Friday, September 4, 2020

 

நிலையாச் செல்வம்

இது நிலைத்தல் இல்லாச் செல்வம் என பொருள் படும். செல்வம், கருத்துண்டாதற் பொருட்டே இது இங்கு விவரிக்கப்படுகிறது. ஏனெனில், நிலையாதவற்றை யுணர்ந்தாலன்றி நிலையுடைய பொருளில் மனம் செல்லாது.

 

செல்வம் என்னும் சொல்லினை நன்கு ஆராய்ந்தால் செல்வோம் என்னும் பொருளில் வரக்காணலாம். ஆகலினால் செல்வத்தின் நிலையாமையை யுணர்ந்து, நாம் அதனிடத்தில் - கொண்டுள்ள அளவற்ற பற்றை ஒழித்தல் வேண்டு மென்பது நன்கு புலனாம்.

 

அறுசுவையோடு கூடிய அன்னத்தை தனது மனையாள் ஊட்ட ஒரு பிடிசாதம் உண்டு மறுபிடியை தடுத்த பெருஞ் செல்வத்தவரும், அவரது தனிக்நிலைமையினை யிழந்து தரித்திரர்களாய் வேறொரு இடத்திற்குச் சென்று கூழைப் பிச்சை எடுத்துண்பர். நம்மிடம் அச்செல்வம் கிடைத்தபோதே பல்லோருக்கு மீந்து நன்கு உண்டு இருத்தலே ஏற்புடைத்தென கூறினமைபின் செல்வம் நிலையற்றதென்பது விளங்கும். இன்னும் திருவள்ளுவரும்,


“அற்கா இயல்பிற்றுச் செல்வ மதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்"

 

என்றதனால் செல்வம் எய்திய ஞான்றே அறத்துறைகளில் அதை உபயோகித்தல் வேண்டுமென்பது புலனாகின்றது.

 

பெரிய நிலையினின்று எண்ணற்ற செல்வத்தினை அடைந்தாரும் தங்களிடம் கலி வந்தக்கால் தங்களது செல்வத்தினை இழந்து தரித்திரர்களாய் மனைவி மக்களைத் தோற்று நிலையற்று அல்லற்படுதலை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இன்னும் தமக்கு எல்லாம் வல்ல பரமன் நியமித்துள்ள வாழ் நாட்கள் தினமும் கழிந்து தேய்பிறையே போல் நாம் விரைவினில் வயோதிகத்தை அடைகிறோம். நமது இளைமையும் யாக்கையும் எவ்வாறு நிலையற்றதோ அஃதேபோல் பொருளும் நிலையற்றது என்னும் உண்மையை,



"நீரிற் குமிழி இளைமை நிறைசெல்வம்

நீரில் சுருட்டும் நெடுந் திரைகள் நீரில்

எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே!

வழுத்தாத தெம்பிரான் மன்று"


என்னும் அருமைப் பாடலால் குமரகுரு ஸ்வாமிகள் எடுத்துக்காட்டி யிருப்பதை நாம் கடைப்பிடித்தல் வேண்டும்.

 

இந்நாளில் செல்வந்தர்கள், எல்லோரையும் ஒன்றாக மதித்து ஏற்பவற்கு ஈபவர் மிகச் சிலரேயாவர். பச்சையப்ப முதலியார், கலவல கண்ணன் செட்டியார், ஜம்லெட் ஜிஜீ பாய், முதலிய நல்லறிஞர்கள் தங்கள் செல்வத்தினைத் தான தருமங்களுக்குப் பயன்படுத்தி யிருக்கின்றனர். அவர்களைப் போன்று, இக்காலத்துள்ள செல்வ சிகாமணிகளும் நடப்பார்களாயின், நமது இந்தியமாதா நன்கு மகிழ்வாள் - தமிழன்னையும் ஆனந்தக் கூத்தாடுவாள் என்பதனை அறைதலும் கூடுமோ?

 

இவ்வாறு அறநெறிகட்கு உட்படா செல்வமானது கருமுகிலுள் மின்னல் தோன்றி மறைவதே போன்று விரைவில் போன்று விரைவில் அழிந்தொழியும் என்பது திண்ணம்.

 

அளவற்ற செல்வத்தை சேர்த்துவைத்து தானும் உண்ணாது சுற்றத்தவருக்கும் இன்னலுற்ற ஞான்று அளியாது நற்காரியத்தில் உபயோகப்படுத்தாது காண்போர் இகழும் வண்ணம் வாழ்ந்திருப்பானானால் கடைசிக்காலத்தில் இவனது செல்வத்தின் பெருமை எவ்வாறாம்?


"உடா அது முண்ணாதுந் தம்முடம்பு செற்றுங்

கெடா அத நல்லறமுஞ் செய்யார் - கொடா அது

வைத்தீட்டினா ரிழப்பர் வான்றோய் மலைநாட!

உய்த் தீட்டும் தேனீக் கரி."

 

தேனீயானது எவ்வாறு தான் கஷ்டப்பட்டு உண்ணாமல் சேர்த்து வைத்ததேனை வேடுவர்கள் கண்டு அழித்து விடுகிறார்களோ அஃதேபோன்று ஈயாதார் செல்வத்தினை தீயார் கொண்டு செல்வர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்குகின்றதாகலின் நமது வாழ்நாட் குறைவினை எண்ணி நம் நல்வினைப்பயனால் அடைந்த செல்வத்தினை தூயநெறிகளில் உபயோகித்து எல்லாம் வல்ல இறைவன் திருவடியடைய நம் எல்லோருக்கும் விடாமுயற்சியைத் தந்தருள்வானாக.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment