Tuesday, September 1, 2020

 சேக்கிழார்

''ல்லையவர் புராண கதை
உலகறிய விரித்துரைத்த

செல்வமலி குன்றத்தூர்ச்

சேக்கிழா ரடிபோற்றி."

 

முப்புரமெரித்த முதல்வனை அல்லும் பகலும் இடையறாது வணங்கி அன்னவன் கழல் நிழல் சேர்ந்த பெரியாராகிய அடியார்களின் சரிதங்களை யழகுற வமைத்து, உலகத்தார் சிர்தைக்கமுதளித்த பெரியாராவர் சேக்கிழார் நாயனார்.

 

பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும் பாளை விரி மணங்கமழ் பூஞ்சோலை தோறும் காலாறு கோலியிசைபாட நீடுகளி மயில் நின்றாடு, தொண்டைநாட்டை “கரிகாற் சோழன்'' என்று ஓர் வேந்தன் அறவாழி சுழற்றிவந்தான். அவன் மனுநெறி தவறா மன்னன். குடிகளைத் தின்கண்ணென க் காக்க காவலன். அடுத்தார்க்கு நல்லன், எதிர்த்தார்க்குக் கொடியன். அச்சோழன் முனந்தெரிந்தேற்றிய நற்குடிகள் நாற்பத்தெண்ணாயிரம். அவற்றுள் தலைசிறந்தன, கூட டல்கிழான், புரிசைகிழான், வெண்குளப்பாக்கிழான், சேக்கிழார் குடியிவைகளாம்.

 

அத்தொண்டை நாட்டில் நாலாறு கோட்டங்க ளுளவா பின. அவற்றுள் புலியூர்க்கோட்ட மென்பதொன்று. அக்கோட்டம் எழுபத்தொன்பது நாடுகின்ற வயல் "குன்றத்தூரில் கடையிற் கூறிய சேக்கிழார் திருமரபு த தலைசிறந்து விளங்கிற்று. அஃது, மனிதர்களுக்கு சூது, வாது, வஞ்சனை முதலிய தீய குணங்களுக்குக் காரணமாயிருக்கும் வறுமையென்னும் பேய் தலை காட்டா தோட்டச்செய்யும் வேளாண்மையில் முதன்மை பெற்றிருந்தது.

 

அம்மரபின் கிழவரும் கிழத்தியரும் அரனிடத் தன்புபூண்டு ஒழுகி வருவாராயினர். அங்ஙனமிருக்கு நாளில் அமமரபுக்கிழத்தியர் மணி வயிறுவாய்த்தனர். பின், அன்னவருக்குச் செய்யவேண்டிய வளையிடுதல் முதலிய சடங்குகள் யாவும் முறையே நடைபெற்றன. ஒன்பது திங்கள்களும் முறையே கழிந்தன.

 

அவ்வம்மையர் வயிறு வாய்த்ததி லிருந்து பத்தாவது திங்களாகிய வைகாசி மாதமும் முறையே வந்தது. அத்திங்களில் பூச நட்சத்திரம் கூடிய நன்னாளில் நல்லோரையில் அவ்வம்மையார், தானும் தனது கணவனு மியற்கும் றிய நற்றவத்தின் பயனாய் இளஞ்சூரியனே போன்ற வோராண் மகவைப் பயந்தனள். அச்சமயம் நாட்டிலுள்ளோர் மகிழ்வு கொண்டாடினர். விண்ணவர் மலர்மாரி பொழிந்தனர். மண்ணவர் ஆசிமாரி யளித்தனர். அக்குழவிக்கு இருமுது குரவரும் முறையே செய்வனவற்றைச் செய்து, “அருண்மொழித்தேவர்" என்று நற்பெயருஞ் சூட்டினர். குழந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது.

 

தக்க பருவமடைந்தவுடன் பெற்றோர் அக்குழந்தையைப் பள்ளியிற் சேர்த்தனர். அருண்மொழித் தேவரும் கற்பன யாவும் கற்றுத் தேர்ந்து அதன்படி நிற்பவரானார். அவ்வருண்மொழித் தேவரே உலகத்தார்க்குத் திருத்தொண்டர் புராண" மென்னும் அமிழ்தளித்த சேக்கிழார் பெருமானாவர். நாட்கள் செல்லச் செல்ல, தொல்காப்பியர், திருவள்ளுவர் முதலியோரின் இயற்பெய ரொல்கி, குடிப்பெயர் மல்கியது போன்று நமது சேக்கிழாருக்கும் அவரது இயற்பெய ரொல்கிக் குடிப்பெயர் மல்குவதாயிற்று. அவருக்குப்
"பாலறாவாயர்" என்று ஓர் தம்பியிருந்தனர். அவர்களிருவரும் இனிது வாழ்ந்துவந்தனர்.

 

அச்சமயம் சோழ நாட்டை ''அநபாய சோழ" னென்னு மோர் மனுநெறி வழுவா வேந்த னாண்டுவந்தான். அவன், சேக்கிழாரின் கல்வித் திறமையையும், அறிவின் பெருக்கையும், உடல் வன்மையையும், வண்மையையு மறிந்து, அவரைத் தனக்கு மந்திரியாக நியமித்துக்கொண்டான். அவருக் கரசியலிலிருந்த வாற்றலைக் கண்டு வியந்த மமன்னன், தனது பெயராகிய ''அநபாய சோழன்'' என்னும் பெயரையும், " உத்தமச் சோழ பல்லவன்" என்னு முயர் பட்டத்தையு மளித்து அவரைப் பெருமைப் படுத்தினான்.

 

அவ்வித மிருக்கு நாளி லரச னனபாயன், சமணர்களின் தந்திரத்தாலவர்கள் வலையிலீடுபட்டு, அவர்களியற்றிய நூலாகிய "சிந்தாமணி' முதலியவைகளைக் கேட்டின் புற்றிருந்தான்.

 

அதையறிந்த சேக்கிழார் மனமிக வெதும்பினர். அரசன் சமணனாயின், சைவமழிந்துபடுமே யென் றகமிக வாடினார். பின், இளமையனான வாசனையண்மி, சமணத்திலுள்ள பொய்ம்மையையும், இழிவையும், இம்மைக்கு மறுமைக்கு முதவாத் தன்மையையும், சைவத்தின் பெருமையையும், உயர்வையும், இம்மைக்கும் மறுமைக்குமுள்ள வுறுதியையும், அதன் பழைமையையும் தென்ளிதில் எடுத்து விளக்கிக் காட்டினார்.

 

அதைக் கேட்ட வரசன், “இச்சமண கதை பயனற்றதாயின், உறுதி பயக்குஞ் சிவ கதை யாது! அது நவகதையோ, அன்றிப் புராதனமோ? அதைக் கூறினவர் யார்? கேட்டவர் யார்?'' என்று பலபட வினவினான். அதற்குச் சேக்கிழார், சுந்தரமூர்த்தி நாயனார் ''தில்லைவாழந்தணர்'' என்று தொடங்கிப் பல பதிகங்கள் பாடியதையும், அதற்கு முறையே நம்பியாண்டார் நம்பி முதலியோர், அந்தாதி, உரை முதலியன வகுத்ததையும் முறையே கூறினர். இவற்றைக் கேட்ட, இமயமுதல் சேதுவரை செங்கோ லோச்சும் வளவரசன், சேவையர் காவலன் முக நோக்கிச் சொல்வான்: -

 

“அரனிடத்தில் அன்பு செலுத்தி முத்தியடைந்த பெரியாரின் சரிதங்
முறையே ஒரு பெருங்காவியமாக வியற்றியருள் செய்யவேண்டு' மென்று வேண்டி செப்பரிய திரவியமுங் கொடுத்தான். அதை வாங்கிச் சேக்கிழார் குரிசில் திருத்தில்லையுஞ் சேர்ந்தார்.

 

அங்கு சென்று, நடனஞ் செய்யா நிற்கும் பரம்பொருளை வணங்கிக்களிப்பென்னுங் கடலுள் மூழ்கினார். பின், கடவுளைத் துதித்து, அவரது மலர்க்கழல்களை வணங்கி "அடிகளே! உனதடியார் சீர் அடியே னுரைத்திட அடியெடுத் திடர் கெடத் தருவாய்'' என்றிறைஞ்சி நின்றார். அப்பொழுது, மன்றி னாடுவார் திருவருளினால் “உலகெலாம்" என்னுமோ ரசரீரி வாக்கெழுந்து அங்கு நின்றவடியார்கள் செவிப்புலத் தெங்குமாகி நின்றது. அதைக் கேட்ட வடியார்கள் தலைமிசைக் கூப்பிய கையராய் நிலமிசை விழுந்தெழுந்து கடவுளை மனமார வழுத்தினார்கள்.

 

பின், உள்ளலார்புரம் நீறெழக்கணை யொன்று தொட்டுயர் மன்றில் வாழ் வள்ளலாருக் கணிந்திருந்த திருமாலை, திருநீறு, மெய்ப்பரிவட்டம் முதலான யாவையும் எள்ளலா ரலரென்று சேவையர் சாவலர்க் கினிதளித்து, அள்ளலார் வயனீடு தில்லையி லனைவருங் களி கொண்டனர்.

 

அதன் பின் சேக்கிழார் குரிசில், சமயக்குரவர்கள் மூவரையும் வணங்கி, நிருத்தனார் தந்த சொல்லாகிய "உலகெலா" மென்பதை முதலாகக் கொண்டு,


"உலகெலா முணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்."


என்னும் கடவுள் வாழ்த்துப்பாடி, முறையே அறுபத்திமூன்று நாயன்மார்களின் சரித்திரங்களையும் 4253 திருவிருத்தங்களாகப் பாடி முடித்தார். அதற்குத் “திருத்தொண்டர் புராணம்" என்னுந் திருப்பெயருஞ் சூட்டினார். பின்னதை பிரண்டு காண்டங்கள், பதின்மூன்று சர்க்கங்களாகப் பிரித்து, நன்றாக வேட்டி லெழுதி, மைக்காப்புச் சாத்தி, அழகுபெறக் கவளிகையுமமைத்து அதில் வைத்தார். நிற்க,

 

சேக்கிழாரைப் பெரிய புராணம் பாடவிடுத்த வேந்தன், அஃது எவ்வளவாயிற்றென் றறியும் பொருட்டு, தூதுவரையும், அவரறியாது ஒற்றரையும் தில்லைக்கு விடுத்தனன். சென்ற வொற்றர்கள் திரும்பி வந்து முக்காலும் முடிந்துவிட்டதென்று நற்செய்தி கூறி பொன்னும் மணியும் பரிசாகப் பெற்றனர். பின், அரசன் தானே நேரிற் செல்லும் பொருட்டு நால்வகைச் சேனை புடைசூழ தில்லைக்கேகினன். வேந்தன் வாவையறிந்த தில்லை மறையோரும் புராண கதை செய்த கங்கைகுலத் திலகரும் தளவமாலை யபயனை யெதிர்ந்து ஆசி கூறி வாழ்த்தினர்.

 

சேக்கிழார் நாயனாரைத் தவவேடத்திற் கண்ட அநபாயன் முடிமிசைக்கூப்பிய கையனாய் அவரை வணங்கினன். பின், மன்றலில் நின்றாடும் மாலயர்க்கரிய நாதனை மனமார வழுத்தினன். அப்புறம் சேக்கிழார்முனி விரித்துரைத்த கதை கேட்பதற்குத் திசைகடோறு மாளுமோலைகளும் ஏவினன். சிவசமயத்தவர் யாவரும் வந்து திரண்டனர். நகரம், கண்டோர் வானுலகமோ என்றையுறத் தக்கவாறு நன்றாக வழகு செய்யப்பட்டது. திருத்தொண்டர் புராணத்தைக் கேட்க,

 

"திருநெறித் தமிழ்வல்ல பேர்கள் சிவாகமங்கள் படித்தபேர்
கருநெறிப்பகை ஞான நூல்பல கற்றபேர் மறைகற்ற பேர்
குருநெறிக்குரி யோரிலக்கண லக்கியங்கள் குறித்தபேர்
பெருநெறிப்பல காவியங்கதை பேசவல்லவ ரனைவரும்.''


வந்து குழுமினர்.

 

அதன்பிறகு, சிற்சபைக்கு முன்னே, மறையவர் கோமயத்தால் தரையை நன்றாக மெழுகிக் கோலமிட்டு, அறுகாற்றவிசு ஒன்றிட்டு, அதன்மேல் பசும் பட்டு விரித்து, வெள்ளை மடித்திட்டு, மதுமலர் தூவி, விரைநறு தூபங் கொடுத்து, ஓரிடங் கற்பித்து, தண்டமிழ் சேக்கிழார் செய்த புராண முறை பதன் மீது வைத்து இறைஞ்சிப் போற்றினர். பின், சேக்கிழாரை அதைப் படித்துப் பொருள் விளக்க யாவரும் வேண்ட அவரும் பொருள் விரித்துரைத்தார். சித்திரைத் திங்கள் ஆதிரை நாளிற்றொடங்கி, அடுத்த சித்திரைத் திங்கள் ஆதிரைநாளில் நிறைவேற்றி யரங்கேற்றினார். அநபாயன் அதைத் தவறாமல் நாடோறும் கேட்டின்புற்றனன். இனி யவ்வளவர்பிரான் செவிக்குப் பிடிக்குமோ சிந்தாமணிப் புரட்டு!

 

புராண மரங்கேறியது மதனைப் பசும்பட்டினாற் சூழ்ந்து, பொற்கலத்திருத்தி யக்கலத்துடன் செறி மதயானைச் சிரத்தில் வைத்து, சேவையர் காவலரையு மேற்றி, வெற்றி யாசனுங்கூட வேறி முறைமையா லிணைக்கவரிதுணைக் கரத்தால் வீச பவனி வந்தனர்.

 

அங்ஙனம் வருங்கால், அரசன் தனக்குக் கிடைத்த பேற்றைக் குறித்து மகிழ்ந்தனன். நகரிலுள்ள மாந்தர்கள், சேக்கிழாரின் பெருமையைக் குறித்து,


"மதுரவிராமா யணகதை யுரை செய்த

வான் மிக பகவனு மொப்பல்ல

விதிவழி பாரத முரைசெய்து கரைசெய்த

வேத வியாதனு மொப்பல்ல

சிதைவற வாயிர நாவுட னறிவுள

சேட விசேடனு மொப்பல்ல

பொதிய மலைக்குறு முனிவனு மொப்பல்ல

புகழ்புனை குன்றை முனிக்கு.''


என்று பலபடப் பாராட்டினர்.

 

பவனி முடிந்து திருக்கோயிலை யடைந்ததும் அத்திரு முறையை திருக்கோயிலின் திருமுன் வைத்தனர். அச்சமயம் அரசன் சேக்கிழாருக்குத் ''தொண்டர் சீர்பரவுவார்'' என்னுந் திருப்பெயர் சூட்டி வணங்கி நின்றனன்.


பிறகு அத்திருமுறையைச் செப்பேட்டி லெழுதிக் கோயிலில் வைத்தனர்.

 

சேக்கிழார் தவவேடம் பூண்டமையால், அரசன் அவர் தம்பியாகிய பாலறாவாயருக்கு மந்திரிப் பதவியளித்து நீதிநெறி வழுவாது அரசு செலுத்தி வந்தான்.

 

சேக்கிழார் தில்லையிலேயே தங்கி கடவுளைப் போற்றிக் கடைசியில் என்று மழியாப் பேரின்ப வீட்டை யடைந்தனர்.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - ஆகஸ்டு ௴

 

 

No comments:

Post a Comment