Tuesday, September 1, 2020

 சைவப் பகுதி

1. சிவம்.

 

அன்பர்களே! சிவம் என்ற சொல், என்றும் உள்ளது; ஒளிமயமானது. ஆணவவலியைக் கெடுத்து அறிவைவளர்ப்பது; ஆன்மாக்களுக்கெல்லாம் உறைவிடமானது; அனைத்தையும் ஆள்வது; அருள் நிறைந்தது; ஆனந்தமுள்ளது; வாக்காலும் மனத்தாலும் அளவிட்டறியப் பெறாதது, (சொல்லிறந்து மனமிறந்து அருளால் அறியத்தக்கது) என்னும் பொருள்களை உணர்த்தி இத்தகைய இலக்கணங்களோடு கூடிய ஒரு ஒப்பற்ற பொருளைக்குறிக்கின்றது.


2. சிவனடியார்.

 

சிவனடியாராவார், முற்கூறிய இலக்கணங்களையுடைய சிவத்தை, அதன் அனந்த கல்யாண குணங்களில் அநுக்கிரகத்தின் பொருட்டுச் சில முக்கியமான குணங்களாலமைந்த கரசரணாதி அவயவங்களை யுடையதாய்த் தியானித்து அதன் அருளாகிய திருவடியை விரும்பி அதன் அருளாலே வணங்கி வழிபட்டு வருவோர்.

 

3. சிவத்தை அடையும் வழி.


அங்ஙனம் வழிபடுவோரால் சிவத்தையடைவதற்குரிய வழிகள் படிமுறையாக நான்கு. அவை சரியை கிரியை யோகம் ஞானம் என்பன. அவற்றுள் சரியையாவது சிவபெருமானைப் புறத்தே வழிபடுவது; கிரியையாவது அகத்தும் புறத்துமாக வழிபடுவது; யோகமாவது அகத்தே வழிபடுவது; ஞான மாவது அதன்வழி அடங்கிநிற்பது.


4. தருமம்.

 

மேற்கூறிய வழிகளை யடைதற்பொருட்டு ஆன்மாக்களாற் செய்யப்படும் நல்வினைகள் தருமம் எனப்பெறும். அது பசு தருமம் சிவதருமம் என இரு திறப்படும். பசு தருமமானது ஆன்மாக்களைக் குறித்துச் செய்யப்படும் ஆதுலர்க்கன்னம், ஓதுவார்க்குணவு முதலிய முப்பத்திரண்டு தருமங்களாம்.


5. சிவ தருமம்.

 

சிவதருமமாவது: சிவத்தைக்குறித்துச் செய்யப்படும் தருமங்களாம். சிவதருமம் பொதுச் சிவதருமம், சிறப்புச் சிவதருமம் என இருதிறப்படும். பொதுச் சிவதருமமாவது சிவதீக்கையின்றிச் சிவபெருமானைக் குறித்துச் செய்யப்பெறும் சரியை கிரியா யோக ஞானங்கள். சிறப்புச் சிவதருமமாவது சிவதீக்கை யுடையோராற் செய்யப்பெறும் சரியை கிரியா யோக ஞானங்கள். இவைகள் அசுத்தாவத்தையிற் செய்யப்பெறும் சிவபுண்ணியங்க ளாகும். இவைகளுக்கு வேறாய் சுத்தாவத்தையிற் செய்யப் பெறும் சீவபுண்ணியங்க ளுண்டு. அவை பத்தாகும். அவையாவன: தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பனவாம்.


6. சைவ சமயத்தின் சிறப்பு.


ஆன்மாக்கள் எண்ணில்லாதவைகள் அனாதியே உண்டு. அவைகளுக்கு இயல்பாகவே இச்சாஞானக் கிரியா வல்லமைகளுண்டு. ஆனால் அவைகள் அநாதியே ஆணவத்தால் தடைபெற்றிருக்கின்றன. ஆதலால் ஆன்மாக்கள் செயலற்று மூடமாய்க் கிடந்தன. ஆன்மாக்களைப் போல் அநாதியாயுள்ளவரும், யாதொன்றாலும் தடைப்படாத இச்சாஞானக் கிரியாசத்திகளை யுடைய வருமாகிய சிவபெருமான் தமது பேரருளால் அவ்வான்மாக்களுடைய தடையை நீக்கி அவர்களுக்குத் தமது பேரானந்தத்தைக் கொடுக்கத் திருவுளங் கொண்டு அநாதியாயுள்ள மாயையிலிருந்து தமது சத்திகளால் அந்த ஆன்மாக்களுக்குத் தநுகரணபுவன போகங்களைக் கொடுத்தார். அவைகளைப் பெற்ற ஆன்மாக்கள் அவைகளின் உதவியால் தமதறிவிச்சை செயல்கள் முறை முறையாக விளங்கப்பெற்று, சிவத்தை யடையுங்காறும் உறுகின்ற சமயங்கள் பலவுள். அவர்கள் அவற்றைப் புறப்புறம், புறம், அகப்புறம், அகமென நான்காய்த் தொகுத்து, உலோகாயதம் முதல் சிவாத்துவித வாதசைவமீறாக இருபத்து நான்காய் வகுத்தார்கள். இங்ஙனம் வகுக்கப்பெற்ற இருபத்து நான்கு சமயங்களும் இவற்றினின்றும் விரிந்த சமயங்களும் கொண்ட கொள்கைக ளெல்லாம் சைவசமயத்தி லடங்கியவை. சைவசமயம் கடவுள், ஆன்மா, மலம், மாயை, கன்மம் என்னும் பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் எடுத்து விளக்கும். ஆதலால் சைவசமயம் சிறப்புடையது.

