Tuesday, September 1, 2020

 

சைவம் பழுத்த, மனம் படைத்தார்

(மகாமகோபாத்தியாய-பண்டிதமணி-மு. கதிரேசச் செட்டியார்)

      திருவாளர். திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களை யான் முப்பது யாண்டுகளுக்குமுன் தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சங்கத்திற் கண்டு அளவளாவிய துண்டு.
அப்பொழுது இவர்கள் தமிழாசிரியராகவும் சைவ நூற் பயிற்சியுடையாகவும் காணப்பட்டார்கள். இவர்கள் முதலிற் பேச யான் கேட்டது சிவஞானபோத முதற் சூத்திரத்தைப் பற்றிய சொற்பொழிவாகும். எடுத்துக் கொண்ட பொருளைச் செவ்வையாக வரையறை செய்து கொண்டு தெளிவான தமிழ் நடையிற் பேசினர். இளம் பருவத்தில் இவர்களுக்கமைந்த பேச்சு வன்மையைக் கண்டு எதிர்கால உருவம் என் உள்ளப் படத்தில் அப்பொழுதே வனப்புற அமைந்தது புண்டு. பின்னர் நாட்டுத் தொண்டி லீடுபட்டுத் "தமிழ்ப்புலவர் உலகியலறியார்'' என்போர் எண்ணத்திற்கு மாறாக அத் தொண்டர் தலைமணியாக் விளங்கிகள். கேட்போர் உணர்ச்சி ததும்பும்படி நாட்டு மக்கள் நலங் குறித்து இவர்கள் பேசிய சொற்பொழிவுகளை அரசியற்றுறையிற் றலைசிறந்து விளங்கும் ஆங்கில மொழிவல்லார் பலரும் பாராட்டிப் பரவசப் பட்ட துண்டு. அரசியலறிவு ஒருபாற் சிறக்க மற்றொருபால் பெண்ணுரிமை நலத்தைப்பற்றிய உழைப்பு இவர்கள் பால் பெரிதும் சிறந்தது என்னலாம்.

சமயப் பகுதியில் சமரசக் கொள்கையுடைய ரெனினும் சிறு பருவத்தில் வேரூன்றிய சைவமணம் இவர்கள் உள்ளத்தாமரையை எங்ஙனம் விட்டகலும்? சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களை நாட்டுத் தொண்டில் மிகுதியும் ஈடுபட்ட நிலையிற் கண்ட நண்பர்
சிலர் சமயப்பற்றில் குறைவுடையராக இருக்கலாமெனக் கொண்டு இவர்கள் தலைமை தாங்கிய சில அவைகளில் பெரியபுராணத்தை இழித்துப் பேசினாராக, அதனைப் பொறாத இவர்கள் உள்ளந் துடித்து அப்பேச்சை வெ. றுத்தும் பெரியபுராணப் பெருமையை
விரித்தும் பேசிய சொற்பொழிவை இன்றும் அறிஞர் பலர் பாராட்டுவர். இவர்கள் பேச்சுக் கேட்போர் உள்ளங்களைத் தன்வயப்படுத்து இன்புறச் செய்யும் இயல்பினது; எழுதும் உரை
நடையும் அன்னதே.

பெண் மக்கள் கல்வியிலும் நாகரிகத்திலும் உயர்வடைய வேண்டு மென்பதும் அன்பினாலன்றி அடிமை முறையால் வாழ்க்கை யிருத்தலாகா தென்பதும் இவர்கள் குறிக்கோள். இதற்கு இவர்கள் நூல்களும் பேச்சுக்களும் தமிழ் நாட்டிற் பரந்தெழுந்தன. ஏழைத் தொழிலாளர் நலங் கருதிச் செய்து வரும் தொண்டிலும் இவர்கள் பின்வாங்கினவர்க ளல்லர்.

இங்ஙனம் தமிழ்ப் புலமையோடு தமிழ் மக்கள் நலங் குறித்துச் செய்ய வேண்டிய பலவகைத் தொண்டுகளிலும் ஈடுபட்டுழைத்துவரும் நம் முதலியாரவர்களின் அறுபதாம் யாண்டு நிறைவுறுதல் நம்மனோர்க்குப் பெரிதும் உவகையளிப்ப தொன்று. தமிழன்பர்களின் கைம்மாறு இவ்விழாக் கொண்டாட்டத்தி லீடுபட்டுச் சிறப்பித்தலன்றி வேறியா துள? திரு.வி. கலியாணசுந்தரனார் இவ் வறுபதாம் யாண்டு போல் மற்றோர் அறுபதாம் யாண்டும் நிறையப் பெற்றுத் தமிழன்னைக்கு வேண்டும் பணிபுரிந்து தமிழ் மக்கள் இன்புறும் நிலைகண்டு தாமும் இன்புற்று வாழும் வண்ணம் அம்மையப்பராகிய இறைவன் றிருவருள் துணைபுரிகவென வேண்டுகின்றேன்.

ஆனந்த போதினி – 1943 ௵ - செப்டம்பர் ௴

 

 

No comments:

Post a Comment