Friday, September 4, 2020

 புகழுடம்பு பெற்ற புனிதன்

 

கவியாசர் கம்பர் தம் கவிதையில், புகழ்பெறுதலையே தன் முக்கிய நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து அந்நோக்கம் முட்டின்றி நிறைவேறத் தன்னுயிரையும் கொடுத்த பெருமகன் ஒருவன் உண்டெனில் அவன் சடாயுவே யாகவேண்டும்.


"தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு''

 

என்று கவியரசர் கூறுஞ் செஞ்சொற்களே அவன்றன் பெருமையை இனிது விளக்கும்.

 

அயோத்தி நகரை அறநெறிவழாது ஆண்ட அண்ணலான தயாதனின் உயிர்த்துணைவனாய் அமைந்த கழுகரசன் பஞ்சவடியைத் தன்னிருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றான். ''தாயுரைசெய், தந்தையேவ'' கானாளச் சென்ற கமலக் கண்ணானான இராமன் பஞ்சவடியில் அஞ்சாத நெஞ்சு படைத்த கழுகின் வேந்தனைக் காண்கின்றான்.


''முந்தொரு கருமலை முகட்டு முன்றிலின்
சந்திர னொளியொடு தழுவச் சாத்திய
அந்தமில் கனைகடல் அமரர் நாட்டிய
மந்தர கிரியென வயங்கு வான்றனை” க்


கண்ட வீரர் இருவரும் கழுகுருக் கொண்டு கானகத்தில் கரந்துறையும் அரக்கனோ இவன் என்று முதலில் ஐயுற்றார்கள். எனினும் பின்னர் அவன் இவர்களை யாவர் என வினவி இவர்கள் தயரதன் மக்கள் என்பதறிந்தபின் தன் அன்பன் மக்கள் தன்னை அடைந்ததால் உவகை மிக்கடைந்து பின்னர் ''வேந்தர் வேந்தன்றன் வரைத் தடந்தோளிணை வலியவோ" என்று கேட்கவும் அதற்கு மாற்றமாக மன்னன் மைந்தர்கள் “மறக்கமுற்றாதன வாய்மை காத்தவன் துறக்கமுற்றான்'' எனச் சொல்லவும் “இறக்கமுற்றான் என ஏக்கம் எய்தினான், உறக்கமுற்றான் என உணர்வு நீங்கினான்'' என்று கவியாசர், கழுகரசன், காவலன்பால் கொண்ட காதலை இனிது விளக்குவாராயினர். ன் இறந்ததை உணர்ந்த கழுகரசன் அரற்றும் உரைகள் அளவிறந்தன. மன்னன் மைந்தரைத் தன் மக்களாகவே கருதி,


''மருவினிய குணத்தவரை இரு சிறகால்
 உறத்தழுவி மக்காள்! நீரே
உரியகடன் வினையேற்கும் உதவுவீர்
 உடலிரண்டுக்கு உயி
ரொன்றானான்

 பிரியவுந்தான் பிரியாதே இனிதிருக்கும்
உடற்பொறையாம் பீழை பாராது
எரியதனில் இன்றேபுக்கு இறவேனேல்
இத்துயரம் மறவேன்" என்று


எருவை மன்னன் தயரதன் ஆவிநீத்தபின் தான் உயிர்வாழ மனமற்றவனாய்
எரியில் விழுந்து இறக்கத் துணிகின்ற ஒரு செயலே உண்மைக் காதலின்
உயரிய நிலையை உணர்த்துவதாகும். இவ்வாறு உயிர்விட்டுத் துறக்கம் புக
எண்ணிய ஏந்தலை மக்கள் இருவரும் இடைவீழ்ந்து தடை செய்ய, அவர்தம் நலம் கருதி உயிர்தாங்கி வாழ இசைகின்றான். இராம வீரன் கானகம் எய்திய காரணம் அறிந்தபோது,


"உந்தை உண்மையனாக்கி, உன் சிற்றவை
தந்தை சொல்லைத் தலைக்கொண்டு, தாரணி
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே
எந்தை வல்லது யாவர் வல்லார்''                              என்றும்


"வல்லைமைந்த அம்மன்னையும் என்னையும்
எல்லையில் புகழெய்துவித்தாய்''                               என்றும்

 

கூறும் செம்மை சான்ற சொற்கள் அவன் அறநெறி தவறு அருந்தகை என்பதை விளக்கும். தாதைபிழந்த மைந்தர்க்கு, தாதையாய் அமைந்து காட்டில் வைகுதிர் காக்குவன் யானென்று ஆறுதல் மொழிகள் பலகூறி தான் தயரதன் பால் கொண்டுள்ள ஆமுத காதலின் அளவை வெளியிடுகின்றான்.

 

கழுகரசன் காவலில் கானகத்தே வீரர் வாழ்ந்து வருங்கால், அரக்கர்கோன் வஞ்சனையால் சீதையைக் கவர்ந்து, இலங்கை நோக்கிப் புறப்பட்டான். தன்னிலை யுணர்ந்த சீதை சோகமுற்றுப் புலம்புகின்றாள். தான் செல்லும் ஆகாய வீதிவழியே உதவி செய்ய வருவார் ஒருவரையும் காணாது,


"மலையே மரனே மயிலே குயிலே
கலையே பிணையே களிறே பிடியே
நிலையே உயிரே நிலைதே றினர்போய்
உலையா வலி யாருழை நீருரையீர்"


என்று மலையையும், மானையும், மயிலையும், குயிலையும், கலையையும், பிணையையும் கூவியழைத்து, அவைகளிடத்தெல்லாம் தனது துயரை அறிவிக்கின்றாள். இவள் தன் பலம்பலைக் கேட்ட கழுகரசன் அவ்விடம் விரைந்து வந்து சேர்கின்றான். தன் மருகிக்கு உற்ற துயரை உணர்கின்றான்.

"சஞ்சலங் கலந்தபோது தையலாரை உய்யவந்து
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை யென்ன ஆண்மையே"


என்று எண்ணி அருந்துயரில் ஆழ்ந்த மங்கைக்கு அபயமளிக்கின்றான். அபய
மளித்த அணங்கைக் காக்க அரக்கர்கோனுடன் போரேற்று நிற்கின்றான். அரக்கர்கோனான இராவணனோ பல படைக்கலங்களுடன் நிற்கின்றான். நம் கழுகாசனோ தன் இறகையும் மூக்கையும் நகத்தையும் பல்லையுமே படையாகக்   கொண்டு போர் புரிகின்றாள். இவ்விதம் இருந்தும் பறவை வேந்தன் அரக்கர்கோனது வீணைக் கொடியைப்பற்றி யொடித்தான். வில்லைப் பல்லால் பறித்தான். தடக்கைவில்லைத் தோளாலிறுத்தான். பன்மணித்தண்டு பறித்தெறிந்தான். இச்செயல்களைக் கண்ணுற்ற அரக்கர்கோனும் ஆற்றாத சீற்றம் கொண்டு ஓர் கூரிய வேற்படையை சுழற்றி யெறிந்தான். அவ்வேலும் வீரஞ்செறிந்த கழுகாசனின் இறகைத் துளைக்க வலியற்று,


"பொன் நோக்கியர் தம்புலன் நோக்கிய புன்கணோரும்
இன்னோக்கியரில் வழியெய்திய நல்விருந்தும்
தன்னோக்கிய நெஞ்சுடை, யோகியர் தம்மைச் சார்ந்த
மென்னோக்கியர் நோக்கமுமாமென மீண்டதவ்வேல்''


என்று அவ்வேல் மீண்ட தன்மையைக் கம்பர் எடுத்துக் கூறும் நயம் நலஞ்சான்றதாகும். வேசியர் நலத்தை விரும்பும் காசற்றவர் கருத்துப் போலும் தவஞ்செய்யுந் தன்மை வாய்ந்த மாதவர்பால் சென்ற மங்கையர் நோக்கம் போலும், இராவணன் விடுத்த வேல் கழுகரசன் இறகைத் துளைக்க வலியற்று மீண்டது என்று அழகொழுக எழுதி யமைக்கின்றார் கவியாசர். இவ்வாறு தன்படை வலியற்றுப் போனதைக் கண்ட வீரன் கடைசியாக ஈசன் அருளிய மந்திரவாளால் எருவை வேந்தனை எறிகின்றான். வலியுடைய வாளுக்கு ஆற்குது கழுகாசன் மயங்கி வீழ்ந் தான். மன்னன் வீழ்ந்ததைக் கண்ட மம்கையும்,


''அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இந்
நல்லவன் தோற்பதோ நாகன் வெல்வதோ
வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ
இல்லையோ அறமென இரங்கி ஏங்கினாள்'


என்று கவியரசர் கவியாற்றுகின்றார். இலங்கை வேந்தனது வலியறிந்தும் தன்னை அடைக்கலமென் றடைந்த சீதைக்கு அபயமளித்த காரணத்திற்காக அவனுடன் எதிர்த்துப் போர்செய்து வீரசுவர்க்கம் அடைந்த சடாயுவை இராம வீரனும் போற்றி மகிழ்கின்றான்.


"சரண் எனக்கு யார்கொல் என்று சானகியழுது சாம்ப
அரண் உனக்காவன் வஞ்சி அஞ்சல் என்று அருளின் ஓம்பி
மானுடைக் கொடியோன் சொல்ல மொய்யமர் முடித்துத் தெய்வ
மரணம் என் தாதை பெற்றது என்வயின் வழக்கன்றாமோ''


என்று இராமன் தன்னை வந்தடைந்த வீடணனைத் தன் கூட்டத்தோடு சேர்த்துக்கொள்ளுதல் தகாது என்று பலர் சொல்லிய காலத்து எடுத்துக் காட்டும் ஒரு சிறந்த சான்றாக இப்பாகம் அமைந்துள்ளது. 'தன்னுயிர் புகழ்க்குவிற்ற பெருமகன் சடாயு'' என்று சொல்லின் செல்வனாம் அனுமன் கூறுஞ் சொற்கள் கழுகாசன் வாழ்க்கையின் வளனை விளக்குவதாகும்.

 

ஏற்ற போரில் கழுகரசன் வெற்றி பெற்றிலன் எனும் கழுகின் காவலனை வென்ற பெருமை இராவணனுக்கு உரியதன்று என்பதே கம்பர் தங் கருத்தாகும். இமையாமுக்கண் ஈசனது வாளின் வலிமையாலன்றி பறவை யாசனை இலங்கை வேந்தன் வென்றிருத்தல் இயலாது என்பதை அப்போரைக் கண்ணால் கண்ட மங்கையே உணர்ந்து கூறுகின்றாள். கழுகாசனைத் தான் வென்று விட்டதாகச் செருக்கடைந்திருந்த இராவணனை நோக்கி,

 

"தோற்றனை பறவைக்கு அன்று துள்ளும்சீர் வெள்ளம் சென்னி
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்றெனில் இறத்தியன்றே"


என்று இகழ்ந்து கூறும் மொழிகளில் கழுகரசனின் வீரம் கனிந்து விளங்கக் காணலாகும். இன்னும் படைக்கலமில்லாப் பறவையைத் தன் படைவலியால் கொன்ற ஒரு செயலும் அரக்கர்கோனுக்கு அமைந்த புகழாமா? ஒருகாலுமன்று. படைக்கலமில்லாத அந்நிலையிலும் கழுகரசன் படைக்கலத்துடன் போர் செய்த இலங்கை வேந்தனுக்கு ஒரு சிறிதும் இழைத்தானல்லன் என்பதும் ஈசன் அருளிய வாள்வலிக்காற்றாது உயிர் துறந்தனன் என்பதும் கவிஞர் கருத்தாக இலங்கக் காண்கின்றோம்.

 

கழுகரசன் தன் மக்கள் பால் கொண்ட காதலை அம் மக்களும் மறந்தவரல்லர். இலங்கை நகரிலே இந்திரசித் தனது படைவலியால் தம்பியும் ஏனைய வானா வீரர் அனைவரும் மயங்கிக் கிடந்ததைக் கண்ட இராமன்


“தாதையை இழந்தபின் சடாயு இற்றபின்
காதலின் துணைவரும் முடியக் காத்துழல்
கோதறு தம்பியும் விளியக் சோளிலன்
சீதையை உகந் துளன் என்பர் சீரியோர்”


என்று கூறும் மொழிகளில் அப்பெருமகன் சடாயுவின்பால் வைத்திருந்த காதல் திறம் விளங்கக் காணலாகும். இன்னும் அம் மேகநாதன் மாய சீதையை வாளால் எறிந்து கொன்றான் என்பதை அறிந்த காலத்து,


“தாதைக்கும் சடாயுவான தாதைக்கும் தமியளான
சீதைக்கும் கூற்றங்காட்டித் தவிர்ந்திலது ஒருவன் தீமை'


என்று மன்னவன் மைந்தன் மயங்கிக் கூறுகின்றான். தன் தாதைபால் வைத்த காதலையே இராமவீரன் இக் கழுகரசனிடமும் வைத்துள்ளான் என்பதைக் கவியரசர் அழகாக எடுத்தெடுத்துரைக்கின்றார். இராமன் கழுகரசன் பால் கொண்டுள்ள காதலின் தன்மையை இலக்குவனும் அறிந்துள்ளான் என்பதற்கும் ஒரு சான்றுண்டு. .

 

அறநெறி தலைநின்ற ஆரியர் கோனான இராமன் அமர் தொடங்குமுன் அங்கதனைத் தூது போக்க விரைகின்றான். அப்போழ்தத்து தூது அவசியமின்று என்று எடுத்துக் கூறப்போந்த இளைய வீரன் அரக்கர்கோன் செய்துள்ள அழிம்புகளை யெல்லாம் எடுத்துரைத்தும் அண்ணல் அரக்கன் பால் வைத்த இரக்கம் மாறாமை கண்டு கடைசியாக அரக்கர்கோன் சீதையை அவனிடமிருந்து பிரித்ததையும் அவனைக் காக்கப் போந்த பறவை வேந்தனைக் கொன்றதையும் எடுத்துக் கூறி உருக்கமாக இறைஞ்சுகின்றான்.


“வழியாய் நின்னையன்று வரம்பறு துயரின்வைகச்
சூழ்விலாமாயம் செய்து து உன் தேவியைப் பிரிவு சூழ்ந்தான்
ஏழைபால் இரக்கம் நோக்கி ஒருதனி இகல்மேற்சென்ற
ஊழிகாண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டுண்டான்'


என்று இலக்குவன் இயம்புகின்றான். தன் மக்கள் பால் இறவாது அன்பு பூண்டொழுகிய கழுகரசனைப் போலவே இராமவீரனும் இளையகோவும் அவன் பால் மாறாத காதலுடையவர்களாய் விளங்குகின்றார்கள். தன்னுயிர் புகழ்க்கு விற்ற பெருமகனாய் இலங்கிய பெருமை கழுகின் காவலனான சடாயுவிற்கே உரியதாகும் என்று கூறுதல் மிகவும் பொருத்தமுடையதே யாகும்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - மே ௴

 

 

 

No comments:

Post a Comment