Tuesday, September 1, 2020

 

சொல் வன்மை

 

 முன் நூலியற்றியாரும் உரைவகுத்தாரும் யாதா மொரு பொருள் பெறற் பொருட்டே முறையே சொற்பொருள்களைத் தத்தம் நூலிடையும் உரைக்கண்ணும் பொன்னெனப் பொதியவைத்துச் சிறந்தோராயினர். அன்னார் அவ்வகையின் மேம்பட்டாராதல்,


 ''ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல்
 பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி
 யம்முப் பாற்சொல் லுயர்திணை யவ்வே'   
            (தொல் - சொல் கிள. 2)

 

என்னும் இச்சூத்திரத்தில் ஆண்மகன் அறிவு முதலியவற்றான் சிறந்தவனாவன் என்பதை அறிவினர் உணர'ஆடூஉ'வினை முதற்கண் வைத்த துணையானே தெளியப்படும். இத்தெளிவு, திருக்குறட் கண் நாயனார் மக்களை, "அறிவறிந்த மக்கள்'' (புதல். 1) எனலானும் துணியத்தக்கதாம். இவை போன்ற வெண்ணிறந்த பிரயோகங்கள் பொதுளிய முன்னவர் நூற்கள் புகழப் பெறுவனவன்றித் தம்மைப் பன்முறையுங்கற்பார்க்குத் தம்மை யியற்றினார் அறிவின் பெருமையினை, நன்கு தெளிவிக்குக் திறத்தனவாயும், நூல் எழுதும் முறைமையினையும் ஒரு பொருள் பற்றிப் பேசும் முறைமையினையும் போதிப்பனவாயு மிலங்குவனவாம். ஆதலின், அவையிற்றினை முறையின் உணர்ந்தார், தாம் சொல்லவல்ல தொன்றனை ஆன்றவர் அவைக்கண் சொல்லுமிடத்து அவைக்குத் தம் மடக்கங்கூறி, அவையியல் புணர்ந்து, கேட்பார்ப் பிணிக்கும் வகையிற் சொல்வனவற்றைச் சொல் முறைமையிற் சொல்லித் தம் மறிவு புலப்படுத்தியவரா யடங்குபவராவர்.

 

மேற்கூறியவாறே அறிவானமைந்த ஆன்றோர், தாம் உளராய காலத்தே யன்றித் தமக்குப் பின்னும் தம் புகழுடம்பை நிலவரைக்கண் நிறுவவல்ல நூற்களைச் சொற்பொலிவானும், பொருட்செறிவானும், பொலிந்து தோன்ற வியற்றினர்; அவர் தந்த தண்டமிழ் நூற்கண்காணும் செய்யுட்கள் இத்துறைளாற் சிறந்தன " வென்பது,


 ''புவியினுக் கணியா யான்ற பொருடந்து புலத்திற் றாகி
 அவியகத் துறைக டாங்கி யைந்திணை நெறி யளாவிச்
 சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமுந் தழுவிச் சான்றோர்
 கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார்''    
(கம் ஆர - சூர். 1)

 

எனக் கம்பர், கோதாவரியின் சிறப்பினை விளக்குதற்கு அவ்யாற்றினுக்கும் ஆன்றவர் கவியினுக்கும் சிலேடை வகையினிற் பொருள் பயக்கும் இச்செய்யுள் கூறியவதனானே யுணரக் கிடப்பதாம். இக்காட்டுச் செய்யுட் கிலக்கியமாம் செய்யுட்கள் பலவற்றை முன்னவர் செய்யுந்திறத்த நுண்ணறிவு பெற்றவரேனும் தம் அடக்கம் கூறா தொழிந் தனரோ? தம்மினும் வல்லுநருளராவரென்ற வுணர்வானும், கூறுதல் இலக்கணமாம் என்னும் அறிவானும்,

"கற்பா லுமிழ்ந்த மணியும் கழுவாதுவிட்டால்
 நற்பா வழியும் நகைவெண்மதி போல் நிறைந்த
 சொற்பா லுமிழ்ந்த மறுவும் மதியாற் கழூஉவிப்
 பொற்பா விழைத்துக் கொளற்பாலர் புலமை மிக்கார்''
    (சீவ - அவையடக்கம்)

 

