Friday, September 4, 2020

 நீ ஒரு தமிழனா?

 

புனிதத்தன்மையிலும் தொன்மையிலும் பிற நன்மையிலும் ஒப்புயர்வற்று ஒளிரும் செந்தமிழ் நாட்டிலே - அன்புகனிந்து அருள் நிறைந்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அமிழ்தினு மினிய அரும்பாக்களை அகங்கசிந்துருகிப் பாடிச் சென்ற அருளனுபூதிச் செல்வர்கள் பலர் விளங்கிய பைந்தமிழ் நாட்டிலே - அன்பு வடிவினனாய ஆண்டவன் சங்கப்புலவர்கள் வாயிலாகத் தண்டமிழ் வளர்ப்பித்த நற்றமிழ் நாட்டிலே பிறக்கும் பேறு பெற்றோருள் நீ ஒருவனா? நீ ஒரு தமிழனா? உன் மூதாதைகள் வீரரிற் சிறந்த வீரராய் - அறிஞரிற் சிறந்த அறிஞராய் - கவிஞரிற் சிறந்த கவிஞராய் - கலைஞரிற் சிறந்த கலைஞராய் தமிழ் நாட்டிற்கே ஒரு தனிப்பெரும் புகழைத் தந்து வாழ்ந்து வந்தனரென்பது உண்மையே; ஆனால், அப்பழம் புகழையே பன்னிப் பன்னிப் பேசி, அன்னோர் வழித்தோன்றியவனென உன்னைப் புகழ்ந்து கொண்டிருப்பதால் மட்டும் என்ன பயன்? அவ்வளவோடு நின்று விடுவதால், பயனே துமில்லாது போய்விடுவதோடு உனது பழம் புகழ்ப்பாட்டைப் பிறர் நம்புவதற்கு மில்லாது போய்விடும். ஆகலின், உன் கடமை என்ன?

 

கேட்போர் கைகொட்டிப் புகழ்ந்து பேசுமாறு மேடைகளிலேறிச் சொற்பொழிவுகள் செய்வதேனும் - அறிஞர் வியந்து புகழுமாறு திறம்பட கட்டுரைகள் வரைவதேனும் தற்போதைய தமிழகத்திற்கு வேண்டப்படுவனவல்ல. நிகழ்காலத் தமிழ்நாட்டில், இரத்தம் சிந்தும் கொலைப்போர்க்கு ஆட்கள் வேண்டப்படுகின்றார்களில்லை; மேடைகள் தோறும் ஏறி வாசாஞானம் பேசியும் வம்பளந்தும் ஒருவரை யொருவர் பழித்துக் கொண்டும் கிளர்ச்சி பெருக்கும் ஆட்கள் வேண்டப்படுகின்றார்களில்லை. எவர் புகழ்ந்தாலும் எவர் இகழ்ந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது, எத்தகைய பிரதிபலனையும் எதிர்பாராது, தமிழன்னையின் நலன் ஒன்றையே குறிக் கொண்டு, தன்னலங்கருதாது அன்புவழி பற்றி அறநெறி நின்று சீரியதொண்டாற்றும் வீரரே, தற்காலத் தமிழ்நாட்டிற்கு வேண்டற்பாலர். அத்தகைய நிட்காமியப் பணி செய்து கிடக்க உன்னைத் தகுதியுடையவனாக ஆக்கிக்கொள். உன்னால் - நீமனம் மட்டும் கொண்டால் அஃது நிச்சயமாக முடியும். " அத்தகைய அரிய நோக்கத்தை மேற்கொள்ள நம்மால் முடியுமோ " என்று ஐயுற்றுப் பின்னிடாதே. அஃது கோழைமை; அவ்வாறு பின்னடைவதால் நீ பிறந்த தமிழ்நாட்டின் தொல்பெரும் புகழையே - நீ போற்றும் உனது மூதாதைகளின் நற்பெயரையே சற்றுக் கறைப்படுத்துவோன் ஆவாய்! ஆதலின், ஏ! தமிழனே! எழுந்திரு! விழித்திடு! உன்னைச் சுற்றிலும் உற்றுநோக்கு! உனது அயலார் எத்துணை விரைவில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைக் கவனி! உன்னால் செய்யக்கூடியது எத்துணைச் சிறிய பணியாயினும், அஞ்சா நெஞ்சொடும் ஆண்டகைமையொடும் அப்பணியை மேற்கொள்ளச் சற்றும் தயங்காதே! நீ ஒரு தமிழன் என்பதை உனது உள்ளத்தில் நன்கு பதிய வைத்துக்கொள்! அவ்வகையில் நீ கர்வத்தோடு நிமிர்ந்து நில்!



"நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டமர்க் குடைந்தனனாயி னுண்டவென்
முலையறுத்திடுவன் யானெனச் சினை இக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களந் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றிலும் பெரிதுவந்தனளே''

 

- எனக் காக்கைபாடினியார் கூறியவாறு, தன்மகன் அமர்க்களத்தில் புறமுதுகிட்டோடியதாக பலர் நவிலக் கேட்ட நரைமயிர்த் தலைக் கிழவியொருத்தி, அஃது உண்மையாயின் அவனுக்குப் பாலூட்டிய தனங்களை அறுத் தெறிவேன்'' -என்று சூளுரைகூறி வாளொடு போர்க்களம் போந்து தேடியவிடத்து, எதிரிகளது அம்புக்கு இலக்காகி இறந்து கிடந்த தன் மகனைக் கண்டு, அவனைப் பெற்ற நாளினும் பெருமகிழ்ச்சி உற்றாளாம். ஒரு கிழவியின் உள்ளம் அத்துணை வீரம் பொருந்தி விளங்குமாயின், கட்டிளமை வாய்ந்த காளைகட்கு எத்தகைய வீரஉணர்ச்சி இருத்தல் வேண்டும்! "நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்'' - என்று நாவரசர் வீரமுழக்கம் செய்த நாடு உனது நாடு." அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்சவருவது மில்லை " என்று தமிழ்ப் பெருந்தகை வீறுகூறிய நாடு உனது நாடு.'' உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமாபுகழ் பாடியாடியென் - முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன்யான் - உன்னைச் சிந்தையினா லிகழ்ந்த இரணியனகல் மார்வங் கீண்ட என் -முன்னைக் கோளரியே! முடியாத தென்னெனக்கே?" - என்று நாவீறுடையபிரானாம் சடகோபர் ஞானகர்வத்தொடு வீறு கூறிய நாடு உனது நாடு. " அஞ்சாமை யல்லாற் றுணை வேண்டா - எஞ்சாமை - எண்ணியிடத்தாற் செயின் "என்பது பொய்யிற்புலவர் பொன்மொழி. இறைவனது குழந்தை என்ற முறையில் - உனக்கு ஆன்மசக்தியில் உறுதியான பற்றும், ஆண்டவனது திருவருளில் குன்றாத நம்பிக்கையும் இருக்கும் வரை - நீ ஏன் பிறருக்கு அஞ்சுதல் வேண்டும்? சுவாமி விவேகானந்தர், அயோத்தியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு குரங்குக் கூட்டம் அவரைத் துரத்தத் தொடங்கியதாம். அதுகண்டு பயந்து ஓட ஆரம்பிக்கவே, அவை வேகமாகச் சுவாமிகளைத்துரத்தினவாம். திடீரென சுவாமிகள் நின்று, அவற்றை எதிர்க்கச் சித்தமாக இருந்தமைகண்டு, அவை திரும்பியோடி விட்டனவாம். அச்சமுள்ளவரை துன்பங்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்! அஃது ஒழிந்தாலோ, அத்துன்பங்கள் நம்மை ஏதொன்றும் செய்யா.

 

எனது தமிழ்ச் சகோதர! நான் பார்ப்பனன். அவன் பார்ப்பனனல்லாதான், நான் குடியானவன், அவன் தீண்டாதவன் என்று வகுப்புப்பூசல் விளைத்துக் கொண்டிராதே. "நால்வருண மாசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே" - என்று சாதிப்பிளவுகளை எள்ளி நகையாடுகிறார் திருவருட்பிரகாச வள்ளலார். பார்ப்பனன் என்பதற்காகவாவது ஏனையோருள் உயர்ந்தவன் என்பதற்காகவாவது பெருமை பாராட்டிக் கொள்ளாதே.'சாதி' எனும் சொல்லே தமிழ்ச் சொல்லன்று; ஆதலின் தமிழனாகிய உனக்குச் சாதிவாதப்போர் சற்றும் தகாது. நீ எவ்வருணத்தைச் சேர்ந்தவனாயினும், உனது சாதி' இந்தியசாதி'யாகக் கொள். நீ எக்குலத்தவனாயினும் 'நான் தமிழன்' என்று பெருமையோடு கூறிக்கொள். பின்வரும் விவேகானந்த சுவாமிகளது பொன்மொழிகளைக் கவனி: - " தாழ்ந்தவகுப்பினர், அறிவீனர்கள், எளியவர்கள், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், சக்கிலியன், தோட்டி இவர்கள் உனது சதையும் இரத்தமுமே என்பதை -உனது சகோதரர்களே என்பதை மறந்து விடாதே. ஏ! தீரா! தைரியமாயிரு! துணிந்துகொள்! நீ ஒரு இந்தியனாயிருப்பது பற்றி கர்வமடை; - " நான் ஒரு இந்தியன்; ஒவ்வொரு இந்தியனும் என்னுடைய சகோதரன்'' – என்று கர்வத்துடனே பறையறை. " அறிவீனனாய இந்தியன், உதவியற்ற இந்தியன், பிராஹ்மண இந்தியன், பறைய இந்தியன் எனது சகோதரனே -'' என்று சொல்.

 

ஏ! தமிழனே! 'சீர்திருத்தம்'' சீர்திருத்தம்'- என்று பறை சாற்றிக்கொண்டு,'பழமையனைத்தும் பயனற்றவையே யாதலின், அவை முற்றும் அழிக்கப்பட வேண்டும் 'என்று, ஆக்கமுறை விடுத்து அழிவுமுறை பற்றி பிரசாரம் செய்வது பெரும் பேதைமையே. 'தொன்மையவா மெனு மெவையும் நன்றாகா; இன்று - தோன்றியவா மெனுமெவையுந் தீதாகா'' என்று தமிழ்ப் பெரியோர் அறிவுறுத்திப் போந்தனர். ஒப்புயர்வற்ற ஆன்மஞானம் படைத்த ஆன்றோரால் அக்காலநிலைக் கேற்ப வகுக்கப்பட்ட அறநெறிகளின் மீது, காலசக்கரத்தின் கொடுமையால் பல மாசுகள் படித்திருக்கலாம்; அவ்வாறு படிதல் இயல்பே; அத் தூசுகளைத் துடைத்து, அவற்றை காலநிலைக் கேற்றவாறு சீர்திருத்தி மேற்கொள்வது அறிஞர்க்கு அழகேயன்றி, உமியோடு அரிசியையும் போக்க முனைந்து நிற்பது அழகன்று; அஃது பைத்தியக்காரத்தனமேயாம். "முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே! – பின்னைப்பு துமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே!" - என்று மணிவாசகப் பெருந்தகையார் இறைவனை இறைஞ்சுகின்றார். தற்போது எழுப்பப்படும் தேசீய இல்லம், பழைமையாகிய அடிப்படையின் மேலேயே - சநாதன தர்மத்தின் மீதே எழுப்பப்பட்டாலன்றி, நிலைத்து நிற்பது அரிது. ஆகவே, நீ செய்யும் தொண்டின் பயனானது பழமையும் புதுமையும் கலந்து மிளிர்ந்திடுவதாக.

 

தமிழ்ச் சகோதரனே! பிறரைச் சீர்திருத்த முன்வருதன் முன்னம், உன்னை நீ நன்கு திருத்திக்கொள். அவ்வாறின்றி, 'சொல்வதொன்றும் செய்வதொன்று' மாகக்கொண்டு, உன்னிடம் குற்றங்கள் பலவற்றை வைத்துக் கொண்டு, பிறரைக் குறைகூறவோ சீர்திருத்தவோ முன்வருவாயாயின், நீ அறிஞரால் நகையாடப்படுவாய். " ஏதிலார் குற்றம் போல் தங்குற்றம் காண்கிற்பின் - தீதுண்டோ மன்னுமுயிர்க்கு'' - என்னும் செந்நாப்போதார் செம்மொழியைச் சிந்தையிலிருத்தி, நாட்டைச் சீர்திருத்த விரும்பும் நீ முதலில் உன்னைச் சீர்த்திக்கொள்வது பெரிதும் நலந்தருவதாகும். உனக்குள்ளேயே ஒளிந்து கிடக்கும் குற்றங்களை - உனக்குள்ளேயே இருந்து, உனது அறிவைக் குறைத்து அன்பை மறைத்து பல்லாற்றானும் உன்னை அல்லற்படுத்தும் அழுக்காறு, அவா, சீற்றம் முதலிய உட்பகைகளை - ஒடுக்கி நீ வெற்றி கொள்ளாதவரை, உன்னை நீ வீரன்' என அழைத்துக் கொள்ள எங்ஙனம் உரிமையுடையவனாவாய்? " உட்பகையஞ்சித் தற்காக்க; உலைவிடத்து – மட்பகையின் மாணத் தெறும் " - என்ற நாயனார் நன்மொழியை நன்குணர்ந்து முதலில் உனது உட்பகைகளோடு பொருது வெற்றிகொள்; அதன்பின்னர், நீ வெளிப்பகைவர்களை வெல்ல முயலலாம்.

 

மற்றும், ஒருவரையொருவர் குறைகூறிக் கொண்டும் பழித்துக் கொண்டு மிருப்பதால் வீண்கலகமும் அழுக்காறும் வளர்ந்து பெருகுமேயன்றி, குறைகூறுவோராதல் குறைகூறப்படுவோராதல் திருந்துதற்கு இடமில்லை. வன்சொற்களும் வசைமொழிகளும் துவேஷத்தை வளர்ப்பனவேயன்றி, எதிர்பார்க்கப்படும் பயனை ஈயவல்லனவாகா. அன்பினாலும் இன்சொற்களாலுமே இருசாராரும் திருந்துவர். இதுபற்றியே, " இனிய உளவாக இன்னாத கூறல் -கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' - 'உள்ளியவெல்லாம் உடனெய்தும், உள்ளத்தால் - உள்ளான் வெகுளியெனின் " - என வரூஉம் செம்மொழிகள் எழுந்தன.

 

தமிழ்த்தாயின் முன்னேற்றத்தின் பொருட்டு நீ மேற்கொள்ளும் பணிக்கு பலதிறப்பட்ட இடையூறுகள் நேரக்கூடும். பெரும்பாலும், நற்செயல்களனைத்தும் தடைகள் பலவற்றைக் கடந்த பின்னரே நிறைவேறுகின்றன. உன் முன் எதிர்ப்படும் தடையைக் கண்டு அஞ்சி, நீ சற்றேனும் தளர்வடைதல் கூடாது.'முயலுக மேன்மேல்.'" கலங்காது கண்ட வினைக்கட்டுளங்காது -தூக்கங் கடிந்து செய " லே கர்மவீரர்கள் இயல்பு. " இன்னல் வந்துற்றிடும் போததற் கஞ்சோம் - ஏழையராகியினி மண்ணிற்றுஞ்சோம் - தன்னலம் பேணி இழிதொழில் புரியோம் - தாய்த் திருநாடெனில் இனிக் கையை விரியோம்'- என்று வீரமுழக்கம் செய்து போக்கார் நமது தமிழ்நாட்டு இரவீந்திரராய கவீந்திரர். அத்தகைய அஞ்சா உறுதி - வீர உணர்ச்சி ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டாகுமாறு அன்னை பராசக்தி அருள்பொழிவாளாக. தமிழனே! நீ தன்னம்பிக்கை உடையவனாயிருத்தல் அவசியம். அன்பாலும் இன்சொற்களாலுமே பிறரைத் திருத்த முயல். எப்பயனையும் எதிர்பாராது, - எதிர்ப்படும் இடையூறுகளைப் பொருட்படுத்தாது - தமிழ்த்தாயின் முன்னேற்றத்திற்கான 'பணிசெய்து கிடக்க காப்புக் கட்டிக்கொள். " ஜயமுண்டு பயமில்லை மனமே!'' என்று அஞ்சாது அறைகூவு.

 

ஆன்மஞானப் பயிற்சிக்கும் இயற்கையின்ப நுகர்ச்சிக்கும் மிகப் பெரிதும் துணை செய்யும் ஞான நூல்களும் காவியங்களும் தமிழ்த்தாய் பற்பல பெற்றிருக்கின்றாள். ஆனால்,'' புத்தம் புதிய கலைகள் – பஞ்ச பூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும் - மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழ் மொழிக்கில்லை'' - என்று இக்கால அறிஞர் குறை கூறுகின்றனர். ஆங்கிலத்திலும், தமிழிலும் போதிய மொழியறிவுடையோர், அக்குறைபாட்டைக்களைய முன்வந்து, பழமையும், புதுமையுங் கலந்த சீரிய அணிகளை செந்தமிழன்னைக்கு அளித்தல் வேண்டும். பகைவரிடத்தும் சினம் கொள்ளாது, அனைவரிடத்தும் அன்பே கொண்டு, இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் பொருட்படுத்தாது, பயன் கருதாது பணி செய்து கிடக்கும் வீரத்தமிழர்களாக தமிழகத்தினர் விளங்குதல் வேண்டும். தமிழ்நாட்டின் எல்லைக் குட்பட்ட இடத்தில் வாழும் ஒவ்வொருவரும், எவ்வகைய. சாதிப்பிணக்குங் கொள்ளாது, 'தமிழர்' என்ற ஒரே நோக்கங் கொண்டு சேர்ந்து உழைத்தல் வேண்டும். தமிழ் இளைஞர்காள் ! நும் உழைப்பால் பண்டைய வீரத் தமிழ்நாடு புத்துயிர்பெற்றெழுவதாக. வந்தே மாதரம்!

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜனவரி ௴

 

 

No comments:

Post a Comment