Thursday, September 3, 2020

 

தேசம் விழைவது எதனை?

 

தேசம் விழைவது சகிப்புத்தன்மையை. அந்த சகிப்புத்தன்மை எதனால் வரும்? பொறுமையினால். அந்தப்பெறுமை எதனாற்போதரும்? நல்லறிவின் மாண்பினாலேதான். அந்த நல்லறிவு எவ்வழி எய்தும்? நல்லொழுக்கம் நல்லிணக்கம் என்பனவைகளால் என்பது தேற்றம். இங்கே ஒழுக்கமென்பது புற ஒழுக்கத்தினை மட்டில் குறித்தல்ல. சட்டுப்பாடான ஒழுங்கு முறையையே குறிப்பிட்டதாகும். இவ்வித ஒழுங்கு முறையை வளர்ப்பதே பண்டைக் காலத்தில் சமூக திட்டத்தின் முதற்படியாக அமைக்கப்பட்டிருந்தது; அதுதான் பிரமசரிய மேற்கொள்வதாகும். அந்த பிரமசரியத்தினை மேற்கொள்ளாத இளைஞர்கட்கு கிருகஸ்தராகும் உரிமையே அக்காலத்தில் வழங்கப்படவில்லை. அந்த முதலாவது ஆச்சிரமத்தினை அனுஷ்டிப்பவர்கட்கு ஒரு பொழுதுண்டியும், எளியவாழ்வும், பணிவும், வன வாழ்க்கையும், மேற்கொள்ளுவது சாதாரணமாகவே வழக்கத்திலிருந்தது. ஏழைகளும் செல்வர்களும் தாழ்வு, உயர்வு கருதாமல் அத்தாபனங்களில் இடம் பெற்றிருந்தனர். இளமையில் இளைஞர்க்கு ஏற்படும் எண்ணங்களும் பயிற்சிகளுமே பின்னர் அவர்கள் பெரியவர்களாகி உலகியலில் ஈடுபடுங்காலத்து உருப்பெற்றுத் திகழ்வதாகும். இவ்விஷயத்தில் நமது முன்னோர்கள் கூர்ந்து ஏற்படுத்திய ஒழுங்கு முறை பிறநாட்டினர்கள் எவரும் வியந்து போற்றத் தக்கதாகும். இவைகளை நன்குளம் கொண்டே அறிஞர் டி. எஸ். வாஸ்வானி என்பார் சமீபத்தில் மாணவர்கட்கு நிகழ்த்திய அரிய சொற்பொழிவில்,


''பண்டைக்கால ரிஷிகளின் உபதேசங்களை மறப்பது நமது ஆன்மசக்தியை வற்றச்செய்வது போ லாகும்''                                     என்றும்,
"உண்மையான கலைஞானத்திற்கு அடையாளமா யிருப்பது எளிமையேயாகும்                                                                    என்றும்,
''உடையிலும் உணவிலும் நீங்கள் எளியவர்களா யிருத்தல் வேண்டும்” என்றும்
''புற எளிமையைவிட அக எளிமை ஞானம் பெற அவசியம்''     
என்றும்

 

கூறியிருக்கின்றார். ஆழ்ந்து சிந்திக்குங்கால் பண்டைக்காலப் பெரியோர்களின் மதிநுட்பம் எத்துணைச் சிறப்புடைய தென்பது விளங்கும். நமது மகாத்மாகாந்தியடிகள் எழுதியுள்ள பிரமசரியம் என்னும் ஒப்பில்லாத தெய்வ நூலில், சுவை யடக்கமே புலன் அடக்கத்தினைத் தரும், அப்புலனடக்கமே (சன்மார்க்கத்தினை வளர்க்கும்) மனவடக்கத்தினை அளிக்கும் என்பதை எத்துணைத் தெளிவாக எடுத்துக்காட்டி யுள்ளார்?

 

மேலும் அடிகள் தென்னாப்பிரிக்காவில் யோனிக்ஸ் ஸ்தாபனமாகிய பிரமசரிய குருகுலத்திற்கு வகுத்த ஒழுங்கு முறையில் ''நுண்ணிடைவார் எதிர்வரின் நோக்காத்திண்மை" யைச் சட்டமாகவே இயற்றியுள்ளார்.

 

மனவடக்கத்திற்கு மாறான குணத்தை எழுப்பும் எப்பொருள்களையும் கலைபயிலும் வாலிபர்கள் உபயோகிக்கவில்லை. இதற்குப் பிரமசாரிகள் தாம்பூலம் போடக்கூடாதென வகுத்திருந்த சமூகக் கட்டுப்பாடே நல்ல உதாரணமாகும். நகரவாஸமும் இக்கருத்துப் பற்றியே விலக்கப்பட்டது போலும். ஒழுங்கு முறைகளினால் மனதை யடக்கி அறிவை வளர்த்து உடல் வன்மையைப் பெருக்கிய வாலிபர்களே முற்காலத்தில் இருந்தனர். தற்காலத்தில் இளைஞர் கலைபயில் கூடங்களில் அத்தகைய ஒழுக்கப்பயிற்சிக்கு ஒரு சிறுவசதியாவ துண்டோ? அதற்கு எதிரிடையான குணங்களை வளர்க்கவே தற்காலக் கல்வி நிலையங்கள் துணை செய்வதாகின்றன. ஒழுங்கில்லாத வாலிபர்களும் கல்வி கற்றுப் பட்டதாரிகளாகின்றனர். இத்தகையார் கற்ற கல்வியினால் நாட்டிற்கு யாது பயன்? அல்லது தமக்காவது பயனுணடா? உண்மையில் இல்லையென்றே கூறலாம். இது குறித்தே தாயுமானாரும் ''மனவடக்கம் இல்லார்க்கு வாயேன் பராபரமே" என்றருளினார்.

 

மனதை அடக்க ஆற்றல் இல்லானேயாகில் அவன் வாய் திறந்து நாணாமல் பிறர் முன்பு பேசவும் தகுதி பெறான் என்பதே இதன் கருத்தாகும். நாடு உரிமை யிழந்து பிறரால் அடக்கி ஆளப்பட்டு நசுக்குண்டு வறுமையும் சிறுமையும் வருத்தத் துன்புறும் நிலையை எய்தியதற்கு பிரமசரிய விதிகளை காலத்தினர் பேணாது விட்டதே காரணமாகும் என்று கருதுவது பிழையாகாது.

 

நம்நாடு எல்லாம்வல்ல இறைவன் திருவருளால் உரிமை யெய்தினும் முதலில் திருத்தி யமைக்கப்பட வேண்டியது கல்வி முறைகளே யாகும். காலத்திற்கேற்ற கல்வியைக் கற்பதுமட்டில் வேண்டற்பாலதே. புலனடக்கத்திற்கு வேண்டிய சாதனங்களை அமைப்பதும், கட்டுப்பாடான ஒழுங்கு முறைகளை அரண் செய்வதும் கைவிடத் தக்கவைகள் அல்ல. வாலிபர்கள் படாடோபமும், பெருமிதவாழ்வும், மணவினை வேட்கையும், நாவடக்க மின்மையும் உடையவர்களாய் (தற்போ துள்ளபடி) இருந்து வருவரேல் உரிமையாட்சி யெய்தினும் நன்னிலை யெய்த முடியாது. தற்காலம் அடிகளின் அளவிறந்தஆத்மசக்தியினால் எவ்வித இந்திய வாலிபர்கள் பலர் தியாகமூர்த்திகளாய் அஹிம்ஸைப் போரில் அஞ்சாது எந்நாட்டினரும் வியக்கும்படி தொண்டாற்றித் துன்பங்களை யேற்று முன்னணியில் வெற்றிமாலைசூடி'நிற்கின்றனர். இதேஎண்ணமும் உண்மை ஊக்கமும் இனியும் வீழ்ந்து படாமல் நின்று நிலவுவதற்கு மேலே கூறிய பண்டைக்கால ஒழுங்குகளை வகுத்துப் பயிற்றுவதே இன்றியமையாததாகும்.

