Wednesday, September 2, 2020

 

தமிழின் பெருமையும், அதன் தற்கால நிலைமையும்

                                               

1.     "அரிதரிது மானிட ராதலரிது

            *     *     *     *     *

ஞானமுங் கல்வியும் நயத்தலரிது''

 

என நம் நரை மூதாட்டியார் நவின்றதை நாமறிவோம். நீர் சூழ்ந்த இவ் வுலகினிடத்து இருகண்களையொப்ப, மிக்கப் புகழுறும் மொழிகள் இரண்டே. அவைகள் யாவையெனில், வடமொழியுந் தென்மொழியுமே. இவ்விரு சொற்களும் தெய்வத்தன்மை பொருந்தி, இனிமை யுடையனவாகி, கற்போர்க்கு நீதிகளைப் புகட்டி, அவரை நல்வழிப்படுத்தி, சாந்த குணத்தைப் பற்றும்படிக்கு அவர்கள் நெஞ்சத்தில் பறையறைந்து, மேன் மைப்படுத்தும் தன்மையுடையன. இப்போது நாம் தென்மொழியின் சிறப்பையெடுத் தாராய்வோமாக: -


தமிழின் பொருள்.

 

2. இனிய தன்மை வாய்ந்த தமிழ் எனப் பெயர் புனைந்த தென் சொல்லிற்கு யாது பொருள் எனப் பார்க்கலாம். தென்தேயத்தின் கண்ணே இம்மொழி வழங்குதலால் தென்சொல் எனப் பெயர்பெற்றது. தன்னிடத்தடக்கிய இன்சொற்களுடைப் பனுவல்களால் மாநில மாந்தரை மகிழ்வித்து இன்பம் விளைக்கு மியல்பு வாய்ந்தமைபற்றித் தமிழ் என விம்மொழிக்குப் பெயர் புனையலாயிற்று. மற்றும், தென் சொல்லின் சிறப் புடை எழுத்துக்களாகிய ர, ழ, ள, ன என்னும் எழுத்துக்களில் ''ழ'' என்னும் ஒன்றையும் சேர்த்து இன்பம், இனிமை யெனப் பொருள் படுமாறு தமிழ் எனக் கூறினர். * "தமிழென்ப தினிமை நீர்மை" எனக் கூறப்படுத்தலானும், தமிழ் என்பதற்கு இனிமை, இன்பம், குணம், எனப் பொருள்படும் என வறிதலாகும்.

[* பதினோராம் நிகண்டு]

 

தமிழ் வந்தவாறு.

 

3. இத்தன்மையதான தென் சொல்லாகிய தமிழை, முதலில் சிவ பெருமான் பொதிய மலையில் தவஞ் செய்து கொண் டிருந்த அகத்தியமா முனிக்குக் கற்பித்தார். இதனையே,

 

"வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளியதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்துங்

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனில் 

கடல் வரைப்பி னிதன் பெருமை யாவரே கணித்தற் பாலார்''      (காஞ்சி புராணம்.)

 

என்பதனாலேயே இதன் பெருமை விளங்குவது காண்க. தமிழ்மக்கட் காகவும், சங்கத்தார்கட்காகவும் சிவபெருமான் அநேக உதவிகளைப் புரிந்ததாகக் கூறப்படும் விஷயம் திருவிளையாடற் புராணத்திலும் மற்றவைகளிலும் காணலாகும். மற்றும், தமிழில் பண்களால் துதிக்கப்பட்ட நாயன்மார்களது வாக்காலும் உணரலாம்.


தமிழ் நாடு.

 

4. இம்மொழி வழங்கும் நாட்டிற்குத் தமிழ் நாடு என்று பெயர். அவைகளாவன: - பாண்டிநாடு, சோழநாடு, சேரநாடு, நடுநாடு, தொண்டை நாடு என்பனவே. இவைகளில் முக்கியமாக வழங்கப்படுதலான முத்தமிழ் நாடாகிய சேர சோழபாண்டிய நாடுகளில் சோழநாட்டை நன்னூலார் கொடுந்தமிழ் நாட்டினில் ஒன்றாகச் சேர்த்து,


      ''தென் பாண்டி குட்டங் குடங் கற்காவேண் பூழி
     பன்றி யருவா அதன் வடக்கு - நன்றாய

சீதம் மலாடு புன்னாடு செந்தமிழ்சேர்
     ஏதமில் பன்னிருநா டெண்.''

 

எனக் கூறியிருப்பினும், சேரநாட்டுச் சரிதைகளாலும், தமிழ்ப் பாவலர் தமிழ்க் கவிவாணரைப் போற்றிக் கூறிய பாக்களாலும்,

 

"செந்தமிழ் மொழியைச் செல்வர் கூட்டுண்ண

நந்தலில் நூல்கள் நலம்பெற வருளிய

நடுநீர் மையினெம் நரை மூதாட்டி

தொடுநீர் வரைப்பிற் சோறுடைத் தென்னும்

தொல்சீர் பரவிய சோணாட்டின் கண்''

 
என நம் நரை மூதாட்டியாரால் புனைந்து கூறப்பட்டமையாலும், செந்தமிழ் வழங்கிய தேயமெனவே கொள்ளலாகும். பின்னும் நன்னூல் சிறப்புப் பாயிரத்தில்,


     " குணகடல் குமரி குடகம் வேங்கடம்

எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள் "

 

என்று கூறியுள்ளார். அதாவது கிழக்கே வங்காளக் குடாக்கடலையும் (Bay of Bengal) தெற்கே குமரிமுனையையும், மேற்கே குடகு மலையையும், வடக்கே திருவேங்கட மலையையும் எல்லையாகவமைத் துரைத்தார். மேற்கூறிய தமிழ் நாடுகளைத் தமிழ்வல்லவர்கள் புனைந்து கூறியதை, முக் கியமாகப் பாண்டி நாட்டையும், சோழ நாட்டையும், தொண்டை நாட்டையும், நடு நாட்டையும், சேர நாட்டையும் பற்றிக் கூறுகிற பாடல்களை ஆராயுங்காலத்து, தமிழரசர்கள் தமிழிலேயே அரசாங்கத்தை நடத்திய வகையும், நாட்டின் செழுமையையும் நன்கு புலப்படுத்தி யிருக்கின்றனர் என விளங்கும். முதலில் பாண்டி நாட்டை ஆராயுங் காலத்து திருவிளையாடல் புராணத்தில்,

 

"விடை யுகைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள்

வட மொழிக்குரைத் தாங்கியன் மலயமா முனிக்குத்
திட முறுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொல்

.. . ... … …   … . . .  ... வழுதிநாடன்றோ''

 

எனக் கூறியிருத்தலைக் காண்க. மற்றும் அருணாசல புராணத்தில்


     "தோடு கமழ் சந்தன வனத்திடைதி ளைந்தே
     நீடுதமி ழின்சுவை யளைந்து நெடு நாளா
     யாடுமயில் அன்னவர்க ளன்ன நடை போல

வாடைமிசைத் தென்றல் புகும் வையைவள நாடு'

 

அதாவது பூவிதழ் மணக்கும் சந்தனவனத்தின் மத்தியிற் சஞ்சரித்து, என்றுமுள தமிழின் மதுரம் அளைந்து நெடுநாளாய் ஆடுகின்ற மயில் போல, பெண்கள் நடைபோல வாடைக்காற்றோடு சம்பந்தமாகத் தென் றற்காற்று வருகின்ற வையையாறு பொருந்திய வளம் பெற்றது பாண்டி நாடு. மற்றும்


      ''வெவ்விருக ணாரிடையை மின்னென மருண்டே
       செவ்வி பெரு சேதகை செறிந்தலரு நாடு

 நவ்வியனை யாரளக நள்ளிருள தென்றே
       மவ்வலரு கேயலரும் வையைவள நாடு'


அதாவது, வெப்பமதைச் செய்யும் கண்களிரண்டையுமுடைய பெண்களினிடையைப் பார்த்து மின்னலென்று மயங்கி அழகு பொருந்திய தாழைகள் புஷ்பிக்கும் நாடு. மான் போன்ற மாதர்கள் கூந்தலைப்பார்த்து இருள் என்று நினைத்து முல்லைச்செடிகள் கரையில் புஷ்பிக்கும் வையை ஆற்றினால் வளம் பெற்ற பாண்டிநாடு எனப் புனைந்து கூறியதைப் பரக்கக் காணலாகும். மற்றும், மகாபாரதத்தில் அருச்சுனன் தீர்த்த யாத்திரைக்குச் செல்லுங்கால் பாண்டி நாட்டிற்கு வந்தான் என உரைக்கும் முன்னர் அதன் பெருமையைக் கூறுவதன் பொருட்டு –

 

வளவன்பதி முதலாக வயங்கும்பதி தோறும்
     துளவங்கம ழதிசீதள தோயங்கள் படிந்தே

யிள வண்டமிழ் எழுதேடுமுன் னெதிரேறிய துறை சூழ்
     தளவங்கமழ் புறவஞ்செறி தண்கூடல் புகுந்தான்''

 

என வில்லிப்புத்தூராழ்வாரால் கூறப்பட்டமை காண்க. இதனால் நாம் பாண்டி நாட்டினது வளமையும், புகழும் அறிந்தோம். இனிச் சோழநாடு என்றால், சோழநாட்டின் வளமையையும், தன்மையையும் நான் முதலிலேயே, ''செந்தமிழ் மொழியை'' என்ற பாட்டின்கண் வெளிப்படுத்தினேன்.

 

பிறகு தொண்டை நாட்டைப்பற்றிப் பார்க்குங்காலத்து, இத்தொண்டை நாட்டின்கண் மிக்க பக்தியுள்ள உண்மைச் சிவனடியார்களும், நற்பல நூல்களியற்றிய புலவர்களும் பிறந்துள்ளார். உதாரணம் பவணந்தி முனிவர்.

 
     " தன்னூர்ச் சனகையிற் சன்மதி மாமுனி தந்த மைந்தன்

நன்னூ லுரைத்த பவணந்தி மாமுனி நற்பதியும்
சின்னூ லுரைத்த குணவீர பண்டிதன் சேர்பதியும்

மன்னூ புரத்திரு வன்னமின்னே தொண்டை மண்டலமே''


எனவும், பின்னும் திருத்தொண்டர் புராணத்தில் திருக்குறிப்புத்தொண்டாது பிறப்பிடமாகிய தொண்டை மண்டலத்தைப் புகழ்கையில், சேக்கிழார் பெருமான்,

 

''நன்மை நீடிய நடுநிலை யொழுக்கத்து நயந்த
            தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப
       வன்மை யோங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பில்

தொன்மை மேன்மையின் நிகழ்பெருந் தொண்டை நன்னாடு "


எனக் கூறியிருப்பதும் காணலாகும். இவ்வாறே சேரநாடு நடுநாடு முதலிய நாடுகளும் புனைந்து கூறப்பட்டமை பற்பல நூல்களினின்றும் அறியலாகும். இத்தகைமையாக நீர்வளம், நிலவளம், குடிவளம், கோல்வளம், நிரம்பிப் பாவலர்களால் புனைந்து கூறப்பட்டது இத்தமிழ் நாடு.

 

பிரிவு: இயற்றமிழ். - இத்தகைமையதாகச் செழிய நாட்டின்கண் உலாவி வரும் தமிழ் மொழியானது மூன்று பிரிவினதாய், நாற்கவியுடைத்தாயிருக்கின்றது. அவையாவன: - இயற்றமிழ், இசைத்தமிழ், நாட கத்தமிழ் என்பவைகளே. நாற்கவிகளாவன: - ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவி, சித்திரகவி என்பவைகளே. இவ்வகையான பிரிவுகள் ஒவ்வொன்றினையு மாராயுங்காலத்து, முதற் பிரிவு, இயற்றமிழ்; அதாவது, வசனம். வசனத்தில் எழுதுங்காலத்து புணர்ச்சி விதிகளையொட்டி சந்தர்ப்பத்திற் கேற்றவாறு தங்க பதங்களை உபயோகித்து, நன்குவரையக் கற்றுக்கொள்ளவும், வசனரூபகமாயிருக்கும் புராண இதிகாசங்களைப் படித்தால் பின் இசையில் வரும் பண்களை எளிதில் உணரவுமே உண்டானது இரண்டாவதாகிய இயற்றமிழ்.

 
     இசைத்தமிழ்: - இசைத்தமிழ் என்றமட்டிலேயே கீதமுடன் பாடத் தக்கது என்பது வெளிப்படை. செய்யுட்களில் வெண்பா என்றால், சங்கராபரண இராகம் என விளக்கும். இஃது மிகவும் கடினமானதே. ஏனெனில், நாம் வசனமெழுதுவது போல் இதை எழுதமுடியாது. உதாரணமாக, அறுசீர்க்கழில் நெடிலடி யாசிரிய விருத்தம் என வெடுத்துக்கொண்டால் முதலில் ஒவ்வொரு அடியும் அறுசீர்களை யுடைத்து. அஃதே போல் நான்கு அடிகளெழுதவேண்டும். அம்மட்டோ, இவைகளில் எதுகை மோனைகள் அமையப் பெற்றிருக்க வேண்டும். காலத்தையு மனுசரித்தல் வேண்டும். பத்தழகு, முப்பத்து இரண்டு உத்திகளை யொட்டியிருத்தல் வேண் டும். செய்யுள் என்பதினிலக்கணத்தைக் கூறுமிடத்து,

 

"பல்வகைத் தாதுவி னுயிர்க்குடற் போற்பல
     சொல்லாற் பொருட்கிட னாகவு ணர்வினில்

வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள்''

 

என்றமை விளக்கும். மற்றும், "குன்றக்கூறல்" முதலிய பத்துக் குற்றத்தினின்றும் விலக்கப்பெற்று இருத்தல் வேண்டும். இத்தன்மை பொருந்தியது இசைத்தமிழ்.

 

நாடகத் தமிழ் - இதைப்பற்றிக் கூறுத லவசியம். நாடகத்தமிழ் என்றால், இதிகாசபுராண சரிதைகளை, பாமரர்களுக்குப் புகட்ட, தான் கச டறக்கற்று, நடித்துக் காட்டலே. ஒருவன் நாடகத்தமிழ் பயில்வானேல் அவன் முத்தமிழ் நாற்கவியிற் றேர்ச்சியுடையோனாய், சங்கீத விற்பன்னனாய், வனப்புடையோனாக இருத்தல் வேண்டும். அவன் பெருநூல்களினின்றும் தலைவன் தலைவியாது கூற்றை நன்குணர்ந்து பின்பு நவரசங்களுடன் நடித்துக் காட்டல் வேண்டும். இஃதெல்லாம் இக்கால நிலைமைக்கு ஏற்புடைத்தன்று. அப்படிக் கற்று அறிந்த பெரியோர்களு மிலர். அப்படியிருந்து நடித்தாலும் பார்ப்பாரு மிலர். அந்தோ என்ன காலக்கொடுமை! எல்லாம் கலியின் விளைவு அன்றோ!

 

இக்காலத்தும் பல சபைகள் உள. அவைக் கண்ணுற்று ஆனந்திப்பார்கள் பெரும்பாலுங் கற்றுணராதவரே; ஆனது பற்றி நடிப்பார் நாடக விதியினின்றும் வழுவி, அவர்களது மனோரஞ்சனையைக்கருதி, லோடா, கிண்டிப்பாட்டுகள் பாடி மகிழ் வூட்ட அவர்களது திருச்செவியில் நீதிகளில்லா, சங்கீதத்திற்கு முரணுடை லோடா, கிணடிப்பாட்டுகள், நுழையவும், இனிது மாந்தி, பேஷ் பேஷ் என்று கரகோஷம் செய்வதையவர்களே சற்று சிந்திப்பாராயின் வெட்கமடையாதிரார். இத்தகைமையான நாடக வரங்குகளால் விளையும் தீங்குகள் அளவற்றன. முக்கியமானது மூன்று பெருந்தோஷங்கள். அவைகள் எவை யெனில், முதலில் பெருங் - காவியங்களை நிந்திப்பது, இரண்டாவது அவைகளையியற்றிய கர்த்தாக்களை யலட்சியம் செய்வது, மூன்றாவது சங்கீதத்தை அவமதிப்பது, ஆகமூன்றும் பெருங்குற்றங்களே; அஃதினும் கடையானது மிக்கக் குற்றமே. ஓவியத் துறை யென்றதற்கு சிற்பம் கரையில்லாதது என்பதுடன் எவராலும் கரை காணாதது எனப் பொருள். அஃதே போல் சங்கீதமும். அதை அவமதிக்கும் ஆடவ வெண்டீர்கள் எத்தன்மையரே! எனோ? நற்சுவை பொருந்திய காவியங்களை இசைத்தமிழில் கற்காது, வர்ணமெட்டைப் பிரதானமாகக் கொண்டு சரித்திரத்தை முற்றிலும் மாறாக நடத்தும் நாடகத்தைக் கண்ணுறல் வேண்டும். எல்லாம் காலக்கொடுமையே. அந்தோ!

 

இனி நாற்கவிகளின் தன்மையையுரைப்பாம்: -

 

ஆசுகவி யென்றால், கேட்கும் கேள்விகட்கோ, நினைத்த மாத்திரத்திலேயோ கவி சமைத்தல்.

 

மதுரகவி யென்றால், அக்கவியைப் படிப்பவர்களுக்கு மது மாந்தின தன்மையை யொக்க விருத்தல் வேண்டும்.

 

வித்தாரக்கவி - இஃது மிக இனிமையாகவும், விசித்திரமாகவு மிருத்தல் வேண்டும்.

சித்திரக்கவி - எழுதிப் பார்த்தால் சித்திரங்களே யுடைத்தாயிருத்தல் வேண்டும்.

 

இத்தன்மையாக முத்தமிழ் நாற்கவியுடைய விப்பாடை தெய்வத்தன்மையுடைத்து என்றால் எப்பாடை இதற்குவமையாகும் - தெய்வத்தன்மையுடைத்து என்பதற்கு அநேக உதாரணங்களுள். சிலவற்றை விளக்குவாம்: -

(a) வீரசோழியம். - கச்சியப்ப சிவாச்சாரியரால் கந்தபுராண மியற்றப்பட்டதென்பது விளங்கும். அவர் அப்புராணத்தை அரங்கேற்றிய காலத்து, முதற்கவிக்குக் குற்றம் கூறப்பட்டது. அதாவது,


           "திகட சக்கரச் செம்முக மைந்துளான்
           சகட சக்கரத் தாமரை நாயக
           னகட சக்கர வின்மணி யாவுறை
           விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்''


என்ற பனுவலின்கண், 'திகழ் தசக்கரத்து செம்முகம் ஐந்துளான்' என்ற பதங்களில் 'ழகர' ஒற்றிற்குப் பின் 'த' கரம்வரின் 'ட' கரமாக மாற எச்சூத்திரம் கூறியுள்ளதென, அவர்விழிக்க, முருகர் தமது கிருபையால் வீரசோழியம் என்னு மிலக்கணத்தை யளித்து அதிற்காட்டி அரங்கேற்றி வைத்தார்.

 

(b) இறையனாரகப்பொருளுரை. - பாண்டி நாட்டில் பஞ்சந் தீர்ந்தகாலத்துப் பாண்டியன் அகப்பொருள் இலக்கண மிலாது வருந்த, சொக்க நாதன் சங்கப்பலகையின் கீழ் இலக்கணச் சுவடி ஒன்றை எழுதிவைத்து மறைந்தார். அதற்குரை எவ்வளவோ புலவர் எழுதியும், படித்தும் ஏற்கப்படாது, நக்கீராது உரைக்கு மட்டும் ஊமையனும் ஐயாண்டுப் பிராயத் தனுமாகிய உருத்திர சன்மனால் தலைக்கம்பம் செய்து அங்கீகரிக்கப் பட்டமை காண்க.

 

(C) முதலையுண்ட பாலனையழைத்தது. - சேர நன்னாட்டிலே அவிநாசி யென்னும் திருத்தலத்தின்கண்ணே நமது சமய குரவர் நால்வரில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் சென்ற காலத்து. ஓர் மனையில் மங்களவொலியும், எதிர் மனையில் அழுகையொலியுங் கேட்க, அழுதாரில்லத்தே சென்று யாது காரணம் என வினவ, அங்கிருந்த ஒருமாது தன் குமாரனை முதலையுண்டதாகவும், அதேயாண்டுடைய எதிர் ஆத்துச் சிறுவன் உபநயனம் செய்து கொள்வதாயும், தன் குமரனுமிருப்பின் அவனுக்கும் உபநயன விழா நடத்தி இன்புறும் பாக்கியம் அடையலாமே, இல்லாது போயிற்றே எனத்துக்கிப்பதாகவும் கூறக் கேட்டு, அவர்களுடன் அம் மைந்தன் எத்தடாகத்திலிறந்தானோ வதற்கேகி நோக்கி, நீர் வற்றி யிருக்க, நீர் உண்டாக்கி அதினின்றும் முதலையை யழைப்பித்து, அதன் உதரத்தினின்றும் பாலனையும் அழைப்பித்துக் கொடுத்து அவர்களை இன்புறுமாறு தன்பனுவல்களால் செய்தார்.

 

(d) நெற்கொணர்ந்தது. - மேற்கூறிய சுந்தரமூர்த்தி நாயனாரால்,

 

''நீளநினைந்தடியே னுமை நித்தலுங் கைதொழுவேன்

வாளன கண்மடவா ளவள் வாடிவ ருந்தாமே

கோளிலி யெம்பெருமான் குண்டையூர் சில நெல்லுப்பெற்றேன்

ஆளிலை யெம்பெருமா னவை யட்டித்தரப் பணியே''

 

என இசைக்கப்பட்ட காலத்து பரமசிவம் நெற்குவியல்களைக் கொண்டு சேர்த்துப் பரவை நாச்சியாரது ஊடல் தணித்தார். இத்தமிழ்ப் பனுவல்களால் எலும்புப் பெண்ணுருவங்கொண்டதும், மறைக்கதவினைத் திறந்ததும் நடந்தேறியதன்றோ - இதனை நோக்கியே

 

"தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை

யுண்ட பாலனை யழைத்தது மெலும்பு பெண்ணுருவாக்

கண்டதும் மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித் 

தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்''

 

எனக் கூறியிருப்பதையுங் காணலாகும்.

 

(e) ஏடு எதிர் சென்றது. - பாண்டியநாட்டை யாண்டு கொண்டிருந்த சமணராஜன் ஞான சம்பந்தமூர்த்தி நாயனாரைப் பல்வகைத் துன்பத்திற்கு உள்ளாக்கியும், அதினின்று மீண்டவரைப்பார்த்து ஏடெழுதி வைகையாற்றில் விடக் கட்டளையிட, அந்த ஏடு எதிர்நோக்கிச் செல்லவே தமிழ்க்குத் தெய்வத்தன்மையுண்டென்பது உள்ளங்கை நெல்லிக்கனியே'.

 

(f) கற்சிலைகளின் சிரக்கம்பம். - பொய்யா மொழிப்புலவர் ஒருகால் சென்ற போது பாண்டியவரசன் அவரை ஓர் பனுவற் பாடும் படிக்கும், அதை நாற்பத்தொன்பதின்மரின் சிலைகள் சிரக்கம்பம் செய்து ஒப்ப வேண்டுமென்றும் கூற, அவரும் அவ்வாறேபாட, அக்கல்லுருவங்கள் சிரக்கம்பம் செய்தன. மற்றும் பொற்றாமரைக் குளத்தில் அமிழ்ந்த சங்கப் பலகை மிதக்கவும் செய்தது தமிழ்க்கவியே.

 

(g) கம்பராமாயணத்தை அரங்கேற்றிய காலத்து, துமி என்னும் பதமானது உலகவழக்கென்று நிரூபிக்க சரஸ்வதியும் இடைச்சியானாள்.

(h) சர்ப்பம் தீண்டிய பாலனைத் தன் கவியால் உயிர் பெறுவித்தார் கம்பநாடர்.

 

(i) வில்லிபுத்நூர் இறைவன் தன் கண்களைப் பெறும்படி தமிழில் பாரதம் பாடினார்.

 

(j) நக்கீரர் பூதத்தால் கொண்டுபோகப்பட்ட காலத்து திருமுருகாற்றுப்படை எனும் நூலைத் தமிழிற் பாடி, தான் மட்டுமன்றி தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றொன்பதின்மரையும் விடுவித்துப் பூதத்தையும் முருகனருளாற் கொன்றார்.

 

(k) ஆதிக்கும் பகவனுக்கும் பிறந்த ஒளவை முதல் எழுவரும் தங்கள் தாயார் தம்மை விட்டகலப் பரிதபிக்கும் நிலைமையைக் கண்டு தமிழினாலன்றோ பாடித் தாயினது வருத்தத்தை நீக்கினார்கள்.

