Friday, September 4, 2020

 

பிறமதம் புகுதலும் மத தூஷணையும்

 

ஆண்டவன் நம்மைப் பிறப்பித்த மதத்தை, நமது முன்னோர் அனுசரித்து வந்த மதத்தை இடையில் விட்டு விட்டு புறச்சமயம் புகுவது நமது நாட்டில் அதிகமாய் இப்போது நடைபெறுகிறது. மனிதன் தன் அறிவால் அடையத்தக்க ஒப்புயர்வற்ற பலன், மானிடஜன்மமெடுத்ததா லடைய வேண்டிய பலன், என்று மழி யாத தெய்வீக பலன், ஆன்மஞானமேயாகும். புண்ணிய பூமியும், அனாதிகாலந் தொடங்கி ஆன்மஞானத்திற்கும் அரிய தெய்வபக்திக்கும், அதனாலடையத்தக்க அபூர்வ சக்திகளுக்கும் பிறப்பிடமானதுமாகிய நம் நாட்டில் ஜனித்த மக்கள் பிறமதம் புக வேண்டியதன் காரணத்தைச் சற்றாராய்வாம். இதற்கு முக்கியமாய் மூன்று காரணங்கள் உண்டெனலாம்.

 

1 - வது காரணம். - தான் பிறந்ததும், தன் முன்னோர்கள் அனு சரித்ததுமாகிய மதத்தில் மோக்ஷமார்க்கம் சரியாக அல்லது பூரணமாகக் கூறப்படவில்லை யென்றுணர்ந்து, அதன் மேல் புறச்சமயங்களை ஆராய்ச்சி செய்து, எந்த மதத்தில் மோக்ஷ மார்க்கம் சரியாகக் கூறப்பட்டிருக்கிறதென்று தெரிகிறதோ அம்மதத்தில் போய்ச் சேர்வது.

 

2 - வது காரணம். - சுயமத ஆராய்ச்சியின்மையால், புறச்சமயத்தவரின் போதனையில் மயங்கியும், மேலான பதவி, பொருள், கௌரவம் முதலியவற்றைப் பெறலாம் என்று புறச்சமயத்தவர் கூறும் மொழிகளை நம்பியும் தம் மதத்தைக் கைவிட்டுப் புறச்சமயத்தில் புகுதல்.

 

3 - வது காரணம். - அதிகாரமும் பலமும் உடைய அன்னிய மதத்தினரின் பலவந்தத்தால், பிரியமில்லாதிருந்தாலும், அந்த அன்னியர் மதத்தில் சேர்ந்துகொள்ளல்.

 

இவற்றில் மூன்றாவது காரணத்தால் புறச்சமயம் புகுவோர் மேல் குற்றம் கூறுவது நியாயமல்ல. ஏனெனில் அந்த அன்னிய மதத்தவர்கள் செய்யக்கூடிய வேதனைக்கும், அவர்களால் நேரக் கூடிய பிராணாபத்துக்கும் அஞ்சியே அவர்கள் புறச்சமயம் புகு கின்றனர். ஆயினும் சரியான மதப்பற்றும் ஈசுரபக்தியும் உடை யவர்கள் என்ன ஆபத்து நேர்வதாயினும் தம் மதத்தைக் கை விடார்கள். அத்தகைய பக்திமான்களை அன்னிய மதத்தவ ருடைய அநீதச் செயல்கள் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு அப்பர் சுவாமிகளைப்போல் அனேகம் திருட்டாந்தங்களுண்டு. ஆயினும் நீதிபொருந்திய ஆங்கில துரைத்தனம் நடக்கும் இக் காலத்தில் அத்தகைய காரணம் நடைபெறுவதில்லை யாதலின்
அதைப்பற்றி நாம் சிந்திக்கவேண்டுவதின்றாம்.

 

இனி 1 -வது, 2 -வது காரணங்களைப்பற்றி ஆராய்வாம்.

 

1 - வது காரணத்தால் புறச்சமயம் புகுவோர் மிக்க அரி தென்றே கூறவேண்டும். ஏனெனில் " ஆண்டவன் நமக்கு இந்த அருமையான மானிடஜன்மத்தை யளித்தது, நாம் ஆன்மஞானம் பெற்றுத் தன்னை யடைவதாகிய முக்திப் பேற்றைப் பெறுவதற்கே, பிறப்பிறப்பாகிய துக்கசாகரத்தைக் கடந்து நித்தியானந்தமாகிய முக்தியாங் கரை சேர்வதற்கே'' என்ற அறிவு உதித்து, முக்தி யென்பதென்ன, அதையடையும் மார்க்கம் எது, என்று ஊக்கத்தோ டாராய்ச்சி செய்து அதற்காகப் பாடுபட முயல்வோர் மிக மிகச் சொற்பமே.

 

அவ்வாறு பாடுபட முயல்வோர் முதலில் தம் மதத்தில் அவற்றைப் பற்றி சரியாய்க் கூறப்பட்டிருக்கிறதாவென்று பூரணமாக ஆராய்ச்சி செய்து, அதில் சரியாய்க் கூறப்படவில்லையென்று மனதார உணர்ந்தபின்பே புறச்சமயங்களை யாராயப் புகுவார்கள். நமது மதத்தைச் சேர்ந்த ஒருவன் தன் மதத்தை யாராய்ச்சி செய்து, தனக்குச் சந்தேகங்கள் நேரின் தக்க ஆன்றோரைக் கேட்டுத் தெரிந்துகொள்வானாயின், அதை விட்டுப் புறச்சமயம் புக வேண்டிய அவசியமே யில்லையென்றும் அப்படிச் செய்தால் நமது ஆன்மார்த்த விஷயத்தை நாமே கெடுத்துக்கொள்வதாக முடியு மென்றும் எளிதிலுணர்வான் என்பது சாத்தியம்.

 

ஏனெனில் நமது மதத்தில் சிருஷ்டிக்கிரமும், கடவுள் இலக்ஷணமும், ஆன்மலக்ஷணமும், முக்திலக்ஷணமும், முத்தியடைதற்குரிய மார்க்கங்களும் பூரணமாய், இன்னும் அதிகமாய் ஒரு வார்த்தைகூடக் கூறுவதற்கு இடமில்லாத விதமாகக் கூறப்பட்டிருக்கின்றன. அதாவது வேறு எம்மதமும் இதனினும் அதிகமாகக் கூற வழியில்லை. இதை மறுத்துக்கூற ஒருவராலும் இயலாது.

 

மார்க்கங்கள் என்று பன்மையாய் ஏன் கூறினோமெனின், ஆன்மாக்களெல்லாம் ஒரே விதமானவையாதலாலும், யாவர்க்கும் கடவுள் ஒருவரே யாதலாலும், நித்தியமாகிய முத்திநிலை யாவர்க்கும் ஒரே மாதிரியானதே. ஆயினும் அவரவர்களின் கன்ம பலத் தீன் தாரதம்மியப்படி அறிவு விளக்கத்தில் தாரதம்மியமிருப்பதால், அந்தந்த அதிகாரிக்குத் தக்கபடி மார்க்கங்களில் பேதம் இருக்கவேண்டியது அவசியமே. அதன்படியே அவரவர் அறிவு விளக்கத்திற்குத் தக்கபடி கடவுளைப் பாவிப்பர்.


 ''அவரவர் தமதம தறிவறி வகை வகை
 அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்
 அவரவரிறையவர் குறைவில் ரிறையவர்

 அவரவர் விதிவழி யடையநின் றனரே.''                 (திருவாய்மொழி உயர்வு.)

 

நமது வேதத்தில் மதங்கள் அத்வைதம், துவைதம், விசிட்டாத்வைதம் என்று மூன்று வகுப்பாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒன்றிலேனும் சேராதமதம் உலகில் கிடையவே கிடையாது. இருக்கவும் முடியாது. உலகிலுள்ள சகல மதங்கட்கும், இனி யுற்பத்தியாகக்கூடிய எல்லாவித மதங்கட்கும் நமது மதத்தில் அஸ்திவாரம் இருக்கிறது என்பது இதனானும் நன்கு விளங்கும்.

 

ஆதலின் நமது மதத்தினின்றும் புறச்சமயம் புகுந்தோரில்,
முதற்காரணத்திற்காகச் சென்றோர் ஒருவருமில்லையெனத் திடமாய்க் கூறலாம். ஆயினும் இரண்டொரு அறிவாளிகள் சுயமத ஆராய்ச்சியின்றி பிறமதத்தவரின் போதனையால் மயங்கி அம்மதத்தில் போய்ச் சேர்ந்தவர்கள் பிறகு உண்மையறிந்து தம்மதத்திற்கே திரும்பிவந்து விட்டிருக்கின்றனர்.

 

முதற்காரணப்படி ''உலகிலுள்ள மதங்களில் எதில் சரியான
 மோக்ஷமார்க்கமிருக்கிறது, எந்த மதத்தில் தெய்வத்தன்மையை இவ்வுடலிலிருக்கும் போதே பிரத்தியட்சமாய்க் காணும் மார்க்கம் கூறப்பட்டிருக்கிறது என்று சகல மதங்களையும் ஆராய்ச்சி செய்து அத்தகைய மதம் நமது மதமேயென்று உணர்ந்து இதைக் கைக்கொண்ட மேல் நாட்டார் சிலரில் பிளவாட்ஸ்கி அம்மையார்
(Madame Blawatsky) ஒருவர்.

 

2 - வது காரணம். - - இப்போது முக்கியமாய் நமது மதத்திலிருந்து புறச்சமயத்தில் புகுவோரனைவரும் இக்காரணத்தாலேயே அவ்வாறு செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலார் தாழ்ந்த வகுப்பாராக நம்மால் கருதப்படுவோரே. அவர்கள் அவ்வாறு செல்லத் தூண்டுதல் செய்வது மூன்று விஷயங்கள். அவை,

(1) சுயமத ஆராய்ச்சி சற்றுமின்மை,

(2) நாம் அவர்களைத் தீண்டாதவர்களென்று ஒதுக்கி வைத்து, நமது கோயில்களுக்குள் அவர்கள் வரலாகாதென்று தடுத்து, அவர்களை யிழிவாய் நடத்துவது

(3) ''அவர்கள் நாம் செய்த பூர்வ கன்மப் பயனால் இச்சாதியில் பிறந்தாலும் ஆசார ஈனராயிருப்பதாலும் நமது கெட்டகர் மாவை யனுபவித் தொழிக்க வேண்டியதே'' என்று திருப்தியோடு பொறுமையாகவே யிருந்தாலும், புறச்சமயத்தவர் அவர்களைத் தூண்டித் தம்மதத்திற்கு இழுத்தல், என்ற மூன்று விஷயங்களே.

 

இவர்களைத் தங்கள் மதத்திற்கு இழுக்கும் அன்னிய மதப்பரிசாரகர்கள், (முக்கியமாய்க் கிருஸ்தவர்களே) நமது மதத்திலுள்ள சரியை கிரியை (விக்கிரகாராதனை), புராணக்கதைகள் முதலியவற்றைப்பற்றி நயவஞ்சகத்தோடு குற்றங் கூறும் போது மதக்கல்வியில்லாத இவர்கள் அவற்றிலுள்ள தத்துவார்த்தங்களையும், நன்மைகளையும் உணராதவர்களாய் தம் மதத்தின் நம்பிக்கையில் உறுதி குன்றியவர்களாகிறார்கள். அச்சமயத்தில் ''உங்கள் மதத்தவர்கள் உங்களைத் தீண்டாதவர்களென்று இழிவாக நடத்துகிறார்கள். கோயிலில் உங்களைச் சேர்ப்பதில்லை. எங்கள் மதத்தில் சேர்ந்தால் உங்களுக்குச் சமமரியாதையுண்டு. கோயிலில் எல்லாரும் சமமே' என்பது முதலிய வார்த்தைகளால் நமது மதத்திலுள்ள மேல்ஜாதியார் மேல் அவர்களுக்கு வெறுப்புண்டாகச் செய்து, அதோடு உங்களுக்குக் கல்வி கற்பித்து, நல்ல உத்தியோகம், கௌரவம், செல்வம் யாவும் உண்டாகச் செய்வோம் என்று ஆசை காட்டினால் கல்வியில்லாப் பாமரர் கும்பு கும்பாய்ப் போய் அன்னிய மதத்தில் சேர்ந்துவிடுகிறார்கள்.

 

இயற்கையிலேயே புறச்சமயிகளாகிய கிருஸ்தவர்களுக்கு நமது மதத்தில் துவேஷபுத்தி யுண்டென்பது அனுபவம். அதோடு நமது மதத்தில் கூறியுள்ள அனேகம் விஷயங்களின் உட்கருத்து அவர்களுக்குத் தெரியாதாகையால் எளிதில் குற்றம் கூறுகிறார்கள். நமது முன்னோர்கள் பயனற்ற அனாவசியமான கொள்கை யொன்றையேனும் நிலை நிறுத்தவில்லை. அவர்கள் விஷயங்கள் யாவும் பிரத்யக்ஷ அனுபவத்தையே அஸ்திவாரமாகவுடையவை. திருட்டாந்தமாய் நாம் சூரிய நமஸ்காரம் செய்வதைச் சில புறச்சமயிகள் மூடக்கொள்கை யென்கிறார்கள். உண்மையில் பிரகாசத்திற்கு ஆதியாகிய வஸ்துவைத் தியானிக்கும் ஒருவர்க்கு நேத்திரப் பிரகாசமுண்டாவது அனுபவம். மானசதத்துவ சாத்திர முணர்ந்த அறிவாளிகள் இதை யெளிதிலுணர்வார்கள். உண்மை அப்படி யிருந்தாலும் 'கடவுளால் படைக்கப்பட்ட உயிரற்ற வஸ்துவாகிய சூரியன் முதலியவற்றைத் தெய்வமாக வணங்குவதால் கடவுள் கோபமடைவார்" என்று கூறினால் சாதாரணக் கல்விகூட இல்லாத பாமரர் மயங்கவும் கேட்கவேண்டுமோ?

 

மேற்கண்ட காரணங்களால் யாராகவிருந்தாலும் தமது முன்னோர் மதத்தை விட்டு அன்னிய மதம் புகுதல் அறியாமையும் மூடத்தனமுமேயாகும். நமது மதக்கட்டளை இதுவே. ஆன்றோரும் "எச்சமயத்தும் இயற்கையை விட்டிடலாகாது'' என்றே அருளியிருக்கின்றனர். மேலும் அவ்வாறு மதம் மாறுவோன் ''எல்லா மதங்களாலும் பாதிக்கப்படுபவர் ஒரு கடவுளே; எல்லா மதங்களும் அவரையடைவதற்காக உள்ள பாதையில் மேல்நோக்கிச் செல்ல வழிகாட்டிகளாகவே யிருக்கின்றன'' என்ற உண்மையை யறியாதவனாகிறான். அவன் அகண்டமாய் எங்கும் நீக்க மற நிறைந்த ஏக சொரூபியை ஒரு சிறு எல்லைக்குள் அடைக்கும் மந்தமதியோனேயாகும். கிருஸ்தவப் பாதிரிமார் கல்வியில்லாத ஏழை ஹிந்துக்களைக் கும்பு கும்பாய்த் தந்திரமாய்த் தங்கள் மதத்திற்கு இழுப்பதையே தங்கள் வேலையாகக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தக்க உதவியாக ஏராளமான பணமும் அதிகாரிகளிடம் பூரணச் செல்வாக்கும் அவர்களுக்கு இருக்கின்றன. உலக முழுமையுமே தங்கள் மதமாக்கி விடவேண்டு மென்பது அவர்கள் பேராசை.

 

உலகம் முழுமையும் எக்காலத்திலும் ஒரே மதத்தை யனு சரிக்காதென்பதும், பணத்தாலும் செல்வாக்காலும் அடையப்படும் ஒரு மதத்தின் விருத்தி நிலையாக நீடித்திராதென்பதுமாகிய உண்மைகளையவர்கள் உணர்ந்திலர் போலும். இவர்கள் நடக்கை ஏசுகிருஸ்துவின் கொள்கைக்கு நேர்மாறானது. அவருக்கு ஒரு மதத்திலிருப்பவர்களை இன்னொரு மதத்திற்கு இழுக்க வேண்டு மென்ற நோக்கமில்லை யென்றும், அன்னிய மதத்தவர்களின் கொள்கைகளையவர் ஏற்றுக்கொண்டு அவர்களோடு சகோதரபாவமாய்ப் புழங்கிவந்திருக்கிறாரென்பதும், சில சமயங்களில் ஒரு மதத்திலிருப்பவர்களைத் தம்மதத்திற் கிழுக்க முயல்வோரைக் கண்டித்து கடிந்து கூறியிருக்கிறார் என்பதும், அவர் சரித்திரத்தைக் கவனமாய் ஆராய்ச்சி செய்வோர்க்கு நன்கு விளங்கும். இது சம்பந்த மாக அவருடைய நடக்கையைப் பற்றி 1924m 5s, 9உ களில் வெளியான ''இந்துசாதனம்'' (யாழ்ப்பாணம்) என்ற பத்திரிகையில், "மதமாறுதல் ஒவ்வாதது - ஏசுநாதரின் அபிப்பிராயம்'' என்ற தலையங்கத்தின் கீழ் வரையப்பட்டுள்ள விஷயத்தைப் பார்த்தால் சற்று விவரமாக அறியலாகும்.

 

நமது மதக்கொள்கையும் மதம் மாறலாகாதென்பதே. சத்தியோன் முத்திமார்க்கத்தை எச்சாதியானும் எம்மதஸ்தனும் அனுஷ்டிக்கலாம் என்பதே நமது மதத்தின் பாரபட்சமற்ற கொள்கை. கருமகாண்ட சம்பந்தமான கிரியையாதிகள் செய்வது மட்டும் இன்னவர்கள் தான் செய்யலாம் என்ற விதியுண்டு. அதுவும் ஆசாரத்தைப் பொருந்தியதாகும். அதற்குத் தக்க காரணங்களுமுண்டு. ஆனால் ஞான மார்க்கத்திற்கோ ஒரு பேதமாவது நிபந்தனையாவது கிடையாது. ஞான நெறியில் பிரவேசிப் போன் முன்னே ஜாதிப்பற்று, மதப்பற்று, சமயாசாரம் முதலிய வற்றை விட்டொழிக்கவேண்டும் என்பது விதி.

 

எம்மதத் தோரெவ் வகைநிட்டை சொல்லினுஞ்

சம்மத மேயெமக் குந்தீ பற
      தற்போத மாய்க்குமே லுந்தீபற.
                  (திருவுந்தியார்)


 சமயா சாரசங் கற்ப விகற்பமு
 மமையா தாங்குல வாசார மானது
 மமையா தாரும் விடாதவில் வாழ்க்கையு
 மமையார் தோளாய் விடுதலா சாரமே
            (தேவிகாலோத்திரம்)

 

இவ்வாறு நமது மதத்தில் பாரபட்சமின்றி எச்சமையத்தவர்க்கும் எச்சாதியினர்க்கும் ஆண்டவன் அருள் கிடைக்கும் என்ற உண்மை நன்கு விளக்கப்பட்டிருக்கிறது சகல அண்டங்களையும் அவற்றிலுள்ள எல்லாச் சீவராசிகளையும் சிருட்டித்தவர் ஒரே கடவுளாக விருக்க அவர் அப்படிச் செய்யாது போவரேல் கருணாநிதி யென்றும், கருணையே யுருவாகவுடையவரென்றும் கூறப்படுவதற்குச் சற்றும் அருகராகார்.

 

இப்போது நம் நாட்டில் புறச்சமயம் புகுவோராகிய பாமரர் அனைவரும் மத ஆராய்ச்சி செய்து அன்னிய மதத்தில் தான் உண்மையிருக்கிறதென்று தெரிந்து செல்பவர்களல்ல. நாம் அவர்களுக்கு மதக்கல்வியும், ஆசாரமும் புகட்டி நாகரீகமுண்டாகச்செய்து, அவர்களை இழிவாய் நடத்துவதை விட்டு, சகோதரர்களாகப் பாவித்து அவர்களுக்கு இயற்கையாக உள்ள உரிமைகளை யளித்து அவர்களைச் சரியாக நடத்தினால் அவர்கள் ஒரு போதும் புறச்சமயம் புகார்கள் என்பது திண்ணம்.

 

இவ்வாறு நம்மவர்கள் புறச்சமயம் புகுவதைத் தடுத்து மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள் இன்னும் இதைக் கவனிக்காமலிருப்பது பெருந்துக்கமான விஷயமே. மதத்தலைவர்களாகிய மடாதிபதிகள், பரம்பரை ஆசாரிய பீடத்தைச் சேர்ந்தவர்கள், மதப்பற்றுடைய பக்திமான்கள், முதலியவர்கள் இவ்விஷயத்தில் சிரத்தை யெடுத்துக்கொள்ள வேண்டும். நாம் மதப் பிரசாரம் செய்து நமது மதத்தைப் பரவச்செய்யாவிடினும், நமது மதத்திலுள்ளவர்கள் அன்னியமதத்தில் போய்ச் சேர்வதைத் தடுத்து நமது மதத்தைப் பாதுகாக்கவேனும் முயலக் கடமைப் பட்டவர்களன்றோ. இச்சமயத்தில் அது அவசியம் செய்யவேண்டிய புண்ணியத் தொண்டென்பதையவர்கள் இனியேனும் உணர்ந்து தக்க ஏற்பாடு செய்வார்களென்று பிரார்த்திக்கிறோம். மதம் குன்றாதிருந்தால் தான் மடாதிபதிகள், மதத்தலைவர்கள், ஆசாரி யார்கள் என்ற பதவிகள் நிலைத்திருக்கும் என்பது தெரிந்த விஷயம்.


 மத தூஷணை.

 

எங்கள் மதமே மெய்யானது, எங்கள் மதத்தில் கூறப்பட்ட கடவுளே மெய்க்கடவுள். உங்கள் மதமும் அதில் கூறப்பட்டகடவுளும் பொய் என்று ஒரு அன்னிய மதத்தை இகழ்ந்து கூறுவதே மததூஷணையாகும். ஒருவர் தம் மதத்திலுள்ள விஷயங்களைப்பற்றியும், அவை உண்மையென்பதைப்பற்றியும், தம் மதக்கொள்கைகளின் உயர்ந்த கருத்துகளைப் பற்றியும் எடுத்துக் கூறுவது மத தூஷணையாகாது. அல்லது தம் மதத்தவர்களை நோக்கி ''நமது மதத்தில் ஆன்மார்த்த விஷயத்திற்கு வேண்டிய யாவும் பூரணமாகக் கூறப்பட்டிருக்கின்றன. அன்னிய மதஸ்தர் நம்மதத்தில் குற்றங்கூறுவது அறியாமையாலேயே. அவர் தந்திர மான மொழிகளுக்கு நீங்கள் செவிகொடுத்து மயங்கி, நம் முன்னோரின் மதத்தைக் கைவிட வேண்டாம்'' என்று கூறுவதும் மத தூஷணையாகாது.

 

சிலர் தம்மதத்தைப்பற்றி கூறுவதாகப் பிரஸ்தாபித்து அன்னிய மதத்தின் கொள்கைகளையும் ஆசாரங்களையும் நீந்திக்கும் வழக்கமுடையவர்களாக விருக்கிறார்கள். தங்கள் மதத்தைக் கூறுவதாக ஒரு நூலுக்கும் பெயர் வைத்து, நூலில் அன்னிய மதக் கொள்கைகளைத் தூஷிக்கும் விஷயங்களையே அதிகமாக வரை கிறார்கள். இவ்வாறு செய்வது மததூஷணையே.

 

நாம் இதை யச்சில் ஏற்றும் சமயம் யாழ்ப்பாணத்திலுள்ள நமது சந்தா நேயர் ஒருவரால் அனுப்பப்பட்ட'மெய்யான சம யம் எது? பொய்யான சமயம் எது? " என்று நாமம் சூட்டப்பட்ட ஒரு சிறு புத்தகம் நமக்கு வந்து சேர்ந்தது. சமயோசித்மாக வந்த இது " மததூஷணை'' க்கு ஒரு முதல்தர அத்தாக்ஷியாயிருப்பதால் இதைப்பற்றி இச்சஞ்சிகையின் மற்றோர் பாகத்தில் வரைந்துள்ளோம். ஆங்கு அதைக் கவனிக்கக் கோருகிறோம்.

 

எல்லா மதங்களும் பிரதிபாதிப்பது ஒரு கடவுளையே. மற்றபடி கொள்கைகளும் ஆசாரங்களும் இடம் காலம் இவற்றிற்குத் தக்கபடி வித்தியாசப்பட்டிருக்கும். ஒரு மதஸ்தனுடைய ஆசாரம் இன்னொரு மதஸ்தனுக்கு அனாசாரமாய்த் தோன்றும். முக்கியக் கருத்து எல்லா மதங்களிலும் ஒன்றாகத்தான் இருக்கும். ''மனிதன் கடவுளின் அருளைப் பெறவேண்டும். அதற்காகக் கடவுளிடத்தில் அன்பும் வணக்கமும், அதாவது பக்தியுடையவனாக இருக்கவேண்டும். கடவுளுக்கு நம்மாலாக வேண்டியது ஒன்றுமேயில்லை. அவர் விருப்பு வெறுப்பற்றவர். யாவற்றையும் சிருட்டித்து இரட்சிப்பவர். எல்லாச் சீவன்களிடத்திலும் கருணையுடையவர். ஆகையால் நாம் எல்லாச் சீவன்களிடத்திலும் கருணையோடு நடந்து கொண்டால் தான் கடவுள் நம்மேல் திருப்தியடைவார்.

 

இன்னொரு சீவனுக்கு வருத்தமுண்டாக்கத்தக்க எந்த காரியத்தையும் நாம் செய்யலாகாது. மாதா பிதா குரு இவர்களிடம் கடவுளுக்கு இரண்டாவதாகப் பக்தி வைக்க வேண்டும். பொறாமை, பேராசை, விபசாரம், பொய், களவு, கொலை முதலிய கெட்ட குணங்களையும் நடக்கைகளையும் அறவே விட்டொழிக்க வேண்டும் என்பன முதலிய விஷயங்களைப்பற்றி எல்லா ஆஸ்திக மதங்களும் ஒரே மாதிரிதான் கூறுகின்றன. ஆகையால் ஒருவன் எந்த மதக்கடவுளைத் தூஷித்தாலும் தன் மதக்கடவுளைத் தூஷித்த குற்றத்திற்கே உள்ளாகித் தக்க தண்டனையடைவான் என்பது சத்தியம். அதனாற்றான் நமது மெய்ஞ்ஞானச் செல்வியாம் ஒளவை பிராட்டியார் "தெய்வமிகழேல்'' என்று மிகச் சுருக்கமாய்க் கூறி யருளினர்.

 

சகோதர சகோதரிகளே! இவ்வாற்றால் பிறமதம் புகுவதாலும் மததூஷணையாலும் ஒரு போதும் நன்மையுண்டாகாதென்றும், அதற்கு மாறாகத் துன்பமும் பாபமுமே சித்திக்குமென்றும் நாம் நன்குணர்ந்தொழுகுமாறு கருணாநிதியாகிய பரம்பொருள் அருள் புரிவாராக.

 

ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - ஆகஸ்டு ௴

 

No comments:

Post a Comment