்வொன்றும் 'தாய்பாஷை' என்பதற்கு ஐயமின்று. தமிழ்மக்கள் ஆந்திரதேசத்தவர்களை 'வடுகர்' என்று கூறுவதுமுண்டு. அதாவது வடக்கு தேசத்தவர், வடக்கத்தியார். தாய்பாஷை என்பது 'இராஜபாஷை' யைப் போல் ஒன்றல்ல. நமது இந்தியா முழுவதும் பரவி ஒருவர்க்கொருவர் பொதுவாய் அறிந்துகொள்வதற்குப் பெரும்பாலும் எளிதா யேற்பட்டுள்ள பாஷை 'ஆங்கிலம்' (English) என்கிற இராஜபாஷையே யாகும். ஆனால் ஆங்கிலத்திலும் தமிழ் நீங்கலாகவுள்ள எனையபாஷைகளிலும் தமிழ் மொழிகள் கலந்திருப்பதுண்மையே. தமிழின் தொன்மையையும் பெருமையையும் விசேஷமான ஆதாரங்களோடு நமது சகோதரர் ஸ்ரீமான் து. தீனதயாளு அவர்கள் 'ஆனந்தன் '7 - ம் ஆண்டு மதிகளில் நிரூபணஞ் செய்துளார்.

 

தெலுங்குபாஷையின் எல்லை: - தெலுங்கு தேசத்தில் பிறந்து தமிழ்நாட்டில் குடியேறி நிலைத்துவிட்டவர்களில் சிலர் தமிழும் சிலர் தெலுங்கும் ஏறக்குறைவாகப் பேசப் பழகிவிட்டனர். அதாவது சிலர் தமிழ்நாட்டில் நிலைத்து விட்டதனாலே தெலுங்கை மறந்துவிட்டு தமிழே பேசுகின்றனர். பிற்கூறிய சிலர் தமிழ் நாட்டில் பிரவேசித்து தமிழ் பேசுவோருடன் கலந்து வசித்தபோதிலும் தெலுங்கு பாஷையிலே பேசுகின்கின்றார்கள். அதை யவர்கள் மறந்துவி டுகிறதில்லை. தமிழ் பேசவும் கற்றுக் கொள்ளுகின்றனர். இவ்விருதிறத்தாருடைய 'தாய்பாஷை' எது? தெலுங்கேயாகும். தமிழாகாது. இவ்விதமே தமிழ்நாட்டிலிருந்து தெலுங்கு (ஆந்திர) தேசத்தில் குடியேறி நிலைத்து விடுகிறவர்களின் தாய்பாஷை' தமிழேயாகும், தெலுங்கன்று. ஆங்கிலேயரின் 'தாய்பாஷை' ஆங்கிலேயம் - இங்கிலீஷ்தான். சுறுங்கச் சொல்லின் 'தாய்பாஷை' என்பது ஒவ்வொரு குடும்பத்தினர் தத்தம் வீட்டில் பேசும் பாஷை யெனலாம். கலியுக விநோதங்களில் ஒன்றியாதெனில் பாரதமக்கள் பலபாஷை கலவாது மொழியார்! இதுதான் ஸம்பாஷணாக்ரமம் (ஸம்பாஷணை + (அ) கிரமம்) போலும். நாம் எடுத்துக்கொண்ட தலையங்கத்தினின்றும் வெகுதூரம் விலகிவிட்டது பொறுப்பீராக, தெலுங்குபாஷையானது இருபது கோடி இந்துக்களால் பேசப்படுகின்றன. அவர்கள் இந்தியாவின் கிழக்குபாகத்தில், சென்னையிலிருந்து கடற்கரையைச் சார்ந்த வங்காளம் (Bengal) வரையிலும் உள்ளே தக்ஷிண (Deccan) ப்ரதேசங்களிலும் வசிக்கின்றனர். இந்த எல்லைகளுக்குள் அடங்கியவை பின் வருவன: - பிரிட்டிஷ் அரசாங்கமுள்ள கஞ்சம், விசாகப்பட்டணம், கோதாவரி, கிருஷ்ணா, நெல்லூர் முதலிய ஜில்லாக்கள்; நிஜாம் பிரதேசங்களின் பெரும்பாகம்; ஒப்புக்கொடுத்த ஜில்லாக்கள் (Ceded Districts) - கர்நூல், கடப்பை, பெல்லாரி (வடக்கு, கிழக்கு பாகங்கள் மட்டும்); மைசூர் பிராந்தியத்தின் கிழக்குபாகமும் வட ஆற்காடுமே.

 

தெலுங்கு தேசத்தின் சரிதம்: - தெலுங்கரின் பூர்வ சரித்திரம் வேண்டுவோர் 'Elphinstone's History of India'' எல்பின்ஸ்டோன்'என்பவர் இயற்றிய 'இந்திய சரித்திரம்' என்னும் புத்தகத்திற் காணலாகும். பதினோறாம் நூற்றாண்டின் இறுதியில் 'விஷ்ணுவர்த்தனன் என்னும் அரசனும், பதினாறாம் நூற்றாண்டின் முதலில் 'கிருஷ்ண ராயலு' என்னும் மன்னனும் விஜயநகரத்தை யாண்டு வந்தனர். இவ்விரண்டு பூபதிகளே தெலுங்கு கலைஞானத்தைச் சாலவும் அபிமானித்து மிகுந்தபிரக்யாதி பெற்றார்கள். 'விஷ்ணுவர்மன்' அரசாட்சியில் தான் 'மஹாபாரதத்தின் முதற்பாகம் வடமொழியிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்க்கப் பட்டதெனக் கூறுகின்றனர். தெலுங்கான (Telingana) தேசத்தில் பழைய தலைநகராயிருந்த 'வாரங்கல்' (Warangal) சென்ற 1332 - ம் வருஷத்தில் மகம்மதியர்களின் கைவசமாயிற்று. அவர்களே 1556 - ம் விஜயநகரத்தையும் கைப்பற்றினார்கள். மகம்மதிய அரசாட்சியில் தெலுங்கு பாஷை ஆதரிப்பாரற்றிருந்தது. தவிரவும், அப்பாஷைக்குள் இந்துஸ்தானி முதலிய அந்நிய பதங்கள் நுழைந்துகொண்டன. தெலுங்கில் வடமொழிப் பதங்கள் பிரயோகப் படுத்தப்பட்டாலும், தெலுங்குபாஷை வடமொழியினின்று வந்ததன்று. தென்னிந்தியாவில் வழங்கிவரும் இதர பாஷைகளாகிய தமிழ், கன்னடம் முதலிய பாஷைகளின் தாதுக்களை (Roots) ஒட்டியே சுத்தமான தெலுங்கு பாஷை ஏற்பட்டது. தாய்ப்பாஷைகளில் தெலுங்கு நீங்கலாகவுள்ள ஏனைய பாஷைகளுக்கு 'திராவிடம்' என்றும் கூறுகின்றனர். ஆனால் தெலுங்கிலுள்ள பதங்களும் முக்கியமாய் உச்சரிப்பு விஷயத்தில் வடமொழியை நாடியிருக்கின்றன. வடமொழியிலுள்ள ஒரு சுலோகத்தை (கிரந்த அக்ஷரங்களிலோ அல்லது தேவநகரி எழுத்துக்களிலோ) தமிழில் எழுதுவதைக்காட்டிலும், தெலுங்கில் பதவுச்சரிப்பை நன்றாய் அறிந்து கொண்டு திருத்தமாய் எழுதவியலும். இதற்குக் காரணம் யாது? தெலுங்கு தேசத்தார் அந்தணர்களுடைய மதத்தைத் தழுவினார்கள். பிற்கூறியவர்கள் தான் மத அதிகாரிகளாயும், சாஸ்திர விற்பன்னர்களாயும் இருந்தனர். அவர்களுடைய பாஷை வடமொழியாதலாலும் அவர்கள் அநேகம்பேர் தெலுங்கரோடு கலந்து வசித்ததாலும், தெலுங்கு பாஷையில், அடிக்கடி கையாளப்படும் பதங்கள் முக்கியமாய் தத்வம், வேதாந்தம், சாஸ்திரம் இவைசம்பந்தமான வாக்கியங்கள் வடமொழியிலிருக்கின்றன. ஆதி தெலுங்கு இலக்கண கர்த்தாக்களனைவருங்கூட பிராமணர்களாததால், அவர்கள் தமது நூற்களில், ஒழுங்கு, உவமை முதலிய இலக்கணங்களை வடமொழியிலிருந்தே ஆக்கினர். அன்றியும் இலக்கணத்தையே வடமொழியில் பெரும்பாலுமியற்றினர்.

 
C. S. துரைஸ்வாமி அய்யங்கார்,

 'ஸ்ரீரங்கவிலாஸ்', சைதாப்பேட்டை.

 

ஆனந்த போதினி – 1923 ௵ - ஆகஸ்ட்டு ௴

 



   

 

No comments:

Post a Comment