Friday, September 4, 2020

 

புகைவண்டிப் பொறாமை

 

தொன்றுதொட்டே அறிவு நூல்களையும், அற நூல்களையும் ஆர்வத்துடன் கற்று, தர்மமார்க்கத்தைக் கடைப்பிடித் தொழுகும் அறிவின் மிக்காரே மிகுதியும் பரவியிருந்து வந்த காரணத்தால் புண்ணிய பூமியெனப் பெயர் பெற்ற நம் பாரதநாட்டில் கால வேறுபாட்டால் மனிதரின் அறிவு மாறுபட்டுக் காலந்தோறும் பற்பல விகற்பத்தை அடைந்து வருகின்றது. அதனால் மனித சமூகத்தார் ஒழுக்கங்களிலும் மாறுபாடுடையவர்களாய்க் காணப்படுகின்றனர். அவர்களுள் சிலர், அறநெறி பிறழாது நடந்து மேம்பாடுற்று வாழ்ந்துவரினும் பெரும்பான்மையோர் அம்மார்க்கத்தினின்றும் நழுவினவர்களாய் நன்மையைத் தீமையாகவும், தீமையை நன்மையாகவும் கருதித் தங்கள் மனம் போனவாறே நடந்து உலகினுக்குப் பெருந்தீங்கை விளைவிக்கின்றனர். சுகமான மார்க்கங்களையும் துன்பமார்க்கங்களாக்கிக் கொண்டு அல்லலடைகின்றார்கள். அங்ஙனம் அவர்கள் துன்புறுவதுமன்றி மற்றையர்க்கும் துன்பத்தை விளைவிக்கின்றனர். இவற்றிற்கெல்லாம் முதல் காரணமாகப் பொறாமைக் குணத்தையே பொன்னைப் போலப் போற்றுகின்றனர். இந்தப் பொறாமையைப் பலவகைச் செயல்களிலும் உபயோகப்படுத்தி நலமிழந்து திரிகின்றனர். அவ்வாறு இவர்கள் கொள்ளும் பொறாமைச் செயல்களுள் ரெயில்வேப் பொறாமை முதன்மை பெற்றதாகும்.

 

இந்த இருப்புப்பாதைத்தொடர் புறநாட்டவரால், பொருளை வாரிக் கொண்டு போவதற்கு நம்நாட்டில் கொண்டு வந்து புகுத்தப்பட்டது; எங்கும் பரவியது, பரவிக்கொண்டிருப்பது, பரவப்போவது. இது, நாடோறும் நம்மவர் பொருள்களை இரகசியமாகக் கவர்ந்து கொண்டிருப்பினும் இதனால் சில சௌகரியங்களிருப்பதாக இங்குள்ளவர்கள் கருதினார்கள். தூரதேசங்களிலுள்ள அவசரகாரியங்களுக்கு விரைந்து செல்வதற்கும், வேறு சில காரியங்களுக்கும் மிகுந்த அனுகூலங்களிருப்பதாக இதனை மிகுதியும் விரும்பினார்கள். அதனால், காரியமுள்ள பலரும் இதில் ஏறிப் பிரயாணஞ் செய்யத் தொடங்கினார்கள். நாளேறவேற இவ்வகைப் பிரயாணம் நம் ஜனங்களுக்குள் அதிகரித்து விட்டது. காரியமில்லாதவர்களுங் கூட வீணே வேடிக்கை பார்க்கவும், டிராமா பார்க்கவும், சென்னை ஆனந்தபவன், ஆரிய பவன், கோமளவிலாஸ் முதலிய ஹோட்டல்களில் காப்பி பலகாரம் சாப்பிடவும், வேறு சில அடாச்செய்கைகளைச் செய்யவும் அளவுக்கு மிஞ்சிப் பிரயாணஞ் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டு விட்டார்கள். இதனால் புகைவண்டியில் கூட்டமில்லாத நாளே இராது. இப்படிக் கூட்டம் அதிகரிப்பதால் இவர்கள் நினைத்த சௌகரியத்திற் குப்பதிலாக அசௌகரியத்தையே உண்டாக்கிக் கொள்கிறார்கள். எவ்வளவு கூட்டமிருந்தாலும் இவர்களுக்குள் இனவொற்றுமை யிருந்தால் ஒருவர்க் கொருவர் உதவி செய்து கொஞ்சம் சௌகரியத்தை உண்டாக்கிக் கொள்ளலாம். அந்த ஒற்றுமைதான் நம்மவர்க்குள் ஏற்படுவது அருமையாயிருக்கின்றது. பொறாமைதான் அதிகரிக்கின்றது. இந்தப் பொறாமைக் குணத்தால் ஒருவர்க்கொருவர் செய்யும் இடைஞ்சல்கள் எண்ணில; இவற்றாலுண்டாம் துன்பங்களுக்கோ அளவில்லை.