 

(l) தில்லை யம்பலத்தே திருநடம் பயிலும் சிதம்பரேசுவரரது குழைகள் கீழேவிழ, அதை விந்திய மலையிலிருந்த திருவள்ளுவாறிந்து பாடினதும் தமிழ் என்பதிற் றடையோ? மற்றுமிவர் ஏலேலசிங்காது கப்பல்களினிடை செய்த திருவிளை யாடலாலும், இறுதி காலத்து நடத்திய மாட்சிமையாலும் தமிழின் அருமையை யறியலாகும். மற்றும் திருக்குறளைச் சங்கப் பலகையில் வைக்க இடங்கொடுக்கப் பெற்றதும், சீத்தலைச்சாத்தனார்க்குத் தலைவலி தீர்ந்ததும் அறிவோம்.

 

(m) சேக்கிழார் பெருமான் திருத்தொண்டாது புராணத்தை யியம்புங்காலை'' உலகெலாம் " என அடியெடுத்துக் கொடுத்ததும் அறிவோம்.

 

(n) ஒட்டக் கூத்தப்புலவர் எழுபது தலைகளை வெட்டி யெறிந்து முண்டத்தின் மீது வீற்றிருந்து ஈட்டி எழுபது பாடி, பிறகு முண்டங்களையும் தலைகளையும் சேர்த்துத் தமிழ்க் கவிகளால் உயிருண்டாக்கியதும் உண்மையன்றோ?

 

      இத்தன்மையாக அநேக உதாரணங்களிருக்கின்றன. இவையெல்லா வற்றையும் சற்று ஆலோசிப்போமே யானால் இத்தமிழ் மொழியானது தெய்வத்தன்மையான மொழி என்பதிற் சற்றும் ஐயமில்லை. பீடு பெற்ற மொழி இஃதே:

 

தமிழ்ப்பெருமை: - இத்தகையான தெய்வத்தன்மையுடைய இத்தமிழின் பெருமையு முரைக்க வேண்டுமோ! அவ்வாறரைக்க வேண்டுமேயானால் அஃது ஆயிரம் நாவுடைய ஆதிசேடனாலும் முடியாததே - இருப்பினும் நான் ஒரு செய்யுளால் தெரிவிக்கிறேன்.

 

"கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
     பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை

மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல்
      எண்ணி டைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ''

 

என்றதனால் அது அறியலாகும். இவ்விரு நிலத்தில் எவ்வளவோ மொழிகள் வழங்கி வருகின்றன. ஆரியம் தவிர மற்றப் பாடைகளுக்கு இலக்கணமாவது, சொற்பொருள் புத்தகமாவது செய்யுள்களாக வரையப் பட்டு எளிதில் உணரத்தகும்படிக் கில்லை. ஆனால், இத்தமிழுக்கு மாத்திரம் நிகண்டு என்றும், இலக்கணம் என்றும் யாப்புக்களாலணியப் பெற்றிருத்தல் பெருமையன்றோ. ஆனது பற்றியே இம்மொழி பீடுபெற்றது. மற்றும் எம்மொழி உறக்கத்திற்கு வரினும் இதன் செயல் மட்டும் உறங்காது. இதனை யுன்னியே,


       "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் செழி லொழுகும்
       சீராரும் வதனமெனத் திகழ்பாத கண்டமதில்
       தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
       தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்.
       அத்திலக வாசனை போ லனைத்துலகு மின்பமுற
       எத்திசையும் புகழ்மணக்க விருந்த பெருந் தமிழணங்கே
       பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
       எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி யிருப்பது போல் கன்னடமும் 

       களிதெலுங்குங் கவின் மலையா ளமுந்துளுவும்
       உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பல வாயிடினும்
       ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
       சீரிளமைத் திறம் வியந்தே செயல்மறந்து வாழ்த்துவமே''


என மனோன் மணியத்தில் கூறியதும் காண்க.

 

இம்மொழிக்கு ஏதாவது உவமை கூறலாமெனிலோ,


       "கடல் குடித்த குடமுனியுன் கரைகரணக் குருநாடில்
       தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே
       ஒருபிழைக்கா அரனார் முன் னுரையிழந்து விழிப்பாரேல்
       அரியதுன திலக்கணமென் றறைவ'மற்புதமாமே
       சதுமறையா ரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்
       முதுமொழி நீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே

 வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
       காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே
       கடை யூழி வருந்தனிமை கழிக்கவன்றோ வம்பலத்துள்

 உடையாருன் வாசகத்தில் ஒரு பிரதி கருதுவதே
       தக்கவழி விரித்திலகுஞ் சங்கத்தார் சிறு பலகை
       மிக்க நலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே

 வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
       கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராதே
       வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
       கூறுவட மொழி வலமாக் கொள்வர்குண திசையறியார்
       கலைமகடன் பூர்வதிசை காணுங்கால் அவள் விழியுன்
       வலதுவிழி தென்மொழியாம் மதியாரோ மதியுடையார்
       பத்துப்பாட் டாதி மனம் பற்றினார் பற்றுவரோ

 எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே
       வள்ளுவர் செய் திருக்குறளை மருவறநன் குணர்ந் தோர்கள்
       உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி

 மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தின் மாண்டோர்கள்
       கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ "

 

எனக் கூறப்பட்டிருத்தலால் எவ்வாறு கூறுவது.

 

ஆதலால் இதன் பெருமையை யான் சிறியன் மிகக் குறைவாகக் கூறியது காண்க. இனி நாம் இத்தன்மையான குணம் என்னையோ? இத னைப்படித்தவர்கள் எத்தன்மையாக விருப்பார்? என்பவற்றைப்பற்றி ஆலோசித்துப் பார்த்த லவசியம்.

 

இதன் குணம். - தமிழ் என்னுமிப்பதத்திற்கே இனிமை, இன்பம், நீர்மை எனப்பொருளோதினேன். தமிழினது தெய்வத்தன்மையையும், பெருமையையும், நாட்டையுங் கூறினேன். இவற்றினாலேயே இதனது குணத்தை யறியலாகும்; மானிடர்களின் ஆசாரமும், நடையுடையு மறிய லாகும். முதலாவது, இவர்கள் சாத்வீகத்தன்மை வாய்ந்தவர்கள்; அரசபக்தி, ஈசுவரபக்தியுடையவர்; செல்வவந்தர்கள்; கல்வி கேள்வியுடையார்கள்; பரோபகார சிந்தனை யுடையவர்கள்; புண்ணிய பாவமுண்டென்று கருதுவார்கள்; இன்சொல் வழங்குவோர்கள்; சங்கீத முணர்ந்தோர்கள்; இன்பமூட்டுந் தன்மையுடையவர்கள்; நல்லொழுக்கமுடையோர்கள், என்பது இந்நாட்டின்வாழும் மாந்தரைப் பற்றி விளங்கும். இவர்களது உணவோ? சாகபக்கணம். நாட்டைப்பற்றி ஆராயுங்காலத்து முப்போகம் விளையக் கூடியது, நல்ல தெய்வதா சாந்நித்தியம் நிரம்பிப் பல கோயில்களை யுடையது என்பது விளங்குறும். இதனைப் படிப்போர்களுக்கு விளங்கும் நீதிகளுக்கோ அளவேயில்லை. இத்தகைமையாக நிறக்கச் செய்யும் இத்தமிழ்ச் சொல். இக்குணங்களைக் கண்டன்றோ ஈசுவரனுமிச்சொல்லை விரும்பி இதன் பண்களால் பரவும் பக்தர்கட்குப் பரமபதமளிக்கிறான். இத்தன்மைய மொழியைத் துறந்து, இதையே நிந்தித்து ஆங்கிலம் கற்பது அநீதியன்றோ

 

இதனுடன் சமபாடை. - இதனுடைய சிறப்புகளெல்லாம் அமையப்பெற்று, ஈசுவர சாந்நித்தியம் பெற்றுச் சமமான பாடை இந்நிலத்தின் கண் வேறு உளதோவெனில், நிதானித்து ஆராய்ச்சி செய்வோமேயானால் இதற்கு ஒப்புவமையாக ஒன்றுளது. அஃது வடசொல்லாகிய ஆரியமே. மற்றைவைகளையெல்லாம் தமிழ் வென்று விட்டது என்பது திண்ணம்.