 

இத்தகைய பயிற்தித்துறை நடைமுறையில் சாத்தியமாகும்படி பெற்றோர்கள் பெரிதும் துணை நிற்பதையே யாவும் பொறுத்து நிற்கிறது. ஒழுங்கு முறைகளில் தலை சிறந்தது மணவினையில் மனம் செல்லாதபடி ஒழுகுதலாகும். முற்காலத்தில் வயது 25 - 30 - க்கு முன்பு கிருகஸ்தனாகும் வழக்கம் இருந்ததில்லை யென்றறிகிறோம். வரவர அந்த வயதிற்குள் பல, சில குழந்தை கட்குப் பிதாவாகி கொள்வினை கொடுப்புவினை செய்து சம்பந்தியுமாகின்றனர். பன்னிரண்டு பதின்மூன்று வயதுப் பெண்கள் மகப்பெற்று விட்டால் அவர்களை பாக்கிய சாலிகளென எண்ணுவதும் சர்வசாதாரணமாகி விட்டது. இதைவிட அறிவீனம் வேறொன் றுளதோ? ஆண்மக்கள் ஒழுங்குமுறை அநுஷ்டானத்தில் வரமுடியாமல் உயிரற்றிருக்கும் வரையில் பெண்களின் ஒழுங்கு முறைகளைப் பற்றியோ விவாக விஷயங்களைப் பற்றியோ கூக்குரலிடுவதில் எவ்வித பயனும் இல்லை யென்பதை எப்போதும் மனதில் வைக்க வேண்டும். இடப்புறம் நோயுற்றிருப்பதைத் தடுக்க வலப்புறம் முனைந்து முயல்வது நகைக்கிடமே யாகும். இருபுறமும் நோயின்றிச் சுகமெய்துதற்குச் சரீரத்தில் பிணிநீக்கம் ஏற்படவேண்டும். ஆனால் தன்னிலை மறந்து நிலையைப் பேசுவதும் ஒரு இயல்பாய் விட்டது. பேச்சில் காட்டும் பெருமிதத்தை விடச் செயலில் காட்டும் சிறிதளவு சிறந்த தன்றோ?

 

ஆடவராகிய மாணவர்கள் மனவடக்கத்திற்குத் திறவுகோலாகிய (பிரமசரியப் பயிற்சியை) ஒழுங்கு முறைகளை அநுஷ்டிக்கும்படி கவனம் செலுத்துவது போலவே கன்னிகைகளின் ஒழுக்கம் பயிற்சிகளையும் கவனிக்க வேண்டுவது மிக்க அவசியமாகும்.

 

இந்தியப் பெண்மணிகள் இளமையில் வளர்க்கப்படும் தன்மையிலேயே அவர்கள் ருதுகாலமும் மகப்பேறும் உடல் மெலிவும் அநேகமாய் சார்ந்திருப்பதென்று கூறலாம். பேசக்கூடிய 3- வயதுக்குழந்தையிலிருந்தே பெற்றோர்கள் அதன் விவாக எண்ணத்தினையே சதா உட்கொள்வதும் அதன் முன்னிலையில் அதைப்பற்றிப் பேசுவதும் பெருந்தவறாகும். குழந்தை வளரவளர விவாக எண்ணமும் மனதில் வளரத் தலைப்படுகிறது. இந்நிலைமையில் வரனுடைய நவீனக்கல்வி, நவீனநாகரிகம், வரதட்சணை இவைகளைப் பற்றிய சிந்தனைகளும் சம்பாஷணைகளும் பெண்கள் மனதில் இடம் பெறுகின்றன. (பிஞ்சில் பழுப்பது போல) பேதைப் பருவமுள்ள பெண்கள் அதாவது7 - வயதுப் பெண்கள் பெதும்பைப் பருவத்தில் ஏற்படக்கூடிய உணர்ச்சியைப் பெறுகின்றனர். பெதும்பைப் பருவமென்பது பன்னிரண்டு வயதுக்குக்கீ ழ்ப்பட்ட வயதாகும். அந்தப் பன்னிரண்டு வயதில் மங்கைப் பருவத்தின் நிலைமையை அடைந்து விடுகின்றனர். உஷ்ண பிரதேசமாகிய இந்நாட்டின் நிலைமையே சீக்கிர ருதுவுக்குக் காரணமென்று பொதுவாகக் கருதப்படுகின்றது. உஷ்ணத்தின் காரணமாக ருதுவாகக் கூடிய சீக்கிர வயதும் 14 - க்கும் கீழ் என்று சொல்ல முடியாது. 10 - வயதிலிருந்து 13 - வயதுக்குள் ருது காலத்தை அடையும் பெண்கள் நம் நாட்டில் கணக்கில்லை. அந்தக் கணக்கை நுட்பமாய் ஆராய்ந்தால் முக்காற் பங்கும் மேல் வகுப்பினரென்று கருதப்படும் பிரிவினர்களிலேயே நிகழ்வதென்பது ஏற்படும். அதிக சுகபோகங்களில் செல்வச் சிறப்புடன் வளர்க்கப்படும் பெண்களுக்கே இந்தவகையான அகால விபரீதம் நேருவதன்றி வயல்களில் கூலி வேலை செய்து நாள் முழுதும் உழைத்து ஜீவனம் செய்யும் ஏழைகளின் குடும்பங்களில் பிறக்கும் பெண்கள் சீக்கிர வயதில் இந்நிலையை அடைவதில்லை என்பதே இதற்குத் தக்க சான்றாகும். வரனும் வரனைப் பெற்றோரும் பெண்ணைக் கண்டு விரும்பவேண்டு மென்னும் கவலையினால் பெண்ணின் தாய் தந்தையர்கள் பெண்ணை ஆடையாபரணங்களினால் சக்திக்கு மீறி அலங்கரிப்பதும், பலவித துணைக்கருவிகள் மூலம் சங்கீதப் பயிற்சி செய்விப்பதும், தென்னாட்டில் சர்வ சாதாரணமாகி விட்டது. அர்த்தபுஷ்டி வாய்ந்த கீதங்கள் கடவுளிடம் மனதை ஈடு படுத்துவதற்கே எழுந்தன. எனினும், காலக்கிரமத்தில் சங்கீதப் பயிற்சி பெரும்பாலும் ஒழுக்கத்தைக் கைவிட்ட ஒரு கோஷ்டியாரிடமே இடம் பெற்று நிலவுவதால் அவர்கட்குப் பொருள் நயம் புலனாவதில்லை. இசை நயமே லட்சியமாகின்றது. இத்தகைய விற்பன்னர்களிடம் சங்கீதப்பயிற்சி பெறும் கன்னிகைகளுக்கு எங்ஙனம் பொருள் தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படும்? ஏற்பட்டாலன்றோ கடவுளின் கருணையை யறிய வழியுண்டாகும்? தவிர எப்போதும் மனதை இன்புறச் செய்யும் ஒலிகளே நரம்புகளுக்குப் புதியதொரு கிளர்ச்சியை எழுப்புவதுண்மை. சங்கீதப் பயிற்சி பெறும் பெண்கள் முன்னே கூறிய காரணங்களோடு இதையும் காரணமாகப் பெறுகின்றனர். நரம்புகளைக் கிளர்ச்சியுறச் செய்யும் இனிய நாத ஒலி அகாலருதுவை அடையச் செய்வதென்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இதன் பயனாக மங்கைப் பருவம் (14 - வயது) பூர்த்தியாகு முன்னமே தாயாகி விடும் பெண்களை உன்னிக் கணக்கிட முடியுமோ? இதனைத் தடுக்கத்தக்க உபாயமாகவே சாரதா சட்டத்தினை வற்புறுத்தும் ஊக்கம் நாட்டில் எழுந்தது. ஆனால் அதனாலேயே பெண்களின் நிலை உயர்ந்து விடுமா? என்பது தான் கேள்வி.

 

16- வயதுப் பெண்ணையே ஒருவரன் மணக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். மணந்த நாள் முதல் சதா காலமும் பிரியா நிலையில் வசித்து, கருப்பிணியானாலும் மகப்பெறினும் உடனிருந்து வருவரேல் அவர்கள் உடல் நிலையம் ஒளி மழுங்கி மெலிவெய்திப் பிணிக்கூடுகளாகி விட வெகுசாள் செல்லுமோ? பட்டதாரிகளாகி உபாத்திமைத் தொழிலில் தலைமை வகிக்கும் மாதர்களில் பலருமே வருஷவாரி பிரஸவ கர்த்தாக்களாகி நைகின்றனர் என்பதை வருத்தத்தோடு நினைக்க வேண்டியிருக்கிறது. இவ்வித நிலையில் உள்ள ஸ்திரீகளுக்குச் சிசுவின் பாதுகாப்புச் சிரமம் இல்லை. அனைத்தையும் சம்பளத்திற்காக மேற்கொள்ளும் ஏவலாளர் பொறுக்கின்றனர். இரத்த பந்தத்தோடெழும் தாயன்பானது கூலி பந்தத்தினால ஈடுபடுவோர்களால் கொள்ளப்படுவதும் பெரியதோர் பரிதாபமாகும். இது கடவுள் கட்டளையை மீறிய செய்கையாகும். அன்பினை வியாபார முறைமையில் விற்பதாகவே இது காணப்படுகின்நது. இதைவிட அறியாமை பிறிதுளதோ?

 

இவ்வாறின்றிக் குடும்ப காரியங்களில் ஈடுபடும் பெண்கள் விஷயத்தில் சிசு பரிபாலனம் பிறிதொருவர் பால் தாவுவதற்கில்லை. ஆனால் நடக்கும் பருவமுடைய இரண்டு வயதுக் குழந்தையைக் கையில் பற்றிக் கொண்டு ஒரு வயதுக் குழந்தை ஒன்றை இடுப்பில் இடுக்கிக் கொண்டு வயிற்றில் 6, 7 – மாதக்கருவைத் தாங்கி நிற்கும் எத்தனை இளமங்கையரைத் தென்னிந்தியா ரயில் நிலையங்களில் காணலாம். இக் கொடுமையைக் கண்டு பரிதபிப்போர் மிகமிகச் சிலரே யாவர். சிலர் என்பது கூடப் பொருத்தமன்று. உண்மையில் ஒன்றிரண்டு பேர்கள் என்று கூறுதல் தகுதியுடையதாகும். பெரும்பாலோரும் இத்தகைய இள மங்கையரைக் கண்டு மனமகிழ்ந்து கடவுளின் வரப்பிரஸாதம் நேராக இப் பெண்களிடம் பெருகிவிட்டதாகவே நினைக்கின்றனர். தவிர இதே நிலைமை தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் வாய்க்கவில்லையே என்றும் ஏங்குகின்றனர். மகாத்மா காந்தியடிகள் இத்தகைய சிசு உற்பத்திகள் கடவுளின் கோபத்தின் அடையாளங்களாகும் என்று கூறுகிறார்.

 

