Wednesday, September 2, 2020

 

தெய்வம் ஒன்றுண்டு

 

தரையையும், ஜலத்தையும் ஒரு உண்டைவடிவாய் ஒருங்கே திரட்டி அந்தரத்திலே ஒருவித ஆதாரமுமின்றி ஓயாது சுழன்று நிற்குமாறு செய்த வல்லவன் யார்? அவ்வுண்டையிலே பலவகைப் பேதப்பட்ட, உயிருள்ளனவும் இல்லாதனவுமான படைப்பினங்களைப் படைத்து வைத்த பெருந்திறலோன் யார்? மிக மிக நெடுந்தூரத்திலுள்ள சூரியனைக் கொண்டு பூமிக்கு ஒளியையும் உஷ்ணத்தையும் அளிக்கின்ற ஆற்றலுடையோன் யார்? சமுத்திர சலத்தை நீராவியாகவும், நீராவியை மேகமாகவும், மேகத்தை மழையாகவும் மாற்றி, உலகத்தைப் பாதுகாக்கின்ற உத்துங்கன் யார்? இங்ஙனமே வான சாஸ்திர ஆராய்ச்சியாளரால் கண்டு பிடிக்கப்பட்டனவும், படாதனவுமான எண்ணிலடங்காத எல்லா உலகங்களையும் சிருட்டித்து அதியொழுங்கு பெற ஆண்டு வருகின்ற அதிபன் யார்? அவன்தான் "ஆண்டவன்''.

 

மாலுமியில்லாத மரக்கலம் ஓடாது; குயவனில்லாமற் குடங்களுண்டாகா; சிருட்டிகளில்லாமற் சிருட்டிகளுண்டாகா; காரணமில்லாமல் காரியம் இல்லை. இவ்வளவையும் அறிவுள்ள அறிஞர் அட்டியின்றி அங்கீகரித்துக் கொள்ளுகின்றனர். ஆதலின் இந்தப் பெரிய பூவுலகமும், இதிலும் பெரிய சிறிய ஏனைய கிரகங்களும், அவற்றிலுள்ள அளவு கடந்த அத்தனை வஸ்துக்களும் ஒருவராற் சிருட்டிக்கப்படாமல் தாமாகவே உண்டாகிவிட முடியாதன்றோ? அக்கிரகங்கள் ஒருவராற் செலுத்தப்படாவிடின் அவை தாம் சுழலும் பாதை மாறாமற் கிரமமாய்ச் சுழன்று செல்ல முடியா தன்றோ? ஆகலின் அவற்றைச் சிருஷ்டித்து நடாத்துகின்ற "ஆண்டவன்” ஒருவன் உண்டே யுண்டென்பதில் எட்டுணையும் ஐயமின்று.

 

ஒரு சிலர் ஆண்டவன் இல்லை யென்றும், எல்லாம் இயற்கையாலுண்டாகின்றன வென்றும் வாதாடுகின்றார்கள். இவர்கள் தாம் நிரீஸ்வர்வாதிக ளென்ற நாஸ்திகர்கள். படைப்பினங்கட்கு இயற்கை காரணமாயின்இயற்கைக்குக் காரணம் ஒன்று வேண்டாமா? இயற்கையைப் படைத்தவர் யார்? ஆண்டவனே உண்டாக்கினான். அவதார புருஷர்களான இராம கிருஷ்ணராதியோரும், புத்தரும், தீர்க்கதரிசிகளான ஆபிரகாம், மோஸே, முஹம்மது (அலை) முதலியோரும், மற்றும் பல்லாயிரக் கணக்கான பேரறிஞர்களும் "ஆண்டவன் ஒருவன் இருக்கிறா'' னென்று எண்பித்துச் சென்றிருக்கும் போது இந்நாஸ்திகரின் வாதத்திற்கு என்ன மதிப்புண்டு? எனவே அன்னாரின் மொழிகளை உதறித் தள்ள வேண்டியதே.

 

ஹிந்து மதத்தார் கடவுளானவர் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என மும்மூர்த்திகளாயிருக்கிறா ரெனவும், கிறிஸ் தவர்கள் பிதா, குமாரன், பரிசுத்தாவி என மூன்றாயிருக்கிறா ரெனவும், முஸ்லிம்கள் இணை துணை, ஒப்புவமையற்ற தனி முதலான ஏகனாயிருக்கிறா ரெனவும் இயம்புகிறார்கள்; எனினும் பொதுவாக அவனியிலுள்ள அத்தனை மதத்தினரும் "தெய்வம்ஒன்றுதான்'' என்றே நம்பகிறார்கள். ஆகலின் கடவுள் ஒருவரே.

 

மனிதரை மற்றெல்லாப் பிராணிகளைக் காட்டினும் மிக மேலான விதத்திற் பராபரன் படைத்திருக்கிறான். ஏனைய பிராணிகளிடத்தில் இல்லாத ''பகுத்தறிவு'' என்றதை மாந்தரிடத்தில் அமைத்திருக்கிறான். இப்பகுத்தறிவை கொண்டு நமக்குத் துன்பந்தரும் தீயவற்றை அறிந்து அவற்றை விலக்கியும், இன்பர் தரும் நல்லவற்றை யறிந்து அவற்றைக் கைக்கொண்டும் நடந்து ஆனந்தமடைகிறோம். இங்ஙனமே நமக்கு ஆண்டவன் அளித்துள்ள உபகாரங்கள் அளவு கடந்தன.

 

ஆண்டவன், நாம் அவனை வணங்க வேண்டுமென்றும், வணங்கினால் இருலோகத்திலும் அவன் நமக்கு இன்பவாழ்வை யருள்வா னென்றும், வணங்கா விட்டால் துன்ப வாழ்வை யளிப்பானென்றும் வேதங்களிற் கட்டளை பண்ணி யுள்ளான். நமக்கு எவராவது ஒரு உபகாரத்தைச் செய்தால் நாம் நன்றி யறிதலோடு வந்தனம் செலுத்துவது நமது கடமையன்றோ? ஆதலின் ஆண்டவன் கட்டளை பண்ணினா லென்ன, பண்ணா விட்டா லென்ன, அவன் நமக்கு உபகரித்துள்ள, உபகரித்து வருகின்ற மட்டிலடங்கா உபகாரங்களுக்காக நன்றி யறிதலுடன் மனமொழி மெய்களால் அவனை வணங்க வேண்டியது நமது முக்கிய கடமையே.

 

ஆண்டகையின் ஆஞ்ஞைக் கடிபணிந்து அவனை அனவரதமும் வணங்கி வந்த பலகோடிக் கணக்கான பக்தர்கள் இருலோக பாக்கியங்களையும் பெற்றுக் கொண்டார்கள்; அவர்களை உலகம் என்றும் புகழ்ந்து கொண்டாடி வருகின்றது. அவனுடைய ஆஞ்ஞையை மதிக்காமலும், அவனை வணங்காமலு மிருந்த கொடிய பாவிகள் ஈருலகத்திலும் துரதிட்டவாளராயினார்கள்; அப்படிப்பட்டவர்களை உலகம் தூற்றுகின்றது.

 

ஆகலின் நல்லோர்களைப் போல நாமும் இறைவனை என்றுந் தொழுது இகத்திலும் பரத்திலும் இன்பத்தைப் பெற்றுக்கொள்ளக் கடவோம்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment