Friday, September 4, 2020

 

பண்டைத் தமிழ்ப்பாவலரும் பாவையர் வருணனையும்

(K. V. சிவசுப்பிரமணியன், B. A.)

குறிப்பிட்ட மக்கட்டொகுதியினர் உலகில் சீர்பெற்றிலங்க வேண்டுமாயின் அதற்குப் பெண்டிரே முதற்றுணைவராய் இருக்கின்றனர். ஒரு நாட்டிலுள்ள பெண்மக்களே தாம் பெற்றெடுக்கும் ஆடவர்களை நன்னெறியிலுய்த்து வீரர்களாக்கும் அரும்பெறல் ஆற்றல் வாய்ந்தவர், ஆகையால் ஒரு நாட்ட ஜனசமூகம் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அங்கே மாதர் சமூகம் சிறப்புற்று உன்னத நிலையிலிருப்பது அவசியம். ஆகையால் யாதனு மொரு கவிஞர் எடுத்துக்கொண்ட நாட்டின் வருணனையில் அந்நாட்டு மகளிரின் மேம்பாட்டைக் கூறாமலிரார். எனவே அங்ஙனம் சிறந்து விளங்கும் பெண்டிர் பெற்றெடுத்த ஆடவர்கள் பல்வேறு துறைகளிலும் பாங்குபெற விளங்குபவர் என்பது கூறாமலே அமைந்த தொன்றாம். பற்றியே தமிழ் நூல் எல்லாவற்றுள்ளும் பெண்டிர் பெருமை பெருகியும் ஆடவர் பெருமை அருகியும் காணப்படுகிறது. இனி, பாவலர் பலரின் பலதிறப்பட்ட வருணனைப்பாக்கள் சிலவற்றைக் கவனிப்போம்.

காதல் வயத்தனாகி மாறுபட்ட சிந்தையுடைய நளன் பூம்பொழிலில் உலாப்போந்தஞான்று காணுவனவெல்லாம் காதற்காட்சியாகவே திகழ்ந்தன என்பதை அதி வீரராம பாண்டியன்,

''குளிர்நறுஞ் சாந்தநாறுங் கூவிளங்கனி முள்ளேறுண்டு

ஒளிர்வ கணகைமாதர் வரிமுலைக் குவமைசான்ற

தலையவிழ் பாடலத்தின் கவரிணர் சம்பராரி

யுளவா றொருவர் மேலும் உட ற்றினப் பகழிபோன்ற.''

என்ற பாடலால் விளக்குகிறார். முள்ளினாலே கிழிக்கப்பட்டு விளங்குகின்ற குளிர்ச்சி பொருந்திய நல்ல சந்தனம் போல மணக்கின்ற வில்வப்பழங்களானவை, பரத்தையருடைய நகக்குறிகளையுடைய முலைகளோ டொத்தன. பாதிரி மரத்தின் பூங்கொத்துக்கள் மன்மதனானவன் வருந்தும்படி நாயக நாயகியர் மேல் ஏவதற்கு வைத்திருக்கும் அம்புறாத்தூணி போன்றது என்பதாம். இனி, தூது சென்ற அன்னம் தமயந்தியின் வனப்பை நளனுக்கு ஒவ்வொரு அவயவமாக எடுத்துக் கூறுவனவாக அமைந்திருக்கும் செய்யுள்கள் பதினைந்தாகும். அவற்றுள் சாமுத்திரிகா லக்ஷண நூலுள் கூறப்படும் இலக்கணங்கள் யாவும் கூறப்படுகின்றன.

இனி இறைவன் அறுபத்து மூன்று திருவிளையாடல்ளைச் செய்தருளிய இடமாகிய பாண்டி நாட்டைப் புனைந் துரைக்கப் புகுந்த பரஞ்சோதியார்.

“பழிபடு நறவந்தன்னைக் கடைசியர் பருகிச் செவ்வாய்

மொழிதடுமாற வேர்வை முகத்தெழ முறுவல் தோன்ற

விழிசிவந் துழலக்கூந்தல் மென்துகில் சோரவுள்ளக்

கழிபெருங் களிப்பு நல்கிக் கலந்தவ ரொத்த தன்றே.”

என்று கடைசியர் செய்கையைக் கவினுறக் கூறினார். இதில் கள்ளுண்போர் ஐம்புலனின் ஆட்சியை இழப்பர் என்பது விளக்கப்பட்டது. கள் மிகக்கொடியது என்பதை ''பழிபடு நறவு'' என்றார். அத்தகைய கள்ளைப் பள்ளர் குலப்பெண்டிர் குடித்து வாயினின்றும் மாறுபட்ட சொற்க ளெழும்படியும், முகத்தில் வேர்வை வெள்ளமோட புன்சிரிப்பு கொண்டு கண்கள் சிவந்து மருண்ட காட்சியை யளிக்க, கூந்தலும், இடையிலுள்ள ஆடையும் நழுவி அவிழ்ந்து வீழ்தலையும் உணராது மனதிலே அளப்பரும் ஆனந்தங்கொண்டு காமவின்பம் பெற்றவர் போல் பெரிதும் மகிழ்ந்து பாடுவர் என்றார். இத்தகைய காட்சியை இன்றுங்கூட நாம் சாலைகளில் காண்கிறோம். கள்ளுண்டோன் அச்சம், நாணம், வலிமை, தன்னை ஆட்சி புரியும் சக்தி முதலியவற்றை இழப்பான் என வள்ளுவர் கூறியதை, பரஞ்சோதியார் உதாரணங்காண்டு விளக்கி யிருக்கிறார். மற்றும் மதுரையம்பதியில் வேளாளர் வீதி,
அந்தணர் வீதி, பரத்தையர் வீதி முதலியவற்றைப் பாங்கு பெறப் துரைத்தார். அது நம் மனக்கண் முன் பற்பல காட்சிகளை அளிக்கின்றன.

இனிக் கம்பர் பெருமான் கற்பனை கணக்கி லடங்காதது. நாட்டுப்படலத்தில் கடைசியரது காருண்யத்தை ''கண்ணெனக் குவளையைக் கட்ட லோம்பினார்” என்றார். அந்நாட்டுக் கழனிகளில் வேலைசெய்யும் கடைசியரது கண்களைப்போலவே செங்கழுநீர் மலர்கள் நீலநிறம் பொருந்தி யிருக்கும் காரணத்தால் அவர்கள் இரக்கமுற்றுப் பிடுங்காது விடுத்தனர் எனக் கூறிய அடியால் அந்நாட்டின் இயற்கைவனப்பும் மகளிரது கருணையும் உணர்த்தப்பட்டது.

காலஞ்சென்ற கவி சுப்ரமணிய பாரதியாரும் அரிவையாது இலக்கணத்தைக் கற்பனை மூலம் மக்களுக்குணர்த்துவதில் ஏனைய கவிஞர்களுக்கு ஒரு சிறிதும் தாழ்ந்தவரல்லர்.

“சுட்டும் விழிச்சுடர் தான்- கண்ணம்மா

சூரிய சந்திரரோ!

வட்டக் கரியவிழி- கண்ணம்மா

வானக்கருமை கொல்லோ!

சோலை மலரொளியோ—உனது

சுந்தரப் புன்னகைதான்

நீலக்கட லலையோ – உனது

நெஞ்சிலலைகளடி
கோலக் குயிலோசை – உனது

             குரலி னினிமையடி!

வாலைக் குமரியடி – உன்னை

மருவக்காதல் கொண்டேன்!

ஆத்திரங் கொண்டவர்க்கே- கண்ணம்மா

சாத்திர முண்டோடீ!

மூத்தவர் சம்மதியில் – வதுவை

முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப் பேனோடீ - இது பார்

கன்னத்து முத்தமொன்று.'

என்பது போன்ற பாடல்களில் ஒத்த அன்பினராய தலைவனும் தலைவியும் தானே எதிர்ப்பட்டு காதல் கொண்டு களவொழுக்கம் நிகழ்ந்தபின்னர், கந் பொழுக்கம் நிகழ்தலாகிய பண்டைக்காலத் தமிழர் மணமுறைப்பாங்கினை விளக்கியுள்ளார் பாரதியார்.

இங்ஙனமாக பற்பலக் கவிஞரின் சொற்பெருக்கினைக் கற்குந்தொறும் கருத்தில் கவின் பெறு காட்சி யளிக்கின்றது. தற்கால நாகரீகத்தில் ஆங்கிலக்கல்வியின் பயனாய் தாய்மொழிப்பற்றற்ற ஒரு தமிழன் இப் புலவர்களின் இயற்கை வருணனைகளையும், கற்பனை நலத்தினையும் சோம்பலின்றிக் கற்பானாபின் அம் மொழிக்கண்ணே அவன் கொண்டுள்ள வெறுப்பு எரிமுன்னர் வைத்தூறுபோற் கெடுமென்பது திண்ணம்.

ஆனந்த போதினி – 1937 ௵ - ஜனவரி ௴

 


 

 

No comments:

Post a Comment