 

7. சைவக் கிரியைகளின் நோக்கம்.

 

சைவக்கிரியையென்பது ஆன்மா சிவமாந்தன்மையை அடைவிக்கும் செயலாகும். அது சந்தியாவந்தனம், சிவபூஜை, ஆலயசேவை யென முத்திறப்படும்.


7.1. சந்தியாவந்தனம்.

     

சந்தியாவந்தனம் என்பது சம் = செவ்வே, த்யா = தியானித்து, வந்த னம் = வழிபடுதல் எனப் பொருள் பெறுவதால், ஆன்மா சிவத்தைச் செவ்வையாய்த் தியானித்து வணங்கி மகிழச்செய்து அதனருளால் சிவமாந்தன்மையை யடைவதாகும். அதற்குச் செய்யப்படும் கிரியைகள் ஜலசுத்தி, விபூதிசுத்தி, தேகசுத்தி, ஆன்மசுத்தி, தியானம், தருப்பணம், செபம், தோத்திரம் என்பனவாம்.

 

ஜலசுத்தியாவது: நிரீக்ஷணாதி எண்வகைச் சுத்திகளால், மாயாகாரிய தோற்றமாகிய நீரில் உள்ள அசுத்தங்களை மந்திரபூர்வமாக நீக்கி அதில் வியாபித்திருக்கின்ற சிவத்தைப் பிரகாசிக்கச் செய்து ஞானாமிர்தத்தைப் பொழிந்து சிவமயமாக்குதல்.

 

விபூதி சுத்தியாவது: உத்தம பசுவின் கோமயத்தாலமைந்த விபூதியில் நிரீக்ஷணாதி நான்கு சுத்திகளைச் செய்து மலத்தன்மையை நீக்கி மந்திர சக்தியால் சிவமாந்தன்மையை அதற்கு உண்டாக்குவது. இதைத் தேகத்தில் விதிப்படித் தரிப்பதால் தேகத்திற் பாசசம்பந்தம் நீங்கும். பசு = ஆன்மா, மலம் = ஆணவமலம், பெளதிகாக்கினியாற் றகிப்பது = ஞானாக்கினியாற் றகிப்பது. எனவே பசுமலத்தைத் தகித்து நீறாக்கித் தரிப்பதானது ஆணவ மலத்தை ஞானாக்கினியாற் றகித்து நீறாக்கித் தரிப்பதற்கறிகுறியாகும்.

 

தேகசுத்தியாவது: விபூதி சுத்தியாற் புனிதமான தேகத்தைக் கரநியாச அங்கநியாஸங்கள் மூலமாகச் சிவாகாரமாக்குவது.

 

ஆன்மசுத்தியாவது: உண்மைப் பிராணாயாம மூலமாகக் கன்மசோதனை செய்து மலநாசம் பண்ணி ஆன்மாவைச் சுத்தி செய்வது.

 

தியானமாவது: முற்கூறிய முறையிற் புனிதமடைந்த ஆன்மா குரு உப தேசித்த நெறியிற் சிவத்தைத் தியானித்துச் சிவமாந்தன்மை யடைதல்.

 

தருப்பணமாவது: சுத்தி செய்யப்பட்ட நீராற் சிவபிரானையும், அவர் பரிவாரங்களையும், குருவையும், அவர் பரம்பரையையும், பிதுரர்களையும் மந்திரபூர் வமாக மகிழச்செய்தல்.

 

செபமாவது: விதிப்படி அமைக்கப்பட்ட செபமாலை கொண்டு பக்குவத்துக் கேற்ப குரு உபதேசித்த மந்திரத்தை உபதேச முறைப்படி எண்ணிக் கணித்தல். இதனால் முன் செய்த தியானம் சித்தியுறுவதுடன் வாசனாமலமும் பலஹீனமடையும்.

 

தோத்திரமாவது: இதுகாறும் தனக்கு உண்ணின்றும் முன்னின்றும் அநுக்கிரகித்து வருகின்ற கடவுளையும், அவர் அநுக்கிரக வடிவங்களையும், அவரதிகாரம் பெற்ற சிரேஷ்டர்களையும், அவரநுக்கிரகம் பெற்ற பெரியோர்களையும் வாழ்த்தி வணங்குவதாம்.


7.2. சிவபூசை.

 

சிவபூசையாவது: சிவபெருமானைச் சிவலிங்க வடிவமாகக் கொண்டு, சிவாகம நெறியில் திரவியசுத்தி முதலிய ஐவகைச் சுத்தி செய்து, சத்தியாதி சாத்தி பரியந்தம் அமைந்த ஆசனம், மூர்த்தி மூலங்களாற் சௌராதி சண்டாந்தம் பூசித்து வழிபடுவதாகும். இதை விரிக்கிற் பெருகும்.

 

 

 

7.3. ஆலய சேவை.

 

ஆலய சேவையாவது: சிவாகமவிதி பிறழாது அமைக்கப் பெற்றுச் சிவாகம விதிப்படி முட்டின்றிப் பூசை நிகழும் சிவாலயத்திற் சென்று வணங்கி வழிபடு வதாம். சிவாகம நெறியிற் செய்யப்படும் பூசையே சிறப்புடைத்து; வேறு நெறியிற் செய்யப்படுவன ஆன்மா சிவமாந்தன்மையை அடைவியா. ஏனெனில்? சைவக்கிரியைகளில் மண்டபம், குண்டம், வேதிகை முதலியன வகுத்துச் சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம் என்னும் சுத்தமாயா தத்துவங்கள் ஐந்தையும் ஐந்து ஆவரணங்களாகப் பாவித்து, சுத்தவித்தியா தத்துவமாகிய ஐந்தாம் ஆவரண மண்டபத்திலே இந்திரன் முதலிய திக்குப் பாலகர்களையும், அவர்களது வச்சிர முதலிய ஆயுதங்களையும் பாவித்து, சதா சிவதத்துவத்திலேயுள்ள வேதிகையில் சதாசிவ மூர்த்தியும், மனோன்மணியும் வீற்றிருப்பதாகவும், ஈசுவர தத்துவத்திலே அனந்தாதி அஷ்டவித்தியேசுரரும் வாமாதி அஷ்டசத்திகளும், சதாசிவமூர்த்தியைச் சூழ்ந்திருப்பதாகவும், கும்ப மிசைப்பாவித்து, சத்திதத்துவமாய் நிவிர்த்தியாதி பஞ்சகலமயமாயுள்ள குண்டமத்தியில் சிவதத்துவமிசை விளங்கும் நிஷ்கள சிவத்தைச் சிவாக்கினியின் இருதயத்திலே பூசித்து அச்சிவம் எழுந்து சதாசிவ மூர்த்தியினும் கும்பமூர்த்தியினும் தங்கி அதிட்டித்து அங்கிருந்து ஆன்மாக்களுக்கு மலநீக்கமும் சிவப்பேறும் அளித்துச் சதாசிவ வடிவாக்கி அபரமுத்திப்பேறு கொடுப்பதாகப் பாவிக்கப்படுகின்றது.

 

ஆகையால் இதுகாறும் கூறியவாற்றால் ஆன்மா தன்னைப் பந்தித்த பாசம் நீங்கி, பசுபோதங்கெட்டுச் சிவமாந்தன்மை யடைந்து சிவத்திலிரண்டறக் கலப்பதே சைவக்கிரியைகளின் நோக்கமென்பது விளங்குகின்றது. இந்நோக்கமில்லாத ஏனைய பூசைகள் விலக்கத்தக்கனவாகும்.


8. ஆலயவமைப்பு.

 

முத்தி சாதனமாகப் பெரியோராற் பொதுவாகக் கூறப்பட்ட சாதனங்கள் மூன்று. அவையாவன: மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பனவாம். அவற்றுள் தலம் என்பது: ஆலயத்தையும் குறிக்கின்றதால் ஆலயம் எங்ஙனம் முத்தி சாதனமாகுமென்பதை அதன் அமைப்பைக் கொண்டு விளக்குவாம்.

 

சிவாலயங்கள் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நான மண்டபம், தம்பமண்டபம், நிருத்தமண்டபம் எனும் ஆறு உறுப்புக்களையும், ஐந்து பிராகாரங்களையும் உடையன. கர்ப்பக் கிரகமாதி ஆறு உறுப்புக்களும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை யென்னும் ஆறாதாரங்களைக் குறிக்கின்றன. ஐந்து பிராகாரங்களும் அன்ன மயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் எனும் பஞ்சகோசங்களை, அல்லது தூல சரீரம், சூக்கும சரீரம், குணசரீரம், கஞ்சுகசரீரம், காரண சரீரம் எனும் பஞ்ச சரீரங்களைக் குறிக்கும். ஷை பிராகாரங்கள் நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை எனும் பஞ்சகலைகளையும் குறிக்கும். பஞ்சகலைகளைக் குறிப்பதால் அவற்றிலடங்கிய ஏனைய அத்வாக்களையுங் குறிக்கும். சிவலிங்கம் சதாசிவமாகும்; சோமாஸ்கந்தர் மஹேசுரராவர்; சந்திரசேகரர் உருத்திரமூர்த்தியாவர்; ஆலயம் விஷ்ணு சொரூபமாகும்; சிவலிங்கம் பதியாகும்; நந்தி பசுவாகும்; பலிபீடம் பாசமாகும்; துஜஸ்தம்பம் பதியாகும்; துவஜபடம் திரோதான சத்தியாகும்; கொடியில் இடபம் ஆன்மாவாகும்; கொடிக்கயிறு பாசமாகும்; கொடியில் திரிசூலம், ஆரணி ஜனனி ரோதயித்திரி எனும் மூன்று சத்திவடிவாகிய திரோதாயியாகும்.
 

கர்ப்பக்கிரகத்தில் தூபியும் சிவலிங்கமுமிருக்கின்றன. பிராசாதயோகா வஸ்தையில் இருதயம் மூலாதாரத்தானமாய் விளங்கும். எனவே கர்ப்பக்கிரகம் மூலாதாரமாகும். இருதயமானது தத்துவ சொரூபமான கமலவடிவாய்ப் பாவிக்கப்படும். அவ்விருதய கமலத்தை உணர்த்துவது கர்ப்பக்கிரகத்தின் மேல் விளங்கும் தூபி; அத்தூபியோடு சார்ந்த கர்ப்பக்கிரகத்தில் சதாசிவ மூர்த்தி விளங்குதல் இருதயகமலத்தில் சதா சிவமூர்த்தி விளங்குதலை உணர்த் தும்.

 

முப்பத்தாறு தத்துவங்களும் ஐந்து கோசங்களாய் அல்லது சரீரங்களாயிருக்க, தத்துவமயமான இருதய கமலத்தில் ஆன்மாவையே இலிங்கமாகக் கொண்டு சதாசிவமூர்த்தி விளங்குந் தன்மையை, முப்பத்தாறு தத்துவங்களும் ஐந்து ஆவரணமாய் விளங்கும் ஆலயத்தில் தத்துவமயமான கெர்ப்பக்கிரகமாகிய கமல மத்தியில் சதாசிவமூர்த்தி சிவலிங்க ரூபமாக விளங்குகின்றது குறிப் பிடுகின்றது.


9. மூர்த்திவிளக்கம்.

 

சிவலிங்கமானது மூன்று மாயைகளைக் குறிக்கின்ற மூன்று பாகங்களை யுடையதாய், அம்மாயையினின்றும் விரிந்த நிவிர்த்தியாதி ஐங்கலைகள், பிருதி வியாதி முப்பத்தாறு தத்துவங்கள், காலாக்கினியாதி 224 - புவனங்கள், அகா ராதி ஐம்பத்தோர் வன்னங்கள், ஓம் வியோவியாபினே முதலான 81 - பதங்கள், ஈசாநாதி பதினோரு மந்திரங்களாகிய ஆறத்துவாக்களின் வடிவாய் மும்மூர்த்தி சொரூபமாய்ச் சிவத்துக்குரிய தூல சூக்கும் காரண லிங்கங்களை உணர்த்திநிற்கும் சிவ வடிவாகும். இதன் விரிவைச் சித்தாந்தப் படத்திலும் அதன் விளக் கத்திலும் சிவாகமங்களிலும் காணலாம்.


10. தீர்த்தம்.

 

தீர்த்தமானது பிறவி வெப்பத்தால் வெதும்பிய உயிர்களது துன்பந் தீரும் பொருட்டுத் தண்ணீர் சொரூபமாயமைந்து தன்னையடைந்து தரிசித்துப் பரிசித்து உட்கொண்டவர்களுக்குக் குளிர்ச்சியைத் தந்து பிறவி நோயைத் தவிர்க்குந் திருவருட் சத்தியாகும்.


11. சைவக்கிரியைகள் ஞானசாதனமாதல்

 

இவ்வாறமைந்த தலம், மூர்த்தி, தீர்த்தங்களில் நடக்கும் உத்ஸவங்களால், தான் செய்யும் கிருத்தியங்களை, இறைவன் நமக்கு விளக்கி ஞானத்தைப் பாலிக்கு முறைமையை ஆராய்வோம்:

உத்ஸவம் என்பது மகா யாகமெனப் பொருள்படும். உத் = மகா, ஸவம் = யாகம்; உத்ஸவமானது நித்யோத்ஸவம், வாரோத்ஸவம், பக்ஷோத்ஸவம், மாதோத்ஸவம், அயனோத்ஸவம், வருடோத்ஸவம், மகோத்ஸவம் எனப் பல திறப்படும்.

 

நித்யோத்ஸவமாவது - ஞாயிறு முதல் சனியீறாகவுள்ள கிழமைகள் தோறும் ஆலயத்தில் செய்யப்படும் பூசை. இது நித்ய பஞ்சகிருத்யத்தைக் குறிக்கும்.

 

நித்யோத்ஸ்வத்தில் ஐந்தொழில் நிற்கு முறைமையாவது: - அபிஷேகம் - சிருஷ்டி, கௌதுகாபந்தனம் - திதி, தூபம் - சங்காரம், கற்பூர தீபம் - திரோபவம், கற்பூரக்கிளைத் தீபம்- அனுக்கிரகமாகும்.

 

வாரோத்ஸவமாவது - சுக்கிரவாரந்தோறும் உமாதேவியாரை எழுந் தருளுவித்தல்.
 பக்ஷோத்ஸவமாவது - பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி முதலிய உத்ஸவங்கள்.
 

மாதோத்ஸவம் - மாசப்பிரவேசத்தன்று கொண்டாடப்படும் உத்ஸவம்.

 

அயனோத்ஸவமாவது - உத்தராயணம், தக்ஷிணாயனம், சித்திரை விஷ, ஐப்பசி விஷ முதலிய உத்ஸவங்கள்.

 

வருடோத்ஸவமாவது - பிர்மோத்ஸவம், தெப்போத்ஸவம், சைத்ரோத் ஸவம், வசந்தோத்ஸவம் முதலிய உத்ஸவங்கள்.

 

உத்ஸவகாலங்களில் ஆலயங்களில் நடக்குங் கிரியைகள் பஞ்சகிருத்தியங்களைக் குறிக்கும். அஃதாமாறு: - அங்குரார்ப்பணம், துவஜாரோகணம், திருக்கல்யாணம் ஆகியவை - சிருட்டியை யுணர்த்துவன; வாகனாதி உத்ஸவம், ஓமம், பலியெனு மிவைகள் - திதியை உணர்த்துவன; இரதாரோகணம், சூர்ணோத் ஸவம், கிருஷ்ணகந்தோத்ஸவமாகியவை - சங்காரத்தைக் குறிக்கும்; மௌனோத்ஸவம் - திரோபவமாகும்; சத்தியூடல், தீர்த்தம் எனும் உத்ஸவங்கள் - அநுக்ரகமாகும்.

 

இனி, பத்துநாள் உத்ஸவங்கள் எவ்வாறு ஞானசாதனமாகின்றன வென் பதை ஆராய்வோம்:
 

முதல் நாள் தூலநீக்கத்தையும், இரண்டாம் நாள் தூல சூக்கும நீக்கத்தையும், மூன்றாம் நாள் மூவினை, முக்குணம், முக்குற்றங்களின் நீக்கத்தையும், நான்காநாள் அந்தக்கரணம், நால்வகைத்தோற்றங்களின் நீக்கத்தையும், ஐந்தாம் நாள் ஐம்பொறி, ஐந்தவத்தை, ஐம்மலங்களின் நீக்கத்தையும், ஆறாம்நாள் காமக் குரோத லோப மோக மத மாற்சரியங்களின் நீக்கத்தையும், ஏழாம் நாள் ஏழுவகைப் பிறப்புக்களின் நீக்கத்தையும், எட்டாம் நாள் எண் குண விளக்கத்தையும், ஒன்பதாம் நாள் நவபேத விளக்கத்தையும், பத்தாம் நாள் பராநந்தக்கடலிற் படிவதையும் உணர்த்துகின்றன.

 

இப்பத்து நாள் உத்ஸவங்களையும் நடனமுறையில் பெயரிடுமிடத்து, முதல் நாள் - பிரகிருதி நடனம், 2 -ம் நாள் இருவினை நடனம், 3 -ம் நாள் முக் குண நடனம், 4 –ம் நாள் அந்தக்கரண நடனம், 5 -ம் நாள் பஞ்சேந்திரிய நட னம், 6 -ம் நாள் அறுவகை (காமாதி) நடனம், 7 -ம் நாள் சப்தகோடி மகாமந் திரபத நடனம், 8 -ம் நாள் வித்தியாதத்துவ ஆணவநீக்க நடனம், 9 -ம் நாள் நவபேத நடனம், 10 -ம் நாள் பேரின்பாதீத நடனம், எனப் பெயர்பெறும். பதினோராம் நாள் பதி பசு பாச நடனமாகும்.


உத்ஸவகாலங்களில் இறைவன் வாகனாதிகளில் உலாவருதலின் அறிகுறியாவது: -

 

முதல் நாள் விருக்ஷத்தடிச் சேவையானது - மாயையெனும் பொருள்; விருக்ஷம் கிளை இலைகளுக்கு வித்து காரணமாயிருப்பது போல, சகல லோகங்களுக்கும் காரணபூதமாயிருத்தலை உணர்த்தும். இது சிருஷ்டி யாகும்.

 

இரண்டாம் நாள் சூரியப்பிரபை சந்திரப்பிரபையி லெழுந்தருளித் தரிசனந் தந்தருளுவது - காண்பானாகிய ஆன்மாவுக்குக் காட்டுவான் தான் என்பதை உணர்த்த, காணுங் கண்ணனுக்குக் கதிரொளியாய் நின்றதை உணர்த்தும். இது திதியாகும்.

 

மூன்றாம் நாள் பூதவாகனம் - ஆன்மாக்களுக்குக் கன்மானுகுணமாக மரணாவஸ்தையை விதிக்கின்றோ மெனக் குறிக்கின்றது; இது சங்காரம்; அன்றியும் பஞ்ச பூதங்களிலும் விளங்குவோன் தானேயென விளக்குகின்றது.

 

நான்காம் நாள் கைலாசவாகனம் - ஆன்மாக்களின் மலத்தைப் போக்கி அவைகளுக்கு நிரதிசயானந்த ஜோதிர்மய பரமாகாசமாகிய பரசிவலோக மெனப்படும் கைலாயத்தைக் கொடுத்தருளும் பரமபதி தானே யென்பதைக் காட்டுகின்றது.

 

ஐந்தாம் நாள் இடபவாகனமானது - பசுபதிதானென்பதையும், தர்ம தேவதையை இடமாகக் கொண்டவனென்பதையும், உணர்த்துகின்றது. இடபத்தின் நான்கு கால்களும் அந்தக்கரணத்தையும், இடபம் ஆன்மாவையும் விளக்குவன; இடபத்தின் மீதுள்ள இறைவன் தோற்றம் அவற்றின் மேல் ஈஸ்வரன் விளங்குகின்றதை உணர்த்துகின்றது. இது அநுக்கிரகம்.

  

ஆறாம் நாள் யானை வாகனம் - தும்பிக்கை போன்ற சுழுமுனாநாடியின் வழியாய்த் தன்னைத் தரிசிக்க வேண்டுமென்பதைக் காட்டுகின்றது. அன்றியும் பிரணவதாரகன் தான் என்பதை உணர்த்துகின்றது.

 

ஏழாம் நாள் நந்தி வாகனம் - ஆசாரியனை அதிட்டித்து நின்று ஆன்மாக்களைப் பரிபக்குவப்படுத்துவாரென்பதைக் காட்டுகின்றது.

 

 எட்டாம் நாள் குதிரைவாகனம் - குதிரைக்கு வாசி யென்ற பெயரிருத்தலால் இடை பிங்கலை சுழும்நா நாடிகளில் இயங்குகின்ற வாசியாகிய பிராணவாயுவில் சவாரி செய்தலைக் குறிக்கும்.

 

ஒன்பதாம் நாள் இரதம் - இதன் அமைவு அண்ட பிண்டத்துக்குச் சமானம். அஃதாமாறு: - விஸ்வ விராட்சொரூபமே எட்டடுக்குத் தத்துவம்; உச்சிக்கலசம் சோடசாந்தம்; அதற்கடுத்த கீழடுக்குத் துவாதசாந்தம்; அதற்கடுத்தது மஸ்தக ஆதில் தானம்; அதற்கடுத்தது மஸ்தக மத்தியஸ்தானம்; அதற்கடுத்தது மஸ்தக அந்தஸ்தானம்; அதற்கடுத்தது புருவமத்தியஸ்தானம்; நடு விற்றாங்குங் குத்துக்கால்கள் தத்துவக்கால்கள்; முன்மூன்று துறைகள் மூன்று கண்கள், பின்னவை சிகை; இடம் வலம் காதுகள்; ஈஸ்வரனெழுந்தருளியிருக்குங் கேடயபீடம் முப்பாழ்; சூரிய சந்திரகலைகளே வாசிகள்; சாரதி அக் கினிகலை; (இவை நாசி); எட்டாமடுக்குக் கண்ட ஸ்தானம். அதையடுத்தது இருதயம்; அதையடுத்தது நாபி; அதை யடுத்தது குண்டலி ஸ்தானம்; தசசக் கரங்கள் தசவாயு எனக் காண்பதால், இறைவன், இதற்குக் கர்த்தா தானொரு வனேயென்றுணர்த்தி, இவ்வாறமைந்த பிண்டதத்துவ சரீரமாகிய ரதத்தில், தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி, அசைவற்ற மனமாகிய அச்சுப் பட்டடையை உந்தி குண்டலியிலிருந்து கீழ்ப்பட்டடை நாபிக்கு ஏற்றி லயப் படுத்தி, அங்கிருந்து மேல் பட்டடையாகிய இருதயத்துக்கு ஏற்றிலயப்படுத்தி, அங்கிருந்து அதற்கடுத்த பட்டடையாகிய கண்டஸ்தானத்துக் கேற்றி லயப்படுத்தி, பின் அடுத்த பட்டடையாகிய வாய்க்கு ஏற்றிலயப்படுத்திப் பின் முறையே இரதக்குதிரையாம் நாசிக்கும், அங்கிருந்து கண்வழியாகவும் நடு வழியாகவும் மேல்நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவமத்திக்கு மேற்றி, நெற்றி முதல் துவாதசாந்தம் வரை ஏற்றி இலயப்பட்டுச் சும்மா இருந்தபடியிருக்கும் நித்திய சுகியா யிருந்திடல் வேண்டுமென்று இலயக்கிரமத்தைக் காட்டுகின்றது. அன்றியும் ஆணவம், மாயை, கன்மமென்னும் மூன்று மலங்களையும் அழித்த வீரத்தைக் குறிக்கின்றது.