 

மூன்னே போய் வண்டியில் ஏறிக்கொள்பவர்கள் பின்னே ஏறவருபவர்களைக் கண்டால் புலிகளைப் போல் உறுமுகிறார்கள்; சிங்கங்களைப் போல் சீறுகிறார்கள்; தங்களுக்கே வண்டி சொந்த மென நினைக்கிறார்கள்; மற்றவர்களும் தங்களைப் போல் பணங்கொடுத்தவர்கள் தாமே; அவர்களுக்கும் நாம் இடங் கொடுக்க வேண்டியது நியாயந்தானே என்ற உணர்ச்சி இவர்களிடம் சிறிது முண்டாவதில்லை. இவர்களுடைய பொறாமைச் செயல்கள் விநோதம் விநோதமாயிருக்கின்றன: வண்டியில் ஏறுதற்கும் இடமில்லாமல் மனிதர் திண்டாட்டப்படுங்காலத்தில், நெஞ்சிரக்க மற்ற ஒருவர், நான்கு பேர் இருக்கக் கூடிய ஒருபக்கப் பலகையில் விறைத்துப்படுத்துக்கொண்டு தம்மிடம் வந்து இடம் கேட்கும் மனிதர்களிடமெல்லாம் தமக்கு எழுந்திருக்க முடியாத நோயென்று பாசாங்கு செய்கிறார்; சாதாரண ஏழை மனிதர்களைக் கண்டால் அதிகாரம் செய்து துரத்தி விடுகிறார்; தம்மைப் போன்ற முண்டரைக்கண்டால் சண்டை போடுகிறார். வேறு சிலர் ஒரு கம்பார்ட்மெண்டிலிருந்து கொண்டு நான்கு பேருக்கு இடமிருக்கும்போதே, அங்கு வருகிறவர்களிடத்தில், இங்கேயிருக்கும் நாலுபேர் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார்கள் என்று பொய்கூறி அந்த இடத்தைப் பாதுகாக்க உபாயந் தேடுகிறார்கள்; இன்னும் சிலர், கதர் ஆடை அணிந்து, எல்லோரும் ஒற்றுமையா யிருக்க வேண்டும்; தேசப் பொதுநன்மைக்குப் பாடு படவேண்டும் என்று மகாதேசோபகாரிகளைப் போல் பிரசங்கம் புரிந்து கொண்டே வருகிறார்கள்; அவர்கள் இருக்கும் வண்டியில் நாலைந்துபேர் இருக்க இடமிருக்கிறது; அப்படியிருக்கும் போது வண்டி புறப்படும் சமயத்தில் பிரயாணி யொருவர், மனைவியுடனும், தாயாராகிய கிழவியுடனும், இரண்டு மூன்று சிறு குழந்தைகளுடனும் ஐந்தாறு மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு அவசரமாக அந்த வண்டியில் ஏறவருகிறார்; ஒற்றுமைக்குப் பிரசங்கம் செய்துகொண்டு வந்த புண்ணிய சீலர்கள் உடனே பாய்ந்து, 'இங்கே இடமில்லை; பக்கத்து வண்டியைப் பாரும்' என்று கழுத்தில் கையைப்போட்டுக் கீழே தள்ளிவிடுகிறார்கள்; வேறு பலர் நமக்கு உடம்பே சொந்த மில்லை; மற்ற பொருள்களில் என்ன சொந்தமிருக்கிறது?' என்று வேதாந்தம் பேசிக் கொண்டே வருகிறார்கள்; அவர்கள் இருக்கும் வண்டியில் இரண்டு பேருக்கு இடமிருக்கிறது; அப்போது ஒருவர் நெடுந்தூரத்திலிருந்து ஓடி வந்து இளைப்புடன் அவ்வண்டியிலேறப் போகிறார்; முன் வேதாந்தம் பேசியவர்கள், என்ன ஐயா! வேறே வண்டி பார்க்காமல் துரூ (Through) வாய்ப் போகும் எங்களிடம் வந்துதானா தொந்தரவு கொடுக்கவேண்டும்' என்று அவரை ஒரே தள்ளாகத் தள்ளிவிடுகிறார்கள். பின்னுஞ் சிலர் வண்டியில் ஏறப் போகும் போது இப்படியே பலரால் தள்ளப்பட்டு அவஸ்தை யடைந்து ஒருகம்பார்ட்டு மென்டிலுள்ளவர்களைக் கெஞ்சிக் கொஞ்சம் இடம் பெறுகிறார்கள். அவ்வாறு இடம் பெற்றிருந்தவுடன் தாம் முன் பட்ட பாட்டை மறந்து விடுகிறார்கள்; பின்னர் தாமே அவ்விடத்திற்கு அதிகாரியாய், வந்தவர்களைத் தள்ள ஆரம்பிக்கிறார்கள். ஒருவகுப்பார் கூட்டமாக வந்து ஒரு வண்டியில் ஏறுகிறார்கள்; அதில் முன்னே ஏறியிருந்த நல்லவர் ஒருவர், அவர்களை மரியாதையுடன் வரவேற்றுக் கொள்கிறார்; வந்தவர்கள், அவர் செய்த நன்றியை மறந்து அவரை ஒரு மூலையில் ஒதுக்கி நெருக்கி, 'நாங்கள் ஒரே இனத்தாராக இங்கிருக்கிறோம்; நீங்கள் வேறு வண்டிக்குப் போய் விட்டால் சௌகரியமாயிருக்கும்' என்று அவரை வெளியேற்றி விடப் பிரயத்தனப்படுகிறார்கள். சிலர், சில வண்டிகளில் கால்களைப் பரப்பி உட்கார்ந்து பலர் இருக்குமிடத்தை மறைத்துக் கொண்டு பிரயாணிகள் வரும்போது அவர்கட் கிடங் கொடுக்காமல் தஞ்சையிலிருந்து சென்னை வரும் வரை அவர்களை நிற்க வைத்து நெஞ்சிரக்க மற்றிருக்கிறார்கள். சிலர், தாங்கள் சௌகரியமாய்ப் படுத்துக் கொள்ளத் தக்க இடத்தைக் கவர்ந்து கொள்ளும் பொருட்டு அங்கே இட்டலியையும், சோற்றையும், தயிரையும், குழம்பையும், கலந்து சிதறி விட்டு வருகிறவர்களிடத்தில், 'இங்கே நோயாளி வாந்தி யெடுத்துக் கொண்டு கிடக்கிறார்' என்று கூறுகிறார்கள்; வந்தவர்கள் மூக்கைப்பிடித்துக் கொண்டு தாமே வேற்றிடஞ் சென்று விடுகிறார்கள். சிலர் உத்தியோக இறுமாப்பால் ஐரோப்பியரைப் போல் உடையணிந்து சில வண்டிகளில் இருந்து கொண்டு அங்கே வருகிறவர்களை உறுத்துப் பார்த்துத் துரத்துகிறார்கள். பொதுமகளிர் சிலர் இடம்பமாக ஆடையாபரணங்களை அணிந்து கொண்டு வந்தால் ஆடவர் சிலர் அவர் தயவைப் பெற வேண்டி அவர்களை ஒரு வண்டியில் வைத்துப் பூட்டி விடுகிறார்கள். பலர் இடமில்லாமல் துன்றும் போது அந்த நித்திய கலியாணிகள் சௌகரியமாய்ப் பிரயாணஞ் செய்கிறார்கள். சில நித்திராசுக வாசிகள், ஜனங்கள் நடந்து செல்லும் வழிகளில் படுக்கையை விரித்துப் படுத்துக்கொண்டு ஜலஸ் பரிசம் முதலிய அவசர காரியங்களுக்குப் போக வேண்டியவர்களுக்கும் வரவேண்டியவர்களுக்கும் வழிவிடாமல் வேறுபக்கம் எப்படியாவது செல்லுங்கள்' என்று சொல்லி வம்பு செய்கிறார்கள். மேற் கூறிய அவசர காரியக்காரர்கள் படுந்துன்பத்திற்கு அளவே யில்லை. சிலர் தங்கள் இனத்தாரைக் கண்டால் மாத்திரம் கூவியழைத்தாவது அவர்க் கிடங் கொடுத்து விட்டு மற்றையரைத் துரத்துகிறார்கள்.

