Thursday, September 3, 2020

 

தேசபந்து தாஸர்

 

புகைப்படம் -ஆனந்தபோதினி 1929 ஜூலை

 

இப்பூவுலகின்கண் பலவிதத்திலும் சிறந்து விளங்கும் நம் பாரத நாட்டிலே அடிக்கடி பல பெரியோர்களும், ஞானிகளும், மகான்களும் தோன்றியிருக்கின்றனர். உலகத்திலுள்ள பல நாட்டவரும் நம் தாய்நாடாகிய இந்தியாவைப் புகழ்ந்து பேசுவதற்கு அப்பெரியார்கள் நமது நாட்டில் தோன்றியதே முக்கிய காரணமாகும். அவர்கள் சத்தியத்திற்காகவும், மதத்திற்காகவும், தேசத்திற்காகவும் செய்திருக்கின்ற காரியங்கள் அளவிடற்பாலனவல்ல.  ஆனால் எல்லாம் வல்ல இறைவன் மிகுந்த கருணையுடன் அடிக்கடி நமக்கு அப்படிப்பட்ட பெரியார்களை அளித்த போதிலும், நம் நாட்டவரில் எத்துணை பேர் அந்த உத்தமர்களின் உபதேசங்களைக் கேட்டு, அவைகளை நன்கு உணர்ந்து, அவர்கள் காட்டியிருக்கின்ற சிறந்த வழிகளைப் பற்றி நடந்து வருகின்றார்கள்? நமது நாட்டில் அப்பெரியார்களின் வழிபற்றித் தம் கடனாற்றி வருகின்றவர்களின் தொகை மிகவும் குறைவு என்பதை எவரும் மறுத்துக் கூறல் முடியாது. பொதுவாகத் தற்காலம் நமது நாட்டின் நிலையை உற்று நோக்கி
 னால் நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையோர், நம்முன்னோர்களின் அரிய வழிகளை யெல்லாம் அறவே புறக்கணித்து மேல் நாட்டு நாகரீகம், நடை, உடை, பாவனை இவைகளில் மிகுந்த பற்றுடையவர்களாய்த் தங்களது வாழ்நாட்களை யெல்லாம் வீணாகக் கழித்து வருகின்றனர். அந்தோ! இதைவிடக் கஷ்ட மான நிலைமை நம் நாட்டிற்கு வேறு உண்டோ! உலகிலுள்ள மற்ற தேசத்த வர்கள் நம் நாட்டுப் பெரியார்களின் பெருமையை நன்கு உணந்து, அவர்களது உபதேச மொழிகளைப் பின்பற்றி நடக்க ஈதுபோழ்து முயன்று வருகின்ற னர். ஆனால் நம் நாட்டிலுள்ளவர்களில் பெரும்பான்மையருக்கு நம் நாட்டில் தோன்றிய பெரியார்களைப்பற்றியும், அவர்களுடைய உபதேசங்களைப்பற்றியும், அவர்களுடைய ஜீவிய சரித்திரங்களைப்பற்றியும் ஒன்றுமே தெரியாது. நமது நாட்டில் தோன்றிய பெரியார்கள், ஞானிகள், மஹான்கள் இவர்களைப் போல் மற்ற நாடுகளில் எவரேனும் தோன்றி யிருக்கின்றார்களா? தோன்ற வில்லை. பண்டை நாட்களில் உலகிற்கு அறவழியையும், ஞானத்தையும் போதித்த நாடு நமது தாய்த்திருநாடாகிய பாரதநாடல்லவா? அப்படிப்பட்ட நம் தாய் நாடு இதுபோழ்து எந்நிலையிலிருக்கின்றது? செல்வத்திலும், நாகரி கத்திலும், கைத்தொழில்களிலும், வாணிபத்திலும் பண்டை நாட்களில் சிறந்து விளங்கிய நம் நாடு இதுபோது வறுமைப்பிணிக்குள்ளாகிக் கேவலமான நிலைமையை அடைந்திருப்பதற்குக் காரணம் என்ன? "மூத்தோர் சொல் வார்த்தையமிர்தம்' என்ற முதுமொழியைப் புறக்கணித்து நம்நாட்டு மக்கள் நடந்ததினாலன்றோ நமது நாட்டிற்கு இந்தக் கஷ்டமான நிலை ஏற்பட்டது! நமது நாடு முன்போல் சீரும், சிறப்பும் பெற்று விளங்க வேண்டுமானால், நாம் நமது பெரியாரையே துணைக்கொண்டு நம் கடனாற்ற முற்பட வேண்டும். எனவே இனியாவது நமது தமிழ்நாட்டு மக்கள், நாட்டுப் பெரியார்களின் அரிய உபதேசங்களை நன்கு உணர்ந்து, அவர்கள் காட்டியுள்ள சிறந்த வழிகளைப் பின்பற்றித் தம் கடனாற்ற முற்படும்படி நான் பன்முறையும் வேண்டிக் கொள்ளுகின்றேன். நம் நாட்டில் அவதரித்த பெரியார்களில் காலஞ் சென்ற தேசபந்து தாஸரும் ஒருவர். உலகம் போற்ற உடம்பெடுத்த அத்தியாக மூர்த்தியின் சரித்திரத்தைத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

 

பிறப்பு.

 

இராஜபோகத்தைத் துறந்த வங்கநாட்டுத் தியாகி - ஸ்ரீமான். சித்தரஞ்சன தாஸர் 1870-ம் வருஷம், நவம்பர் மாதம் 5 - ந் தேதியன்று வங்காளத்தின் தலைநகராக விளங்கும் கல்கத்தா நகரத்திலே பிறந்தார். தேசபந்துவின் முன்னோர்கள் ஒருகாலத்தில் தேசத்தை ஆளும் மன்னர்களாக இருந்தார்கள் என்று பல வங்க நாட்டுப் பெரியோர்கள் சொல்லுகின்றார்கள். தைரியம், மரியாதை, சுயேச்சை, பக்தி, அறிவு முதலிய பல அரிய குணங்கள் தேசபந்து வின் குடும்பத்திற்கு ஆபரணமாக இன்னும் விளங்கி வருகின்றன. பிறர்க்கு உபகாரம் செய்வதையே தாஸரது பெற்றோர்கள் தங்களது கடமையாகக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு சிறந்த குடும்பத்திலேதான் தேசபந்து தாஸர் தோன்றினார். இவரது தந்தை பாபு பூபன் மோகனதாஸர். அவர் கல்கத்தா நகரிலுள்ள உயர்தர நீதிமன்றத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஓர் அட்டர்னியாய்த் தொழில் நடத்திவந்தார். அட்டர்னி வேலையிலிருந்து கொண்டே அவர் மிகுந்த கீர்த்தியுடன் அதிகமான பொருளையும் சம்பாதித்தார். அவர் தாம் சம்பாதித்த பொருள்களை யெல்லாம் பிறர்க்கு உபகாரம் செய்வதிலேயே செலவு செய்து வந்தார். அவரது தயாள குணமும் தருமமும் அவரது அருமைக் குமாரரான தேசபந்துவுக்கும் உதித்தது போலும்! தாஸரின் தந்தையார் அட்டர்னி வேலையிலேயே தமது காலத்தைக் கழிக்காமல் " பிரமோ பப்ளிக் ஒபீனியன் " " வங்காளி பப்ளிக் ஒபீனியன்' என்ற இரண்டு பத்திரிகைகளுக்கும் ஆசிரியராக இருந்து அவைகளைத் திறம்பட நடத்தி வந்தார். அவர் பிரம்மசமாஜ இயக்கத்தில் சேர்ந்து அதற்காக மிகவும் உழைத்து வந்தார். தேசபக்தியில் பாபுபூபன் சிறிதும் குறைந்தவரல்லர். அவர் தமது எளிய உறவினர்களுக்கும், மற்றவர்களுக்கும் எப்பொழுதும் வேண்டிய உதவிகளை யெல்லாம் விருப்புடன் செய்துவந்தார். அதன் பயனாக அவருக்கு வரவுக்கு அதிகமாகச் செலவு ஏற்பட்டது. வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்ததினால் அவருக்கு நாளுக்குநாள் கடன் மிகவும் அதிகமாகிக்கொண்டே வந்தது. அதனால் அவர் தமது சொத்துக்களையெல்லாம் இழந்துவிட்டதுமன்றி இன்ஸால்வெண்டும் கொடுக்கும்படி நேர்ந்தது.

 

தேசபந்துவுக்குப் பல சகோதரர்களும் சகோதரிகளும் இருக்கிறார்கள். அவருடைய சகோதரர்களில் ஒருவரான ஸ்ரீமான் - பி. ஆர். தாஸர் இதுபோழ்து பாடலீபுரத்திலுள்ள உயர்தர நீதிமன்றத்தில் (ஹைகோர்ட்டு) நீதிபதியாக இருக்கிறார். மற்றொரு சகோதரரான ஸ்ரீமான் எஸ். ஆர். தாஸர் கல்கத்தாவில் இதுவரையில் அட்வகேட் ஜெனரலாக இருந்து இப்பொழுது இந்திய அரசாங்கத்தின் சட்ட நிபுணராக வேலைபார்த்து வருகின்றார். தேசபந்துவின் சகோதரிகளில் இருவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையா இயக்கத்தில் சேர்ந்து தேசத்தொண்டு புரிந்து வந்தனர். அத்தொண்டு என்றும் மறக்கக் கூடியதன்று.
 

கல்வி.

 

பாபு பூபன் மோகன தாஸருக்கு, தேசபந்து தாஸர் இரண்டாவது குமாரராவர். தேசபந்து இளமையில் பவானிபூரிலுள்ள லண்டன் மிஷன் கல்லூரியில் படித்து 1886 - ம் வருஷத்தில் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறினார். பின்னர் அவர் கல்கத்தா மாகாணக் கல்லூரியில் படித்து 1890 - ம் ஆண்டில் சிறப்புடன் பீ. ஏ. பட்டம் பெற்றார். பின்பு அவர் ஐ. வி. எஸ். பரீட்சைக்குப் படிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இங்கிலாந்து தேசத்திற்குச் சென்றார்.


 இங்கிலாந்தில் அவரது ஊழியம்.

 

தேசபந்து இங்கிலாந்து தேசத்திற்குச் சென்றபொழுது "இந்தியாவின் பெருங்கிழவர்" என்று அழைக்கப்படும், ஸ்ரீமான் - தாதாபாய் நௌரோஜி பார்லிமெண்ட் மகாசபைத் தேர்தலில் ஓர் அபேக்ஷகராக நின்றார். தேசபந்து தாஸ் தாதாபாய்க்குச் சாதகமாக மிகுந்த ஊக்கத்துடன் பல இடங்களுக்குச் சென்று சென்று அவ்விடங்களிலெல்லாம் அரிய சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அக்காலத்தில் அவர் செய்த சொற்பொழிவுகளே இந்தியாவில் உள்ளவர்களையும், இங்கிலாந்தில் உள்ளவர்களையும் விழித்துக் கொள்ளும்படி செய்து விட்டன. பின்பு ஜான் மாக்ளீன் என்ற பார்லிமெண்டு அங்கத்தினர் தாம் செய்த ஒரு பிரசங்கத்தில் ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் தாக்கி வாயில் வந்தபடியெல்லாம் அவமதித்துப் பேசினார். ஜான் மாக்ளீன் செய்த பிரசங்கத்தைக் கேட்டதும் தேசபந்து தாஸருக்கு மிகுந்த ஆத்திரமும், கோபமும் ஏற்பட்டன. உடனே அவர் ஜான் மாக்ளீன் செய்த பிரசங்கத்தைக் கண்டிக்க ஒரு பெரிய கூட்டம் கூட்டி, அதில் அவரைப் பலமாகக் கண்டித்துப் பேசினார். அதன் பயனாக ஜான் மாக்ளீன் தாம் செய்த பிரசங்கத்திற்கு மன்னிப்புக் கேட்கும் படி வற்புறுத்தப்பட்டதுடன், பார்லிமெண்ட் மகாசபையில் வகித்து வந்த அங்கத்தினர் பதவியையும் இழக்கும்படி நேர்ந்தது.

 

பின்பு தாஸர் இங்கிலாந்தில் அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த ஸ்ரீமான் - கிளாட்ஸ்டனின் தலைமையில் இந்தியாவின் விஷயங்களைப் பற்றி ஓர் அரிய உபந்யாசம் செய்தார். பிறகு அவர் தமக்கு ஏற்பட்ட சில தடைக்ளின் பயனாக ஐ. வி. எஸ். பரீட்சைக்குப் படித்தல் முடியாமல் போயிற்று. ஆகவே அவர் அதற்குப் படிக்காமல் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்து அதில் சிறப்புடன் தேறி 1893 - ம் வருஷத்தில் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார்.


 பாரிஸ்டர் வேலை.

 

கல்கத்தா நகருக்கு வந்ததும் முதல் முதலாக அவர் அங்கேயே தமது பாரிஸ்டர் (நியாயவாதி) தொழிலை நடத்துவதற்கு ஆரம்பித்தார். அவரது தந்தையார் தாம் வாங்கிய கடன்களைத் திரும்பக் கொடுக்காமல் இன்சால் வெண்டு கொடுத்தவராதலால் அஃது தேசபந்துவின் அபிவிருத்திக்கே ஒரு பெருந்தடையாக இருந்தது. தமது தந்தையின் கடன்களை யெல்லாம் திரும்பக் கொடுத்துத் தமது குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த கெட்ட பெயரை நீக்கிக் கொள்ள வேண்டு மென்று அவர் மிகவும் பாடுபட்டு உழைத்து வந்தார். அதனால் பொது விஷயங்களிலும், நாட்டு விஷயங்களிலும் கலந்து உழைக்க அவருக்குச் சில ஆண்டுகள் வரையில் அவகாசம் கிடைக்கவேயில்லை. கல்கத்தா உயர்தர நீதிமன்றத்தில் முதல் முதலில் தேசபந்துவுக்குப் போதிய வருமானம் கிடைக்கவில்லை. அக்காரணத்தால் அவர் சிறிது காலம் வெளியூர்களுக்குச் சென்று அங்குத் தமது தொழிலை நடத்திவந்தார். தமது குடும்பத்திற்கு ''இன்சால்வெண்ட் குடும்பம்'' என்ற கெட்ட பெயரில்லாமல் செய்துவிட வேண்டு மென்று அவர் செய்த முயற்சிகள் எண்ணில. அவருக்கேற்பட்ட குடும்பத் தொந்திரவுகளினாலேயே அவரது பெருமை முதலில் சில ஆண்டுகள் வரையில் பொது ஜனங்களுக்குத் தெரியவில்லை.

 

1908 - ம் வருஷத்தில், சுதேச இயக்கத்தில் உழைத்துவந்த வங்க நாட்டுப் பெரியார் பாபு அரவிந்த கோஷ் முதலியவர்கள் சதியாலோசனை செய்ததாக அரசாங்கத்தார் அவர்களின் மீது ஒரு பெரும் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கில் தேசபந்து தாஸர், மகரிஷி அரவிந்தருக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி மிகுந்த திறமையுடன் வாதித்தார். அவரது சட்டஞானமும் திறமையும் அப்பொழுது தான் வங்காளத்தி லுள்ளவர்களுக்குத் தெரியவந்தன. சித்தரஞ்சனரின் திறமையான வாதத்தின் பயனாக பாபு அரவிந்த கோஷ் விடுதலையடைந்தார். பாபு அரவிந்த கோஷ் விடுதலையடைந்ததும், தேசபந்து தாஸரின் திறமையும், கீர்த்தியும் எங்கும் கதிரொளி போல் பரவ ஆரம்பித்தன. பின்பு தாஸர் தமது நியாயவாதித் தொழிலைக் கல்கத்தா நகரிலேயே நடத்துவதற்கு ஆரம்பித்தார். கல்கத்தாவில் அவருக்கு நாளுக்குநாள் வருமானம் அதிகரித்துக் கொண்டே வந்தது. தமது தந்தையின் கடன்களைத் தீர்த்துத் தமது குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த கெட்ட பெயரை நீக்கிக்கொள்ள வேண்டு மென்று தாம் செய்து கொண்ட உறுதியை அவர் நிறைவேற்ற ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்குள் தாஸர் தமது தந்தையாருக்கு ஏற்பட்டிருந்த சுமார் பதினாறுலட்சம் (16,00,000) ரூபாய்க் கடனையும் தீர்த்துவிட்டார்.

 

பின்பு அவர், தம்மை இன்ஸால்வெண்டு பந்தத்திலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்று கல்கத்தா உயர்தர நீதிமன்றத்தில் மனுச்செய்து கொண்டார். அப்பொழுது நீதிபதியாயிருந்த ஸ்ரீமான் - பிளெட்சர், தாஸரின் மனுவை ஏற்றுக்கொண்டு,'' இன்சால்வெண்டாகப்போன ஒருவரின் பழைய கடன்களை மற்றொருவர் ஏற்றுக்கொண்டு அவைகளை யெல்லாம் திருப்பிக்கொடுத்து இன்சால்வெண்டு பந்தத்தினின்றும் தம்மை விடுவித்துக் கொள்ளுவது இதுவே முதல் தடவை; இதுவரையில் தாஸரைத்தவிர வேறு ஒருவரும் அப்படிச் செய்யவேயில்லை'' என்று கூறித் தேசபந்துவின் செய்கையை மிகவும் புகழ்ந்து பேசினார். இச்செய்கையின் பயனாக வங்காளத்திலிருந்த பொது ஜனங்களுக்கு தாஸரிடத்தில் மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் ஏற்பட்டன.

 

இலக்கிய ஆராய்ச்சி.


     கல்வியிலும், இலக்கிய ஆராய்ச்சியிலும் தேசபந்துவுக்கு மிகுந்த பற்றுண்டு. ஆதலின் அவர் பின்பு இலக்கிய ஆராய்ச்சியில் தமது கவனத்தைச் செலுத்தி வந்தார். 1915 - ம் ஆண்டில் அவர், தாமே "நாராயணா'' என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்திவந்தார். அந்தப் பத்திரிகைக்கு மஹாமஹோபாத்தியாய ஹரப்பிரஸாத சாஸ்திரி, விபின் சந்திரபாலர் போன்ற பல அறிஞர்கள் அடிக்கடி கட்டுரைகள் எழுதிவந்தனர். தேசபந்து தாஸருக்குப் புதிய துறையில் கவிகள் இயற்றுவதில் அபாரமான திறமையும், சக்தியும் உண்டு. தேசபந்துவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் கவி இயற்றும் சக்தி அமையப் பெற்றவர்களாய் விளங்குகின்றனர்.

 

1894 - 95 - ம் வருஷத்தில் தாஸர் வங்காளி பாஷையில் பல அருங்கவிகளடங்கிய "மஞ்சலா'' என்ற நூலை வெளியிட்டது மன்றி இன்னும் பல சிறந்த நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். தேசபந்துவின் அறிவையும், திறமையையுங் கண்ட வங்காள இலக்கிய சங்கத்தார் அவரை ஒருவருஷம் தங்களது சங்கத்தின் தலைவராகத் தெரிந்தெடுத்துக் கௌரவித்தனர்.

 

தேச சேவை.


      பின்னர் தாஸர், நாளுக்குநாள் தேசவிஷயங்களிலும் அரசியல் விஷயங்களிலும் தீவிரமாகத் தலையிட்டு உழைப்பதற்கு ஆரம்பித்தார். அவரது தேசபக்தி மாசற்றது; உண்மையானது. தற்காலத்தில் நமது நாட்டில் சிலர் தமது சுயநலங்கருதி தேசசேவை செய்கின்றோமெனப் பறையடித்து வருகின்றார்கள். ஆனால் தேசபந்து தமது சுயநலங்கருதித் தேசசேவையில் ஈடுபட்டாரில்லை. அவரது சுயநலமின்மை, தியாகம், தருமசிந்தனை, தைரியம், திறமை, ஞானம் முதலியவைகள் அவரை உலகிற்கே ஒரு பெருந்தியாகியாகச் செய்து விட்டன. அவர் ஒரு தீவிர காங்கிரஸ் வாதியாக இருந்தார். அவர் தமது நியாய வாதித்தொழிலை நடத்திவந்த காலத்திலும் தேசசேவையைச் சிறிதும் மறந்தாரில்லை. தேசத்தின் பொருட்டுத் தாம் அனுபவித்து வந்த இராஜபோகத்தைத் துறந்து, தமது தொழிலையும் விட்டு அவர் செய்துவந்த ஊழியம் என்றும் மறக்கற்பாலதன்று. அவரது தியாகமும், கொடையும் இன்று இந்தியாவுக்கே ஒளியாக விளங்குகின்றன.

 

1917 - 18 - ம் வருஷங்களில் தேசபந்து தாஸர் அப்பொழுது இருந்த அரசியல் நிலைமையைப்பற்றி வங்காளமெங்கும் பல அரிய பிரசங்கங்கள் செய்தார். சென்னை மாநகரில் ஸ்ரீமதி பெசண்ட் அம்மையார் அரசாங்கத்தினரால் காப்பில் வைக்கப்பட்ட காலத்தில் அதைக் கண்டித்த தலைவர்களில் தேசபந்துவும் ஒருவர். அதைக் கண்டிக்க கல்கத்தா நகரிலுள்ள டவுன் ஹாலில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதை நமது காருண்ய அரசாங்கத்தார் தடுத்து விட்டனர். அந்தத் தடையை தாஸர் தமது முயற்சியினால் நீக்கினார். 1917 - ம் ஆண்டில் கல்கத்தா நகரில் நடைபெற்ற காங்கிரஸில் இந்தியாவுக்குச் சுய ஆட்சி கொடுக்கப்படவேண்டுமென்ற தீர்மானத்தை ஆதரித்து அவர் செய்த உபந்யாசம் பலராலும் போற்றப்பட்டது.

 

1919 - ம் வருஷத்தில் பஞ்சாபில் நடைபெற்ற படுகொலையே தேசபந்து தாஸரின் உணர்ச்சிகளைத் தீவிரமாகக் கிளப்பி விட்டதென்று சொல்லலாம். அந்தப் படுகொலையைப் பற்றி விசாரிக்கக் காங்கிரஸ் மகாசபை நியமித்த கமிட்டியில் தாஸரும் ஓர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார். இக்கமிட்டியார் எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடிய சாதாரணமான சிபார்சுகளையே செய்தனர். ஆனால் அரசாங்கத்தார், அந்தச் சிபார்சுகளைக் கவனிக்கவுமில்லை; ஏற்றுக் கொள்ளவுமில்லை.

 

1919 - ம் வருஷம் டிசம்பர் மாதம் பண்டிதமோதிலால் நேருவின் தலைமையின் கீழ் அமிர்தசரஸில் கூடிய காங்கிரஸில் சட்டசபைகளுக்குச் சென்று அங்கு ஒத்துழையாமையை அனுஷ்டிக்க வேண்டுமென்று தேசபந்துதாஸர் மிகவும் வற்புறுத்தினார். ஆனால் அப்பொழுது மகாத்மாகாந்தி பூரண ஒத்துழைப்பையே அனுஷ்டிக்க வேண்டுமென்று கூறினார். இறுதியில் லோக மான்ய பாலகங்காதரதிலகர் பரஸ்பர ஒத்துழைப்பு முறையைக் கையாள வேண்டுமென்று வற்புறுத்தினார். லோகமான்ய பாலகங்காதர திலகரின் பரஸ்பர ஒத்துழைப்பு முறையை தேசபந்துவும், காந்தி அடிகளும் ஒப்புக்கொண்டனர்.

 

இதற்குப்பின் ஆறுமாதங்களுக்குப் பிறகு மகாத்மாகாந்தி தமது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். 1920 - ம் வருஷம் அக்டோபர் மாதம் லாலாலஜபதிராயின் தலைமையின் கீழ் கல்கத்தா நகரில் நடைபெற்ற விசேஷ காங்கிரஸில் தேசபந்து தாஸர் காந்தியடிகளின் ஒத்துழையா இயக்கத்திற்கு விரோதமாகப் போராடினார். ஆனால் காங்கிரஸில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானம் பெரும்பான்மையோரால் ஆதரிக்கப்பட்டு நிறைவேறிவிட்டது. அதேவருஷம் டிசம்பர் மாதம் நாகபுரியில் சேலம் ஸ்ரீமான். சி. விஜயராகவாச் சாரியாரின் தலைமையின் கீழ் நடைபெற்ற காங்கிரஸில் மீண்டும் ஒத்துழை யாமை வற்புறுத்தப்பட்டது.

 

      காங்கிரஸின் தீர்மானத்திற்குக் கீழ்ப்படிந்து தேசபந்து தாஸர் 1921 - ம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தமது பாரிஸ்டர் தொழிலை நிறுத்திவிட்டார். அவர் பிரபலமாக நியாயவாதத் தொழில் நடத்தி வந்த காலத்தில் அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு இரையாகிச் சிறை சென்றவர்களின் குடும்பங்களுக்கும், நாடு கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் பொருளுதவி செய்து அவர்களைக் காப்பாற்றி வந்தார். எளிய மாணவர்களுக்கும், எளிய தேசத் தொண்டர்களுக்கும், மற்றவர்களுக்கும் அவர் செய்த பொருளுதவி அளவிடக் கூடியதன்று. பொதுவாகச் சொல்லுமிடத்து அவர் வங்க நாட்டின் கர்ணனாக விளங்கி வந்தாரென்றே சொல்லலாம். அவர் செய்த கொடைகளையும், உதவிகளையும் வங்காள வாசிகள் என்றும் மறத்தல் முடியாது. இத்தகைய பெரியார் திடீரென்று தமது பாரிஸ்டர் தொழிலை நிறுத்தியதால் பலருக்கும் சங்கடம் ஏற்பட்டது.


ஒத்துழையாமை

 

காந்தி அடிகளின் ஒத்துழையா இயக்கத்தைப் பின்பற்றி, தேசபந்து தாஸர் வங்காளத்தில் தீவிரமாக உழைத்துவந்தார். அவரைப்போலவே அவரது அருமை மனைவியாரான ஸ்ரீமதி வஸந்தாதேவியாரும், அவரது செல்வப் புதல்வரான ஸ்ரீமான் சிராஞ்சனதாஸும் தேசத்தொண்டு செய்ய ஆரம்பித்தார்கள். தாஸாது சகோதரிகளில் இருவர் காந்தியடிகளுடன் சேர்ந்து தேசத் தொண்டு செய்ததை இந்தியா என்றும் மறத்தல் முடியாது.

 

தேசபந்து தாஸரின் வீரமொழிகளைக் கேட்டு வங்க நாட்டுக் கல்லூரிகளிலும், பாடசாலைகளிலும் பயின்று வந்த மாணவர்களிலே பல ஆயிரக்கணக் கானவர்கள், தங்களது கல்லூரிகளையும், பாடசாலைகளையும் விட்டு விட்டுத் தீவிரமாகத் தேசத்தொண்டு செய்வதற்கு முன்வந்தனர். அவர்களில் பலர் நாட்டுத் தொண்டு செய்கையில் சிறைக்கும் சென்றார்கள். காந்தி அடிகளின் ஒத்துழையாமைப் போர் பொதுவாக இந்தியாவில் நடைபெற்ற போதிலும் அது சிறப்பாக வங்காளமாகாணத்தில் தான் நடைபெற்றதென்று கூறலாம். தேசத்தொண்டிற்கென மகாத்மாகாந்தி திரட்டிய'' திலகர் சுயராஜ்யநிதி " க்கு வங்காள மாகாணத்தில் அதிகமான தொகை தாஸரது முயற்சியினால் தான் சேர்ந்தது. தேசபந்து பாரிஸ்டராக வேலை பார்த்து வந்த காலத்தில் அவர் மாதம் இரண்டு லட்சம் ரூபாய்கள் வரையில் சம்பாதித்து வந்தாரென்பது அறிஞர் பலரால் சொல்லப்படுகிறது. எனினும் அதைப் பொருட்படுத்தாமல் உதறித்தள்ளி, தேசப்பணியையே தமது கடமையெனக்கொண்டு தேசபந்து தாஸர் நாட்டின் நலத்தைக் கருதிச் செய்த ஊழியத்தை இந்தியர் என்றும் மறத்தல் முடியாது.

 

கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்ட தேசியக் கல்லூரிக்கு, தாஸர், தாம் சம்பாதித்த தொகையில் பெரும்பாகத்தை நன்கொடையாக அளித்தார்.

 

சிறைவாசம்

 

1921 - ம் வருஷம் டிசம்பர் மாதம் தேசபந்து தாஸர் அரசாங்கத்தாரால் கைது செய்யப்பட்டார். 1922 -ம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் அரசாங்கத்தார் தேசபந்து தாஸருக்கு ஆறுமாதம் சிறைவாச தண்டனை விதித்தார்கள். நாட்டின் நலத்தையே தமது நலமெனக் கருதியுழைத்த தேசபந்து அந்தச் சிறைவாச தண்டனையைச் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார். சிறைச் சாலையிலிருந்த காலத்தில் அவருக்குப் பல கஷ்டங்கள் ஏற்பட்டன. ஆனால் தாஸர் அவைகளை யெல்லாம் உற்சாகத்துடன் அனுபவித்து வந்தார்.



 

 

காங்கிரஸ் தலைமைப்பதவி.

 

தேசபந்துவின் தியாகத்தையும், தேசசேவையையும் பாராட்டுவதற்கு அறிகுறியாக இந்தியர்கள் 1922 - ம் வருஷம் டிசம்பர்மாதம் கயாநகரத்தில் நடை பெற்ற காங்கிரஸுக்கு அவரையே தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். தாஸர் அந்தக் காங்கிரஸுக்குத் தலைமை வகித்து, இப்போது இந்தியா அடைந்துள்ள நிலைமையை நன்கு விளக்கிக்காட்டி, அந்த நிலைமையை மாற்றுவதற்கு இந்தியர்கள் செய்ய வேண்டிய காரியங்கள் எவை என்பதையும் நன்கு விளக்கினார். அதற்குப் பிறகு அவர் சுயராஜ்யக்கட்சியை ஏற்படுத்தினார். காங்கிரஸ் மகாசபை விஷயத்தில் தாஸருக்கு அளவுகடந்த பக்தியும், அன்பும் உண்டு. ஆதலின், அவர்தாம் ஆரம்பித்த சுயராஜ்யக் கட்சியைக் காங்கிரஸிலிருந்து பிரிக்காமல், காங்கிரஸில் ஓர் அமிசமாக இருக்கும்படி செய்தார்.


சட்டசபையில் தாஸரது ஊழியம்.

 

பின்பு சுயராஜ்யக்கட்சியின் தலைவரான தேசபந்துதாஸர் வங்காளமாகாணச் சட்டசபையில் அங்கம் பெற்று, அங்கு இரட்டையாட்சி முறைகள் நடைபெறாமல் ஸ்தம்பித்துப் போகும்படி பலதீர்மானங்களை நிறைவேற்றினார். இடையில் வங்காள கவர்னர் தேசபந்துவை மந்திரிபதவியை ஏற்று அரசாங்கத்தை நடத்தும்படி பன்முறை கேட்டுப் பார்த்தார். ஆனால் தேசபந்து காலர் கவர்னரின் வார்த்தைகளுக்குச் சிறிதும் செவிசாய்க்காமல் தமது போராட்டத்தைச் சட்டசபையில் தீவிரமாக நடத்துவதற்கு ஆரம்பித்தார். அதன் பயனாக அரசாங்க வேலைகள் நடைபெறுவது மிகவும் கஷ்டமாகிவிட்டது. இதை யொட்டி, மத்தியமாகாணத்திலும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் இரட்டை ஆட்சி நடைபெறாமல் செய்து விட்டார்கள். 1924 - ம் வருஷம் டிசம்பர் மாதம் மகாத்மாகாந்தியின் தலைமையின் கீழ் பெல்காமில் நடைபெற்ற காங்கிரஸுக்கு அவர் விஜயம் செய்து அகில இந்திய புத்தகசாலை மகாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.

 

தேகநிலை.

 

பெல்காம் காங்கிரஸுக்குச் சென்று திரும்பிய பிறகு தேசபந்து தாஸர் நோயினால் பீடிக்கப்பட்டு, அதன் பயனாகப் பலவித கஷ்டங்களை அனுப்வித்து வந்தார். பின்பு அவர் தமது வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டுச் சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று பாடலீபுரத்திலுள்ள தமது சகோதரரின் இல்லத்தில் சிலகாலம் தங்கியிருந்தார். 1925 - ம் வருஷம் மார்ச்சுமாதம் நடைபெற்ற வங்காள சட்டசபைக் கூட்டத்திற்கு, நோயினால் பீடிக்கப்பட்டிருந்த தாஸரை நம்மவர் ஒரு நாற்காலியில் வைத்துத் தூக்கிவந்தார்கள். தாஸரின் விஜயத்தின் பயனாக அந்தக் கூட்டத்தில் வங்காள மந்திரிகளின் சம்பளம் நிராகரிக்கப்பட்டது. இந்த விஷயம் எல்லோருக்கும் ஞாபகமிருக்குமென்பதில் ஐயமில்லை.

 

 

 

மேயர் பதவி (நகரசபைத்தலைவர் ஸ்தானம்)

     

கல்கத்தா நகரசபையை, சுயராஜ்யக் கட்சியினர் கைப்பற்றியதும், தேசபந்து தாஸரே அதற்கு மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக இந்தியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ஸ்ரீ தாஸரேயாவர். தேசபந்து மேயராக இருந்தபொழுது கல்கத்தா நகரவாசிகளின் நன்மைகளைக் கருதி அனேக காரியங்களைச் செய்தார். பொது ஜனங்களின் வரிப்பணம் வீணான வழிகளில் விரையமாகாதபடி அவர் பலவிதத்திலும் தடுத்து வந்தார். பொதுவாக அவர் கல்கத்தா நகருக்கே தந்தையாக விளங்கினாரென்றே சொல்லலாம். கடைசியாகப் பரீத்பூரில் கூடிய வங்காளமாகாண மகாநாட்டுக்கு ஸ்ரீ தாஸர் தலைமை வகித்து அரிய பிரசங்கம் செய்தார். அது இன்னும் இந்தியரின் மனதில் இருந்து கொண்டே யிருக்கிறது.


மரணம்.

 

இதற்குப் பிறகு அவர் தமது தேகசௌக்கியத்தைக் கருதி ஓய்வு எடுத்துக் கொள்ளுவதற்காக டார்ஜ்லிங் சென்று அங்கே சிலகாலம் தங்கியிருந்தார். ஆனால் அவரைப் பீடித்திருந்த நோய் நாளுக்குநாள் அதிகமாகி வந்தது. அக்காலத்திலும் தேசபந்து தமது தாய்நாட்டை மறந்தாரில்லை. திடீரென்று (16 - June - 1925) செவ்வாய்க் கிழமையன்று மாலையில் அவர் நோயின் கொடு மையைப் பொறுக்க முடியாமல் ஆண்டவன் பொன்னடி நிழலை அடைந்தார். அவரது ஆத்மா சாந்தியடைக.


அவரது பெருமை.

     

தேசபந்து தாஸர் தமது நாட்டிற்காகப் பொன்னையும் கொடுத்தார்; பொருளையும் இழந்தார்; தாம் அனுபவித்து வந்த இராஜபோகத்தையும் துறந்தார்; தமது தொழிலையும் விட்டார்; தாமும் சிறைக்குச் சென்றார். தமது ஒரே அருமைக்குமாரன் சிராஞ்சனதாஸையும், தமது உத்தம மனைவியான ஸ்ரீமதி வஸந்தாதேவியாரையும் சிறைக்கு அனுப்பினார்; தமது மாளிகையையும் தேசத்தின் பொது உபயோகத்திற்காக விருப்புடன் அளித்தார்; கடைசியில் தமது உயிரையும் தேசத்திற்காக அர்ப்பணம் செய்தார். வங்க நாட்டின் கற்பகமாய் விளங்கிய இப்பெரியாரது மரணம் இந்நாட்டிலுள்ள எல்லோரையும் கதறும்படி செய்து விட்டது. இவருக்கு விரோதிகளும் இவரது மரணத்தைக் கேட்டு மிகவும் வருந்திக் கதறினார்களென்றால் இப்பெரியாரின் பெருமைதான் என்னே!

 

தேசத்திற்குப் பந்துவாயிருந்த தாஸர், ஏழைகளுக்குப் பந்துவாயிருந்த தாஸர், தேசத்திற்காகவே இருந்தார்; எளியவர்களின் நன்மைக்காகவே உழைத்தார்; தேசத்திற்காகவே இறந்தார். தேசபந்து தேச ஊழியத்தையே தமது தொண்டாகக் கொண்டவர்; தேசத்தையே அவர் தெய்வமெனப் போற்றி வந்தார். தேசத்திற்கு ஊழியம் செய்வது கடவுளுக்குத் தொண்டு செய்வதாகுமென்று அவர் அடிக்கடி சொல்லுவது வழக்கம். "என்நாட்டின் விடுதலைக்காக நான் எனது உயிரையும் அர்ப்பணம் செய்யத் தயாராயிருக்கின்றேன்'' என்று அவர் சென்னையில் செய்த பிரசங்கத்தில் கூறியிருக்கின்றார். அதைப்போல் அவர் நாட்டின் விடுதலைக்காகவே தமது உயிரையும் அர்ப்பணம் செய்து விட்டார். அப்பெரியாரின் பெருமைதான் என்னே!

 

அவர் சம்பாதித்த பொருள்களெல்லாம் மற்றவர்களுக்கே உபயோகப்பட்டன. தேசபந்து தமக்கென வாழாமல் நாட்டவரின் நலத்திற்காகவே வாழ்ந்து வந்தார் என்பதை உற்றுநோக்கினால் அப்பொழுது நம்தாய் நாட்டின் பெருமை நன்கு விளங்கும். அவர் எத்தனையோ எளிய மாணவர்களை ஆதரித்துக் காப்பாற்றி வந்தார். எத்தனையோ எளியவர்களின் குடும்பங்களை ஆதரித்து ரட்சித்தார். நாடு கடத்தப்பட்ட தேசபக்தர்களென்ன, சிறைக்குச் சென்ற தேசத்தொண்டர்களென்ன இவர்களின் குடும்பங்களை, தேசபந்து பாதுகாத்து வந்தார். தாஸாதுமாளிகை ஏழைகளுக்கு அன்னமளிக்கும் ஒரு பெருஞ் சத்திரமாகவே இருந்து வந்தது. அவரது வீரமும், தியாகமும், கொடையும் எண்ணிறந்தவை. அவைகளை விரிக்கிற் பெருகும். அவர் சிறைக்குச் செல்லும் பொழுது கூறியமொழிகள் எவருக்குத்தான் ஊக்கத்தையும், உணர்ச்சியையும் அளிக்கா. அவையாவன: - "கைவிலங்குகள் என்மணிக் கட்டுகளில் இருப்பதை நான் உணர்கிறேன். என்தேகம் இரும்புச் சங்கிலிகளினால் பிணிக்கப்பட்டிருப்பதையும் நான் காண்கின்றேன். அடிமை வாழ்க்கையின் துயரம் இதுவே. இந்தியா முழுவதும் ஒரு பெருஞ்சிறைச்சாலையாகவே எனக்குத் தோன்றுகின்றது. காங்கிரஸ் வேலைகள் தேசவேலைகள் எப்படியாவது நடைபெறல் வேண்டும். நான் சிறையில் இருந்தால் என்ன, சிறைக்கு வெளியில் இருந்தால் என்ன, உயிருடன் வாழ்ந்தாலென்ன? இறந்து பட்டாலென்ன? " என்பனவே.


மதம்

 

தேசபந்து தாஸர் ஸ்ரீசைதன்யரின் வைணவ மதத்தைச் சேர்ந்தவர். தேசபந்துவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் விஷ்ணு பக்தர்கள் தாம். தேசபந்துவும் தமது தந்தையைப் போல் பிரம்மசமாஜத்தில் சேர்ந்து அதற்காக மிகவும் உழைத்து வந்தார். ராஜாராம் மோகன்ராய் என்ற பெரியாரிடத்தில் தாஸருக்கு அளவு கடந்த பக்தியும் மரியாதையும் உண்டு. அவரது வழிகளைப் பின்பற்றி நடப்பதில் தாஸருக்கு அளவற்ற ஆசையுண்டு. மேனாட்டார் நமது கல்வி, மதம் முதலியவைகளை அழிக்கச் செய்துவரும் சூழ்ச்சிகளை அவர் மிகவும் கண்டித்து வந்தார். இப்படிப்பட்ட பெரியாரைப் போல் பலர் இந்நாட்டைத் தட்டியெழுப்ப முன்வர வேண்டுமென்பதே எல்லோருடைய பிரார்த்தனை. இப்பெரியாரது வழிகளைப் பற்றி நாம் உழைத்து வந்தால் நமது நாடு மேன்மையுறும்; நம் பண்டைத் தொழில்கள் வளம் பெறும்; நம் நாட்டுப் பொருளாதார நிலை வலுப்படும்; நாட்டைப் பீடித்துள்ள நோய்களும், கஷ்டங்களும் ஒழிந்து போம். தேசபந்து தாஸரின் நாமம் வாழ்க. சுபம்.

 

திரு. கே . சுப்ரமணியம்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜுலை, ஆகஸ்ட்டு ௴

 

 

No comments:

Post a Comment