Wednesday, September 2, 2020

 

தமிழினருமை

 

[நாளிது, தைத்திங்கள் 14 - ம்தேதி, ஓமலூர்'' சன்மார்க்க சங்கத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் திரட்டு]

 

மொழி.

 

"தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு என்றபடி, உலகிலுள்ள மாந்தர்கள் தத்தம் உள்ளக் குறிப்பினைப் பிறருக்கறிவிக்குங் குறிப்பொ லியே பல் வேறிடங்களிலும் பல்வேறு பாஷைகளாய் வழங்கி வருகின்ற தென்பர் அறிஞர். இப்பலதிறப்பட்ட பாஷைகள் ஏற்படாமுன்னம், உல கின் மக்களனைவரும் கைச்சைகைகளாலும், மற்று, அபிநயங்களாலுமே பிறர் பிறருணர்வினை யறிந்தனர் என்பது ஆராய்ச்சியாளர் கொள்கை. இஃ திங்கனமாக,

 

பல திறப்பட்ட மொழிகளினுள்ளே மிகப்பழமையானவை இரண்டே பாஷைகளென்பர் ஆராய்ச்சியாளர். இவ்விரு மொழிகளும் இறைவனால் உண்டாக்கப் பெற்றன என்பது புராண அபிமதம். இக்கடவுண் மொழிகள் முறையே சமஸ்கிருதமும் தமிழுமாம். இவை, வட இந்தியர்கள் வழங்குவதால் வடமொழி என்றும், தென்னிந்தியர்கள் வழங்குவதால் தென்மொழி யென்றும் முறையே பெயர் பெற்றன. ஏனைய உரியா, வங்காளி, இந்தி முத சள விய பாஷைகள் வடமொழித் தாதுவினின்று பிறந்தன வென்றும், மற்றைய தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியன தென்மொழியாம் தமிழினின்றும் தோன்றிய பிரிவுப் பாஷைகளென்றும் கூறப்படும். எங்ஙனமாயினும் தாய்ப்பாஷைகள் அவ்விரண்டு முதுமொழி (பாஷை) களே என்பது தேற்றமாகின்றது. நிற்ப, இங்கு நாம் தென்னாட்டவராகலின், தென்மொழியாகிய நமது தமிழ்ப்பாஷையின் உயர்தனி வளத்தைச் சிறிது ஆராய்வது அவசியமாம்.


 
எழுத்தாக்கம்.

 

நமது மூதாதைகள், தங்களருமைக் குழந்தைகளாகிய நம்மீது காட்டிப் போன பேரன்பு நந்தம் தமிழ்மொழி எழுத்துக்களை நோக்கினால் தெளிவாகும். நமது பெரியோர்கள், பிறர் வருத்தஞ் சகியாப் பேரறிவாளர் என்பதும் வெள்ளிடைமலை போல் விளங்குகின்றது. எவ்வாறெனில்: - அவர், வழி நடக்கும் பிரயாணிகள், தங்கள் தங்களின் நடையலுப் பொழித்துக்களை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வழிமுழுதும் ஆங்காங்கே தங்குமிடங்களும், நிழலமைதிகளும், ஏனை வசதிகளும் செய்திருப்பது போலவே, தம்மக்களாகிய நாமும் நமது சந்ததிச் சிறார்களும் பேச்சு மாத்திரையிலும் - ஏன்? - மூச்சுமாத்திரையிலுங்கூட சிறிதும் சிரமம் அடையாவண்ணம், அத்துணை நயமாகவும் அருமையாகவும் நம்மைப் பாராட்டி, அமுதனைய தமிழினைப் புகட்ட நேர்ந்தனர் என்பதைத் தமிழ்மொழி எழுத்துக்களிலே நன்கு காணலாம். பாருங்கள்! அந்தோ! குழந்தை சிரமமடைந்து விட்டானே என்ற குறிப்பு விளங்கச் சற்று மூச்சையிறுக்கி "அ'' என உச்சரிக்குமாறு முதலில் அகரத்தையும், சிரமசாந்தி செய்விப்பது போன்று ஆறுதலளிக்குந் தன்மையில், நெட்டுயிர்ப்பில் " ஆ'' என்னும் குறிப்புவிளங்க இரண்டாவது ஆகாரத்தையும் அமைத்திருக்கின்றார்கள். இப்படியே உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டனையும் நோக்குங்கள்! மூச்சைக் குறுக்கி யுச்சரிப்பவை ஐந் தும் தாராளமாக உச்சரிக்கலானவை ஏழுமாக வைத்திருக்கின்றார்கள். இதனால் நமது பெரியோர் எவ்வளவு அருமையாக நமக்கு நமது மொழியினை ஊட்டியிருக்கின்றார்கள் என்பதும், நமக்கு ஒரு அணுத்துணையேனும் சிரமம் நேராதபடி கவனித்து வந்திருக்கின்றார்கள் என்பதும் விளங்க வில்லையா?

