Thursday, September 3, 2020

 

தேசத்தில் தேவதாசீயம்

 

 ஒவ்வொரு மனிதனுக்கும் அறியாமை மிகுந்த காலமொன்றுண்டு; விழித்து விரைந்து நன்மையை நாடுங்கால மொன்றுண்டு. இவை மானுடப்பிறவியி னியல்பு. இவ்வியல்பின் படியே மனித சமுகமும் சரித்திர ஆதாரப்படி ஆடையின்றி அலைந்தகாலமுமுண்டு; நாகரீகமும், மத அரசியல் ஞானமுமடைந்து, ஜீவாத்ம பரமாத்ம சம்பந்தம், அரசர் மாண்பு முதலியவற்றை ஆராய்ந்து, சிறிது சிறிதாக மேன்மையுற்று நாகரீக முதிர்ச்சியடைந்தகாலமுமுண்டு. இவற்றால் பிரபஞ்ச இயற்கைச் சாஸ்திரப்படி நாடுகளும் இத்தகைய நிலைகளை யடைந்தே யிருக்கவேண்டு மென்பது உறுதியாகும். நம் நாட்டின் முதிர்ந்த நாகரீகத்தை மேல் காட்டு நாகரீகக் கண்ணுடன் ஆராயாமற் பார்த்தால், மேல்புல் மேய்ந்து, வெளிவேடம் போடும். ஆராய்ச்சி, சீர்திருத்தக்காரர்களெல்லாரும் நம் பண்டைய சித்தாந்தங்களையும், வாழ்வையும், இராஜீய மதாசாரக் கொள்கைகளையும், அவற்றை விரிக்க வெழுந்த வேதாகம புராணங்களையும் ஆலிங்கனஞ் செய்து அஞ்சலி செய்வரென்பதிலையமின்றாம்.'தேவதாசியம்' என்ற விஷயமும் நம் பண்டைச் சிறப்புக்களுடன் கலந்து நிற்கின்றது. முற்காலந் தொட்டு இவ்வகுப்பார் இருந்து வருவதாகக்கூற எத்தனையோ ஆதாரங்களுள்ளன. இவர்களுடைய சங்கீத நாட்டியத் திறங்களைப் புகழ்ந்து உரைக்காத நூலில்லை. அக்காலங்களில் இவ்வகுப்பினருக்கு விதிக்கப் பெற்ற நெறியுடன் இவர்கள் ஆதரிக்கப் பெற்று வந்தனர். இவர்களைக் குறித்து மகாத்மா காந்தியடிகள் தென்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் சில அரிய அபிப்பிராயங்களைக் கூற, புற்றிலிருந்து ஈசல்கிளம்புவது போல் இப்பொழுது பத்திரிகைகளில் தேவதாசிகளைப் பற்றி வரையப்பெறாத நாள் காண்டலரிதாயிருக்கின்றது. இதைப் பற்றி ஆங்காங்கு காணப்படும் மகாநாடுகளையும், தீர்மானங்களையும், ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களையும் பார்க்க, வியப்பும், மயக்கமும் எழுந்து நம்மைக் 'கல்லாதபேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்' என்ற தாயுமானவர் வாக்கைப் போற்றும் நிலையை எய்த வைக்கின்றன. மேல் நாட்டாரும் தங்களுக்குச் சந்தர்ப்பங்கிடைத்தமைக்காக மகிழ்ந்து, இவ்விஷயத்தைப் பத்திரிகைகள் வாயிலாகக் கண்டு நகைத்து எள்ளிப் பேசுகின்றனர்.

 

மாதர் சமூகம் ஆடவ சமூகத்தைப் போன்ற அத்துணை மனவுறுதியுடைய தல்ல வென்பது நூலாதாரங்களாலும், சுயானுபவத்தாலும் அறிந்து ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம். இத்தகைய பெண்களிற் சிலர் மனதிடம் பெற்ற வீரப்பெண்களாய் முற்காலங்களில் விளங்கியிருக்கலாம், இவர்களே கோயில்களில் கைங்கரியஞ் செய்யவும் நியமிக்கப் பெற்றிருக்கலாம். இவர்களே கால மாறுபாட்டால், தங்கள் கடமைகளினின்றும் வழுவி இத்தகைய நிலையை யின்றெய்தியிருக்கலாம். 'தாசி' என்ற சொல்லைக் கொண்டு விலை மாதர் என்ற பொருள் கொள்ள இடமில்லை. தாசி' என்பது 'தாஸன்' என்ற சொல்லின் பெண்பாற் பெயராகும். ஆக இவ்விரண்டு சொற்களும் இறைவன் மாட்டுத் தொண்டு புரிவார் என்ற பொருளைத் தருகின்றனவே யன்றி வேறில்லை.

 

ஆனால் 'தாசி பொன்னிக்குக் கம்பன் அடிமை' என்ற கதைப்படி தாசி என்ற சொல்லுக்கு விலைமாதரென்ற பொருளே விளக்கப்படுகின்றது. இதுவடசொல். தென் மொழியில் தேவடியாள், ''பரத்தை'', விலைமாதர், 'பொதுமகளிர்' என்ற சொற்கள் நூற்களிற் பெரும்பாலும் காணப்படுகின்றன. அந்நூல்களை யாதாரமாகக் கொண்டு இவர்கள் யாவரும் ஆலய கைங்கரியமே செய்து வந்தார்களெனக் கூறுவதற்கில்லை. இன்றைய நிலையைக் கொண்டும் ஊகிக்க முடியாது. சிலப்பதிகாரம்,


பிறப்பிற் குன்றாப் பெருந்தோண் மடந்தை
தாதவிழ் புரிகுழல் மாதவி......
                           (சில. அ. கா. சு. எ.)


யென்னும் பரத்தை அரங்கேறி ஆடல் பாடல் செய்தாளெனவும், கோவலன் அவளிடங் காதல் கொண்டு, சில காலங் கூடியிருந்து தன் பொருளெல்லாமிழந்து, பின் கண்ணகியை யடைந்து, பொய்யை மெய்யாகக் காட்டி யொழுகும் பரத்தையோடு மருவி ஒழுகிய காரணத்தால் முன்னோர் தேடி வைத்தபொருட் குவியல்களை யெல்லாந் தொலைத்து வறுமை யடைந்தேன்; அஃது எனக்கு மிக்க நாணத்தைத் தருகின்றது' என்று கூறி வருந்தினனெனவுங் கூறுவதால், இம்மரபினரின் 'பொது மகளிர்த் தொழில் நன்கு ஊகிக்கப்படும். அன்றியும், அச்சிலப்பதிகாரத்தின் படி, பரத்தையர்க்கு ஆடலும் பாடலும் பாணியுந் தூக்கும் '(சில. அ. கா. கசு. க எ.) உரியவை யென்பதும் பெறப்படும். இவற்றால் பரத்தையருக்கு இசையும், நாட்டியமும் உரிமையானவை யென்பதும் பெற்றாம். இவற்றுடன் அன்னோர் பொது மகளிராகவமிருந்து வருகின்றன ரென்பதற்குப் பலகோடி ஆதாரங்களுமுள்ளன. இவர்கள் தொன்மையைப் பற்றிக் கூறப்படுகின்ற யாவும் உண்மையே. தேவர் உலகிலும் இத்தகைய தேவதாசிகள் பொதுமகளி ரென்ற பொருளில் இருந்து வருவதாக நாட்டியப் பெண்களாட' என்ற நூற்பிரயோகத்தினின்றும், மற்றுஞ் சில வடமொழி நூலாதாரங்கொண்டும் விளக்கலாம்.

 

இனி, இவ்வகை மாதர் குழாம் நல்வழிப்படுவது அவசியமென்பதே மகாத்மாவின் நல்லுரை. இதனைக் குறித்துத் திசைகளில் எண்ணற்ற மறுப்புகளும், ஆலோசனைகளும் வெளிவந்து கொண்டே யிருக்கின்றன. தேவதாசிகள் கூட்டங்கூடிச் சீர்திருத்தத்திற்கு விரோதமாகத் தீர்மானங்களை நிறை வேற்றி வருகின்றனர். இதனைக் குறித்துச் சில சொற்களை மட்டும் ஈண்டு வரைய இசைகின்றோம். ஒரு நாட்டின் மேன்மை செழிப்பதற்கு முக்கிய காரணமாயிருப்பவர் பத்தினிப் பெண்டிரே. பத்தினிப் பெண்டிர் மலிந்த நாட்டில் பெண்களால் நேரும் கொலை, களவு முதலியன இன்றாம். இதனால் கைத்தொழில், வாணிபம், விவசாயம், வீரம், தியாகம் முதலியன பெருகிக், கொலை, களவு, பொய்யுரை, பேதைமை முதலியனதேயும். தொன்மை தொட்டு வருவதெதையும் நாம் அனுசரிக்க வேண்டுமென்ற நியதி எங்குமில்லை. கால மாறுபாட்டால் நாகரீகம் மாறுபடுமென்பது இலக்கணவரையறை யாதலின் தீயவை யொழிவதில் எவரும் குற்றங்கூற வியலாது. நம் நாட்டின் பெருங்குறைகளில் விலைமாதர்கள் தமது ஜீவனார்த்தமாக அத்தொழிலை நடத்துவதும் ஒன்று. அதனால், " மனையவள் விரோதமொன்று, மாதவன் விரோதமிரண்டு, தனமது விரயமூன்று, சகலரும் நகைத்தல் நான்கு, தினந்தினம் லச்சை ஐந்து, தேகத்தில் பிணியோடாறு, வினையுறு நரகமேழு, வேசியை விரும்புவோர்க்கே'' என்ற மெய்யுரைப்படி ஆடவர் பலவிதத் துன்பங்களையும் தாமனுபவிப்பதுமன்றி, நாட்டில் வல்லமை, நல்ல சந்ததி முதலியவையின்றிக் குறைவதற்கும் ஏதுவேற்படுகின்றது. இச்சீர்திருத்தத்தை முதலில் திருவாய் மலர்ந்தருளிய மகாத்மாவையும், அதனைச் சென்னைச் சட்டசபையில் நிறைவேற்றவிருக்கும் ஸ்ரீமதி-முத்துலக்ஷ்மி அம்மாளையும் தேவதாசிகளும், அவர்களிடத்து அனுதாபமுள்ளவரும் நிந்தித்து அச்சட்டம் நிறைவேறாததற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். நன்மையான விஷயங்களை எதிர்க்கும் நாட்டினியல்பு எத்துணை அநாகரீகமானதென்பதை ஈண்டு நாம் விவரிக்க வேண்டிய அவசியமில்லை. காங்கிரஸ் சார்பாகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற சட்டசபை அங்கத்தினர்கள் இவ்விஷயத்தை ஆராய்ந்து தமது கடமையை உணர்ந்து தக்க தீர்மானம் செய்வார்களெனப் பொது ஜனங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இனி, அத்தேவதாசியர் முறைப்படி விவாகஞ் செய்து கொண்டு, பரதநாட்டியம், சங்கீதம் முதலியவற்றை வளர்த்து, இன்னும் ஜீவனார்த்தமாக இராட்டையைக் கைக்கொண்டு, தேசசேவையில் அவர்களும் ஈடுபடுமாறு இறைவன் கருணை புரிவானாக.

 

தேஸதாஸன்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - மார்ச்சு ௴

 

 

 

No comments:

Post a Comment