     "மறைமுதற் கிளந்தவாயான் மதிமுகிழ் முடித்த வேணி
     இறைவர்தம் பெயரை யொட்டி யிலக்கணம் செய்யப் பெற்றே
     அறைகடல் வரைப்பில் பாடை யனைத்தும் வென் றாரியத்தோ

     டுறழ் தமிழ்த் தெய்வந்தன்னை யுள்நினைந் தேத்தல் செய்வாம்''

 

இனிமை: - இனிமை யென்றனனே அஃதை நிரூபிக்க ஓர் செய்யுள் இயம்பினும் போதும்; ஆனால் நான் மிகவுரைக்க விரும்பி யெழுதப்புகுகின்றனன். இஃது சாத்மீகத் தன்மையுடைய தாகையால் நயமான சொற்களே நிரம்பப் பெற்றிருக்கும். உதாரணமாக, புண்ணியத் தலமாம் பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையம் பதியில் திருமலைராயன் ஆளு கையில் பழுதறவோதிய பாவலராகிய படிக்காசுத் தம்பிரானைச் சிறையிலடைத்துவைக்க, அவர் அநேகநாள் இருந்து பிறகு ஒருநாள் அரசனிடம்,

 

      'நாட்டிற் சிறந்த திருமலை யாநல்ல நாகரீகா
     காட்டில் வனத்தில் திரிந்துழ லாமல் கலைத்தமிழ்தேர்
      பாட்டிற் சிறந்த படிக்கா செனுமிந்தப் பைங்கிளியைக்
     கூட்டி லடைத்து வைத் தாய் இறை தாவென்று கூப்பிடுதே "

 

என்ற பாட்டை யெழுதி யனுப்பினார்.

 

அந்தோ! என்னே இவர் வாக்கு! இவரையும் சிறையிலடைப்பாருண்டோ! இக்கவியை வாசித்த உடனே மன்னன் இவரைச் சிறையினின்றும் விடுத்தான். மிகவும் சிறப்புற்று விளங்கும் புகழேந்திப் புலவரது நளவெண்பா எவ்வளவு சொற்சுவையுள்ளது? நம்மால் அளவிடுதல் கூடுமா? கம்பராமாயணம் எனும் பெருங்காவியத்தினும் மிகவும் சொற்சுவை, பொருட்சுவைகளில் சிறப்புற்ற நூல் ஏதேனும் உண்டா? இக்கம்பன் உலக வியற்கைப் பொருளை வருணித்திருக் கின்றனனே; இவனுக்கு எவ்வாறு தெரியும் எனக்கேட்டால் சீவகசிந்தாமணி யென்னும் ஒருகடலில் ஓர் அகப்பை நீர் மொண்டு கொண்டதாகக் கூறப்படு மென்றால், அச்சீவகசிந்தாமணியின் தன்மையென்னே? அஃதேபோல், ஒவ்வொரு நூல்களிலும் இதனது இனிமை விளங்குமென்பதை புலவர்க்கு ஒளடதமாகிய நைடதத்தில்,


     "அமிழ்தின முனிந்து சாரல் அருவி தாழ் மலயமீன்ற
     தமிழினு மினிய தீஞ்சொற் றையலீண் டிருந்த கோமான்
     நிமிழ்திரை கொழித்த முத்த மேழைநின் முறுவல் காட்டுங்
     கமழலந் துறைசூழ் தெண்ணீர்க் கங்கைநா டாளும் வேந்தே "


எனக் கூறப்பட்டமையி னின்று முணர்தலாகும். மற்றும் தமிழிலுள்ள நூல்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு படித்துப் பார்த்தோமேயானால் அதனுண்மை விளங்கும். உதாரணமாக, இராமாயணத்தை எடுத்துக்கொண்டால் அது, படிக்கப்படிக்கத் தெவிட்டாத செழுந்தேனை யொப்ப விருக்கக் காணலாம். பின்னும், அவ்வவ்விடங்களில் எத்தகைமையாக விஷயம் கூறப்பட்டிருக்கிறதோ அஃதேபோல், நாமும் மனோ நிலைமையை யடைதலைப் பார்க்கலாம். இதனால் நமக்கு என்ன விளங்குகிறது? தமிழிற்கு மனதைக் கவரச்செய்யும் சக்தியுளது. மற்றும் மிகவும் அற்புதமாகவும், சொற்சுவை, பொருட்சுவையோடும் ஒட்டக்கூத்தர் தம் இராமாயணத்தில் இராமன் அசுவமேதயாகசாலைக்குப் போந்தான் என்பதை யுரைக்க வந்தவர் இராமாயணத்தை யுள்ளடக்கி மிகவும் இனிமையாகப் பாடியிருக்கிற பாடல்களைப் படிக்குந்தோறும், பின் னொருமுறை படிக்க விருப்பமுண்டாகும் என்பதிற்றடையோ?

 

(ஓட்டக்கூத்தர் இராமாயணம்.)

 

I.     'கம்புவைத் தரித்த கையில் கார்முகந் தரித்தான் வந்தான்
       அம்புயக் கண்ணன் வந்தான் அன்பருக் கன்பன் வந்தான்
       தம்பியர்க் கினியான் வந்தான் தசரத ராமன் வந்தான்
       உம்பருக் கமிழ்தம் முன்னாள் உதவிய ஒருவன் வந்தான்.


ii.     மனுகுலம் விளங்கத் தோன்றி வரிசிலை யிளையா னோடும்
       முனியொடும் போனான் வந்தான் முப்புர மெரித்த வில்லி
       தனுவினை யிறுத்துச் சீதைத் தனைக்கரம் பிடித்தான் வந்தான்
       அனையவ ளுடனே மீண்டு மயோத்தியி லடைந்தான் வந்தான்.

 

III.    தாயுரை தலைமேற் கொண்டு தையலை யுடனே கொண்டு
       தீயவெங் கானஞ் சேர்ந்த செருவிலி வல்லி வந்தான்
       தூயமா முனிவன் முன்பு தோன்றிய தூயோன் வந்தான்
       மாயமா ரீசன் மாள வரிசிலை யெறிந்தோன் வந்தான்.


IV.    அநுமனை யடிமை கொண்டாங் காயிரங் கதிரோன் மைந்தற்கு

இனியனாய் வாலி மாள எரிசரந் துரந்தோன் வந்தான்
       நினைவதன் முன்ன மாழி நீரெலாம் நெருப்ப தாகக்
       குனிசிலை வளைத்தோன் வந்தான் கோசலை நாடன் வந்தான்.

 
V.     குன்றினா லாழி கட்டிக் கொடுந்திறற் சேனை யோடும்
       சென்றிராக் கதரை யெல்லாஞ் செருக்களத் தவிய நூறித்
       தன்றிற லழிந்து நின்ற தசமுகன் வலிமை கண்டாங்கு
       இன்று போய் நாளை வாவென் றியம்பிய ராமன் வந்தான்.

 
VI.    முன்னம் நாம் சொன்ன நாளின் முடுகி நாம் செல்லோ மாயின்
       வன்னியில் பந்தன் வீழ்வன் என்று தன் மனத்தி லுன்னி
       அன்னவ னெரிவி ழாமல் அநுமனை முன்னே யேவிப்
       பொன்னகர் அடைந்தான் வந்தான் புவன மூன் றுடையான் வந்தான்.''

 

என்னும் செய்யுட்களால் தமிழ்ச் சுவையை விளக்கியிருப்பது என்ன இனிமை. கூத்தர்பிரான், தாம் ராமாயணம் முழுமையும் பாடப்பாக்கியம் பெறாததனாலும், அவ்வாறே தாமும் ஓர் இராமாயணம் பாடினும் கம்பனது வாக்கிற்கு ஈடாகாதென்பதை யறிந்தும், தமக்கு வாய்த்த இந்த விடத்தில் இராமாயண சாரசங்கிரகத்தை யுரைத்தனர் போலும். இவ்வாறே ஒவ்வொரு நூலினுமுளது. கம்பராமாயணத்தில் உலாவியற் படலத்தில் ஒரு செய்யுளை எடுத்துக்கொண்டோ மாயின்,


கம்ப இராமாயணம்.

 
     "தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமல மன்ன
      தாள்கண்டார் தாளே கண்டார் தளக்கைகண் டாரு மஃதே

வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
      ஊழ்கண்ட சமயத் தன்னார் உருவுகண் டாரை யொத்தார்.''

 

இதனது பொருள் யாவர்க்கும் வெளிப்படை எனினும். முக்கியமாக நோக்கத்தக்கது ஒன்றுளது. அஃதென்னவெனில், உலகவியல்பானது வந்தவர் முகத்தை முன்னே நோக்குறுந் தன்மையது: ஆனால், இவரோ முதலெடுத்ததும் தோள் கண்டார் தோளே கண்டார் என ஆரம்பித்தனர்.  இதன் காரணமென்னையோவெனில், பெண்களுக்குப் புருடர்களுடைய புயத்தை நோக்குறும் தன்மை இயல்பு; அன்றியும் காவியத்தில் முன்னுக்குப் பின் முரண்படுதல் கூடா. மற்றும் தாம் இவ்விராமாயணத்தை ஆரம்பித்து நூலின் பயனைக் கூறுமிடத்து,


      ''நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழு முண்டாம்
       வீடியல் வழிய தாக்கும் வேரியங் கமலை நோக்கும்
       நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகைச்

சூடிய சிலையி ராமன் தோள் வலி கூறு வோர்க்கே.''

 

எனக்கூறியிருத்தலின் நயம் நன்குணர்ந்ததே. ஆதலால் முதலில் தோளைக்கூறினார். மற்றும் தாடகை முதல் இராவண கும்பகர்ணனாதியர்வரை தம் புயபலத்தால் வென்றமையுங் காண்க. இரண்டாவதாகத் "தொடு கழற் கமலமன்ன தாள்கண்டார் தாளே கண்டார்'' என்று கூறி யிருப்பதைக் காண்க. ஏனெனில், கௌதமமுனிவரது பத்தினியாரின் சாபந்தீர்த்தகாலத்து விசுவாமித்திரரே,


      'இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனியிந்த வுலகுக் கெல்லாம்
     உய்வண்ண மன்றி மற்றோர் துயர்வண்ண முறுவ துண்டோ
     மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ண லேயுன்
     கைவண்ண மங்குகண்டேன் கால்வண்ண மிங்குகண்டேன் "


எனத் துதித்திருப்பதும் காணலாகும். மற்றும் நாம் பாகவதர்களது ஹரி கதையில் இராமனது பாதபங்கயப் பண்பைப்பகரும் கதையையும் அறிய லாகும். அஃதாவது: - மிதிலா நகரத்துக்குச் சீராமர் தமது தம்பியுடனும் விசுவாமித்திர முனிவரால் கூட்டிக்கொண்டு போகப்பட்ட காலத்து கங்கையைக் கடக்கநேரிட்டது. அப்பொழுது அவ்விடம் ஒரு தெப்பக்காரன் வந்தனன். அவன் - இராமரைத் தவிர மற்ற விருவர்களை யோடத்திலேற்றிவிட்டு, ராமரை மாத்திரம், தம் கையால் அவரது பாதகமலத்தைக் கழுவிய பின்னரே - அவர் ஓடத்தில் ஏறத்தக்கவர் எனக் கூறினான். அதைக் கேட்ட இலக்குமணன் ஏன் அவ்வாறு கூறினை என்று கேட்க, அவன், தசரதராமரது பாத தூளிபட்டு ஒரு கல் பெண்ணுருவானால். இவரது பாதமே எனது தெப்பத்திற் பட்டால் என்னாகாதென்று வினயமாய்க் கூறினானாம் (அதாவது பக்தி). பாதத்தின் பெருமையை விளக்கும் வண்ணம், கம்பரும் கூறினார். மூன்றாவது, "தடக்கை கண்டாரு மஃதே'' என்று கூறியகாரண மென்னையோ வெனில் இளையராயிருந்த இராமர் விசுவாமித்திரனது யாகத்தைத் துஷ்டர்களினின்றும் காக்குமாறு யாகசாலையில் போந்தகாலத்து சுபாகு மாரீசன் தாடகை எனும் மூவர்களின், கொடுஞ் செயல்களைக் கண்ணுற்று மற்ற இவர்களில் ஒருவனைக் கொன்றும், மற்றவனைப் புறத்துத் தள்ளியும் தாடகையைக் கொன்றார். அதை நம் கவிராசர் கூறுமிடத்து,


      சொல்லொக்குங் கடிய வேகச் சுடுசரங் கரிய செம்மல்
      அல்லொக்கு நிறத்தி னாள் மேல் விடுதலும் வைரக் குன்றக்

கல்லொக்கு நெஞ்சிற் றங்கா தப்புறங் கழன்று கல்லாப்
      புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற் றன்றே''

 

எனக் கூறியிருப்பதாலேயே கையினது வலிமை காணப்பெறும். இவ்வாறு கண்ணுற்றவர்களில் எவரேனும் இராமபிரானது உருவம் முழுமையும் பார்த்தனரோ வெனில், உலகத்தில் பலவேறு சமயங்கள் உள; அவற்றுள் எவரையா ஆதிகடவுளைக் கண்ணுறக்கண்டார்? ஒருவருமிலர். அஃதே போல் இவர்களிலுமிலர். இதில் இராமாயணத்தின் தன்மை விளங்கும்.

வில்லி மகாபாரதம்: - "உற்றது சொன்னா லற்றது பொருந்தும்'' என்பது உண்மையுரையன்றோ? அஃதேபோல் வனவாசகாலத்து, அமித்திராது நெல்லிக்கனியை அருச்சுனன் திரௌபதி இஷ்டப்படி பறித்துக்கொடுக்க அவரது சாபத்தினின்றும் நீங்கும் வண்ணம், ஒவ்வொருவரையும் உள்ளதை யுரைக்கும்படி வாசுதேவன் கேட்க, சகாதேவனது முறையில் அவன்,


      "ஒருமொழி யன்னை வரம்பிலா ஞான முற்பவ காரண னென்றும்
      தருமமே துணைவன் கருணையே தோழன் சாந்தமே நலனுறு தாரம்
      அரிய திண் பொறையே மைந்தன்மற் றிந்த வறுவரு மல்லதா ருறவென் றிருவரி -

லிளையோன் மொழிந்தனன் தன்பே ரிதயமா மலர்க்கிடை யெடுத்தே

 

என்றான். இச்செய்யுளால் ஒருவனுக்கு உள்ள சுற்றத்தார், பெண்டீர் மக்கள் என வழங்கும் பாந்தவ்விய மெல்லாம் மேற்கண்ட குணங்களே யாகும். அச்சுற்றத்தாரே சுற்றத்தாரல்லாமல் உலகிலிருந்து மறையுஞ்சுற்றத்தார் சுற்றத்தார் அல்லர் என விளங்கும்.

 

நைடதம்: - நைடதத்தில் ஏதேனும் உளதோ வெனில் புலவர்க்கு ஒளடத மாகிய நைட்தத்தில் இல்லாமலிருக்குமா?


பாளைவாய் கமுகிற் றாவிப் படுபழம் சிதறி வாளை

தாளதா மரையிற் றுஞ்சும் தண்பணை நிடத நாட்டின்

நீர்வளங் கேட்பாள் போலத் தூதர் பால் நிரூபர் சீர்கேட்

டாளிமொய்ம் பனையே யெண்ணி அணிமுலை நோக்கிச் சோரும்''


என்றதை யெடுத்துக்கொள்வாம். இதின் கண் தமயந்திக்குண்டாகிய தசாவஸ்தைகளில் ஐந்தாவதாகிய காமவிரகத்தைக் கூறுகின்றது. தமயந்தியானவள் மனதின் கண் நளனையே மணவாளனாக இருத்திக் கொண்டமையால் அவனைப்பற்றி யாராவது சொன்னால் அஃதின் மூலமாகக் கேட்டாவது ஆனந்தமடையலாம் என உன்னி, தகப்பனாரது அவைக்குப் போனால் ஒற்றர்கள் வந்து தகப்பனாரிடம், நீரோடையிலுள்ள வாளை மீன்கள், கமுகுமரத்தின் பாளையின் வாய்த்தொங்கும் சிவந்த பழத்தின் மீது தாலி மீண்டு ஜலத்தில் விழ, அவ்வாளை மீன் மீது செவ்வனே பழுத்த பழங்கள் விழப்பெற்று, தேகவலி யடைந்து சிரமபரிகாரத்திற்காகத் தாமரைப் பூவின் கண் துஞ்சும்படியான தண்ணீரால் சூழ்ந்த கழனிகளுடை நிடத நாட்டினது மாட்சிமை பெற்ற வளமையைக் கேட்பவள் போல நிருபனாகிய நளனது செயலைக் கேட்டு சிம்மத்தை யொப்பவனாகிய அவனை யெண்ணி ஆபரணமணிந்த தனங்களைப் பார்த்துச் சோருவாளாம். அதாவது தனங்களை நோக்குதலால் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எனக்கூறும் நான்கு குணங்களில் அவனது சீரைக் கேட்ட மாத்திரத்திலேயே நாணங்கொண்டாள் என்பதாம்.

 

திருவிளையாடல் புராணம்: - திருவிளையாடல் புராணத்தில் எடுத்துக் கொண்டால் தனபதிக்குப் பிள்ளையின்றி அவன் தனது தங்கையின் பிள்ளையைச் சுவீகாரப்புத்திரனாயடைந்து, தனது செல்வத்தை மருமகனுக்கே கொடுத்து, தான் காடுசெல்ல, அச்சொத்தை யெல்லாம் தாயத்தார்கள் வவ்வ அப்பிள்ளையின் துயருக்கிரங்கி மன்றின்கண் சோமசுந்தரப் பெருமான் தனபதி வேடம் பூண்டு வருங்காலத்து அவர் தம் திருவாயினின்று, மிக்க வருத்தத்துடன் "அரசனிங்கில்லை கொல்லோ வான்றவரில்லை கொல்லோ - குரை கழல் வேந்தன் செங்கோல் கொடியதோ கோதில் நூல்கள் - உரை செய்யுந் தெய்வந்தானு மில்லை கொல் லுறுதியான - தரும மெங்கொளித்ததே கொல் என்று சொல்லி நுழைந்தார். இதனது அர்த்தம் என்ன கூறலாம். இதனால் அரசனது நீதியும், பெரியோர்களுடைய தன்மையும், செங்கோலின் மாட்சியும், தெய்வ சாந்நித்தியமும், தருமத்தின் பெருமையும், எதிர் மறைப் பொருளாக நின்று விளங்குகிறதன்றோ.

 

திருத்தொண்டர் புராணம்: - மனுச்சோழன் மகனான வீதி விடங்கப் பெருமான் தியாகேசரது தரிசனத்துக்காக இரதமூர்ந்து அரசுலாம் வீதியில் செல்லுங்கால், ஓர் ஆவின்கன்றானது ஒருவருமறியாவகையில், தற்செயலாய்ச் சகடத்தில் அகப்பட்டுமாள, அதைக்கண்ட தாய்ப்பசு இரங்குவதைப்பார்த்த வீதி விடங்கனது நிலைமையை யுரைக்கப்புகுந்தவர்,


      "அலறுபே ராவை நோக்கி யாருயிர் பதைத்துச் சோரும்
      நிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த் திரங்கி நிற்கு

மலர்தலை யுலகங் காக்கு மனுவெனு மென்கோ மானுக்
      குலகிலிப் பழிவந் தெய்தப் பிறந்தவா வொருவன் என்பான் '


என அவனை அஃறிணையாக மதித்துக் கூறியதனால் இப்பசுவின் கண் அவனது ஜீவகாருணியம் உள்ளகுணம் உள்ளங்கை நெல்லிக்கனியை யொக்கும்; மற்றும் பழிக்கஞ்சியதையும் விரிக்கும்.

 

அரிச்சந்திர புராணம்: - அரிச்சந்திரன் கோசிகமுனிக்குத் தன்னாடு நகர மெல்லா மீந்தும் தன் மனைவி மக்களையும் அடிமையாக்கித் தானும் புலையனுக் காட்பட்டும், மகனிறக்கவும், தன் மனைவி கொடிய நீலியெனக் காசிராஜன், அவளைக் கொல்ல ஒப்புவித்து, அவனே வெட்ட நேரிட்ட காலத்து அம்மாது சிரோன்மணி, சத்தியம் தவறாத அவனை நோக்கி, இருவருமாகப்


   “பதி யிழந்தனம் பாலனை யிழந்தனம் படைத்த
   நிதி யிழந்தன மினிநமக் குளதென நினைக்கும்
   கதி யிழக்கினும் கட்டுரை யிழக்கிலே மென்றார்
   மதி யிழந்து தன் வாயிழந்த வருந்தவன் மறைந்தான்'

'
என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களின் வாய்மையினு திறுயும், மனோவலியும் நன்கு புலப்படுதலுடன் இவர்கள் இனி வருவோருக்கும் சத்தியத்திற்கு உதாரண மானார்களன்றோ?

 

குசேலோபாக்கியானம்: - வறுமையால் பீடிக்கப்பட்டு, மனைவியாரது வேண்டு கோளுக்கிரங்கி துவாரகை சென்று ஆண்டு வாயிலோர் பால கிருட்டினனுக்குத் தெரிவிப்ப, அம்மாயோன் தானும் அவரும் இளமையிற் சாந்தீப முனிவரிடத்து ஒரு காலை மாணக்கராகப் பயின்ற நட்பின் மிகுதியால் " தாயது வரவு கேட்ட தனி யிளங்குழவி போன்று -நேய மிக் குடை யோனாகி நெஞ்சினு ளுவகைபூப்பப் போயழைத்திடுமி னின்னே போயழைத்திடுமி னின்னே போயழைத்திடுமி னின்னே'' என விரை பொருளிற் புகன்று கொண்டே தானே வர்தனன் ஆனால் இவர்களது நட்பை. நம்மால் இயம்பவும் முடியுமோ.

 

திருக்குறள்: - இஃதின் பெருமையை யார்தா னுரைக்கவல்லார். இனிமையாகவும் மிகச் சுருக்கமாகவும் அரும் பொருள்களை யுள்ளடக்கியிருப்பது மன்றி, எம்மதத்திற்கும் சம்மதமான தால் மிக்க விசேஷிக்கப்பெற் றது. இதைப்பற்றிய திருவள்ளுவர் மாலை என்னும் நூலு முண்டு. இடைக்காடர் இதன் பெருமை யுரைக்க ஆவல்கொண்டு,


       "கடுகைத் துளைத்து எழு கடலைப் புகட்டிக்
       குறுகத் தரித்த குறள்.''

என்றார். ஒளவை அதை மறுத்து,


       "அணுவைத் துளைத்து எழு கடலைப் புகட்டிக்
       குறுகத் தரித்த குறள்,'' என்றமையின் இதன் பெருமையும்,


 இனிமையும் விளங்கும்; எனினும் ஒரு குறளை எடுத்துக் கொள்வாம்.


      ''நன்றிக் குரித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்கம்
       என்று மிடும்பை தரும்.''


இதன் கண் நல்லொழுக்கத்தின் மாட்சிமையும் பயனும் நன்கு விளங்குவதன்றி, கெட்ட வொழுக்கத்தின் கேடு விளைவும் விளங்கினும், நல்லொழுக்கத்தின் கண்நிற்பார்களின் மகிமையை யார் சொல்லமுடியும்.

 

 நளவெண்பா: - புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பா வென்னும் நூலின்கண் ஒரு செய்யுளை யெடுத்துக்கொண்டு ஆராயுங் காலத்து,


      'மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே
       பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - - மின்னிறத்துச்
       செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்
       பொய்கைவாய்ப் போவதே போன்று.''
                   என்ற செய்யுளை

 

யெடுத்துக் கொள்வாம். இந்த விடத்தில் புகழேந்திப் புலவர் சுயம்வர மண்டபத்தை ஓர் வாவியாகவும், மன்னர்களது திறந்து விளங்கும் நேத்திரங்களையே மலர்ந்த தாமரைப் புட்பங்களாகவும், இத்தகைமையான தாமரை வாவியில் தமயந்தி யென்னும் செய்ய தாளுடை அன்னமானது புக்கதென்றும் வர்ணித் துரைத்ததைக் கேட்கக் கேட்க எவ்வளவு ஆனந்தம் பெருகுகிறது. இன்னும் பல நூற்கள் உள. ஆனால் ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்தால் ஒவ்வொன்றிலும் விநோதங்கள் உள. சீவக சிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி, சிலப்பதிகாரம், வளையாபதி, என்னும் பெரும் பஞ்சமகா காவியங்களும், பதிற்றுப்பத்து, திருவாரூருலா, சீகபதி, சீகாளத்தி, சிதம்பரம், திருப்பெருந்துறை, திருவாரூர் முதலிய தலபுராணங்கள் ஒவ்வொன்றையு மாராயுமிடத்து ஒவ்வொன்றிலம் இனிய பொருள்கள் அமைந்துள்ள கவிகளேயுள. விரித்துப் பார்க்கப் பார்க்க செவிகள் அமிர்தம் மாந்தியனபோல் இருக்கும் என்று சொல்லாமலே விளங்குறும்.

 

ஆத்திசூடி: - இனி நாம் மிக்க சிறு நூல் எனக் கருதும் ஆத்திசூடியில் ஒன்றை யுதாரணமாக வெடுத்துக்கொண்டு ஆராய்வோம். முதல் வாக்கியத்தையே எடுத்துக் கொள்வாம்.

 

அது, “அறஞ்செய விரும்பு" என்பதே யாகும். இதன் பொருளையுணருமுன், இந்நூலின் தன்மையையும், காப்புச் செய்யுளின் விசேடத்தையும் பற்றி ஆராய்வாம்; இந்நூலானது சிறு வாக்கியங்களால் அமைக்கப்பட்டது. இஃதின் கண் உள்ள வாக்கியங்கள் எல்லாம் நீதிமொழிகளின் தன்மையைப் பெற்றன. சிறு வாக்கியங்களே எனினும் சொற்சுவை பொருட்சுவை நிறையப்பெற்றன. இந்நூலின் பொருள்களே மற்றவற்றில் விருத்தியாக்கிக் கூறப்பட்டுள்ளன. மற்றும், இந்நூலின் காப்புச் செய்யுளின் வியப்பான பொருள்களைப் பாருங்கள்.


       “ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
       யேத்தி யேத்தித் தொழுவோம் யாமே.''


அதாவது ஆத்திப்பூமாலை சூடும் சிவபெருமானால் விரும்பப்பட்ட குமரனான விநாயகரது பாத கமலத்தைப் போற்றிப் புகழ்ந்து தொழுவோமாக என்பதாம். இஃதின்கண் நூலின் பெயரையுங் குறிக்கலாயிற்று. இனி எடுத்த வாக்கியத்தின் பொருளோ விளங்கும். ஏற்கனவே இதனது விருத்திதான் மற்றது என வுரைத்தனன். ஆதலால் வேறு கூறவேண்டியதிலது. இஃதையே யிரண்டடியால் கூறியதை மட்டும் கூறுவேன். அதாவது,

 
       “ஒல்லும் வகையா லறவினை யோவாதே
       செல்லும் வாயெலாம் செயல்''       
            எனுங் குறளுளது.

 

இவ்வாறு அரும் பொருட்களை சிறியது முதற் பெரியவை யீறாக வகுத்துரைக்கும் பாடை எது? அர்த்த புஷ்டியும், சொற்சுவையு முடைய பாடை எது? ஆராயுங்காலத்து, ஆரியமும் தமிழுமின்றி வேறுளதோ? இல்லை என்பது வெளிப்படை அன்றோ. ஆகையால் தத்தம் தாய் மொழியாகிய தமிழ்ப்பாஷை எத்தன்மைத்து என்பதை இனியாகிலும் சிந்தியுங்கள். தற்கால நிலைமை மிகச் சீர்குலைந்திருக்கிறது, அதனையும் மொழிகிறேன். செவி சாய்க்க வேண்டுகிறேன்.

 

தற்கால நிலை: - இதுபோழ்து தமிழின் நிலைமையைப் பார்த்தால் மிக்க வருத்த முண்டாகிறதென்பது பொய்யாகுமா? நமது தெய்வத் தன்மை வாய்ந்த நன்னூற்களையுடைய, தமிழின் பெருமையை மறந்து, பழைய வொழுக்கங்களை விட்டு நவீன நாகரீகமாகிய, வஞ்சகம், பொறுமை யில்லாமை, பொறாமை முதலிய தீய வொழுக்கங்களுக்குப் பீடிகையான மாயையினால் கவரப்பட்டு உழலும் நாம் பராமுகஞ் செய்யின் ஏன் தமிழணங்கு துஞ்சாள்? இது கால மட்டும் அவள் அன்பர்களின் நாவில் நின்று, உலகப் பிரவிர்த்தியில் இருக்கவில்லையா? அத்தகைய அன்பர்கள் இது காலத்தி லில்லையா? இருக்கிறார்கள். 'ஆனால் அவர்களை, நாம் எவ்வாறு கருதுகிறோம்?'' பழைய பஞ்சாங்கம்'' எனக் கருதுகிறோம். நாம் கருதுகிறோமா, வேறு ஏதாவது தூண்டுகிறதா? நாமல்ல, நவீன நாகரீகம். நவீன நாகரீகத்தை யெவ்வாறு கற்றோம்? மேற்குத் தேயத்தின் பாஷையால். அது எத்தன்மைத்து? நம் பாஷைக்குச் சம மானதல்ல. உயர்வாகிய நம் பாஷையை விடப் பின் காரணமென்ன? ஆங்கில பிரசங்கம். அவர்கள் நம்மைத் தடுக்கிறார்களா? இல்லை பின்னேன்? உதாரத்தின் பொருட்டு. இதனால் விளையும் தீங்கு என்ன? அரசாங்க விஷயமாய்ப் புத்தி யேற்பட வேற்பட அயலரசர்களை வென்று ராஜ்ஜியத்தைச் சேகரிக்கவும், பொருளீட்டவும், பாப கர்மங்களைப் புரியவும், நாஸ்திக வாதம் செய்யவும் ஏது விளைகின்றது. அதனால், நாம் என்ன செய்யவேண்டியது? இவைகளைத் தள்ளல் வேண்டும். பிறகு என்ன செய்யவேண்டும்? “மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்'' என்ற வண்ணம், நம் தமிழ்த் தாயின் நிலைமை யறியவேண்டும்.

 

இனி நாம் செய்யவேண்டிய கடமையும் முடிவுரையும்: - மாதாவை மறவாது என்ன செய்தல் வேண்டும்? போற்றவேண்டும். எவ்வாறு போற்றவேண்டும்? தற்காலத்திற்கு ஏற்ப, அரும்பெருங் காவியங்களைப் படித்து நாம், (அல்லது படித்தவர்கள்) அவ்வக்காவியங்களின் சரிதைகளை, கவிதாவின் கருத்திற்கு இணங்க, நீதிச்செய்யுட்டிாட்டாக்கிப் பைசா விலைக்கு விற்றால் செலவு ஆகும் வண்ணம் புத்தகங்கள் எழுதி அவற்றின் மூலமாய்ப் பாமரர்கள், கற்றுங் கல்லாதவர்கள், மாதுர்த்துரோகிகள் ஆகிய இவர்களுக்குக் கருத்தை விளக்கிக்காட்டி, அவர்களை நல்ல வழிக்குத் திருப்பவேண்டும். பைசா விலைக்குப் போகும் வண்ணம் எழுதுவானேன்? அவைகள் அவ்வளவுதான் பெறுமோ? அவைகளின் மதிப்பு அளவிடமுடியாது. எனினும், பைபில்கள் (Bibles) என் பரவுகின்றது என்றாலோ சித்தால், குறைந்த விலையே காரணம். மற்றும் திருக்குறளை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிறகு 25 ரூபாய் கொடுத்து வாங்கிப் படித்தால் தான் நம் தாயின் குணம் விளங்குமோ? அஃதையே ஒரு அணாவுக்கு மூலம் உரையுடனே வாங்கிப்படித்தால் விளங்காதோ? ஆதலால், பின் சொன்னதே மேலானது. அதனால் பாஷையும் பரவி, முன்னிருந்த நிலைக்கு வரும். ஆதலால் நாம் இப்பொழுது என்ன செய்யவேண்டும்? மாதாவை மறவாது அவளது திருக்கலியாண குணங்களைக் கேட்டானந்தித்து, அவளது நூற்களை பயபக்தியோடு படித்து, மேற்சொன்னது போல் உதவி புரிந்து, முன்னிருந்த நிலைக்குக் கொணர்ந்திட்டு, அவளுக்குச் சந்தோஷ முண்டாக்கி, அவளால் நன்காசீர்வதிக்கப்பெற்று நீடூழி தமிழ்த் தொண்டர் எனப்போற்ற வாழ்வோமாக –

 

சுபம்.


R. S. சாம்பசவ சர்மன்,

தமிழ்த்தொண்டன்.

 

ஆனந்த போதினி – 1920, 1921 ௵

அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, ௴

 

 

No comments:

Post a Comment