Friday, September 4, 2020

 

“நிழலருமை வெய்யிலிலே”

(குரு.)

தென்றல் காற்று எங்கள் வீட்டு மாடியில் வீசிக் கொண்டிருந்தது. நான் மகிழ்ச்சியுடன் உள்ளங்கியையும் (பனியன்) கழற்றிவிட்டு அனுபவித்துக் கொண்டிருந்தேன். நாளெல்லாம் வெய்யிலில் சுற்றி வந்த எனக்கல்லவா அத் தென்றலின் அருமை தெரியவரும். என் நண்பன் வேங்கடசாமி அதுவரை தூங்கிவிட்டு வந்தவன் என் கோலத்தைக் கண்டு கேலி செய்தான். எனக்கு வந்த ஆத்திரத்தில் அவனை எங்கள் வீட்டின் ஓர் அறையில் விட்டு மூடி விட்டேன். “கொஞ்ச நேரம் இங்கிருந்து விட்டுப் பிறகு மேலே வா” என்று கூறிவிட்டு மாடிக்குப் போய் காற்றாட அமர்ந்து கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் கழிந்தது. கீழே இறங்கி நண்பனைக் கூப்பிட்டேன். கதவை எப்பொழுது திறப்பே னென்று எதிர் பார்த்த அவன் ஒரே ஓட்டமாக ஓடி வந்தான். உடலெல்லாம் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. "என்ன செய்தே னென்று இப்படி சுண்ணாம்புக் காளவாயில் என்னை மூடி வைத்தாய்" என்றான் கோபத்தோடு.

"பிறகு சொல்லுகிறேன். முதலில் மேலே போய்க் காற்று வாங்கலாம், வா”

மேலே வந்தவுடன் "அப்பாடா, என்ன குளிர்ச்சி! காற்று அருமையாக இருக்கின்றது.!" என்று அநுபவித்து அமர்ந்தான். ஏற்கெனவே சட்டை, பனியன் எல்லாம் கழற்றிவிட்டான்.

நான்: - 'இப்பொழுது என்னைக் கேலி செய்ய மாட்டாயல்லவா? நாளெல்லாம் வெய்யிலில் அலைந்த களைப்பு நீங்க வேண்டுமென்று பனியனைக் கழற்றிக் காற்றாட உட்கார்ந்திருந்தால், 'பனியனைக் கூடக் கழற்றி விட்டாயே' என்று கேலி பண்ணினாயே. எனக்கல்லவா தெரியும் அந்தச் சுகம் சும்மாவா சொன்னார்கள், 'நிழலருமை வெய்பிலிலே' என்று.

வேங்: - அது போகட்டும். அன்று நம் ஆசிரியர் ‘நிழலருமை வெய்யிலிலே' என்ற பாட்டைச் சொன்னாரே. உனக்கு நினைவிருக்கிறதா? அதைச் சொல்லேன்.

நான்: -

நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்; ஈசன்

கழலருமை வெவ்வினையிற் காண்மின் – பழகுதமிழ்ச்

சொல்லருமை நூலிரண்டில் சோமன் கொடையருமை

புலரிடத் தேயறிமின் போய்.

 

வேங்: - பாட்டில் தவறு இருக்கின்றது. அதை உன்னால் கண்டு பிடிக்க முடியுமா?

நான்: - பெரிய அறிவாளியல்லவா? பாட்டில் தவறு காண வந்து விட்டாயே! போ போ பயித்தியம்.

வேங்: - ஐயா, பண்டிதரே! நான் பயித்தியக்காரன் தான். தாங்கள் தான் பொருள் சொல்லுங்களேன் பார்க்கலாம்.

நான்: - என்ன பிரமாதம்! ஆசிரியர் தான் சொன்னாரே. மறந்து போய் விட்டதென்று சொல்லேன். என்னமோ என்னைச் சோதிக்கப் போவது போல் கேட்கின்றாயே.

வேங்: - சரி, அப்படித்தான் வைத்துக் கொள்ளேன். சொல்லப்பா, சொல்லு. எப்படியாவது பொருள் சொன்னால் சரிதான்.

நான்: - வெய்யிலில் செருப்பும் குடையு மில்லாமல் நிலையாக நின்று பார்த்தால் தான் நிழலினுடைய அருமை தெரியவரும். நிழலிலேயே இருப்பவனை விட வெய்யிலி லிருந்து வந்தவன் தான் நிழலை அதிகமாக அநுபவிப்பான். இதைத் தான்,

‘நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்'

என்று கூறினார்.

இப்பொழுது கூறியது நாம் அனுபவித்து அறிந்து கொள்ளக் கூடியது. அடுத்தாற் போல வருவது பெரியோர்கள் கூறுவதிலிருந்து உய்த்து உணர்ந்து
கொள்ள வேண்டியது. இங்கே இந்த உலகத்தில் நாம் அநுபவிக்கிற வினைத் துன்பங்களி லிருந்து ஆண்டவனுடைய திருவடிப் பேற்றின் பெருமையினை அறிந்து கொள்ளலாம் என்பதை,

“........................................................................ ஈசன்

கழலருமை வெவ்வினையிற் காண்மின்”


என்று கூறி யிருக்கின்றார். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளப் பெரியோர்கள் கூறி வைத்திருக்கின்ற நூல்களிடத்து நம்பிக்கை வேண்டும். அந் நூல்களை நம்பாதவர்களுக்கு இவ்வுண்மையும் விளங்காது.

 

'இனி வருவது நன்றாகத் தெரியும்:

- பழகு தமிழ்ச்

சொல்லருமை நாலிரண்டில்'

இது எளிதாகத் தெரிந்து விடும். 'நாலிரண்டு' என்று குறிப்பது நாலடியாரையும் திருக்குறளையும். தமிழ்ச் சொற்களினுடைய அருமைப்பாடு தெரிய வேண்டுமானால் நாலடியார், திருக்குறன் இரண்டையும் படிக்க வேண்டும்.

இதுவரை கூறிவந்த மூன்றையும் ஆசிரியர் பின்னால் சடைசியாகக் கூறப் போவதற்குத் துணையாகத் தான் வைத்திருக்கின்றார். தாம் கூறக் கருதிய உண்மையைக் கடைசியில் கூறுவது தான் கவிகளின் மரபு.

‘நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்; ஈசன்

கழலருமை வெவ்வினையிற் காண்மின்; - பழகு தமிழ்ச்

சொல்லருமை நாலிரண்டில்'

என்று மூன்று உண்மைகளைக் கூறிவிட்டுக் கடைசியாகச்

சோமன் கொடையருமை

புல்லரிடத் தேயறிமின் போய்'

என்று கூறுகின்றார். இந்த உண்மையைத் தான புலவர் தெரிவிக்க விரும்பினார். ஆனால் மொட்டையாகச் சொல்லாமல் உவமைகளோடு காட்டுவது தமிழ் அறிஞர்களின் வழக்க மல்லவா? அதனால் தான் மூன்று உவமைகள் சொல்லிக் கடை 'எங்கள் சோமனுடைய வள்ளன்மையின் பெருமையை அறிய வேண்டுமானால் அரபத்தனமுடைய செல்வர்களிடம் கட்டாயம் போய் இரந்து அவர்களால் ஏற்படும் துன்பங்களை அநுபவித்துப் பாருங்கள்' என்று கூறுகின்றார். பாட்டைட பாடிய புலவர் தம் அநுபவத்தை அப்படியே இந்த வெண்பாவில் மெய்ப்பாடு தோன்றக் கூறியிருக்கின்றார்.

      இவ்வளவு தானப்பா, இந்தப் பாட்டு. சொல்லு சொல்லு என்றாயே, சொல்லி விட்டேனா இல்லையா? இது பிரமாதமா என்ன?

      வேங்: - உனக்குப் பிரமாதமானது தான் ஒன்றுமே கிடையாதே. ஆசிரியர் சொன்னதை அப்படியே ஒப்பித்து விட்டாயே! சமர்த்துதான். ஆனால் இந்தப் பாட்டில் வெளிப்படையாக இருக்கும் தவறைக் கூட நீ கண்டுகொள்ள வில்லையே.

நான்: - எப்பொழுதும் இந்தத் தன்முனைப்பு உன்னை விட்டுப் போகாதோ? ஆசிரியரைவிட உனக்கு என்ன மூளை வந்து விட்டது?

வேங்: - வீண் கதை பேசுவானேன்? இந்தப் பாட்டில் தப்பு இருக்கத்தான் செய்கின்றது. தவறை எளிதில் திருத்தியும் விடலாம். திருத்தி விட்டால் பாட்டு அருமையாக இருக்கும்.

நான்: - ஐயா, புலவரேறே! கருணை கூர்ந்து இப் பாட்டினகத்தே தோன்றா நிற்கும் பிழையினை நீக்கித் திருத்தி யமைக்கத் திருவுளம் பற்றலாங் கொல்லோ?

வேங்: - நீ கேட்டாலும் கேட்காவிட்டாலும் சொல்லத்தான் போகின்றேன். பாட்டிற்கு மறுபடியும் போகலாம். பாட்டில் நான்கு கருத்துக்கள் இருக்கின்றன அல்லவா? முதலில் கூறப்படுவ தென்ன? ‘நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்' என்பது. நிழலும், வெய்யிலும் எதிரிடை யானவைகள். அப்படியே அடுத்த உவமையிலும் ஈசன் கழலும், வெவ் வினையும் எதிரிடையானவைகள். மூன்றாவது கருத்தை இப்போதைக்கு
விட்டுவிட்டு கடைசிக்குப் போவோம். 'சோமன் கொடையருமை புல்லரிடத்தே யறிமின் போய்' என்பதிலும் எதிரிடையான பொருள்களே கூறப்பட்டன. ஆனால் மூன்றாவது கூறியதில் 'பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்' என்றல்லவா இருக்கின்றது? பாட்டின் சந்தர்ப்பத்தையும், போக்கையும் வைத்துப் பார்த்தால் திருக்குறளையும் நாலடியாரையும் படித்தால் தமிழ்ச் சொற்களிடத்தே வெறுப்பு ஏற்படு மென்றல்லவா ஆகும்? அவற்றிலுள்ள சொற்கள் கடுமையானவா என்ன? திருக்குறளையும் நாலடியாரையும் படித்தால் தமிழருமை தெரியும் தான். ஆனால் இந்தப் பாட்டில் இந்தச் சந்தர்ப்பத்தில் அப்படியா புலவர் கூறுவார்? அப்படிக் கூறினால் திருக்குறள் நாலடியார் இரண்டும் வெறுக்கத் தக்கனவாக இருக்க வேண்டுமல்லவா?

நான்: - ஆமாம், நீ சொல்றுவதும் சரியாகத்தா னிருக்கிறது. ஆனால் இந்த எண்ணங்க ளெல்லாம் ஆசிரியர் சொல்லும் போது ஏன் தோன்ற வில்லை?

வேங்: - அதுதான் நாம் படிக்கும் படிப்பு. ஆசிரியர் என்ன சொன்னாலும் கேட்டு அப்படியே பிடித்துகொள்ள வேண்டியது. அதுதான் நாம் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொண்ட பாடம்

      நான்: - அது இருக்கட்டும். இதைத் திருத்தி விட்டால் நன்றாக இருக்கும் என்றாயே, எப்படித் திருத்துவது?

       வேங்: - ‘நாலிரண்டில்' என்பதை 'ஆரியத்தில்' என்று திருத்திவிடு. திருத்திவிட்டால்,

“நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்; ஈசன்

கழலருமை வெவ்வினை பிற் காண்மின், - பழகுதமிழ்ச்

சொல்லருமை ஆரியத்தில், சோமன் கொடையருமை

புல்லரிடத் தேயறியின் போய்"

 

என்று பாட்டு பொரு முரண்பாடில்லாமல் விளங்கும். இந்தப் பாட்டு இனிய ஒலி, அறுதியிட்டுச் செல்லும் செலவு, சீரிய சொற்கள் மெய்ப்பாடு யாவற்றிலும் சிறந்த ஒன்று.
இப்படிப்பட்ட பாட்டை இடைக் காலத்தில் யாரோ ஒரு பெரியவர்' 'ஆரியத்தில்' என்பதை
‘நாவிரண்டில' என்று திருத்திவிட்டார். கொஞ்சம் எண்ணிப் பார்த்து வேறு வகையாகத்
திருத்தியிருக்கக் கூடாதா? ‘ஆரியத்தைக் குறை கூறவாவது’ என்று மட்டும் எண்ணினாரே தவிர சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி திருத்த வேண்டுமே யென்று எண்ணவே இல்லை. பாவம், அவர் ஒரு வகையாக நினைக்க, இன்னொரு வகையில் அவர் எண்ணம் ஈடேறவில்லை.

      நான்: - ஆமாம், உனக்கு எங்கிருந்து இந்த மூளை வந்ததப்பா?

      வேங்: - இந்தப் பாட்டுக்கள் சம்பந்தப்பட்ட வரையில் நீயும் நானும் ஒன்று தான். தமிழில் உள்ள நல்ல பாட்டுக்களை அருமையாகத் தெரிந்து அதைவிட அருமையாக எடுத்துச் சொல்லத் தமிழ் பாட்டில் ஒரு பெரியவர் இருக்கின்றார். அவர் செய்த திருத்தம் தான் இது திரு. டி. கே. சிதம்பரநாத முதலியார் நேற்று ஓர் இடத்தில் செய்த சொற்பொழிவிலிருந்து இந்தத் திருத்தத்தைத் தெரிந்து கொண்டேன். இப்படியாக
அவர் பல நல்ல ‘திருத்தங்களை’ச் செய்திருக்கின்றாராம். அவற்றைத் திருத்தங்கள் என்று சொல்லுவதே தவறு. முதலில் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்; பிறகு யாரோ 'நல்லவர்கள்' மாற்றிவிட்டார்கள். ஆகவே தவறைத் திருத்தினால் 'திருத்தம்' என்று எப்படிக் சொல்லுவது? உண்மையான உருவத்தைக் கொடுத்தார் என்று தான் கூறவேண்டும்.
இப்படிப்பட்ட அருமையான தொண்டைச் செய்யும் பெரியவரைப் பெற்றதற்காக நாம் மகிழ வேண்டு மல்லவா?

      நான்: - அதற்கென்ன சந்தேகம்; இதுதான் சிறந்த தமிழ்த் தொண்டு அதை மற்றொரு தடவை இசையோடு பாடு. தென்றலோடு தென்மொழிப் பாட்டையும் கேட்டு மகிழலா மல்லவா?

     

 

வேங்: -

“நீழலருமை வெய்யிலிலே நீன்றறிமீன் ஈசன்

கழலருமை வெவ்வினையிற் காண்மின் – பழகுதமிழ்ச்

சொல் கருமை ஆரியத்தில் சோமன் கொடையருமை

புல்லரிடத் தேயறிமின் போய்.”

 

ஆனந்த போதினி – 1942 ௵ - ஜுலை ௴

 

No comments:

Post a Comment