Wednesday, September 2, 2020

 

தமிழின் நிலைமை

      உத்தம மதிப்புக்கு ஒத்ததாய் உயர்வுபெற்றுள்ள பரதகண்டத்தில் திருவேங்கடத்தை வட எல்லையாகவு, கன்னியாகுமரியைத் தென் எல்லையாகவும், சமுத்திரத்தைக் கீழெல்லை மேலெல்லையாகவும் உடைய தென்னாடே தமிழ் வழங்கும் நாடாம். அதுபற்றியே தமிழ் தென்மொழி என்னும் பெயரை யடைந்துள்ளது. “தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு” என்பதை அனைவரும் அறிவர். அந்தந்த நாட்டார்க்கு ஆங்காங்கு வழங்கும் பாஷையே தாய்பாஷையாய் மேம்பாட்டுக் குரியதெனக் கருதப்படும். தாய்ப்பாஷை அல்லது தாய்மொழி என்பது தாயின் வாயிலாகக் குழந்தைகளுக்கு முதன் முதல் கற்பிக்கப்பட்டுவரும் மொழியாம். இவ்வாறு கற்பிக்கப்பட்டு வரும் ஒலிவடிவமாயுள்ள மொழியைச் செவியேற்றுக் குழந்தைகள் மழலைப்பேச்சிலிருந்து தேர்ந்த பிறகே தந்தையாலும் வித்தியா குருவாலும் வரிவடிவில் அம்மொழியைக் கற்று நாளடைவில் அறிவின் அபிவிர்த்தியைப் பெறுகின்றன. ஆகவே ஒவ்வொருவரும் தத்தமது தாய்மொழியில் பெரிதும் சிரத்தை வைக்கவேண்டியது அத்தியாவசிய மென்பதை நாம் கரதலாமலகம்போற் காண்கிறோம்.

 

      தாய்மொழியைக் கவனியாது பிறமொழியைப் பாராட்ட முயலுவோர் “பெற்றதாய் வயிற்றினைப் பெருநோய் செய்வான் பிறந்தார்களே” என்னும் ஆன்றோர் கூற்றுக்குச் சான்றாவான்றோ? அன்றியும் அவர்களது இத்தகைய பாரபட்சமான செயலைக் கண்டு உலகம், அவர்க்ளை நோக்கி, நகையாடாமற் போமா? அறையிலாடி யல்லவா அம்பலத்துக்கு வரவேண்டும். “தனக்கு மிஞ்சி தருமம்” என்பதை நாம் மறந்துவிடலாமா? ஐயோ! “தன்னைப் பெற்றதாய் கிண்ணிப்பிச்சை எடுக்கிறாள், தம்பி கும்பகோணத்தில் தானதருமஞ்செய்கிறான்” என்னும் உலகாபவாத த்துக்குட்படவா நாம் தமிழ்த்தாய் வயிற்றில் ஜனித்தோம்! “பால்வாய்ப் பசுந்தமிழ்” என்ற சிறப்புப்பெயர் நமது அந்தமிலின்பச் செந்தமிழுக்கு எதுபற்றி வந்ததென்பதை நாம் சிறிது ஊன்றி நோக்குவோமாயின் அதன் அருமை பெருமைகள் இனிது புலப்படும். இளம்பிராயத்திலிருந்து நமக்குப் பயிற்றுப்பட்டு வருவதன் காரணமாகவே இதனைப் பசுந்தமிழ் என்றழைக்க நேர்ந்த தென்பது ஒருதலை.

     

      இத்தன்மையான “தழற்புரை சுடர்க் கடவுள்தந்த தமி” ழைப் பிரசித்தப்படுத்தி, அந் “நீண்டதமிழாலுலகை நேமியினளந்” து அவ் “என்றுமுள தென்றமிழியம்பி யிசைகொண்ட” அகத்திய முனிவரின் கிருபாவிசேஷம் கொண்டாடத்தக்கதே.

 

      இந்தச் சந்தத்தமிழின் தனிப்பெருஞ் சீரையும் புராதனத்தையும் பற்றிய விஷயம் அறிவாளர் பலரால் நமது “ஆனந்தபோதினி” சஞ்சிகைகளில் ஏற்கனவே வெளி வந்திருக்கிறதுமின்றி இதரபத்திரிகைகளின் வாயிலாகவும், பல்வேறு புத்தகவாயிலாகவும் தோன்றியும் தோன்றிக்கொண்டு மிருக்கிறது. அறிய அறிய முன்னை யறியாமை கண்டாற்போலக் காணப்படுதலின் இதனைக்குறித்து மேன் மேலும் பேச ஆசைமேலிடுகின்றது. நிற்க: -

 

      “ஆனைக்கும் அடிசரக்கும்” என்னும் பழமொழிப்படி தண்டமிழுக்கும் ஒருகாலத் தொருகுறை ஏற்பட்டதென்பர் சிலர். அதனை விளக்குதற்கு “சிவபிரான் பார்வதிதேவியாரைத் திருமணஞ் செய்து கொள்ளும் போது, தேவர் முனிவர்கள் ஒன்று கூடியிருந்தனர்; அச்சமயம் பூமி வடபக்கந்தாழ்ந்து தென்பக்கம் உயர்ந்தது; அதுகண்டு தேவர்கள் அதன் காரணம் யாதோவென்று விசுவகர்மாவைக் கேட்டனர்; விசுவகர்மா ‘உம்பர்காள்! இப்போது இங்குவந்திருக்கும் அகஸ்தியர் தென்றிசை செல்லுவாராயின் பூமி பழமைபோலாகும்’ என்றனன்; அவ்வாறே குறுமுனிவர் அத்திசைக்குப் போகும்படி நியமனம் உண்டாயிற்று; முனிவருக்கு இவ்வேற்பாடு மனஸ்தாபத்தை எழுப்ப அவர் விசுவகர்மாவைச் சபித்தனர்; விசுவகர்மாவும் அகஸ்தியரால் வளர்க்கப்பட்ட தமிழுக்குச் சாபமிட்ட்டனன்” என்றும், அச்சாபதோஷம் பகவானுடைய அனுக்கிரகத்தால் நிவர்த்தியாய், நால்வர், நாயன்மார், பன்னிருவராதி பெரியாரால் தமிழ்மறைகள் பாடப்பெற்று, கீர்வாணமறை தெளிவுறுத்தாத அர்த்தவிசேஷங்கள் யாவருக்கும் தெளிவுறுத்தப்பட்டன என்றும் கர்ண பரம்பரையாக வழங்கி வரும் கதை யொன்றுண்டு. இக்கதை எவ்வாறாயினுமாகுக.

 

      தமிழின் முன்னைய நிலைமை எவ்வாறிருந்த தென்பதையும், இப்போதுள்ள நிலைமை எவ்வளவிலிருக்கிற தென்பதையுங் கொஞ்சங் கவனிப்பாம்:

 

      “ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியம்” என்னும் தமிழ் நூலொன்றிருக்கிறது. இஃது இயல் நூலே; ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு அதாவது மதுரையம்பதியில் விளங்கிவந்த முச்சங்கத்துள் முதற் சங்கக்காலத்தில் வெளிப்போந்தது. இதனை வெளியிட்டவர் தமிழ்வரம்புகண்ட தொல்காப்பியராவர். இந்நூலின்கண், மக்களுக் குறுதி பயப்பனவாய அறம் பொருள் இன்பம் வீடென்னும் புருஷார்த்தங்கள் நான்கும் அகம் என்றும் புறமென்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அகப்பிரிவில் மக்கள் இந் நிலவுலகில் அன்பவித்தற்குரிய இன்பநிலையும், புறப்பிரிவில் அறம், பொருள், என்பவற்றின் தன்மையும், அறம், பொருள், இன்பங்களின் நிலையாமையும், வீட்டின் திறமும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வண்ணம் வேறு எம்மொழி இயல் நூலாரும் கூறவில்லை என்பது கண்கூடு.     