எனத் திருத்தக்கதேவர், தம் அடக்கம் கூறியது போன்று ஒவ்வொருவரும் தந்தம் நூற்கண் தத்தம் கருத்து வழி யவையடக்கம் கூறினரன்றே. கூறிய அடிப்பட்ட சான்றோர் நெறிப்பட்டு ஒழுகும் குணத்தவர், அப்பெரியார்தம் ஒழுக்கமாம் அவையடக்கம் கூறுதலையும் தமக்கும் ஒழுக்கமாகக் கொள்ளாதொழிவரோ! ஆதலின் அவைக்கண் ஒன்றனைச் சொல்லப் புகு மெல்லைக்கண் ஒருவர், 'வல்லாதன சொல்லினும் அவற்றை ஆராய்ந்து கொண்மினென அவை யகத்தாரெல்லாருக்கும் வழிபடு கிளவி சொல்லுதல் அவையடக்கு '(தொல் பொரு - செய் - 113. உரை) என்றவாறு அவையடக்கத்தினைக் கூறுவாராதல் வேண்டுவதாகும். ஆகுமது,

 

"அவையடக் கியலே யரில் தபத் தெரியின்
 வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின் என் றெல்லா
 மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே "
               (தொல் பொருள் - செய் 113)

 

என்றது கொண்டும் துணியப்படும். அங்ஙனம் அவையடக்கம் கூறியவழி அவை யியல்பு உணர்தல் வேண்டப்படுவ தாகும்.

 

ஒருவர், ஒரு பொருள் பற்றிப் பேசுவது அவைக்கண்ணே யாதலின் தாம் சொல்வது கேட்கும் அவையினியல்பினை முன் அறிந்து கோடல் வேண்டும். அவைதான் புல்லவை, நல்லவை யென விருதிறத்ததாகும். புல்லவையாயின் அது தன் தன்மையினால் சொல்வார்தம் சொற் பொருள்களை யறியாது, சொல்லினாரை யிகழ்ந்துரைக்கும் இயல்பினதாகும். ஆதலின் புல்லவைக்கண் ஒன்று சொல்லினார் அவ்வவையானே இகழப்படுவாராவர். அன்றியும் அவர், நல்லவைக்கண் இருத்தற்குரியாரானும் 'இவன்
அவையறியாது இது தன்னைச் சொல்லினன். இவன் அறிவிருந்தாவாறென்னே!' எனக் குறை கூறவும்படுவார். ஆகவே ஒருவர், புல்லவைக்கண் ஒன்று சொல்லின், அவரை, பொருளறியாமையான் அவ்வவையும், அவையறியாமை நோக்கி நல்லவையும் இகழ்தலின், தாழ்ந்தாரவைக்கண் ஒன்று சொல்லுதலாகா தென்பது தானே பெறப்படுவதாம். பெறப்படுதல்,


 ''அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த
 ரல்லாமுற் கோட்டி கொளல்.''
                         (குற - அவையறி. 10)

 

என்றதனானும், அதன் உரையில், பரிமேலழகர். நல்லார், தம் மினத்தா ரல்லாதா ரவைக்கண் ஒன்றனையுஞ் சொல்லற்க; சொல்லின் அது தூய்தல்லாத முற்றத்தின்கணுக்க அமிழ்தினை யொக்கும்' எனக் கூறுதலானும் தெளியப்படும். நல்லவையோ வெனின் சொல்வார் தமது சொல்லின் திறம் கண்டு மகிழுமாதலின், பன்னூல்களையும் ஆய்ந்து அவற்றின் பயனை யாராய்ந்த கல்வியுடையார், அவ்வவைக்கண் சொல்லுதலானே, அவர்தம் அறிவுடைமை யெல்லார்க்கும் விளங்கித்தோன்றும். தோன்றுதல்,

"கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச்
 சொற்றெரிதல் வல்லா ரகத்து''
                         (குற - அவையறி. 7)

 

என்றதால் அறியத்தக்கதாம். ஆகவே புல்லவை நல்லவைகளின் தன்மை யுணர்ந்து நல்லவைக்கண்ணே சொல்லுஞ் சொல் பயன் பெறுவதாதலின் ஒன்று சொல்வார் அவை யியல்பு உணர்வாராதல் வேண்டும். இனி அவையார்ப் பிணிக்கும் வகையில் சொல்வனவற்றைச் சொல்லுந் திறம் பேசுவாம்:

 

உணர்வார்முன் ஒருவர், ஒன்று சொல்லுதல் அவர்க்குத் தம்மறிவு தோற்றித் தாம் அவரான் நன்கு மதிக்கப்படுவாராதற்காதலின், ஒன்றனைச் சொல்லுமவர்க்குக் கேட்பாரைப் பிணித்தல் அறிவுடையரான் வேண்டப்படுவ தொன்றாகும். ஒருவர், கேட்பார்ப் பிணித்தலாவது, அவையகத்தார்தம் உள்ளம் கொள்வன சொல்லுதலானே, அவ்வவையினர் தாம் சொல்வனவற்றை விழைந்து கேட்பாராக அவர்தம் மனம் தம் சொல்வழி தொடரச் சொல்லுதலாம். கேட்பார் மனம் தொடரச் சொல்லுதலாவது, ஒருவர், தாம் கசடறக்கற்றுச் சொல்ல வல்லதொரு பொருளைச் சொல்லுதற்கண் அவையினை நோக்கித் தாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லினையும் தெளிவாக அவையிலுள்ளார் கேட்கவும், பொருள் தோன்றச் சொல்லொடு சொல்லினைச் சார்த்தியும், அவற்றைக் கேட்பார் தொடர்வாராகவும், அவையல் கிளவிகளை யொழித்தும் தம் துணிபுக்கு ஆதாரமான கூற்றுக் களைச் சொல்லுதற்கண் விரைந்து சொல்லுதலை ஒழித்துக் கேட்பார் எளிதிற் கேட்கவும் சொல்லுதலாம். மற்றும் ஒன்றனைப்பற்றிய வளவிற் பல படித்தான அபிப்பிராய பேதங்கள் பல விருத்தல் இயல்பாதலினானும், ஒருவர் சர்வமும் உணர்ந்திருத்தல் கூடாமையானும், ஒருவர் தம் முடிபே பிறர் கொள்ளத் தக்கதெனினும் அம்முடியினையும் பிறர்கொள்ளும் முறைமையின் கொளுத்தல் வேண்டுதலானும், ஒருவர், கேட்பார் மனம் அழுங்கவும், தம் வீறு தோன்றவும், 'இன்னார் இவ்விடத்துப் பிழைத்தார், இவர் இச் சிறுபொருள் அறியாராயினர், இவர் இதனை உணர்த்தவும் உணராராயினர்' என்ற இன்னோரன்ன பொருள் தருவனவற்றை வெளிப்படையாக வேனும், குறிப்பாக வேனும் ஒருவரைச்சுட்டி, அவர்க்கு இழிவுண்டாக மறந்தும் சொல்லாமையும் சொல்லும் முறைமையின்பாற் படுவதாகும்.

 

இனித் தமிழினைக் கற்றாருட் பெரும்பாலார், ஒரு கூட்டத்தின்கண் சொற்பொழிவு நிகழ்த்துதல் குறித்து ஒரு சிறிது கூறுவாம். ஒரு சிலர் அவையடக்கம் கூறுங்காலத்தே அது கூறுதல் தமக்கு வேண்டாவென்ற வெண்ணத்தினாலோ, தமக்கு நிகராவார் அவ்வவைக்கண் இலர் என்ற செருக்காலோ கூறியும் கூறாததுமாகக் கூறுவர். சிலர் சொல்வன சொல்லி முடிக்கும் பொழுதில் இரண்டொருவர்க்கே தெரிய முணுமுணுத்துச் செல்வர். மற்றுஞ் சிலரோ கூறுஞ் சிரமத்திற்கே ஆளாகாமல் ஈண்டுக் கூறிய சிலரை நோக்க நல்லவராகி விடுகின்றனர். அவையடக்கம் கூறும் முறைமை இவ்வாறாக, மேல் பேசும் முறைமையினைப் பேசின் அது பேசுந்திறத்தள விற்படாத முறைமையினதாகும். ஒருவர் அவைக்கண்ணே ஒன்றைப் பேசும் எண்ணத்துடன் வந்திருப்பாராயினும் பேசப்புகுபொழுதில் அந்நோக்கமொழிய, அதுகாலை அவைத்தலைமை வகிக்குமவரையோ, தம்மருகிற் றம்கண்ணிற்குப் புலமாவராம் இரண்டொருவரையோ நோக்கிப் பேசுவாராகின்றனர். மேல் அவர் சொற்களையெடுத்துச் சொல்லுதலோ வெனின் சொல்லுஞ் சொற்கள் தாமும் அவர் தமக்கு அருகில் இருப்பார் தம் செவிக்கே எட்டாமற் போவனவாம். அவர்க்கே அங்ஙனமாயின் எட்டியிருப்பார் தமக்கு அவை எட்டும் தன்மையினைச் சொல்லாமலே ஒழித்தல் நன்றன்றோ?

 

இனிப் பேசுநர், பேசும் ஆட்சிச் சொற்களைக் கவனிப்பாம்: பேசுநர் தாம் இன்ன வின்ன சொற்களையே யாளுதல் வேண்டும் எனக் கற்றும் கேட்டு மிருப்பாராயினும் பேசுங்காலையில் தம்மனம் போனவாறே,


“அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்''          (தொல் - சொல் - எச். 46)

 

எனும் சூத்திரக் கருத்தும் நோக்காமே இடக்கர் மொழிகளையும், இறப்பவிழிந்த உவமைகளையும் பேசும் பொருளுக் கேலா மேற்கோள்களையும் விரைவின் வாரி யெறிவாராவர். மற்றும் அவர் மேற்கோள் சூத்திரங்களையும் செய்யுட்களையும் தாம் எவ்வளவினும் விரைந்து சொல்லு மாற்றலுடையார் என்பது ஒன்றே கேட்பார்க்குத் தோன்ற அவையிற்றைச் சொல்லவும் பழகியவராகின்றனர். சொல்லும் பிரயோகங்களின் வார்த்தைகளையும் அடிகளையும் தம்மிஷ்டமே போலத் திரித்துக் கூறவும் அவர் முற்படுவாராகின்றனர். அவ்வாறு அவர் முற்படுவதற்குக் காரணம், தாம் சொல்வது வேதவாக்கென அவைகொள்ளும் என்ற கொள்கையோ? கேட்பார் அவற்றைத் தேடியாயுந் திறத்தவரல்லர் என்ற கருத்தோ? ஆயார் என்பதோ? பிறிதோ? அதனை அவரே அறிவர் அல்லது பிறர் அறியார். பிறர் அறியும் எண்ண த்தவராயின் அவர் தம் அறிவுக்கு, அவர்தம் செருக்கொன்றே காரணமென்பது புலனாவதாகும்.

 

சிலர் தாம் கண்டதொரு கருத்திற்குப் பிறர் ஒருவர் கண்ட கருத்து மாறுபடுவதாயின், தாம் மற்றொன்றனை விரித்துரைக்கும் அவைக்கண் அக்கருத்தினை எவ்வாற்றலினாலேனும் புகவட்டு அக்கருத்துடையாரை யிகழ்தலையே பயனாகக் கொள்வர். கொள்ளுமவர் ஒருவர் இல்லாவிடத்து அவரைக் குறை கூறுதற்குப் புகுமுன்,


 "அறங்கூறா னல்ல செயினு மொருவன்
 புறங்கூறா னென்ற லினிது''         
                        (குற - புறங் - 1)

 

என்னு மிதனைக் கருதுவாராயின் குறை கூறுதலான் வரும் பழிபாவங்களுக்கு ஆளாவரோ? தம்மிடத்த குற்றங்களை யாய்ந்து அவை தம்முள் தாம் உளையுந் திறத்தவற்றைப் பிறருங் கூறுவாராவர் என்னும் உணர்வு தோன்றுதலானே அங்ஙனம் பிறரை இகழாமலன்றே ஒழிவா ராவார்.

 

இனி ஒரு சாரார், தாம் ஒன்றில் வல்லுநராயின் தாம் வல்லது அவ்வொன்றே தாம் காணும் எந்நூலினும் உளதாகக் கொண்டு "இந்நூல் கூறுவதும் இதுவே; அந்நூல் கூறுவதும் அதுவே'எனப் பயன் கூறி முடிப்பாராவர். இவ்வகை முடித்தல் தான், கேட்டார்,


 ''.................... வெளியார்முன்
 வாண்சுதை வண்ணங் கொளல்'
                        (குற அவையறி. 4)

 

என்றது கொண்டு வாளாவிருத்தற் பயனைக் காட்ட வல்லதாம்.

இதுவரை கூறியவற்றான், அவைக்கண் ஒன்று சொல்லுதலான் அவ்வவைதான் தரு மேம்பாடு கொள்ள விழையுநர் அவைக்கு அடக்கம் கூறி, அவை நோக்கிச் சொல்லவல்லவற்றைச் சொல்முறையில் கேட்பார் மனங் கொளச் சொல்வாராயின் தம் விழைவு முற்றித்தா அறியாதனவும் அறிவுடையரான் அறிந்து மேம்படுவாராவர் என்பது தெளிவாம். இது,


 "கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் சாங்கற்ற
 மி. காருண்மிக 5 கொளல்''
                            (குறள் அவையஞ். 4)

 

என்பதனாற் றேற்றமாம்.


 N திருவேங்கடத்தையங்கார், தமிழ்ப்பண்டிதர்
 
C. R. C. High School, Purasawalkam

 

ஆனந்த போதினி – 1926 ௵ - மார்ச்சு ௴

 

No comments:

Post a Comment