உண்மையில் மதவிதிகளை வகுத்த முன்னோர்கள் முக்கிய காரணமாகக் குறிப்பிட்ட தெல்லாம் (பொதுநல ஊழியம்) பரோபகாரம் செய்யவும் எளியோர் துறந்தோர் முதியோர் முதலியவர்களை ஆதரிப்பதில் பரஸ்பரம் துணைவர்களாய் ஈடுபடவேண்டும் மென்பவுமே. வம்ச விருத்தியைக் கருதி மட்டில் இருவர்களின் சேர்க்கையும் அங்கீகரிக்கப்படுகின்றது. ஆதிக்கருத்து அதுவாயினும், சமூகத்தில் கட்டுப்பாடு அழிந்ததாலும் ஒழுக்கப் பயிற்சி ஒழிந்ததாலும், சுவையடக்கம், மனவடக்கம், புலனடக்கம் ஆகியவைகளின் அருமையையுணர்த்தும் உண்மை நூல்களின் பயிற்சி இறந்து பட்டதாலும், தற்கால தம்பதிகள் தங்கள் விவாக சம்பந்தத்தினால் தமக்கேற்பட்ட கடமை காலாகால நியதியின்றி இயற்கையிலெழும் விருப்பத்தைத் தணித்துக் கொள்வதுதானென்னும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். மகப்பேற்றைக் கூட இரண்டாவது கடமையாக மதிக்கின்றனர். தலைமகவுயிர்த்த மனைவிபால் குறைந்தது மூவாண்டிற்குள் இரண்டாவது கருவுண்டாகாதபடி கடவுளுக் கஞ்சியாவது விலகி நிற்கக் கணவன் கடமைப்பட்டிருக்கிறான். உலகநிலை அவ்வித நியதியை உணர்ந்தொழுகும் உணர்ச்சியை யிழந்து நீண்ட நாள் சென்று விட்டது. சுகபோகங்களில் அளவு கடந்த அவாவினை வளர்த்து எண்ணுவது போல் நடக்க முடியாத கோழைகளாகிவி ட்ட நமது சமூகம் பண்டைய ஒழுங்கு முறையை மேற்கொள்ள அவாவுறும் சிறந்த நிலையையே தற்போது தேசம் விழைவதாகும் - கடவுளின் இயற்கைச் சட்டங்களுக்குத் தலை வணங்காத ஒருவர் அரசாங்கத்தினரின் செயற்கைச் சட்டங்களுக்கு கீழ்ப்படிவது அவமானகரமாகும். அன்றியம் செயற்கைச் சட்டங்களால் ஒழுங்கு முறையை அநுஷ்டானத்தில் கொண்டு வர முடியாததாகும். கள்ளத்தனமான காரியங்களுக்கே (அதிகாரி நிர்ப்பந்தம்) வழி கற்பிப்பதாகும். எனவே பெண்கள் எத்தனை யாண்டுகள் கடந்து மணம் செய்து கொள்ளினும் அடிக்கடி பிரஸவ இன்னலுக்கு உட்படநேருமேல் அப்போதும் உடன் மெலிவு பிணி வளர்ச்சி முதலிய கஷ்டங்களுக்கு இரையாகாம லிருப்பதற்கில்லை. அடியிலிருந்தே ருது காலம் சீக்கிரத்தில் நேருவதற்கு சாதகமான நிலைமையில் வளர்க்கப்படுவது முற்றிலும் கைவிடப்படல் வேண்டும்.

 

விவாக விதிகளைச் சட்டங்களினால் சட்டுப்படுத்துவது நமது பலவீனத்தையே காட்டுவதாகும். கள்ள ஜாதகக் குறிப்புகளின் சிருஷ்டிக்கே அது இடமளிக்கும். சமூக சீர்திருத்தங்களில் முயலுமுன் அதன் அடிப்படையான குற்றங்களை யறிய வேண்டும். சிறுவர் சிறுமிகள் டாம்பீக வாழ்வில் சுகமோகங் கொள்ளாதபடி வளர்க்கப்படல் வேண்டும். மனக்கிளர்ச்சிக்குச் சாதகமான அப்பியாஸங்களில் பயிற்சி யளியாதிருத்தல் வேண்டும். பொய்க் கதைகளையும், கள்ளத்தினை வளர்க்கும் காட்சிகளையும் கவனியாமல் இருக்கும்படிகண்டிப்பான மேற்பார்வையும் பாதுகாப்பும் அவசியம். வருங்கால இந்தியாவின் மாண்பு இருபால் இளைஞர்களினுடைய ஒழுக்கப் பயிற்சியிலேயேஅமைந்திருக்கின்றது. ஒழுக்கப்பயிற்சி தற்காலத்திய கலாசாலைகளில் அறவேகிடையாதென்பது தேற்றம்.

 

பண்டைக்கால ஆசிரியர்கட்கும் மாணாக்கர்கட்கும் இருந்த தொடர்பு தாயன்பு மகவன்பு தற்கால மாணவர் கட்கும் ஆசிரியர்கட்கும் உள்ள தொடர்பெல்லாம் புகை வண்டி பிரயாணத்தில் ஏற்படும் நட்புக்கே உவமையாகும். கலைக்கூடங்களில் சந்திப்பதோடு தற்கால மாணவர் ஆசிரியர் தொடர்பு முடிவடைகிறது. ஆகவே இந்நிலைமாறி மேலே கூறிய ஒழுங்கு முறையும் பிரமசரிய அநுஷ்டானமும் வாலிபர் கைக்கொள்ளக் கூடிய நல்வாழ்வையே தேசம் விழைவதாகும். தெய்வத் திருவருளை எவர் அறிவார்? 

 

ஆனந்த போதினி – 1931 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment