Friday, September 4, 2020

 

பிள்ளையாரும் சனீஸ்வர பகவானும்

பி. ஆர். கிருஷ்ணன்

 

வரணும்! வரணும்! இவ்வளவு தூரம் என்னைத் தேடி வந்தது நான் செய்த பூர்வ ஜென்மப் பூஜாபலனே, உட்காருங்கள்' என்று சொல்லிக் கொண்டே, பிள்ளையார் ஐந்தாறு கொழுக்கட்டை, வடை முதலியவைகளை உள்ளே செலுத்தினார்.

 

அன்று விநாயகர் சதுர்த்தி தினம். தனது அன்பர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மோதகம், வடை, சுண்டல், பாயசம் முதலியவைகளைப் பக்ஷபாதமின்றி, தமது பருக்துச்செழித்திருந்த தொந்தியுள் புகுத்தியவராய், சிறிது சிரம பரிகாரம் செய்து கொண்டு, பிள்ளையார் உட்கார்ந்திருந்தார். ''காற்றுள்ள போதே தூற்றிக் கொள்'' என்னும் பழமொழி கணபதிக்குத் தெரியாதா, என்ன! தெரிந்தும் வருடத்திற் கொருமுறை கிடைக்கும் அபூர்வ பக்ஷணங்களை
மூக்கில் ஓர் பருக்கை வரும்வரை சாப்பிடாமலா இருப்பார்? (ஐயோ! மன்னிக்கவும்! பிள்ளையாருக்கு மூக்கில்லை என் பதை மறந்தே போய் விட்டேன்.)

 

இப்படிப் பலவகைச் சிற்றுண்டிகளை ஆனந்தமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்த விநாயகர், திடீரென நடுங்கினார். என்ன செய்வதென்று தெரியாது திகைத்தார். தமது பருத்த சரீரத்துடன் ஓடவோ முடியாத காரியம். திடீரென ஒரு யோசனை தோன்றியது. உடனே நிம்மதியாய் வருபவரை வரவேற்க உட்கார்ந்திருந்தார். உள்ளே எழுந்த பயத்தை வெளிக்குக் காட்டாது, கோபத்துடன் வெகு வேகமாக வந்து கொண்டிருந்த சனீஸ்வர பகவானை உபசரித்து உட்காரும்படி கேட்டுக் கொண்டார்.

 

'கணபதி! நம்மை யாரென மதித்தீர்? என்னையும் சனி அணுகுவானோ எனக் கர்வத்துடன் நம்மை ஏளனம் செய்ததாகக் கேள்விப் பட்டேன். உமது தந்தையையே ஆட்டி வைத்த நமக்கு நீர் ஒரு பொருட்டா? ஏதோ சிறு பிள்ளையென்று இத்தனை காலம் பொறுத்திருந்தோம். தெரியுமா? இனிமேல் சும்மாவிட முடியாது. இப்பொழுது என்ன சொல்லுகிறீர்?'' எனக் கர்ஜித்தார்.

 

'ஐயோ! ஒரு பாவமுமறியேன்; மன்னிக்கவும். 'உண்ட மயக்கம தொண்டனுக்கும் உண்டு என்பார்கள், மிக்ககளைப்பாயிருக்கிறது. தயவு செய்து நாளை வந்து பிடித்துக் கொள்ளுங்கள்' என மிகப் பணிவுடன் உரைத்தார். சனீஸ்வரரும் சிறிது இரங்கிப் போகப் புறப்பட்டார். அப்பொழுது பிள்ளையார், 'சனிபகவானே! தங்கள் கையில் அகப்படாத வருமுண்டோ? தங்கள் புகழ் பரவாத இடமில்லை. தங்கட்கிருக்கும் வேலையில் அடியேனை மறந்திடா வண்ணம், நாளை தாங்கள் வருவதாய் எனது தொந்தியில் எழுதி விட்டுச் செல்லும்' எனப் பணிவுடன் தம் தொப்பையைக் காட்ட, சனீஸ்வரரும் அவ்வாறே எழுதிச் சென்றார்.

மறு நாள் சனி பகவான், தம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டே மிக அலட்சியமாய்ப் பிள்ளையார் உட்கார்ந்திருந்ததைக் கண்டு, கண்களில் கோபத்தீ ஜொலிக்க, 'ஆகா உனக் கிவ்வளவு தைரியம் வந்ததா? என்ன பாடு படுத்துகிறேன் பார். நான் யார் தெரியுமா?' என்று வெகு ஆவேசத்துடன் நெருங்கினார் சனீஸ்வரர். 'என்ன சனீஸ்வரா! ரொம்ப அவசரம் போலிருக்கிறதே? என்ன இவ்வளவு கோபம், நாளை வருவதாகச் சொன்னவர், இன்றே வந்துவிட்டீரே? எனக்கொரு அவசரமும் கிடையாது; நாளை வந்தாற் போதும். என் தொந்தியில் நீரே நாளை வருவதாக எழுதியிருப்பதைப் பாரும், என்று பிள்ளையார் சிரித்துக் கொண்டே சனீஸ்வர பகவானுக்குத் தமது தொந்தியைச் சுட்டிக் காட்டினார்.


பாலர்களே! எப்படி, பிள்ளையார் செய்த தந்திரம்! பார்த்தீர்களா?

 

ஆனந்த போதினி – 1944 ௵ - டிசம்பர் ௴

 

 

No comments:

Post a Comment