 

மொழியாசிரியர்கள் முதலில் எழுத்துக்களை எப்படி எழுதியிருப்பினும், நாம் அவர்களைக் கண்டிக்கப் போவதில்லை. அவர்கள், உயிர்ப்புச்சுருக்குங் குற்றெழுத்துக்களையெல்லாம் முன்னர்க்கூறி, பின்னர் ஒரே அடியாக நெடுமூச் செழுத்துக்களை ஆக்கியுமிருக்கலாம் அன்றோ? அப்படிச் செய்வது சிரமமென எண்ணியே குறிலின் பின் நெடி லமைத்திருக்கின்றனர்.

 

அவர்கள் முன்னர் உயிரெழுத்திற் சிறிது சிறிது மூச்சை விறுக்கிக் கஷ்டமுறாது பயின்ற பின்னரே மற்ற எழுத்துக்களை வித்தியார்த்திகள் கற்குமாறு வகுத்திருக்கின்றார்கள். இம்முறைவைப்பு ஏனைப் பாஷைகட்கு இத்துணை நயம் தரும் விதத்தில் இல்லையென்றே சொல்லலாம். இன்னும் கவனியுங்கள்! வல்லெழுத்தும், மெல்லெழுத்தும் விரவிப்பயின்று இறுதியாக நாம் இடையெழுத்துக்களை மத்திய சிரம நிலையிற் பயிலவைத் திருக்கிறார்கள். இனி, இத்துணை அருஞ்சிறப்பின் எழுத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நமது பாஷையின் பெயரும் அதன் அமைப்பாதியவும் கவனித்தற் குரியவையன்றோ? நம் மொழியின் பெயரும் மேற்கூறியவாறே நயங்கொண்டு அப்பெயர் மாத்திரையானே தனக்குள்ள பல நலங்களையும் பொலிவினையும் அடக்கிக்கொண்டு, மிகச்செட்டாய் அதாவது ஒரு சிறு பதமாய் மூன்றே எழுத்துக்கொண்டாகியதாய், ஆன்ற பொருள்களைத் தருவதாய் 'தமிழ்' என விளங்குகின்றமை, நினைக்கும் போதே, சொல்லும் போதே, நமதுள்ளத்திற்கும் நாவுக்கும் கேட்போர் செவிக்கும் ஒருவகையான தெய்வமணம், தெய்வீக இன்பம் தரவில்லையா? இது குறித்தன்றோ பெரியாரொருவர்:

 

"xx தமிழ், வரைந்த ஏட்டைத்
 தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும் நாமணக்கும்
 துணிந்தவ் வேட்டை;
 நட்டாலும் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே! xx'


 என்கின்றார்.