 

      மொழியாளரனைவர்க்கும் பொதுவான எழுத்து சொல் என்பவற்றின் ஆராய்ச்சியோடு சொல்லின் கருவியான பொருளாராய்ச்சி தொல்காப்பியரிடம் பெரிதும் பாராட்டற்குரியதா யமைந்திருக்கிறது. பொருளதிகாரத்தில் குறித்துள்ள கந்தழி முதலிய பதங்களை நாம் ஆழ்ந்து நோக்குவா மாயின் அக்காலத்தில் தமிழ் மக்களிடமிருந்த தெய்வ நம்பகம் நன்கு விளங்கும். அவர்களின் நிலையுஞ் சிறப்புற்றிருந்த தென்பதும் புலனாம். இவ்வாறு தமிழ்மக்கள் தொல்காப்பியர்காலத்திலேயே மேன்மையுற்றிருந்தனரென்றால் அவருக்கு முன்னிருந்த தமிழர் தத்துவ ஆராய்ச்சியில் பல்லாயிர வருடங்களுக்கு முன்னதாகவே உயர்தர நிலையைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பது வெளிப்படை. இது தமிழின் புராதனம் கால அளவு கடந்த தென்பதை அறிவிக்கின்றது.    

 

      இலக்கிய இலக்கணம், சமய நூல்கள், அரிய பொருள்களை யளித்தற்கேதுவாகிய சொற்கள் முதலியவையே ஒரு மொழியின் சிறப்பை எடுத்துக் காட்டுவதற்குப் பெருங்கருவி. அவ்வாறமைந்துள்ள மொழிகளுள் நமது தமிழ் மொழியே தலைமைபெறும்.

      தொல்காப்பியர் “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத் தொடு புணர்ந்த சொல்லாகும்மே”, “சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” என்னும் சூத்திரங்களால் வடமொழி தமிழில் வழங்கும் ஒழுங்கை அறுதியிட்டுள்ளார். வடமொழி எல்லோருக்கும் பொது மொழி. மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்த பழைய கவிஞர்கள் வட மொழியிலுந் தேர்ந்தவரா யிருந்தமையால் தமிழில் வடசொற் கலப்பு சிறிது நேரலாயிற்று. நாளேற வேற இக்கலப்பு செவிக்கினிமை தருவதாயிருப்பதாகத் தோன்றியபடி யாலும், தனித் தமிழ் இன்பம் கண்டு மகிழும் தலைவரின் தொகை குறைந்து கொண்டே வந்தமையாலும், வடமொழி வல்லார் மனக்களிப் பெய்த, தமிழில் பாட்டு உரை முதலியவை செய்ய வேண்டுமென்கிற ஆசை அதிகரித்து வந்தமையாலும் பொது சிறப்புகளால் ஆகிய வடமொழிகள் அனேகம் தமிழில் கலந்துவரலாயின.

 

      அன்றியும், தமிழ் மொழி வடமொழியினின்றும் உண்டாகவில்லை. திணை, பால் உணர்த்தும் வினை விகுதிகள் தமிழ் மொழிக்கிருத்தல் போன்று வடமொழிக்கில்லை. பால் வகுப்பு, நமது தமிழில் பொருள் நோக்கியும், வடமொழியில் சொல் நோக்கியும் இருக்கின்றது. ஆண் மகனைக் குறித்து வரும் வார்த்தைகளனைத்தும் ஆண் பாலாகவும் பெண்மகளைக் குறிப்பவை பெண்பாலாகவும் தமிழில் வழங்கும். இந்த வரையறை வடமொழியில் இல்லை.

 

      “சாற்றிப் தெய்வப் புலவோர் மொழிக்குந் தமிழ்மொழிக்கும்

      வேற்றுமை கூறிற் றிணைபா லுணர்த்தும் வினைவிகுதி

      மாற்றருந் தெய்வ மொழிக்கில்லை பேர்க்கெழு வாயுருபும்

      தேற்றிய லிங்கம் ஒரு மூன்று மில்லை செழுந்தமிழ்க்கே.”

 

என்று பிரயோக விவேகம் இவ்விரு மொழிக்கு முள்ள வேறு பாட்டைக் காட்டுகின்றது.

 

      மற்றும், “தமிழ் மொழிப் புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக் குறிப்பு, வினைத் தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகு பாடுகளும், அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும், குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோ ரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமை யானும்” என்று இரு மொழியிலும் புலமை மிக்க மாதவச் சிவஞான முனிவர் கூறுவதால் தமிழ் தனி மொழியென்பது தெற்றனப் புலனாம்.

 

      இன்னும் தமிழின் இயற்கைச் சுவைநலம் பொருந்திய இறையனாரகப் பொருள், பத்துப்பாட்டு, அகம், புறம், கலித்தொகை, திருக்குறள், தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம், சிலப்பதிகாரம், சிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம், சிவஞானபோதம், சிவஞானசித்தி, திருமந்திரம், முதலிய நூல்கள் நமது தமிழ்மொழியின் பெருமையை வெள்ளிடை மலைபோல் விளக்குகின்றன. இந்நூல்களில் ஈடுபட்டார் இதனை யறிவர்.

 

      இன்னும் சிறிய மொழிகளால் பெரிய கருத்தைத் தரக்கூடிய எழுத்துச்செட்டும், சுருக்கமான பதத்திடர்களால் பெருக்கம் வாய்ந்த உட்கோள்களை அறிவிக்கும் சொற்சொட்டும், மிகவுங் குறைவான மூச்சுச் செல்வால் ஒருவர் மற்றொருவருடன் பேசக்கூடிய உயிர்ப்புச் செட்டும், ஆண்மை, காதல், மருட்சி என்னும் பண்புகள் மூன்றையும் அவற்றின் வெவ்வேறு கலவை யுணர்ச்சியுடன் சொற்பொருள் தேடாமல் எழுத்தின் ஒசையைக் கொண்டே அறிதற்குரிய இசைச் செட்டும் நமது செந்தமிழ்க் கிருப்பதுபோல ஏனைய மொழிகளுக்கில்லை என்பது அறிஞர் துணிபு.

 

      பாடல்களின் இனிய முறையும் தமிழ் மொழிக்குச் செவ்வனே ஏற்பட்டிருக்கின்றது. சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய அழகுகள் தமிழ்ப்பாடலுக்குண்டு. தெய்வீகம் வாய்ந்த கவிவாணர்கள் பலர் தமிழ் நலத்தை வெளிப்படுத்தி வந்தனர். புலவரும் ஆனையும் புரவலரால் ஆதரிக்கப்பட்டு வரவேண்டு மென்னும் நியதியின்படி, சேர, சோழ, பாண்டியராகிய தமிழ் வேந்தர்களும், உதாரகுணம் வாய்ந்த தன்வந்தர்களும் கவி வல்லோரைக் கனப்படுத்திப் பாடல் பெற்று வந்தனர்.

 

      நூல்களின் மெய்மைக் கருத்தைத் தமது நுண்ணறிவாற் கண்டு யாவரும் அதிசயமும் ஆனந்தமும் கொள்ளும்படி உரை எழுதவல்ல இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், பரிமேலழகர், அடியார்க்குநல்லார் முதலிய மேதாவியரின் மகத்துவம் அளவிடற் பாலதன்று. ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலிய சிறு நூல்களில் பெருங் கருத்தை யடக்கி வெளியிட்ட கவீச்சுரியாகிய ஒளவைப் பெருமாட்டியின் ஒப்புயர்வற்ற திறமையை வியந்து பாராட்டாத தமிழபிமான முள்ள செல்வச் சீமான்கள் நமது நாட்டில் இருந்த துண்டோ? ஆதலினன்றே நமது நாடு புண்ணிய நாடென்னும் பெரும் பெயர் பூண்டது. இப்போது அம்மொழியிருக்கும் நிலைமையைச் சிறிது ஆராய்வாம்.

 

      இவ்வகைச் சிறப்புக்களால் மற்ற உலக மொழிகளைத் தோவியுறச் செய்யும் வன்மையைப் பெற்று எல்லாப் பொருள்களுக்கும் நடுவாகிய இயற்கை உண்மைகளைத் தனது இலக்கணத்தின் கண் திருத்தமாக அமையக் கொண்டுள்ள நமது தாய்மொழியின் நிலை இக்காலத்தில் மிகப் பரிதபிக்கக்கூடிய விதமா யிருக்கின்றது. இதன் நலங்காணாச் சிலர், வேற்றுமொழி சிறிது பயின்ற இறுமாப்பானும், நுண்ணுனர் வின்மையானும், “தமிழில் ஒரு சிறப்புமில்லை; அவ்வெற்று மொழியைக் கருநாடகப் புலவர் சிலரே கொண்டாடுகின்றனர்; அதில் என்னமோ எழுத்தாம், சொல்லாம், பொருளா, யாப்பாம், அணியாம், அகத்திணையாம், புறத்திணையாம், புணர்ச்சியாம், விகாரமாம், சந்தியாம், எழுவாயாம், பயனிலையாம், செயப்படுபொருளாம், பெயரெச்சமாம், வினையெச்சமாம், வினைமுற்றாம், வியங்கோளாம், அளபெடையாம், போலியாம், அட அட! எத்தனை இழவி; இந்த இழவெல்லாம் எதற்காக? இக்காலத்திற்குத் தகுதியாக எவருக்கும் தெரியும்படி எதையும் இலகுவான விதத்தில் எழுதாமல் கருநாடகக் கவிவாணர்கள் இவற்றையெல்லாம் கட்டிக்கொண்டழுகிறார்கள். இதுவன்றி, எப்பொழுது பார்த்தாலும் தருமமென்றும், நீதியென்றும் எழுதி ஏட்டை நிரப்புகிறார்கள். இக்காலத்திற்கு இந்நீதியெல்லாம் பயன்படுமா? வாழையை வாலை யென்று எழுதினாலென்ன? அது போனான் என்று எழுதினாலென்ன? எதுவும் நாம் வைத்துக் கொள்வது தானே; நாம் இஷ்டம் போல் ஒரு சொல் நடையை ஏற்படுத்திக் கொண்டு இப்போது உலகத்தில் அனுபவமாக நடக்கும் விஷயங்களை எழுதி வரவேண்டும்,” என்று தங்கள் இருண்மனத்தினெழுந்தவாறே எதையெதையோ பேசி, இனிய தமிழ்மொழியில் எழுத்துப்பிழை, சொற்பிழை, பிரயோகிக்கும் முறை பிறழ, ஆட்டுக்குஞ்சு, கோழிக்குட்டி, நீரைத் தின்றான், சோற்றைப் பருகினான் என்பன போன்ற பிரயோகங்களைப் புகுத்தி நூல்களெனவும், வியாசங்களெனவும் பலவற்றை எழுதிப் பரப்பி வருகின்றனர். முறைப்படி கற்றாரையும் கல்லாரெனக் கழறி அவமதிக்கின்றனர்.

 

      இக்கிளர்ச்சியால் தமிழ்நாடெங்கும் பிழை மிக்க தமிழே பெருகி வருகின்றது; உரை நடையும், செய்யுள் நடையும் சுருங்கி வருகின்றன. இச்சீர்கேடுகளைத் திருத்தி யமைக்க ஆங்காங்கே பல தமிழ்ச் சங்கங்கள் அரும்பாடுபட்டு உழைத்து வருகின்றன; தமிழறிந்த பல பெரியாரும் அரிய முயற்சி செய்து வருகின்றனர். எனினும், இக்குறைகள் நீங்கவில்லை. ஆதலின், தமிழ்மக்களாகிய நாம், நம் அன்னையாகிய தமிழ் மடந்தைக்கு, குறுகிய நோக்கமுள்ளார் சிலரால் நேரும் குறைகளை நீக்கிச் சீரும் சிறப்பும் செவ்விதிற் றழைத் தோங்கும் மார்க்கங்களைத் தேட வேண்டும்; பல தமிழ்ச்சங்கங்களை நிறுவ வேண்டும்; மாண்வர்களை முறைப்படி தமிழ்க்கல்வி பயிலுமாறு புரிய வேண்டும்; அச்சுப்பிரசுரங்கள் பிழையின்றி வெளிவரச் செய்தல் வேண்டும். இவற்றைச் செய்வோமாயின், நமது தமிழ் தழைக்கக்கூடும்; அன்றியும் நமது தமிழ்த்தாய்க்கு நாம் செய்ந்நன்றி மறவாதவர்க ளாவோம்; தமிழ் மக்களனைவருக்கும் தமது பாஷையில் ஊக்கம் அதிகரிக்கும்; தமிழ்நாடும் மேம்பாடடையும். தமிழ் மக்களாகிய நாம் நமது தாய்மொழியை ஆதரித்துச் சிறப்படைவோமாக. இறைவன் அருள்புரிக.

 

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - செப்டம்பர் ௴

 

 

 

 

No comments:

Post a Comment