 

இப்படியே இவர்கள் ஒருவர்க்கொருவர் எத்தனையோ எண்ணத் தொலையாத நெருக்கடிகளைச் செய்து இடுக்கணுறுகிறார்கள். அவற்றுள் ஒவ்வொன்றையும் எடுத்தெழுதுவதென்றால் இவ்வுரை மிக விரிவெய்தும். அவற்றை அனுபவத்தால் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளலாம். இந்தப் பொறாமைச் செயல்களால் புகைவண்டிப் பயணத்தில் நடக்கும் சண்டைச் சச்சரவுகள் எண்ணில. அந்தோ! ஒவ்வொருவரும் வண்டியில் கொஞ்ச நேரமே கொஞ்ச தூரமே பிரயாணஞ் செய்கிறார்கள். அதற்குள் இடப்பாத்தியங் கொண்டாடி ஏன் இவ்வாறு துன்பத்தை யுண்டாக்கிக் கொள்ள வேண்டும்? பணத்தையும் கொடுத்துவிட்டு ஏன் இந்தப் பாடுபட வேண்டும்? ஒவ்வொருவரும் இனவொற்றுமையையும், நடு நிலைமையையும், இரக்கசித்தத்தையும், பொறுமையையும், சுயநல மின்மையையும் கொண்டிருந்தால் இத்துன்பம் எப்பொழுதும் விளையமாட்டாதே. அந் நற்குணங்கள் பெரும்பான்மையோரிடம் இல்லாமையினாலல்லவா இப்பொல்லாங்குகள் நேருகின்றன. ரெயில்வே வேலைக்காரரால் பொது ஜனங்களுக்கு ஏற்படும் சகிக்கொணாத துன்பங்கள் ஒருபுறமிருக்க, அவற்றை நீக்கிக் கொள்ள முயலாமல் பொறாமைக் குணத்தால் நமக்கு நாமே துன்பங்களை விளைவித்துக் கொள்வது வியப்பினும் வியப்பு. இந்தச் சிறு விஷயத்தில் பிறருக்குச் சௌக்கிய முண்டாகப் பொறாத நாம் பெருங்காரியங்களில் ஒற்றுமை பெற்று நலமடைவதெப்படி? நாம் மற்ற நாட்டாரைப் போன்று நம்முடைய சுதந்தரங்களைப் பெற்று என்றும் இன்புற்றுச் சகல விஷயங்களிலும் சந்தோஷமடைந்து வாழவேண்டுமானால் இத்தகைய சிறுகாரியங்களிலும் ஒற்றுமை பெறவேண்டும்; ஒருவர் சுகத்தை ஒருவர் நாடவேண்டும்; நம் நாட்டாரனைவரையும் நம் சகோதரரென்றே கருதவேண்டும். இது சாதாரண விஷயமாகச் சிலருக்குத் தோற்றலாம். ஆழ்ந்து யோசிப்பார்க்கு, நம் நலத்தைக் கெடுப்பதற்கு இத்தகைய காரியங்களில் ஒற்றுமையற்ற தன்மையே காரணமென்பதும், இதனை அதிகமாக வற்புறுத்தி எழுதவேண்டு மென்பதும் விளங்கும்.


 

ஆதலின், இத்தகைய சமயங்களில் பொறாமைக் குணத்தை விடுத்து, எல்லோரும் சகோதரத்துவமடைந்து இன்புற்றுவாழும் நெறியில் நிலைபெற்று நிற்குமாறு இறைவன் அருள்புரிவானாக.

 

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - நவம்பர் ௴

 



 

No comments:

Post a Comment