''தமிழ்'' என்பதன் முதலாமெழுத்து வல்லினத்தது. இரண்டாவது மெல்லினம் ஆறினுள் ஒன்றாயது. ஈற்றெழுத்தோ இடையெழுத்து. இது, முறையே: க + க + 2 ஆக உ, மாத்திரை யளவுடைய பெயராய் விளங்குவது. இம்மட்டோ? இனிமை என்னும் பொருளைத் தனக்காகவே கொண் ஒள்ளதுமாம். ஆகவே தமிழென்பது இனிமை மிக்க பாஷைக்காயிற் றென்பர் அறிஞர். தமிழ் என்பது பண்பாகு பெயர். அதாவது இனிமை வாய்ந்த குணத்தால் ஏற்பட்டது. சிந்தாமணியில் திருத்தக்கதேவர் ஓரிடத்தில் '' தமிழ் தழீஇய சாயலவர்'' என்று கூறிப்போந்தமைக்கு உரைவிரித்த நச்சினார்க்கினியர் "இனிமை தழுவிய சாயலுடைய பெண் மணிக” ளெனக் குறித்திருப்பது இதற்குத் தக்க ஆதாரமாகும். மேலும்,

 

இப்பதத்தினைச் சிதைவுபடுத்தி, 'தமி + ழ்' எனக்கொண்டு: தமி = தனக்கொப்புமை யிலாத (தனித்த), = (இப்பாஷைக்கே) சிறந்துள்ள, ழ் என்னும் எழுத்தைக் கொண்டு விளங்குவது என்பதும் ஒருசாரார் கொள்கை. எனவே 'தமிழ்'' ஆனது தன்னகத்தே வல்லோசையும் மெல்லோசையும் இடைப்பட்ட ஓசையும் சிறந்திருத்தலின் அம் மூவோசையினினிமையால் தமிழெனப் பட்டதென்பதும் சிறந்தத் தன்மை வாய்ந்ததாய் தனக்கு ஒப்பும் உயர்வுமின்றித் திகழ்வதென்பதும், மிக்கு இனிமையே தனதுருவமாக உடையதென்பதும் பெறப்பட்டது.

 

ஆராயின், இம்மொழி வடமொழியினைக் காட்டிலும் எழுத்தாக்கத்திலும் சொல்லமைப்பிலும் உயிர்ப்புச் செட்டிலும் மிகவும் மேம்பாடுடையது என்பர் அறிஞர். ஒருசிறு குறிப்பை உணர்த்துவதற்கு வடமொழியில், உறுமலும், அதட்டலும், கர்ச்சனையும் ஆகிய இவற்றால் பிராணவாய்வு (உயிர்ப் புச்செட்டு) அதிகம் செலவாதலும் காண்கிறோம் வடமொழியில் ஒரு வாக்கியத்திற் களிக்கும் சக்தியானது தமிழ்மொழியிற் பலவாக்கியங்களைப் பேசுவதற்குக் கூட செலவாவதில்லை என்பதை, திருவாளர், பா. வே. மாணிக்க நாயக்கரவர்கள் சென்னையில் முன்னொரு காலை, தோற்கருவிகொண்டு
நிரூபித்ததனால் அறியலாகும். ஆகவே தமிழ் வடமொழியினுஞ் சிறப்புடையதென்றல் மிகையாகாது. ஆன்ற அறிஞர் வடமொழிக்கு வெகுவாய் முற்பட்ட காலந்தொடங்கி இருப்பது தமிழ்மொழியே என்றும், வட மொழிக்குந் தாய்ப்பாஷையாய் விளங்கும் பெருமையுடையது அதுவே என்றும் கூறுவர். இதனைத் தமிழ்ப்பெருமை கூறவந்த, காலஞ்சென்ற திருவாளர்: மாகறல் - கார்த்திகேய முதலியாரவர்களின் குறிப்பைக் கொண்டு தெளிக. அது வருமாறு:

 

"தமிழ், உலகத்து முதல் முதலுண்டாய இயற்கை மொழி; சிறுசிறு சொற்களையுடையது; நோய் கொண்டோர், சிறுவர் முதலோர்க்கும் உச்சரித்தற்கு எளிமையானது; கன்னடம் தெலுங்கு முதலிய பலபல பாஷைகளுக்கும் முதன் மொழியாகவுள்ளது; வேதங்களுக்கு நெடிதுகால முற்பட்டது; சிவன், திருமால் முதலோரும் பேசும் பெருமையுடையது; ஏகாட் சரமந்திர முதலியவற்றாற் சிறந்தது; தனக்கு மேலொரு பாஷையுமில்லாதது; ஆரியத்தோ டொருப்பட்டது; யோக மொழியாக வுள்ளது; காரணச் சொற்களையே தனக்கு உரிமையாகக் கொண்டுள்ளது; இமயகூட முதலிய சத்தகூடங்களிலும் வளர்ச்சி பெற்றுள்ளது; சுருங்கக்கூற லென்னும் அழகில் விரிந்த பொருட்பொதி வுள்ளது; மனதின தோற்றங்களை வெளியிடுவதற்கு நுணுக்கமாகவும் தத்துவ வகையாகவும் அமைந்த சொற்பொலி வுடையது; மனோபாவனைக் கேற்ற செம்பாகமும் தாரக்கீக வழக்குமுடையது; இன்பந்தரும் வைதர்ப்ப நெறியாற் சிறந்தது; மனத்தின் தோற்றத்தைத் தெளிவாகக் கூறுவதற்கு ஏற்றவலிமையும் தரற்பாலது; யாழுக் கமைந்த பண்ணின் அழகுடையது; ஆரியம், கிரீக்கு முதலியவற்றிலும் கலந்துள்ளது, ஆரியத்துக்கு நெடிதுகால முற்பட்டது; அதற்குத் தாய் மொழியுமாம்; மற்றும் இதன் பெருமைகள் அளவில்லன '(செந்தமிழ்ச் செல்வி - சிலம்பு : 2, பக்கம். 390)

 

இஃது ஆராய்ச்சிக்குரியது. இனி மேற் சில பொருள்களை ஆராய்வாம்.

சொல் நயம்.

 

முற்கூறிய உயிர்ப்புச் செட்டுடன் சொற்செட்டும் உடையது நம் தமிழ்மொழி யென்பதை மறந்திருக்கமுடியாது. இது, சொல் செட்டாய்வழங்கும் நயம் மிக்குடையதாதலாற்றான் ஆசிரியர்கள் தமிழ்நூலெழுதுந்தோறும் தங்களின் பரந்த கருத்துக்களை யெல்லாம் குறுகிய சொற்களிலேயே அமைத்துப் போந்துள்ளார்கள். அவர்கள் அவ்வாறு இயைக்காமற் பிற மொழியாளர்களைப் போன்று வழவழப்பாக நீட்டிப்பயின்று போயிருப்பின் நமதறிவு வளர்சிக்கும், அது மிக வுண்டாக்கும் நந்தமிழ் மொழிச் சிறப்பிற்கும் ஏது குன்றிப் போயிருக்கும் நமது மொழி, தெய்வத்தன்மை வாய்ந்த தாகலின் வரநேரும் இடையூறுகளுக் கிடங் கொடுக்காது மிளிர்வதாகின்றது. நிற்ப, சொற் செட்டுடைமையே பாஷைகளுக்கு அழகு தருவதாம். அதுவே பாஷைகளிற் பொக்கிஷத்தன்மை வாய்ந்திலங்குவது. இது குறித்தே: 'சொல்வளம், மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத் துஞ், செல்வம்'' என்பர் குமரகுருபர சுவாமிகள். ஆனதால் எம்மொழி சொற்செட்டோடு பிறங்குகின்றதோ அம்மொழியே உலகிற் றலை சிறந்த மொழியாக மேம்பட்டு விளங்கும். இப்பெருமை நமது அருந்தமிழ் மொழிக்கு மிக்கு வாய்த்திருப்பதற்குச் சில உதாரணம் தருகின்றோம்.


சுகவனம். சிவப்பிரகாசன்,

 தமிழ்ப்பண்டிதர், காவேரிப்பட்டணம்,

 

ஆனந்த போதினி – 1925 ௵ - அக்டோபர் ௴

 

 

 

No comments:

Post a Comment