Wednesday, September 2, 2020

 

தமிழின் முற்கால தற்கால நிலைமைகள்

 

ஒரு தேசத்து மனிதரின் அறிவொழு தங்களின் நிலைமையும் செல்வ நிலைமையும் அந்நாட்டுச் சரித்திர நூற்கள் விளங்குவனவாம். அந்நிலை மைகளைப்பற்றிய சரித்திர நூற்கள் இந்தியாவில் பண்டைக் காலந்தொட்டு எழுதப்படவில்லை. ஆதலின், இந்தியரின் சிறப்பியல்புகளைத் தெரிவிக்கக் கூடிய சரித்திர நூற்கள் போதுமான வரையில் கிடைத்தில. சில நூற்றாண்டுகட்கு முன்னர் மேனாட்டார், சகல வளங்களாலு முயாந்த இந்தியா வோடு வியாபாரஞ் செய்யத் தொடங்கிப் பின் பெயர்தலின்றித் தங்கிய பிறகே அவர்களால் எழுதப்பட்டுள்ள சில சரித்திரங்கள் வெளிவந்துலவு கின்றன. எனினும், அவை பெரிதும் மேனாட்டாரின் பெருமையினையும், அவர்கள் இந்தியாவின் பொருட்டுச் செய்த வீரச் செயல்களையும், இந்தியாவுக்கு அவர்களால் ஏற்பட்ட நன்மையினையும் சிறப்பித்துப் பேசுவனவாய் நாடெங்கும் பரவி ஆங்கிலத் தேர்ச்சியுள்ள இதியர்களால் மட்டும் பெரிதும் புகழப்பெற்றுத் திகழ்கின்றனவேயன்றி நம் முன்னோர்களின் உண்மைப் பெருமையினை நன்கு தெரியப்பனமாக நம் ஆன்றோர் கருதுந் தன்மையினை யுடையனவல்ல ஆயின் நம் நாட்டில் உயர்ந்தாரின் இயற்கையினை விளக்குவனவாய்த் தோன்றிய நூற்கள் இல்லையோ வெனின், உண்டு அவை, தற்காலம் சிற்சிலர் இங்குமங்குமாகத் 'தமிழ்'' தமிழ்' எனும் அளவிலேனும் ஆரவார ஒலியினை யெழுப்பியிருத்தற்கு அறிவுமிக்க சான்றோரா லியற்றப்பட்டு நல்வினைபெற்று நிலவுகின்றன வாகிய இலக்கிய இலக்கணங்களும், இங்குமங்குமாகக்கண்டு எடுக்கப்பட்டு வரும் கல்வெட்டுக்களுமாம்.

 

இச்சில கருவிகளைக்கொண்டே சிலர் சில்லாண்டுகளாக ஆராய்ச்சி வாயிலாக முன்னோர் தம் பெருமையினைப் பல்லோரும் அறியச் சிற்சில நூற்களையும், குறிப்புக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இத்துறையிற் சிற்சிலர் முயற்சியுடையராய்ச் சில வெளியீடுகளை வெளியிடுதல் அம் முயற்சியில்லார்க்கு அதனுயர்வினை விளக்கும் ஒரு தூண்டுகோலாகும். அத்தூண்டுகோல்,


      '...     ...     ....     ....     ....     ... தம்மினும்

கற்றோரை நோக்கிக் கருத்தழிக் கற்றவெல்லாம்
      எற்றே விவர்க்குநா மென்று "  
                              (நீதி - நெ - வி.)

 

என்றது கொண்டு மொழியினைக் கற்பார்க்குப் பெரும்பயன் செய்வதாகும். எனினும் பெரும்பாலார். அதனை மதியாதவராயும், அத் துறையி லிறங்காதாராயும், அதற்கு மாறான வழிச்சென்று தம் நிலைமை யறியாதாராய் அச்சிலரே போன்று தாமும் பலவாய பயனற்ற வெளியீடுகளை விரைவில் வெளிப்படுத்தியவராய்ப் பிறரைத் தாக்குதலையே மேற்கொள்வாராகின்றனர். அத்தகையினர், தம்மைத்தாமே மதிக்கும் மதிப் பைப் பிறர் அறிய முயல்பவ ராகுவரேயன்றித் தம்மறிவு பெருகற்குரியதைச் செய்தவராவரோ? இனி நம் முன்னவர் பெருமையினைச் சிறிது ஆராய்வாம்.

முன்னவர் கல்வி கேள்விகளால் மேம்பாடுற்றிருந்தனரென்பது அவர் இயற்றிய நூற்களானே தெளிவாம். முன்னவர் பலரானும் எழுதப் பட்ட பாடல்கள் பலவற்றையும் உட்கொண்ட புறநானூறு, குறுந்தொகை போன்ற சில தொகை நூல்களின் நடையினையும் சொற்பொருள்களின் போக்கினையும் ஆராய்வார்க்கு அவ்வப்பாடல்களின் தலைப்பில் அவ்வப் பாடல்களை யியற்றினாரது பெயரினைக் காணாவிடத்து எல்லாச் செய்யுட் களும் ஒருவர்தம் வாக்கே என்னுந் துணிவே பிறக்கும். இத்துணிபு ஏற்படு வதனாலேயே, அக்காலத்தான்றோர் பலருடைய அறிவும் ஏறக்குறைய ஒரு நிலையில் இருந்தமை புலப்படும். அவர் அனைவரும் இத்தகைய புலமை யுடையராய் வாழ்ந்தமைக்குக் காரணம் அன்னார் காலத்துப் புரவலரும், அவரைப் புரந்தமையோடு, அவரும், கல்வியின் பால் மிக்க பற்று வைத்தது மாகும். அக்காரணத்தால் புலவருட் பலரும் புரப்பார் உண்டு எனும் துணிபுடையராய்ப் பொருளீட்டுந் துறைகளிற் புகாது, தம் வாழ்க்கைக்கு இன்றியமையாப் பொருளை வேண்டுங்காலத்துப் பெருநில மன்னரிடத் தும் குறுநிலத்தவர்பாலும் அடுத்து அவர்தம் அறிவு, ஆற்றல், அன்பு, இசை முதலியவற்றை யெடுத்துப் பேசித் தம் நிலைமை தெளிவித்து, எல்லையில் பொன்னும் பூமியும் பிறவும் நல்ல பரிசிலாகப்பெற்று வாழ்வாராயினர்.
 

பொருளீட்டுத் தொழிலில் நின்றாரும் எத்துணைப் பெயரோ நுண்ணறி வுடையராய்த் திகழ்ந்தனர். மற்றும் புலவருள்ளும் புரவலருள்ளும் ஒரு வரோடொருவர் நட்புப்பூண்டு, 'நாம், அவர்' என்னும் வேற்றுமையின்றி எத்துணைப்பெயரோ வாழ்ந்தனர். ஒருவர், தம்மை ஆதரித்தவரே யெனினும், அவர் தம்மைக் கடிந்தவிடத்துப் பொறாது தம் கல்விப் பெருமிதத்தால் அவரைப் பொருட்படுத்தாது, தம் அறிவின் சிறப்பினை நிறுத்திச் சென்றவர் பலர். இன்னும் புலவர் பலர், தம்மால் பாடப்பட்டோர் தமக்கு அரசினையும் மகிழ்ந்து உதவ அவர்க்கே அவ்வரசினைத் திரும்பக் கொடுத்து அமைச்சத்தொழில் பூண்டிருந்தனர். இனி நாம் இவர் இவ்வாறு வாழ்ந்தமைக்கு இரண்டோ ருதாரணம் காட்டி மேற் சொல்லுவாம்.


பாண்டியன் ஆரியப்படை தந்த நெடுஞ்செழியன்,


      "உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
      பிறப்போ ரன்ன வுடன் வயிற் றுள்ளுஞ்
      சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
      ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக வென்னா தவருள்

அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப்பா லொருவன் கற்பின்
      மேற்பா லொருவனு மவன்கட் படுமே''      
                  (புறம் - 183)

 

எனக் கூறியிருத்தலான் அவன் கல்வியினை எவ்வளவு சிறந்ததாக மதித்திருந்தானென்பது புலப்படும். இங்ஙனம், அவன் சிறந்ததாகத் தன்னால் மதிக்கப்பட்ட கல்வியினையுடையாரை எத்தகைய அன்புடன் ஆதரித்திருக்கக்கூடும்? புலவர் அரசர்பால் அடுத்தடுத்துச் செல்லினும், அன்னார், அவர் விரும்புவன முனிவின்றி அவர்க்கு மிகைப்படக் கொடுத்து அவரை ஆதரிப்பர். இங்ஙனம் புரவலர் புலவர்க்குதவுவர் என்பது,


 "ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம்
 பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
 தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ

 அணிபூண் அணிந்த யானை யியறே
 ரதியமான் பரிசில் பெறூஉங் காலம்
 நீட்டினும் நீட்டா தாயினும் யானை தன்

 கோட்டிடை வைத்த கவளம் போலக்
 கையகத் ததுவது பொய்யா காதே

 அருந்தே மாந்த நெஞ்சம்
 வருந்த வேண்டா வாழ்கவன் றாளே”       
                  (புறம். 101)

 

என்னும் ஒளவையார் கூற்றானே விளங்குவதாகும். இன்னும், பெருஞ்சித்திரனார் வெளிமானிடம் சென்று பொருள் வேண்ட, அதுகாலைத் துஞ்சுந்தறுவாயிலிருந்த அவன், அது பொழுதும் தன் தம்பியை நோக்கி இவர்க்குப் பரிசில் கொடு' வென, அவன் அவர்க்குச் சிறிது பொருள் கொடுப்ப அவர் அதனைக் கொள்ளாது போய்க் குமணனைப் பாடிக் குமணன் பகடு கொடுக்க அதனைக் கொணர்ந்து வெளிமானூர்ப்புறத்து மரத்தில் கட்டித் தனக்கு முன் சிறிது பொருள் கொடுத்தானை நோக்கி,


"இரவலர் புரவலை நீயு மல்லை

புரவலர் இரவலர்க் கில்லையு மல்லர்
இரவலர் உண்மையுங் காணினி நின்னூர்க்

கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் தோன்றல் செல்வல் யானே "
                        (புறம் - 162)

 

எனப் பாடியதனானும் புலவர் பெருமிதமுடையரா யிருந்தனர் 'பருமக்கப்பட்ட பல ஆங்கில பலரும் விருதாற்களைப்மவர் எந்த அவர் தம்மைப் பருமையினை பொது பகவத்கீதை வசனம் 411 என்பது தோன்றுவதன்றோ? சுருங்கச் சொல்லின் முற்காலத்திய புலவர்க ளுள்ளும் புரவலர்களுள்ளும் பெரும்பாலார்,

 

'' கல்வி தறுகண் ணிசைமை கொடையெனச்

சொல்லப் பட்ட பெருமித நான்கே"                 (தொல். பொரு. மெய். 7)

 

எனும் இச்சூத்திரத்திற் கிலக்குடையராக வாழ்ந்து வந்தனரென்பது பெறப்படுவதாகும். இனித் தற்காலம் தமிழிருக்ரும் நிலையினை ஒரு சிறிது கூறி இவ்வியாசத்தை முடிப்பாம்.

 

ஒரு நாடு செழித்தல் கல்வியால் ஆகுவதாம். கல்வியுடையாரே தம் நாட்டு நூற்களை யறிந்து உண்மை பலவற்றையும், தம் முன்னோருடைய வீரம் கொடை முதலியவற்றையும் உணர்ந்து தம் தாய் நாட்டில் பற்றுடையவராய் நாடு செழித்தற் கேற்றன செய்வார். ஆதலின் தாய் நாட்டிடத்துப் பற்றுத் தோன்றத் தாய்மொழியால் ஆக்கப்பட்ட நூற்களைப் படித்தல் வேண்டுவதாம். தற்காலம் மாணவர் பலரும் விரும்பிக் கற்கும் நிலைமையிலிருப்பதோ ஆங்கிலமாம். ஆங்கிலம் கற்குமவர், ஆங்கிலப்புலவர் பலரால் எழுதப்பட்ட பல காவியங்களைப் பேரவாவுடன் கற்று அப் புலவர் பெருமக்களின் பெருமையினை யெடுத்துப் பேசுவர். கல்வி பயில் பவருள், அவர்தம்மைப் புகழ்தல் போன்று நம் நாட்டு மக்களைப் புகழுமவர் எத்தனை பெயர் இருத்தல் கூடும். மிகச் சிலரே யாவர் எனச் சொல்லுதலும் வேண்டுமோ? பலரும் நம் நூல்களைப் பாராத்தன்மையானும், கல்வி பயிலும் மாணவரைப் பார்க்கும் வழியிற் செலுத்தாமையானுமன்றோ இங்கனம் 'நம் நாட்டினரைப் புகழ்வோர் சிலரேயாவர்' என்னும் பேச்சு நிகழ்வதாகின்றது.

 

இன்னும், 'தமிழைப் பயின்றாலும் அதனால் வருவதொரு பயன் இன்று' எனவே மாணவர் பலரும் எண்ணிவிடும் நிலைமையில் தற்காலம் தமிழிருந்து வருகிறது. இதனால் அவர், தமிழையே புறக்கணிப்பா ராகின்றனர். ஒரு தொழிலைச் செய்பவர்க்கு அத்தொழிலால் பயன் உண்டாகும் எனும் உறுதி உண்டாகாவிடத்து அவர் அத்தொழிலைச் செய்தலை மேற்கொள்வரோ? ஒருபோதும் கொள்ளார். ஆதலின் இந்நிலை நீங்கவும், கற்பாரும் கற்பிப்பாரும் தமிழ்மொழி வளர்த்தற்காவனவற்றிற் செல்லவும், இடம் ஏற்படுதற்கே தமிழர் ஒவ்வொருவரும் இனி முயலுதல் வேண்டும். ஆங்கிலம் தற்காலம் நாடெங்கும் பரவியிருத்தற்குச் சர்வகலாசாலைகளும், பலகலாசாலைகளும் ஏற்பட்டிருத்தல் போன்று தமிழ்ப் பாஷையும் எங்கும் பரவுவதாக அதற்கும் அதற்கெனத் தனியாகச் சர்வகலாசாலைகளும், பலரும் முறைமையில் பயிலப் பல கலாசாலைகளும் எற்படுதல் வேண்டும். இவ்வேற்பாட்டிற்கே தமிழரும் பிறரும் முயல்வாராக.


 N திருவேங்கடத்தையங்கார், தமிழ்ப்பண்டிதர்;
 
C. R. C. High School, Purasawalkam.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஏப்ரல் ௴

 

 

 

No comments:

Post a Comment