 

10 - ம் நாள் பிக்ஷாடனமூர்த்தி - ஆவரணம் ஏழையும் ஒழித்துவிடும்படி காட்டுகின்ற திருக்கோலம். இது திரோபவம்.

 

11 - ம் நாள் நடராஜகோலம் ஆன்மாக்களை ஆனந்தத்தில் அழுத்தல். இது அநுக்கிரகமாகும்.

 

இவ்விதம் ஞானசாதனமான கிரியைகளோடு கூடிய ஆலயத்தை அடைந்து வழிபடும் முறையில் ஞானமுதித்து முத்தி பெறுகின்ற முறைமையை இனிக்கூறுதும்: - ஆலயத்தை அடைந்து விதிப்படி தீர்த்தஸ்நானஞ் செய்தலால் சாத்தினிபாத முண்டாகின்றது. நிவிர்த்தி முதலிய பஞ்சகலா சொரூபமாயமைந்த ஐந்து பிராகாரங்களையும் வலம் வந்து உள்ளே செல்லுகையினாலே ஆறத்துவாக்களையும், அவற்றில் அடங்கிய வினைகளையும், அவற்றாலாகும் பிறவிகளையும் கடந்ததாகின்றது. துஜஸ்தம்பம், நந்தி பலிபீடங்களைத் தரிசிக்கும் போது பதிபசுபாச உணர்ச்சியுண்டாகின்றது. பாசவடிவாகிய பலிபீடத்துக்கு இப்பால் அட்டாங்கமாக நமஸ்கரிக்கின்ற பொழுது "விழுந்து மெய் யுறப்பணியவர்....'' வினைகள் அறவொழிந்து அவற்றின் காரணமான ஆணவ மலத்தின் இயல்பு இறைவனருளால் விளங்கப்பெறும்; அதனால் அம்மலத்தின் விளைவாகிய யானெனதென்னுஞ் செருக்கொழிந்து தற்போதம் நீங்கிப் பரவசமாதலுண்டாகும். மண்டபங்களைக் கடந்து செல்வது ஆதாரங்களை விட்டு நீங்கிச் சிவசந்நிதியை யடைதலாகும். அதிகாரநந்தியை யடைகின்றபோது அதிகாரமுத்தத்தன்மை யுண்டாகும். சதாசிவமூர்த்தியாகிய சிவலிங்கத்தைத் தரிசித்தபொழுது பாசமனைத்தும் நீங்கிப் பசுவியல் பொழிந்து சிவமாந் தன்மைக் கேதுவுண்டாகின்றது. அங்கு தூபதீபங் காட்டுவது சாத்திநிபாதத்துக்கேற்ப அநுக்கிரகிக்கப் பெறுகின்ற முறைமையையும் அநுக்கிரகத்தாலாம் பயனையும் உணர்த்துகின்றது. எங்ஙனமெனின்: - தூபத்துக்காகப் போடப்பெறும் சாம்பிராணி ஆன்மா; தணல் அதிகம் விளக்கமில்லாத சிவம்; சாம்பிராணி தணலை யடைவது, மந்ததரம் மந்தம் என்ற சத்திநிபாதங்களையுடைய ஆன்மாக்கள் சிவத்தைத் தேடி அடைவதை உணர்த்துகின்றது; அதில் சிட்டம் தங்குவது அவ்வித சத்திநிபாதமுடையவர்களுக்குப் பசுபோதம் சிறிதிருப்பதை உணர்த்துகின்றது; கற்பூர தீபத்தில் கற்பூரம் = ஆன்மா; அதைக் கொளுத்துந்தீ = சிவம்; கற்பூரத்தைத் தீயால் கொளுத்துவது தீவிரம், தீவிரதரம் எனும் சத்திநிபாதங்களையுடைய ஆன்மாக்களைத் தேடி சிவம் தானாகவே பூரண விளக்கத்துடன் அடைவதைக் குறிக்கின்றது; கற்பூரம் சுடர் விட்டுச் சோதிமயமாவது ஆன்மா சிவமாந்தன்மை யடைவதாகும்; கற்பூரசோதியில் புகை போவது கன்மமாயாமலங்கள் ஆன்மாவை விட்டுக் கழிந்து போவதைக் குறிக்கின்றது; கற்பூரதீபத் துள்ளே காணப்படுகின்ற மங்கிய கருமை நிறமானது ஆன்மா சிவமாந்தன்மை யடைந்த போதும் ஆணவம் வலிகுன்றி ஆன்மாவினிடத்தில் ஒளிமயமாயிருப்பதை உணர்த்துகின்றது; கற்பூரம் சிட்டமில்லாமல் எரிந்து போவது ஆன்மா சிவமாந்தன்மை யடைந்தபோது ஆன்ம சொரூபம் சிறிது மில்லாமையை விளக்குகின்றது. சந்நிதியில் விபூதி பெறுவது திருவருளைப் பெறுவதாகும். விபூதி = அருள்.   


12. சிவஞானி சரியையாதி நான்கினுக்கும் உரியன்.

 

மேலே கூறிய முறையில் சிவபிரானின் றிருவருளை அனுபவித்து அதில் அழுந்தி வருகின்றவர்களாகி சிவஞானிகளுக்குச் சரியை கிரியை யோகங்கள் வேண்டுவதில்லையென இக்காலத்தில் பலர் எண்ணுகின்றார்கள். ஆனால் அநாதிகாலம் முதல் இதுகாறும் துணைநின்று தனுகரணாதிகளைக் கொடுத்து அறிவிச்சை செயல்களை விளக்கி ஆணவத்தைக் கெடுத்துப் பேரானந்தத்தைக் கொடுத்தருளிய திருவருட்செல்வராகிய கடவுளுக்குச் செய்யவேண்டிய நன்றியை மறக்கக்கூடாதென்பதை அவர்கள் மறுக்கமாட்டார்கள். ஆதலால் அவ்வித உபகாரத்தைப் பெற்ற சிவஞானிகள் தமக்குத் தேகமுள்ள வரையில் தமதருந்துணைவராகிய கடவுளருளிய சட்டத்திற்கடங்கித் தமது போதமுள்ள வரையில் சரியையாதி நான்கினையும் அனுசரித்து வரவேண்டிய கடப்பாடுடையவர்களாவர். உறங்குபவன் கைப்பொருள் போல் சிவானந்தாநுபவ மேலீட்டினால், தாமாக நீக்காது, தம்மையறியாது சரியையாதிகள் நீங்கலாமென்றும் அங்ஙனமின்றி அவற்றை நீக்கினால் வழுவாமென்றும் கூறப்படுகின்றது. " ஞான யோகக் கிரியை சரியை நாலு நாதன் றன்பணி, ஞானி நாலினுக்கு முரியன்........'' என்பது இதனை வலியுறுத்துகின்றது.

 

13. சிவடினயார் கடமை.

 

இவ்வாறு சிவமாந்தன்மையுற்றவர்களும் உறமுயற்சிக்கின்றவர்களுமாகிய சிவனடியார்கள், தங்கள் நித்தியக்கடனை நெறியில் வழுவறச்செய்து திருநந்தனவனம், திருக்குளம், திருக்கோயில் முதலிய பணிகளைத் திருவருளைக் குறித்துச்செய்து திருப்பள்ளித் தாமமமைத்தல் நித்தியோத்ஸவாதிகள் நடத்தல் ஆகியவைகளைச் செய்வித்து, தேவாரமாதி திருமுறைகளையும் சித்தாந்த நூல்களையும் ஓதும்படி செய்து, அதற்குரிய புத்தக நிலையங்களை நிறுவி, ஆலயத்தில் புராணபடனங்களை நடத்துவித்து உலகிலுள்ளவர்களெல்லாம் சிவமாந்தன்மைப் பெருவாழ்வடையும்படி திருவருளைப் பிரார்த்திப்பதே கடமையாகக் கொள்ள வேண்டும். இதுவே சிவனடியார் செய்கையாகும்.

 

ஓம் தத் ஸத்

பஞ்சாட்சரபுரம், வாலையாநந்தம்.

 

ஆனந்த போதினி – 1926, 1927 ௵ -

நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ௴

 

 

 

 

No comments:

Post a Comment